புதன், 25 பிப்ரவரி, 2015

இரண்டாம் உலக போரும் முகவரியில்லா கல்லறைகளும் 1

தேடல் 1

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பேரா மாநிலத்தில்தான்.  பேராக் மாநிலத்திற்கு நிறைய வரலாற்றுச் சம்பவங்களும்,  பதிவுகளும் இருந்தாலும், எனக்கு என் மாநிலத்தில் சின்ன வருத்தமுள்ளது.  இலக்கியவாதிகள் குறைவாக இருக்கிறார்கள் என்ற வருத்தம்தான் அது. அந்த வகையில் எனக்கு கெடா மாநிலத்தின் மீது கொஞ்சம் பொறாமையும் எழுவதுண்டு. அங்கே பல தீவிர இலக்கியவாதிகளை அந்த மண் இயற்கையிலேயே கொண்டிருக்கிறது. புதிதாக கொஞ்சம் தீவிரமான படைப்பாளர்களை  யாரையாவது அடையாளம் கண்டுவிட்டால் நான் கேட்கும் முதல் கேள்வி  நீங்கள் பிறந்த மாநிலம் எது? என்றுதான். மெய்யாகவே நிறைய பேர் கெடா என்றுதான் கூறியுள்ளார்கள்.
‘தாய் மண்ணே வணக்கம்'  என்று  அந்நிய மண்ணிலிருந்து பாடும்போது நமக்கு தாய் நாட்டைப்பற்றி நினைவு வருகிறது. சொந்த நாட்டில் அந்தப் பாட்டைக் கேட்கும்போது, பிறந்த மாநிலம் தரும் நினைவுகள்  தவிர்க்க முடியாமல் போகிறது.
நிருபராகிய எனக்கு மாநில ரீதியில் பாரபட்சம் இருக்கக்கூடாதுதான்.  ஆனால்,  நான் பிறந்த மாநிலத்தில்,  பிறந்த யாரையாவது  இந்தத் தலைநகரில் சந்தித்துவிட்டால்  அத்தனை மகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களின் வாசிப்பு குறித்தும்,  அவர்களின் எழுத்தைக் குறித்தும்  அக்கறையோடு விசாரிக்கிறேன். இப்படி ஒரு விசாரிப்பின் போதுதான் பேராக் பீடோர் வட்டாரத்தில்  இன்னும் பதிவு செய்யப்படாமலே இருக்கும் வரலாற்றுப்பதிவுகள் குறித்து தெரியவந்தது.
அதாவது இந்தியர்கள் அல்லது தமிழர்கள் விழா எடுத்துக் கொண்டாடும் தலைவர்களான அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பெருஞ்சித்தனார் போன்றவர்கள்  இந்த பீடோர் மண்ணில் தங்கள் பாதங்களைப் பதித்திருப்பதாகவும், அவர்கள் அங்கு வந்து உரை நிகழ்த்தியதற்கு  வாய்வழிப் பதிவுகளே இருக்கும் வேளையில், எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் அங்கு பயணமானேன்.
முன்னமே கடாரம், பிரிக்பீல்ட்ஸ் போன்ற தேடல்கள் குறித்த பதிவுகள் அவர்களுக்கு (பீடோர் மக்களுக்கு) நம்பிக்கையூட்டுவதாக இருந்ததால், 100 சதவிகிதம் இந்தத் தேடலைத் தேடி முடிக்காமல் போனாலும் குறைந்தது 50 சதவிகிதம் அவர்களின் உதவியோடே தேடலை மேற்கொள்ளலாம் என்றுதான் நான் பயணமானேன். ஆனால், அந்தத் தேடல் தோல்வியில் முடிந்தது என்பது எனக்கு மிகப்பெரிய சோகம்தான்.
தேடலுக்கு நம்பகத்தன்மையாகவும், ஆதாரமாகவும் இருக்கும் பதிவுகள், புகைப்படங்கள்,  அந்தக் காலகட்டத்தில் இருந்த மக்கள், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இலக்கியம் ஊடாகச் செய்யப்பட்டிருக்கும் பதிவுகள் என பலவாறாகத் தேடித் தேடி நான்  களைத்துப்  போனதுதான் மிச்சம். தேடலுக்காக,  நான் இறுதியாக பாதாங் பாடாங் மாவட்ட இலாகாவிடம் இது குறித்த விவரங்களை சேகரிக்கச் சென்றேன்.  நான் நிருபர் என தெரிந்ததும் கொஞ்சம் பொறுப்பாக விவரங்களைத்  தேடினர். பிறகு அதே பொறுப்புடன் ஒரு விவரமும் இங்கே இல்லை என்றனர். அந்த வட்டாரம் குறித்த வரலாறு எதுவும் ஆவணமாக்கப்படவில்லை என அவர்கள் கூறியது எனக்கு மயக்கத்தையும் தலை சுற்றலையும் ஏற்படுத்தியது.
ஒரு தேடலுக்கான முதல் முயற்சி தோல்வியில் முடிவது மிகமிகச் சாதாரணமான ஒன்றுதான். அதன்பிறகும் இந்தத் தேடலுக்காக இன்னும் அதிக நேரத்தையும், நாள்களையும் செலவு செய்தால் தடயங்கள் அல்லது ஆவணங்களைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கிறது.

ஆனால், எனது இந்தப் பயணத்தின் மொத்தத் தேடலும் வீண்தானா? என்றால் இல்லை.  விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்பார்கள். அதுபோல நான் தேடிப்போன தேடலுக்குக் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அமைந்ததுதான் அந்த வரலாற்றுக் கல்லறைகள்.
பொதுவாக எனக்கு மரணத்தைக் குறித்தும், கல்லறைகள்  குறித்தும் அச்சம் இருந்ததில்லை. அதுவே என்னை துணிந்து பல தேடல்களையும் கருத்துகளையும், முன்வைக்கத் தூண்டுகிறது. இன்னும் ஆழத்துக்குள் இருக்கும் ஆழத்துக்குப் பயணிக்க வைக்கிறது எனலாம். ஆனால், அப்படி ஓர் ஆழத்தை நான் இன்னும் நெருங்கவே இல்லை என்பதையும்  இங்கு ஒப்புக்கொள்கிறேன். அதற்கான திறவுகள் என்னிடம் போதுமானதாக இல்லை என்பதும் உண்மை. ஆனால், இந்தத் தேடல்களில் ஒரு புள்ளியாவது  என் பதிவை படிக்கும் வாசகர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது புனைவு எழுத்தாளர்களுக்கோ அமையும் என நான் நம்புகிறேன்.
1940-களில் இரண்டாம் போர் காலகட்டத்தில் மலேசியாவில், பிரிட்டன் காலனிய பயங்கரவாதத்தை வரலாற்றில் படித்திருப்போம். அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய காலத்தில், மலேசிய கம்யூனிஸ்டுகளை கொடுமைப்படுத்தினர் பிரிட்டிஷ் படையினர்.
இங்கே கல்லறைகள்  எப்படி வரலாற்றைப் பதிவுகள் பெற்றன. பின் எப்படி மறைக்கப்பட்டன?மலேசியாவை ஆக்கிரமித்த  ஜப்பானியப் படைகளுக்கு எதிராக, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தியது. இதன் காரணத்தினால்  கம்யூனிஸ்டுகளின் தலைகள் கொய்யப்பட்டு, களியாட்டம் ஆடினர்  ஜப்பானியர்கள்.இது வரலாற்றுப் பதிவாகும்.
இந்தக் கல்லறைகள் குறித்து பேராக் மாநில மக்களைவையில் 2009-ஆம் ஆண்டு கோரிக்கையை முன்வைத்தவர் சுங்கை நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர் சிவநேசன். அவரை நான் இந்தத் தேடலுக்காகச் சிறப்பு நேர்காணல் செய்தேன்.
(தேடல் தொடரும்)
       

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

இது மேற்கத்திய ஆரம்பமாக இருந்தாலும் தமிழுக்கும் வர வேண்டிய சிந்தனை


தமிழ் இலக்கிய உலகில் தமிழவன் குறிப்பிடத்தக்க படைப்பாளி. தமிழ் சமூகத்துக்கு அமைப்பியல் தத்துவத்தை தெளிவு படுத்தியவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர் என்று அவரின் ஆளுமைகள் நீள்கிறது. இவரது அமைப்பியல் (structuralism) என்ற நூல் இந்திய சிறு சிறுபத்திரிகைச் சூழலில் வரவேற்கப் பட்டிருக்கிறது. எழுத்து, கசட தபற, க போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கும் இவர், தற்காலத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவர். பெங்களுர் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம் திராவிடப் பல்கலைக்கழகம், போலந்து வார்ஸா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர். ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்', ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்', ஜி.கே எழுதிய மர்மநாவல்', ‘வார்ஸாவில் ஒரு கடவுள்' ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள். தமிழ் தேசியத்தின் மீதும், தமிழ்நாட்டு அரசியலின் மீதும் எப்போதும் பலகோணங்களிலான விமர்சனங்களை உடையவரான இவர், அண்மையில் மலேசியாவுக்கு வல்லினம் இலக்கிய குழு ஏற்பாடு செய்திருந்த ‘அமைப்பியல்' என்ற பட்டறையை நடத்துவதற்காக வந்திருந்தார்.  ‘நம் நாடு' பத்திரிக்கையின் வழி அவரிடம் சிறப்பு நேர்காணலை செய்தேன்.

யோகி : இது உங்களுக்கு எத்தனையாவது மலேசியப் பயணம்?
- இது எனக்கு இரண்டாவது மலேசியப் பயணம். போன வருடம் சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவுக்கு அழைப்பிதழின் பேரில் கலந்துகொண்ட போது மலேசியாவுக்கு சிறு பயணம் வந்தேன். இப்போது மலேசியாவில் தீவிரமாய் இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருந்த சிலரை அடையாளம் காண முடிந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது அமைப்பியல் பட்டறையை நடத்துவதற்காக வந்துள்ளேன்.

யோகி : அமைப்பியல் என்றால் என்ன?
- மொழியின் விதியை பின்பற்றிதான் நம்முடைய அமைப்பும் சமூகமும் இயங்குகின்றன. மொழியியல் ஆராய்ச்சியின் முன்னோடி ஃபெர்டினெண்ட் தெ சசூர் ஆகும். இவர் பிரஞ்சு பேசும் ஸ்விஸ் நாட்டுக்காரர். அவரைத்தொடர்ந்து 1982-ல் அமைப்பியல் பிரச்சாரம் தமிழ்நாடெங்கும் பரவியது. இந்திய இலக்கியத்தில் அமைப்பியலும் பின்னமைப்பியலும் செயல்படும் விதம் பல ஆராய்ச்சிக்குப் பிறகு நிரூபிக்கப்பட்டது. அதன் படி சங்க இலக்கியங்களும் அமைப்பியல் கோட்பாட்டின்படி நவீனப்படுத்தப்பட்டு புது பாணியில் வாசிப்புக்குக் கொடுக்கலாம் என்று அறியமுடிந்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகளும் இருந்தன. இருந்தும் வருகின்றன. இது மேற்கத்திய ஆரம்பமாக இருந்தாலும் தமிழுக்கும் வர வேண்டிய சிந்தனை.


யோகி : ஒரு எழுத்தாளன் நாவல் எழுதுவதற்கான அடிப்படை எது?
- அனுபவம்தான். மொழி சரித்திர வடிவங்களை சொல்வதற்கு நான் விரும்புகிறேன். மாய, எதார்த்தவாத பாணியில் எழுத வேண்டும். புனைவுகள் இருக்கலாம். கற்பனைகளில் இதுவும் சாத்தியமே.

யோகி : நீங்கள் இறுதியாக எழுதிய ‘வார்ஸாவில் ஒரு கடவுள்'(2008) என்ற நாவல் புனைவுகளால் ஆனது. அது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டது?
- அந்த நாவல் போலந்து வார்ஸாவைக் களமாகக் கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின் கதைச்சொல்லாக இருந்து வார்ஸா வாழ் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டது. அதற்குப் பல வகையான பல மாதிரியான விமர்சனங்கள் வந்தன.

யோகி : சல்மான் ருஷ்டி, அருந்ததிராய் போன்றவர்களின் மீது தொடர்ந்து வைக்கப்படும்
விமர்சனங்களை நீங்கள் இப்படி பார்க்கிறீர்கள்?
- சல்மான் ருஷ்டி எழுதிய ‘சாத்தானின் செய்யுள்கள்' என்ற நாவலில்தான் அவர் மீது மிகப்பெரிய விமர்சனம் எழுந்தது. முஸ்லிம்கள் அந்த படைப்பை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டார். அந்த நாவல் கற்பனையால் புனையப்பட்டதென்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மேற்கத்திய உலகம் அவருக்கு ஆதரவாகவே உள்ளது. அருந்ததிராயின் புக்கர் பரிசு பெற்ற நாவல் தற்போதுதான் ஜெர்மன் நாவலின் தழுவல் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் படைப்பாளிகள் என்று பார்க்கும் போது அவர்களின் படைப்புகளை நான் ஆதரிக்கிறேன். அவை சிறந்த படைப்புகள் தாம்.

யோகி : ஒரு எழுத்தாளன் அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயமா?
- ஏன் ஈடுபடக்கூடாது. அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் அவனின் படைப்பில் அரசியல் பிரச்சாரம் செய்தால் அந்த படைப்பு தோற்றுப் போவதுடன் எழுத்தாளனும் தோற்றுப்போவான்.


யோகி : தற்கால தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது?
- தற்கால தமிழ் இலக்கியம் சோதனைக்கு உட்பட்டு இருக்கிறது. இது பாராட்டுக்குரிய விஷயம். இலக்கியத்துக்கு ஏற்படும் சோதனைகளும் துடிப்போடு செயல்படுகின்றன. இது எதைக் குறிக்கிறது என்றால் சமூகம் மாறுபடுவதைக் குறிக்கிறது. ஜெய காந்தனின் அக்னி பிரவேசம் வந்த பொழுது இந்த சமூகம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. அதே நாவல்  இப்போது ஏற்றுக்கொள்ளப் படுகிறது.ஆகவே சமூகம் மாறுபடாமல் ஒரு மாற்றமும் நிகழாது.


யோகி : பெண் இலக்கியம் பற்றிய காட்டமான விமர்சனங்களை இன்றும் பெண்கள் எதிர்நோக்குகின்றனர். உங்களின் விமர்சனம் என்ன?
- நான் அவர்களை ஆதரிக்கிறேன். அவர்களின் கவிதைகள் பாராட்டுக்குரியதுதான். முதிர்ச்சி இல்லாத இளைஞர்கள்தான் இதுமாதிரியான விமர்சனங்களை முன்வைத்துப் பேசுகின்றனர்.


யோகி :  மலேசிய இலக்கியத் துறையை கொஞ்சம் விமர்சனம் செய்யுங்கள்?
- கடந்த ஐந்து ஆண்டுகாலமாக மலேசியாவில் தீவிர இலக்கியமே இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு அறிமுகம் செய்த படைப்புகள் ஆரோக்கியமானதாக இல்லை. ஆனால் அதன் பிறகு சில நண்பர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட மலேசிய இலக்கியம் பிரமிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக மகாத்மனின் சிறுகதைகள் மலேசிய தமிழர்களைப் பற்றி பேசுகிறது. நான் பிரமித்துப் போன படைப்பு இது. இவரைப் போல இன்னும் சிலரையும் அடையாளம் கண்டுள்ளேன். ஆதலால்தான் மலேசியப் படைப்புகளின் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்தியாவில் நடத்தும் ‘சிற்றேடு' என்ற சிற்றேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

அமைப்பியல் பயிற்சியில் கலந்துக் கொண்ட
மாணவர்களுடன் வல்லினம் குழுவினரும், தமிழவனும்

யோகி :  மொழியியலுக்கும் அமைப்பியலுக்கும் உள்ள வித்தியாசம் அல்லது வேறுபாடு என்ன? 
- 20-ஆம் நூற்றாண்டில் மொழி விஞ்ஞானம் ஒரு முக்கியமான துறையாக கருதப்படுகிறது. சமுதாயத்தில் மானுடவியல் விஞ்ஞானத் தன்மை இல்லை என்ற போது மொழியியலை அறிமுகப் படுத்தினர். அதிலிருந்து கட்டவிழ்க்கும் போது அமைப்பியல் பிறக்கிறது.

யோகி : கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தீர்ந்தபாடில்லையே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
- நான் பெங்களுரில் வசித்தாலும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். எப்படி யோசித்தாலும் அது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றுதான். சுமார் 17,000 கோடி செலவு செய்து அது நிர்மாணிக்கப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும், போராட்டம் நடத்துபவர்களும் சாதாரண ஏழை மக்களும் மீனவ மக்களும்தான். அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ் போன்ற எந்தக் கட்சி அமைப்புகளும் அவர்களுக்கு உதவ வில்லை. ஆனால் அவர்களுக்காக காந்தியவாதியான சுப.உதயகுமார் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து போராட வேண்டியிருக்கிறது. இதுதான் இந்திய அரசாங்கம் ஏழை பொது மக்களின் மீது வைத்திருக்கும் பாசம்.

(தமிழவன் பழகுவதற்கு மிகவும் எளிமையான அன்பான மனிதர். அவர் மலேசியாவிற்கு வந்திருந்த இருமுறையும் அவரை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிகம் எதிலும் அலட்டிக்கொள்ளாதவர். எது குறித்து பேசினாலும் அவரிடம் ஒரு நிதானமும் தெளிவும்  இருந்தது. அமைப்பியல் பயிற்சியையும் அவர் திறன்பட வழிநடத்தினார் என்பது குறிப்பிடதக்கது)

(அக்டோபர் 2012)திங்கள், 23 பிப்ரவரி, 2015

மலாக்கா செட்டி எனும் சமூகம் (தேடல் 3)


சென்ற தேடலில்...

மலாக்கா செட்டிகள் கனிவாகப் பேசுவது மட்டுமல்ல, அன்பாகப் பழகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். காலத்திற்குத் தகுந்த மாதிரி முழுவதுமாக தங்களை நவீனத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் பாரம்பரியத்தையும் வழிவழிவந்த மலாக்கா செட்டி மரபையும் காப்பாற்றுகிறார்கள். குறிப்பாக அவர்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களை நவீனப்படுத்தி
கொள்ளவே இல்லை. வள்ளி, கந்தன், முத்து, மாரி போன்ற பெயர்களைத்தான் இப்போதும் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.

இனி யோகியின் தேடல்...

அவர்களின் வீடுகளுக்குச் சென்று வந்ததில், முன்னோர்களுக்கு அவர்கள் அதிகம் மதிப்பளிப்பது கண்கூடாகத் தெரிகிறது. எல்லாருடைய வீடுகளிலும் இறந்தவர்களுக்காக ஒரு பூஜைமேடை இருக்கிறது. அதில் அவர்களுடைய முன்னோர்களின் கருப்பு-வெள்ளைப் படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்களின் முன்னோர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்ற இந்து மதப்பண்பாட்டை விடாமல் காப்பதில், அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. ஆனால், உணவு விஷயத்தில் மட்டும் மலாய் உணவு வகைகளைத்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்கள். இங்கே இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால், அவர்களை நோக்கி எறியப்படும் ஒரே வார்த்தை ‘கெலிங்'. 
கெலிங் என்றால் நம்மவருக்கு எங்கு இருந்தாலும், பொத்துக்கொண்டு அந்த இடத்திற்கு வந்து நிற்கும் கோபம். உண்மையில் இப்படி உணர்ச்சி வசப்பட்டுத்தான் ‘கெலிங்' என்ற வார்த்தை கொச்சை வார்த்தை அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. எப்படி ‘பெளாச்சான்; என்றால் மற்றவருக்குக் காரணமே இல்லாமல் பிடிக்காதோ அப்படித்தான் இதுவும். இதுகுறித்து மேற்கொண்டு பேசினால், தேடல் வேறொரு தளத்தை நோக்கிப் போகும் எனும்படியால் தொடங்கிய இடத்திற்கே வந்துவிடுகிறேன். 
செட்டிக் கிராமத்தின் அசல் பெயர் ‘கம்போங் கிலீங்' என்று அங்கு மேற்கொண்ட உரையாடலில் தெரியவந்தது. ஆனால், ‘கெலீங்' என்ற வார்த்தை சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தற்போது அவர்களின் புழக்கத்திலிருந்து அந்தப் பெயர் மறைக்கப்பட்டுவருவதாகவும், வயதானவர்கள் நினைவில் மட்டுமே அந்த பெயர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம்  அடைந்த பிறகு மலாக்கா செட்டிகள் மலேசிய இந்தியக் கட்சிகளோடு இணையாமல் அல்லது கட்சிகள் அவர்களைக் கவனிக்கப்படாமல் இருந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்துவிட்ட அந்தக் கம்பத்தில், திருவிழாவையும், பொங்கலையும், தீபாவளியையும் கொண்டாடிக்கொண்டு அவர்கள் தனித்து இருக்கிறார்கள். வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருக்கும் மலாக்கா செட்டிகள் கம்பத்தை, அரசாங்கம் சுற்றுலாத்தளமாக்கியிருக்கிறது. 

நான் போன நேரத்தில் இரு வெள்ளையர்கள் சைக்கிளில் மலாக்கா செட்டி கம்பத்தினுள் வலம் வந்தார்கள். பூட்டிய வீடுகள், வெறிச்சோடி இருக்கும் தெருவைத்தான் என்று அந்தச் சுற்றுலாப்பயணிகளும் குழப்பத்துடன் பார்த்துச் சென்றனர். சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அல்லது கலை அம்சங்களும் கம்போங் செட்டியில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்தான். அப்படியில்லை என்றால் அதைச் சுற்றுலாத்தளமாக அறிவித்ததற்கு என்னதான் காரணம்? மலாக்கா செட்டி எனும் மனிதர்கள் காட்சிப் பொருள் என்ற எண்ணம்மா? காட்சிப் பொருளாக அவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் அவர்களுக்கென்ன லாபம்? இங்கு எனக்கு எழும் கேள்வி என்னவென்றால், ஏமாறுவது, ஏமாந்துகொண்டிருப்பது , யார்? யார்? என்பதே?
ஏமாற்றுவது யார் என்று சிறுபிள்ளை கேள்வி எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது.
நான் கம்போங் செட்டியின் தலைவர் சுப்ரமணியத்திடம் கேட்டேன்...

* அரசு  இந்த இடத்தை சுற்றுலாத்தளமாக அறிவித்திருக்கிறது என்றால் உங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படுகிறதா?
- இல்லை

* மனிதர்களையும் இந்தக் கம்பத்தையும் தவிர, சுற்றுலாப்பயணிகள் பார்ப்பதற்கு இங்கு வேறு ஏதும் சிறப்பு அம்சம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதா?
- இன்னும் இல்லை

இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில், இந்து மதக் கலாச்சார முறைப்படி நம்மை வரவேற்கிறது. இவர்களைப் பற்றிய ஒரு குறிப்பையும் அங்கே அறிமுகக் கல்லாக வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைத் தெரிந்துகொள்ள சிறிய மியூசியமும் உள்ளது. இதுவே அவர்களுக்கு சிறப்பம்சமாகவும் சுற்றுப்பயணிகளுக்குக் காட்சி விஷயமாகவும் உள்ளன. செட்டிப் பெண்கள், வீடுகளில் சாதாரணமாக ‘Baju Kebaya'-வைத்தான் பெண்கள் அணிகிறார்கள். இளம் பெண்களும் அப்படித்தான். மலாக்கா செட்டிகளின் அடையாளமாக அங்கு 11 கோயில்கள் இருக்கின்றன.
அந்தக் கோயில்களில் குறிப்பிட வேண்டியதாக, சிலைகள் நிறுவப்படாத காலகட்டத்தில் கற்களை நிறுத்தி வணங்கிவந்த பழங்காலக் கோயிலை மலாக்கா செட்டிகள் இன்றும் வணங்கி வருகின்றனர். அங்காள பரமேஸ்வரி என்ற அந்த சுண்ணாம்புக் கோயில் பார்ப்பதற்கு கல்லறை போன்று தோற்றம் கொடுக்கிறது. சிலைகள் ‘கோன்' வடிவத்தில் உள்ளன.

மலாக்கா செட்டிகளிடத்தில் என்னைக் கவர்ந்த மற்றொரு விஷயம் அவர்களிடத்தில் கலாச்சார சீரழிவுகள் இல்லை. அதாவது நவீன காலத்தில் பிறப்பு-இறப்பு, பரிசம்-திருமணம், நன்னீறாட்டு விழா என எல்லாம் பணத்திற்கு தகுந்த மாதிரி ஆடம்பரமாகிவிட்டன. சினிமா மோகத்தில் கலாச்சாரமும் பண்பாடும் ‘மார்டர்ன்' என்ற பெயரில் அழகாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மலாக்கா செட்டிகள் பழைய அந்தப் பாரம்பரியத்தை இன்னும் அதன் நிறம் மாறாமல் பின்பற்றுகின்றனர்.

மொழி தொலைத்த அவர்கள், அதை மீட்டெடுக்க மெனக்கெடும் அதே நேரம் மற்ற எந்த விஷயத்திலும் தன்னை சமரசம் செய்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. மலாக்கா செட்டி எனும் உலகம், அழகாக வடிவமைக்கப்பட்டு தன் இயல்பு வாழ்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்மீது கல்லெறிபவர்களை கம்பமே ஒன்றிணைந்து கேள்வி கேட்கிறது. அதற்கு உதாரணம்தான் மலாக்கா செட்டி கிராமம் அருகே 22 மாடிக் கட்டிடம் கட்டவிருந்த விவகாரமாகும்.

நான் கம்போங் செட்டி கம்பத்தை விட்டு வெளியேறுகையில், இரவு தொடங்கி இருந்தது. ஆனால், மலாக்கா செட்டியைப் பற்றிய ஒரு தெளிவு என்னில் ஏற்பட்டிருந்தது. நமது உறவுகள் வேறொரு அடையாளத்துடன் இருந்தால் என்ன? நான் புறப்படும் வேளையில், கையசைத்து, பத்திரமாய் போய்வாருங்கள் என்று வழியனுப்பினர். அதில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.

- தேடல் முடிந்தது...


செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

 யட்சி

நீயே வடிவமைத்த
இந்த உலகத்தில்
நான் நிலமாக இருந்தேன்
என்மேல் நீ
அத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்
அடுத்தடுத்து
நீ உழுத நிலத்தில்
நானே விதையானேன்
பயிரானேன்
அறுவடையானேன்
உனக்கு
உணவானேன்
ஒவ்வொருமுறையும்
விதவிதமான வன்முறைகளை
சந்திக்க வைத்தாய்
வன்முறைகளால் -எனை
பெருநிலமாகவும் மாற்றினாய்
நான்
அப்பெருநிலத்தை
வனமாக்கி
அந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்
ஒரு யட்சியாக

சனி, 14 பிப்ரவரி, 2015

அவனைக் காண்கிறேன்

அந்தரங்கமான
என் உலகத்தில்
பல கனவுகள்
விஸ்வரூபம்
எடுக்கின்றன...
முகம் தெரியாத
யாரோ ஒருவன்
என் படுக்கையறையில்
உறங்கிக்கொண்டிருக்கிறான்
அவன் அழகனில்லை
என் கணவனுமில்லை
அவன் உறங்கும் வேளை
தார்மீகப் பூக்கள்
பூக்கின்றன
மலிகையின் நறுமணம்
வீசுகிறது...
நான் அவனைக் காண்கிறேன்
அவனின் கனவு கலைகின்றது
நான் இன்னும்
உறக்கத்திலேயே  இருக்கிறேன்

(குவார்னிகா, 2013)

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நான் உன்னை பிரிகிறேன்


 என் அன்பே
மூன்றாவது முறையாக
இன்று உன்னை பிரிகிறேன்

பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான
புள்ளியை கொடுக்கலாம்
புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம்
நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி
அழகான படம் வரைந்து காட்டி
அதைக்
காட்சிக்கு வைக்கலாம்
என் அன்பே
ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை
இந்த பிரிவு
அதை எப்போது நீ அறிவாய்?

நீ கொண்டாடும் வான் கோவும், ஆதி மூலமும், காஜா மேனும்
உன் தூரியை எடுத்து
இப்பிரிவை தீட்டப்போவதில்லை

என் அன்பே
நீ அறிவாயா
இந்த மூன்றாவது பிரிவில்
இரு தினங்களுக்கு முன் 
இலையுதிர் காலம் தொடங்கியது
பாதி இலை உதிர்ந்த 
அந்த நிழல் மரத்தில்
அமரும் சாம்பல் நிறப்பறவை 
சொல்லும் செய்தியை
நீ அறிவாயா
என் அன்பே

இன்று
மூன்றாவது முறையாக உன்னை பிரிகிறேன்
என்பதை

சனி, 7 பிப்ரவரி, 2015

மலாக்கா செட்டி எனும் சமூகம் (தேடல் 2)

மலாக்கா செட்டி கம்பத்தில் தமிழ் பெண்கள் 

சென்ற தேடலில்...

மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கினார். 1781-ல் டச்சு அரசாங்கக் கேசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.

‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி' என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துப்பூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில், இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது. 

இனி யோகியின் தேடல்...


நான் மலாக்கா செட்டிகளை நேரில் சந்தித்து விவரம் பெறவும், தகவல்களைத் திரட்டவும் மலாக்கா மாநிலத்திற்கு பயணம் ஆனேன். உண்மையில் மலாக்கா செட்டிகள் வசிக்கும் ‘கப்போங் செட்டி' எனும் கிராமத்தைக் கண்டுபிடிப்பதற்கு சிரமமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஜி.பி.எஸ்-சை முடக்கி விட்டால் நேராக வாசலில் கொண்டுபோய் நிறுத்துகிறது நமது வாகனம். சுமார் 1 மணியளவில் நான்   ‘கப்போங் செட்டி'-யை அடைந்திருந்தபோது தெரு வெறுச்சோடி இருந்தது. பெரும்பான்மையான வீடுகள் சாத்திதான் கிடந்தன. சின்ன தெருதான் ‘கம்போங் செட்டி' கிராமம். ஆனால், 100 செட்டிக் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. வீடுகளை அதிகப்படியாக மலாய்க்காரர்களின் முறைப்படிதான் கட்டியிருக்கின்றனர்.  ஒரு வழியாக  கம்போங் செட்டி-யின் தலைவரைக் கண்டு பிடித்தோம். அவர் பெயர் சுப்ரமணியம். மலாக்கா செட்டிகள் ஒன்றுக் கூடும் அல்லது  கலந்துபேசுவதற்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஒரு பல்நோக்கு மண்டபத்தில் எங்களுக்கு விவரங்களைக் கொடுப்பதற்காக சுப்ரமணியம் அழைத்துச் சென்றார்.
ஜாதிப் பெயர்கள்
மலேசியாவில் ஜாதி பார்ப்பதில்லை, திருமணத்தின்போதுதான் சும்மா ஒரு சம்பரதாயத்திற்காக ஜாதி பார்க்கப்படுகிறது என்றெல்லாம் கதை விடும் நம்மவர்கள் மத்தியில், மலாக்கா செட்டி சமூகம் ஜாதி அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை சுப்ரமணியம்  உறுதிப்படுத்தினார். அந்த விஷயத்தில் அவர்கள் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக அவர் நமக்கு தெளிவுபடுத்தினார். அதற்குச் சான்றாக அந்த மண்டபத்தில் இருந்த ஒரு தகவல் பலகையில்  ஜாதிகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.

கம்பத்து தலைவர் சுப்ரமணியம் 

இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அதாவது இந்தியர்கள் என்றால் ஜாதியைக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கொண்டாடுகிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அவர்கள் பாபா-க்களையும் (சீனர்), மலாய்ச் சமூகத்தினரையும் திருமணம் செய்து புதிய சமூகத்தை உருவாக்கிவிட்ட வேளையில், இந்த ஜாதியை எப்படி வகைப்பிரிக்கிறார்கள் என்று. நான் இதை சுப்ரமணியத்திடமே கேட்டேன்.
சீனர் அல்லது கிறிஸ்துவர் மலாக்கா செட்டியைப் மணம் புரிய விரும்பினால், அவர் கட்டாயம் இந்து மதத்தைத்  தழுவியாக வேண்டிய கட்டாயத்தை மலாக்கா செட்டியினர் ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அந்த மலாக்கா செட்டி எந்த ஜாதியைப் பின்பற்றுகிறாரோ அந்த ஜாதியினராகச் சம்பந்தப்பட்டவர் வரம்பு வரையின்றி மாறிவிடுகிறார். அல்லது அவர்களின் பரம்பரையில் இன்னாரின் ஜாதி அடையாளம் மிச்சமிருந்தாலும் பிரச்னை இல்லை. அவர்கள்  முழுமையாக இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்   என்பதை சுப்ரமணியம் உறுதிப்படுத்தினார்.
கண்ணம்மா 
அதோடு தமது முந்திய பாரம்பரியம் மாதிரி இல்லாமல் புதிய தலைமுறையினர் தமிழ் பேச வேண்டும் என்ற மொழிப்பற்றில் தற்போது மலக்கா செட்டிகள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்புகிறோம். அந்த முயற்சியில் நாங்கள் வெற்றியும் பெற்றிருக்கிறோம். எங்களின் பிள்ளைகள் தமிழ் பேசத் தொடங்கிவிட்டனர் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்று அவர் கூறினார்.
பிறகு நான் கண்ணம்மா என்பவரைச் சந்தித்தேன். அவரின் வீட்டில் அவர் பண்டிகை கால பலகாரங்களைச் செய்துகொண்டிருந்தார். கண்ணம்மாவின் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே இந்தியக் கலாச்சார மணம் வீசியது. கண்ணம்மா பேருக்கு ஏற்ற மாதிரி மரத்தமிழச்சி போல் இருந்தாலும்  அவருக்குத்  தமிழ் தெரியவில்லை.  மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும்  அவர் என்னோடு உரையாடினார்.  அவருக்குப் பிடித்த உடை ‘பாஜு கெபாயா' என்றும் ஒரு முறை  ‘பாஜு கெபாயா' அழகிப் போட்டியில் தான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிண்ணம் வென்றதையும் கண்ணம்மா நினைவுகூர்ந்தார். அவர் வீட்டின் பூஜையறையைக் காட்டினார். எல்லாக் கடவுள்களும் இருந்தனர். இறைவழிபாடு என்னவோ இந்திய மரபுக்கு எந்த மாற்றமும் இல்லாமல்தான் நடந்தது.
தன் முன்னோர்களின்
 புகைப்படங்களுடன் 
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மலாக்கா செட்டிகளின் விசேஷ உணவு என்ன? என்பதைப் பற்றி வினவுகையில் மலாய்க்காரர்கள் செய்யும் ‘ரொட்டி ஜாலா' உள்ளிட்ட மலாய் பாரம்பரிய உணவுகள் உட்பட இந்தியப் பலகாரங்களான  முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம், சிப்பி, ஓமப்பொடி போன்றவற்றையும் அதன் அசல் தன்மை மாறாமல் செய்கிறார்கள்.  தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது,  கோயிலுக்குப் போவதில் எல்லாம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால்,  சில ஜாதிக்காரர்கள் தீபாவளி அன்று புலால் உணவுகளை சேர்ப்பதில்லையாம். அதோடு தீபாவளிக்கு முதல் நாள் மலாக்கா செட்டிகள் இறந்தவர்களுக்காகப் படையல் வைப்பதில்லையாம். அந்த சம்பிரதாயத்தை அவர்கள் பொங்கலுக்குச் செய்கிறார்கள்.
தொடர்ந்து Bapa Nyonyak சமூகத்தின் வழி வந்த மலாக்கா செட்டியான கண்ணனைச் சந்தித்தோம். அழகு தமிழில் வணக்கம் கூறி வரவேற்றார். சீனரின் முக சாயலைக் கொண்டிருக்கும் அவர்களின் குடும்பத்தில் வணக்கத்தைத் தவிர வேறு தமிழ் வார்த்தை தெரியவில்லை. அவர்கள் வீட்டில் பூஜையறையைப் போன்றே இறந்தவர்களுக்காக ஒரு  பூஜைமேடையும் வைத்திருக்கிறார்கள். இறைவனை வழிபடும்போது அவர்களையும் வழிபடுகின்றனர். இது சீனர்களின் மரபாகக் கூட இருக்கலாம். கண்ணனின் பாட்டி சீனர், தாத்தா இந்தியாவிலிருந்த வந்த தமிழர். ஆனால், இவர்கள் 100 சதவிகிதம் பின்பற்றுவது இந்திய கலாச்சாரத்தைத்தான்.
பூஜை மேடை
மலக்கா செட்டிகள் பொங்கல் பண்டிகையை இந்தியர்கள் கலாச்சாரப்படி கொண்டாடினாலும், அவர்களுக்கென சில மரபுகளையும் வைத்திருக்கிறார்கள். பொங்கலை இந்தியர்கள் விவசாயப் பண்டிகையாகக் கொண்டாடும் வேளையில்,  இவர்கள் 7 தலைமுறைக்குச் சேர்த்து 7 தலைவாழை  இலையிட்டு படையல் வைக்கிறார்கள். அந்தப் படையலில் அனைத்து வகையான உணவையும், பழங்களையும், பானங்களையும் படைக்கிறார்கள்.  சொல்லப்போனால்,  முதன்மையாக மூதாதையர்களை  வணங்கும் நாளாகவே  அவர்கள் பொங்கல் திருநாளை எண்ணுகிறார்கள் என்றே படுகிறது.

மலாக்கா செட்டிகள் கொண்டாடும் போகிபரச்சு, பொங்கல், கனிப்பரச்சு, சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி ஆகிய ஆறு பண்டிகைகளை முதன்மைப் பண்டிகைகளாகக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

ரொட்டி ஜாலா
மலாக்கா செட்டிகள் கனிவாகப் பேசுவது மட்டுமல்ல, அன்பாகப்  பழகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். காலத்திற்குத் தகுந்த மாதிரி முழுவதுமாக தங்களை நவீனத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் பாரம்பரியத்தையும் வழிவழிவந்த மலாக்கா செட்டி மரபையும் காப்பாற்றுகிறார்கள்.
 குறிப்பாக அவர்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களை நவீனப்படுத்தி கொள்ளவே இல்லை. வள்ளி, கந்தன், முத்து, மாரி போன்ற பெயர்களைத்தான் இப்போதும் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.

(தேடல் தொடரும் )

புதன், 4 பிப்ரவரி, 2015

ரகசிய வேட்டை

இரவும் பகலும் இல்லாப் பொழுதில்
என் கன்னத்தை வருடிச் சென்றாய்
இதுவரை
பகிராத ரகசியம் அது
தேனீர் பருகச் சென்றோம்
கைகோர்த்துக்கொண்டோம்
தழுவி விடைபெற்றோம்
எல்லாம்
ரகசியமாகத்தான் நிகழ்ந்தது
என் அன்பே!
நிகழ்ந்த ரகசியங்கள் ஒரு கனவு
அந்த கனவுக்குள்
நமது பிரச்னைகள் குறித்து பேசினாய்
ஆனால்,
பிரிவைப்பற்றி பேசவில்லை
தெளிவில்லாத
என் எண்ணங்களை நீ பட்டியலிட்டபோது
அறிந்திருந்தாயா
விஷக்காளான்கள் தன் குடையை விரித்திருந்ததை
வானம் வெளுத்த அந்த இரவில்
யட்சியைப் போல தேடிவந்தேன்
நீ அறிவாய்
மௌனமாய் எனை வதைக்கவும் செய்தாய்
என் அன்பே!
அன்றுதான் என்னை முழுமையாக உணர்ந்தேன்
நான் மிக ரகசியமானவள்

மலாக்கா செட்டி எனும் சமூகம் (தேடல் 1)கூலித் தொழிலாளர்களாக இந்த மலேசிய மண்ணுக்குப் புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மலேசிய இந்தியர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி  என கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், அனைவரும் இந்தியர்கள் என்ற ரீதியில் ஒன்றாகத்தான் அறியப்படுகிறார்கள்.
ஆனால், இவர்களில் எப்போதும் யாருடனும் அடையாளப்படுத்தப்படாமல் தனித்த அடையாளத்தைக் கொண்டவர்கள்தான் மலாக்கா செட்டிகள். யார் அந்த மலாக்கா செட்டிகள்? அவர்கள் இந்தியர்களா? பிறகு ஏன் அவர்களுக்கு இந்திய மொழி  எதுவும் தெரியவில்லை? ஏன் அவர்கள் மலாய் மொழியில் பேசுகிறார்கள்? ஏன்  மலாய் உடையை தங்களின் கலாச்சார உடை எனக் கொண்டிருக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் மலேசியர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.

மலாக்கா செட்டியின் வரலாறு (காலச்சுவடு சிற்றிதழில்  சை.பீர் முகமது இவ்வாறு பதிவு செய்துள்ளார்)
மலாக்கா மாநிலம் வரலாற்று மாநிலமாக மலேசியாவில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலம் 14-ஆம் நூற்றாண்டிலேயே மிக முக்கியமான துறைமுகமாக இருந்து வந்திருகிறது.  ஐரோப்பிய - ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.

கலிங்கப்பட்டணத்திலிருந்தும், ஏனையத் தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள், ‘மலாக்கா செட்டி' (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி' என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
14ஆம் நூற்றாண்டில் சுமத்ராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங் (Palembang)- கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தாமாசெக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.

சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.
1414-இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஷா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.

பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஷா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப்பொருள்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.
வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர, மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக்கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால், சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.
அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.

போர்த்துக்கீசியர்கள் (1511 - 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை. போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வசித்து வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள், தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.

வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ - இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்' என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா' (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.

மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கினார். 1781-ல் டச்சு அரசாங்கக் கேசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.
(தேடல் தொடரும் )