புதன், 27 அக்டோபர், 2021

யஸ்மின் அஹ்மாட்டும் பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களும்

 

மலேசியர்கள் மத்தியில், தீபாவளி மத்தாப்பை கொழுத்தி போடுவதாக இருந்தது தீபாவளி விளம்பரங்கள்தான். பெருவாரியாக உணவு பொருள்களான Planta, பால் மாவு, மிளகாய்த்தூள், நல்லெண்ணை உள்ளிட்ட நிறுவனங்கள், தீபாவளிக்கான விளம்பரங்களை வியாபார நோக்கத்தோடு வெளியிட்டாலும், அவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இன்னும் சில நாட்களில் நாம் பெருவிழாவை கொண்டாடப்போகிறோம் அல்லது அதற்கு தயாராகிகொண்டிருக்கிறோம் என்பதை நினைவு படுத்தும்படியே இருந்தது. அந்த நினைவூட்டல் உண்மையில் மகிழ்சியான சூழலையும் மலேசிய மக்கள் மத்தியில் கொடுத்தது உண்மைதான்.



ஆனாலும், மலேசியர்கள் மத்தியில் ஒரு விளம்பரம் எப்படி சொல்ல வேண்டும் என்று நமக்கு பாடம் எடுக்காமல் கற்று கொடுத்தவர் நிச்சயமாக மறைந்த யஸ்மின் அஹ்மாட் மட்டும்தான். மலேசிய கலாச்சாரத்தோடு பிணைந்திருக்கும் நமது பாரம்பரியத்தை, கொஞ்சம்கூட பிசகாமல் ரசிக்கும்படி கொடுத்தவர் இயக்குனர் யஸ்மின். அதுவும் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் பெட்ரோனாஸ் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு பெரிய பண்டிகைகளின் விளம்பரங்களை யஸ்மின் அஹ்மாட் இயக்கினார். அனைத்து விளம்பரங்களும் இனம் மொழி பாராமல் மலேசியர்கள் மத்தியில் பாராட்டை பெற்றதோடு பேசுபொருளாகவும் மாறியது.

பெட்ரோனாஸ் நிறுவனத்தினோடான இயக்குனர் யஸ்மினின் முதல் தீபாவளி விளம்பரம் 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ‘Duelling Masseurs’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அந்த 1 நிமிட விளம்பரம், தீபாவளி அன்று காலையில் இரு பையன்களுக்கு எண்ணை தேய்துவிடுவது தொடர்பாகவும், பின்னணியில் பாரம்பரிய இசையோடு அவர்கள் மகிழ்ந்திருப்பதையும் காட்சி போகும். இடையில் நவீன இளைஞர் அந்த இசையை மாற்றி வைக்கும்போது இந்த ரம்மியமான காட்சியை ரசித்துக்கொண்டிந்த வீட்டின் மூத்த அம்மா, கையில் வைத்திருந்த பேப்பரில் ஒரு அடி கொடுப்பார், நவீன இளைஞர் மீண்டும் ஒலியலையை மாற்றிவிட்டு பழைய சூழலை மீண்டும் கொண்டு வருவார். பெட்ரோனாஸ் நிறுவனம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் தீபாவளிக்கு இந்த விளம்பரத்தையே பயன்படுத்தியது.

1998-ஆம் ஆண்டு யஸ்மீன் இயக்கத்தில் You Are My Universe  என்ற தீபாவளி விளம்பரத்தை பெட்ரோனாஸ் நிறுவனம் தயாரித்தது. பாட்டியும் பேத்தியும் தீபாவளி ரங்கோலி கோலம் வரைந்துகொண்டிருப்பார்கள். ஒரு மாம்பழத்திற்காக மயிலோடு உலகைச் சுற்ற கிளம்பிய முருகன் மற்றும் தாய் தந்தையைச் சுற்றிவந்து அந்தக் கனியைப் பெற்றுகொண்ட வினாயகன் குறித்த கதையை விளக்கும் கோலத்தை வரைந்துகொண்டே பாட்டி கதையைச் சொல்லி முடிப்பார். ''நீங்கள் கூட என் உலகம்தான்'' என பேத்தி சொல்லிமுடிய விளம்பரமும் முடியும்.


2000-ஆம் ஆண்டு I See என்ற தீபாவளி பெட்ரோனாஸ் விளம்பரம் வெளிவந்தது. ஏற்றி வைத்த தீபங்களை விளையாட்டுத்தனமாக குறும்புக்கார சிறுவர்கள் அணைத்து இருளாக்கிவிடுவார்கள். கண் தெரியாத ஒரு முதயவர் சிமினி விளக்கோடு வந்து தன்னை பரிகாசம் சிறுவர்களிடம் பேசுவார். அவரின் அறிவுரையை கேட்டு சிறுவர்கள் மீண்டு விளக்கை ஏற்றுவது அந்த விளம்பரம் அமைந்திருந்தது. இந்த விளம்பரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை, என்றாலும் யஸ்மினுடைய அந்த பாணி கவனிக்ககூடிய ஒன்றாக இந்த விளம்பரம் அமைந்திருக்கும்.


2002-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் வெளியிட்ட தீபாவளி விளம்பரத்தின் தலைப்பு Light ஆகும். யாஸ்மின் தயாரித்த 4-வது தீபாவளி விளம்பரம் அது. மலேசிய மக்களிடத்தில் குறிப்பாக இந்திய சமூகத்தில் நல்ல வரவேற்பு பெற்றது அந்த தீபாவளி விளம்பரம். இசை பின்னணிக்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன், தன் தாய் தந்தையை இழந்த பிறகு, உடன் பிறந்த 4 உடன்பிறப்புகளுக்காக தன்னை தயார் படுத்திகொள்வதை விளக்கும் காட்சிகளை கொண்டது. வாழ்க்கையோடு முட்டிமோதி, தன்னுடைய இசை ஆர்வத்தையும் வளர்த்துகொள்ளும் ஒரு சராசரி இளைஞனை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிகாட்டியிருப்பார் யஸ்மின். அந்த காட்சியில் வரும் ராஜூ அண்ணன்களைப்போல நம்மில் எத்தனை அண்ணன்களும் அக்காக்களும் வாழ்ந்திருக்கிறார்கள்? இரண்டு நிமிடத்தில் ஒரு குறும்படத்தையே காட்டியிருப்பார் யஸ்மின். நிச்சயமாக அதில் மலேசிய பண்பாடோடு நாம் இணைந்திருப்பதையும் உயிர்ப்போடு சொல்லியிருப்பார்.


2003- ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Boys In The Hood- தீபாவளி விளம்பரம் இதுவரை மலேசியாவில் வந்த தீபாவளி விளம்பரங்களிலேயே பெரும் புகழ்பெற்றதாகும். அதன் புகழை முறியடிக்க வேறு எந்த விளம்பரத்தாலும் முடியவில்லை. 4 நவீன இளைஞர்களின் நவீன உடல்மொழி தனது பாட்டியைப் பார்த்ததும் அடங்கிபோகும். முனியாண்டி சின்னத்துறை என்று பாட்டி தனது பேரனை அழைக்கும்போதும் என்னப்பா.. சேம்..சேம் வேற நல்ல பேரு இல்லையா என்று பாட்டி கேட்கும்போதும் நகைச்சுவையாக இருந்தாலும், அந்த இளைஞர்கள் பாட்டிக்கு கொடுக்கும் மரியாதைதான் முக்கியமாக கவனிக்க கூடியதாக இருக்கும். என்னப்பா.. நெஞ்சு சளியா என்று பாட்டி கேட்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். அனைத்து இன மக்களிடமும் பாராட்டைப் பெற்ற அந்த விளம்பரத்தைபோல இன்னொரு விளம்பரத்தை யஸ்மின் அஹ்மாட்-டால்கூட கொடுக்க முடியவில்லை.

யஸ்மின் அஹ்மாட் தீபாவளி விளம்பரத்தில் கவனமாக கவனித்தால் அதில் அவர் மூத்தவர்களுக்கும் இளையர்வர்களுக்கும் சிறுவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரத்தை இயக்குவது புலப்படும். அவர் காட்டிய பெரியவர்களிடம் இளைஞர்கள் மதித்து நடக்ககூடியவர்களாக இருந்தார்கள். மலேசியாவில் இந்தியர்களின் வாழ்க்கை வாழ்கிறபடியே காட்டப்பட்டிருக்கும். கேமரா ஒளிப்பதிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து பேசலாம். அந்த அளவுக்கு நுட்பமாக இருக்கும்.

இன்று பெட்ரோனாஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் எடுபடுவதே இல்லை. குறிப்பாக தீபாவளி விளம்பரங்கள் வருகிறதா என்று கேட்கும் அளவுக்கு பின் தங்கிவிட்டது. 2012-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் கொண்டுவந்த டப்பாங்குத்து தீபாவளி விளம்பரம் பலரின் கண்டனத்திற்குள்ளானது குறிப்பிடதக்கது.

அதனைத் தொடர்ந்து 2013, 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வந்த பெட்ரோனாஸ் விளம்பரங்கள் கொஞ்சம் கவனிக்ககூடியதாக இருந்தது. இருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்ப்பு பெற்றதா என்பது சந்தேகம்தான்.

இன்று தீபாவளி விளம்பரங்கள் குறித்து யாரும் பேசுவதே இல்லை. மலேசிய மக்களுக்கு, விளம்பரங்கள் வழி வாழ்த்து சொல்ல எந்த நிறுவனங்களும் மெனக்கெடுவதுமில்லை. அவசர காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு பண்டிகைகளும் அவசர அவசரமாகவே முடிந்துபோய் விடுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது மீண்டும் ஒருமுறை யஸ்மின் அஹ்மாட்  இயக்கிய எல்லா பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களையும் பார்த்தேன். கடந்துபோன எனது தீபாவளி நினைவுகள் அந்த விளம்பரங்களில் ஒளிந்திருந்தன. உங்கள் நினைவுகளும் அதில் இருக்கலாம்.

திங்கள், 18 அக்டோபர், 2021

பெண்களின் கனவுகளை திட்டங்களாக மாற்றியவர் கம்லா பாசின்



கடந்த 25 செப்டம்பர் 2021,  பெண்நிலை கோட்பாடு மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளராகவும், சமூக ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும், ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒரு விடிவெள்ளியாகவும் இருந்த கம்லா பாசின் தனது 75-வது வயதில் நடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். தெற்காசிய பெண்ணிய நெட்வர்க் அமைப்பு “சங்கத்” இவரின் முயற்சியில் உயிர்பெற்ற ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் தெற்காசியப் பெண் செயற்பாட்டாளர்களையும், பெண்களையும்  இவர் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். அதோடு One Billion Rising அல்லது நூறுகோடியினர் கிளர்ச்சி என்ற பெண்ணிய அமைப்போடும் இணைந்து செயலாற்றினார்.  பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் ஒடுக்கு முறைகளை, இந்த இயக்கம் எதிர்க்கிறது. பெண்ணிய கோட்பாட்டுக்கு மிக தெளிவான கருத்தினை இவர் பெண்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

கம்லா பாசின் பெண்ணிய களப்பணிகள் அனைத்தும் தன் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடாகும். பெண் சுதந்திர போராட்டம் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்தும் மேற்கத்திய கலாச்சாரம் என்று பேசிவந்த சூழலில் அதை தம் சொந்த நாட்டிலும் ஆசிய நாட்டுச் சூழலிலும், பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணியக் கோட்பாடு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை செயலில் உணர்த்திக் காட்டியவர் கம்லா.

எனக்கு எப்படி அறிமுகமானார் ?

2014-ஆம் ஆண்டு நடிகர் அமீர் கான் நடத்திய சத்யமே ஜெயதே தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றின் வழி எனக்கு அறிமுகம் ஆனார் கம்லா பாசின். எனக்கு மட்டும் அல்ல அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உலக மக்கள் பார்வையிலும் தெளிவாக அறிமுகமானார் கம்லா. அன்று நடிகர் அமீர்கானின் உரையாடலின்போது பேசிய வி சாரம் இதுதான்...

“நான் வன்புணரப்பட்டால்இந்த சமூக மக்கள்

அவள் மானமே போச்சுனு’  சொல்வாங்க.

அதெப்படி எனக்கு அவமானம் ஆகும்?

என் மானத்தை கொண்டுபோய் என் யோனியில் யாரு வச்சது?

வன்புணரப்படுவது எனக்கு அவமானம்னு சொல்றது

ஒரு ஆணாதிக்க சிந்தனை.

உங்க எல்லாரையும் கேக்குறேன்,  உங்க சமூக மரியாதைய எதுக்கு 

எடுத்து போய் பெண்களோட யோனில வச்சிங்க?

நான் என்னோட மானம் மரியாதைய அங்க வைக்கலை.

வன்புணர்வுனால மானம் போகும்னா

அந்த மானக்கேடு வன்புணர்வ செஞ்சவங்களுக்கு தானே தவிர,

வன்புணரப்பட்டவங்களுக்கு எந்த அவமானமும் இல்ல.”

