திங்கள், 1 பிப்ரவரி, 2021

கரித்துண்டில் தெறித்தெலும் நினைவுப்பொறி

கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும்  அதிகம் கொண்டிருக்கும் நமது நாடு, இன்னும் அதன் அசல் நிலையை இழந்துவிடவில்லை, வனமாக இருந்தாலும் மலையாக இருந்தாலும், காப்பாற்றுவதைவிடவும்  அழிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.  மிஞ்சி நிற்கும் வளங்கள் தன்னை புதுப்பித்துக்கொண்டு பெருமுதலாளிகளுக்கு பணத்தையும், என் போன்ற இயற்கையோடிகளுக்கு அனுபவத்தையும் கொடுக்கிறது.

பேராக் மாநிலத்தில் நாம் பார்க்கவேண்டியதும் பதிவு செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது.  திதிவங்சா மலைத்தொடர், நெல்வயல்கள், ஈயகுட்டைகள்,  கடல்கறைகள் , பிரிட்டிஷ்கால கட்டிடங்கள் என  சொல்லிக்கொண்டே போகலாம்.  நான் இம்முறை தேடிப் போனது தைப்பிங் மரக்கரி உற்பத்தி செய்யும் ஆலைக்கு.  நீண்ட நாட்களாக அங்கு போவதற்கு  போட்டிருந்த திட்டமானது, கடந்த மாதம் நிறைவேறியது.  அந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.


மரக்கரிக்கு  தனித்த மணம் உண்டு. கெட்டியாகவும் உடைப்பதற்குக் சிலது ரொம்ப சிரமமாகவும் இருக்கும்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னாடி பரவலாக நிறைய பேர் கரி அடுப்பதைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னாடி,  விறகு அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு இருந்தது. கரி அடுப்பு பற்ற வைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். நெருப்பு பற்றிவிட்டால் நீண்ட நேரம் கரியின் உதவியோடு கணன்றுக் கொன்டிருக்கும். கரியில் நெருப்பு பிடிக்க ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். சிறு நெருப்பு பொறி, மத்தாப்பு பொறிபோல தெரித்துக் கிளம்பும். அழகாகவும், நீண்ட நேர போராட்டத்திற்கு கிடைத்த பரிசாகவும் அந்தப் பொறி நம்மை குதூகளிக்கும். கரியை பொட்டலமாக கடையில் விற்பார்கள்.

சில நாட்களில் கேஸ் அடுப்பின் ஆதிக்கம் தொடங்கியப்  பிறகு, எங்களின் கரி அடுப்புக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. அதோடு கரி அடுப்புக்கும் எங்களுக்குமான பந்தம் இல்லாமலே போய்விட்டது.  ஆனால், கரித் துண்டை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், அல்லது கரி அடுப்பை காண நேர்ந்தால்,  அதனூடான பழைய சினேகம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. குறிப்பாக சட்டிச்சோறு விற்பனை கடைகளில் தீப்பொறியோடு உயிர்திருக்கிறது கரி அடுப்புகள்.  


கரிகட்டி  இல்லாமல், கரி அடுப்புக்கு வேலையே இல்லை. ஆனால், கரி அப்படி எதையும் சார்ந்திருக்க தேவையில்லை. கரியைக்கொண்டு வாசனைத்திரவியம் முதல் கைவினைப்பொருள்கள்வரை செய்ய முடியும். 

ஆனால், இந்தக் கரியை எப்படி உற்பத்தி செய்வது?  அது ஒரு நீண்ட உற்பத்தி முறை மட்டுமல்ல, கடின உழைப்பும் அதற்கு தேவையாக இருக்கிறது. இன்று எல்லா வேலைகளுக்கும்  இயந்திரம் வந்துவிட்ட வேளையில், சில துறைகள் மட்டும் இன்னும் பாரம்பரியத்தை கைவிடாமல் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த மரக்கரியை உற்பத்தி செய்யும் பணி.  மரத்தை உற்பத்தி செய்வதிலிருந்து, அதை அறுவடை செய்து  கரி ஆலைக்கு கொண்டு வந்து கரிகட்டியாக உறுமாற்றி விற்பனைக்கு வெளியாகும் வரை அனைத்தும் எந்த நவீனத்துவமும் இல்லாமல், பாரம்பரிய முறையிலேயே செய்கிறார்கள். 


2020-இன் இறுதிநாள் நான்  மரக்கரி உற்பத்தி செய்யும் மர ஆலையில் இருந்தேன். அது  சுவா எனும் சீனருக்கு சொந்தமான  கரி ஆலையாகும்.  சுவா குடும்பம் மூன்றாவது தலைமுறையாக இந்தத் தொழிலை ஏற்று நடத்திருக்கொண்டிருக்கிறார்கள். MR. CHARCOAL CHUAH  என்ற குடும்பப் பெயரோடு இயங்கும் அந்தத் தொழிற்சாலையில்  வேலை செய்யும் ஊழியர்களில் சிலர் இரண்டு தலைமுறைகளாக அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியமாகவே இருந்தது.  சுமார் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொழிற்சாலை அது.  அந்த வட்டாரமே கரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத்தான் இருக்கின்றன.

சூரியன் சோம்பல் முறித்து, பிரகாசமாக  மேலெலும்பும் நேரத்தில், ஒளிக்கீற்றுகள் தொழிற்சாலையின் மூடப்படாத துவாரங்களின் வழியே மண்ணில் பட அந்த ஏகாந்த அழகை ரசித்தபடியே நான் தொழிற்சாலையினுள்   நுழைந்தேன். அப்போதுதான்  40 நாட்களுக்குப் பிறகு  திறக்கப்பட்ட சூலையிலிருந்து,  கரியாகிவிட்ட மரங்களை தள்ளு வண்டியில் அடிக்கி, சிலப் பெண்கள் வெளியேற்றிகொண்டிருந்தனர். கரியில் இன்னும் சூடு  மிச்சமிருந்தது.   மரத்தை எப்படி அடுக்கினார்களோ, அதே நிலையில் கரியாகியிருந்தது. மரத்தை எவ்வாறு வண்டியில் அடுக்கி சூலைக்கு கொண்டு போனார்களோ அதே மாதிரி அடுக்கி வெளியிலும் கொண்டு வந்து,  கையோடு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும் லாரியிலும் ஏற்றுகிறார்கள்.


Ebenaceae தாவர குடும்பத்தின் ஒருவகை காட்டு மரம்தான் கரிக்காக வளர்க்கப்படுகிறது. அதாவது சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய காண்டா மரங்கள்.   அறுவடைக்கு தயாராக இருக்கும் மரத்தை சம உயரத்திற்கு வெட்டி, சீர் செய்து GOH என்று சொல்லக்கூடிய சூலையில் அடுக்குகிறார்கள். ஒரே நேரத்தில் பலநூறு மரங்கள் அடுக்கப்படுகின்றன. மரங்கள் அடுக்கி முடிந்ததும், சூலையை மூடி நெருப்பு மூட்டுகிறார்கள். மின்னியல் அடுப்பு அல்ல. விறகு கொண்டே  நெருப்பெரிக்கிறார்கள்.  காற்று புகாமல் இருக்க களிமண்ணைக் கொண்டு சூலையில் நுழைவாயில் இறுக்கமாக அடைக்கப்படுகிறது.  சூலைக்கு வைத்த  நெருப்பு 30 நாட்கள் இடைவிடாது  எரிகிறது. 30 நாட்களுக்குப் பிறகு நெருப்பு அணைக்கப்பட்டாலும் சூலை திறக்கபடமாட்டாது. இப்படியாக 10 நாட்கள் கனலோடு சூடு உலர்த்தப்படுகிறது.  கிட்டதட்ட 40 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சூலையில் இன்னும் மிச்சமிருக்கிறது  30 நாட்கள் கொழுந்துவிட்ட எரிந்த நெருப்பின் சூடு.


முதல்முறையாக அதனுள் நுழைந்த எனக்கு நன்றாக சுட்டது. அடுக்கும்போது என்ன கணம் இருந்ததோ அதே அளவு  குறையாமல் கரியாக மாறியப் பின்னும் கணக்கிறது. தள்ளுவண்டியில் சில கரிகட்டைகளை அடுக்க முயற்சி செய்தேன். கரி நொறுங்கிவிடாமல் அடுக்கவேண்டும். சில துண்டுகள்  உடைந்து விழுந்ததில் பார்வையாளராக மட்டுமே இருப்பதுதான் உகந்தது என்று என் முயற்சியை கைவிட்டேன். நொறுங்கிய கரித்துண்டுகளை தனியே சேகரிக்கிறார்கள். அந்த நொறுக்கிய கரிகட்டைகள் தனியே பொட்டலம் கட்டி , உள்ளூர் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.  உடையாத மரம் அளவுக்கு இருக்கும் கரிகட்டைகள் வெளிநாட்டு சந்தைக்குச் செல்கின்றன.


“ஒரு காலத்தில் கரியின் தேவை மிக அதிகமாக இருந்தது. தினமும் சூலையிலிருந்து கரிக்கட்டைகளை வெளியேற்றும் அளவுக்கு அதன் உற்பத்தி இருந்தது. மின்னியல்  மாற்றத்திற்குப் பிறகு,  கரியை பயன்படுத்தும் தேவை வெகுவாக குறைந்துவிட்டது.  என்றாலும் இன்றுவரை மரக்கரி ஆலைகள் உயிர்ப்புடனே இருக்கின்றன. தேவைக்கு மரத்தை வெட்டுவதோடு, நடவும் செய்கிறோம்.  நீங்கள் வரும்போதே பார்த்திருப்பீர்கள்; மரத் தோப்பை” என்றார் தற்போது நிர்வாகத்தில் இருக்கும் சுவா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையின் நபர். நிறைய ஊடகங்கள் இங்கு வந்து நேர்காணல் எடுத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் ஊடகம் பெரிதாக எங்களைப் பேச ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை என்றார். அதற்குதான் நான் வந்திருக்கிறேன் என்றேன்.


நான் சென்ற நேரத்தில் ஒரு சூலை திறக்கப்பட்டு மரக்கரிகளை வெளியில் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், இன்னொரு  சூலையில் மரங்கள் அடுக்க தொடங்கியிருந்தனர். இன்னொரு சூலையில் சில நாட்களுக்கு முன் மூட்டப்பட்ட தீ எறிந்துக்கோண்டிருந்தது. இன்னும் மூன்று சூலைகள் அமைதியாக இருந்தன. அதன் உள்ளே சென்று பார்த்தேன். ஜில்லென இருந்தது.  கரிக்காக வெட்டப்பட்ட மரங்கள் ஓர் ஓரத்தில் அடுக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பச்சைவாசம் வந்துக்கொண்டிருந்தது. அந்த வாசம் பல இனிமையான அனுபவங்களை   திரட்டி  என்னுள் நிரப்பிக்கொண்டிருந்தது.  




நன்றி: தமிழ்மலர் 7/2/2021


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக