ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அலைச் சறுக்கு (கவிதை)

அலைகள் மேலடிக்க
கரையில் அமர்ந்து
கடலின் அணைப்பை
உள்வாங்குகிறேன்

சற்று தொலைவில்
சறுக்குப் பலகை மீதேறி
குட்டிக் குட்டி அலைகள்மேல்
தன்னை சமநிலைப்படுத்தி
பயணிக்குமொருவன்

பெரும் நீர்த்திரையென
எங்கிருந்தோ வந்த
தாய் அலை ஒன்று
அவனோடு தொடங்கியது
சாவின் விளையாட்டை

உறுதியான மரணம் போல்
சீற்றமும் ஓலமும் கொண்டு
அவனைப் பிடரியில்  துரத்தி
குமுறித் தூக்கிக்கரையில் வீசியது

கடலுதைத்தவனை
சாகசக்காரன் என
மெச்சுகின்றனர்

கடலலைகள் பேசாத வரையில்
கூறப்படும் ஒவ்வொரு கதையும்
அலைச் சறுக்குபவனையே
விதந்தோதிக் கொண்டிருக்கும்...

திங்கள், 16 டிசம்பர், 2019

மறைக்கப்பட்ட தொழிற்சங்கப் போராளிகள்.. பி.வீரசேனன் - எஸ்.ஏ.கணபதி


மலேசிய வரலாற்றில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அல்லது விடுதலைக்காக குரல் கொடுத்த  தலைவர்களை பட்டியலிடும்போது, சுபாஷ் சந்திரபோஸ், பாவலர் பெரிஞ்சித்தனார், தந்தை பெரியார் உள்ளிட்டவர்களை நினைவுக்கூர்ந்து பெருமிதம் கொள்ளும் மலேசிய தமிழர்கள்,  இந்தியாவிலிருந்து கூலியாட்களாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுக்காகவும் , உள்நாட்டு தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காக  போராடிய தொழிற்சங்கப் போராளிகளான பி.வீரசேனன் மற்றும் எஸ்.ஏ.கணபதி குறித்து ஏன் பேசுவதில்லை என்ற காரணத்தை தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.  
 
மிக சமீபத்திலிருந்துதான் மலேசிய சோசலிசக் கட்சி இம்மாதிரியானவர்களின்  வரலாறுகளை பொது மக்கள் மத்தியில்  கொண்டு வந்ததுடன்  அப்போராளிகள் குறித்த கருத்தரங்கையும் தொடர்ந்து  ஏற்பாடு செய்து வருகிறது.   
இளம் வயதிலேயே தன்னிகரற்ற மாவீரர்களாக உயிரை விட்ட தோழர்கள் பி.வீரசேனன் மற்றும் எஸ்.ஏ.கணபதி இருவருரின் நினைவாக வருடத்திற்கு  ஒரு முறை காற்பந்தாட்டப் போட்டியையும் நடத்தி இவர்கள் யார் என்ற வரலாற்றை ஒரு பரப்புரையாகவும் செய்து வருகிறது பி.எஸ்.எம் . ஆனாலும், நம்மில்  பலருக்கு இவர்கள் குறித்து பேசுவதற்கு இன்னும்  அடையாளச் சில்கல் இருக்கவே செய்கிறது. 

பி.வீரசேனன்


பி.வீரசேனன் இவர் எஸ்.ஏ.கணபதியின் நண்பரும் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஆவார். 1946-லிருந்து மலாயாவில்,  எஸ்.ஏ.கணபதியோடு இணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்.  1943-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூருக்கு வருகை தந்து இந்திய சுதந்திரக் கழகத்தையும், இந்தியத் தேசிய இராணுவத்தையும் அமைத்தபோது அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் தமிழர்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர்க்க தோழர்களுடன் இணைந்து பணியாற்றினார்.  கணபதி அவர்களை  தூக்கில் போடுவதற்கு ஒரு நாள் இருக்கும்போது அதாவது மே 3-ஆம் தேதி 1949-ஆம் ஆண்டு  இங்கொரு காட்டில்  இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் நடந்த நேரடிச் சண்டையில் பி.வீரசேனன் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவீரர் தியாகி  பி.வீரசேனன் சகாத்தம் அதோடு முடிவடைகிறது.  இவரின் பூர்வீகம் மற்றும் இதர விவரங்கள் குறித்து இன்னும் தெளிவான வரலாறு கண்டறியப்படவில்லை.

                                                                                                                        
எஸ்.ஏ.கணபதி1912-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் தம்பிக்கோட்டை கிராமத்தில் எஸ்.ஏ.கணபதி பிறந்தார்.  தனது பத்தாவது வயதில் சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்ததுடன் தொடக்கல்வியை சிங்கப்பூரிலேயே   மேற்கொண்டார். இயற்கையாகவே வர்க உணர்ச்சி கொண்டவரான  கணபதி கம்னியூச கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.  

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, மலாயாவில்  மீண்டும் காலனிய ஆதிக்கம் ஏற்பட்டபோது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக மலாய்க்காரர்கள், சீனர்கள், தமிழர்கள் சினங்கொண்டு எழுந்தனர்.     
உலகில் அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டிஷ், டச்சு, போர்த்துகீசிய பிரான்சு  உள்ளிட்ட நாடுகளிலும் விடுதலை புரட்சி தொடங்கின. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் 'உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற முழக்கத்தின் கீழ் , 1945- பிற்பகுதியில் உலக தொழிலாளர்கள் சங்கம் அமைத்தனர். இப்படித்தான் சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது.
மலாயாவை பொறுத்தவரை இந்தத் தொழிற்சங்கம் துரித வளர்ச்சி கண்டது. அதோடு அனைத்து மாநிலங்களிலும், அரசாங்க சட்டப்படி பதிவு செய்து  பொது தொழிலாளர் சங்கங்கள் அமைக்கப்பட்டன.
தபால் தந்தி தொழிலாளர் சங்கம், ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், இரும்பு தொழிலாளர் சங்கம், பாமாயில் தொழிலாளர் சங்கம், மருத்துவமனை தொழிலாளர் சங்கம் என பல்வேறு சங்கங்கள் உயிர்பெற்று செயல்பட தொடங்கின. 
பின்னர் இம்மாநில சங்கங்கள் ஒருங்கிணைந்து அகில மலாயா ரீதியில் ''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' என்ற அமைப்பு உயிர் பெற்றதுடன் இதற்கு இந்தியர்களின் தலைவராக  கணபதியும், சீனர்களின் தலைவராக யாப்சீ லிம்-மும் , மலாய் தலைவராக அப்துல்லா, சித்தி, நூர் முகமது ஆயோரும்    தலைமை ஏற்றனர்.
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்திற்கு முன்னணி பாட்டாளி முரசு என்ற தமிழ் வார பத்திரிக்கை தொடங்கப்பட்டு அதன் ஆசிரியராகவும் கணபதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1946-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் தொழிற்சங்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தியதுடன் தங்கள் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 

1. எட்டு மணி நேர வேலை
2. எட்டு மணி நேர ஓய்வு
3. எட்டு மணி நேர நித்திரை
4. கூலி என அழைக்காமல் தொழிலாளர் என அழைத்தல்
5. மே 1, தொழிலார் தினத்தில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, ஒரு நாள் ஊதியத்துடன்  விடுமுறை
6. சம்பள உயர்வு 

இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி   நடந்த போராட்டங்களில் தொழிற்சங்க உதவியுடன் தொழிலாளர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த எழுச்சிக்கு பிறகு தொழிற்சங்கத்தின் குரல்கள் அங்காங்கே சத்தமாக ஒலிக்க தொடங்கியது. ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தில் இறங்கியது. இதனால் அசௌகரியம் அடைந்த ஆங்கிலேய அதிகாரிகள், தொழிற்சங்கவாதிகளை குறி வைத்தனர். தொழிற்சங்கங்களுக்கும் கம்யூனிச கட்சிக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கருதிய ஆங்கிலேய அரசும் தோட்ட நிர்வாகங்களும் தொழிற்சங்கவாதிகளை கண்காணிக்க தொடங்கினர். கம்யூனிச கட்சியின் பலத்தோடு இயங்குவதாக கருதப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கவாதிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியது. தொழிற்சங்க அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தொழிற்சங்கவாதிகள் தடுத்து வைக்கவும் பட்டனர்.

இந்நிலையில் தொழிலார் சங்கத்திற்கு தலைவராக இருந்த தலைவர் கணபதி மார்ச் மாதம் 1ஆம் தேதி 1949-ல்  பத்து அராங்- ரவாங்  அருகாமையில் இருந்த  'வாட்டர்பால்' தோட்டத்தில் துப்பாக்கியும் ஆறு வெடிமருந்துகளும்வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலில் இருந்தது. அதோடு, ஆயுதம் வைத்திருப்போர்மீது கடும் நடவடிக்கைகளை ஆங்கிலேய அரசு முடக்கி விட்டிருந்தது. தாம் அதை கையளிக்கவே காவல் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தேன் என்ற கணபதி அவர்களின் வாக்குமூலத்தை அந்த ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ளவே இல்லை. 

இந்தியா,பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்கங்க இயக்கங்களும் உலகத் தொழிலாளர் சம்மேளனமும் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கணபதி கைதுக்குப் பிறகு நாட்டில் குறிப்பாக இந்திய மக்களிடையே  அமைதியில்லாத சூழல் ஏற்பட்டது.  சுபாஷ் சந்திரபோஸ் பரிந்துரையில்  இந்திய பிரதமரான நேரு இவ்விவகாரத்தில் தலையிட்டு, கணபதிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என பிரிட்டனுக்கான இந்திய தூதர் வி.கே.கே கிருஷ்ணன் மூலமாக கோரிக்கை விடுத்தார்.  டெலிகிராம் மூலம் அனுப்பட்டதாக கூறப்படும் அக்கோரிக்கைக்கு   இதுவரை  எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. 

4.5.1949 காலை 4 மணிக்கு மேல்..

இறுதியாக ஜெயில் சூப்பிரண்டன்டன், கணபதி அவர்களைப் பார்த்து நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா? வேறு யாருக்கும் செய்தி சொல்ல வேண்டுமா  என கேட்டார். லேசான புன்னகையுடன், மலாயா மண் மாற்றானிடமிருந்து விடுதலை பெறட்டும். மலாயா நாட்டு தொழிலாளர் வர்க்கம் வெற்றி பெறட்டும். மலாயா மக்களுக்கு புதிய வாழ்வு மலரட்டும். மலாயா மண்ணில் மட்டுமல்ல , உலகில் எந்த ஒரு பகுதியிலும் அடிமை எனும் கொடுமைக்கு முடிவுகள் கிடைக்கட்டும். இதுவே என் இறுதியான விருப்பம் என்றார் கணபதி. காலை 5 மணிக்கு 10 பேர் கொண்ட குழு முன்னிலையில் மாவீரர் கணபதி  தூக்கில் ஏற்றப்பட்டார்.
உலகில் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தமிழன்  கணபதி என்று வரலாறு சொல்கிறது.  

இந்த மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களை பதிவுகளாக வெளியிட்டனர். குறிப்பாக கலைஞர் கருணாநிதி 'கயிற்றில் தொங்கிய கணபதி என்ற நூலையும் , தூக்குமேடை அழைக்கிறது என்ற தலையங்கத்தை  தோழர்  அண்ணாதுரையும் எழுதினார்கள். காரிருளால் சூரியன் மறைவதுண்டோ ? என பாரதிதாசன் கவிதை எழுதினார். பெரியாரும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். 'கயிற்றில் தொங்கிய கணபதி' என்ற புத்தகத்தை நாடகமாக்கி , நடிகவேள் எம்.ஆர்.ராதா  தமிழகம் முழுவதும் கணபதி அவர்களின் சரித்திரத்தை பரப்பினார்.

இப்படியாக ஒரு மாவீரனின் சகாப்தம் மலேசிய மண்ணில் ஒரு முடிவுக்கு வந்தது. 

இந்த மாவீரர்களுக்காக ஒரு கல்லறையோ அல்லது நினைவு பீடமோ இருப்பதாக அறியமுடியவில்லை. நிச்சயமாக அதற்கு அரசும் அனுமதிக்க போவதில்லை என்பது நமக்கு தெரியாத ஒன்றா என்ன ?

-யோகி

தரவு : ‘’கடல் கடந்த தமிழன்’’ (புத்தகம்)

கொசுறு தகவல்

மலேசியாவில் எடுக்கப்பட்ட கபாலி திரைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. படத்தின் தொடக்க காட்சியில் சிறைசாலை காண்பிக்கப்படும். பின் அவர் தூக்கிலேற்றப்படுவார். கதையின் ஓட்டத்தின் இடையில் தொழிலாளர்களுக்காக கபாலி பேசுவார்; தொழிலாளர்களிடமும் அவர்களின் உரிமைக்காக பேசுவார். இக்காட்சி எல்லாம் மலாயா கணபதியின் வரலாற்றோடு தொடர்புடையது என மலேசியாவில் பரவலாக சலசலக்கப்பட்டது. ஆனாலும், அந்த சலசலப்பானது கிளம்பிய வேகத்திலேயே அடங்கியும்  போனது.ஞாயிறு, 15 டிசம்பர், 2019

ஒளிவேகச் சொல் (சிங்கப்பூர் புகைப்படக் கண்காட்சி)


உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர்களில் ஒருவரான  பெனே புர்ரி (Rene Burri) தன் கலையைக் குறித்து இப்படிச்  சொல்கிறார். " என்னைச் சுற்றி இருப்பவற்றைப் புகைப்படமெடுப்பதற்காக, என் கண்கள், மனம், மூளை அனைத்தையுமே இந்த உலகத்தின் ஒரு பகுதியாகவே பயன்படுத்த விரும்புகிறேன்,"என்று. இவர் போர் சூழலை புகைப்படம் எடுக்கும் ஒரு நிருபரும் ஆவர். நான் பெரிதும் விரும்பும் மற்றொரு புகைப்படக் கலைஞன் கெவின் கார்ட்டர்.

என்னால், என்னை இவர்களோடு ஒப்பிட முடியாது என்றாலும், புகைப்படம் எடுத்து தரும் எனது கருவி என்னை அப்படித்தான்  பயன்படுத்திக் கொள்கிறதோ என தோன்றுகிறது. நாடகத்தன்மைக் கொண்ட எதையும் என்னால் புகைப்படம் எடுக்க முடிந்ததில்லை. ஆனாலும்  நிர்பந்தம் என்னை அதில் கொண்டு போய் தள்ளி விடும்போதெல்லாம், அதனுடாக அதில் சேராத ஒன்றையும் என்னை அறியாமலே நான் தேடி அலைந்துக்  கொண்டிருப்பேன்.
''ஒளிவேகச் சொல்'' ஆங்கிலத்தில்  ''WORD AT THE SPEED OF LIGHT''  என்று சொல்லலாம்.  சிங்கப்பூரில் நடந்த ஊடறு பெண்நிலைச்  சந்திப்பில் ஓர் அங்கமாக இடம்பெற்ற எனது முதல் புகைப்படக் கண்காட்சிக்கு நான் இந்தப் பெயரைத்தான்   வைத்திருந்தேன். முதலில் இது என் கவிதையின் தலைப்பாக இருந்தது. பின் புகைப்படக் கண்காட்சிக்கும் தலைப்பாக தன்னை மாற்றிக் கொண்டது. எனக்கென்னவோ இதைவிட சிறந்த ஒரு தலைப்பு என்  கண்காட்சிக்கு இருக்காது  என்றுதான்  தோன்றியது.

இயற்கையாகவே நான் அதிகம் பேச தெரிந்தவள் இல்லை. இலக்கியத்தோடும், சூட்சமத்தோடும், அறிவார்ந்த ஒரு டெக்னிகள் பேச்சாளராக நான் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் என் எழுத்து பேசக்கூடியது. பல இடங்களில் அது உரக்க பேசியிருக்கிறது. என் புகைப்படங்களையும் நான் அவ்வாறுதான் ரகம் பிரிக்க நினைக்கிறேன். 2015-ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நடந்த பெண்கள் சந்திப்பின்போது, யாழ்ப்பாணம் செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்போது போர் பூமியில் எடுத்த சில புகைப்படங்கள், அது தொடர்பாக என் அகப்பக்கத்தில்   பதிவிட்ட தொடரின் அனைத்து புகைப்படங்களும் பேசப்பட்டன. குறிப்பாக ஒரு வெளிநாட்டுப் பயணியாக என் பார்வையிலிருந்து இலங்கை எனக்கு என்னவாக இருக்கின்றது என்பதற்கு  அந்தப் புகைப்படங்கள் இன்று வரையில்  சாட்சியாக இருக்கிறது.
ஒரு நிருபராக  எடுக்கும் புகைப்படங்களுக்கும்,  இயற்கை மீது இருக்கும் தாகத்தோடு தேடி எடுக்கும் புகைப்படங்களுக்கும், வெவ்வேறு நாடுகளில் எடுக்கும் மனித வாழ்கைக்கும், அவர்களின்  முகங்களுக்கும்  நான் கொடுக்கும்
பெயர்கள்   வெவ்வேறாராக இருக்கலாம்.   ஆனால், அவை மனிதம் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைபவையாகும்.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி தொடர்பாக, நேரம் போதாமை காரணத்தினால்  ஒரு கலந்துரையாடலோ அல்லது கருத்து பரிமாற்றமோ எதுவுமே நடைபெறவில்லை என்றாலும், என் வரையில் அது வரலாற்றுப் பதிவுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சட்டகத்தோடு கூடிய ஒரு புகைப்படத்தை 30 சிங்கப்பூர் டாலருக்கு விநியோகிக்கப்பட்டது. அந்தப் பணத்தை இரண்டு பாகமாக பிரித்து  தமிழகத்தில் ஆணவக்கொலையில் கொல்லப்பட்ட சகோதரர் தோழர் அசோக் குடும்பத்தினருக்கும், மறுபாகத்தை இலங்கை போராளிகளின் புனர்வாழ்வுக்காக கொடுக்க உத்தேசித்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவு, யாரும் புகைப்படங்களை வாங்காததால் கிடைத்த பணத்தை அப்படியே தோழர் அசோக் குடும்பத்தினருக்கு கொடுக்கச் சொல்லி, தோழர் ஜீவலெட்சுமியுடன் கொடுத்து விட்டேன்.

முதற் முயற்சி பெரிய வெற்றியில் முடியவில்லை என்றாலும் அது தோல்வியடையவில்லை என்பது எனக்கு பெரிய ஆறுதல். காட்சிக்கு வைத்த என் புகைப்படங்களில் ஒன்று,  வாரணாசி தெருவில்  பாசிமணிகளை விற்கும் ஒரு தாயையும் அவரோடு மணிகளை எடுத்து விளையாடிக்கொண்டு  இருக்கும் அவர் குழந்தையும் புகைப்படம் எடுத்திருப்பேன்.

விவாதத்திற்கு உட்படுத்தினால் மிக கனமான விஷயங்களை பேசக்கூடிய புகைப்படம் அது. தற்போது நான் அப்புகைப்படத்தில் இருக்கும் தாயா அல்லது சேயா என என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன் கையில் ஒரு புகைப்படக் கருவியோடு.

நன்றி...
இவ்வருட பெண்கள் சந்திப்பில் நான் கட்டுரை ஏதும் படைப்பதற்காக தயாராக இல்லாத போது, ஒரு பார்வையாளினியாகவும் புகைப்படக் கலைஞராகவும் மட்டும் செயற்படலாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்நிலையில்தான் ஏன் புகைப்படங்கள் கண்காட்சியை செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. ஊடறு றஞ்சி (மா) யிடம் இதைக்கூறும்போது , எத்தளத்தில் இயங்கினாலும் ஊடறு பெண்களுக்கு ஆதரவளிக்கும்.. யோகியை விட்டுவிடுவோமா என்றார். மரணத்தை நோக்கி மூழ்க்கிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் தன் கையை கொடுத்தால் எக்கி பற்றிக்கொள்வோம் இல்லையா அப்படி இருந்தது எனக்கு. நன்றி றஞ்சி மா.

இதற்கு சிங்கப்பூரில் ஆதரவளித்து அனுமதி பெற்றுத்தந்த தோழி ரமா மற்றும் சகோதரி அஸ்வினிக்கு என் அன்பு.

எவ்வளவு பண நெருக்கடியிலும் எனக்காக நான் யாரிடமும் பணம் கேட்டதே இல்லை. ஆனாலும், இந்தக் கண்காட்சிக்காக ஒரு சிறு தொகையை பினாங்கைச் சேர்ந்த என் உடன் பிறவா சகோதரர் ஹபிப் அண்ணாவிடம் கேட்டிருந்தேன். அவர் என் பயணத்திற்கும் சேர்த்து உதவி செய்தார். இது காலத்தில் செய்த உதவி. என்றும் மறக்க மாட்டேன். நன்றி ஹபிப் அண்ணா.

இந்தப் புகைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் பெருவாரியான இடங்களுக்கு அழைத்துச் சென்று என் பயண கனவுகளை சாத்தியமாக்கிக் கொடுத்த நண்பர்  பசுமை சாகுலின் உதவியையும் இன்நேரத்தில் பதிவு செய்வது அவசியம். நன்றி சாகுல்.

புகைப்படங்கள் வாங்கி உதவிய அன்பு உள்ளங்களுக்கு என் பேரண்பும் நன்றியும்.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

புதிய மலேசியாவும் உண்மையான சுதந்திரமும்
ஆகஸ்ட் 31, 2018 மலேசியா தனது- 61 வது ஆண்டு சுதந்திர நிறைவு நாளை அடைந்திருக்கிறது. இதே தேதியில்தான் சபா மாநிலமும் தனது மாநில சுயஆட்சி தினத்தைக் கொண்டாடுகிறது. 1963-ஆம் ஆண்டுக்கு முன்புவரை தீபகற்ப மலேசியாவோடு  இணையாமல் இருந்த சபா, அதன்பிறகு ஒன்றிணைந்தது.  சரவாக் மற்றும் சிங்கப்பூர்,  1963-ஆம் ஆண்டு ஜூலை 22- ஆம் தேதியோடு தீபகற்ப மலாயாவோடு கைகோர்த்து  மலேசிய  நாட்டினை வடிவமைத்தன.  அதற்குமுன் வரை இந்த மூன்று மாநிலங்களும் சுய ஆட்சி பிரதேசங்களாக  செயல்பட்டு வந்தன. ஆனாலும், சில காரணங்களுக்காக 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை, மலேசியாவின் மாநிலமாக செயல்பட்ட சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகச் செயல்பட அனுமதி பெற்றது . மலேசியா ஆகஸ்ட் 31-ஆம் தேதியை சுதந்திர தினமாகவும் செப்டம்பர் 16-ஆம் தேதியை மலேசிய தினமாகவும் கொண்டாடி வருகிறது.  

மலேசியாவில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தேசிய தினம் முற்றிலும் வேறுபட்டது. மலேசிய வரலாற்றில் முதல்முறையாக புதிய அரசாங்கத்தின் நிர்வாக சித்தாந்தத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. (இப்போதிருக்கும் பிரதமர் இதற்கு முன்பும்கூட பிரதமராக இருந்திருந்தாலும் இது மாறுபட்ட சுதந்திர தினம்தான்.)

மலேசியா சுதந்திரம் அடைந்த 61 ஆண்டுகளில், கடந்த மே மாதம் 14-ம் தேதி நடைபெற்ற 14- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் தடவையாக, புதிய ஆட்சி மாற்றத்தை நமது நாடு சந்தித்திருக்கிறது.  அம்னோ -பாரிசன் நேஷனல் அரசாங்கம் , வாக்குகளை  எண்ணும்போது முன்னணியில் இருப்பதாக அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. (அதுதான் கூட்டணி அமைக்கப்போகிறது என்று நம்பப்பட்டது)     இறுதியில் தேர்தல் நடைமுறை விதியின்படி பாரிசன் நேஷனல் அரசாங்கம் தோல்வியை தழுவியது.  பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த தேசிய முன்னணி அரசாங்க அதிகாரத்திற்கு எதிராக மலேசியர்கள் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.    

14- வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மலேசிய மக்கள் புதிய அரசாங்கத்தை வரவேற்றிருந்தாலும் இதில் முரண்பாடாக அமைந்தவர் பிரதமர்தான். துன் மகாதீர் முகமது மலேசிய வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தேசிய முன்னணி சாம்ராஜ்ய  பிரதமராக இருந்தவர். தனது சொந்த கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான முரண்பாடுகள்  காரணமாக அவர் அம்னோவிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு,  கட்சியின் மீதும் அரசின்  மீதும் கடுமையான விமர்சனத்தை மகாதீர்  வைத்ததின்  விளைவு  தேசிய முன்னணி அரசாங்கம் வீழ்த்தற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.  

எதிர்க்கட்சியாக இருந்த பக்கத்தான் மற்றும் அதன் உறுப்பு கட்சிகள்  மகாதிர் ஒரு "தேசிய மீட்பாளர்" என்று கொண்டாட தொடங்கினர். பின் பக்கத்தான் கட்சி பக்கத்தான் ஹரப்பானாக  கூட்டு சேர்ந்து இறுதியாக நடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சியினர் வெற்றியடைந்தனர். ஆயினும், பக்கத்தான் ஹரப்பான் கட்சி வெற்றி பெற்றதற்கு மகாதீரின் தலைமைத்துவம்  மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது. நஜிப்பின் தலைமையின் கீழ் செயல்பட்ட அம்னோ -பாரிசன் நேஷனல் நிர்வாகம் அதன் நம்பகத்தன்மையை இழந்து, ஆட்சியாளர்களிடையே பிளவை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அரசின்மீது மக்கள் நடத்திய  தொடர்  போராட்டங்களினால் உருவாக்கப்பட்ட   அரசியல் உத்வேகம், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அரசாங்கம் சரிவடைய காரணமாக அமைந்தது.
 
''அம்னோ''-''பரிசான் நேஷனல்'' வீழ்ச்சியும் ''பக்கத்தான் ஹாரப்பான்'' வெற்றி பெற்று மீண்டும் மகாதீர் பிரதமராக வந்ததும் விசித்திரமான ஒரு நிகழ்வுதான் என்றாலும் சமூக சீர்திருத்தத்திற்கான அரசியல் போராட்ட செயல்பாட்டில் அது முக்கியமான மாற்றமாகும்.    நஜிப்பின்  வீழ்ச்சி மற்றும் மகாதீரின் மறுமலர்ச்சி,  அரசாங்க பிரமுகர்கள் வர்க்கத்தை மறுசீரமைப்பதாகக் கருதலாம்.  அரசின்மீது  கிட்டதட்ட   நம்பிக்கையை  இழந்துவிட்ட  பெரும்பான்மையான மக்கள், புதிய  அரசினர் அவர்களுக்கான சொந்த வரையறை திட்டங்களை வைத்திருந்தாலும்,  புதிய மாற்றத்தின் மீது  பெரிய அளவில் நம்பிக்கை வைத்தார்கள். அரசியல் மறுகட்டமைப்பிற்கு பிறகு அரசாங்க பிரமுகர்களின் மாற்றமானது கொக்கோ கோலாவும்பெப்ஸி கோலா போன்றுதான் இருக்கிறது.  அதாவது போத்தலின் வெளியே இருக்கும் விவரங்கள்தான்  வெவ்வேறே தவிர அதன் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை.  

இருப்பினும், அரசியல் மறுசீரமைப்புக்கான ஜனநாயகமாக்கல் மற்றும் சமூக சீர்திருத்தச் செயல்முறையை சரிசெய்யச்  சிறிய  வெளியை மட்டுமே  புதிய அரசாங்கம் திறந்திருக்கிறது.  மீண்டும்  ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் அரசியலில் நீண்ட காலம் அனுபவம் பெற்றிருந்த மகாதீர் மற்றும் டாயிம் சைனுதீன் போன்றவர்கள் முற்போக்கானதாக இருக்கும் சில  புதிய கூறுகளை முன்னாள்  ராஜ்யத்தின் போது ஆட்சியில் நுழைந்தவர்கள்தான். நெடு  நீண்ட  காலமாக  எதிர்க்கட்சியாக  இருந்து  அரசியல் மாற்றப் பார்வைகளும் புரட்சிகர இயங்கங்களுக்கு வித்திட்ட தற்போதைய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசியாவின் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வழிசெய்ய முடியும். அதன்பொருட்டு அவர்களுடைய மாற்றுச் சிந்தனை முந்தைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கை ஒத்தியிருக்குமெனில் அது சரிவை ஏற்படுத்தும்.   

ஆட்சி மாற்றத்திற்குப்  பின்னர் சமூக சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகள்  இருக்கவே  செய்தாலும் ,  எவ்வளவு தூரம் விரிவாக்கக்கூடிய அளவிற்கு அதை நிலைநிறுத்த முடியும் என்பது கேள்விக்குறியானது மட்டுமல்ல நம் அனைவருக்குமே அது சவால் நிறைந்ததும் கூட.
எங்கே மக்களுக்கு அதிகம் சுதந்திரம் வழங்கப்படுகிறதோ அவர்களால் அங்கு அரசியல் செயல்பா டுகளில் அதிகமாகப்   பங்கேற்க முடியும். இதனால் நம்பிக்கை கூட்டணி கட்சியின் அரசியல் நிறுவனங்களால் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும், மேலும்   வலுவான   ஜனநாயக முறையை உருவாக்க முடியும்.

ஆயினும்மக்களின் ஆதரவைச் சுலபமாக பெற சில கண்மூடித்தனமான பிரபலமான கொள்கைகளைக் கொண்டுவரும் அரசாங்கத்தால் மக்களிடையே ஜனநாயகத்தை வலுப்படுத்த இயலாது.  மக்களுடைய அரசியல் உள்ளுணர்வை உருவாக்குவதற்கு சிவில் சமுதாயத்திற்கும் ஜனநாயகம் சார்புக்கும் ஓர் சவாலாக இருக்கிறது. இந்த  முரண்பாடுகள்  எதை  உணர்த்துகின்றது என்றால் நாட்டு மக்கள் உண்மையையும் பொய்களையும் பகுத்தாராய்வதுடன் திட்டமிட்டு தைரியமுடன் அரசிடம்  கேள்விகளை  எழுப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை .

முந்தைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாத பொருளாதார திட்டத்தை  தற்போதைய அரசாங்கம் இன்னும் வைத்திருந்தால், சமூக-பொருளாதார அடிப்படையில், கீழ்நிலை  மக்கள் தொடர்ந்து வாழ்க்கையில்  அழுத்தத்தை எதிர்கொள்வதுடன் வாழ்க்கைத் தரத்திலும் பின்னடைவைச் சந்திப்பர். தாராளமயப் பொருளாதாரம்- சந்தை முறை மற்றும் தனியார் துறையும்  திறமையான அனைத்தையும் வழங்குவதாக புரிந்துகொள்ளப்  பட்டிருக்கிறது. அதனால் அடிப்படை சேவைகள் மற்றும் மனித உழைப்பு அப்பாற்பட்டு  தொழிலார்களை தனியார் மயமாக்குதலுக்குச் சாத்தியமாகிறது. கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் பார்க்கும் பந்தயத்தில் பொருளாதாரம்  கடுமையான பொருளாதார சீர்நிலையற்ற நிலையை  உருவாக்குவதுடன் தாராளமய பொருளாதாரக் கொள்கை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.   

ஆகையால், சமூக நீதி மற்றும் சாதாரண மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் சமுதாயத்தைப் புதுப்பிக்க  வேண்டும் என விரும்பினால்  மக்களின் நல்வாழ்வை நசுக்கும் வகையில் இயங்கும்  பெருநிறுவன இலாபங்களைப் பற்றி அக்கறை கொண்டிருக்கும் புதிய தாராளவாத கொள்கையை   உடைக்க வேண்டும்.

தேசிய தினம் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் இந்த நேரத்தில் வெறுமனே தேசபக்தி உணர்வு ஏற்படுத்தக்கூடிய வரிகளான 'நாட்டின்மீது அன்பு செலுத்துவோம்' அல்லது மலேசியாவை நேசிப்போம் போன்ற வரிகள் ஓர் சமூகத்தை கட்டியெழுப்பாது.

நாட்டைக் காப்பாற்ற இரு தலைவர்களின்  அதிகாரத்தை  மக்கள் சார்ந்தே இருப்பார்களேயானால், உண்மையில், நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதித்திக்கும் பிரச்சனையுடன் நம் சமுதாயம் இன்னமும் பாதிக்கப்படுமேயானால் நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். நமது அரசாங்கமானது, பொது மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக உடன்படிக்கைக்கு இணங்குமாயின், நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள்

உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கு, நமக்குத் தேவையானது

-மனித உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கும், அரசியல் கல்வியை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்

-சமூக அமைப்புகள் உதாரணத்திற்கு (தொழிற்சங்கங்கள்,  முற்போக்கு அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் போன்றவை) மூலம் மக்களது அதிகாரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஜனநாயகத்துடனும் தொடர்புப்படுத்த வேண்டும்

-அரசாங்கம் பொது மக்களுக்கு உண்மையிலேயே பொறுப்பாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை  நடைமுறைப்படுத்தவும் அனைத்து அரசாங்கக் கொள்கைகளையும் எப்போதும் கண்காணிக்கவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


-எழுத்து - சூ சூன் காய் (2019)
தமிழ் மொழிபெயர்ப்பு - யோகி

(சமத்துவத்தை நோக்கி புத்தகத்திற்காக)