புதன், 24 ஆகஸ்ட், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 4

திதின் அம்பிகை

ஜோக்ஜகார்த்தாவில்  நான் பார்த்த மனிதர்கள் மலேசிய மலாய்க்காரர்களைவிட வேறுபட்டிருந்தனர். வேறுபட்டிருந்தனர் என்பதை அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் கூறும் வேற்றுமை உருவத்தில், உணவில், பழக்கவழக்கத்தில், மட்டுமல்ல தமது மதத்திலும் அவர்கள் அத்தனை பிடிப்பானவர்கள் அல்ல என்பதைக் காணமுடிந்தது. ஒரு வேளை என் புரிதல் தவறாகக்கூட இருக்கலாம். 12 பொழுதுகளை வைத்து பெரிதாக எதையும் கூறிவிடமுடியாதுதான்.

ஜோக்ஜகார்த்தாவில் நான் சென்ற எல்லா இடங்களில் செராய்-இஞ்சிக் கலந்த பானத்தைப் பருகக் கொடுத்தார்கள். அந்தத் தண்ணீர் எனக்குச் சற்றும் பழக்கமில்லாவிட்டாலும், முதல் தடவை சற்றுச் சிரமப்பட்டுக் குடித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அந்தத் தண்ணீரை குடித்தே ஆக வேண்டிய சூழல் நேர்ந்ததால் அதைக் குடிப்பதற்குப் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன்.

 இந்த மாதிரி எந்தவித பூர்வீக பானத்தையும் மலாய்க்காரர்கள் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை. மேலும் வெகுவிரைவாக மேற்கத்திய பாணியை அவர்கள் பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது. கோடுக்கப்பட்ட அந்த பானம் சற்று நேரத்தில் நம்மை சோர்விலிருந்து உற்சாகம் படுத்துவதை உணரலாம்.  முகம் துடைக்க ஐஸ்பெட்டியிலிருந்து வைத்து எடுக்கப்பட்ட  கைதுண்டை கொடுக்கிறார்கள்.  முகம் மட்டும் அல்ல உள்ளமும் குளிர்ந்துவிடுகிறது. 

2013-ஆம் ஆண்டின் மூன்று நாள் பயணத்தில், நான் ஜோக்ஜகார்த்தா சென்றடைந்ததிலிருந்து, மறுபடியும் ஜோக்ஜகார்த்தா விமான நிலையத்திற்கு வரும் வரை என்னுடன் இருந்தவள், எங்களின் வழிக்காட்டியான திதின் எனும் இந்தோனேசிய பெண். ஜோக்ஜகார்த்தா பெண்கள் பாத்தவரைக்கும் அழகிகளாக இருந்தனர். அவர்களிடம் அந்த மண்ணின் மனம் கலந்து வீசியது. என்னதான் அங்கும் நவீனம் நுழைந்து விட்டாலும் அதில் அவர்களின் கலாச்சாரத்தைச் சரிபாதி கலந்துதான் வைத்திருந்தனர்.

ஆனால் திதின் ஒரு பேரழகி அல்ல. குள்ளமானவள். பற்கள் சற்று எடுப்பாக இருந்தது. ஆனால் அவளிடம் அந்த மண்ணுக்குண்டான பாரம்பரியம் இருந்தது. போரோபுடூர், பிரம்மனன் போன்ற 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டு கலைகோயில்களின் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் எனும் பெருமையும் கர்வமும் அவளின் பேச்சிலும், எங்களிடம் அதனைப் பற்றி விளக்கம் கொடுக்கும்போதும் தெரிந்தது. ஆனால் திதினிடம் ஓர் இனிமையான குணமும் இருந்தது. அதை அவளிடம் பழகுபவர்களால் உணர முடிந்தது. அவள் என் வயதை ஒத்தவளாக இருந்தபடியால் எங்கள் இருவருக்கும் பலவிஷயங்கள் ஒத்துப்போனது.

நாங்கள் இருநாடுகளுக்குண்டான பல விஷயங்கள் குறித்துப் பரிமாறிக்கொண்டோம். மலேசியாவில் வியாழன் கிழமை மட்டும் கட்டாயம் அரசு துரையைச் சார்ந்தவர்கள் பாத்தேக் துணியிலான ஆடையை அணிய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் அங்குத் தினமும் பாத்தேக் துணியைத்தான் அணிகிறார்கள். அது நவீன உடையாக இருந்தாலும் கட்டாயம் பாத்தேக் வகையிலான துணியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி நானும் திதினும் வெகுநேரம் சிலாகித்துக்கொண்டிருந்தோம். அவள் ஆங்கிலம் சரளமாகப் பேசினாள். ஆனால் ஆங்கில மொழிக்கு அவளின் நாக்கு பழக்கப்படவில்லை என்பது தெரிந்தது.

எங்கள் ஜோக்ஜகார்த்தா மற்ற மாநிலங்களைவிட மிகவும் சிறந்தது. அங்கு 134 பல்கலைக்கழகங்களும் 400-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கூடங்களும் இருக்கிறது. கல்விக்குப் பேர்போன மாநிலம் எங்களின் மாநிலம்என்றாள். அந்தப் பெருமையில் கொஞ்சம், தமிழர்களுக்கே உண்டான ஆணவம் தெரிந்தது. (தமிழர்கள் என்றால் ஆணவமா? என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி எழுப்பினால், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் கூறும் ஆணவம் தமிழன் என்று கூறும்போது ஏற்படும் கம்பீரத்தை)
நான் கேட்டேன், “ திதின் இங்கு, நான் காண்பவர்கள் அனைவரும் இந்தோனேசியர்களாக இருக்கிறார்களே? இந்தியாவிலிருந்து வந்து வாழும் தமிழர்கள் இங்கு இல்லையா?”

இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகப்படியாகப் பாலியில்தான் வசிக்கிறார்கள். இங்கே மிகவும் குறைவு. ஆனால் இந்து மதத்தைத் தழுவிய இந்தோனேசியர், அவர்களின் பரம்பரைகள் என நிறையபேர் ஜோக்ஜகார்த்தாவில் இருக்கிறார்கள்என்றாள்.
கொஞ்ச நேரம் மௌனித்த திதின் பிறகு பேசினாள், “ நானே ஓர் இந்துதான். சமீபத்தில்தான் நான் இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டேன்என்றாள். “உன் பெயர் என்ன?
திதின்
இஸ்லாம்  தழுவுவதற்கு  முன்பும்- பிறகும் இருந்த பெயர்கள் என்ன?”
“எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பும் பின்பும் என்று பெயர்கள் மாற்றுவதில்லை. நாங்கள் பிறக்கும் போது, இருக்கும் மதத்தைக் கொண்டுதான் எங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள். பிறகு நாங்கள் மதம் மாறினாலும் அதே பெயரோடுதான் இருக்கிறோம். பெயர் எங்களின் அடையாளமாகிறது. மதம் மாறியதற்காக நாங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில்லை”  என்றாள் திதின்.

 “நீ ஏன் மதம் மாறினாய்?” என்றேன். காதல் திருமணத்தில் மதம்மாற வேண்டிய சூல்நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவள் கூறினாள். அப்படி என்றால் உனது முழுப்பெயர் என்ன என்றேன். அவள் சிரித்துக்கொண்டு திதின் அம்பிகை என்றாள். கோயிலுக்குப் போவாயா என்று எனது குழந்தைத்தனமான கேள்வி முடிய, அவளுக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அதில் ஐகிரி நந்தினி நந்தித மேதினிஎன்று மஹிஷாசுர மர்த்தினி மந்திரம் ஒலித்தது. நான் மீண்டும் எனது கேள்விகளை அவளிடம் கேட்கவில்லை.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 3

ராத்து போகோ கோயில் ராத்து போகோ சண்டியும் இந்திய கோயில்களின் வடிவமைப்பு சாயல் இருந்தாலும் அது இஸ்லாமிய வரலாற்று கதையைப் பேசக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சண்டியின் வாயில் மட்டுமே ஒரு மேடை போல மிஞ்சியிருக்கிறது. இரவில் உணவுக்குப் பின் அந்தச் சண்டியைக் குறித்த வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டுகிறார்கள். ராமாயணம், மகா பாரதம் ஆகிய புராணக் கதைகளை நம்பும் அளவுக்கு இந்தக் கதையையும் நம்புகிறார்கள் ஜோக் ஜகார்த்தா மக்கள்.  அதுவும் ஒரு சுவாரஸ்யமான ஒரு கதைதான்.

மத்திய ஜாவா தீவில் ‘wonosegoro’ என்ற அரசும் ‘pengging’ என்ற அரசும் இருந்தன. ‘wonosegoro’ - வை ஆட்சி செய்தவன் போகோ மன்னன். ‘pengging’ –கை ஆட்சி செய்தவன் பிரபு டமார்மாயோ என்பவன். இவனின் மனைவி தேவி சந்ராவதி.  பேரழகி அவள். அந்த அழகியின் மேல் பிரபு போகோ ஆசைகொள்கிறான். அதை அறிந்த பிரபு டமார்மாயோ, போகோ சாம்ராஜியத்தின் மீது போர் தொடுக்கிறான். அதில் டமார்மாயோ மன்னன் கொல்லப்படுகிறார். தன் கணவன் கொல்லப்படுவதை ராணி சந்ராவதியும் மகனும் இளவரசனுமான போண்டோவோசோவும் பார்த்துவிடுகிறார்கள்.
தன் கணவனைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தன் மகனிடம் ராணி சந்ராவதி வாக்கு பெறுகிறாள். அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற போண்டோவோசோ மாயவித்தைகளையும் போர்க் கலைகளையும் பயின்று அதில் வல்லவனாகிறான். பிறகு சமயம் பார்த்து போக்கோ மன்னனை கொன்று விடுகிறான்.

அதே வேளையில் போக்கோ மன்னனின் மகள் ரோரோ ஜொங்ராங் மீது போண்டோவோசோ இளவரசன் காதல் வயப்படுகிறான். ஆனால், தனது தந்தையைக் கொன்றவனின் காதலை அவள் நிராகரிக்கிறாள். அந்தக் கால நியதிப்படி போரில் தோல்வியடைந்த மன்னர்களின் அனைத்துச் சொத்துக்களும் வெற்றிபெற்ற மன்னருக்கே சொந்தமாகும். அதன்படி இளவரசி ஏற்கனவே இளவரசன் போண்டோவோசோவிற்குச் சொந்தமானவளாகிறாள்.

அவனின் காதலை நேரடியாக மறுக்க முடியாத நிலையில் அவனது விருப்பத்திற்கு எப்படியாவது தடை போட வேண்டும் என்று சிந்திக்கிறாள். இறுதியாக இளவரசன் போண்டோவோசோவுக்கு ஒரு நிபந்தனையை விதிக்கிறாள்.

ஒரே இரவில் 1,000 சண்டிகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. போண்டோவோசோ இளவரசன் அந்த நிபந்தனையை ஏற்றுப் பூதங்களின் உதவியுடன் 999 சண்டிகளைக் கட்டி முடித்திருந்தான். ஆயிரமாவது சண்டியை கட்டுவதற்குத் துவங்கிய வேளையில் இளவரசி சூழ்ச்சி வலையைப் பின்னுகிறாள். தன் அரண்மனை பணிப்பெண்களைத் திரட்டி கிழக்குத் திசையில் சென்று பெரிய அளவில் தீயை மூட்டச் சொல்கிறாள். மேலும், விடியலை வரவேற்கும் பொருட்டுத் தங்கள் வீட்டு உரல்களில் அரிசியைக் குத்த சொல்கிறாள். பொழுது புலரும் போது நெல் குத்தி அன்றைக்கான உணவை சமைப்பதுதான் அந்தச் சாம்ராஜ மக்களின் வழக்கமாகும்.

கிழக்குத் திசையில் வெளிச்சத்தையும் நெல் குத்தும் ஓசையையும் கேட்ட காக்கைகள் பொழுது புலர்ந்துவிட்டது என்று கருதி கரைய ஆரம்பித்தன. இதனால் குழப்பமடைந்த பூதங்கள் விடிந்துவிட்டது என்று கருதி இறுதி சண்டி முடிவடையும் முன்பே போய்விடுகின்றன. இளவரசியின் இந்தச் சூழ்ச்சியை அறிந்துகொண்ட இளவரசன் “கடைசிச் சண்டியின் மூலக்கல்லாகப் போய்விடு” என்று இளவரசிக்குச் சாபம் கொடுக்கிறான். அவளும் கற்சிலையாக மாறிவிடுகிறாள்.

அந்தச் சிலைதான் பிராம்பனான் கோயிலின் ஒரு பகுதியில் இருக்கும் மகிசாசுரமர்த்தினியாக வீற்றிருப்பதாக ஜோக்ஜகார்த்தா மக்களில் சிலர் நம்புகிறார்கள். மேலும், ஜோக் ஜகார்த்தா முழுதும் இருக்கும் பல சண்டிகள் போண்டோவோசோ இளவரசனின் கட்டளையின் பேரில் பூதங்கள் கட்டியவைதான் என்றும் கூறுபவர்கள் உண்டு. அதனால்தான் இந்தக் கோயில்கள் அனைத்தும் அடங்கிய பகுதியை, ‘சண்டி ரோரோ ஜொங்கராங்’ என்று அழைக்கப்படுவதாகவும் ஜோக் ஜகார்த்தா மக்கள் நம்புகிறார்கள்.


உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 2 Prambanan Temple

பிரம்பனான் கோயில் 
தென்கிழக்காசியாவிலேயே பெரிய கோயில் என வர்ணிக்கப்படுகிறது பிராம்பனான் என்று சொல்லக்கூடிய மும்மூர்த்திகள் கோயில். அந்தக் கோயிலை கட்டியது யார் என்ற உறுதிபூர்வமான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. ஆனால், ஜாவா தீவின் மற்ற பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகள் அக்கோயில் கி.பி. எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் ஆண்ட மாத்தாராம் (Mataram) பேரரசை சேர்ந்த இந்து மன்னன் ராக்கை பிகாதன் என்பவரால் அல்லது சஞ்சய பேரரசை ஆண்ட இந்து மன்னன் பாலிதுங் மகா சம்பு என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆரூடம் கூறப்படுகிறது.
ஜாவா தீவில் கிடைத்திருக்கும் பல கல்வெட்டுகளில் பிராம்பனான் கோயில் குறித்துப் பேசப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்டிருக்கும் தகவலின் படி இந்தக் கோயில் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பேரரசுகள் வீழ்ச்சியைக் கண்டு விட்டன என்பதைத் தெரிவிக்கிறது. பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு அக்கோயிலைச்சுற்றி வாழ்ந்த மக்கள் மற்ற இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றனர்.

அங்கு ஏற்பட்ட அடுத்தடுத்த இயற்கை பேரழிவுகள் கூட மக்களின் இடமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. அதன் பிறகு பல நூற்றாண்டுகள் இக்கோயில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்குள் மறைந்திருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் அதாவது 1733-ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் ஆட்சி காலத்தில் இப்பகுதியை ஆராய்ச்சி செய்து வந்த ஏ லோன்ஸ் என்ற டச்சுக்காரர் முற்றிலும் சிதைவடைந்து புதர் மண்டியிருந்த திருமூர்த்திக் கோயிலை (பிராம்பனான்) கண்டு பிடித்து உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு, 1885-ஆம் ஆண்டு இந்தக் கோயிலை சீரமைக்கும் வேலையில் லைசர்மேன் என்பவர் ஈடுபட்டார்.1902-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு வேலைகள் வேன் எர்ட் என்பவரின் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையில் இயற்கை பேரிடரால் கோயிலின் பல பாகங்கள் சிதறிப் போயின. மீதமிருந்த எச்சங்களைப் பெரும் உழைப்புக்கிடையில் சீர்படுத்திக் கோயிலின் முக்கியப் பகுதிகளை மீட்டு அடுத்தத் தலைமுறையிடம் சேர்த்திருக்கிறது இந்தோனேசிய அரசு. கோயில் கட்டுமானம் ஒரு puzzle போல் உதிர்ந்தபோதிலும் இந்தோனேசிய அரசுடன் யுனேஸ்கோவும் இணைந்து அயராத முயற்சியினால் உருவம் கொடுத்து, சீரமைக்கப்பட்ட கோயிலின் முதல் பகுதியை 1953-ஆம் ஆண்டும் அடுத்தப்பகுதியை 1991-ஆம் ஆண்டும் திறந்துவைத்தது.

உலக மக்களின் வரவேற்பை பெற்றுவந்த அந்தக் சண்டிகளை (கோயில்களை) 2004 ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் சக்தி மிகு பூகம்பங்கள் உலுக்கின. அதில் கோயில் அடையாளம் தெரியாத அளவுக்கு உதிர்ந்து போனது. அதன் பிறகு கோயிலை சீரமைக்கத் தொடங்கிய பணி இன்றுமுதல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பற்பலமுறை கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாக இருந்தாலும் பார்வைக்கு அவ்வாறு தெரியவில்லை. 75% எஞ்சிய பாகங்களைச் சேர்த்து கோயிலுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.

கற்பாறைகளை அடுக்கும்போது அவை உறுதியாக இருக்க இந்தோனேசியர்கள் பயன்படுத்தும் யுக்தி விஷேசமானது. களிமண்ணோடு முட்டையில் வெள்ளைக் கருவை சேர்த்து பசைபோலச் செய்து ஒட்டுகிறார்கள். முழுவதும் கிடைக்காத கோயிலின் எஞ்சிய பகுதிகள் அல்லது puzzle-லில் சேராத பாகங்கள், கோயில் முன் குவிந்திருக்கின்றன. மீந்திருக்கும் கோயிலின் மிச்சமே இவ்வளவு பிரமாண்டத்தைக் கொடுக்கிறது என்றால் கோயிலின் அசல் உருவம் கற்பனைக்கூடச் செய்து பார்க்க முடியவில்லை எனக்கு.இந்தப் பிராம்பனான் கோயிலின் தினிச்சிறப்பு என்று சில விஷயங்களைச் சொல்கின்றனர்.
-முக்கடவுளர்களுக்கும் தனித்தனி சன்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
-சிவபெருமான் சன்நிதியில் சிவனுக்கு மனித உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்குகள் கொண்டதாகப் பிராம்பனான் கோயில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கோயிலின் வரைபடம் கூறுகிறது. முதல் அடுக்கு முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் வெறும் கருங்கற்கள் குவியலாகவே உள்ளன. இரண்டாம் அடுக்கில் மொத்தம் 246 சிறிய அளவிலான கோயில்கள் இருந்திருக்கின்றன. இதில் பெரும்பகுதி அழிந்துவிட்ட நிலையில் சில கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
மூன்றாவது அடுக்குதான் கோயிலின் மையப் பகுதி. இந்தப் பகுதியில்தான் இப்போது பார்க்கும் 8 கோயில்கள் இருக்கின்றன. சிவன் சன்நிதி வடக்கு திசையிலும், பெருமாள் சன்நிதி தெற்கு திசையிலும், பிரம்மாவின் சன்நிதி மேற்கு திசையிலும் அமைந்துள்ளது. அச்சன்நிதிகளில் மும்மூர்த்திகளுக்குப் பிரமாண்ட அளவில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மும்மூர்த்திகளின் சன்நிதிகளின் வாயில்களை நோக்கியபடி இவர்களின் வாகனங்களுக்கான கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இறைவன்களின் வாகனத்திற்குத் தனிக் கோயில்கள் வேறு எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிவன் கோயிலை நோக்கியபடி நந்திக்கும் , பெருமாளை நோக்கியபடி கருடனுக்கும், பிரம்மா கோயிலை நோக்கியபடி அன்னத்திற்கும் கோயில்கள் உள்ளன. ஆனால், நந்தியுடைய சிலை மட்டுமே கொஞ்சம் சேதமடைந்து இருக்கிறது. மற்ற இரண்டு வாகனங்களின் உருவச் சிலைகள் இல்லை. வெறும் கோயிலில் பெயர் மட்டுமே இருக்கின்றன.
மூலவரான சிவன் சின்நிதியை ஒட்டி, வலதுபுறம் அகத்திய மாமுனிக்கும் இடதுபுறம் மகிஷாசுரமர்த்தினிக்கும் பின்புறம் வினாயகருக்கும் சன்நிதிகள் உள்ளன.

நான் 2013-ஆம் ஆண்டுச் சென்றபோது சிவன் சன்நிதியை மூடி நிர்மாணிப்பு பணியைச் செய்துக்கொண்டிருந்தார்கள். பூட்டிய கதவின் இடுக்கின் வழி புகைப்படம் எடுத்தேன். அதிர்ஷ்டவசமாக ஒரு படம் மட்டுமே தெளிவாகக் கிடைத்தது. ஆனால், நான் 2014-ஆம் ஆண்டு சென்றபோது மூலவர்களின் அனைத்து சன்நிதிகளும் மேம்பாட்டுக்காக மூடியிருந்தன.
கோயிலை அதன் இயற்கை தன்மை மாறாமல் இருக்க, மின்சார வசதியைக் கூட அரசு ஏற்படுத்தவில்லை. மேலும் மாலை 6 மணியளவில் கோயில் வளாகத்தை அடைக்கத் தொடங்குகிறார்கள். சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும் சன்நிதிகளில் வழிபாடுகளை நடத்துவதில்லை.

அன்றைய சூரிய அஸ்தமனத்தில் நான் அங்கு இருந்தேன். அந்த அழகை எப்படிச் சொல்வது?  எத்தனை எத்தனையோ சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்துவிட்டேன். கதிரவன்  பூமிக்கு ஒன்றுதான் என்றாலும் அது இடத்திற்கு இடம் மாறுபட்ட அழகை காட்டி கொண்டிருக்கிறது.

பிரம்பனான் கோயிலின் சூரிய அஸ்தமனக் காட்சியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பார்த்தவர்களின் வாழ்க்கையில் அது என்றும் மறையாத காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.
ஒருபுறம்  இக்கோயிலின் பிரமாண்டமும் கலை நுணுக்கங்களும் வியப்பை அளிக்கிறது. மறுபுறம் அற்புதமான இந்தக் கோயில் சீரழிந்துவிட்டபோதும் அதை மீண்டும் மீண்டும் சீரமைப்புச் செய்து நம் பார்வைக்கு நிறுத்தியுள்ள மனித உழைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு கழித்த பிறகு, இறுதியாக விஷ்ணுவின் சன்னதியில் ஏறினேன். உடன் யாரும் இல்லை. ஒரு சிலர் மட்டும் தூரத்தில் அமர்ந்திருந்தனர். படி ஏற ஏற ஒரு வகையான அமானுஷ்ய பயம் எழுந்தது. ஆனால், அதையும் தாண்டி அந்தச் சன்னதியை பார்க்க ஆசை உந்தி தள்ளியது. இருண்ட மூலஸ்தானத்தில் என் கண்களால் எதையும் காண முடியவில்லை. என் கேமராவில் Flash வைத்துப் புகைப்படமெடுத்தேன். மஹா விஸ்ணுவின் ஆள் உயர சிலை, புகைப்படமாகக் கேமரா கண்களுக்குச் சிக்கியது. உட்புறத்தில் காற்றுபோன்றதொரு சத்தம் சுழன்று வந்து என்னிடம் ஏதோ பேசுவதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தத் தொடங்கியது. மனதிற்கு ஒருமாதிரி இருந்தது. அடுத்தக் கணம் “ விஷ்ணுவே ஆளை விடு” என இறங்கி வந்துவிட்டேன்.இந்துக்கோயிலாக இருந்தாலும் கோயிலின் அமைப்பு பௌத்த சாயலை கொண்டிருப்பது குறித்தும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
இந்தக் கோயிலையும் பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் முன் இடுப்பில் கட்டிக்கொள்ள ‘பாத்தேக்’ துணி கொடுக்கிறார்கள். முட்டிக்கு மேல் உடை உடுத்தியிருப்பவர்கள் உட்பட அனைவருக்கும் கொடுக்கப்பட்டது என்றாலும் ‘பாத்தேக்’ துணியை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் வழங்கப்படுவதாகத் திதின் (கைட்) தெரிவித்தாள்.

கடந்த வருடத்திலிருந்து மலேசியாவின் பத்துமலையிலும் இடுப்பில் கட்ட துணி கொடுக்கிறார்கள். அது முற்றிலும் வியாபாரம் நோக்கம் கொண்டது. பணத்தைப் பெற்றுக்கொண்டு துணி கொடுக்கிறார்கள். பின் துணியைத் திரும்பப் பெறுகிறார்கள். பிராம்பனான் கோயிலின் வளாகத்தில் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். கோயிலைச் சைக்கிளில் சுற்றிவருவது புதிய அனுபவத்தையும் கோயிலின் வேறொரு தோற்றத்தையும் நமக்குக் காட்டுகிறது. இரண்டு பெரிய பூதங்கள் கொண்ட சிலைகள் அமைப்புடன் மற்றுமொரு வாயிலையும் காணலாம். ஆனால், அதை மூடி வைத்திருக்கிறார்கள்.

இந்தோனேசியாவில் கி.பி. 358 ஆண்டுத் தொடங்கிக் கி.பி 1527 வரை பல இந்திய சாம்ராஜ அரசுகளின் ஆட்சி நடந்திருந்தாலும் சைலேந்திரப் பேரரசு, சஞ்சாயா மற்றும் ஶ்ரீ விஜய அரசுகள் மிகவும் புகழ்பெற்றதாகவும் தொடர்ந்து ஜோக் ஜகார்த்தா பாலி உள்ளிட்ட இடங்களில் இந்திய கோயிகளின் வரலாற்றில் இவர்களின் பெயர்கள் தொடர்ந்து வரக்கூடியதாக இருக்கிறது. அதிலும் ஶ்ரீ விஜய பேரரசு ராஜ்ஜியம் 500 ஆண்டுகள் மாபெரும் ராஜ்ஜியத்தைப் புரிந்ததாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 1 (borobudur)


இயற்கையின் மீது கொண்ட ஆர்வத்தினால், சுற்றுலா செல்வது மட்டுமல்ல சுற்றுப்பயணம் சம்பந்தப்பட்ட இடங்களைப்பற்றி வாசிப்பதிலும் அதீத ஆர்வம் எனக்கிருக்கிறது. புனைவுகளிலிருந்து மாறுபட்டு, ஆதாரப் பூர்வ வரலாற்று பதிவுகள் தொடர்பாகவும் கல ஆய்வு தொடர்பாகவும் எழுதப்படும் கட்டுரைகளை வாசிப்பது அத்தனை சுவாரஸ்யத்தைத் தூண்டி விடுவதுடன் ஒரு வாசிப்பாளனுக்கு சிந்திப்பதற்கும் அது குறித்து மேலும் தேடி வாசிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுகிறது.

எப்போது என்று நினைவில்லை. 'உயிர்மை' இதழில்தான் கம்போடியாவின் அங்கோர் வாட் பற்றியும், இந்தோனேசியாவின் போரோபுடூர்-பிராம்பனான் ஸ்தலங்கள் குறித்தும் வாசிக்க நேர்ந்தது. அந்த எழுத்தின் சுவாரஸ்யம் என்றாவது அந்த ஸ்தலத்தின் அதிசயங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
அங்கோர் வாட்டைக் காணும் அந்த வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இந்தோனேசியாவின் ஜோக் ஜகார்த்தாவிலுள்ள போரோபுடூர்-பிராம்பனான் ஸ்தலங்களுக்கு முதல் முறையாக 2013-ஆம் ஆண்டிலும்,  இரண்டாவது முறையாக 2014-ஆம் ஆண்டும் சென்று வந்தேன். மீண்டும் செல்வது என்றாலும் அங்குப் போவதற்கு எனக்குச் சலிப்பு ஏற்படபோவதில்லை.

இரண்டு முறை போன அந்தப் பயணம் குறித்து முன்பே மலேசிய பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். எனது அகப்பக்கத்தில் பதிவிட இப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
முதல் முறை (2013) சென்ற போது போரோபுடூர் , பிராம்பனான், கேபாங், ஒரு தனியார் மியூசியம், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜோக்ஜகார்த்தாவின் 10-வது சுல்தான் ஹமெங்கு புவோனோ அரண்மனை ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அந்தப் பயணம் பத்திரிகை நிமித்தமாகச் சென்றது.
இரண்டாம் முறை (2014) சென்றபோது போரோபுடூர் , பிராம்பனான், அரண்மனை,  மெராப்பி எரிமலை, மல்லிகா ஸ் ரீட் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றேன். இரண்டாவது பயணம் சந்துரு உட்பட 7 நண்பர்களுடன் சென்றது. இரண்டு பயணங்களும் நல்ல அனுபவங்களைக் கொண்டது.

போரோபுடூர் 

விசாகத்தினத்தன்று உலகலவில் புத்தபிக்குகள் பெரிய அளவில் ஒன்று கூடும் இடமாக மத்திய ஜாவாத் தீவில் அமைந்துள்ள போரோபுடூர் இருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் சைலேந்திரர் அரசப் பரம்பரையால் இந்த ஸ்தலம் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 6 சதுர வடிவிலான மேடை அமைப்பையும், அதன் மேல் 4 வட்ட வடிவ மேடையையும் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட 4 வட்ட வடிவ மேடையில் புத்த விக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. முதல் மேடையில் 104, இரண்டாம் மேடையில் 104, மூன்றாம் மேடையில் 88, நான்காம் மேடையில் 72 என மொத்தம் 368 புத்த சிலைகள் சுற்றிலும் சீரான நிலையில் கருங்களால் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், 2,672 கற்சுவர்களில் புத்தரின் புராணச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

ஸ்தலத்தின் உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை ‘ஸ்துப்பாய்’ என்று இந்தோனேசிய மொழியில் அழைக்கிறார்கள். 74 தாது கோபுரத்தின் உட் புறத்தில் இருக்கும் 73 தியான நிலையிலான புத்தர்கள்  சிலைகளாக 7 முத்திரைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். உச்சியின் மூலஸ்தானம் புத்தர் முக்தியடைந்த நிலையைக் காட்டுகிறது. அங்கு எந்தச் சிலையும் இல்லை.பௌத்தத்தை ஏற்றுக்கொண்டவர்களின் புனித ஸ்தலமாகக் கருதப்படும் போரோபுடூர், 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1,96,800 கரும் பாறைகள் இந்த ஸ்லத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தூரத்திலிருந்து பார்க்கும்போது போரோபுடூர் சிறிய குன்று போலவும், உயரத்திலிருந்து பார்த்தால் தாமரை போலவும் காட்சியளிக்கும் என வர்ணிக்கிறார்கள்.

கண்களைப் பிரமாண்டத்தில் ஆழ்த்தும் அந்த ஸ்தலம் பராமரிப்பு இல்லாததால் 11-ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைந்து போனதாகவும் 14-ஆம் நூற்றாண்டில் ஜாவாவின் புத்த- இந்து சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று இஸ்லாம் தலையெடுத்தது எனப் போரோபுடூர் வரலாறு கூறுகிறது. அதன் பிறகு போரோபுடூர் முற்றிலுமாகக் கைவிடப்பட்டது.
200 ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்தலத்தைத் தோண்டியெடுத்து புதுப்பித்தனர். 1814-ஆம் ஆண்டில் ஜாவாவின் பிரிட்டன் ஆட்சியாளராக இருந்த தாமஸ் ராஃபில்ஸ் என்பவர்தான் மண்ணுக்குள் புதைந்திருந்த அந்தப் பொக்கிஷத்தை வெளியில் கொண்டு வந்தவர் என இந்தோனேசியாவின் பழஞ்சுவடி காப்பக குறிப்புகள் கூறுகிறது.

அதன் பின்னர் பல தடவை இந்த ஸ்தலம் புதுப்பிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஊடுருவிய தீவிரவாதிகள் 10 பலமிகு வெடிகுண்டுகளைப் போரோபுடூரில் வைத்தனர். குண்டு வெடித்ததில் ஸ்தலத்தின் சில பகுதிகள் சிதைந்து போயின.
இந்த ஸ்தலத்திற்குச் சொந்தமான தங்க புத்த சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடர்கள் திருடிச் சென்றனர். அது தங்கமில்லை என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்த திருடர்கள் சிலையை வனத்தில்
வீசியெறிந்தனர். தற்போது அந்தச் சிலை ஜோக்ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முண்ணுக்குள் புதைந்து, நிலநடுக்கத்தால் உதிர்ந்து, தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தி இப்படிப் பல சோதனைகளைச் சந்தித்த இந்தப் புத்த ஸ்தலத்தை,  எரிமலையும் விட்டு வைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடித்து ஏற்படுத்திய சீற்றத்தை, சுத்தம் செய்து முடிப்பதற்கு ஒரு வருடம் ஆனதாக எனது கைட் திதின் கூறினாள். இம்மாதிரியான பல சோதனைகளைச் சந்தித்தும் இன்னும் சந்தித்துக் கொண்டும் இருக்கிறது போரோபுடூர். சில மாதங்களுக்கு முன்பு  மெராப்பி எரிமலை குமுற தொடங்கியதில் அதை சுற்றியிருந்த சுற்றுலாத்தலங்களை இந்தோனேசிய அரசு மூடியது அதற்கு நல்ல உதாரணம்.

ஸ்தலத்தின் அசல் நிலையைச் சிதைத்துவிடாமலிருக்கத் தேவைக்கருதி பொருத்திய பாறைகளை ஆணியடித்து அடையாளப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவின் சுற்றுலா அமைச்சு. மாற்று பாறைகளாக பயன்படுத்துவது எரிமலையின் குழம்பான இறுகிய அதன் லார்வா என்பது கூடுதல் தகவல். போலி பாறைகள் எது அசல் பாறைகள் எது என்று அடையாளம் காண்பதற்கு நமக்குச் சிரமம் ஏற்படவில்லை. புத்த ஸ்தலமாக இருந்தாலும் பாறை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கும் இந்திய புராதணங்கள் நமக்குத் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பக் கூடியதாக இருக்கிறது. பல கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கிடைக்காமலும் இருக்கிறது.


இயந்திர வசதி இல்லாத காலத்தில் இத்தனை பிரமாண்ட ஸ்தலத்தை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்றும் அத்தனை பெரிய பெரிய பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? அதை எப்படி அத்தனை உயரத்திற்கு ஏற்றினார்கள்? யானைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் இது சாத்தியமான வேலையா? அல்லது அப்போது பூதங்களைப்போலத்தான் மனிதர்கள் இருந்தார்களா? இப்படி விடை தெரியாத பல கேள்விகள் நமக்கு எழாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தஞ்சை பெரிய கோயில் முதல் பிரமாண்ட கட்டுமான கோயில்கள் அல்லது புனித ஸ்தலங்கள்  வரை அது கட்டுமானம் குறித்தான கேள்விகளுக்கு விடை தெரியாமல் தனியே தொங்கிக் கொண்டிருக்கிறது.
பல ரகசியங்களின் புதையல் போலக் காட்சிகொடுக்கும் இந்தப் போரோபுடூர் உலகப் பாரம்பரிய வளங்களில் ஒன்றாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது. புரோபுடூரில் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் மிகவும் விஷேசமாக இருக்கிறது. சுற்றுப்பயணிகள் அதற்காகத் தனிக்கட்டணமும் செலுத்த வேண்டும். அவர்களுக்குச் சில சலுகைகளையும் வழங்குகிறார்கள். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் போரோபுடூரின் உச்சிவரை ஏறி கதிரவனுக்காகக் காத்திருப்பது நல்ல அனுபவம். மத்தியில் அமைந்திருக்கும் பெரிய புத்தசிலையில் கதிரவனின் ஒளி பட்டு உதிக்கும் அந்த உதயத்தைக் காண வேண்டும். எந்தக் கவிதை வரியும் அந்த அனுபவத்தைப் பேசுவதற்கு இன்னும் எழுதப்படவில்லை.


(தொடரும்)

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

எல்லாருக்கும் என்னைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை…!

நேர்காணல் : அம்பை
சந்திப்பு: யோகி

(குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் மலேசிய சூழலை மையப்படுத்தியவை. மலேசியாவில் வெளிவரும் ஜனரஞ்சக பத்திரிக்கைக்காக செய்யப்பட்டது. தீவிர இலக்கியவாதிகளுக்கானது இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்) 

அம்பை 1960-களிலிருந்து இலக்கிய வெளியில் இயங்கி வருகிறார்.   ‘காட்டில் ஒரு மான்’, அம்மா  ஒரு கொலை செய்தாள்’  ‘சிறகுகள் முறியும்’ உள்ளிட்ட சிறுகதைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் நமக்கு  விரைவாக அடங்கக்கூடியது அல்ல. அம்பை வரலாற்றில் எம்.ஏ.பட்டம் பெற்றவர். அமெரிக்கன் கல்வியில்  முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். பல ஆவணப் படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பதோடு உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.  ‘சிறகுகள் முறியும்’ (1976),  ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988),’ காட்டில் ஒரு மான்’ (2000) ஆகியவை இவரது முக்கிய சிறுகதை தொகுதிகளாகும். 

அண்மையில் இரண்டு நாள் மலேசிய பயணம் மேற்கொண்டிருந்தவரிடம் நிறைய பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மலேசிய சூழலில் அவரோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.  ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை.  அவருடைய மலேசிய வருகை பதிவு செய்யப்படவேண்டிய ஒரு விஷயம். அந்த வகையில் அவரோடு உரையாடியதிலிருந்து சில கேள்விகளைத்  தொகுத்திருக்கிறேன். சில கேள்விகளுக்கான பதிலை இணையம் வழி கேட்டுப் பெற்றேன்.  எல்லாத்தையும்விட அம்பையின் மலேசிய வருகையைப் பதிவு செய்வதே எனக்கு முக்கியமாக  இருக்கிறது.

இனி அம்பையிடம் கேள்வியும் பதில்களும்…


யோகி: .பல வருடங்களாக இலக்கிய வெளியில் இயங்கி வருகிறீர்கள்? ஆனாலும், இன்னும் பலருக்கு அம்பை யார் எனத் தெரியவில்லைஇந்த விமர்சனத்தை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
அம்பை: இதில் எதிர்கொள்ள என்ன இருக்கிறது? எல்லோருக்கும் என்னைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவுக்கு நான் பிரபலமான எழுத்தாளராக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. நான் எழுத வேண்டும், அவ்வளவுதான். அதற்கான வெளி இருந்துகொண்டே இருக்க வேண்டும், எனக்குள்ளும் வெளியேயும், அவ்வளவுதான்.  

யோகி:  உங்கள் அனுபவத்தில் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களின் மலேசியப் பயணம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
அம்பை: மலேசியப் பயணம் தற்செயலாக அமைந்ததுதான். இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் மலேசிய வாழ்க்கையை இன்னும் உள்வாங்கியிருக்க முடியும். இப்போது சில இடங்களைப் பார்த்த திருப்தியும், சில நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியும், மணிமொழி  சிறப்பாகக் கார் ஓட்ட, உங்கள் (யோகி)  இருவருடன் மனம் விட்டுப் பேசியபடி சுற்றியதும்தான் மனத்தில் மலேசியாவாக இருக்கிறது. விமானத்தளத்திலிருந்து அந்த நீண்ட 70 கிலோமீட்டர் கார் சவாரியும், சுற்றிலும் இருந்த பசுமையும் மனத்தில் இருக்கிறது. தேநீருக்குச் சொல்லும்போது பால் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்வதும், தயிரில்லாத சாப்பாடும் சற்று அதிசயமாக இருந்தது.
யோகி: அம்பை ஒரு சிறுகதை ஆசிரியராக அறியப்படுகிறார்? அம்பை ஏன் கவிதை எழுதவில்லை ?
அம்பை: அம்பைக்குக் கவிதை எழுத வராது, அதனால்தான்!

யோகி:  உங்களின் முதல் சிறுகதை குறித்தும் அதன் அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அம்பை: முதலில் எழுதியது சிறுகதை இல்லை. குழந்தைகளுக்கான நாவல். கண்ணன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. முதல் சிறுகதை வாழ்க்கையை தளிர், இலைசருகு என்று பல கட்டங்களாகப் பிரிக்கும் தத்துவக் கதை. சிறு வயதில் நமக்கு வாழ்க்கையைப் பற்றி எல்லாமே தெரியும் என்று ஒரு மனோபாவம் வரும் இல்லையா, அத்தகைய மனோபாவத்தில் எழுதிய கதை. உலகத்தையே அறிந்து முதிர்ந்துவிட்டதுபோல் ஒரு கதை. சாதாரணக் கதை. 'ஆனந்தவிகடன்' பத்திரிகையில் வந்தது. 1961 அல்லது 1962இல் இருக்கலாம்.  

யோகி:  உங்கள் பெயரில் மலையாள தொடர்பு இருக்கிறது. நீங்கள் வசிப்பதோ மும்பையில்? தமிழிலும் எழுதுகிறீர்கள். அம்பை என்பவர் உண்மையில் யார்? பிற மொழிகளை எப்படிக் கையாள்கிறீர்கள்? அம்பைக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
அம்பை: தாய் வழியிலும் தந்தை வழியிலும் என் முன்னோர்கள் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். அப்பாவுக்கு அதிகம் மலையாளம்தான் தெரியும். பிறகு கோயமுத்தூரில் அவர்கள் குடியேறினார்கள். இப்போதும் உறவினர்கள் அங்குண்டு. தமிழ்நாட்டில் நான் வளரவில்லை. மும்பாயிலும் பெங்களூரிலும்தான் வளர்ந்தேன். பிறகு சென்னையிலும் டில்லியிலும் படித்தேன். ஒரு கட்டத்தில் மும்பாயில் குடியேறினேன். என் ஆரம்பக் கல்வி தமிழில்தான் இருந்தது. பிறகு இளங்கலை படிப்பு முடிக்கும்வரை தமிழ் ஒரு பாடமாக இருந்தது. அதனால்தான் தமிழில் எழுதுகிறேன். தமிழ், ஹிந்தி, கன்னடம் நன்றாகத் தெரியும். புரிந்துகொள்ளும் அளவு மலையாளம், தெலுங்கு, மராட்டி தெரியும்.
யோகி: தற்போதைய பெண்களின் எழுத்து குறித்த உங்களின் அபிப்பிராயம் என்ன?
காலகட்டப் பிரிவுகளாக எழுத்தைப் பிரித்து தற்காலம் முற்காலம் என்று பிரிப்பது எனக்கு உடன்பாடில்லை. இந்தக் கேள்வியில் நான் ஏதோ ஒரு காலத்தைச் சேர்ந்தவள் போலும், இப்போதைய எழுத்து குறித்து என் பார்வை வேறாக இருக்கும் என்றும் ஒரு தொனி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. யோகி எழுதும் அதே காலத்தில்தான் நானும் எழுதுகிறேன், இல்லையா? மேலும், தற்போதைய பெண்கள் எழுத்து என்று ஏன் குறிப்பிட்ட கேள்வியாக இது இருக்கிறது? தற்போதைய ஆண்கள் எழுத்து குறித்துப் பெண்கள் பேசக்கூடாதா அல்லது பெண்களைக் குறித்துப் பெண்கள்தாம் பேச வேண்டும் என்று ஏதாவது விதிகள் இருக்கின்றனவா?
தற்போதைய எழுத்து என்று பொதுவாக எடுத்துக்கொண்டால் அது எனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாகவே இருக்கிறது. மகத்தான வெற்றிகள்பொறுத்துக்கொள்ள முடியாத தோல்விகள், தாங்கமுடியாத தட்டையான எழுத்து எனப் பல பெரும் தடங்களில் பலவாறு பிரிந்துஇவ்வளவு படைப்புகளா என்று வியப்பளிக்கும் வகையில் பலர் இதில் எழுதியபடி இருக்கின்றனர்.  

யோகி:  உங்கள் மீது தொடர்ந்து வைக்கும் பாப்பனிய பார்வை மனரீதியாக பலவீனம் செய்துள்ளதா? அல்லது அதை எவ்வாறு அணுகுகிறீர்கள்?
அம்பை: தமிழ்நாட்டில் என் எழுத்தை இப்படி மட்டுமே பார்க்கும் அனுபவம் இல்லை. இப்படியும் பார்ப்பவர்கள் உண்டுமலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு மூத்த எழுத்தாளர்தான் நான் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் எழுதத் துவங்கிய வை.மு. கோதைநாயகியின் வாரிசுதான் என்றும் என் எழுத்தின் பின் ஓர் ஒன்பது கஜப் புடவை மாமி இருக்கிறார் என்றும் கனிவுடன் எழுதி அதை எனக்கு அனுப்பியும் வைத்தார். இத்தகைய விமர்சனங்கள் எப்படி நம்மைப் பலவீனப்படுத்த முடியும் அவை எவ்வளவு அபத்தமானவை என்பது நமக்கே புரியும்போது? எழுத்தின் மீது வைக்கும் விமர்சனங்களை நான் வெகு கவனமாகவே பார்க்கிறேன் காரணம் நானும் என் சக எழுத்தாளர்களின் எழுத்து குறித்து விமர்சிப்பதால். விமர்சனங்களில் எவை நம்மை முன்னே எடுத்துச் செல்லும் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். நம்மைக் கீழே தள்ளி மிதிக்கும் விமர்சனங்களையும் படிப்பதால் ஒன்றும் கெட்டுப்போய்விடாது.  

யோகி: 'ஸ்பாரோ' அமைப்பு குறித்தும் அதன் செயற்பாடுகள் குறித்தும் கொஞ்சம் சொல்லுங்கள்?
அம்பை: ஸ்பாரோ (Sound & Picture Archives for Research on Women (SPARROW)) ஒரு பெண்கள் ஆவணப் பாதுகாப்பகம். இதில் பெண்கள் வாழ்க்கை, பெண்கள் சரித்திரம் இவற்றை நாடு, பண்பாடு என்ற தறுவாயில் நோக்குவது. கலை, வெளிப்பாடு, தொழில், விஞ்ஞானம், கல்வி, சுற்றுச்சூழல், பல சமூகப் பெண்களின் வாழ்க்கை, அதிலுள்ள போராட்டங்கள், சட்டம், ஆரோக்கியம், உரிமைகள், போராட்டங்கள், இயக்கங்கள் இவைகளை வாய்வழி வரலாறு, புகைப்படங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள்ஓவியங்கள், பதாகைகள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், நாடகங்கள், படங்கள் இவை அனைத்தும் மூலமாகப் பார்ப்பதற்கானத் தரவுகளை ஆவணமாக்குவது எங்கள் நோக்கம்.

எட்டு மொழிகளிள் விவரங்கள் சேகரிக்கிறோம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களைப் பற்றியக் குறிப்புகளையும் புத்தகங்களையும் பலதரப்பட்ட பெண்களுடனான உரையாடல்களையும் ஆவணப்படுத்தியுள்ளோம். 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறோம். பல ஆவணப்படங்களை எடுத்திருக்கிறோம். கண்காட்சிகள், பயிலரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள் எனப் பல வகைகளில் இயங்கி வருகிறோம். 23 மொழிகளில் எழுதும் 87 பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுடன் அவர்களுடனான உரையாடல்களையும் ஐந்து தொகுதிகளாகக் கொண்டுவரும் முயற்சியில் நான்கு தொகுதிகள் வெளியிட்டாகிவிட்டது. ஐந்தாவது தொகுதிக்கான வேலைகள் நடந்து வருகின்றன. www.sparrowonline.org     என்ற வலைதளத்தில் எங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.    

யோகி:  பெண்களுக்கான தொழிற்கல்வி, மாலை பின்னுவது, கேக் செய்வது, திருமண அலங்காரம் செய்வது என தொடர்ந்து ஒரே பின்னளில் தொடர்கிறதே? அது காலத்திற்கு ஏற்ற மாதிரிதான் இருக்கிறதா?
அம்பை: ஒப்பனை, தையல், விசேஷச் சமையல், சில வகைக் கைவினைப் பொருட்கள் செய்தல் இவற்றைச் சுற்றியே பெண்களுக்கான அதிகப்படி கல்வி அமைகிறது. இதையே அவர்கள் தொழிலாகச் செய்ய முற்படும்போது பலத்த எதிர்ப்பு இருக்கிறது. சமீப காலங்களில்தான் பெரிய ஹோட்டல்களில் முதன்மைச் சமையற்காரராகப் பெண்கள் இருப்பது கூடியிருக்கிறது. பெரிய கல்யாணங்களில் சமைக்கும் பொறுப்புகளை ஏற்பது இப்போதும் பெரும்பாலும் ஆண்கள்தாம். சினிமாவில் ஒப்பனை செய்யப் பெண்களை அனுமதிக்கப் பெரும் எதிர்ப்பு இருக்கிறது. அவர்கள் கதாநாயகிகளின் முடியலங்காரம் செய்பவர்களாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாற்றங்கள் வருகின்றன. ஆட்டோ, டாக்ஸி, ரயில் வண்டி, விமானம் என்று பல வாகனங்களை ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள், மேஸ்திரி வேலை, மெக்கானிக் வேலை என்று பல வேலைகளைச் செய்யும் பெண்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் விதிவிலக்காகத்தான் இருக்கிறார்கள்.     

யோகி: . உங்கள் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களை பற்றிக் கூற முடியுமா? அவர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
அம்பை: கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுவது கடினம். காரணம் பலவகை நபர்களின் கலவை அவர்கள். பால்தன்மை பற்றிய குறுகலான விளக்கங்கள் கூடிய வாழ்க்கையில் நடமாடி இயங்கும் நபர்கள். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலிருந்தும், செய்திகளிலிருந்தும் பிறப்பவர்கள்தாம்.

யோகி: தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் விவகாரங்கள் அதிகரித்துகொண்டே இருக்கிறதே?
அம்பை: ஆம். இது அதிகம் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது. பண்பாடு, போட்டிகள் நிரம்பிய வாழ்க்கைமுறை, பொருளாதாரச் சிக்கல்கள்வன்முறை, சமூகக் குரூரங்கள், சாதிய மனப்பான்மைபெண்களின் முன்னேற்றத்தை ஏற்க முடியாத மனநிலை, குறிப்பிட்ட அரசியல், ஊடகங்களின் செயல்பாடுகள் எனப் பல விஷயங்கள் இதில் இணைந்துள்ளன. இதை நீங்கள் கட்டாயம் ஆண் எழுத்தாளர்களிடமும் கேட்க வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை.  

நன்றி: தென்றல் வார இதழ் (14.8.2016 இதழ்)