புதன், 31 ஆகஸ்ட், 2022

இயற்கைக்கு நீங்கள் விசுவாசிதானா?


கடந்த மாதத்தில் ஜூலை 18-ஆம் நாள் புலனத்தில் மற்றும் இணையத்தில் பலரும் பகிந்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை நீங்களும் கவனித்திருக்கலாம். ஐரோப்பா நாடுகளில் வெப்ப அளவைக்காட்டும் அப்புகைப்படம் பூமியின் ஒருபகுதி சுற்றி எரிவது போன்றே இருந்தது. “போன்றே இருந்தது” என்று நான் சொல்வதும் தவறுதான்.

உண்மையில் ஐரோப்பா நாடுகளின் பல இடங்கள் வெட்ப அளவு தாங்கிக்கொள்ளமுடியாமல் ஆங்காங்கு எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்களில் 40-47°C (104-117°F) வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை அறிவியலாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அந்த எச்சரிக்கை அவர்களுக்கு மட்டுமல்ல என்பதை “என்னா வெயிலு” என்றும் “ என்னா சூடு” என்றும் புலம்பும் நாமும் உணர வேண்டும்.

இது தொடர்பான ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் செய்தி இவ்வாறு சொல்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், குரோஷியா, கிரீஸ், துருக்கி எங்கிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. ஒரு வானிலை ஆய்வாளர் பிரான்சின் தென்மேற்கு பகுதியை 'வெப்ப பிரளயம்' என்று விவரித்தார், பிரெஞ்சு அரசாங்கம் ஏற்கனவே 25,000 பேரையும், துருக்கி 3,500 நபர்களையும், போர்ச்சுகல் 800 பேரையும் கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். தெற்கு ஸ்பெயினில் சுமார் 3,200 பேர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்,  இதை ஸ்பெயினின் ABC பத்திரிகை 'திடீர் நெருப்புப் பொழிவு' என்று குறிப்பிட்டது. (தரவு (தமிழில்) : உலக சோசலிச இணையத்தளம்)

இந்த இணையத்தளம் மேலும் ஒரு அபாயகரமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறது. அதாவது நெருப்பால் ஏற்படும் அழிவுக்கு அப்பாற்பட்டு, இந்த வெப்ப அலையானது ஏற்கனவே வெப்பத்தால் ஏற்படும் மரணங்களின் ஓர் அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, பொதுவாக மாரடைப்பு அல்லது வலிப்பு ஆகியவற்றால் இது ஏற்படுத்தி வருகிறது

போர்ச்சுகல் இதுவரை 650 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிவித்துள்ளது, ஜூலை 7 மற்றும் 13 க்கு இடையில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருவர் இறந்துள்ளார்

ஸ்பெயின் 510 க்கும் அதிகமான இறப்புகளை அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் இன்னும் உயரும். 2003 ஐரோப்பிய வெப்ப அலையின் போது, அதிகபட்ச மட்டங்களை எட்டிய வெப்பநிலைகள் நீண்ட காலத்திற்கு நீடித்தன, ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிபரங்களின்படி, அப்போது கண்டம் முழுவதும் 72,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு உள்ளது. பிரான்சில் சுமார் 15,000 பேரும் ஸ்பெயினில் 13,000 பேரும் அதில் உள்ளடங்குவர்.

அத்தகவலின் கூற்றுப்படி நமது நாட்டில் கடந்த ஆண்டுகளில் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் மரணங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. காரணம் எப்போதுமில்லாத அளவுக்கு நமது நாடும் வெப்பமயமாதலில் சிக்கி தவிக்கிறது. மேலும் சீதோஷன நிலையும் மிகக் கடுமையாக மாறியிருக்கிறது. வெயிலாக இருக்கவேண்டிய காலத்தில் மழை பெய்துக்கொண்டிருந்தது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழையும் வெய்யிலுமாக மாறிமாறி இருக்கிறது. இதன் காரணமாக இரவு பகல் என்று மனித இனம் வெட்கையோடு இருக்கிறது. திடீர் மரணங்களும் ஏராளமாக நிகழ்ந்துள்ளன. 

இந்நிலையில் தலைநகரில் புதியதாக வெள்ளப்பேரிடரை தவிர்க்கும் முயற்சியாக ஒரு சில இடங்களில் முகாம்கள் அமைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒருமணி நேரம் மழை பெய்தாலே தலைநகரமே ஸ்தம்பித்து விடுகிறது. தலைநகரை சுற்றியிருக்கும் முக்கிய கால்வாய்களில் தண்ணீர் நிறைந்து நம்மை எச்சரிக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பேரிடரை சமாளிக்கத் தெரியாமல் திணறியது மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும்தான் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனது கேள்வி என்னவென்றால் மக்களான நமது கடமையென்ன? இந்த இயற்கைக்கு நீங்கள் காட்டும் விசுவாசம் என்ன?  நீங்கள் இயற்கைக்கு விசுவாசிதானா?

நெகிழியை குறைக்கிறோமா? குப்பையை கண்ட இடங்களில் போடுவதை தவிர்க்கிறோமா? தண்ணீரை வீணாக்காமல் இருக்கிறோமா? மினரல் பாட்டில் தண்ணீரை வாங்காமல் இருக்கிறோமா? மின்சாரத்தை தேவைக்கு ஏற்பத்தான் பயன்படுத்துகிறோமா? இப்படி பல “றோமா”-கள் இருக்கிறது. ஏதாவது ஒன்றுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் “ஆம் நான் இதை செய்வதில்லை” என்று உங்களால் சொல்ல முடியுமா?

நாம் இயற்கைக்கு செய்யும் சீர்கேட்டினால் புவி வெப்படைந்து ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்குகிறது. காலநிலை மாற்றம் இன்று உணவுப் பற்றாக்குறைக்கும் வறட்சிக்கும் புவி வெப்பமடைதலும் மிகப் பெரியக் காரணமாகும். இக்காரணங்களும் இணைந்துதான் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அதில் நமது பங்கும் கணிசமாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கோவிட் 19 பெருந்தொற்றின்போது நமக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுதப்பட்டு, பயணங்கள் மறுக்கப்பட்டு, மருத்துவமனை நியமனம் தள்ளிப்போடப்பட்டு முடங்கிக்கிடந்தோம். ஆனால், பிரிட்டனில் வெட்பத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  முன்பில்லாத வகையில் அதன் முதல் 'தீவிர வெப்ப சிவப்பு எச்சரிக்கையை' அறிவித்தது பிரிட்டன்.  அதே நாளில், வெப்பப் பாதிப்புகள் காரணமாக இரயில் சேவைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டன, அறுவைச் சிகிச்சை அறைகள் செயல்பட முடியாத அளவுக்கு வெப்பமாக இருந்ததால் மருத்துவமனைகளால் அறுவைச் சிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டன.

வடக்கு இத்தாலி 70 ஆண்டுகளில் இல்லாதளவில் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது, Po மற்றும் Serchio போன்ற பெரிய ஆறுகள் கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டு விட்டன என்று இணைய செய்தி குறிப்பிடுகிறது.

நாம் இதுவரை எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மாசுபாடு என்பது நம் வீட்டுக்குள் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்பது மூடத்தனம். நமது வாசலையும் தாண்டி நிற்கும் அதை எதிர்கொள்ள நாம் வீட்டிலிருந்துதான் போராட வேண்டும். கோவிட் 19 காரணமாக ஊரடங்கு சூழலுக்கு தள்ளப்பட்ட நாம் வெட்பத்தின் காரணமாக ஊரடங்கெல்லாம் வராது என்று நினைக்ககூடாது. வளர்ச்சியடைந்த நாடுகள், நவீனமாகிவிட்ட நாடுகள் என்று உதாரணம் காட்டும் நாடுகளில் இது நடந்தே விட்டிருக்கிறது. நாம் அலட்சியப் போக்கை தூர வீசிவிட்டு இயற்கைக்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருப்போம்.