வியாழன், 5 மார்ச், 2015

நானும் சாம்பல் பறவையாகிய அவனும்...


நான் சமைக்கும் அறையிலிருந்து  ஜன்னல் வழியாகத்தான் அந்த சாம்பல் பறவையை முதல் முறையாகப் பார்த்தேன். சாம்பல் பறவைப் பற்றி கூற வேண்டும் என்றால் அது வந்தமரும் அந்த இலையுதிர் மரத்தைப்பற்றி கண்டிப்பாகக் கூற வேண்டும். அந்த மரத்தின் இலைகள்  எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். வசந்த காலமோ  இலையுதிர் காலமோ.. எந்த காலமாக இருந்தாலும் அதில் இலைகள் செழித்திருப்பதை பார்க்கமுடியாது.  அந்த மரத்தில் வேறு எந்த பறவையும் வந்தமர்வது இல்லை.  இப்படியாக இருந்த நாளில்தான் ஒரு நாள் அந்த சாம்பல் பறவையை அந்த மரத்தில் பார்த்தேன். குறிப்பாக காலை வேளையில் மட்டுமே அந்தப் பறவை அம்மரத்தில் காண முடியும். அதன் முழு உருவத்தையும் என்னால் காண முடியாது. சில இலைகளே கொண்டிருந்தாலும், இருக்கும் இலைகளில் தன்னை மறைத்துக்கொண்டுதான்  அந்த சாம்பல் பறவை அமர்ந்திருக்கும். கழுத்தை முழுவதுமாக அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திருப்பி எதையாவது தன் உடம்பில் தன் அலகுகளால் தேடிக்கொண்டிருக்கும். அதை புகைப்படம் எடுக்கவும் அதன் கள்ள குணம், என்னை அனுமதித்ததில்லை. அதன் சாம்பல் நிறம் இலையோடு இலையாக கலந்து இருக்கும். அதை புகைப்படம் எடுக்க வேண்டி நான் பலமுறை தோற்றுதான் போயிருக்கிறேன்.
தொடர்ந்து  அந்த கண்ணாடி ஜன்னலை  எந்த நேரம் திறந்தாலும் அந்த சாம்பல் பறவையை  என்னையும் அறியாமல்  என் கண்கள் தேடத்தொடங்கியது.  பலநாள் கண்காணித்ததில்  பிறகுதான்  அது வருவது காலை நேரம் மட்டும்தான் என்பதை உணர முடிந்தது. மழை பெய்திருந்த ஒருநாளில்  இலைக்கு மறைவில் ஒளியாமல்  தனது வதனத்தை   கொஞ்சமாக காட்டியது அந்த சாம்பல் பறவை. அதன் இறக்கைகள் சாம்பல் நிறம். உடலும் சாம்பல் நிறம். தலையின் நடுவில் நாமம் போட்டதுபோல் கருப்பு கோடு. அது தலை சாயும் போதெல்லாம்  ஒரு மரக்கொத்தியைப்போல்  ஜாடை இருக்கும். அதன் அழகும் வசீகரமும் உற்சாகமும்,  ஜாடையில் என்னை கவனிப்பதும் அது ஆண்பறவையாக இருக்கும் என யூகித்துக்கொண்டேன்.
நன்றாக நினைவிருக்கிறது, அன்றிலிருந்துதான் சாம்பல் பறவையை நான் ‘அவன்' என கூறதொடங்கினேன்.  ஒரு நாள் தீவிரமாக அவனை  தேடும் போது, கண்ணாடி ஜன்னலின் அருகில் வந்து ஹாய் சொல்வது போல், சொல்லி விட்டு போனான். அன்றுதான் நான் எதிர்பார்ப்பதை அவன் உணர்ந்திருப்பதை அறிந்துக்கொண்டேன்.  நான் அவனிடம் பேசுவது அவன் அறிந்திருந்தானா இல்லையா என்று தெரியவில்லை. சில சமயம்  நான் பேசிக்கொண்டிருக்கும்போதே பறந்து சென்றுவிடுவான். நான் யட்சியாக மாறும் காலங்களில் அவன் என்னுடன் நெருக்கமாக  இருந்தான்.  அவன் மொழி எனக்கு புரிவதில்லை. அதைப்பற்றி கவலை எனக்கும் இருந்ததில்லை, அவனுக்கும் இருந்ததில்லை. அவனின் அனுமதியில்லாமல் அவனை  இரு முறை நான் எனது கவிதைகளில்  வடித்திருந்தேன். அந்தக் கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானவையாக இருந்தன. இதைப் பற்றி அறிந்தானோ என்னவோ கடந்த ஒரு வாரமாக நான் அவனைக் காணவே இல்லை. தொடர்ந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை அந்த இலையுதிர்  மரத்தையே என் கண்கள் நோட்டமிட்டது. அவன் வரவே இல்லை. வழக்கத்திற்கு மாறாக இந்த இலையுதில் மரத்தில் நிறைய இலைகள் இருக்கின்றன.  சில சிட்டுக்குருவிகளும், பெயர் தெரியாத வேறு சில அழகிய பறவைகளும் அந்த மரத்தில் உறவுக் கொண்டாடுவதை பார்க்கிறேன். ஆனால், அவன் மட்டும் வரவே இல்லை.  வெளிநாட்டிலிருக்கும் என் நண்பர் ஒருவரிடம் சாம்பல் பறவையைப் பற்றி சொன்னேன். அவனை அவர்தான்  கூட்டில் அடைத்து வைத்திருப்பதாக சொன்னார். மனம் கனக்க தொடங்கியிருந்தது.
சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு இன்றும் அவனை தேடினேன். அவன் இல்லை. கண்களை தாழ்த்தி மீண்டும் உயர்த்தினேன் அவன் இருந்தான். மரத்தில் இல்லாமல் மரத்திற்கு அப்பால் இருக்கும் கூறையில் இருந்தான். முதல் முறையாக சத்தமாக நான் அவனை கள்ளன் என்றேன். தலை நிமிர்ந்து சிரித்துவிட்டு பறந்தான் அந்தக் கள்ளன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக