புதன், 4 டிசம்பர், 2019

தோட்டப் பாட்டாளிகளின் சொந்த வீடு கனவு அடுத்த நூற்றாண்டிலாவது நிறைவேறுமா


மலேசிய தோட்ட தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? அப்படியான சமூதாயம் இன்னும் நாட்டில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?  அவர்களுக்கான அங்கிகாரம் என்ன? மதிப்பு என்ன? மரியாதை என்ன?

இந்தியர்கள் என்றாலே இஸ்டேட்–காரர்கள் என்று கிண்டல் செய்யும் குரல்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வார்த்தையானது பகடிக்கு உட்படுத்தப்பட்டு தன் சுயத்தை சீண்டும் ஒரு சொல்லாக மாற்றப்பட்டபோது மூன்றாம் தலைமுறையினர் தோட்டங்களில் குடியிருக்க விருப்பப் படாமலாயினர். 1800-களிலிருந்து தொடங்கும் தோட்டப் பாட்டாளிகளின் சரித்திரம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கான அடைப்படைத்தேவைக்காக  இன்னும் போராடிக்கொண்டிருப்பதற்கு என்ன அர்த்தத்தை கற்பித்துக்கொள்ள முடியும்?  வரலாற்றில் இடம் பிடித்த பல தோட்டங்கள்  இன்று அடையாளமே இல்லாமல் போய்விட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து இருக்கிறோமா?

இத்தனை கேள்விகளுக்கு நம்மில் பலருக்கு மங்கலான சில காரணங்கள்  தெரிந்தாலும், இத்தனை ஆண்களுக்கான போராட்டத்தின் தாட்பரீயத்தை உணராமலே இருக்கிறோம்.



வஞ்சிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின்  வாழ்க்கை வரலாறு, இன்னும் மலேசிய வரலாற்றில் அழுத்தமாக  எழுதப்படவே இல்லை என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.  அவர்களின் முதன்மை பிரச்சனையாக இருப்பது சொந்தவீடு பிரச்சனை. 1973-ஆண்டு  அப்போதைய பிரதமர் துன் ரசாக் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட சொந்த வீட்டுப் பிரச்சனை,  துள்ளியமாக ஆராயப்பட்டு சுமூகமான ஒரு தீர்வை மக்களுக்காக அவர் கொண்டு வந்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரதமர்.  ஆனால், அத்திட்டமானது பரவலாக வெற்றியடையவே இல்லை. (6 தோட்டங்கள் மட்டுமே அதில் பலனடைந்தன) மாறாக பல்வேறு காரணங்களுக்காக  தோட்ட தோழிலாளிகள் தங்கள் தோட்டங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறனர்.  பாட்டாளிகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் வெறும் திட்டமாக இல்லாமல் அது சட்டமாக்கப்பட்டிருந்தால், இன்று தோட்ட பாட்டாளிகள் வீட்டுப் பிரச்சனைக்காகவும் , சம்பளப் பிரச்சனைக்காகவும்  இன்றுவரை போராடிக்கொண்டிருக்க தேவையிருந்திருக்காது.

எஞ்சி இருக்கும் தோட்டங்களில் வாழும் பாட்டாளி மக்கள், முன்பொரு சமயம் பெறப்பட்ட  பல வசதிகளையும் சந்தோஷங்களையும் தொலைத்துவிட்டிருந்தாலும்,  அடிப்படை உரிமைக்காக இன்றும்வரை போராடி வருகிறார்கள்.  அவர்களின் போராட்டத்தில் உள்ள ஞாயத்தை ஓர் அறிக்கையாக வரைந்து, அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கொடுக்கும் ஒவ்வொரு சமயமும், அந்தக் கோரிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு நகராமல்  ஸ்தம்பித்து நிற்பதற்கான காரணத்தை எப்படி புரிந்துக்கொள்வது என்றே தெரியவில்லை.


மூன்று தலைமுறைகளாக தோட்டத்தை நம்பி வாழ்ந்த பாட்டாளி மக்கள், நாட்டிற்காக உழைத்தவர்கள்தானே? அவர்களின் வழி பெறுநிறுவனங்கள் கொள்ளை லாபத்தை அனுபவித்தார்கள் தானே..? அப்படி இருக்க பாட்டாளிகளுக்காக ஒரு வீடு கட்டி தருவதில் என்ன பிரச்சினை வந்திடப்போகிறது? 30 ஆயிரம் வெள்ளிக்கு குறைவாக இருந்த மலிவு வீடு திட்டங்கள் இன்று லட்சங்களை எட்டி பிடித்திருக்கும் வேளையில் தனக்கென ஒரு வீடு வேண்டும் என்ற நம்பிகையிலும் ஆசையிலும் தொடந்து அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது அதிகாரத்தில் உள்ளவர்களின் மனசாட்சியை எட்டாமலிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே பிரச்சனைக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் தோட்ட பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். இதோ மீண்டும் இரு போராட்டம். இம்முறை பாராளுமன்றம் சென்றனர் நமது தோட்ட பாட்டாளிகள்.

தோட்டத்தில் வேலை செய்த அல்லது தோட்டத்தை நம்பி போன ஒரே காரணத்திற்காக இன்று ஏமாளிகளாகவும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் இருக்கும் இவர்களுக்கு ஒரு ஞாயம் வேண்டும். 2020- தூர நோக்கு சிந்தனையை எட்டிப் பிடிக்கும் புதிய நூற்றாண்டில் புதிய அரசாங்கம் இவர்களுக்கு கொடுக்கப்போகும் உறுதி மொழி என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

4/12/2019 அன்று தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்து உரிமைக்கு குரலை எழுப்பினர்.   4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடந்தது.



அவை என்ன

1. தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டத்தை கட்டாயம் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.

2. அடிப்படை உரிமைகளை மேம்படுத்த வேண்டும். (சுகாதாரமான குடிநீர், ஆயாக் கோட்டகை உள்ளிட்ட வசதிகள்  )

3.நிரந்தர சம்பளம் (இப்போதைய சூழலுக்கு 1800 வெள்ளி )

4. சுகாதாரம்,  கல்வி , பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த புதிய செயல் திட்டம்.

இந்த 4 அம்ச கோரிக்கைகளை பதாதைகள் மூலமாகவும், அறிக்கைகள் வழியும் , புரட்சி பாடல் மூலமாகவும் , ஒரு காட்சியாகவும்  செயற்பட்டு அமைச்சர்களிடம் மகஜரை கொடுத்தனர்.

ஐந்து தோட்டங்களை விழுங்கி ஏப்பமிட்டு கம்பிரமாக எழுந்து நின்றுக்கொண்டிருக்கிறது   புத்ராஜெயா. அந்த ஐந்து  தோட்டங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றிய தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னுமும் வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறது நமது அரசு.

இதுவரையிலான வாக்குறுதிகளும் நம்பிக்கை சொற்களும்

1.முன்னாள் பிரதமர் துன் ரசாக்  1973 ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர்கள் வீட்டுத்திட்ட கொள்கைக்கு  உறுதியளித்தார். இந்தத் திட்டத்தின் கீழ்,  தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டுவதற்கு விவசாய நிலத்தின் ஒரு பகுதியை முதலாளிகள் அல்லது நில உரிமையாளர்கள் ஒதுக்க வேண்டும், மேலும் அந்த வீட்டிற்கான மாதத் தவணை பணத்தை தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும். இருப்பினும், இந்த திட்டம் பரவலாக செயல்படுத்தப்படவில்லை.  மேலும், அத்திட்டமானது   அரசாங்கச் செயலாகவோ அல்லது சட்டமாகவோ இன்றுவரை  ஆக்கப்படவில்லை

2. 1990 -  ஆம் ஆண்டு  முன்னாள் மனிதவள துணை அமைச்சர் கே.பத்மநாபன் தோட்டத்  தொழிலாளர்களுக்கு வீட்டு உடைமை குறித்த பிரச்சனைக்காக சிறப்பு குழுவை அமைத்தார். அந்தச் சிறப்பு குழு என்ன ஆனது?

3. ஆகஸ்ட் 27, 1991: தோட்டத் தொழிலாளர்களுகு வீடு கட்டுவதில் முதலாளிஅல்லது நில உரிமையாளர் தவறினால் நிலங்களை பறிமுதல் செய்ய அப்போதிருந்த சிலாங்கூர் மாநிலஅரசு முடிவு செய்தது. (இந்த முடிவுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை)

4. அக்டோபர் 7, 1992: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம்.

5. நவம்பர் 23, 1994: அப்போது சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆட்சி குழுஉறுப்பினராக இருந்த ராஜகோபால் தோட்டத் தொழிலாளர் மற்றும் சுரங்கத் தொழிலாளர்ளுக்கானவீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்த அறிவித்தார். (அதன் வளர்ச்சி இப்போது என்ன?)

6. ஏப்ரல் 1995- ஆம்ஆண்டு , அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப், கடைசி முயற்சியாக, தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை கட்டி கொடுப்பதில்  பிடிவாதமாக இருக்கும் ஏஜென்சிகளின் நிலங்கள் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்துவோம்  என்று கூறினார். (அதன்பிறகு என்ன நடந்தது?)

7. 1997: சிலாங்கூர் மந்திரி பெசார் அபு ஹசன் ஓமார்,  "இதுபோன்ற இதயமற்ற சேவை இனி அனுமதிக்கப்படாது"என்று கூறினார்.

8. 29.04.1999இல் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி குறித்தமசோதாவை மனிதவள அமைச்சு சமர்ப்பிக்கவிருப்பதாக அப்போதைய மனிதவள அமைச்சர் லிம்ஹா லெக் தெரிவித்திருந்தார்.அதன் பின்னர் அந்த மசோதா சமர்ப்பிப்பு என்னவானது?  மனிதவள அமைச்சர்கள் மாறியிருக்கும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் அந்த மசோதா அல்லது வரைவு, தொடர்ந்து தயார் செய்யப்பட்டு வருகிறதா?

9. 10.06.1999-இல் தோட்டத் தொழிலாளர்களுக்கான கொள்கைகளை அமல்படுத்தவும்அதனை வரையறுத்து கண்காணிப்பதற்கும் தோட்டத்தொழிலாளர்கள் சொந்த வீடுகளை கொண்டிருப்பதை உறுதி செய்யவும் மனிதவள அமைச்சின் தலைமையில் குழுவொன்றுஅமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
(அமைக்கப்பட்ட அந்த கண்காணிப்புகுழு எங்கே?)

10. 2001: தோட்டத் தொழிலாளர் வீட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண மாநிலநிலையில் சிலாங்கூர் மாநிலம் இதுவரை எவ்வித கொள்கையையோ சட்டத்தையோ வரையறுக்கவில்லை.

11. 2012-தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவுவிலை வீட்டு நிதிதிட்டம்(SPPKR-PPE) நாட்டின் 10வது மலேசிய திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.இது தோட்டத் தொழிலாளர்கள் சொந்த வீடுகளை கொண்டிருப்பதை உறுதி செய்ய தேசிய முன்னணியின் மத்திய அரசின் திட்டம். இதற்காக நாட்டின் பொருளாதார திட்டமிடல் பிரிவு வாயிலாக வெ.50 மில்லியனை பிரதமர் துறை சுழற்சி நிதியாக பேங் சிம்பானான் நேசனல் வங்கிக்கு வழங்கிய வேளையில் தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் இலாகா அதனை பராமரிக்கும் இலாகாவாக அறிவிக்கப்பட்டது.நடப்பின் அதன் முயற்சியும் செயல்பாடும் என்னவானது?

12. பாக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கையில் பி 40,  இந்தியர்களுக்கும்,  முன்னாள் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நாட்டின்ன்வீடமைப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முன்னாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க மேம்பாட்டு நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதா?)

13. 26.02.2019:சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ்1990 முதல் சொல்லப்பட்டு வரும் நாடாளுமன்றம் அளவிலோ அல்லது கொள்கை ரீதியில் இதுவரை எந்தவொரு திட்டவரையும் மாநில ரீதியில் பதிவு செய்யப்படவில்லை என்பதை தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளார்.

என்ன நடக்கும் ? 

பக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கையில், பி 40 இந்தியர்களுக்கும், முன்னாள் தோடட தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நாட்டின் வீடமைப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் வாக்குறுதி கொடுக்கப்படத்தை இங்கே சொல்லியாக வேண்டும். 

தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் மகஜர் மூலம் ஏழை பாட்டாளி மக்களின் கோரிக்கைகளும் வீட்டுடைமை கனவும் வெற்றியடைகிறதா அல்லது இதுவும் ஒரு அரசியல் நாடகமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



(நன்றி தென்றல் வராத இதழ்  22.12.2019)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக