வியாழன், 15 டிசம்பர், 2016

நங்கையின் சுயம்


நட்பின் சின்னமாக 
நீயளித்த கோப்பையில்
அன்றுதான் கலந்திருந்தேன்
சுவை மிகுந்த தேனீரை

சில மிடறுகள்.....
அப்போதுதான் கவனித்தேன்
அதில் விழுந்திருந்தது ஒரு ' ஈ '

இறக்கைகளை விசையோடு
துடுப்பென சுழற்றியது....
அமைதியானது...
தேனீரின் சூட்டில் உடல்வேக
முழு வீச்சுடன்  குவளைக்குள்
சுற்றிச் சுழன்றது 

உயிருக்குப் போராடும்
இறுதி  நிமிடத்தில்...
காப்பாற்ற
யத்தனிக்காத
என்னையும் ஏறெடுத்தது 
ஒரு நொடி

மேலும் மேலும் திமிறியது
புலனாகாத  கட்டுகள்
அதன்மீது இறுக இறுக
சற்று நேரத்தில் 
சகலமும்
அடங்கிப்போனது

ஒரு நங்கையின் 
பறிபோன
சுயத்தை போலவே