செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

இது மேற்கத்திய ஆரம்பமாக இருந்தாலும் தமிழுக்கும் வர வேண்டிய சிந்தனை


தமிழ் இலக்கிய உலகில் தமிழவன் குறிப்பிடத்தக்க படைப்பாளி. தமிழ் சமூகத்துக்கு அமைப்பியல் தத்துவத்தை தெளிவு படுத்தியவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர் என்று அவரின் ஆளுமைகள் நீள்கிறது. இவரது அமைப்பியல் (structuralism) என்ற நூல் இந்திய சிறு சிறுபத்திரிகைச் சூழலில் வரவேற்கப் பட்டிருக்கிறது. எழுத்து, கசட தபற, க போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கும் இவர், தற்காலத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவர். பெங்களுர் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம் திராவிடப் பல்கலைக்கழகம், போலந்து வார்ஸா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர். ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்', ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்', ஜி.கே எழுதிய மர்மநாவல்', ‘வார்ஸாவில் ஒரு கடவுள்' ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள். தமிழ் தேசியத்தின் மீதும், தமிழ்நாட்டு அரசியலின் மீதும் எப்போதும் பலகோணங்களிலான விமர்சனங்களை உடையவரான இவர், அண்மையில் மலேசியாவுக்கு வல்லினம் இலக்கிய குழு ஏற்பாடு செய்திருந்த ‘அமைப்பியல்' என்ற பட்டறையை நடத்துவதற்காக வந்திருந்தார்.  ‘நம் நாடு' பத்திரிக்கையின் வழி அவரிடம் சிறப்பு நேர்காணலை செய்தேன்.

யோகி : இது உங்களுக்கு எத்தனையாவது மலேசியப் பயணம்?
- இது எனக்கு இரண்டாவது மலேசியப் பயணம். போன வருடம் சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவுக்கு அழைப்பிதழின் பேரில் கலந்துகொண்ட போது மலேசியாவுக்கு சிறு பயணம் வந்தேன். இப்போது மலேசியாவில் தீவிரமாய் இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருந்த சிலரை அடையாளம் காண முடிந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது அமைப்பியல் பட்டறையை நடத்துவதற்காக வந்துள்ளேன்.

யோகி : அமைப்பியல் என்றால் என்ன?
- மொழியின் விதியை பின்பற்றிதான் நம்முடைய அமைப்பும் சமூகமும் இயங்குகின்றன. மொழியியல் ஆராய்ச்சியின் முன்னோடி ஃபெர்டினெண்ட் தெ சசூர் ஆகும். இவர் பிரஞ்சு பேசும் ஸ்விஸ் நாட்டுக்காரர். அவரைத்தொடர்ந்து 1982-ல் அமைப்பியல் பிரச்சாரம் தமிழ்நாடெங்கும் பரவியது. இந்திய இலக்கியத்தில் அமைப்பியலும் பின்னமைப்பியலும் செயல்படும் விதம் பல ஆராய்ச்சிக்குப் பிறகு நிரூபிக்கப்பட்டது. அதன் படி சங்க இலக்கியங்களும் அமைப்பியல் கோட்பாட்டின்படி நவீனப்படுத்தப்பட்டு புது பாணியில் வாசிப்புக்குக் கொடுக்கலாம் என்று அறியமுடிந்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகளும் இருந்தன. இருந்தும் வருகின்றன. இது மேற்கத்திய ஆரம்பமாக இருந்தாலும் தமிழுக்கும் வர வேண்டிய சிந்தனை.


யோகி : ஒரு எழுத்தாளன் நாவல் எழுதுவதற்கான அடிப்படை எது?
- அனுபவம்தான். மொழி சரித்திர வடிவங்களை சொல்வதற்கு நான் விரும்புகிறேன். மாய, எதார்த்தவாத பாணியில் எழுத வேண்டும். புனைவுகள் இருக்கலாம். கற்பனைகளில் இதுவும் சாத்தியமே.

யோகி : நீங்கள் இறுதியாக எழுதிய ‘வார்ஸாவில் ஒரு கடவுள்'(2008) என்ற நாவல் புனைவுகளால் ஆனது. அது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டது?
- அந்த நாவல் போலந்து வார்ஸாவைக் களமாகக் கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின் கதைச்சொல்லாக இருந்து வார்ஸா வாழ் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டது. அதற்குப் பல வகையான பல மாதிரியான விமர்சனங்கள் வந்தன.

யோகி : சல்மான் ருஷ்டி, அருந்ததிராய் போன்றவர்களின் மீது தொடர்ந்து வைக்கப்படும்
விமர்சனங்களை நீங்கள் இப்படி பார்க்கிறீர்கள்?
- சல்மான் ருஷ்டி எழுதிய ‘சாத்தானின் செய்யுள்கள்' என்ற நாவலில்தான் அவர் மீது மிகப்பெரிய விமர்சனம் எழுந்தது. முஸ்லிம்கள் அந்த படைப்பை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டார். அந்த நாவல் கற்பனையால் புனையப்பட்டதென்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மேற்கத்திய உலகம் அவருக்கு ஆதரவாகவே உள்ளது. அருந்ததிராயின் புக்கர் பரிசு பெற்ற நாவல் தற்போதுதான் ஜெர்மன் நாவலின் தழுவல் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் படைப்பாளிகள் என்று பார்க்கும் போது அவர்களின் படைப்புகளை நான் ஆதரிக்கிறேன். அவை சிறந்த படைப்புகள் தாம்.

யோகி : ஒரு எழுத்தாளன் அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயமா?
- ஏன் ஈடுபடக்கூடாது. அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் அவனின் படைப்பில் அரசியல் பிரச்சாரம் செய்தால் அந்த படைப்பு தோற்றுப் போவதுடன் எழுத்தாளனும் தோற்றுப்போவான்.


யோகி : தற்கால தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது?
- தற்கால தமிழ் இலக்கியம் சோதனைக்கு உட்பட்டு இருக்கிறது. இது பாராட்டுக்குரிய விஷயம். இலக்கியத்துக்கு ஏற்படும் சோதனைகளும் துடிப்போடு செயல்படுகின்றன. இது எதைக் குறிக்கிறது என்றால் சமூகம் மாறுபடுவதைக் குறிக்கிறது. ஜெய காந்தனின் அக்னி பிரவேசம் வந்த பொழுது இந்த சமூகம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. அதே நாவல்  இப்போது ஏற்றுக்கொள்ளப் படுகிறது.ஆகவே சமூகம் மாறுபடாமல் ஒரு மாற்றமும் நிகழாது.


யோகி : பெண் இலக்கியம் பற்றிய காட்டமான விமர்சனங்களை இன்றும் பெண்கள் எதிர்நோக்குகின்றனர். உங்களின் விமர்சனம் என்ன?
- நான் அவர்களை ஆதரிக்கிறேன். அவர்களின் கவிதைகள் பாராட்டுக்குரியதுதான். முதிர்ச்சி இல்லாத இளைஞர்கள்தான் இதுமாதிரியான விமர்சனங்களை முன்வைத்துப் பேசுகின்றனர்.


யோகி :  மலேசிய இலக்கியத் துறையை கொஞ்சம் விமர்சனம் செய்யுங்கள்?
- கடந்த ஐந்து ஆண்டுகாலமாக மலேசியாவில் தீவிர இலக்கியமே இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு அறிமுகம் செய்த படைப்புகள் ஆரோக்கியமானதாக இல்லை. ஆனால் அதன் பிறகு சில நண்பர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட மலேசிய இலக்கியம் பிரமிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக மகாத்மனின் சிறுகதைகள் மலேசிய தமிழர்களைப் பற்றி பேசுகிறது. நான் பிரமித்துப் போன படைப்பு இது. இவரைப் போல இன்னும் சிலரையும் அடையாளம் கண்டுள்ளேன். ஆதலால்தான் மலேசியப் படைப்புகளின் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்தியாவில் நடத்தும் ‘சிற்றேடு' என்ற சிற்றேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

அமைப்பியல் பயிற்சியில் கலந்துக் கொண்ட
மாணவர்களுடன் வல்லினம் குழுவினரும், தமிழவனும்

யோகி :  மொழியியலுக்கும் அமைப்பியலுக்கும் உள்ள வித்தியாசம் அல்லது வேறுபாடு என்ன? 
- 20-ஆம் நூற்றாண்டில் மொழி விஞ்ஞானம் ஒரு முக்கியமான துறையாக கருதப்படுகிறது. சமுதாயத்தில் மானுடவியல் விஞ்ஞானத் தன்மை இல்லை என்ற போது மொழியியலை அறிமுகப் படுத்தினர். அதிலிருந்து கட்டவிழ்க்கும் போது அமைப்பியல் பிறக்கிறது.

யோகி : கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தீர்ந்தபாடில்லையே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
- நான் பெங்களுரில் வசித்தாலும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். எப்படி யோசித்தாலும் அது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றுதான். சுமார் 17,000 கோடி செலவு செய்து அது நிர்மாணிக்கப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும், போராட்டம் நடத்துபவர்களும் சாதாரண ஏழை மக்களும் மீனவ மக்களும்தான். அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ் போன்ற எந்தக் கட்சி அமைப்புகளும் அவர்களுக்கு உதவ வில்லை. ஆனால் அவர்களுக்காக காந்தியவாதியான சுப.உதயகுமார் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து போராட வேண்டியிருக்கிறது. இதுதான் இந்திய அரசாங்கம் ஏழை பொது மக்களின் மீது வைத்திருக்கும் பாசம்.

(தமிழவன் பழகுவதற்கு மிகவும் எளிமையான அன்பான மனிதர். அவர் மலேசியாவிற்கு வந்திருந்த இருமுறையும் அவரை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிகம் எதிலும் அலட்டிக்கொள்ளாதவர். எது குறித்து பேசினாலும் அவரிடம் ஒரு நிதானமும் தெளிவும்  இருந்தது. அமைப்பியல் பயிற்சியையும் அவர் திறன்பட வழிநடத்தினார் என்பது குறிப்பிடதக்கது)

(அக்டோபர் 2012)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக