ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

அவனின் உதிரமாகப் பிறப்பேன் (புனைவு கடிதம்)

ஓவியம் Gustav Klimt

‘மடையான்’ பட்சியைப் பார்த்திருப்பீர்கள்.. உங்களுக்குத் தெரியும். அது ஒரு பரிதாபத்துக்குரிய தோற்றம் கொண்டது. பலமுறை அதை நான் தனிமையில் பார்த்திருக்கிறேன். சொல்லபோனால் தினமும் பார்க்கிறேன். அதன் முதிர்ந்து உதிர்ந்த சிறகுகளும் இரவுகளில் அதன் கேவல் சத்தமும் ஏனோ நான் மட்டும் பார்பதாகவும் எனக்கு மட்டும் கேட்பதாகவும் அமைந்துவிடுகிறது.

அந்த வளர்ச்சியில்லாத ஊனமடைந்த மரத்தைதான் என் மடையான் பட்சி அதன் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ‘என் மடையான்’ என்பது தேவையில்லாத ஒரு சொல்லாடல்தான். பட்சியின்  தனி வாழ்க்கையை நான் எப்படி அறிவேன். அதனுடைய கதை எத்தனை ரகசியமோ அத்தனை ரகசியங்களானவன் நீயும். உன் ரகசியங்களுக்குள் இருக்கும் ரகசியங்களில் அதன் இருண்மையில் ஒரு புள்ளியாக என்னை எங்கோ நீ நிறுத்தி வைத்திருக்கிறாய்.

உன் சுதந்திர வாழ்க்கையில் வந்து போகும் பெண்களும் நானும் ஒன்றல்ல என்று நீ அடிக்கடி சொன்ன அந்த வார்த்தையை என்னால் எப்போதும் மறக்க முடியவில்லை. என்னைக் கிரக்கமடையச் செய்யவும் உன் வசப்படுத்தவும் சொன்ன வார்த்தையல்ல அது. அந்த வார்த்தையில் நான் வாழ்த்திருந்தேன். என் வாழ்க்கையை நீங்கள் ஒன்றை வார்த்தையில் காட்டியிருந்தீர்கள். உணர்ந்து என்னை உணர்த்தவும் செய்திருந்தீர்கள்.  சூரிய ஒளியைவிடவும் தூய்மையானது உங்கள் வார்த்தைகள். பரிசுத்தமானது நீங்கள் காட்டிய காதல். ஆனாலும், இந்தப் பிரிவு அவசியமான ஒன்றாகவே தோன்றுகிறது. ஒரு வகையில் நீங்கள் என் அப்பாவையே ஞாபகப்படுத்துகிறீர்கள்.

நான் 10 வயது மாணவியாக இருந்தேன்.

கீழே கிடந்தது என்று ஒரு பென்சிலை எடுத்துவந்தேன், பள்ளி முடிந்து வருகையில் ஒரு முறை தோழியின் வீட்டிற்குப் போய்வந்தேன், வீட்டு சாவியை ஒரு முறை எங்கோ தவறவிட்டேன், 4-ஆம் ஆண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினேன், பள்ளியில் வகுப்புத் தலைமை மாணவியாக இருந்தபோது ஆண் மாணவனுக்குக் கதை புத்தகம் வாசிக்கக் கொடுத்தேன், தோழியுடன் ஒரு முறை தேவாலயம் போனேன். இதற்கெல்லாம் என் அப்பா கொடுத்த பரிசு மரண அடிகள். அடிக்கு பயந்து வீட்டை வீட்டு ஓடிவிட வேண்டும் என்று நாள் முழுக்க யோசித்து விட்டு, தைரியமில்லாமல் அடியை வாங்கிக்கொண்டு செத்துப் பிழைத்திருக்கிறேன்.

இந்தச் சமூதாயத்தின் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்றும் தன் பெண்ணின் ஒழுக்கத்திற்குப் பாதகமாக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும் கண்டிப்புடன் இருப்பதாகத் தன் மீதே வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர் என் அப்பா. அவர் சொன்ன அந்த ஒழுக்கத்தின் மீதும் சமூதாயத்தின் மீதும், சிறுநீர் கழித்து, சிறுநீர் கழித்து இன்று  இஷ்டம்போல்  விளையாடிக்கொண்டிருக்கிறேன்.

பெண்ணின் ஒழுக்கத்தை  எந்தக் கொம்பனாலும் பாதுகாக்க  முடியபோவதில்லை.  அது அவளுக்கு உட்பட்டது. அவளின் உடல் பலஹீனத்தை வைத்து மட்டுமே ஒவ்வொரு ஆணும் ஆதிக்கம் செலுத்த முனைக்கிறான். தகப்பனானாலும், தமையனானாலும் கணவனானாலும் தோழனானாலும் எல்லாருக்கும் இந்த விதி சாரும். ராமன் இல்லாத ஊரில் சீதையைத் தேடுவதும், ராவணர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் மண்டோதரியை மறப்பதும் இங்கு வாடிக்கையான ஒன்றுதானே.

புராதண கதைகளில் வரும் நாயகியாக நினைத்தால் அனைத்தும் புனைவுகளில்தான் போய் முடியும். பெண்களுக்கு மூன்றாவது கண்ணை வரைந்து, கட்டுபாடற்ற சுதந்திரமானவன் என்று சொல்லிக்கொண்ட நீ, என்னிடமிருந்து அதே சமூகத்தின் பேரைச் சொல்லி ஓடி மறைந்தது கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த அடர்ந்த வனத்தில் நாம் போய்க் கொண்டிருந்தோம். மயிலின் இறகு ஒன்று மரங்களுக்கு இடையே தெரிந்தது. வண்டியை தூரத்திலேயே நிறுத்தினாய். என்னை மட்டும் சத்தமில்லாமல் இறங்கி போய்ப் புகைப்படம் எடுத்துவர அனுமதித்தாய். பெரிய மயில் அது. அதன் வண்ணங்களும் நீண்ட இறகுகளும், கம்பீரமும் பிரமித்துப் போனேன். சருகுகள் ஓசை எழுப்பாதபடி மயிலை புகைப்படம் எடுத்து திரும்பினேன். நீ என் பின்னால் நிற்பதை நான் அறியவில்லை. அந்த மயிலுக்கு என் விம்மல்கூடக் கேட்க முடியாத படி என் மூச்சடங்க இதழ் பதித்தாய். கீழே விழவிருந்த என் புகைப்படக்கருவியை ஒரு கையில் நீ பிடித்துவிட்ட போதும், உன் இதழின் இறுக்கம் தளரவில்லை. பருந்து காலில் சிக்கிய பாம்பைபோல என்னால் உன்னிடமிருந்து மீட்க முடியவில்லை. சட்டென விழுந்த ஒரு சொட்டுக் கண்ணீர் என்னை உன்னிடமிருந்து மீட்டது தந்தது. அதன் உப்பு உன் நாவில் ருசித்துச் சுயநினைவை ஏற்படுத்தியிருக்கலாம். என்னை வளைத்துப் பிடித்திருந்த உன் ஒற்றைக் கரத்திலிருந்து என்னை விடுதலை செய்தாய். உன் வர்ண தூரிகையையும் அங்கேதான் நீயும் நழுவவிட்டிருந்தாய். இங்கிதம் தெரிந்தவன் நீ. அதன் பிறகு அதைப் பற்றி என்னிடம் ஒரு போதும் பேசியது இல்லை.

ஓவியம் Pablo Picasso

நான் இறுதியாக புகைத்த சாம்பலில் சரிந்து விழுந்தது எல்லா கற்பனைகளும்.  மெல்ல நமக்குள்  தொடங்கியது ஒரு நெருக்கமும் அதன் பின்பான ஒரு பிரிவும். ஒரு போதும் நான் உன் வாழ்க்கைக்குள் வர நினைக்கவே இல்லை. ஆனால், அதற்காக நான் உன்னை மறுதலித்துவிட்டேன் என்பது அர்த்தமல்ல. மடையான் பறவையைப்போல நீ எனக்குள்ளிருந்தே என்னை அழைப்பதாகக் கனவு கண்டு விழிக்கிறேன். உன் திசை பார்த்து திரும்பும் அதே வேளையில் கண்ணை மூடிக்கொண்டு காட்டுத் தனமாகப் பின் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நீ என்னை பார்த்து பயப்படுவதாக சொன்னாய். என் எழுத்து, என் சுபாவம், என் சுயம் அனைத்திலும் மரணத்தின் வாடை வீசுவதாக கூறினாய். விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா எழுதிய 'தீவிரவாதி, அவன் கவனித்துக்கொண்டிருக்கிறான்' என்று பிரம்மராஜன் மொழி பெயர்த்த கவிதையை இங்கு நினைவிற்கு கொண்டு வருகிறேன். காலம் எப்படி ஊர்கிறது என்ற கவிதை வரியை உனக்கு சமர்பிக்கிறேன். வெடிகுண்டு அது வெடித்து விடுவதில்தான் இருக்கிறது போராட்டம்.

இந்த வாழ்க்கை எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுக்கிறது. அதே அளவுக்கு நம்மிடமிருந்து எவ்வளவோ மறைத்தும் வைத்துள்ளது. அனைத்தையும் நாம் சுகித்துவிட முடியாது. அதன் ரகசியங்கள் நழுவி செல்பவை. ஏதோ ஒரு பிரதேசத்தில் இருந்துக்கொண்டு என் பதிவுகளில் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.. நினைவிருக்கிறதா? நீ உனக்காக ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்டிருந்தாய்..

ஆனால், நான் ஒரே முறை உன் உதிரமாகப் பிறக்க ஆசை படுகிறேன். உன் உடலில் ஊடுருவி உன் கண்களின் வழி என் காதலை சொல்ல பேராசை கொள்கிறேன். வெண் சாம்பல் நிறத்தில் தோன்றும் அந்த மடையான் பட்சியை உன் கண்களின் வழி பார்த்து அதன் ரகசியம் அறிய விரும்புகிறேன். அதன் கேவலில் எழும் வார்த்தைகள் உம் மௌனங்கள் என்னிடம் பேசும் என நம்புகிறேன். இறுதியில் உன் உடலிருந்து ஒரு சொட்டுகூட மிச்சம் தங்காமல் வெளியேறி உன் மரணத்தோடு என் ரகசியம் கலக்க வரம் கொடுக்கிறேன். அவன் கண்கள் என் வரத்தோடு (சாபத்தோடு) கலந்திருப்பதை மடையான் மட்டுமே இப்போ அறிந்தவனாக இருக்கிறான்.


8 கருத்துகள்:

 1. அவர் சொன்ன அந்த ஒழுக்கத்தின் மீதும் சமூதாயத்தின் மீதும், சிறுநீர் கழித்து, சிறுநீர் கழித்து இன்று இஷ்டம்போல் விளையாடிக்கொண்டிருக்கிறேன்.//

  விளையாடுவது ஒரு பக்கம் இருக்கட்டும், இதை எழுதவே தைரியம் வேண்டும். ஏன்னா நீங்க சொல்ற அதே சமுதாயம் அதற்கு வேற முத்திரை குத்தும்

  பதிலளிநீக்கு
 2. ஒற்றை சொல்லில் சொல்ல வேண்டுமெனில் பிரமாதம்!

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. பெண்கள் வேற்றுப்பெட்களல்ல என்பதை பெண்கள் நம்ப வேண்டும்.

  மடையான் பறவைகள் எப்போதும் சமூகத்துள் ஒளிந்து வாழப்பழகுகின்றன

  பதிலளிநீக்கு