செவ்வாய், 20 செப்டம்பர், 2016

‘மஞ்சள் வெயில்’- யூமா.வாசுகி


யூமா.வாசுகி எழுதி நான் வாசித்த முதல் புத்தகம் ‘மஞ்சள் வெயில்’. அதற்கு முன்பு நான் அவரை குறித்தும் அவரின் படைப்புகள் குறித்தும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. மலேசியாவுக்கு வரும் சிற்றிதழ்களில் நான் அவர் எழுதி கட்டுரை – கவிதை – கதை என்று எதையும் வாசித்தது இல்லை.
அவரை குறித்தும் அவர் படைப்பு குறித்தும் முகநூலில்கூட யாரும் பகிர்ந்துக்கொண்டதாக நான் அறியவில்லை. இந்நிலையில் ‘மஞ்சள் வெயில்’ கையில் எடுக்குபோது, அது ஜீவிதா என்ற யுவதிக்கு ஓவியரும் கவிஞருமான கதிரவன் எழுதியிருக்கும் கடிதமாக கதை தொடங்குகிறது.
விடிந்துவிட்டது என்று தனது கடிதத்தை தொடங்கி ஜீவிதாவுடன் பேசத்தொடங்கும் கதிரவன், ஒரு மஞ்சள் வெயில் மாலையில் கடிதத்தை முடித்து கதையையும் முடித்து வைக்கிறார்.
இதற்கிடையில் மெல்லிய மயிலிரகாய் வருட தொடங்கிய காதல், (அது ஒருதலை காதலாகத்தான் எனக்கு தெரிகிறது) பின் அதற்காக மண்டியிடுகிறார், மன்றாடுகிறார்.
கூச்ச சுபாவமுடைய ஆணின் காதல் எப்படியிருக்கும் என்று தமிழ் சினிமா கொஞ்சம் அதிகமாகவே காட்டியிருக்கிறது. யூமா.வாசுகியின் எழுத்தில் அந்த காதலை வாசித்து பார்க்க வேண்டும். ஏக்கத்தையும் ஆற்றாமையையும் நம்பிக்கையும் நம்பிக்கையின்மையையும் கண்முன் நிறுத்துகிறார்.
பொதுவாக காதல் படங்களும் காதல் கதைகளும் என் ரசனைக்கு அப்பாற்பட்டு போய்விட்டன. உறுதி படுத்தப்படாத காதலுக்கு இந்த ஆண் ஏன் இப்படி கதறுகிறான் என்று தோன்ற தொடங்கிவிட்டது எனக்கு.
என்றாலும் காதலை அவள் ஏற்காத போது அதை எப்படி கதிரவன் புரிந்துகொள்கிறார் என்று கடித பாணியிலேயே கொண்டு போகும் விதம் அழகு.
‘தலை மடங்கச் சேவிக்கும் என் கழுத்தை நோக்கி அசுர வேகமாய் வாளிறங்குகிறது காதல். ஒரு நாளைக்கு சிறு வேலையொன்றின் குறை பகுதியை முடித்து, நாளெல்லாம் நான் ஓய்ந்தாலும் பரவாயில்லையே…அது போதுமாயிருக்கும். ஆனாலும் நான் அவளை காதலிக்கிறேன்’ என்று ஜீவிதாவின் காதல் குறித்து ஜீவிதாவிடமே சொல்லி மன்றாடி, தன் ஞாயத்தை கற்பித்து அவளிடமே பின் விடைபெறுகிறார் 33 வயது கதிரவன். 

புத்தகத் தலைப்பு : ‘மஞ்சள் வெயில்'
இரண்டாம் பதிப்பு: 2011
 பதிப்பகம் : அகல்
விலை : 85 ரூபாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக