வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 1 (borobudur)


இயற்கையின் மீது கொண்ட ஆர்வத்தினால், சுற்றுலா செல்வது மட்டுமல்ல சுற்றுப்பயணம் சம்பந்தப்பட்ட இடங்களைப்பற்றி வாசிப்பதிலும் அதீத ஆர்வம் எனக்கிருக்கிறது. புனைவுகளிலிருந்து மாறுபட்டு, ஆதாரப் பூர்வ வரலாற்று பதிவுகள் தொடர்பாகவும் கல ஆய்வு தொடர்பாகவும் எழுதப்படும் கட்டுரைகளை வாசிப்பது அத்தனை சுவாரஸ்யத்தைத் தூண்டி விடுவதுடன் ஒரு வாசிப்பாளனுக்கு சிந்திப்பதற்கும் அது குறித்து மேலும் தேடி வாசிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுகிறது.

எப்போது என்று நினைவில்லை. 'உயிர்மை' இதழில்தான் கம்போடியாவின் அங்கோர் வாட் பற்றியும், இந்தோனேசியாவின் போரோபுடூர்-பிராம்பனான் ஸ்தலங்கள் குறித்தும் வாசிக்க நேர்ந்தது. அந்த எழுத்தின் சுவாரஸ்யம் என்றாவது அந்த ஸ்தலத்தின் அதிசயங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
அங்கோர் வாட்டைக் காணும் அந்த வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இந்தோனேசியாவின் ஜோக் ஜகார்த்தாவிலுள்ள போரோபுடூர்-பிராம்பனான் ஸ்தலங்களுக்கு முதல் முறையாக 2013-ஆம் ஆண்டிலும்,  இரண்டாவது முறையாக 2014-ஆம் ஆண்டும் சென்று வந்தேன். மீண்டும் செல்வது என்றாலும் அங்குப் போவதற்கு எனக்குச் சலிப்பு ஏற்படபோவதில்லை.

இரண்டு முறை போன அந்தப் பயணம் குறித்து முன்பே மலேசிய பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். எனது அகப்பக்கத்தில் பதிவிட இப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
முதல் முறை (2013) சென்ற போது போரோபுடூர் , பிராம்பனான், கேபாங், ஒரு தனியார் மியூசியம், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜோக்ஜகார்த்தாவின் 10-வது சுல்தான் ஹமெங்கு புவோனோ அரண்மனை ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அந்தப் பயணம் பத்திரிகை நிமித்தமாகச் சென்றது.
இரண்டாம் முறை (2014) சென்றபோது போரோபுடூர் , பிராம்பனான், அரண்மனை,  மெராப்பி எரிமலை, மல்லிகா ஸ் ரீட் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றேன். இரண்டாவது பயணம் சந்துரு உட்பட 7 நண்பர்களுடன் சென்றது. இரண்டு பயணங்களும் நல்ல அனுபவங்களைக் கொண்டது.

போரோபுடூர் 





விசாகத்தினத்தன்று உலகலவில் புத்தபிக்குகள் பெரிய அளவில் ஒன்று கூடும் இடமாக மத்திய ஜாவாத் தீவில் அமைந்துள்ள போரோபுடூர் இருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் சைலேந்திரர் அரசப் பரம்பரையால் இந்த ஸ்தலம் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 6 சதுர வடிவிலான மேடை அமைப்பையும், அதன் மேல் 4 வட்ட வடிவ மேடையையும் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட 4 வட்ட வடிவ மேடையில் புத்த விக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. முதல் மேடையில் 104, இரண்டாம் மேடையில் 104, மூன்றாம் மேடையில் 88, நான்காம் மேடையில் 72 என மொத்தம் 368 புத்த சிலைகள் சுற்றிலும் சீரான நிலையில் கருங்களால் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், 2,672 கற்சுவர்களில் புத்தரின் புராணச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

ஸ்தலத்தின் உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை ‘ஸ்துப்பாய்’ என்று இந்தோனேசிய மொழியில் அழைக்கிறார்கள். 74 தாது கோபுரத்தின் உட் புறத்தில் இருக்கும் 73 தியான நிலையிலான புத்தர்கள்  சிலைகளாக 7 முத்திரைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். உச்சியின் மூலஸ்தானம் புத்தர் முக்தியடைந்த நிலையைக் காட்டுகிறது. அங்கு எந்தச் சிலையும் இல்லை.



பௌத்தத்தை ஏற்றுக்கொண்டவர்களின் புனித ஸ்தலமாகக் கருதப்படும் போரோபுடூர், 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1,96,800 கரும் பாறைகள் இந்த ஸ்லத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தூரத்திலிருந்து பார்க்கும்போது போரோபுடூர் சிறிய குன்று போலவும், உயரத்திலிருந்து பார்த்தால் தாமரை போலவும் காட்சியளிக்கும் என வர்ணிக்கிறார்கள்.

கண்களைப் பிரமாண்டத்தில் ஆழ்த்தும் அந்த ஸ்தலம் பராமரிப்பு இல்லாததால் 11-ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைந்து போனதாகவும் 14-ஆம் நூற்றாண்டில் ஜாவாவின் புத்த- இந்து சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று இஸ்லாம் தலையெடுத்தது எனப் போரோபுடூர் வரலாறு கூறுகிறது. அதன் பிறகு போரோபுடூர் முற்றிலுமாகக் கைவிடப்பட்டது.
200 ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்தலத்தைத் தோண்டியெடுத்து புதுப்பித்தனர். 1814-ஆம் ஆண்டில் ஜாவாவின் பிரிட்டன் ஆட்சியாளராக இருந்த தாமஸ் ராஃபில்ஸ் என்பவர்தான் மண்ணுக்குள் புதைந்திருந்த அந்தப் பொக்கிஷத்தை வெளியில் கொண்டு வந்தவர் என இந்தோனேசியாவின் பழஞ்சுவடி காப்பக குறிப்புகள் கூறுகிறது.

அதன் பின்னர் பல தடவை இந்த ஸ்தலம் புதுப்பிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஊடுருவிய தீவிரவாதிகள் 10 பலமிகு வெடிகுண்டுகளைப் போரோபுடூரில் வைத்தனர். குண்டு வெடித்ததில் ஸ்தலத்தின் சில பகுதிகள் சிதைந்து போயின.
இந்த ஸ்தலத்திற்குச் சொந்தமான தங்க புத்த சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடர்கள் திருடிச் சென்றனர். அது தங்கமில்லை என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்த திருடர்கள் சிலையை வனத்தில்
வீசியெறிந்தனர். தற்போது அந்தச் சிலை ஜோக்ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முண்ணுக்குள் புதைந்து, நிலநடுக்கத்தால் உதிர்ந்து, தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தி இப்படிப் பல சோதனைகளைச் சந்தித்த இந்தப் புத்த ஸ்தலத்தை,  எரிமலையும் விட்டு வைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடித்து ஏற்படுத்திய சீற்றத்தை, சுத்தம் செய்து முடிப்பதற்கு ஒரு வருடம் ஆனதாக எனது கைட் திதின் கூறினாள். இம்மாதிரியான பல சோதனைகளைச் சந்தித்தும் இன்னும் சந்தித்துக் கொண்டும் இருக்கிறது போரோபுடூர். சில மாதங்களுக்கு முன்பு  மெராப்பி எரிமலை குமுற தொடங்கியதில் அதை சுற்றியிருந்த சுற்றுலாத்தலங்களை இந்தோனேசிய அரசு மூடியது அதற்கு நல்ல உதாரணம்.

ஸ்தலத்தின் அசல் நிலையைச் சிதைத்துவிடாமலிருக்கத் தேவைக்கருதி பொருத்திய பாறைகளை ஆணியடித்து அடையாளப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவின் சுற்றுலா அமைச்சு. மாற்று பாறைகளாக பயன்படுத்துவது எரிமலையின் குழம்பான இறுகிய அதன் லார்வா என்பது கூடுதல் தகவல். போலி பாறைகள் எது அசல் பாறைகள் எது என்று அடையாளம் காண்பதற்கு நமக்குச் சிரமம் ஏற்படவில்லை. புத்த ஸ்தலமாக இருந்தாலும் பாறை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கும் இந்திய புராதணங்கள் நமக்குத் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பக் கூடியதாக இருக்கிறது. பல கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கிடைக்காமலும் இருக்கிறது.


இயந்திர வசதி இல்லாத காலத்தில் இத்தனை பிரமாண்ட ஸ்தலத்தை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்றும் அத்தனை பெரிய பெரிய பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? அதை எப்படி அத்தனை உயரத்திற்கு ஏற்றினார்கள்? யானைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் இது சாத்தியமான வேலையா? அல்லது அப்போது பூதங்களைப்போலத்தான் மனிதர்கள் இருந்தார்களா? இப்படி விடை தெரியாத பல கேள்விகள் நமக்கு எழாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தஞ்சை பெரிய கோயில் முதல் பிரமாண்ட கட்டுமான கோயில்கள் அல்லது புனித ஸ்தலங்கள்  வரை அது கட்டுமானம் குறித்தான கேள்விகளுக்கு விடை தெரியாமல் தனியே தொங்கிக் கொண்டிருக்கிறது.




பல ரகசியங்களின் புதையல் போலக் காட்சிகொடுக்கும் இந்தப் போரோபுடூர் உலகப் பாரம்பரிய வளங்களில் ஒன்றாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது. புரோபுடூரில் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் மிகவும் விஷேசமாக இருக்கிறது. சுற்றுப்பயணிகள் அதற்காகத் தனிக்கட்டணமும் செலுத்த வேண்டும். அவர்களுக்குச் சில சலுகைகளையும் வழங்குகிறார்கள். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் போரோபுடூரின் உச்சிவரை ஏறி கதிரவனுக்காகக் காத்திருப்பது நல்ல அனுபவம். மத்தியில் அமைந்திருக்கும் பெரிய புத்தசிலையில் கதிரவனின் ஒளி பட்டு உதிக்கும் அந்த உதயத்தைக் காண வேண்டும். எந்தக் கவிதை வரியும் அந்த அனுபவத்தைப் பேசுவதற்கு இன்னும் எழுதப்படவில்லை.


(தொடரும்)

1 கருத்து: