சனி, 17 அக்டோபர், 2020

மிஷ்கினின் சைக்கோ

திரைப்படம் பார்க்ககூடிய சூழல் எப்போதும் எனக்கு இருப்பதில்லை. ஆனாலும் மிஷ்கின் திரைப்படம் என்றால் எனக்கு நெருக்கமான ஒன்று ஏதோ  அதில் இருப்பதாக எனக்கு தோன்றும். குறிப்பாக அந்த வயலின் இசை.. மிஷ்கின் திரைப்படத்தில் அந்த வயலின் இசையானது தனிக்கதையாகவே ஓடும்.  நான் அப்படியாகத்தான் அந்த இசையைப் பார்க்கிறேன்.

சைக்கோ திரைப்படம் குறித்து பல கருத்துகள்  உலாவிக்கொண்டிருக்கின்றன. சிலர் லோஜிக் உதைக்கிறது என்கிறார்கள். சிலர் சரியாக எடுக்கப்படாத திரைப்படம் என்கிறார்கள்.  இதெல்லாம் கருத்தில் மிஷ்கின் கொள்வதில்லையா என்று விமர்சனம் சொல்கிறார்கள்? ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள். ஏன் அந்த டீச்சரைக் கொல்லாமல் வைத்திருந்தான் அந்த சைக்கோ என்கிறார்கள்.. இன்னும் என்னென்னவோ… என்னென்னவோ…

நான் படம் பார்த்த மறுநாளிலிருந்து மிஷ்கின் திரைப்படம் குறித்த சில நேர்காணல்களைப் பார்த்தேன். குறிப்பாக மிஷ்கினுடைய நேர்காணல் அது ஒரு இலக்கிய வாசிப்பின் மாதிரியாக இருந்தது. எனக்கு அந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு பேசவேண்டும் என்று நினைத்தது இரண்டு விஷயங்களைத்தான். திரைப்படம் விமர்சனம் சார்ந்து ஒரு அறிவார்ந்த விமர்சனத்தைக் கொடுப்பதற்கு ஏற்ற ஆள் நான் இல்லை என்றாலும், வெகுஜன மக்கள் பார்வையிலும் பொதுபுத்தியிலும் மனசுக்கு தோன்றுவதை பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா…

மிஸ்கின்  திரைப்படத்தில் வரும்  சைக்கோவுக்கு இரண்டு வரலாறுகள் இருக்கிறது. ஒன்று உண்மையான சைக்கோ கில்லர் தேட் பேண்டி.  மற்றொன்று அங்குலி மாலா எனும் பெயருக்கு பின்னாள் இருக்கும் வரலாறு. 

நிஜ சீரியல் கிள்ளர் தேட் பேண்டி. 

இந்தப் பெயரை மிகச் சமீபத்தில்  ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ஒரு ஆவணபடத்தில் பார்த்தேன்.  கிரைம் சம்பந்தப்பட்ட சேனல் அது. படத்தில் சைக்கோ வில்லன் அங்குலி பெண்களை கடத்தும்போது  காலில் ஊனமுள்ளவர் போல நாடகமாடுவார்.  அது அப்படியே தேட் பேண்டியின் பாணி.  தேட் பேண்டி குழந்தை பருவத்திலேயே மனதளவில் பெரும் பாதிப்பை சந்தித்தவர். பெற்றோர்களின் புறக்கணிப்பு, முதல் காதலின் தோல்வி என அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் தோல்விகளும் அவரை ஒரு சைக்கோவாக மாற்றியது. தேட்  பேண்டி கடத்தி கொன்ற பெண்கள் அனைவரும் நெற்றியில் நடுவகிடு எடுத்து தலைசீவிய பெண்கள். சில பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார். அவர் கடத்தி கொன்ற பெண்களில் பாலியல் தொழில் செய்பவர்கள் உட்பட 12 வயது சிறுமியும் அடங்குவார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயமாகும். அவர்களை கொல்வதற்கு தேட் பேண்டி தேந்தெடுத்த காரணம் அவர்கள் நடுவகிடு எடுத்து தலைவாரியதுதான். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த அவரின் முதல் காதலி நடு வகிடு எடுத்து தலைசீவுபவர். பெண்களை கடத்தி கொலை செய்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு காதலியும் இருந்திருக்கிறார்.  வீட்டில் அவரோடு குடும்பம் நடத்திக்கொண்டு அவருக்கும் தெரியாமல் ஒரு சைக்கோ வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார் தேட் பேண்டி. 


இத்தனைப் பேரை , எங்கு, எப்படி, கொலை செய்தேன் என்று  விளக்கமாக சொல்லும்வரை போலீசால்கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி போலீசில் சிக்கினார் தேட் பேண்டி? ஒரு நிதானமாக கார் ஓட்டுனர் இல்லை அவர். சாலையில் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் அவர் தனது காரை செலுத்துவார். அந்த மாதிரி கார் செலுத்திக்கொண்டு வரும்போது ஒரு முறை அவர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு காரிலிருந்த ஆயுதங்கள் சில வற்றில் படிந்திருந்த ரத்தக் கறைகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். தனக்காக வாதாட அரசு தரப்பு வக்கில் இருந்த போதும் அதை நிராகரித்த அவர் தனக்காக தானே வாதாடினார். ஆனால், அதில் அவர் தன்னை நிராபராதியென நிறுபிக்க தவறினார்.. இந்த வழக்கு விசாடனையில் இருந்தபோதே சிறையிலிருந்து தப்பித்து 5 நாட்கள்  காட்டின் ஒரு மறைவிடத்தில் தங்கியிருந்து மீண்டு வந்தார்.  ஒரு காரை திருடி எடுத்துக்கொண்டு வேறொரு ஊருக்கு போய்விட்டார். சில கைவேலைகளை செய்துக்கொண்டு காரிலேயே சில நாட்கள் வாழ்கை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய கிரிமினல் மூளை அவரை இயல்பு வாழ்கையை வாழவிடவில்லை. மீண்டும் கொலை செய்ய தொடங்கினார் தேட் பேண்டி. இந்தத் தொடர் கொலைகள் நடந்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள்,  தேட் பேண்டி  தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியில் ஆத்திரம் கொண்டு, ஒரு லேடிஸ் ஹோஸ்டலில் நுழைந்தார். பெண்கள் எல்லாரும் நித்திரையில் இருந்தனர். வெறிக்கொண்டு அவர்களை தாக்கினார் தேட் பேண்டி. அந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில் பல பெண்கள்  மரணமடைந்தனர். கடுமையான காயங்களுடன் முகம் உடைக்கப்பட்ட நிலையில்  ஒரு பெண் உயிர் தப்பினார். எங்கோ வெளியில் சென்றிருந்த வேறொருபெண், அப்போதுதான் ஹோஸ்டலுக்கு வர,  மரண ஓலங்கள் கேட்டு, ஓரிடத்தில் பதிங்கிக்கொண்டார். 

வெறியாட்டம் ஆடிய தேட் பேண்டி மிக ஆவேசமாக, ஹோஸ்டலிலிருந்து வெளியேறி, தனதுக் காரை மிக  ஆபத்தான முறையில்  ஓட்டிச் சென்றுக்கொண்டிருக்கையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன் பிறகு காரை சோதனையிட்டதில் தேட் பேண்டி வசமாக  மாட்டிக்கொண்டார்.  கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்கள்,  அதிலிருந்த ரத்தக் கறைகள் என சோதனையிட்டதில் காணாமல் போனவர்களின் அடையாளத்தை அது காட்டிக் கொடுத்தது. பின்னர், தொடங்கப்பட்ட விசாரணையில், இதற்கு முன்பு அவர் போலீசிடமிருந்து தம்பிச் சென்றது உட்பட அனைத்தும் அம்பலமானது.  இனி தப்பிக்க முடியாது என்ற முடிவு செய்தப் பிறகுதான், தான் செய்த அனைத்து கொலைகளையும் அவரே  விவரித்தார். காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பது அப்போதுதான்  தெரியவும் வந்தது.  அதுவும் எங்கே எப்படி என தேட் பேண்டியே போலீசைக் கூட்டிக் கொண்டு போய்  காட்டி தெரியப்படுத்தியது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். 

போலீசிடம் தேட் பேண்டி மாட்டிக் கொள்வதற்கு முன்பே, ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட, இவரின் நடவடிகையில் மாற்றம் இருப்பதாகவும், போலீஸ் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் தேட் பேண்டியிடம் லீவீங் டுகேதராக இருந்த அவரின் காதலி புகார் அளித்திருந்தார் என்பதும் சொல்ல வேண்டிய விஷயமாகும்.

அங்குலி மாலா

படத்தில் வரும் கொலைகாரனுக்கு அங்குலி மாலா என்ற பெயரை சூட்டியிருக்கிறார் மிஷ்கின். அங்குலி மாலா புத்தர் காலத்தில் வாழ்ந்த புத்தரை கொல்வதற்காக போன ஒரு சைக்கோ கில்லராவார்.  பீகார் காட்டுப்பகுதியில் வாழ்ந்த அங்குலி கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் விரலை வெட்டி மாலையாக அணிந்துக்கொள்வானாம்.  தன்னுடைய குரு 1000 சுண்டு விரல்களை தட்சணையாக கேட்டதின் பேரில் நடந்திருக்கிறது இந்தக் கொடூரம். படத்தைப் பார்த்தவர்களுக்கு தெரியும், சைக்கோ படத்தில் அங்குலிக்கு ஒருவிரல் இல்லை. சின்னதொரு நூல் இழையில் இந்தக் கதையை பேசியிருக்கிறார் மிஸ்கின்.  

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பெண் பாத்திரங்களுக்கு மிஸ்கின் சூட்டியிருக்கும் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களின் பெயர்கள். குறிப்பாக நித்தியா மேனனுக்கு மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் பெயர் சூட்டியிருந்தார். இப்படி எல்லாரின் பெயருக்கும் பின் ஒரு வரலாறைச் சத்தமில்லாமல் பேச வைத்திருக்கிறார் மிஷ்கின்.

பின்னணி இசை, உன்னை நினைச்சி நினைச்சி என்ற பாடல் வழியாக தன்னைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் மத்தியில் பேச வைத்திருக்கிறார் இசை ஞானி.  ஒரு சில லாஜிக்களை கிள்ளி எறிந்துவிட்டுப் பார்க்கிறேன், சைக்கோ எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.