புதன், 24 பிப்ரவரி, 2021

நிரந்தரமாக உறங்கியது ஓவியர் ஜெகன்நாத்தின் தூரிகை


பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை...

இறுதி யாத்திரைக்கு கொண்டு செல்லும் முன், வைரமுத்துவின் இந்த வரிகளை  சடங்கு செய்பவர் பாடும்போது, மன இறுக்கத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.  கடந்த 9 ஆண்டுகளில் நான் 3 முறை அவரோடு உரையாடி இருக்கிறேன். இந்த நேரத்தில் அவரை சந்தித்துப் பேசிய பொழுதுகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்துக்கொண்டிருக்கிறது. மனம் தவித்தப்படியே அலைகிறது. அவர் போயிருக்கும் வேறொரு உலகமும் வண்ணங்களால் அவரை ஆராதிக்கும். பூ தூவி வரவேற்கும். ஆனால், இங்கே அவரின் வெற்றிடத்தை யாரால் நிரப்பமுடியும்?

இந்தக் கோவிட் காலகட்டத்தில் மரணம்  வேதனையான ஒன்றாக மாறியிருக்கிறது. மனைவியும் மகளும் இந்தியாவில் இருக்க, உடன்பிறப்புகளும், நண்பர்களும், தன் ஓவிய மாணவர்களும் இறுதி அஞ்சலி செலுத்திட தன் இறுதி யாத்திரியை முடித்துகொண்டார் அந்த மாபெரும் ஓவியர்.

ஓவியர் ஜெகன் குறித்து எனது முந்தய பதிவு...

https://yogiperiyasamy.blogspot.com/2016/05/blog-post_60.html

சனி, 20 பிப்ரவரி, 2021

பூர்வீக நிலத்தை பறிகொடுத்த 'செமெலாய்' பூர்வக்குடிகள்

தொடர்ந்து அதிகார வர்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் பூர்வக்குடிகள். இம்முறை அவர்களின் பணப்பசிக்கு இரையாகியிருப்பது செமெலாய் பூர்வக்குடிகளின் பூர்வீக நிலம்.

 சிலநாட்களுக்கு முன்பு (16/2/2021) மலேசியகினி வெளியிட்ட இச்செய்தி குறித்து யாரும் பெரிதாக கவலைக்கொள்ளவில்லை. அக்கரையும் கொள்ளவில்லை. பஹாங், பெராவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த அவர்களின் பூர்வீக நில வழக்கில் அவர்கள் தோல்வியை தழுவிவிட்டனர் என்று அவர்களின் வழக்கறிஞர் அஹ்மாட் நிஜாம் ஹமிட் தெரிவித்தார். அந்த மக்களின் ரத்தமும் சதையுமாக இருங்க இந்த வனம் தற்போது செம்பனை தோட்டமாக மாறுவதற்கு தனியார் கைக்கு போய்விட்டது.  
 
655 ஹெக்டர் நிலம் சுமார் 100 ஆண்டுகள் குத்தகைக்கு Elite Agriculture Sdn Bhd என்ற தனியார் நிறுவனத்திற்கு திரும்பவும் கைமாறுகிறது.  செமெலாய்  ஒராங் அஸ்லி சமூகம் கம்பாங் லுபுக் பெராவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஆறு தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாகவும், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் கூறுகின்றனர். தவிர இந்தக் கிராமம் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையால் (ஜாக்வா) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இருப்பினும் பூர்வக்குடிகளின் வாழ்க்கையா அல்லது பணமா என்று வரும்போது, வெல்வது பணம் மட்டும்தான்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

பெண்கள் வாய்த்திறந்தால்- இந்த ஆணாதிக்க சமூகத்தினால் தாங்கத்தான் முடியுமா?

 கடந்த சில நாட்களாக அவதானித்து நான் கூற வருவது இதுதான்.  டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் படையெடுத்து வந்தபோது, பெண்கள் ஏன் கஷ்டப்படனும் திருப்பி அனுப்பிவிடுங்கள், அல்லது திரும்பி போய்விடுங்கள் என்று மோடி அரசாங்கம் தெரிவித்தப்போது, அதற்கு பெண்கள் மிக தரமான சம்பவத்தை செய்து முடித்து,  ஏன் அவர்கள் திரும்பி போகமுடியாது என்பதை தெரிவித்தனர்.  பெண்கள்  ஈடுபட்ட  டிரெட்கர் பேரணி  விவசாயப் போராட்டத்தில் மிகப் முக்கியமான பேசக்கூடிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதனைத்தொடர்ந்து இந்தப் போராட்டமானது மேலும்,  உலக மக்கள் பார்வையில் விரிவடைந்தது.  வெளிநாட்டிலிருந்து பல பிரபலங்களும் பிரபலம் அல்லாதவர்களும் டிவிட்டர் வழி குரல் கொடுத்தார்கள்.  முகநூலில் எழுதினார்கள். கெனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட தொடர்ந்து விவசாயப் போராட்டம் குறித்து பேசியது செய்திகளாக மாறியது.  இருப்பினும்,  பெண்களின் குரல்தான் கவனிக்ககூடியதாகவும் பலரும் திரும்பிப் பார்க்ககூடிய வகையிலும் இருந்தது; தொடர்ந்து இருந்தும் வருகிறது.  பெண்களின் குரலுக்கு, சங்கிகளின் அதாவது சங்கிகளின் கூட்டத்தில் இருக்கும் ஆண் சங்கிகளின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்றால், மிகக் கேவலமாக, கிட்டதட்ட தீவிரவாதிகளைப்போல இருந்தது.

ஆபாச வீடியோவை வெளியிடுவோம், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்; அவள் ஒழுங்கா? பத்தினியா? இறையாண்மையை கெடுக்கிறார்கள்… , லப லபா.. லப லபா.. லப லபா.

தற்போது திஷா ரவியின் கைது நடவடிக்கை, உலக அளவில் சினத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.  இத்தனைக்கும்  திஷா செய்தது மாபெரும் குற்றமல்ல. டெல்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய   சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க்-க்கு ஆதரவாக செயல்பட்டார் என்று டெல்லி போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.   கிரேட்டா துன்பர்க் கூலிக்கு வேலைசெய்யும் செயற்பாட்டாளர் அல்ல. அவரின் தந்தை முதற்கொண்டு இயற்கைக்காக போராடியவர்கள் என்பது இங்கு கவனிக்ககூடியது.கிரேட்டா துன்பர்க்  வழியைப் பின்பற்றி திஷா ரவி முன்னெடுக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களை சம்பந்தப்படுத்தி இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் திஷா கடந்த சில மாதங்களாகவே பருவநிலை மாற்றம் தொடர்பாக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதோடு செயற்பட்டும் வருகிறார். அப்போதெல்லாம் இந்த கூட்டத்திற்கு திஷா என்பவர் குற்றவாளையாக தெரியவில்லை.  எப்போது கிரேட்டா துன்பர்க்  என்பவர் விவசாயிகளுக்காக குரல்கொடுத்தாரோ மோப்பம் பிடிக்க தொடங்கிவிட்டனர் சங்கிகள்.  அவர்களின் கேவலமான மோப்பத்தினால் அறியப்படுத்தியது திஷா  ராஜதுரோகத்தை செய்துவிட்டாராம்.  பெண்களின் குரல்களுக்கு கதறுகிறார்கள் கதறுகிறார்கள் கதறி துடிக்கிறார்கள்  ஆணாதிக்க சங்கிகள்.  


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தானின் காதல் கதைமலேசிய சுல்தான்களில்  மிகவும் வெளிப்படையானவர் ஜொகூர் சுல்தாந்தான். தவிர மற்ற மாநில சுல்தான்ளைவிட  மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், மக்களோடு அதிகம் நெருங்கி பழகக்கூடியவர். ஜொகூர் வாசிகளும் அதிகம்  தங்களது சுல்தானை ரசிப்பதையும் மதிப்பதையும்  காண முடியும்.  இன்னும் சொன்னால் சுல்தான்கள் இருக்கும் மாநிலங்களில் ஏதேனும்  உள்ளூர் பிரச்னை அல்லது மக்கள் பிரச்னை என்றால் மக்கள் நாடுவது சட்ட மன்ற உறுப்பினரைத்தான்.  ஆனால், ஜொகூர் மக்களின் பிரச்னை, சட்ட மன்றம் - நாடாளுமன்றம் போவதற்கு முன்பே சுல்தானின் பார்வைக்கு போய்விடும். அந்த அளவுக்கு தன் மக்களுக்காக முன்னிலையில் நிற்பார் ஜொகூர் சுல்தான்.

5 ஆண்டுகளுக்கு முன்பு  அதாவது 2015-ஆம் ஆண்டு சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரின் முடிசூட்டு விழா கோலாகலமாக அவரின் மாநிலத்தில் நடந்தது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பிரமாண்ட அரச  வைபவம் அது.  மாநிலமே விழாக்கோலம் பூண்டு அந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடியது.  அந்த நாளில் அவர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த, சந்தித்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி  மிகவும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.  அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களில் அவரின் காதல் கதையும் அடங்கும். தனது துணைவியார் ராஜா ஸாரித் சோஃபியாவை, சுல்தான் கரம் பிடித்தக் கதையை முதல் முறையாக வெளியுலகிற்கு அவர் பகிர்ந்துகொண்டார். 

2015-ஆம் ஆண்டு ஒரு மலாய் பத்திரிக்கையில் வந்த செய்தியை தழுவி இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இந்தக்  காதலர்  தினத்தில் சுல்தானின் கதையை பகிர்ந்துகொள்கிறேன்.  சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், தனது துணைவியார் ராஜா ஸாரித் சோஃபியாவை எங்கு சந்தித்தார்? எப்படி காதலில் விழுந்தார்? எப்படி ராணியாரைக் கவர்ந்தார்? சுல்தானே அதை பேசுகிறார்…

“துணைவியார் ராஜா ஸாரித் சோஃபியாவை நான் முதலில் சந்திக்கவில்லை.   தொலைபேசி வழியாகத்தான் அவருடன் பேசினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் அவரின் தொலைபேசி எண்ணை கொடுத்து, பேசச்சொன்னார். ராஜா ஸாரித் சோஃபியாவை எப்படியும் கவர்ந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி கவர்ந்திருந்தால், அது எனக்கு பெரிய சாதனை.

நான் இளவரசி ராஜா ஸாரித் சோஃபியாவை அழைத்தேன். ஆனால், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம்  பேசவே இல்லை. என்னைக் கண்டுகொள்ளவும் இல்லை. பேசாமல் அவர் தொலைபேசியை வைத்துவிட்டார். நான் மீண்டும் அழைத்தேன். அவரோ, தொலைபேசியை எடுக்கவில்லை.  எனக்கு அவமானமாகிவிட்டது. தொலைபேசியில்  அழைப்பதை நிறுத்திக்கொண்டேன். ராஜா ஸாரித் சோஃபியாவை சந்திப்பதற்கு முன்பே நான் அவருடன் காதலில் விழுந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆறு மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் அதே நபர், ராஜா ஸாரித் சோஃபியாவின் புதிய தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்தார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த அவர் விடுமுறைக்காக வந்திருந்தார். ‘’அழைத்துப்பேசு’’ என்று என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தார். என்னால் மீண்டும் ஒருமுறை  ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, வெட்கமாக இருக்கிறது என எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவர் விடுவதாக இல்லை. இறுதியில் அவரின் தொந்தரவு தாங்க முடியாமல் மீண்டும் ராஜா ஸாரித் சோஃபியாவை தொலைபேசியில் அழைத்தேன்.


மறுமுனையில் அவரின் குரல் கேட்டது. நான் பேசினேன், பேசினேன், பேசிக்கொண்டே இருந்தேன்.  நான்கு மணி நேரம். நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன்.  அவர்  நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. பிறகு, ஒவ்வொரு நாளும், காலையிலும், இரவிலும் நான் அவரை அழைத்துப்பேசுவேன். சில சமயம், இரவில் அவர் தூங்கி விடுவார், ஆனால், நான் மட்டும் பேசிக்கொண்டே இருப்பேன்.

சில தினங்களுக்குப் பிறகு, நான் என் தந்தையுடன் ஜொகூரில் உள்ள தீவுகளைச் சுற்றிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் கைபேசி இல்லையே. ஆகவே, ஜொகூர் திரும்பியதும், உடனே அவரை நான் அழைத்தேன். மறுமுனையில் அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அப்படியே புல்லரிக்க வைத்தது. “உங்கள் பேச்சை கேளாமல் நான் எவ்வளவு உங்களை “மிஸ்” பண்ணேன் தெரியுமா?  என்று  கேட்டாரே….  அந்தக் கனமே அவரின் காதலைப் புரிந்துகொண்டேன்.

இப்படியே தொலைபேசியில்தான் எங்கள் காதல் வளர்ந்தது. ஒருநாள் இரவு,  ராஜா ஸாரித்துடன் பேசிவிட்டுத் திரும்பினேன். அங்கே என் தந்தை நிற்பதைக் கண்டு ஒரு வினாடி உறைந்துபோனேன். நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை அவர் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதை நான் உணரவில்லை.

யாரிடம் பேசுகிறாய்? என்று கேட்டார். நானும்,  அவர் பேராக் சுல்தானின் மகள் என்று சொன்னேன். அவரைச் சந்திக்க விரும்புவதால் வீட்டிற்கு அழைத்துவரும்படி என் தந்தை சொன்னார். தொலைபேசியில் பேசி-பேசி இறுதியில் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டார். எனக்கு ஒரே மகிழ்ச்சி.


சிங்கப்பூரின் கொம்பி மலையில் எங்களுக்கு ஓர் அரண்மனை உள்ளது. அங்கு ஒரு குடும்ப நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து, ராஜா ஸாரித்தை  அங்கு அழைத்து வரும்படி என் தந்தை சொன்னார்.  விருந்தினர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பிறகு, ராஜா ஸாரித்தையும் என்னையும் தான் அமைந்திருந்த மேஜைக்கு வரும்படி என் தந்தை சைகை காட்டினார்.  நாங்களும் அங்குச் சென்றோம்.  அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இதுதான். “ இன்னும் ஏன் காத்திருக்கிறாய்? திருமணம் செய்துகொள்ள கேட்கவேண்டியதுதானே? “ என்றார்.  நான் ஒன்றும் செய்வதறியாது, சிரித்துக்கொண்டே… “ நாம் இது பற்றி யோசிக்கிறேன்” என்று மட்டும் சொன்னேன்.  ராஜா ஸாரித்தை அந்தச் சமயத்தில் இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்றியாக வேண்டுமே!

ராஜா ஸாரித்தை அவரின் வீட்டில் விட்டு விட நான் சென்றேன். நான் வீடு திரும்ப அதிகாலை 3 மணியாகிவிட்டது. நான் புறப்படும்போது என் தந்தை எங்கு அமர்ந்திருந்தாரோ , அதே இடத்தில் அப்போதும் அமர்ந்திருந்தார்.  எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர்  என்னைப் பார்த்து கேட்டார்.

“நீ புகிஸ்தானே”?

“ஆமாம், நான் புகிஸ்தான்”

“ஒரு கோழையான புகிஸாக இருக்காதே. உண்மையான நோக்கத்துடந்தான் நீ அவருடன் பழகுகிறாயா ”

“ஆம், உண்மையாகத்தான் பழகுகிறேன். “ என்று நான் சொன்னதும் , உடனே ராஜா ஸாரித்தின்  வீட்டிற்குச் சென்று அவர் என் மனைவியாகத் தயாரா? என்று கேட்கச்சொன்னார். அந்த அதிகாலை வேளையில் நான் ராஜா ஸாரித்தின் வீட்டிற்குச்சென்று, அவரை  திருமணம் செய்துகொள்ளும் என் ஆர்வத்தைச் சொன்னேன். அவரின் சகோதரி உடனே அவர்களின் தந்தையான பேராக் சுல்தானை அழைக்க, அவரும் சம்பதம் தெரிவித்தார்.

 

இதனை முடித்துக்கொண்டு  நான் வீடு திரும்பும்போது பொழுது விடிந்துவிட்டது. என் தந்தை அதே இடத்தில்தான்  இன்னமும் அமர்ந்திருந்தார்.  ராஜா ஸாரித் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்று நான் சொன்னதும், மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் விமானம் மூலமாக ஈப்போ சென்று, அங்கு தயார் நிலையில் இருக்கும்

 ஹெலிகாப்டரில் ஏறி கோலகங்சார் சென்று, சுல்தான் இட்ரிஸ் ஷாவை அவரின் அரண்மனையில் சந்தித்து, அவரின் அனுமதி பெறுமாறு என் தந்தை உத்தரவிட்டார்.

அதன் பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அது 1982-ஆம்  ஆண்டு நடந்தது.  ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ராஜா ஸாரித் படித்துக்கொண்டிருந்ததால், அவர் பட்டம் பெறும்வரை, ஓராண்டுக்கு அவரைச் சந்திக்க எனக்கு அனுமதியில்லை. அதற்கடுத்த ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு அழகான ஆறு செல்வங்கள் பிறந்தனர் என்றார் சுல்தான் இப்ராஹிம்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

வாழ்த்துகள் ''கருக்கு'' பாமா ம்மா…


2019-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த ஊடறு பெண்கள் சந்திப்பில்தான் நான் பாமா அம்மாவை முதன்முதலில் சந்தித்தேன். சிங்கப்பூரின் கெடுபிடியான சட்டத்திட்டத்தில் எது செய்யலாம் செய்யக்கூடாது என்று புரியவே இரண்டு நாள் ஆனாது. இதில் 20 பெண்கள் ஒன்று சேர்ந்தால் சும்மாவா இருப்போம்?
யாராவது ‘’சத்தமாக சிரிக்காதிங்க, நேரமாச்சு. புகார் சொல்லிடுவாங்க’’ என்று எச்சரிக்கும் வரை எங்களை அடக்கவே முடியவில்லை. ஆனால், பாமா ம்மா மிக கவனமாக பேசினார், சிரித்தார். தம்மால் யாருக்கும் சிக்கலும் வரக்கூடாது என்பதில் அவர் மிக கவனமாகவே இருந்தார். ‘கருக்கு’ பாமா என அடைமொழியோடு அவரை தோழிகள் அழைக்கும்போது நான் அந்த நாவலை வாசிக்காதது கொஞ்சம் நெருடலாக இருந்தது. தேடும் பலப் புத்தகங்கள் இங்கே கிடைப்பதில்லை. இந்தியாவில்தான் வாங்க வேண்டியிருக்கிறது. நல்லகாலமாக பாமா அம்மாவே கையில் புத்தகங்களோடு வந்திருந்தார். அவருடைய சில புத்தகங்களில் கருக்கும் இருந்தது. நான் வாங்கிக்கொண்டேன். நான் அவர் இருக்கும்போதே ‘கருக்கை’ வாசிக்க தொடங்கினேன். முடிக்க முடியவில்லை.

ஆனால், பாமா அம்மாவோடு இருந்த ஓரிரு நாட்களில் அவரோடு பேசியது நான் எங்கும் பதிவு செய்யவில்லை. பதிவு செய்வதற்கு இது ஒரு சரியான தருணம் என எண்ணுகிறேன். பாமா ம்மாவுக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி நினைவாக அவருக்கு பெண் படைப்பாளுமை விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து, ஒரு வெறியோடு படித்து, தன் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர் அடைந்த ஏமாற்றத்தை துளியும் ஒளிவு மறைவு இல்லாமல் கருக்கில் பேசியிருக்கிறார் பாமா ம்மா. எழுத்தில் உண்மையாக இருப்பவர் நேரிலும் அப்படியே இருக்கிறார். தலித்துகள் வாழ்க்கையில், சிக்கல்களை எதிர்கொள்வது குறித்து அவர் சிலநேரம் பேசும்போது ஏற்பட்ட வலியை இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன்.
விடியாத நாட்களாகத்தான் இன்றும் இருக்கிறது. ஆனால், நிச்சயமாக விடியும் என்று நம்பிக்கையாக இருக்கும் அவரை அணைத்துக்கொள்கிறேன்.
-யோகி

திங்கள், 8 பிப்ரவரி, 2021

பசை பூசிய அரசியல் நாற்காலி


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், ஒரு வழியாக அந்த மாபெரும் பொறுப்பைச் செயலாற்றுவதற்கு தொடங்கிவிட்டார். அவரை பதவிக்கு வரவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து அடம்பிடித்துக் கொண்டிருந்த டோனால்ட் ட்ரம்ப், தமது அடாவடித்தனமான நாடகம் எடுபடாமல் மூட்டை முடிச்சிகளை கட்டிவிட்டார்.

அரசியல் பித்துப் பிடித்தவர் மாதிரி தனது பதவி காலத்தில் நடந்துக்கொண்ட டோனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வியடைந்ததைக்கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க பிரதமர்களில் ஒரு கறுப்பு புள்ளியாகவே அவர் மாறிவிட்டார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் அதேதி 2020-ல் ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. முன்னதாக ஜோ பைடனின் செல்வாக்கும், தேர்தல் பரப்புரைகளும் அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை உலக மக்களிடத்தில் கொடுத்தது. ஆனால், டோனால்ட் ட்ரம்ப்புடைய கூலிப் படைகள் அல்லது அவரின் ஆதரவாளர்கள், ட்ரம்ப்புடைய நாற்காலியை பிரிக்க முடியாத அளவுக்கு பசையை பூசிக்கொண்டிருந்தது அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

தேர்தலில் ட்ரம்ப் படுதோல்வியடைந்தார். ஆனால், அதை அவரால் மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து தமது நாற்காலிக்கு பசையை பூசி அதன் மீது உட்கார்ந்துக்கொள்ள முயற்சி செய்தது மட்டுமல்லாமல் தேர்தல் அணையத்திடமும் மல்லுக்கு நின்றார். அதோடு, நீதிமன்றங்களிலும் வழக்குகளை தாக்கல் செய்தார்.  ஜனநாயக கட்சியினர் மோசடி செய்து வாக்குகளை அபகரித்தனர் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.


ட்ரம்ப் முறையிட்ட எல்லா இடங்களிலும் நீதியானது ஜோ பைடன் அணிக்கு சாதகமாக அமைந்தது. தேர்தலில் ட்ரம்ப் குற்றம் சாட்டியதுபோல எந்த முறைக்கேடும் இல்லை என்று உறுதியாக கூறிவிட்டனர். ஆனாலும்கூட ட்ரம்பின் நாற்காலி ஆசையை கழற்றி எறியவே முடியவில்லை. அதன் காரணத்தினால், வன்முறையை கட்டவிழ்க்கவும் அவர் துணிந்தார். செய்தும் காட்டினார். தேர்தலுக்குப் பிறகு, தன்னுடைய பதவி உறுதியில்லை என்று தெரிந்தும் அமெரிக்க ராணுவ அதிகாரத்தில் மாற்றங்களை செய்தார்.

இந்த செய்கையானது உலக மக்களிடத்தில் ட்ரம்ப் உண்மையில் யார் என்ற கேள்வியை எழுப்பியது. அதன் தொடர்ச்சியாகதான் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சித் தலைவர் ஜோ பைடன் சான்றிதழ் பெறும் நிகழ்வில் நடந்தக் கிளர்ச்சியையும் பார்க்க வேண்டியிருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ட்ரம்ப் ஆதவாளர்களால் நடத்தப்பட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்கு போலீஸ் கையாண்ட விதம் இன்னொரு விவாதத்திற்கான கதவினை திறந்துவிட்டிருக்கிறது. 

காவலதிகாரியால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிட்-டை மறந்திருக்க மாட்டோம். அவரை காவல்துறை எப்படி நடத்தியது எப்படி கொன்றது என்பதை உலக மக்கள் அறிவார்கள். ஆனால், நாடாளமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டிய, அடாவடி செய்த வெள்ளையின கிளர்ச்சிக்காரர்களை காவல்துறை கரிசனத்தோடுதான் நடந்துக்கொண்டது.  

ஆனாலும், 52 பேரை காவல்துறை கைது செய்தது. உயிர் சேதமும் இருந்தது குறைப்பிடதக்கது. தவிர 15 நாட்கள் பொதுமுடக்கத்தினை வாஷிங்டன் மேயர் அறிவித்தார்.

இப்படியாக அரங்கேரிய டோனால்ட் ட்ரம்ப் எனும் பணக்காரரின் ஜனாதிபதி நாடகம் அமெரிக்காவில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. தன்னோடு ஒட்ட வைத்துக்கொண்டிருந்த அரசியல் நாற்காலியை பசையோடு பிடுங்கி எடுத்து ஜோ பைடனிடம் கொடுத்தாகிவிட்டது.   ,  இனி ஜோ பைடன் மக்கள் மனங்களை வெல்வாரா அல்லது அவரும் நாற்காலிக்கு பசையை தடவுவாரா  என்று போக போகத் தெரியும்.  

 

புதன், 3 பிப்ரவரி, 2021

பூவுலகின் கடைசிக் காலம்- கிருஷ்ணா டாவின்ஸி (புத்தக விமர்சனம்)


இந்தப் பூவுலகில் வாழக்கூடிய கடைசி மனித இனம் நாம் தான் என்றால் உங்கள் மன நிலை என்னவாக இருக்கும். அல்லது இன்றுதான் மனித வாழ்க்கையின் இறுதி நாள் என்றால்?  

பகீர்ன்னு இருக்கிறதா? நமது உயிரையும் வாழ்க்கையையும் சொத்தையும் நினைத்து நினைத்து கவலை படும் நாம், ஒரு மாபெரும் பிரபஞ்சத்தை அழித்துவிட்டு எப்படி சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்? 

அன்னை பூமி என்று சொல்லிக்கொண்டு, அன்னைக்கு செய்யக்கூடாத அத்தனை கேட்டையும் செய்துக்கொண்டு, அன்னைக்கு செய்யவேண்டிய எதையும் உருப்படியாக மனிதன் செய்வதில்லை. 

சுவாசிக்கும் காற்றுக்கு நாம் விசுவாசியில்லை. பருகும் தண்ணீருக்கு உண்மையாக இல்லை. நம்மை தாக்கிக்கொண்டிருக்கும் பூமி மீது துளியும் அன்பு இல்லை. பல்லுயிர் பெருக்கத்தின் காடு அழிக்கப்பட்டு வீட்டு நிலமாக மாறும்போது, அங்கே நமக்கு ஒரு வீடு வாங்க முடியுமா என்று யோசிக்கிறோமே தவிர, பல உயிர்களுக்கு வீடாகவும் நம் எதிர்கால சந்ததிக்கு அவசியமான  வனம் இல்லாமல் போவதுக்குறித்து எந்த சிந்தனையும் நாம் கொள்வதில்லை. 

என்னமாதிரியான ஜென்மம் நாம்?. 

இன்று உலகமே தள்ளாடி நிற்கும் கோறனிக்கும், நாம் இயற்கைக்கு செய்த கேடுக்கும் நெருங்கிய  காரணம் இருக்கிறது. இதற்கு முன்பு 'ஒரே உலகம்' குறித்த புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று சொன்னேன். நாம் தவற விட்ட இயற்கை மீதான அன்பை,  நமது அடுத்த தலைமுறைக்காவது தெரிய வேண்டும். நாம் பார்த்த நமக்கு கிடைத்த நிறைய விஷயங்கள் அவர்களுக்கு இல்லாமல் போகப்போவது உறுதி. இருக்கப்போகும் மிச்ச மீதியின் அவசியத்தை உணர சில சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு அவசியம். நமக்குதான் விழிப்புணர்வே இல்லையே. அதை அடுத்த தலைமுறைக்காவது கொடுப்போம்.

இன்னுயிரை கொடுத்து இயற்கையைப் காப்பாற்ற போராடிய, இன்னும் போராடும் சிலரின் அறிமுகம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.. 

நைஜீரிய டெல்டா குறித்து உங்களில் எத்தனை பேருக்கும் தெரியும் என எனக்கு தெரியவில்லை. சூழலியல் சார்ந்து கவலைப்படுபவர்களுக்கும், அது சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கும் நைஜீரியா சூழலியல் போராளியும் எழுத்தாளருமான விவா-வை தெரியாமல் இருக்காது. விவா தொலைக்காட்சி தயாரிப்பாளர் மேலும் "சிவில், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்காக  போராடினார். 


விவசாயிகளாக வாழ்ந்த தன் சொந்த ஊர்  மக்களுக்கு தங்களின் நிலத்திற்கு கீழே ஓடும் எண்ணெய் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால், அதை மோப்பம் பிடித்து, பல திள்ளுமுள்ளுகளை செய்து விவசாய நிலத்தை நாசம் செய்தது ஷெல் எனும் காப்ரெட் கம்பெனி.  ஒருக்கட்டத்தில் தன் போராட்டத்தில் வெற்றி பெற்று ஷெல் நிறுவனத்தை தன் கிராமத்திலிருந்தே விரட்டியடித்தார்கள் விவாவும் அவருடன் கைகோர்த்து நின்ற அவரின் ஆதரவாளர்களும். 

நிலத்தை திண்ணு கொழுத்து, பணம் பார்த்த நிறுவனம் எத்தனை நாள் சும்மா இருக்கும்?  உள்நாட்டு அரசு மற்றும் இராணுவ ஆதரவுடன் ஷெல் நிறுவனம் மீண்டும் விவாவின் கிராமத்தில் கலவரம் செய்து, கொலை பலியை விவா மற்றும் அவரின் ஆதரவாளர்களின்மீது போட்டது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கு அவருக்கு கிடைத்தப் பரிசு தூக்கு தண்டனை. 1995-ஆம் ஆண்டு விவா தூக்கிலிடப்பட்டார்.    

இப்படி சூழலியலுக்காக பாடு பட்ட இன்னும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இன்னும் சிலரை இந்தப் புத்தகம் அடையாளம் படுத்தியிருக்கிறது. அதைவிடவும் மேலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கேடு குறித்து துள்ளிய ஆதாரத்தோடு முன் வைக்கிறது. 

பச்சையான உண்மையைப் பேசுகிற இந்தப் புத்தகம் நமக்கு ஒரு ஆவணம். பாரதி புத்தகாலயம்  வெளியீடு செய்திருக்கிறார்கள். 

திங்கள், 1 பிப்ரவரி, 2021

கரித்துண்டில் தெறித்தெலும் நினைவுப்பொறி

கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும்  அதிகம் கொண்டிருக்கும் நமது நாடு, இன்னும் அதன் அசல் நிலையை இழந்துவிடவில்லை, வனமாக இருந்தாலும் மலையாக இருந்தாலும், காப்பாற்றுவதைவிடவும்  அழிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.  மிஞ்சி நிற்கும் வளங்கள் தன்னை புதுப்பித்துக்கொண்டு பெருமுதலாளிகளுக்கு பணத்தையும், என் போன்ற இயற்கையோடிகளுக்கு அனுபவத்தையும் கொடுக்கிறது.

பேராக் மாநிலத்தில் நாம் பார்க்கவேண்டியதும் பதிவு செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது.  திதிவங்சா மலைத்தொடர், நெல்வயல்கள், ஈயகுட்டைகள்,  கடல்கறைகள் , பிரிட்டிஷ்கால கட்டிடங்கள் என  சொல்லிக்கொண்டே போகலாம்.  நான் இம்முறை தேடிப் போனது தைப்பிங் மரக்கரி உற்பத்தி செய்யும் ஆலைக்கு.  நீண்ட நாட்களாக அங்கு போவதற்கு  போட்டிருந்த திட்டமானது, கடந்த மாதம் நிறைவேறியது.  அந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.


மரக்கரிக்கு  தனித்த மணம் உண்டு. கெட்டியாகவும் உடைப்பதற்குக் சிலது ரொம்ப சிரமமாகவும் இருக்கும்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னாடி பரவலாக நிறைய பேர் கரி அடுப்பதைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னாடி,  விறகு அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு இருந்தது. கரி அடுப்பு பற்ற வைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். நெருப்பு பற்றிவிட்டால் நீண்ட நேரம் கரியின் உதவியோடு கணன்றுக் கொன்டிருக்கும். கரியில் நெருப்பு பிடிக்க ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். சிறு நெருப்பு பொறி, மத்தாப்பு பொறிபோல தெரித்துக் கிளம்பும். அழகாகவும், நீண்ட நேர போராட்டத்திற்கு கிடைத்த பரிசாகவும் அந்தப் பொறி நம்மை குதூகளிக்கும். கரியை பொட்டலமாக கடையில் விற்பார்கள்.

சில நாட்களில் கேஸ் அடுப்பின் ஆதிக்கம் தொடங்கியப்  பிறகு, எங்களின் கரி அடுப்புக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. அதோடு கரி அடுப்புக்கும் எங்களுக்குமான பந்தம் இல்லாமலே போய்விட்டது.  ஆனால், கரித் துண்டை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், அல்லது கரி அடுப்பை காண நேர்ந்தால்,  அதனூடான பழைய சினேகம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. குறிப்பாக சட்டிச்சோறு விற்பனை கடைகளில் தீப்பொறியோடு உயிர்திருக்கிறது கரி அடுப்புகள்.  


கரிகட்டி  இல்லாமல், கரி அடுப்புக்கு வேலையே இல்லை. ஆனால், கரி அப்படி எதையும் சார்ந்திருக்க தேவையில்லை. கரியைக்கொண்டு வாசனைத்திரவியம் முதல் கைவினைப்பொருள்கள்வரை செய்ய முடியும். 

ஆனால், இந்தக் கரியை எப்படி உற்பத்தி செய்வது?  அது ஒரு நீண்ட உற்பத்தி முறை மட்டுமல்ல, கடின உழைப்பும் அதற்கு தேவையாக இருக்கிறது. இன்று எல்லா வேலைகளுக்கும்  இயந்திரம் வந்துவிட்ட வேளையில், சில துறைகள் மட்டும் இன்னும் பாரம்பரியத்தை கைவிடாமல் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த மரக்கரியை உற்பத்தி செய்யும் பணி.  மரத்தை உற்பத்தி செய்வதிலிருந்து, அதை அறுவடை செய்து  கரி ஆலைக்கு கொண்டு வந்து கரிகட்டியாக உறுமாற்றி விற்பனைக்கு வெளியாகும் வரை அனைத்தும் எந்த நவீனத்துவமும் இல்லாமல், பாரம்பரிய முறையிலேயே செய்கிறார்கள். 


2020-இன் இறுதிநாள் நான்  மரக்கரி உற்பத்தி செய்யும் மர ஆலையில் இருந்தேன். அது  சுவா எனும் சீனருக்கு சொந்தமான  கரி ஆலையாகும்.  சுவா குடும்பம் மூன்றாவது தலைமுறையாக இந்தத் தொழிலை ஏற்று நடத்திருக்கொண்டிருக்கிறார்கள். MR. CHARCOAL CHUAH  என்ற குடும்பப் பெயரோடு இயங்கும் அந்தத் தொழிற்சாலையில்  வேலை செய்யும் ஊழியர்களில் சிலர் இரண்டு தலைமுறைகளாக அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியமாகவே இருந்தது.  சுமார் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொழிற்சாலை அது.  அந்த வட்டாரமே கரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத்தான் இருக்கின்றன.

சூரியன் சோம்பல் முறித்து, பிரகாசமாக  மேலெலும்பும் நேரத்தில், ஒளிக்கீற்றுகள் தொழிற்சாலையின் மூடப்படாத துவாரங்களின் வழியே மண்ணில் பட அந்த ஏகாந்த அழகை ரசித்தபடியே நான் தொழிற்சாலையினுள்   நுழைந்தேன். அப்போதுதான்  40 நாட்களுக்குப் பிறகு  திறக்கப்பட்ட சூலையிலிருந்து,  கரியாகிவிட்ட மரங்களை தள்ளு வண்டியில் அடிக்கி, சிலப் பெண்கள் வெளியேற்றிகொண்டிருந்தனர். கரியில் இன்னும் சூடு  மிச்சமிருந்தது.   மரத்தை எப்படி அடுக்கினார்களோ, அதே நிலையில் கரியாகியிருந்தது. மரத்தை எவ்வாறு வண்டியில் அடுக்கி சூலைக்கு கொண்டு போனார்களோ அதே மாதிரி அடுக்கி வெளியிலும் கொண்டு வந்து,  கையோடு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும் லாரியிலும் ஏற்றுகிறார்கள்.


Ebenaceae தாவர குடும்பத்தின் ஒருவகை காட்டு மரம்தான் கரிக்காக வளர்க்கப்படுகிறது. அதாவது சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய காண்டா மரங்கள்.   அறுவடைக்கு தயாராக இருக்கும் மரத்தை சம உயரத்திற்கு வெட்டி, சீர் செய்து GOH என்று சொல்லக்கூடிய சூலையில் அடுக்குகிறார்கள். ஒரே நேரத்தில் பலநூறு மரங்கள் அடுக்கப்படுகின்றன. மரங்கள் அடுக்கி முடிந்ததும், சூலையை மூடி நெருப்பு மூட்டுகிறார்கள். மின்னியல் அடுப்பு அல்ல. விறகு கொண்டே  நெருப்பெரிக்கிறார்கள்.  காற்று புகாமல் இருக்க களிமண்ணைக் கொண்டு சூலையில் நுழைவாயில் இறுக்கமாக அடைக்கப்படுகிறது.  சூலைக்கு வைத்த  நெருப்பு 30 நாட்கள் இடைவிடாது  எரிகிறது. 30 நாட்களுக்குப் பிறகு நெருப்பு அணைக்கப்பட்டாலும் சூலை திறக்கபடமாட்டாது. இப்படியாக 10 நாட்கள் கனலோடு சூடு உலர்த்தப்படுகிறது.  கிட்டதட்ட 40 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சூலையில் இன்னும் மிச்சமிருக்கிறது  30 நாட்கள் கொழுந்துவிட்ட எரிந்த நெருப்பின் சூடு.


முதல்முறையாக அதனுள் நுழைந்த எனக்கு நன்றாக சுட்டது. அடுக்கும்போது என்ன கணம் இருந்ததோ அதே அளவு  குறையாமல் கரியாக மாறியப் பின்னும் கணக்கிறது. தள்ளுவண்டியில் சில கரிகட்டைகளை அடுக்க முயற்சி செய்தேன். கரி நொறுங்கிவிடாமல் அடுக்கவேண்டும். சில துண்டுகள்  உடைந்து விழுந்ததில் பார்வையாளராக மட்டுமே இருப்பதுதான் உகந்தது என்று என் முயற்சியை கைவிட்டேன். நொறுங்கிய கரித்துண்டுகளை தனியே சேகரிக்கிறார்கள். அந்த நொறுக்கிய கரிகட்டைகள் தனியே பொட்டலம் கட்டி , உள்ளூர் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.  உடையாத மரம் அளவுக்கு இருக்கும் கரிகட்டைகள் வெளிநாட்டு சந்தைக்குச் செல்கின்றன.


“ஒரு காலத்தில் கரியின் தேவை மிக அதிகமாக இருந்தது. தினமும் சூலையிலிருந்து கரிக்கட்டைகளை வெளியேற்றும் அளவுக்கு அதன் உற்பத்தி இருந்தது. மின்னியல்  மாற்றத்திற்குப் பிறகு,  கரியை பயன்படுத்தும் தேவை வெகுவாக குறைந்துவிட்டது.  என்றாலும் இன்றுவரை மரக்கரி ஆலைகள் உயிர்ப்புடனே இருக்கின்றன. தேவைக்கு மரத்தை வெட்டுவதோடு, நடவும் செய்கிறோம்.  நீங்கள் வரும்போதே பார்த்திருப்பீர்கள்; மரத் தோப்பை” என்றார் தற்போது நிர்வாகத்தில் இருக்கும் சுவா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையின் நபர். நிறைய ஊடகங்கள் இங்கு வந்து நேர்காணல் எடுத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் ஊடகம் பெரிதாக எங்களைப் பேச ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை என்றார். அதற்குதான் நான் வந்திருக்கிறேன் என்றேன்.


நான் சென்ற நேரத்தில் ஒரு சூலை திறக்கப்பட்டு மரக்கரிகளை வெளியில் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், இன்னொரு  சூலையில் மரங்கள் அடுக்க தொடங்கியிருந்தனர். இன்னொரு சூலையில் சில நாட்களுக்கு முன் மூட்டப்பட்ட தீ எறிந்துக்கோண்டிருந்தது. இன்னும் மூன்று சூலைகள் அமைதியாக இருந்தன. அதன் உள்ளே சென்று பார்த்தேன். ஜில்லென இருந்தது.  கரிக்காக வெட்டப்பட்ட மரங்கள் ஓர் ஓரத்தில் அடுக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பச்சைவாசம் வந்துக்கொண்டிருந்தது. அந்த வாசம் பல இனிமையான அனுபவங்களை   திரட்டி  என்னுள் நிரப்பிக்கொண்டிருந்தது.  
நன்றி: தமிழ்மலர் 7/2/2021