கம்லா பாசின்,  பெண்களுக்கான சுயமரியாதை, கோட்பாடு, பெண்நிலைவாத்திற்கு மட்டுமல்ல குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விழிப்புணர்வையும் சேர்த்தே 30 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவரின் புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு காந்திரமான பெண்ணாக இயங்கிய கம்லா பாசின் குடும்ப வாழ்க்கையானது ருசிகரமானதாக ஒன்றும் அமைந்துவிடவில்லை. ஓர் இராணுவ வீரரை திருமணம் செய்த கம்லா பின்  பல்வேறு குடும்பச் சிக்கல்களினால் அவர்களுக்கு விவாகரத்து நடக்கிறது. பின் அவர் ஒரு ஊடகவியலாளரை மறுமணம் செய்தார். தனது இரண்டாவது திருமணத்தில் அவருக்கு ஆண்-பெண் என இரு பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பில் அவரது கணவர் கம்லாவை விவாகரத்து செய்துவிடுகிறார். மகன் குழந்தையாக இருந்தபோது மருத்துவமனையில் தவறுதலாக போடப்பட்ட தடுப்பூசியின் காரணத்தினால் உடல்பேறு குறைந்த குழந்தையாகி விடுகிறார்.  எல்லா நேரமும் ஒருவரின் உதவியோடே அந்தக் குழந்தை உயிர்வாழக்கூடிய சூழலாகிப்போகிறது. இந்த மாதிரியான குடும்ப சூழலில்தான் கம்லா பாசின், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான களப்பணியாளராகவும் செயற்பாட்டாளராகவும் களத்தில் நின்றார். 



இலங்கை,  குறிப்பாக ஈழத்துப் பெண்களுக்கு அவர் பெரிய அளவில் பெண்ணிலை சார்ந்த கலந்துரையாடல்கள்களையும்  பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். தமது கருத்தாக்கத்தினை புத்தகமாகவும், கலந்துரையாடலாகவும் மட்டுமல்லாமல் பாடல் மூலமாகவும் கொண்டு போய் சேர்த்தார் கம்லா பாசின்.

ஊடறு எனும் உலக இந்தியப் பெண்களுக்கான அமைப்பு ஒன்றில் அண்மையில் கம்லா பாசினுக்கு நினைவாஞ்சலி கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அந்த உரையாடலில் கம்லா பாசினோடு இணைந்து செயற்பட்ட ஓவியர் கமலா வாசுகி அவரோடான தமது அனுபவங்களை  பகிர்ந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கம்லா பாசின் எழுதிய  பாடல்களையும் கமலா வாசுகி பாடிக்காட்டினார். ஆணாதிக்க கட்டமைப்புகளில் இருந்து பெண்களுக்கான விடுதலை நோக்கிய கனவுகளில் சமத்துவத்தை கேட்ககூடிய வகையில் அந்தப் பாடலை கம்லா எழுதியிருந்தார். கம்லா பாசின் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற பாடலான விடுதலை குறித்தப் பாடல் உலகப் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றதாகும்.

                                    

 

ஆஷாதி.. ஆஷாதி… (விடுதலை.. விடுதலை)

என்ற உரைவீச்சுப் பாடலின் சாரம் இதுதான்.

“தெற்காசியப் பெண்களுக்கு விடுதலை

எங்களின் மகள்களுக்கு விடுதலை

பாரபட்சத்திலிருந்து விடுதலை

ஓரங்கட்டுததிலிருந்து விடுதலை

ஆணாதிக்க மதங்களிலிருந்து விடுதலை

பெண் எதிர் மரபுகளிலிருந்து விடுதலை

எல்லா மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை”

 இப்படியாக விடுதலையை கேட்டுப்போகும் அந்தப் பாடல். குறிப்பிட்ட இந்தப் பாடல் கம்லா பாசின் சொந்தக் குரலிலேயே இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் ஒருமுறையாவது அந்தப் பாடலை கேட்க வேண்டும் என்றக் கருத்தினை கம்லா பாசின் நினைவாஞ்சலி கலந்துரையாடலில் நெறியாளராக இருந்த  எழுத்தாளர் புதியமாதவி கேட்டுக்கொண்டார்.

 பெண்களுக்கான விடுதலையை பேசுபவர்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் பெண்ணிய கோட்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கும் கம்லா பாசின் ஒரு முன்னுதாரணமாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். பெண்ணிய அரசியலை மிகச் சரியான முறையில் வரையறுத்துக்கொடுத்திருக்கும் கல்பா பாசின் பெண்ணியச் சித்தாந்தம் எல்லாக் காலக்கட்டத்திலும் பெண்களுக்காக பேசக்கூடியதாகவும் பெண்ணிய களப்பணியாளர்களுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகவும் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.   

 

கம்லா பாசின் தொடர்பான அந்த இணைய கலந்துரையாடலில் நானும் ஒரு பேச்சாளராக கலந்துகொண்டேன். பெண்களுக்காக நேரடியாகவும் தனது எழுத்தின் மூலமாகவும் பேசியிருக்கும் கம்லா பாசின் தொடர்பான கலந்துரையாடல் இந்த ஓர் அஞ்சலிக் கூட்டத்தோடு முடிந்துவிடக்கூடாது. பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான அவரின் பாடல்களையும் பெண்ணியச் சித்தாந்தங்களையும் பெண்ணிய கோட்பாடுகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான ஏற்பாடுகளை நன்றியோடு பெண்ணிய அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். அவரின் பிறந்தநாளின்போதோ அல்லது அவரின் நினைவு நாளின்போதோ அவருக்கான ஒரு கலந்துரையாடலை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். பெண்கள் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை சுவாசித்துக்கொண்டிருந்த கம்லா பாசின் பெயரில் களத்தில் நிற்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கி அந்த விருதுக்கு ஒரு மதிப்பினை ஏற்படுத்த வேண்டும். என்றக் கருத்தினை முன்வைத்தேன்.

அன்றைய அஞ்சலிக்கூட்டத்தில் கம்லாவின் பாதிப்பு பெரிய அளவில் எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கென்று கனவுகள் இருக்கிறது. பெண்களின் அக்கனவுகளை திட்டங்களாக மாற்றியவர் கம்லா பாசின். ஒரு களப்பணையாளராக, கம்லா பாசின் திட்டங்களை அடிப்படையாக கொண்டு செயலாற்றுவது எனக்கு சவாலாக இருக்கலாம். ஆனால், எழுத்து எனும் பேராயுதமும் முயற்சியும்  என்றும் அதற்கு தடையாக இருக்காது என்று நம்புகிறேன்.


 

 

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

பூர்வக்குடியின் குடியை கெடுக்கும் நெங்க்கிரி நீர்மின் அணை கட்டுமானம்

 

வாழ்க்கை இத்தனை போராட்டமாக ஒரு சமூகத்திற்கு அமையுமா? இதுக் குறித்து ஏற்பட்டிருக்கும் எனது கவலையானது இப்போராட்டத்தை குறித்து பேசாமல் கடந்து போக முடியாமல் செய்துவிடுகிறது.  தொலைக்காட்சி தொடர்களில்  ஒரே வீட்டில் ஒன்றன் பின் ஒன்றாக வரும் தீராதப் பிரச்னைகளைபோல கிளந்தான் குவா மூசாங்கில் வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு  பிரச்னைகளும் போராட்டங்களும் தீர்ந்தபாடில்லை.

ஒவ்வொரு தடவையும் பெரிய நெருக்கடியை சந்திக்கும் இவர்கள், இம்முறை மாநில மக்களோடு நாட்டு மக்களின் நலனையும் சேர்த்து கருத்தில்கொண்டு போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். உண்மையில் இது கடந்த வருடமே தொடங்கிய ஒரு தேசிய பிரச்னையாகும். ஆனால்,  தீபகற்ப மலேசிய மக்களுக்கு இதுகுறித்து  விழிப்புணர்வே இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. 

நெங்க்கிரி நீர்மின் அணை கட்டுமானம் கிளாந்தான் மாநிலத்தில், பூர்வக்குடிகள் அதிகமாக வசிக்கும் குவா மூசாங் பகுதியில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு முதலே தொடங்கியது. இந்த மின் அணை கட்டப்பட்டால் மிகப் பெரிய இயற்கை விளைவுகள் நம் நாட்டுக்கும் இயற்கை வளங்களுக்கும் ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் எச்சரித்து வருகின்றனர்.   பஹாங் மாநிலத்தின் மலைகளும் வனங்களும் அதன் மிச்ச சொச்சங்களை கிளாந்தான் மாநிலத்திற்கும் கொடுத்திருக்கிறது. ஆனால், இயற்கை வளங்கள் கொண்ட மாநிலம் என்றப் பெருமையை அம்மாநிலம் இழந்து வெகுநாள் ஆகிறது. இயற்க்கை வளங்களை பெருநிறுவனங்கள் சுரண்டி எடுத்ததில்  ஏற்பட்டிருக்கும் இயற்கை மாற்றங்கள் மற்றும் பூர்வக்குடிகள் இடம்பெயர்வுகள் மிக அதிகமாகவே கிளாந்தானில் நடந்திருக்கிறது. 

தற்போது பூதாகரமாக மாறியிருக்கும் மின் அணை கட்டுமானத்தை தடுக்க கிளாந்தானில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய  17 மாகாணங்களைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட  ஓராங் அஸ்லியின் குரல்களாக களம் இறங்கியிருக்கிறது கிளாந்தான்  பூர்வக்குடிகளின் ஒருங்கிணைப்பு குழு (JKOAK). இது அரசு சாராத பூர்வக்குடிகளின் போராட்ட குழுவாகும். நெங்க்கிரி நீர்மின் அணை கட்டுவதை ஒருமனதாக இக்குழு எதிர்த்து வருகிறது.   

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனமான EIA அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டார்கள். அறிவிற்கு அப்பால் இந்தக் கட்டுமானம்  நமக்கு பீதியைதான் ஏற்படுத்தியிருக்கிறது.  இந்தக் கட்டுமானத்தால் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும், இதனால் வறட்சியை போக்க முடியும் என்றும் அனைத்துக்கும் மேலாக  320 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியிருந்தாலும், நெங்க்கிரி நீர்மின் அணையின் கட்டுமானம் நடந்தால் - 5,384 ஹெக்டேர் குவா மூசாங் வனப்பகுதி மூழ்கிவிடும் அபாயம் அல்லது ஆபத்து இருக்கிறது. இன்னும் தெளிவாக சொன்னால்  4 பூர்வக்குடிகளின் குடியிருப்புகள் நேரடியாக பாதிக்கப்பட்டு முற்றிலும் நீரில் மூழ்கிப்போகும்.  


அதாவது  போஸ் டோஹோய் (Pos Tohoi), போஸ் புலாட் (Pos Pulat), கம்போங்  வியாஸ் (Kampung Wias) மற்றும் கம்போங் பெரிங் (Kampung Bering) ஆகிய கிராமங்களை இந்த மின் அணை கட்டுமானம் விழுங்கிவிடும் பூதமாக மாறிவிடும். அப்படி நடந்தால்  அங்கு வசிக்கும்  217 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,185 பூர்வக்குடிகள்  வேறுப் பகுதிகளுக்கு இடம் பெயர்வார்கள்.  அதோடு குவா மூசாங் பகுதிகளை சுற்றியிருக்கும்  18 கிராமங்கள் மறைமுகமாக பாதிக்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.   

 

அதைத் தவிர நெங்கிரி அணை கட்டப்பட்டால்  குவா முசாங்கில் உள்ள ஓராங் அஸ்லி சமூகத்தின் சுற்றுச்சூழல்,  சமூகம், பொருளாதாரம், வாழ்க்கை முறை, வரலாறு, பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தில் பல்வேறு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.   அவர்களின்  சமையல்,  அன்றாட தேவைக்கான தண்ணீர், விவசாயம், வேட்டையாடுதல்,  இயற்கையாகவே காட்டில் கிடைக்கும்  வன உணவு, மூலிகைகள், அரியவகை  தாவரங்கள், மருந்துகளின் ஆதாரங்கள், வீடு கட்டும் பொருட்கள், பாரம்பரிய விழாக்களுக்கான பொருட்கள், பிரம்பு,  பழங்கள் மற்றும் மூதாதையர் கல்லறைகள் உட்பட  பூர்வக்குடியின் அடையாளம் மொத்தமும் அழியும். இன்னும் கூடுதலாக சொன்னால், குவா மூசாங் மாகாணம் மட்டுமல்ல  இந்த அணையின் கட்டுமானம் கிளந்தான் மாநிலத்தின் பெரும்பாலான காடுகள்,  நிலங்கள் மற்றும் பிரதேசங்களை மூழ்கடித்து அழிக்கும். 

கடந்த சில வருடங்களாகவே தீபகற்ப மலேசியாவில் வசிக்கும் பூர்வக்குடிகளின் குடியிருப்புகள் அபாயத்தை எதிர்நோக்கி வந்திருப்பதையும் சில குடியிருப்புகள் மேம்பாட்டுக் காரணத்தினால்  வேறோடு பிடுங்கப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதையும் அறிவோம்.  தற்போதிய இந்த மேம்பாட்டில் பாதிக்கப் போவது  குவா சா மற்றும் குவா சாவாஸ் குடியிருப்பைச் சேர்ந்த தெமியார் சமூகத்து பூர்வக்குடிகளாவர்.  இந்தப் பகுதியானது தெமியார் சமூகத்தின் பூர்வீக நிலம் என்ற வரலாற்றை சுமந்து நிற்கிறது.  மேலும்,  தொல்பொருள் மதிப்பைக் கொண்ட முக்கிய அணைகள், கெலுடுங் குகை,  சாஹாயா குகை, கெசில் குகை, லுபாங் கெலாவார் குகை, பெர்டாங் குகை, ரஹ்மத் குகை, கெமிரி குகை,  தோக் பாத்தின் குகை உள்ளிட்ட  8 குகைகள் நீரில் மூழ்கும்.   இவை அனைத்தும் பூர்வக்குடிகளின் வாழ்கையோடு சம்பந்தப்பட்டதாகும். எனவே இந்த மின் அணைத்  திட்டம் மலேசியாவின் தீபகற்பத்தில் வசிக்கும்  தெமியார் பூர்வக்குடி வரலாற்றை அழிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அணையை கட்டியப் பிறகு ஏற்படும் அழிவுகள் என்னென்ன என்று பார்த்த நாம், அந்த அணையை கட்டும்போது ஏற்படும் பிரச்னைகளையும் கொஞ்சம் பரீசீலித்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அணை கட்டுமானத்திற்காக முந்தைய செயல்பாடுகளின் போது செய்யக்கூடிய  மரம் வெட்டுதல் மற்றும் குவாரி போன்ற விஷயங்களில் காற்று மாசுப்பாடு  மற்றும் ஒலி மாசுப்பாட்டையும் ஏற்படுத்தும். தவிர ஆற்று அமைப்புகளை சேதப்படுத்துதல், மண் அரிப்பு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை அழித்தல் உள்ளிட்ட இயற்கை அழிவுகள் தவிர்க்க முடியாததாகிவிடும்.  ஓராங் அஸ்லி என்று நாம் கூறும் பூர்வக்குடி மக்களின்  ஆரோக்கியத்திற்கும் பெறும்  தீங்கு  ஏற்படும்.

மலேசிய வரலாற்றில்  மேம்பாட்டுக்காக ஆக்ரமிப்பு செய்த பூர்வக்குடிகளின்  குடியிருப்பு தொடர்பாக ஆராய்ந்தால், நிலத்தை இழந்த  அப்பூர்வக்குடிகள் யாரும் எந்த லாபத்தையும் இதுவரை அனுபவித்ததில்லை.  இடம் ஆக்ரமிப்பு செய்யும்போது கொடுக்கப்படும் இனிப்பு வார்த்தைகள் எதுவும் இடத்தை அவர்களிடம் பிடுங்கிய பிறகு அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நீதி வழங்கப்படவில்லை. இந்த திடீர் இழப்பு மற்றும் சமூக அழுத்தத்தில் சிக்கி கொள்ளும் பூர்வக்குடி இளைஞர்கள்  குற்ற வழக்குகளில் சிக்கிகொள்ளும் அபாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர்.

அணை கட்டுதல் தொடர்பாக முந்திய அனுபவங்கள் வரலாற்றுப் பாடங்களாக கண் முன் நிற்கும்போது வேறு என்ன உதாரணம் தேவை? பாக்குன் சரவாக் அணை,  தெமெங்கோர்  பேராக், உலு ஜெலாய் உள்ளிட்ட  பல அணைகள் பூர்வக்குடி  சமூகத்திற்கு  எந்த நன்மையும் கொண்டுவரவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

தோழர் முஸ்தப்பா அலோங்

இந்த நெங்க்கிரி நீர்மின் அணை கட்டுமானம் குறித்து இயற்கை ஆர்வளர்கள் சொல்லும் இன்னொரு முக்கியமான தகவல்  நெங்கிரி ஹைட்ரோ இலக்ட்ரிக் அணை (Empangan hidroelektrik Nenggiri)  நீண்ட காலத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அதன் செயல்திறனைப் பொறுத்தமட்டில் பொருத்தமற்றது என்கிறார்கள். நெங்கிரி நீர்மின் அணையானது அதிக அளவு மின்சாரத்தை (350 மெகாவாட்) வழங்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு ஒரே சீரான மின்சாரம் வழங்க முடியாது என்று அவர்கள்  நம்பும் காரணம், பலகாலமாக அந்த வனத்தில் மரங்கள் வெட்டப்பட்டுகொண்டிருக்கின்றன.   அப்பகுதியில் சுரங்கங்களும் திறக்கப்பட்டுள்ளன.  காலப்போக்கில்  நீடித்த மண் சரிவுகளை அது ஏற்படுத்தும்.  இதனால் சுல்தான் அபுபக்கர் நீர்மின் அணையில், கேமரன் மலையில்  நடந்தது போல் அணையின் நீர் மற்றும் மின் திறன்  குறையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

நான் எப்போதும் கேள்வி கேட்பதைப்போலதான் இங்கும் மாநில அரசைப் பார்த்து கேள்வி கேட்க விரும்புகிறேன். மாநில மக்களுக்காகதான் ஒரு மேம்பாட்டை அரசு கொண்டு வருகிறது என்றால், அந்த மாநிலத்தில் இருக்கும் வனத்தை பாதுகாக்கப் போகும் அரசு எது? 

உலு கிளாந்தான் மற்றும் குவா மூசாங்  வனப்பகுதிகளில் காடுகள் அழித்தல், மரங்களை வெட்டுதல், தோட்டங்களை உருவாக்குதல், சுரங்கங்கள் வெட்டுதல்  உள்ளிட்ட  பலவற்றின் செயல்பாடுகளை  மாநில அரசால் அங்கீகரிக்கப்படும் வரை  இதுபோல பேரழிவுகளை தடுக்க முடியாது.  கட்டப்போகும் இந்த அணையால் வெள்ளம் மற்றும் வறட்சி பிரச்சனைகளை  தீர்க்க முடியாது.

இந்தக் கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று பூர்வக்குடி மக்கள் மாநில அரசுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

வெள்ளம், வறட்சி மற்றும் மின்சாரம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க நீண்டகால நிலையான தீர்வாக இந்த கட்டுமானம் பொருந்தாது என்பதால், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தெனாக நேஷனல் பெர்ஹாட் ஆகியோர்  நெங்கிரி நீர்மின் அணை கட்டுவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

குவா முசாங் மற்றும் உலு கிளாந்தான் வனப்பகுதிகளில் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை அங்கீகரிக்க வேண்டாம்.  ஏனெனில் இது மாநிலத்தில் வெள்ளம் மற்றும் வறட்சி நெருக்கடிக்கு பெரும் காரணமாகிறது.

நீர்ப்பாசனத் துறையால் முன்மொழியப்பட்டபடி, வறட்சி, வெள்ளம் மற்றும் நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, மாற்று வழிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

இப்படி சில கோரிக்கைகளை பூர்வக்குடி சமூகம் வைத்திருக்கும் வேளையில், இந்தக் கோரிக்கைக்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில்  , 17 மாகாணங்களில் இருக்கும் ஓராங் அஸ்லி மக்களின் 3,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களை இந்த மேம்பாட்டுக்கு  எதிராக பெற்றிருக்கின்றனர்.  நெங்கிரி அணையின் முன்மொழியப்பட்ட கட்டுமானத்தை ரத்து செய்வதற்கான தேசிய பிரச்சாரத்தை தொடங்க பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும்  கூட்டாக ஆதரவு மற்றும் ஒத்துழைக்க  அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். பூர்வக்குடிகளின் இத்தனை எதிர்ப்புக்கு பிறகும்  இந்தத்  திட்டத்தை ரத்து செய்வதில் எந்தப் பதிலும் அல்லது நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என்றால், நெங்கிரி அணை கட்டுமான திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்த நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிப்போம் என பூர்வக்குடிகளின் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. ஆனாலும், இந்த கட்டுமானத்திற்கான வேலைகள் வரும் மார்ச் மாதம் 2022- ல் தொடங்கப்படுவதற்கான அனுமதியை மாநில அரசாங்கம் வழங்கிவிட்டது. இந்தக் கட்டுமானம் நடக்ககூடாது என்று இயற்கை மீது காதல் கொண்டவளாகவும், பூர்வக்குடிகளின் நலனில் அக்கரை கொண்டவளாகவும்  நான் பூர்வக்குடிகளின் பக்கம் நிற்கிறேன். நானும்  எதிர்க்கிறேன். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?