செவ்வாய், 31 மே, 2016

அவளுக்கு ஜூடி என்று பெயர்

  "ஜூடியின் அருமை பெருமைகளை அறிந்த பி.பி.சி நிறுவனம், ஜூடியிடம் சிறப்பு நேர்காணல் செய்தனர். ஒவ்வொரு கேள்விக்கும் விதவிதமாய் குரைத்து தன் உணர்வுகளை பகிர்ந்துக்கொண்டாள் ஜூடி."
 யார் அந்த ஜூடி?


இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம். தென்கிழக்காசியாவில் பலநாடுகளை, தன் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வந்திருந்தது ஜப்பான். நாடுகளை ஆக்ரமித்ததோடு அங்கே கொடுங்கோல் ஆட்சியை புரிந்தது.
ஜப்பானின் சர்வதிகார ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வர பிரிட்டன் தன் ராணுவக் கப்பல்களை அவ்வட்டாரத்தில் உலாவவிட்டிருந்தது.

அதிலே ஒன்று எச்.எம்.எஸ் இங்னாட் கப்பல். பெரும்பாலும்  பலகையால் செய்யப்பட்ட   இராணுவக்கப்பல் அது. அதற்கு பதிலாகத்தான் எச்.எம்.எஸ் 'கிராஸ் ஹோப்பர்' கப்பல் கொண்டு வரப்பட்டது. அந்தப் போர்க்கப்பலின் கேப்டன் ரியர் அட்மிரல். அவர் கோபக் கண்களோடு பார்க்க, ஒரு மூலையில் சிமிட்டாத கண்களோடு உட்கார்ந்திருந்தாள் ஜூடி. ஜூடியின் கண்களும் கேப்டன் ரியர்  கண்களும் சந்தித்துக்கொண்டன. ஒன்றும் பேசாமல் ஒரு முறைப்புடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் கேப்டன் ரியர்.

அப்போது  'கிராஸ் ஹோப்பர்' சீனாவின் புகழ்பெற்ற 'யாங்சி' நதியின் முகப்பில் நங்கூரமிட்டிருந்தது. ரியர் தனது வீரர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டார். அவரின் உத்தரவுக்குப் பின்னால் ஜூடி தன் தலையைத் திருப்பி வானுயரப் பார்த்துவிட்டு வெறித்தனமாகக் குரைத்தது. இராணுவ வீரர்கள் அதை அமைதிப்படுத்த முயன்று தோற்றனர். தன்னுடைய உத்தரவை  ஜூடி மீரியதாக அதன்மேல் கடும் சினங்கொண்டார் ரியர்.
ஜூடியின் மீது தனது கோபத்தை காட்ட எத்தனித்த நொடியில், ஜப்பானிய போர் விமானம் ஒன்று 'கிராஸ் ஹோப்பர்'  பக்கத்தில் வந்துவிட்டது. மிகவும் தாழ்ந்த நிலையில் கிராஸ் ஹோப்பரை நெருங்கிய காரணத்தினாலோ என்னவோ விமானத்தின் கேப்டன்  'கிராஸ் ஹோப்பர்'  மீது தாக்குல் நடத்தாமல் விமானம் விபத்துக்குள்ளாவதிலிருந்து தவிர்க்க மீண்டும் மேலெழும்பி பறக்கலானார்.

ஜப்பான் விமானத்தின் வருகையை முன்னமே அறிந்துக்கொண்டு எச்சரிப்பதற்காகவே ஜூடி குரைத்திருக்கிறது என்பதை ரியர் உட்பட அனைவரும் உணர்ந்தனர். ஜூடி இப்படி ஒரு முறையில்ல பல தடவை இதுபோன்ற எச்சரிக்கையை செய்துள்ளாள் என்றும் அநேக பிரிட்டிஷ் படைவீரர்களின் உயிரை இக்கட்டிலிருந்து காப்பாற்றியுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு முறை ஜூடி முதலையின் பிடியில் சிக்கியது. ஜூடியின் வாழ்க்கை வரலாறு அதோடு முடிந்ததென பலரும் நினைத்தனர். ஆனால், ஜூடி அந்த முரட்டு முதலையிடமிருந்து தன்னை மீட்டு தப்பித்தது,  ஐந்து வாரங்கள் காட்டில் திரிந்து 200 மைல்கள் அலைந்து திரிந்து, இறுதியாக ஜப்பானியர்களின் போர்க் கைதியாக சிக்கியது.

அத்தருணத்தில்தான், ஐந்து போர்விமானிகளில் ஒருவரான பிராங் வில்லியம்ஸின் கருணைப் பார்வை ஜூடியின்மீது விழுந்தது. அவரின் நேசத்துக்குறியவளாக ஜூடி மாறியது. கப்பலில் பல முகாம்களைச் சுற்றிவந்தது. பலவாறான தொல்லைகள், கெடுபிடிகளுக்கு நடுவே பிராங்கின் உதவியோடு இங்கிலாந்து வந்துச் சேர்ந்தாள் ஜூடி.

ஒரு சாதாரண நாய், திசைமாறித் திருந்து ஒரு போர்க்கப்பலில் தஞ்சமடைந்து, ஒரு போர் வீராங்கனைப்போல பல வேளைகளில், பல இராணுவ வீரர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிய கடமைதனை மதித்தது பிரிட்டன் ராணுவம்.
ஜூடிக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. ஜூடிக்கு 'டிக்கின்' பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தியது.  1947-ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார் பிராங்க் வில்லியம்ஸ். அவர் தனது மிச்ச வாழ்க்கையை டான்சானியாவில் கழிக்க விரும்பினார். அப்பொழுது தனது நேசத்திற்குறிய ஜூடியை உடன் அழைத்துச் சென்றார்.

1950-ஆம் ஆண்டு தனது உடலில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக ஜூடி உயிரிழந்தது. அப்போது அதற்கு வயது 14. ஜூடிக்கு அரசு விமானப்படையின் சீருடை அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஜூடிக்காக அது அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை ஒன்றும் எழுப்பப்பட்டது.

ஜூடியின்  கதையை அனைவரும் அறிந்துக்கொள்ளும் நோக்கில், பிரிட்டிஷ் குழந்தைகள் தொலைக்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது. மேலும், 2006-ஆம் ஆண்டு லண்டன், இம்பீரியல் போர் விலங்குகள் அருங்காட்சியகத்தில் ஜூடியின் பதக்கங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. 1937 ஆம் ஆண்டு பிறந்த ஜூடி பிப்ரவரி 17 -ஆம் தேதி 1950 ஆண்டு தனது வாழ்நாளை முடித்துக்கொண்டாலும் அதன் சாதனைகள் அவ்வப்போது நினைவுகூறப்பட்டே வருகிறது.


குறிப்பு:
1943-ஆம் ஆண்டு முதல்   Dickin பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதுவரை
நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனை உட்பட கிட்டத்தட்ட 100 விலங்குகளுக்கு அப்பதக்கம் (விருது) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

திங்கள், 30 மே, 2016

எங்கள் நாட்டில் சாதி இல்லை!

மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். “செ…செ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” எனப் பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் “சாதிய பற்றிப் பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்க… நாம தமிழரா இணைஞ்சிருப்போம்” என ‘நாம் தமிழர்’ சீமான் போலச் சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விடச் சீமான் போன்றவர்களின் அரசியலே சாதியை வளர்க்ககூடியது. ‘தமிழர்கள்’ எனும் அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்வார்களாம். ஆனால் சாதிய மனம் அப்படியே அடியில் இருக்குமாம். இவர்கள் சொல்லும் தமிழர்கள் இணைப்பில் தலித்துகளோ அவர்கள் நலன்களோ காக்கப்படாததும், அவர்களுக்காக எவ்விதத்திலும் போராடாததற்கும் தருமபுரி சம்பவமே ஒரு சமீப சான்று. தமிழர்கள் என்ற தேசியத்தின் கீழ் தலித்துகள் இவர்கள் பட்டியலில் அடங்குவதில்லை. சமூகத்தில் ஊடுருவியுள்ள ஒரு நோய்மை குறித்துப் பேசாமல் இருப்பது அதனோடு ஒத்துப்போவதற்குச் சமமானதே. இன்னும் சொல்லப்போனால் அதன் வளர்ச்சிக்கு நாம் இடதுகையால் உரம் போடுகிறோம் என்றே அர்த்தப்படும்.

மலேசியாவில் இந்தநிலை நெடுங்காலமாகவே இருந்து வருவதுதான். ‘இண்டர்லோக்’ நாவல் விவகாரத்தில் கொஞ்சம் சமூகத்தில் உள்ள சாதி குறித்துப் பேசப்பட்டுப் பின்னர் அமுங்கிப் போனது. தாங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் இல்லை எனப் பிரகடனப்படுத்த எல்லோருக்கும் அந்தச் சம்பவம் பெரும் பாதை அமைத்துக்கொடுத்தது. இப்படி மலேசியாவில் உள்ள சாதி அமைப்புக் குறித்துப் பேசுவதை ஒரு பாவமாக்கிவிடும் கூட்டம் ஒரு பக்கமும் ‘தமிழர்கள்’ எனும் அடையாளத்தால் ஒன்றிணைவோம் அதனால் சாதி அழியும் எனக் கூச்சல் இடும் கோமாளிகள் மறுபக்கமும் என மலேசிய சூழல் போய்க்கொண்டிருக்க, வெளியில் உள்ளவர்களிடம் “எங்கள் நாட்டில் சாதி இல்லை” எனச் சொல்ல வசதியாகி விடுகின்றது.

சாதிகள் என்று ஒன்றும் இல்லை என்று வெறும் பேச்சினில் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணையையும் நண்பர்களையும் மனம்போலத்தேடிக்கொண்டவர் என் தந்தை. ஆனால், என் அப்பாவை சார்ந்தவர்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்த காலகட்டத்திதான், மீண்டும் இணைவதற்குக் காரணமாக நானும் என் தம்பியும் பிறந்தோம். எங்கே பிள்ளைகள் தாய்வழி சமுகமாக வளர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தோடே என் அப்பாவை சார்ந்தவர்கள் மீண்டும் அப்பாவோடு இணையத் தொடங்கினர். அதற்கு இன்னும் வலுவான சம்பவமாக என் பூப்பெய்த நாள் சடங்கு நிகழ்வு அமைந்தது. அப்பாவுடன் பிறந்த என் அத்தைகள் தங்கள் உரிமையை நன்றாகவே அன்றைய தினம் நிலைநாட்டினர்.

நானும் அன்றுதான் என் அப்பாவின் குடும்பத்தாரை முழுமையாகக் கண்டேன். என் அப்பாவின் உடன் பிறப்புகளில் மூத்தவர் லெட்சுமி அத்தை. அந்தக்குடும்பத்தின் சாதி காப்பாளர் தலைவராகவே அவர் இருந்தார். தாய் வழிச் சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கும் எங்களைத் தந்தை வழிச் சமூகமாக மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் அவரே மேற்கொண்டார். அதன் முதல் திட்டமாகப் பள்ளி விடுமுறையில் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். எனக்கு 14 வயது இருக்கும். அத்தையின் சாதி கற்பித்தல் மிகவும் நூதனமானது; பயங்கரமானது. அதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன்.

மிக அழகான, வசதியான, பளிங்குக் கற்கள் போட்ட, குளிர்சாதன வசதிகொண்ட சொகுசு வீடு அத்தையுடையது. 80-ஆம் ஆண்டுகளில் அவர்கள் அந்த வீட்டைக் கட்டினார்கள். அது உண்மையில் பெரிய விஷயம். காரணம் வசதி படைத்த தலைவர்களும், சீனர்களும் மட்டுமே அப்படி ஒரு வீட்டை அந்தக் காலகட்டத்தில் கட்டி இருந்தனர். (அவர்களின் அந்த வீட்டுக்கும், சொத்துக்கும் பின்புலமாக, அவர்கள் சூரையாடிய பலரின் வாழ்வும், உழைப்பும் உள்ளதைப் பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.)

எனக்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும். அத்தைக்கு 3 ஆண் 1 பெண் பிள்ளைகளும் இருந்தனர். அத்தை மகன்களில் ஒருவருக்கு என்மேல் விருப்பம் இருந்ததால், அதைச் சாதகமாக்கிக்கொள்ளச் சிறு வயது பிள்ளை என்றும் பாராமல் எனக்குத் தீவிரமாகச் சாதிப் பாடம் எடுத்தார். அத்தையின் விசாலமான வீட்டில் சமையலறை தனி வரவேற்பறை மாதிரி இருக்கும். வீட்டிற்கு உபயோகப்படுத்துவது அனைத்தும் சில்வர் பாத்திரங்கள்தான். வீட்டிற்கு வெளியே பின்புறத்தில் தனியாகக் கண்ணாடி பாத்திரங்கள், குவளைகள் அடுக்கிய ஒரு அடுக்கு இருந்தது. அதில் இருக்கும் பொருள்களை அத்தை உபயோகப்படுத்தவே மாட்டார். மாமா செம்பனை தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து, ஆள்களை வைத்து வேலை செய்துகொண்டிருந்தார்.

வேலைக்கு வராதவர்கள் காரணம் சொல்வதற்கோ, கைப்பணம் வாங்குவதற்கோ அத்தையின் வீட்டிற்கு வருவதுண்டு. வருபவர்கள் வாசலைத்தாண்டி வீட்டிற்குள் வரமாட்டார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் என்னிடம் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். நான் வீட்டிலிருந்த குவளையில் தண்ணீர் கொண்டு வந்தேன். என்னைத் திரும்பி பார்த்த அத்தை அதிர்ச்சியானார். “உள்ளே போடி நாயே,” என்றார். எனக்கு அத்தை ஏன் ஏசுகிறார் என்று புரியவில்லை. “சில்வர் குவளையில் தண்ணீர் கொடுக்கிறாயே, உனக்கு அறிவு இருக்கா?” என்றார். வாசலிலேயே உட்கார வைத்திருக்கேனே அவர்கள் பறையர்கள் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கடுமையாக வசைபாடினார். பிறகுதான் தெரிந்தது வீட்டிற்கு வெளியே உள்ள பாத்திரங்கள் அத்தை தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பவர்களுக்காக ஒதுக்கியது என்று. அந்தப் பாத்திரத்தில் உணவையோ, தண்ணீரையோ கொண்டு வரும்போது வீட்டிற்கு உள்ளிருந்து கொண்டுவரக்கூடாது. வெளிப்புறமாகவே வரவேண்டும். உபயோகப்படுத்தின பாத்திரங்களையும் வந்த வழியே கொண்டு போய்க் கழுவி, இருந்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும்.

அவர்கள் சென்ற பிறகு, வாசலைக் கழுவ வேண்டும். அத்தையின் இந்த நடவடிக்கைகளை அவர்களின் குடும்பத்தினர் மிகவும் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். நான் மட்டுமே பச்சைப் பிள்ளையாக அந்த வீட்டில் இருந்தேன். அத்தை என்னை அவரின் மருமகள் ஆக்கிக்கொள்வதற்குக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அங்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் சாதிக்காப்பாளர் வீடுகளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் என்பது அவர்களிடத்தில் போன பிறகுதான் தெரிந்தது. அதிகம் படிக்காத அப்பா காதலினால் ஈர்க்கப்பட்டு, சாதி பார்க்காமல் திருமணம் செய்துகொண்டார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சிறுவயதிலிருந்தே அப்பா எல்லாரிடமும் நட்புடன் பழகியதை மாபெரும் குற்றம்போல், அத்தையும் பாட்டியும் திரும்பத் திரும்பக் கூறியபோதுதான் அப்பா வேறு மாதிரி என்று உணர்ந்துகொண்டேன்.

அத்தையின் சாதி பிடிப்பு என்னை இரவு பகலாக ஆட்டிப் படைத்தது. ஒவ்வொரு விஷயத்திலும் சம்பவத்திலும் சாதியை நுழைப்பதில் அத்தையை மிஞ்சியவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. அத்தையின் இந்த நடவடிக்கையால் சொகுசான அத்தைவீடு சிறையாக மாறி வருவதை வெகுசீக்கிரமே உணர்ந்துகொண்டேன். அத்தை மகன்மேல் கொண்ட மயக்கம் எல்லாம் பயமாக மாறிப்போனது. ஒரு மாதம்கூட முழுமையாக முடியாத நிலையில், அத்தை வீட்டில் தொடர்ந்து இருந்தால் மனநல காப்பகத்திற்குச் செல்வது உறுதி எனத் தெளிவாகத் தெரிந்தது. அதுவே நான் அத்தைவீட்டில் தங்கியது முதலும் கடைசியுமாகும். அத்தைப்போலச் சாதித் தீவிரம் அப்பா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரிடத்திலும் இருந்தது. என் வயதை ஒத்த அவர்களின் பிள்ளைகள் சட்டென்று சாதி பெயர் சொல்லி ஒருவரை சுலபமாகத் தாக்குவதில் எந்தக் குற்ற உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை.

நான் தலைநகருக்கு வந்த பிறகு கம்பத்தில் உள்ளதுபோலத் தீவிர சாதியர்களை அவ்வளவாகக் காண முடியவில்லை. தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பத்தைக் காப்பாற்றுவதிலேயே எனது மொத்த நேரத்தையும் செலவு செய்ததால் நாட்டில் நடப்பதையும், சமூக விஷயங்களையும் கண்டுகொள்ளாமலேயே சுயநலமாக இருந்துவிட்டேன். அந்தக் குற்ற உணர்வு என் மனதின் ஓரத்தில் இன்றும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக மலேசிய அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நான் விரும்பியதே இல்லை. எல்லோரும் சொல்வதுபோல, திருமணத்தில் மட்டும் சாதி பார்ப்பதாக இருந்த பேச்சையும் நம்பியதுண்டு. இவை அனைத்தும் எளிய மக்களின் சுய கருத்து மட்டும்தான் என்பதை நான் நிருபராகிய பிறகு தெரிந்துகொண்டேன். அரசியலில், கோயில்களில், அரசு சாரா அமைப்புகளில் சாதியம் எவ்வாறு புகுந்து ஆட்சி செய்கின்றது என்பதையும் அது மேல் மட்டத்தில் எவ்வாறு இயங்குகிறது, இயக்குகிறது என்பதையும் அறிய வாய்ப்பும் கிடைத்தது.

ஆதி.குமணன் வாழ்ந்த காலத்தில் தான் ஆசிரியராக இருந்த நாளிதழில் எவ்வளவு பணம் கொடுத்தலும் சாதி சார்ந்த விளம்பரம் வராது என அறிவித்திருந்தார் என்பது பலரது நினைவில் இருக்கலாம். இன்று அவரது அல்லக்கை நல்லக்கை நொல்லக்கை எனச் சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் பத்திரிகை விற்பனைக்காக எவ்வாறான சமரசங்களில் ஈடுபடுகிறார்கள் எனக் கொஞ்சம் நாளிதழ்களை ஆராய்ந்தாலே புரியும். வணிகத்துக்காக ஆதியின் பெயரை ஒரு பக்கமும் சாதி சங்கங்களின் பெயரை மறுப்பக்கமும் பிரசுரித்து லாபம் தேடும் இவர்கள் சமூகத்துக்காகப் போராடுவதாக வர்ணிப்பதெல்லாம் தங்கள் வயிற்றுப்பாட்டுக்குதான். சமூகம் எனச் சொல்லிக்கொள்வதும் தங்களின் குடும்பத்தைதான்.

அடுத்ததாக மலேசிய தமிழர்களின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய ம.இ.கா சாதி கட்சிதான் என்ற கருத்துகளை ஆதாரங்களுடன் கட்சியில் உள்ள சிலரும் எதிர்கட்சியினரும் மிக வலுவாக முன்வைக்கின்றனர். அதற்கான சூடான விவாதங்கள் கடந்த ஆண்டு நடந்த ம.இ.கா தேர்தலில் காண முடிந்தது. பல குட்டுகள் அம்பலமானதும் அப்போதுதான். கட்சியின் தேசிய தலைவரும் ஏதோ ஒரு மேல்தட்டு சாதியின் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது வெளிப்படையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், பல அமைச்சர்களின் படங்கள் சாதிச் சங்கங்களின் ஆண்டு இதழ்களில் ‘ஆலோசகர்’, ‘காப்பாளர்’ என்ற அடைமொழியுடன் வருவதுதான் கொடுமை. இதைத்தவிர இன்றைய பத்திரிகை அதிபர்களாகவும் தமிழ்ப்பள்ளிக் காப்பாளர்களாகவும் தங்களைப் பறைச்சாற்றிக் கொள்பவர்கள் சாதிய அடையாளங்களுடன் கூட்டங்கள் நடத்தியதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது.

இவை ஒருபுறம் இருக்க, அண்மையில் பத்திரிகையில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘கொங்கு பிரதர்ஸ்’ சம்பவம் சாதி உயர்மட்டத்தில் மலேசியாவில் எப்படி வேரூன்றியுள்ளது என்பதற்கான சான்று. ம.இ.காவின் முன்னாள் துணைத்தலைவரின் மகன் சுந்தர் சுப்ரமணியம்தான் அந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டவர். கொங்கு சகோதர்கள் மிகவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதின் விளக்கத்தை அவர் போட்ட ‘வாட்சப்’ (whatsapp) செய்தி அம்பலப்படுத்தியது. அதற்காகச் சுந்தர் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். உண்மையில் அவர் விமர்சிக்க மட்டுமே பட்டார் என்பதைச் சிறிது அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

இப்படிப் பல சாதி சம்பவங்களையும் நடவடிக்கைகளையும் காணும்போது அப்படியா? அப்படியா! என்று பல அப்படியாக்களைப் போட்டு நான் அடங்கி விட்டேன். காரணம் முன்பை விடவும் இளம் சமூகத்தினரிடத்தில் மிகத் தீவிரமாகச் சாதிப் பிடிப்பு இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

திருமணம், கோயில், கட்சி, கூட்டம் என எங்கும் சாதி சூழ்ந்திருக்கும் இந்த நாட்டில், சாதி எதிர்ப்பாளர் அல்லது சாதிக்கு எதிரானவர் ஒவ்வொருவரையும் நான் ஒவ்வொரு பாரதியாகவே பார்க்கிறேன். அதில் முதல் பாரதியாக என் அப்பா இருப்பதில் என்றும் கர்வம் கொண்டவள் நான்.

(நன்றி வல்லினம், செப்டம்பர் 2014) 

ஞாயிறு, 29 மே, 2016

தூக்கம் பறித்த 'ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்'

புத்தகம்: ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
ஆசிரியர்: நரன்






சிறிய தோட்டா

‘கடைசி மாவில் ஒரு குட்டி தோசை 
குழந்தைக்கென 
தைத்த மிஞ்சிய சிறு துணியின் குட்டி கீழாடை அவளுக்கு 
உள்நாட்டுப் போரின் போது 
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில் 
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா 
குழந்தையின் உடலுக்கென..’ 

கவிஞர் நரன் எனக்கு அறிமுகமானது இந்தக் கவிதையின் வழிதான். போரில் எது வேண்டுமானாலும் நடக்கும். நமக்கும் அது தெரியும்தானே. ஆனால், இந்தக் கவிதையின் கவிஞர் கொடூரத்தை மிக அமைதியான மொழியில் தயார் படுத்தியிருக்கிறார். ‘நரனுடைய ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ கவிதை தொகுப்பில் இப்படியான கவிதைகள் அதிகம் உள்ளன.

நரன், 2004-ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் எழுதிவருபவர். இவர் சமீபத்திய எழுத்தாளர்களில் கவனிக்ககூடியவராக இருக்கிறார். இவருடைய முதல் கவிதை தொகுப்பு ‘உப்புநீர் முதலை’ 2010-ஆம் ஆண்டுக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. 60 கவிதைகள் கொண்ட அந்தத் தொகுப்பு நரனுக்கு நவீன எழுத்தாளர்கள் மத்தியில் நம்பிக்கையான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. அதனைத்தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ என்ற நரனுடைய இரண்டாவது கவிதை தொகுப்பை கொம்பு பதிப்பகம் வெளியிட்டது.
.
இரண்டு கவிதை தொகுப்புக்கும் பெரிய இடைவெளி இல்லாத பட்சத்தில் ஏறக்குறைய ஒரே பாணியில் உள்ளது என்று கூறலாம். ஆனால், நரன் கவிதையில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள் மிக முக்கியமானதாகவும் விவாதத்திற்கு உட்பட்டதாகவும்தான் இருக்கிறது.

குறிப்பாக முதலாளித்துவம், அதிகார வர்கம், சமூகம் உள்ளிட்ட கேள்வியோடு ஊடாடுகிற கேட்கும் விதத்தில், நரன் தன் கவிதை பார்வையை முன்வைத்திருக்கிறார்.

பேரமைதி என்ற கவிதை வரிகளை இப்படி முடித்திருப்பார்…

‘புத்தனிடமும் ஒரு குளமிருந்தது 
அதற்குள் ஓராயிரம் மீன்கள் 
ஓராயிரம் தாமரைகள் 
ஓராயிரம் கொக்குகள் 
நீரற்ற நீரால் 
தசையற்ற மீன்களால் 
இதழ்களற்ற தாமரைகளால் 
பறந்துவிட்ட கொக்குகளால் 
நிரம்பியிருக்கிறது அக்குளம் 
எப்போதும் வற்றாக் குலமது 
அதில் சலனிக்காத நீர் 
அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது 
புத்தனின் முகத்தைப் பார் 
எவ்வளவு சலனம் 
எவ்வளவு பேரமைதி 
இரண்டும் ஒன்றெனப் போல்’ 

(உப்புநீர் முதலை)

ஈழப்போராட்டத்தில் புலம் பெயர்ந்த மக்களின் வலியையும், அதனால், வெறுமையில் இருக்கும் அந்த ஊரையும் இதைவிடத் துள்ளியமாக எப்படிச் செல்வது? வாழ்வின் சலனத்தும்… பேரமைதிக்கு ஒரே உவமையாக நரன் கையில் எடுத்திருப்பது புத்தனை. அதே வேளையில் திரு.பெலிக்ஸ் என்ற கவிதையில் வாழ்வின் அடுத்தடுத்த பரிமாண மாற்றங்களை மிக எதார்த்தமாகச் சொல்லி கடந்து போகிறார் நரன்.

‘உப்பு நீர் முதலை’ என்ற கவிதை தொகுப்பில் ‘முதலை’ என்ற கவிதை மிக முக்கியமானது .

‘உப்புநீர் முதலையொன்று துயில்கிறது 
தலையை நீருக்குள்ளும் 
உடலை வெண்மணலிலும் 
கிடத்தியபடி 
அப்போது அதனுடல் 
கார்காலத்தில் தொடங்கி 
கோடைகாலம்வரை நீண்டிருக்கிறது’ 

அந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கவிதைகளை எளிதில் புரிந்துகொள்ளச் செய்யும் உபாயம் இந்தக் கவிதையைப் புரிந்துக்கொள்வதின் வழி பெற முடியும் என நினைக்கிறேன்.

‘பல்லுயிர் படிம ஆராய்ச்சியாளரான 
63 வயது திரு.பெலிக்சுக்கு 
177 ஆண்டுகள் பழமையான 
மதுப்புட்டியொன்று கிடைத்தது 

‘மிச்சம் இருந்த மதுவை 
குவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் 
17 ஆண்டுகள் மீதமிருந்தன’ 

தலைமுறை சிக்கல்களை மட்டுமல்ல, வாழ்க்கையின் எதார்த்தம் கையறுநிலையில் வெளிபடுவதாய்தான் நான் இவ்வரிகளைப் பார்க்கிறேன். நரன் தனது கவிதைகளில் எண்களோடு விளையாடியிருக்கிறார். ஆம், பல இடங்களில் கணிதம் வழியே அவரின் கவிதைகள் நம்மோடு கூட்டி கழித்து விளையாட்டுக் காட்டுபவையாக இருக்கின்றன.

‘47 முறை’ என்ற கவிதையில்
“நீண்ட கழுத்திற்கும் உடலுக்குமிடையே தொடர்பறுந்த ஆணுடல்” 
இவ்வோவியத்தை வரைய 
கிட்டதட்ட 47 முறை துருவேறிய கத்தியால் கழுத்திற்கும் 
உடலுக்குமிடையே 
நேர்கோடிட வேண்டியிருந்தது என்னை 

(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

கணிதத்தோடு நரன் விளையாடும் கவிதை வரிகள் நம்மை நிலைக்கொள்ளாமல் செய்து விடுகின்றன.

நடை முறை வாழ்கையில் நாம் எண்களை நிறையப் பயன்பாட்டிற்கு உட்படுத்துகிறோம். ஆனால் இலக்கிய வடிவில் அதைப் பக்க எண்களாக மட்டுமே புத்தகங்களில் பயன்படுத்துகிறோம் . 10 மணிக்குச் சந்திக்கலாம் , 17 பேர் வந்திருந்தார்கள் , 1300 வருடங்கள் பழையது, இப்படியாகச் சொற்கள் வெளிப்பாட்டில், எண்கள் மிக முக்கியமான பாத்திரமாக ஊடாடிக்கொண்டிருக்கிறது . காலபோக்கில் இலக்கிய வெளியில் என் தனித்த அடையாளமாக எண்கள் மாறிப் போய்விட்டது.

‘வார்த்தையைச் சுரக்கும் கிணறு’
என்னும் ஒரு கவிதையும் இவ்வாறான கணித விளையாட்டோடு உளவியல் சிக்கள் சொல்லக்கூடியதாகத்தான் நான் பார்க்கிறேன். இன்னும் நரனின் இந்தக் கவிதைத் தொகுப்பில்

5600 கந்தக இழுசக்தி திறன் புல்லட் ரயில்
ஜோடி ரிஷபம்
பசுவிற்கு ஆறு கால்கள்
7 மார்புடைய பெண்
ஏழாயிரத்து பதினொரு கிழந்தைகளின் எழும்புத் துண்டங்கள்
கர்பவதிக்கு இரண்டு யோனி
மூன்று ஆணிகள்

இன்னும் பதினான்காயிர கையுடையால், ஏழாயிரத்து நூற்றுச் சொச்சம் குதிரைகள், 127 மன்னர்கள், என எங்கும் விரவிக்கிடக்கிறார்கள். ஒரு வாசிப்பாளனாக இத்தனை புனைவுகளையும் நாமும் சுமந்துக்கொண்டு கணம் கூடிய நத்தை என நகரவேண்டியுள்ளது.

‘வீட்டில் வழுங்கி விழுந்தாள். அம்மா 
வீடாய் எழுப்பப்படும் 47 ஆண்டுகளுக்கு முன் 
இவ்வீடு நீரென்ற வார்த்தையைச் சுரக்கும் 
கிணறாயிருந்தது’ 
(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

நரனின் கவிதைகளில் ஒளிந்துக்கொண்டு ரணங்கள் அக்கிணற்று நீரைப்போல் நம்மில் தங்கி விடுகின்றன.

முதலாளித்துவத்தைக் கேள்விக் கேட்கும்படியான பல கவிதைகளை நாம் படித்திருப்போம். ஆனால், நரனின் கவிதைகளை அதிலிருந்து கொஞ்சம் மாறுபடுத்திப் பார்க்கலாம். அவர் முதலாளித்துவத்தோடு, மேற்கத்திய கலாச்சாரத்தையும் கேள்வி கேட்கிறார். இன்று சமூதாயம் அதன் பகட்டான மேற்கத்திய மோகங்களைப் பிரெண்ட்-டில்தானே வைத்திருக்கிறது. இதை வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார் நரன்…

‘ஷூ’ 

காலையில் விடைப்பெறும் போது மனைவியின் 
உதட்டைக் கவ்வி அவள் நாவை என் எச்சிலால் 
ஈரப்படுத்துவேன். 
-பதிலீடாய் அவளும்- 
தினமும் அலுவலகம் வந்ததும் 
என் எஜமானனிடம் ‘லீ கூப்பர்’ கால் பதாகைகளை (ஷூ) 
நாவால் நக்கி சுத்தப்படுத்துவேன். 
மனைவியின் நாவால் வலதுகால் ‘ஷூ’ சுத்தமாச்சு’ 

இப்படி அதிகார வர்கத்தைக் கேள்வி கேட்கும் சில கவிதைகளை நரன் சற்று காத்திரமாகவே வைத்திருக்கிறார்.

‘இங்கே’ என்ற கவிதையில் கண்கள் தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தை / ‘ரே-பான்’ கருங்கண்ணாடிகள் மறைக்கும் என்கிற கவிதையும் அதிகார வர்கத்தைக் கேள்வி கேட்கும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

நரன் கிருஸ்துவப் பின்புலத்திலிருந்து வந்தவர் என்ற காரணமோ அல்லது என்னவோ அவரின் கவிதைகளில் நிறையக் கிருஸ்துவ மணம் வீசுகின்றன. பல இடங்களில் அதை அவதாணிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இருந்தபோதிலும், சலிப்பு தட்டாது, வாசகனின் மூளைக்கு நிறையவே வேலை கொடுக்கிறார் நரன். சில கவிதைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நேரடியாகத் தெரிந்துவிடுகிறது. சில கவிதைகள் ஓரளவுக்கு இதைத்தான் சொல்கிறார் என்று இரண்டாம், மூன்றாம் வாசிப்பில் அவதானிக்க முடிகிறது. சில கவிதைகள் எதைத்தான் சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழவும் செய்கிறது.

காலுரைகள்; காலணிகள்; ஹிருதயங்கள் என்ற கவிதையை உதாரணம் கொள்ளலாம்.

பதினான்காயிரம் கையுடையாள் 
அவளிடம் பதினான்காயிரம் வெள்ளை உடுப்புகள்; 
காலுறைகள்; காலணிகள்; ஹிருதயங்கள் 
பதினான்காயிரத்து ஒன்றாய் ரோகியொருவன் உருவாகும் பொழுது 
அவளும் பதினான்காயிரத்தொன்றாகிறாள் 
யாரேனும் ஒருவர் சொஸ்தப்பட்டோ; 
அல்லது நோய் முற்றியோ 
கருப்பு வண்டியில் இல்லம் திரும்பும் போதோ அவள் 13999 ஆகிறாள் 

எல்லாருக்கும் ஊட்டுகிறாள். துடைக்தெடுக்கிறாள் 
மருந்திட்டுக் கண்ணீரும் சிந்துகிறாள் 
கழுத்து வரை போர்த்தி விளக்கை ஊதியணைக்கிறாள் 
நேர்த்தியாக இரவு உருவாகவும் செய்கிறது 

உபரியென யெதுவுமில்லை அவளிடம் 
சில ரொட்டித் துண்டுகள்; சில வெண் பஞ்சுகள்; 
சில காடாத்துணிகள்’ 

நரன் இந்தக் கவிதையின் வழி சொல்ல வருவது என்ன? அவர் கூறும் பதினான்காயிரம் கையின் உவமைக்கு அர்த்தம் என்ன? பிறகு ஏன் அவள் 13999 ஆகிறாள். ஏன் அவளிடம் ரொட்டித் துண்டுகளும், வெண் பஞ்சுகளும், காடாத்துணிகளும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன? கையுடையாள் என்பவள் உண்மையில் பெண்தானா? அல்லது அதுவும் புனைவா? கருப்பு வண்டி என மரணம் பற்றியும் இந்தக் கவிதையில் நரன் பேசுகிறார். இப்படி நானே பல கேள்விகளைக் கேட்டு கேட்டு விடை காண்கிறேன். விடை கிடைக்காமலும் இருக்கிறேன். வேறு ஒரு சந்தப்பத்தில் விடை கிடைக்கும் எனவும் காத்திருக்கிறேன்.

நரனிம் இந்த (ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்) என்ற கவிதை தொகுப்பில் மிக முக்கியமான கவிதையாக நான் பார்ப்பது உணவு வு…ண…உ கவிதையாகும்.

அப்பா உணவு மேசையிலிருந்து 
இரண்டு நாள் தொலைவில் வேட்டையாடிக் 
கொண்டிருக்கிறார் 
ஒரு காட்டு எலியை 
நாங்கள் இங்கே காலி தட்டுகள் முன். 
இளையவன் பீங்கான் தட்டுகளை உடைத்து உடைத்து 
சில்லுகளைக் காப்பிக் கோப்பைக்குள் முக்கி முக்கி 
சுவைத்தான் 
நான் எவர் சில்வர் தட்டுகளை முட்கரண்டியால் குத்தி 
குத்தி உண்டேன் 
சுத்தியலால் உடைத்து பிட்டு பிட்டு உண்டாள் அம்மா 
இவ் உணவு மேசையை 
பசியை எங்களிடமிருந்து துரத்திக் கொண்டோடுகிறார் 
எம் தந்தை 
பழக்கங்களைப் புசிப்பதென்பதுதான் விசித்திரமும் 
வாழ்வும். 

தொலைந்த வாழ்வின் எதார்த்தம், வறுமை, இயலாமை, முதலாலித்துவம், மேல் நாட்டு ஆதிக்கம் உள்ளிட்ட விடயங்களோடு நான் இந்தக் கவிதையைப் பொறுத்தி பார்க்கிறேன். இந்த ஒரு கவிதைக்குள் ஒரு சிறுகதையோ அல்லது ஒரு நாவலோகூட ஒளிந்துக்கொண்டிருப்பதாக நான் நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.

