புதன், 4 பிப்ரவரி, 2015

மலாக்கா செட்டி எனும் சமூகம் (தேடல் 1)



கூலித் தொழிலாளர்களாக இந்த மலேசிய மண்ணுக்குப் புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மலேசிய இந்தியர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி  என கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், அனைவரும் இந்தியர்கள் என்ற ரீதியில் ஒன்றாகத்தான் அறியப்படுகிறார்கள்.
ஆனால், இவர்களில் எப்போதும் யாருடனும் அடையாளப்படுத்தப்படாமல் தனித்த அடையாளத்தைக் கொண்டவர்கள்தான் மலாக்கா செட்டிகள். யார் அந்த மலாக்கா செட்டிகள்? அவர்கள் இந்தியர்களா? பிறகு ஏன் அவர்களுக்கு இந்திய மொழி  எதுவும் தெரியவில்லை? ஏன் அவர்கள் மலாய் மொழியில் பேசுகிறார்கள்? ஏன்  மலாய் உடையை தங்களின் கலாச்சார உடை எனக் கொண்டிருக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் மலேசியர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.

மலாக்கா செட்டியின் வரலாறு (காலச்சுவடு சிற்றிதழில்  சை.பீர் முகமது இவ்வாறு பதிவு செய்துள்ளார்)
மலாக்கா மாநிலம் வரலாற்று மாநிலமாக மலேசியாவில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலம் 14-ஆம் நூற்றாண்டிலேயே மிக முக்கியமான துறைமுகமாக இருந்து வந்திருகிறது.  ஐரோப்பிய - ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.

கலிங்கப்பட்டணத்திலிருந்தும், ஏனையத் தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள், ‘மலாக்கா செட்டி' (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி' என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
14ஆம் நூற்றாண்டில் சுமத்ராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங் (Palembang)- கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தாமாசெக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.

சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.
1414-இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஷா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.

பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஷா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப்பொருள்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.
வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர, மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக்கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால், சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.
அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.

போர்த்துக்கீசியர்கள் (1511 - 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை. போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வசித்து வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள், தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.

வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ - இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்' என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா' (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.

மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கினார். 1781-ல் டச்சு அரசாங்கக் கேசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.
(தேடல் தொடரும் )






1 கருத்து: