ஞாயிறு, 29 மார்ச், 2015

பாரம்பரிய சமையல் யாருக்கு சொந்தம்

ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறது இந்தியக் கலாச்சாரம். அதனுள் சமையல்  கலையை  சேர்க்கவே இல்லை. இன்று உலகமே சமையற் கலையைக்  கொண்டாடும் வேளையில், ஆயக்கலைகளில் ஒரு கலையாக சமையற்கலையை ஏன் மரபுக் காலத்தில்,   சேர்க்கவில்லை   என்ற காரணம் எனக்கு  தெரியவே இல்லை.
அப்படியே சமையற்கலையை அதனுள் அனுமதித்திருந்தால் அறுபத்து நான்கு கலைகளில் மிகவும் நுட்பமான கலை அதுவே எனக் கூறுவேன். இன்று நுட்பமான கலை சமையற்கலை என்று கூறும் நான், என் பதின்ம வயதுவரை அடுப்படிப் பக்கமே போனதில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?
மிகவும் அன்னியத்திருந்த அடுமனை என் வாழ்வில் நெருங்கி வந்தது மிகவும் அண்மையில்தான். சரியாகச் சொன்னால் என் தந்தையார் மறைவிற்குப் பின்புதான்.
இதுவரையில்  மலேசிய இந்தியர்களுக்குத் தெரிந்த  உணவுகளும்,தெரியாமல் போன உணவுகளும், தெரிந்திருந்தும் ஒரு காலவரையறைக்குப்பிறகு காணடிக்கப்பட்ட உணவுகளும் ஏராளம். “என் பாட்டி பட்டமிளகாயைக் காயவைத்து அம்மியில் அரைத்துக் கறிவைப்பார். அந்த மாதிரிக் குழம்பு வகைகளைச் சாப்பிட என் பிள்ளைகளுக்குக் கொடுத்து வைக்கல” என்பார் எனது பாட்டி. காரணம் கேட்டால் அந்தக் காலத்து பலசரக்கு மாதிரியா இப்போ இருக்கு? எல்லாம் கலப்படம் என்பார். இருந்த போதிலும் பாட்டி எனக்கு நினைவு தெரிந்த நாள்வரை பட்டமிளகாய், முளகு, சோம்பு, பூ-பட்டை உள்ளிட்ட பொருட்களை வறுத்து, பொடித்து மாவு அரைக்கும் ஆலையில் அரைத்துத்தான் குழம்புக்கான மசாலாத் தூளை தயார் செய்வார்.  ரெடிமெட் பொருள்களில் அவருக்கு எப்போதும் உவப்படைந்ததில்லை.
எங்கள்  குலதெய்வத்திற்குப் படையல் சமைக்கும்போது மூக்கையும் வாயையும் துணியால் கட்டி வாசனையை முகராமலும், ருசி பார்க்காமலும் சமைத்துத் தெய்வத்திற்குப்  படைப்பார்களாம். படையலுக்குப்பின் கொடுக்கும்  பிரசாதம் தேன்போல இருக்கும்” என்று அவர் அம்மாவின் பெருமையை என் பாட்டி தம்பட்டம் அடித்துக்கொள்வார். அந்த வழக்கமும் நடுச்சாமத்தில் சமைத்து உண்ணும் பாரம்பரியத்தையும் எனக்கு  தெரிந்தநாள் வரை பார்த்ததேயில்லை.
அதேபோல என் பாட்டி சமைத்துக்கொடுத்த உணவை, என் நுனிநாக்கு அறிந்திருந்த ருசியை என் அம்மாவால் கொடுக்க முடியவில்லை. பாட்டி சமைக்கும் கம்பங்கூழ், கேழ்வரகு அடை, சுறாமீன் புட்டு, வாழைத்தண்டு மசியல்  என எதுவுமே என் அம்மாவிற்குச் செய்யத் தெரியாது. இன்றும் பெயர் தெரியாத எத்தனையோ பதார்த்தங்கள் என் பாட்டியோடு முடிந்து போய்விட்டன. இந்த நிலை எனக்கு மட்டுமல்ல, 80% விழுக்காடு மலேசிய இந்தியக் குடும்பங்களின் சோகக்கதை  இதுதான் என்றால் அது மறுப்பதற்கில்லை.எண்ணிலடங்கா எத்தனை எத்தனையோ  இந்தியப் பாரம்பரியப் பலகாரங்களின் செய்முறையையும், சுவையையும் அறிந்திடாமலும் தெரிந்திடாமலும் இருக்கிறார்கள் மலேசிய இந்தியர்கள்.
இரு பாட்டிகளின் கைவரிசையில் (அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா) நானும் எனது உடன் பிறப்புகளும்  உணவை உட்கொண்டது, அது ஒரு பொற்காலம் என்பேன். என் சுயசரிதையை எழுத நேரிட்டால் என் பாட்டிகளின் சமையலைப்பற்றிப் பதிவு செய்யாமல் விடப்போவதில்லை.  உளுத்தம் பருப்பை ஊறவைத்து,  நைய அரைத்து ஆவியில் வேகவைத்து கருப்புச் சீனியையும், வெல்லத்தையும், சிறிது நெய்யையும் கலந்து விழுதுபோல் பிசைந்து  சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொடுப்பார் எனது பாட்டி. வயதுக்கு வந்த பெண்கள் சாப்பிடும் உணவு அது. அத்தனை சுவையான பதார்த்தத்தை இன்று வரை நான் புசித்ததில்லை. அதைச் சாப்பிட்டால் இடுப்பெலும்பு பலம்பெறும் என்பார்கள். பூப்படைந்த காலகட்டத்தில்தான் அந்த உணவைக் கொடுக்க வேண்டுமாம். அப்போது கொடுக்கப்படும் சத்தான உணவுகள் எல்லாம் பெண்களின் பிரசவக் காலத்தில் துணை கொடுக்கும் என்று காரணம் சொல்லியே கொடுப்பார்கள். உண்மையில்  அத்தனை சுவையான பதார்த்தத்தை இன்று வரை நான் புசித்ததில்லை.நானே செய்தும் அந்த ருசி வரவில்லை. அம்மாவிடம் கேட்டதற்கு அதைப் பாட்டி செய்தால்தான் நல்லா இருக்கும்;  தனக்குச் செய்யத் தெரியாது எனக்கூறிவிட்டார். என் தோழிகளும் அம்மாதிரியான பதார்த்தங்களை உண்டதில்லை என்கின்றனர்.
என் பாட்டி தமிழ்நாட்டிலிருந்து 12 வயதில் மலாயாவுக்கு திருமணமாகி வந்தவர். அந்த வயதிலும்  அவருக்குச் சமையல், வீட்டு வேலை எல்லாம்  பாரம்பரிய முறை தவறாமல் தெரிந்திருந்தது. மாங்காய் காய்க்கும்  பருவத்தில் பாட்டி பறித்த மாங்காய் பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி மன் ஜாடியில் இட்டு, கறிவேப்பிலை, கடுகுதாளிப்பு, பட்டமிளகாய் போட்டு நல்லெண்ணெயில் தாளித்து கருப்புச் சீனி பாகெடுத்து மாங்காய் வத்தல் செய்வார்.பாட்டிலில் அடைத்து பாட்டி கொண்டுவரும்போது வாசனை அள்ளும். உதிரி உதிரியாய் இருக்கும் மாவடுகளைப் புசிப்பதற்கு நாக்கு துடிக்கும். ஆனால் ‘ரகசிய சமையல் குறிப்புகள்' என்ற பேரில், அதைச் செய்யும் முறையை  இறுதிவரை பாட்டி கற்றுத்தரவே இல்லை. மண்சட்டியில் வைத்த வெண்டைக்காய் குழம்பு, புளிச்சக்கீரை அரையல்,புதினா துவையல்,தேங்காய்ப்பூ துவையல் போன்றவை என் பாட்டியின் கைப்பக்குவத்திற்கு முன் யாரும் நிற்க முடியாது. இன்னும் பொட்டுக் கடலையில்,  உருளைக்கிழங்கில்,பட்டாணியில் செய்த இன்னும்  பெயர் மறந்துபோன, சுவை மறந்துபோன சமையல்கள்  ‘பாட்டியின்  ரகசியக் குறிப்புகளில் அடங்கிப்போனது. அந்தக் காலத்தில் குழந்தைப் பேறு கண்டிருக்கும் தாய்மார்களுக்கென்றே  உரித்தான உணவு முறைகளும், பாட்டிகளோடு முடிந்து விட்டபடியால், பாட்டி வைத்தியம்  என்ற பேரிலும், சித்த வைத்தியம் என்ற பேரிலும் அவர்களுக்கான பத்திய உணவுகள் புட்டிகளில் அடைத்து விற்பனைக்கு வந்துவிட்டன. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து பாட்டி ‘பிளண்டரையோ'  ‘ரைஸ் குக்கரையோ' உபயோகித்தது  கிடையாது. எவ்வளவு  நேரம் ஆனாலும் ஆட்டுக்கல்லில்தான் இட்லிக்கும், தோசைக்கும் மாவை ஆட்டுவார். பொசக்கெட்டவன் கண்டுபிடிச்ச ‘மிசுனுங்க' என்று பாட்டி இந்த இயந்திரங்களைத் திட்டாத நாட்களே இல்லை. எப்பேர்ப்பட்ட  துவையலும் பாட்டியின் அம்மிக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பாட்டிகளின் கைமணம் பண்டிகை நாட்களில்தான் சற்று கூடுதலாகவே மணக்கும். முறுக்கு, அதிரசம், லட்டு,கெட்டி உருண்டை, சிட்டுருண்டை போன்றவற்றைச் செய்வதற்கு எங்கள் வீட்டு உரல் திமிறிக்கொண்டு அடிவாங்கும். ‘கணங் கணங்' என்று கைமாற்றி அரிசி இடிப்பதற்கும்,  அந்த இசையைக் கேட்பதற்கும்,  அந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கும் யாருக்குமே இந்தக் காலத்தில் பொறுமையும் இல்லை;  அதற்கான நேரமும் இல்லை. ‘ரெடிமேட்'  உணவுகளும்  விரைவு உணவுகளும்  தலைவிரித்து ஆடும் காலம் இது. கைப்பக்குவமோ, நுணுக்கமோ எந்த வெங்காயமும் நகர (நரக)  வாழ்க்கைக்குத் தேவை இல்லை.  இந்திய மரபில் ஊறிப்போன பொங்கலைக் கூட ரெடிமெட்டில் கொண்டு வந்து வியாபாரிகள் கல்லாவைக்  கட்டிக்கொண்டார்கள்.
நோய் கண்டிருக்கும் காலத்தில் கொடுப்பதற்காகவே சில மருத்துவ முறைகளை உணவாக வைத்திருப்பார் எனது பாட்டி. கடும் காய்ச்சலுக்கு சுக்குக் கசாயம், வயிற்று வலிக்கு பூண்டு லேகியம், நெஞ்சில் அடைத்துக் கொண்டிருக்கும் சளிக்கு முருங்கை இலையின் சாறு என ஏதாவது கைமருத்துவம் பாட்டியின் கைவசம் இருந்துகொண்டே இருக்கும்.  அந்தப் பக்குவங்கள்  இன்று என் அம்மா, பாட்டியான பிறகும்  இல்லை.  இனி எங்குச் சென்று தேடுவேன் என் பாட்டிகளின் கைப்பக்குவத்தை.  தவறியாவது அந்தப் பக்குவம் யாருடைய கையிலாவது அமைந்திருக்கலாம். அதைத் தேடிக்கொண்டே இருக்கும் என் தேடல்கள் தோற்றுக்கொண்டே போகின்றன.  இன்றைய தினத்தில் என் பாட்டிகளின் சமையல் சுவையும்,  மணமும்,  கற்பனைக்கு எட்டாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. எண்பது சதவிகித மலேசிய இந்தியர்களின் நிலையும் இதுதான் என்பது என் கணிப்பு. என் பாட்டி உபயோகித்த உரல், அம்மி, இடிகல், ஆட்டுக்கல்,  யந்திரம், போன்றவை கேட்பாரற்றும், தொடுவாரற்றும் கிடக்கின்றன; தொல்பொருள்காட்சியில் இருப்பது போலவே.
 என் துணைவர் மலையாளியாதலால் சில மலையாள உணவுகளையும் புசிப்பதற்கு இப்பிறவியில் எனக்கு வாய்ப்பு வாய்த்துள்ளது. என் மாமியார் செய்யும் இஞ்சிப்புளிக்கும்,வறுத்து உடைத்துச் செய்யப்படும் பாசிப்பயிர் பாயாசத்துக்கும்,  கருப்பட்டியை உருக்கிச் செய்யும் சாக்லேட்டுக்கும், ஆட்டிறைச்சி வறுவலுக்கும் நான் ரசிகை. அந்தச் சமையலை  கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு நகரவாசியான எனக்கு இன்று வரைக்கும் வாய்க்கவில்லை.
சில உணவுகள் இன்னாருடையது என்றும் வரலாறு சொல்கிறது. இடியப்பம், புட்டு, அவியல் போன்ற உணவுகள் கேரளத்திலிருந்து பிரபலமடைந்தது. பிரியாணியை  இந்திய முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
சிறந்த மசாலாக்களை தமிழர்கள்தான் கண்டு பிடித்தார்கள் என்று தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த எனது தோழியிடம் கூறினேன். சண்டைக்கு வந்துவிட்டார் அவர். வரலாற்றைப்  புரட்டிப்பார் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். இனிப்பு-காரம் அனைத்தும் அவர்கள் பாரம்பரியத்தில் வந்ததாம். நமக்கு என்னதான் பாரம்பரிய உணவு என்று எனது தமிழக நண்பரிடம் கேட்டேன். தினை, கேழ்வரகு என்றார். அங்கேயும் நமக்குக் கஞ்சியும் கூழும்தானா என்று ஏமாற்றமாகவே இருந்தது.
எனது இலங்கை நண்பர் ஒருவரிடம் கேட்டேன் உங்கள் பாரம்பரிய உணவு என்னவென்று. சோறும் கறியும் என்றார். அதுவும் மறுப்பதற்கில்லைதான். கி.மு 800-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் அரிசி இருந்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளதாக விக்கிப்பீடியா  தகவல் கூறுகிறது. அண்மையில் இலங்கைக்குப் பயணம் போய்வந்த எனது தோழி சொன்னாள், பால் அப்பத்தின் நடுவில் முட்டை உடைத்துப் போட்டுத் தருகிறார்கள் என்று. எனக்கு மயக்கமே  வந்துவிட்டது. அந்தச் சுவை எனக்கு கற்பனைக்கெட்டாத பிம்பத்தை எல்லாம் கண்முன் கொண்டு வந்தது. ஆனால், அதைச் சுவைக்காமல் வந்தால், பயணமே முழுமை இல்லை என்று ஒற்றை வார்த்தையில் தெரிந்துகொண்டேன், இலங்கை மக்கள் மனதில் அந்தப் பால் அப்பம் பிடித்திருக்கும் இடத்தை. அதே போல் அங்கு சொதி (தேங்காய்ப் பால் கறி) பிரதான உணவு என்று எனது புலம்பெயர் இலங்கை நண்பர் சொன்னார். தமிழ்நாட்டில் சொதி என்ற சொல்லே பயன்படுத்த மாட்டார்கள் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். ஆனால், மலேசியத் தமிழர்களிடத்தில் சொதி ஏழைகளின் உணவாக பலகாலம் இடம்பிடித்துள்ளது. இன்று  சொதி பிரமாண்ட உணவாக இறைச்சியையும், மீனையையும்  போட்டு வைக்கப்பட்டாலும், வெறும் சுரைக்காயைப்போட்டு வெந்தயத்தில் தாளித்து வைக்கும் சொதிக்கு மணமே தனிதான்.
மலேசியாவைப் பொறுத்தவரை  அனைத்து இனத்தவரும் விரும்பி உண்ணும் நாசி லெமாக்,சாத்தேக், ரெண்டாங், டோடோல் போன்ற உணவுகள் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவு  என்று கூறினாலும் அது அவர்களின் உணவு அல்ல. அது  எங்களின் உணவு என இந்தோனேசியர்கள் கூறுகிறார்கள்.  மலேசிய தேசிய உணவு என்று கெத்துபாட்டைச் சொல்கிறார்கள். அதுவும் எங்களுடையதுதான் என இந்தோனேசியர்கள்  சொல்கிறார்கள்.
முந்தைய  காலத்திலிருந்து என் பாட்டியின் காலம்வரை எல்லா சமூகத்திலும் உணவே மருந்தாக  இருந்தது. இன்று நகர வாழ்க்கையில் மருந்தே உணவாக மாறிவிட்ட கொடுமை நடக்கிறது. பசிக்காமல் இருப்பதற்கும்,உடல் இளைப்பதற்கும், எடை குறைவதற்கும், கூடுவதற்கும், ஆரோக்கியத்திற்கும், குடும்பக் கட்டுப்பாடுகளுக்கும் வாழ்வது முதல் சாவது வரை மருந்தின் செயல்பாடு கொடிகட்டிப் பறக்கிறது. நகரம் வாங்கி வந்த சாபம் என்று தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை. சோறு வடித்த தண்ணீரை அதாவது நீராந்தண்ணியை எத்தனை பேர் குடித்திருக்கிறார்கள் என்றால் கை தூக்குபவர் அந்தக் காலத்து மனிதர்களாகத்தான் இருப்பார்கள். சோறு வடித்த தண்ணியில் அத்தனை சத்துகள் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம். இனி ஆரோக்கிய உணவுகள் ஞாபகங்களில்தான் இருக்குமோ?சனி, 21 மார்ச், 2015

பயனீட்டாளர்கள் உரிமைகள் என்ன?


பயனீட்டாளர்கள் உரிமைகள் என்பது என்ன? அது எப்போது புழக்கத்தில் வந்தது?  நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் செலுத்தப்படும் வரி என்ன? எது எதுக்கு வரி இல்லை? ஏன் ரசீது பெற வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?  சில குறிப்பிட்ட பொருளுக்கு காலாவதித் தேதி அல்லது அவகாசத் தேதி இருக்கும். அதற்கு முன்பே அது பழுதடைந்தால் அல்லது கெட்டுப்போனால் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?  இப்படியான கேள்விகளுக்கு நம்மில் எத்தனை பேருக்குப் பதில் தெரியும்.

ஒரு கைத்தொலைபேசி வாங்குகிறோம். ஒரு வருடம் நமக்கு தவணை கொடுக்கப்படுகிறது. அந்த இடைவெளியில் கைபேசி பழுதாகிறது என்றால் நாம் என்ன செய்வோம். விதியே என நொந்துகொண்டு கடையில் போய் பழுது பார்ப்போம். காரணம் என்ன? அந்தப் பொருள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது, ஒரே நாளில் பழுது பார்த்து மீண்டும் பொருள் பெற்றுவிட தவிக்கிறோம்.. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பினால், நாள்கள் கடத்துவார்கள் என பயப்படுகிறோம். அல்லது அதற்கு நாமே ஏதாவது நியாயத்தை கற்பித்துக் கொள்கிறோம்.

இதற்கு ஏன் பயனீட்டாளர் சங்கம். பயனீட்டாளர் சங்கத்தின் தேவை என்ன? அவர்கள் எந்த வகையில் பயனீட்டாளர்களுக்கு உதவுகிறார்கள்? அவர்களின் செயற்பாடுகள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு நமக்கு எந்த அக்கறையும் இல்லை. அதற்கான பதிலை தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை. பணத்தைச் சம்பாதிக்க மெனக்கெடும் நாம், பணத்தைச் சேமிக்கவும், வாங்கப்படும் பொருள்களுக்கு மதிப்பளிக்கவும் தெரிவதில்லை. இதோ மீண்டும் ஒரு உலகப் பயனீட்டாளர் விழா கடந்த 15-ஆம் தேதி முடிவடைந்தது. எத்தனை பேருக்கு அது குறித்து தெரியும் என்பது தெரியாது. தெரிந்துகொள்ள நமக்கு நேரமும் இருப்பதில்லை. மலேசியாவில் பயனீட்டாளர்கள் நலன் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தினர்தான்.  பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செயலாளர் சுப்பாராவிடம் பயனீட்டாளர் உரிமைகள் குறித்து சில விவரங்களை கேட்டபோது...

யோகி: உங்களைப் பற்றியும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க? 
சுப்பாராவ் : நான் சுமார் 32 வருடங்களுக்கு மேலாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் செயலாளராக இருக்கிறேன். இச்சங்கத்தின் வழி பல விஷயங்களையும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சங்கத்தின் வழி சேர்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாமல் உட்கொள்ளும் நட்சு உணவுகள் என்னென்ன? அவை எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும்? இயற்கை விவசாயம் என்பது என்ன? தடை செய்யப்பட்ட பொருள்கள் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அதன் ஆதாரத்தோடு அச்சி வடிவிலும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களிடத்தில் தெரிவிக்கிறோம். 

யோகி: உலகமுழுவதும் பயனீட்டாளர் தினம் மார்ச் 15-ஆம் தேதி கொண்டாடுகையில், மலேசியாவில் அது எப்போது கொண்டாடப்படுகிறது? 
சுப்பாராவ்:  மலேசியாவில் ஜூலை 26-ஆம் தேதி  பயனீட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தில் பல ஆரோக்கிய விஷயங்களும், திட்டங்களும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறோம். மக்கள் அல்லது பயனீட்டாளர்கள் தாமே பங்கெடுத்து உணரக்கூடிய வகையில் சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறோம்.

யோகி: ஒரு பயனீட்டாளர், அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன?
சுப்பாராவ் : பயனீட்டாளர்களுக்கு அடிப்படையாக 8 பாதுகாப்பு உரிமை விதிகள் உள்ளன.
1. அடிப்படைத் தேவைகள் பெறும் உரிமை
2. பாதுகாப்புப் பெறுவதில் உள்ள உரிமை
3. பொருளின் தகவல் பெறுவதில் உள்ள உரிமை
4. தேர்ந்தெடுக்கும் பொருளில் உள்ள உரிமை
5. செவிமடுப்பதில் உள்ள உரிமை
6. இழப்பீடு பெறுவதில் உள்ள உரிமை
7. பயனீட்டாளர் கல்வி பெறுவதில் உள்ள உரிமை
8. ஆரோக்கியமான சுற்றுச் சூழல் குறித்த உரிமை

இந்த 8 உரிமைகளும் பயனீட்டாளர்கள் அடிப்படையில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களாகும். இந்த அடிப்படைத் திட்டங்களை 1962-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோன் கென்னடி மார்ச் பொதுச்சபையில் அறிவித்தார். வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயனீட்டாளர்களுக்கும் தரமற்ற பொருளை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் மீது, பாதிக்கப்பட்டவர் நடவடிக்கை எடுப்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. இதுபோன்று துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சில பொறுப்பற்ற தரப்பினரின் ஏகபோக நடவடிக்கையைத் தடுக்க முடியும். 

யோகி: வியாபாரிகளின் அல்லது விநியோகஸ்தர்களின் சேவையில் அல்லது விற்பனையில் திருப்திகொள்ளாத பயனீட்டாளர்கள் எம்மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம்?
சுப்பாராவ்: பயனீட்டாளர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதலில் சில விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர் அந்தப் பொருளை வாங்கியதற்கான ஆதாரம் தேவையாகிறது. அந்த ஆதாரம் எப்படிக் கிடைக்கும்? அங்குதான் பல பயனீட்டாளர்கள் தவறு செய்யும் இடம் உள்ளது. வாங்கும் பொருளுக்கு ஒரே ஆதாரம் ரசீதுதான். அந்த ரசீதை நாம் பெறவில்லை என்றாலும், தொலைத்து விட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் மீதோ விநியோகஸ்தர்கள் மீதோ நடவடிக்கை எடுப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ரசீதுகள், அரசாங்கத்திற்கு நாம் செலுத்தும் வரியை தெரிந்துக்கொள்ள உதவுவதுடன், தரமற்றுப்போகும் பொருளுக்கு நியாமான இழப்பீடு பெறுவதற்க்கும் நாம் தகுதி பெறுகிறோம் என்பதை ஒவ்வொரு பயனீட்டாளரும் நினைவில் கொண்டு ரசீது பெறுவதின் நன்மையை உணர வேண்டும். 

யோகி: நுகர்வோர் (பயனீட்டாளர்) பாதுகாப்புச் சட்டம் மலேசியாவில் எப்போது அமலுக்கு வந்தது?
சுப்பாராவ்: அந்த நாளைத்தான் நமது நாட்டில் பயனீட்டாளர் தினமாகக் கொண்டாடுகிறோம். அதாவது ஜூலை 26-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கான கோரிக்கை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சினால் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையையும், அதில் இருந்த நியாயத்தையும் பரிசீலித்து, 15  நவம்பர் 1999-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால்,  கோரிக்கை வைத்த நாளான ஜூலை 26-ஆம் தேதியையே  பயனீட்டாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது 15  நவம்பர் 1999-ஆம் தேதிதான்.  இந்தச் சடத்தின் கீழ்தான் குறைதீர்க்கும் மன்றம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மன்றம் ‘எளிமையான, மலிவான, விரைவான' என்ற கருப்பொருளோடு பயனீட்டாளர் பிரச்னைகளுக்கு தனது சேவையை வழங்குகிறது. இந்தப் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் பயனீட்டாளர் பிரச்னைகளுக்குத் தீர்க்காண சிவில் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு கொண்டு வரப்பட்டதாகும். 

யோகி: நுகர்வோர் (பயனீட்டாளர்)  நீதிமன்றங்கள் குறித்து கொஞ்சம் விளக்கமும் அதன் செயற்பாடுகள் குறித்தும் சொல்லுங்க?
சுப்பாராவ்: நுகர்வோர் (பயனீட்டாளர்)  நீதிமன்றங்கள் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றன. பயனீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட எல்லா புகார்களையும் இங்கு கொண்டு செல்லலாம். ஆனால், இரு விவகாரங்களை மட்டும் கொண்டு செல்ல முடியாது. வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும், மருத்துவம் அல்லது மருத்துவமனை சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் இந்த நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. 

காரணம், அந்தப் பிரச்னைகளுக்காகத் தனித்தனி சட்டங்கள் உள்ளன. இந்த நீதிமன்றத்தில் புகார் கொடுப்பவர்கள் சிந்தனையில் கொள்ளவேண்டிய மற்றுமொரு விஷயம் 25,000 வெள்ளிக்கு மேற்பட்ட பொருள்களுக்கு புகார் தெரிவிக்க முடியாது. அதற்குக் கீழ்ப் பட்ட எந்தப் பொருளாக இருந்தாலும் புகார் அளிக்க வேண்டும் என்றால் செய்யலாம். அதற்கான பாரங்களை 5 வெள்ளிகொடுத்து வாங்க வேண்டும். நாம் யார் மீது புகார் அளிக்கவிருக்கிறோமோ அவர்களுக்கும் ஒரு நகல் அனுப்புதல் அவசியம். 

உற்பத்தித் தரம், திருப்தியின்மை, பரிசுப் பொருள் கிடையாமை, இலவசமாகக் கிடைக்கும் என்ற பொருள் பெறாமை போன்ற அனைத்திற்கும் புகார் தெரிவிக்கலாம். 60 நாள்களில் பிரச்னைக்கான தீர்வைப் பெற்றுவிடலாம். முன்பை விட பயனீட்டாளர்களுக்கு திருப்தியளிக்ககூடிய நிலையில்தான் பயனீட்டாளர் நீதிமன்றங்கள்  செயல்பட்டு வருகின்றன. பாதிப்படையும் வாடிக்கையாளர்கள் நேரடியாகவே பயனீட்டாளர் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைகளை தெரிவிக்கிறார்கள். இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய மற்றும் மனநிறைவளிக்ககூடிய விஷயமாகும். 

யோகி: பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து இயற்கை விவசாயம் கூறித்துப் பேசி வருகிறது. அதற்கான முயற்சிகளையும் செயற்பாடுகளையும் பார்க்க முடிகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரை நீங்கள் அழைத்து வந்திருந்தீர்கள். அது குறித்துத் கொஞ்சம் சொல்லுங்கள்?
சுப்பாராவ்: இந்த மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அது இயற்கை விவசாயத்தால்தான் முடியும். இந்த மண்ணில் மண் புழு இல்லாமல் போய்விட்டது என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்? மண் புழு இருக்கும் மண்ணே செழிப்பான மண்ணாகும். ரசாயனத்தையும், பூச்சிக்கொல்லி மருந்தையும் தெளித்து, தூய்மையான சுற்றுச்சூழலை, சிறு உயிர்களான பூச்சியை விரட்டினோம்; உணவையும் விஷமாக்கிக் கொண்டோம். 
நமது இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் விதமாகத்தான் கோ.நம்மாழ்வாரை மலேசியாவுக்கு வரவழைத்தோம். அவர் இரு பண்பட்ட விவசாயிகளோடு வந்தார். கேமரன்மலையில் ஒரு வாரம் தங்கி, அங்கிருக்கும் விவசாயிகளுக்கு அவர் இயற்கை விவசாயத்தைச் சொல்லிக்கொடுத்தார். பிறகு, ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். பிறகு பந்திங்கிலும் அவர் விவசாயிகளுக்கு பயிற்ச்சிகள் வழங்கினார். அதில் அதிகமான சீனர்களும் கலந்துகொண்டனர். அவர் அளித்த பயிற்சியிலும் விளக்கத்திலும் அந்த சீன விவசாயிகள் அவரை ஒரு குருவாகவே ஏற்றுக்கொண்டனர். இன்று நம்மாழ்வார் நம்மிடையே இல்லை எனினும், அவர் விட்டுச்சென்ற விவசாய முறை இன்னும் அவரிடம் பயிற்சி பெற்றவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பந்திங்கில் உள்ள சீன விவசாயிகள் அவரை வணங்கிய பிறகே விவசாயத்தைத் தொடங்குகின்றனர்.  

யோகி: பெரிய பெரிய அங்காடிக் கடைகள் மலேசியாவில் வந்துவிட்டன. இன்னும் வந்துக்கொண்டும் இருக்கின்றன. இதனால் சிறிய வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள் என்பது உண்மைதானே. இதில் உங்கள் கருத்து என்ன?
சுப்பாராவ்: உண்மையில் இது ஆதரிக்க முடியாத ஒரு விஷயமாகும். இதுபோன்ற அங்காடி கடைகளினால் சிறுதொழில் வியாபாரிகள் பெரிய பாதிப்படைந்து வருகிறார்கள், என்பது நிதர்சன உண்மை. அங்காடிக் கடைகளில் எல்லா பொருள்களும் இருக்கும்; வேலையை எளிதாக முடித்துக்கொள்ளலாம் என நினைத்தே வாடிக்கையாளர்களும் பயனீட்டாளர்களும் அங்காடிக் கடைகளை நாடிச் செல்கின்றனர். 

ஆனால், பொட்டலங்களில் இருக்கும் இருக்கும் பழங்கள், காய்கறிகள், இறைச்சிவகைகள் போன்றவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் என என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதோடு அங்காடிக்கடைகளில் உறைநிலையாக்கப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சி வகைகள் நிச்சயம் உடலுக்கு கேடான விஷயங்கள்தான். விலை மலிவு என்றும் அலைச்சல் இல்லையென்றும் அங்காடி கடைகளை நோக்கிச் செல்பவர்கள் பணம் கொடுத்து சுகாதாரத்தை விற்றுவிட்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்தாலே போதும்.  சிறுதொழில் வியாபாரிகள் அடையும் நஷ்டத்திற்காகவும் உளவியலுக்காகவும் பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதுடன் அதற்கான மகஜர்களையும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுச் செல்கிறது.

யோகி: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பயனீட்டாளர்களுக்காக எழுத்துப் பிரதிகளையும் வெளியிட்டு வருகிறீர்களே?
சுப்பாராவ்:  ஆமாம். குறிப்பாக ‘பயனீட்டாளர் குரல்' என்ற பத்திரிகையை கடந்த 25 ஆண்டுகளாக மாத பத்திரிகையாகக் கொண்டு வருகிறோம். அந்தப் பத்திரிகையில், பயனீட்டாளர் பிரச்னைகள், சுற்றுச்சூழல் மாசு, பயனீட்டாளர்கள் சங்கத்திற்கு வரும் புகார் குறித்த விவரங்களோடு மாணவர் பக்கங்களையும் தாங்கி வருகிறது. 

இது விளம்பரமில்லாத பயனீட்டாளர்கள் உரிமைக்காகக் கொண்டு வரப்படும் ஒரு பத்திரிகையாகும். இது இல்லாமல் சுமார் 25-க்கும் மேலான புத்தகங்களைப் பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. சீனி, உப்பு, உடல்பருமன் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற விவரத்தோடு எழுத்து வடிவமாகக் கொண்டு வந்திருக்கிறோம். மிகமுக்கியமாக விவசாயிகளுக்காக இயற்கை விவசாயத்திற்காக 3-க்கும் அதிகமான பிரத்தியேகப் புத்தகங்களைப் பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. 
நன்றி. 

செவ்வாய், 17 மார்ச், 2015

நிறங்களற்றவன்

சாம்பல் பறவை வந்தமரும்
அந்த இலையுதிர் மரத்தில்
அன்றுதான் பூத்திருந்தது
கண்ணாடியில் வார்த்தது போல
ஒற்றைப் பூ

கண்ணாடிக்கு
நிறங்கள் இருப்பதில்லை
அவனும் அப்படித்தான் நிறமற்றவனாக இருந்தான்

சாம்பல் பறவை உண்ட அந்த கண்ணாடிப்பூவின்
எச்சம்
என
விழுந்தேன்
நிறமற்றவனின் தோட்டத்தில்

நிறமற்றவன் எதுவும் அறிந்திருக்கவில்லை
தான் ஒரு நிறமற்றவன் என்பதைக் கூட
அவன் அறியான்

வண்ணங்கள் சரணாலயமென அவனின்
வனத்தில்
நான் விதையாகி, செடியாகி, மொட்டாகி பூவாகி,
உதிர்ந்த
பின்னும்
வண்ண ஜாலங்களைக் காட்டிக்கொண்டிருந்தேன்

மக்கி எருவாகிய பின்னும்
அவன் என்னை அறிந்துகொள்ளவில்லை
உருவம் இழந்து மாறிய பிறகுதான்
என்னை அறிந்துகொண்டான்
நான் நிறமற்றவள் என்பதையும்
யட்சி  என்பதையும்


திங்கள், 9 மார்ச், 2015

என் கரு(வி)த்தரிப்பு

என் கருவறை
அறுவதும் பின் இயங்குவதுமாகவே
இருக்கிறது

எந்த நேரம் என்று
பாராமல்
கருவறை அறுவதால்
யாரிடமும் இயல்பாகவும்
நிம்மதியாகவும் பேச முடிவதில்லை

என் கருவரையில் நுழையவிரும்பாத விந்தைப் பற்றி
கேள்வி கேட்கப்படுகிறது

விந்துகள் கருவறையில்
மரமாவதைப் பற்றியும்
ஆணிவேர்கள் ஆழ இறங்கியதைப்பற்றியும்
திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன்

பதில்கூறும் ஒவ்வொரு கணமும்
கருவறை அறுவதையும் அதில் நீளும்
கவிச்சி நாற்றத்தையும்
என் மனம் ஒவ்வாதபடியே உள்ளது


என் கருவறை அறுவதும்
கேள்விகள் எழுவதும்
எக்காலத்திலும் நிறுத்த முடியவில்லை


உதிரக்குழாயை அடைத்த என் பதில்கள்
9 மாதக் கருவென வளர்ந்து
காத்திருக்கிறது பிரசவத்திற்காகவியாழன், 5 மார்ச், 2015

நானும் சாம்பல் பறவையாகிய அவனும்...


நான் சமைக்கும் அறையிலிருந்து  ஜன்னல் வழியாகத்தான் அந்த சாம்பல் பறவையை முதல் முறையாகப் பார்த்தேன். சாம்பல் பறவைப் பற்றி கூற வேண்டும் என்றால் அது வந்தமரும் அந்த இலையுதிர் மரத்தைப்பற்றி கண்டிப்பாகக் கூற வேண்டும். அந்த மரத்தின் இலைகள்  எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். வசந்த காலமோ  இலையுதிர் காலமோ.. எந்த காலமாக இருந்தாலும் அதில் இலைகள் செழித்திருப்பதை பார்க்கமுடியாது.  அந்த மரத்தில் வேறு எந்த பறவையும் வந்தமர்வது இல்லை.  இப்படியாக இருந்த நாளில்தான் ஒரு நாள் அந்த சாம்பல் பறவையை அந்த மரத்தில் பார்த்தேன். குறிப்பாக காலை வேளையில் மட்டுமே அந்தப் பறவை அம்மரத்தில் காண முடியும். அதன் முழு உருவத்தையும் என்னால் காண முடியாது. சில இலைகளே கொண்டிருந்தாலும், இருக்கும் இலைகளில் தன்னை மறைத்துக்கொண்டுதான்  அந்த சாம்பல் பறவை அமர்ந்திருக்கும். கழுத்தை முழுவதுமாக அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திருப்பி எதையாவது தன் உடம்பில் தன் அலகுகளால் தேடிக்கொண்டிருக்கும். அதை புகைப்படம் எடுக்கவும் அதன் கள்ள குணம், என்னை அனுமதித்ததில்லை. அதன் சாம்பல் நிறம் இலையோடு இலையாக கலந்து இருக்கும். அதை புகைப்படம் எடுக்க வேண்டி நான் பலமுறை தோற்றுதான் போயிருக்கிறேன்.
தொடர்ந்து  அந்த கண்ணாடி ஜன்னலை  எந்த நேரம் திறந்தாலும் அந்த சாம்பல் பறவையை  என்னையும் அறியாமல்  என் கண்கள் தேடத்தொடங்கியது.  பலநாள் கண்காணித்ததில்  பிறகுதான்  அது வருவது காலை நேரம் மட்டும்தான் என்பதை உணர முடிந்தது. மழை பெய்திருந்த ஒருநாளில்  இலைக்கு மறைவில் ஒளியாமல்  தனது வதனத்தை   கொஞ்சமாக காட்டியது அந்த சாம்பல் பறவை. அதன் இறக்கைகள் சாம்பல் நிறம். உடலும் சாம்பல் நிறம். தலையின் நடுவில் நாமம் போட்டதுபோல் கருப்பு கோடு. அது தலை சாயும் போதெல்லாம்  ஒரு மரக்கொத்தியைப்போல்  ஜாடை இருக்கும். அதன் அழகும் வசீகரமும் உற்சாகமும்,  ஜாடையில் என்னை கவனிப்பதும் அது ஆண்பறவையாக இருக்கும் என யூகித்துக்கொண்டேன்.
நன்றாக நினைவிருக்கிறது, அன்றிலிருந்துதான் சாம்பல் பறவையை நான் ‘அவன்' என கூறதொடங்கினேன்.  ஒரு நாள் தீவிரமாக அவனை  தேடும் போது, கண்ணாடி ஜன்னலின் அருகில் வந்து ஹாய் சொல்வது போல், சொல்லி விட்டு போனான். அன்றுதான் நான் எதிர்பார்ப்பதை அவன் உணர்ந்திருப்பதை அறிந்துக்கொண்டேன்.  நான் அவனிடம் பேசுவது அவன் அறிந்திருந்தானா இல்லையா என்று தெரியவில்லை. சில சமயம்  நான் பேசிக்கொண்டிருக்கும்போதே பறந்து சென்றுவிடுவான். நான் யட்சியாக மாறும் காலங்களில் அவன் என்னுடன் நெருக்கமாக  இருந்தான்.  அவன் மொழி எனக்கு புரிவதில்லை. அதைப்பற்றி கவலை எனக்கும் இருந்ததில்லை, அவனுக்கும் இருந்ததில்லை. அவனின் அனுமதியில்லாமல் அவனை  இரு முறை நான் எனது கவிதைகளில்  வடித்திருந்தேன். அந்தக் கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானவையாக இருந்தன. இதைப் பற்றி அறிந்தானோ என்னவோ கடந்த ஒரு வாரமாக நான் அவனைக் காணவே இல்லை. தொடர்ந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை அந்த இலையுதிர்  மரத்தையே என் கண்கள் நோட்டமிட்டது. அவன் வரவே இல்லை. வழக்கத்திற்கு மாறாக இந்த இலையுதில் மரத்தில் நிறைய இலைகள் இருக்கின்றன.  சில சிட்டுக்குருவிகளும், பெயர் தெரியாத வேறு சில அழகிய பறவைகளும் அந்த மரத்தில் உறவுக் கொண்டாடுவதை பார்க்கிறேன். ஆனால், அவன் மட்டும் வரவே இல்லை.  வெளிநாட்டிலிருக்கும் என் நண்பர் ஒருவரிடம் சாம்பல் பறவையைப் பற்றி சொன்னேன். அவனை அவர்தான்  கூட்டில் அடைத்து வைத்திருப்பதாக சொன்னார். மனம் கனக்க தொடங்கியிருந்தது.
சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு இன்றும் அவனை தேடினேன். அவன் இல்லை. கண்களை தாழ்த்தி மீண்டும் உயர்த்தினேன் அவன் இருந்தான். மரத்தில் இல்லாமல் மரத்திற்கு அப்பால் இருக்கும் கூறையில் இருந்தான். முதல் முறையாக சத்தமாக நான் அவனை கள்ளன் என்றேன். தலை நிமிர்ந்து சிரித்துவிட்டு பறந்தான் அந்தக் கள்ளன்.


புதன், 4 மார்ச், 2015

இரண்டாம் உலகப்போரும் முகவரியில்லா கல்லறைகளும்...

கடந்த தேடலில்
இங்கே கல்லறைகள்  எப்படி வரலாற்றுப் பதிவுகள் பெற்றன. பின் எப்படி மறைக்கப்பட்டன?

இனி  தேடல்...

இந்தக் கல்லறைகள் குறித்து பேராக் மாநில மக்களைவையில் 2009-ஆம் ஆண்டு கோரிக்கையை முன்வைத்தவர் சுங்கை நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர் சிவநேசன். அவரை நான் இந்தத் தேடலுக்காக சிறப்பு நேர்காணல் செய்தேன்.
*மலேசியாவில் ஜப்பான் காலத்தில்  நடந்த ஒரு இனப்படுகொலையின் அடையாளமாக பேராக் மாநிலத்தில் இருக்கும் இந்தக் கல்லறைகளைக் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்
-இதுவும் பேராக் மாநிலத்தில் ஒரு மறுக்கப்பட்ட வரலாறாகவே நான் பார்க்கிறேன். 1948-ல்  இரண்டாம் உலகப்போர் காலகட்டமாகும். அந்தப் போரின் தாக்கம் இந்த மலாயா மண்ணிலும்  ஆழமாகவே விழுந்திருந்தது. அந்தக் காலத்தில் வசித்த நமது முன்னோர்களை  இது குறித்துக் கேட்டால், அவர்கள் ஒரு தகவலை நமக்கு தெளிவுபடுத்துவார்கள். அதாவது ஜப்பானியர்கள் சீனர்களைத்தான்  அதிகம் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மலாய்க்காரர்களை அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தவில்லை.
ஜப்பானியர்கள் சீனர்களைக்  கொடுமைப்படுத்தக் காரணம்  மலேசியாவையும்,  சிங்கப்பூரையும் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதை விட, சீனாவைக் கைப்பற்றவே அவர்கள் முக்கியத்துவம் காட்டினர். சீனாவில் அந்தக் காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட்  பார்ட்டி தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கம்யூனிஸ்ட்  பார்ட்டிக்கும் ஜப்பானுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. மேலும், ஜப்பானியர்களால் சீனாவில் இவ்வகையான உள்ளீட்டையும் செய்ய முடியவில்லை. அடுத்த ஜப்பானியர்கள் இந்தியாவில்  தங்கள் ஆதிக்கத்தைச்  செலுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணமாக சுபாஷ் சந்திர போஸ் இருந்தார். அவர் ஜப்பானியர்களிடம் இந்தியா சுதந்திரத்திற்காகக் கை கோர்த்திருந்தார். அதனால் அவர்களுக்குள் ஒரு நட்பு இருந்தது.
எனது சொந்தக்கருத்தாக ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தியாவின் மாபெரும் போராட்ட வீரர் என நான் சுபாஷ் சந்திர போஸைத்தான் குறிப்பிடுவேன். அவர் மட்டும் இல்லை என்றால் இந்தியா நிச்சயமாக ஜப்பானியர்களின் கைவசம் விழுந்திருக்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை.
சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவருக்கு ஆதரவாக சுமார் 40 ஆயிரம் பேர் Indian national army-யில் இணைந்தனர். சிங்கப்பூரில்தான் அதன் ஆரம்பத்தளம் அமைந்தது. இவர்கள் பிரிட்டிஸுக்கு எதிராகப் போராடினார்கள்.
அதே வேளையில் ஜப்பானியர்கள் முற்றிலும் தமிழர்களையும், மலாய்க்காரர்களையும் துன்புறுத்தவில்லை என்று கூற முடியாது. சயாம் ரயில்வே என்ற ஒரு வரலாறு இருப்பதையும் நாம் மறப்பதற்கும் மறுப்பதற்கும் இல்லை. ஜப்பானியர்களின் அட்டூழியங்களையும் வன்முறைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்கக்கூடியது இல்லை.
அதே வேளையில், சயாம் ரயில்வே கட்டுமானத்திற்குப் போன இந்தியர்களைத் தவிர்த்து, யார் யார் பிரிட்டிஸாருக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களை ஜப்பானியர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்றுகுவித்தனர். அவர்களில் சில தோட்ட முதலாளிகளும் அடங்குவர்.
இது வரலாற்று நிகழ்வாகும்.
அந்தக் கல்லறைக்கும், இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருப்பதனாலேயே நான் இந்த வரலாற்றைக் கொஞ்சம் சொல்ல வேண்டியதாக இருந்தது.
நான் 2009-ஆம் ஆண்டு சுங்கையில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தபோது, ஒரு ஜப்பானியர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஜப்பானில் இடைநிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். அவரின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இந்த இரண்டாம் உலகப்போர் குறித்த பல பதிவுகள் இருந்திருக்கிறது. அதில் மலேசியாவில் நடந்த சம்பவங்கள் குறித்த பதிவுகளும் இருந்திருக்கிறது. அதன் நம்பத்தன்மையை அறிய அவர் ஓர் ஆய்வை மேற்கொண்டு மலேசியா வந்தார்.
ஜப்பான் காலத்தில், இங்கு கட்டப்பட்ட கல்லறைகளைத்  தேடியே அவர் பயணம் இருந்திருக்கிறது.  இந்த சுங்கை-பீடோர்  வட்டாரத்தில் இரு இடங்களில் 5 கல்லறைகள் இருக்கின்றன.  அதுவரை அதுகுறித்த எந்த விவரமும் இங்கு இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. அது ஒரு கல்லறை என்பது மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். அந்தக் கல்லறையின் பின்னணி மற்றும் வரலாறு குறித்த எந்தத் தகவலையும்  யாரும் கொண்டிருக்கவில்லை. எனக்கும் அந்த ஜப்பானியர் சொல்லும் வரை அந்தக் கல்லறை குறித்த எந்த விவரமும் தெரியாது.
கல்லறையைத் தேடி வந்த ஜப்பானியரிடம் ஒரு புத்தகமும் இருந்தது. அது ஒரு வரலாற்றுக் குறிப்புப் புத்தகம். மேலும் அவரிடம் சிங்கப்பூரில் ஆரம்பப்பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் ஒரு வரலாற்றுப் புத்தகமும் இருந்தது. அது 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடப் புத்தகம் அது.  அந்தப் புத்கத்தில் ஜப்பானியர்களின்  ஆட்சிக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு  கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு வரலாற்றுப் பதிவு ஒரு பாகமாக அந்தப் புத்தகத்தில் இருக்கிறது.  அவ்விரு புத்தகங்களோடும் மேலும் சில வரலாற்றுக் குறிப்புகளோடும் அவர் என்னைத் தேடி வந்தார்.
அவரின் நோக்கம் என்னவென்றால் இங்கிருக்கும் இந்தக் கல்லறைகள் குறித்த பதிவுகளை ஒரு வரலாற்று நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பதே. அதை அவர் ஒரு போராட்டமாக முன்னெடுத்து தனியாளாகத் தேடலைச்
 செய்துகொண்டிருந்தார்.
2009-ஆம் ஆண்டு அவர் மலேசியாவுக்கு வந்து சந்திக்கும் முன்,  ஜப்பான் உயர் நீதிமன்றத்தில், இது குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம் வேண்டும் என ஒரு வழக்குப் பதிவு செய்து   இவ்விவகாரத்தைக்  கொஞ்சம் தீவிரமாகக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், அந்த வழக்கில் அவர் வெற்றி பெறவில்லை.
அதன் பிறகே அவர் என்னை வந்து சந்தித்தார். அவர் முதலில் என்னிடம் இது குறித்துச் சொன்னபோது எனக்குக் கொஞ்சம் குழப்பம் இருந்தது, பிறகு அவர் சேகரித்த தகவல்களையும் ஆதரங்களையும் காட்டியபோது அவர் மேற்கொண்டிருப்பது சுலபமான விஷயம் அல்ல என்பது எனக்குத் தெரிந்தது.
அவர் முதலில் என்னை  தாப்பா போலீஸ் பயிற்சி முகாமிற்குப் பின்னால் இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இரு பெரிய கல்லறைகள் இருக்கின்றன. அந்த இரு கல்லறைளிலும், இந்த ஜப்பானியர் கேக், பழங்கள் போன்ற பண்டங்களை வைத்து  சீனர்கள் பயன்படுத்தும் ஊதுபத்திகளைக்  கொளுத்தி பிரார்த்தனை செய்தார்.
பிறகு என்னிடம் பேசினார், இந்த இரு கல்லறைகளில் 53 பேர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். இங்கே ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட 53 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்றார். அதன் பெயர்ப் பட்டியலையும் அவர் வைத்திருந்தார்.
பிறகு அவர் என்னை தெலுக் இந்தானிலிருந்து பீடோருக்குச்  செல்லும் ஒரு பாதையில் 4-வது மைல் என்று சொல்லக்கூடிய  இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில்தான் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் இங்கிருந்த கம்யூனிஸ்ட்காரர்களுடைய அலுவலகம் என்று சொல்லக்கூடிய  முதன்மை இடம் இருந்தது. அது சிலிம் ரிவருக்கு அருகில்  New Vilage என்ற இடத்தில் இருக்கிறது. அங்கு கல்லறைகள் அல்ல. ஆனால், இருண்டு நினைவுக்கல் இருந்தது. அங்கேயும் அவர் முன்னதைப் போலவே பிரார்த்தனை செய்தார். நான் அவரிடம்  இந்தக் கல்லறையின் வரலாறு என்ன என்றேன். 1948-ஆம் ஆண்டு, ஒரு நாள், 4 கம்யூனிஸ்ட்காரர்கள் ஒரு ஜீப்பில் தெலுக் இந்தானிலிருந்து கோலாலம்பூர் போய்க் கொண்டு இருந்தனர். அப்போது தகவல் அறிந்த ஜப்பானியர்கள் அவர்களைச் சுட்டுள்ளனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே மரணிக்க மேலும் இருவர் தப்பியோடிவிட்டனர். ஜப்பானியர்களை இறந்தவர்களின் சடலத்தை அப்படியே விட்டுச் செல்ல, அங்கிருந்த பொதுமக்கள் அந்தச் சடலத்தை பக்கத்திலிருந்த ஒரு இடத்தில் புதைத்துவிட்டனர். அந்தக் கல்லறைகள்தான் இவை என்று அந்த ஜப்பானியர்  விளக்கமளித்தார்.
அதன் பிறகு அவர் மூன்றாவதாக கோல பீக்காம் என்ற ஒரு இடம் உள்ளது. அது ஒரு சீனர் கம்பம். அங்கு 3 பெரிய கல்லறைகள் உள்ளன. அருகில் ஒரு சீனரின் வீடு இருக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளருக்கே தெரியாது அந்தக் கல்லறைகள் யாருடையது என்று. அந்தக் கல்லறைகளில் 36 பேர் புதைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
எனக்கு அவரிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது. அதாவது இந்தக் கல்லறையில் உறங்கிக்கொண்டிருப்பவர்களில் இந்தியர்கள் இருக்கிறார்களா என்று கேட்க  அவர் சொன்னார், மலாக்காவிலும் இதுபோன்ற கல்லறைகள் இருக்கின்றன. அங்கு ஓரிரு இந்தியர்கள் சீனர்களோடு புதைக்கப்பட்டனர் என்றார். ஆனால், இந்தக் கல்லறைகளில் 99 சதவிகிதம் சீனர்களே இருக்கின்றனர் என்பதை அவர் ஆதாரத்தோடு கூறினார்.
*அவர் இவ்வளவு விவரங்களை ஆதாரத்தோடு திரட்டி வந்திருக்காரே.. நீங்கள் ஏன் அதை இந்த நாடறிய அல்லது அதை முறையாகப்  பராமரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?
-யார் சொன்னது எடுக்கவில்லை என? நான் அந்த ஜப்பானியரோடு பயணித்து உண்மைகளையும், ஆதாரங்களையும் தெரிந்துகொண்டவன். எப்படிச் சும்மா இருக்க முடியும்?  அவரைச் சந்தித்த பிறகு, அடுத்து  நடந்த மக்களவைக் கூட்டத்தில் பேசினேன்.
அப்போது மந்திரி பெசாராக இருந்தவர் டத்தோஸ்ரீ நிஸார் ஜமாலுடின். டத்தோஸ்ரீ நிஸார்  இதை ஒரு நல்ல பதிவு என்று கூறினார். மேலும் கல்லறைகள் இருக்கும் அந்தந்த வட்டாரத்திற்கு இது குறித்து தகவல் கொடுத்து அந்த இடத்தை  கெஜெட் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறினார். பின்னாளில் இது சுற்றுப்பயணிகள் தளமாகவும் விளங்கும் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். அதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டோம்.
ஆனால், எங்களின்  ஆட்சித் தவணை 10 மாதங்களில் முடிந்து. நாங்கள் தொடர்ந்து இருந்திருந்திருந்தால் கண்டிப்பாக அதை நடைமுறைப்படுத்தியிருப்போம். ஆனால், எனது அந்தக் கோரிக்கை ஒரு பதிவாக இன்னும் மாநில அரசிடம் உள்ளது. இந்தக் கல்லறைகளின் வரலாறும், முக்கியத்துவமும் குறித்து இந்த அரசாங்கத்திற்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

பின்குறிப்பி:
*கல்லறையில் இருப்பவர்களின் முழு விவரம் இல்லை
*அவர்கள்  எப்படி எங்கு கொல்லப்பட்டனர் என்ற ஆதாரப்பூர்வ விவரம் இல்லை
*அந்த ஜப்பானியர் ஓய்வு பெற்ற ஒரு வரலாறு ஆசிரியர், சிவநேசன், அவரின் பெயர், புகைப்படம், அந்தப் புத்தகத்தின் பெயர் அல்லது அதன் புகைப்படம் எதுவும் வைத்திருக்கவில்லை என்பது மற்றுமொரு சோகம்.