‘உப்பு நீர் முதலை’ கவிதை தொகுப்பில் அமைதியை விரும்பும் மனநிலை , மற்றும் தோற்ற பிழையின் மூலம் நாம் கண்டடையும் வாழ்வியல் தரிசனம் போன்றவையே அந்தத் தொகுப்பு நெடுகிலும் மிஞ்சுவதாக இருக்கிறது. ஆனால் ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ தொகுப்பில் சமுக அக்கறை , அதிகார மையத்தைக் கேள்வி எழுப்புதல், போன்ற செயல்பாடுகள் நிறையவே இருக்கிறது.

நரன் அவரது கவிதைகளில் பல இடங்களில் சுயத்தைப் பற்றிக் கூறும் வேளையில், அது குறித்த கேள்வியையும் நம்மிடம் கேட்கிறார். அவரின் கவிதைகள் எரியாத நெருப்பாகப் புகைந்துக்கொண்டே இருக்கின்றன. அதன் வெட்பம் பூடகமாக நம்மைப் புழுங்கச் செய்கிறது.

ஒரு கவிதை புத்தகத்தைத் திறந்து வைத்தேன்
கவிதையில் வந்து ஒரு குருவி சற்று அமரட்டுமென
சிறுகதை ஏடென்றால் கூடு கட்டி, மஞ்சள் குஞ்சு பொறித்து
நடை பழக்கி பின் செல்லும்
நாவலென்றால்…

இப்படி வரியை முடித்து நம் முகத்தை விட்டென ஏறிட்டு பார்ப்பதைப்போல இருக்கிறது நரனின் கவிதைகள். நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் கவிதை தொகுப்பில் பயன்படுத்தியிருக்கும் ஓவியங்கள் மிக நேர்த்தியானவை. இயற்கையாகவே ஓவியங்களில் ஆர்வம் கொண்டவரான நரனுக்கு, தமது தொகுப்பிற்கான ஓவியங்களைத் தேர்வு செய்வதில் பெரிய சிரமம் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. படங்களுக்கு ஏற்ற கவிதை அல்லது கவிதைக்கு ஏற்ற ஓவியம் எனத் தனியே பிரித்துப் பேச முடியாத அளவுக்கு இந்தத் தொகுப்பில் ஓவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரொபெட்டோவின் புகைப்படத்தோடு கூடிய ஓவிய பாணி படங்களும், வில்லியம் கான்ரீஜின் ஓவியங்களையும் கவிதை தொகுப்பிற்குப் பயன்படுத்த அதற்கு ஏற்ற கவிதை முதலில் தேவைப்படுகிறது. மிகப் பொறுத்தமாக அமைந்திருக்கிறது நரனின் கவிதைகள்.

ஆனால், ‘உப்பு நீர் முதலை’ தொகுப்பில் இருக்கும் எல்லா ஓவியங்களையும் நரன் வரைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நரனின் கவிதைகளில் ஏமாற்றமும், கோபமும்தான் எங்கும் இளையோடுகின்றன. அவரின் இரண்டு கவிதை தொகுப்புகளிலும் இதைக் காண முடிகிறது. வாழ்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்தது என்றால் இன்பத்தையும் பதிவு செய்துதானே ஆக வேண்டும். கவிஞன் என்பவன் துன்பத்தின் பிரதிநிதியாக மட்டும் தம்மை உணர்த்த முயற்சிப்பது ஏன்? கவிதை என்பது திட்டமிட்டு எழுதப்படும் விடயமா என்ன? நம்மைப் பாதிக்கும் சம்பவம் அல்லது காட்சி கவிதையாகக் காகிதத்தில் இறக்கி வைக்கும் போது நம்மைப் பாதிக்கும் இன்பத்தையும் கவிஞர்கள் கவிதையில் ஏன் பதிவு செய்ய முனைவதில்லை. அதிலும், நரன் வார்த்தைகளைப் பிரயோகிப்பதிலும், கவிதையை நவீன பாணியில் சொல்வதிலும் அவருக்கெனத் தனிப் பாணியை வைத்திருக்கும்போது, அவருக்கு இது சாத்தியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். அவரின் அடுத்தடுத்த படைப்புகள் அல்லது அவரோடு ஓர் இலக்கியச் சந்திப்புச் செய்தால்தான் நரன் விட்டுவைத்திருக்கும் இன்பம் என்ற அந்த வெற்றிடத்தின் காரனத்தை அறியமுடியும் என எனக்குத் தோன்றுகிறது.

ஒரு கவிதையில்…
மிகப்பெரிய மலைப் பாம்பொன்றை வரைந்தேனா 
அயர்ச்சியில் அதன் மேலேயே படுத்துறங்கி விட்டேன்… என்கிறார் நரன், அங்கே என் தூக்கம் பறிபோனதை அவர் அறிந்திருக்கமாட்டார்.

(நன்றி வல்லினம் ஆகஸ்ட் 2015 )


த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!

தற்கொலை என்ற சொல்லைக் கேட்டாலே கோழைத்தனம், உண்மைக்குப்

பின்னால் ஒளிந்து கொள்ளும் துரோகி, முட்டாள், சுயநலவாதி, ஏமாளி, கோமாளி இன்னும் எத்தனையோ பெயர்களை அறிவு ஜீவிகள் வரையறுக்கிறார்கள். ஒரு தற்கொலைக்குப் பின்னால் என்னென்ன நடந்திருக்கிறது? தற்கொலையாளியின் இயலாமை எதுவாக இருந்திருக்கும், மன உளைச்சலாகப் பட்டது தனியொரு தற்கொலையாளியை என்னவெல்லாம் செய்தது என்பதைப் பற்றி எத்தனை கூறு போட்டு ஆராய்ந்தாலும் பாதகமான சாட்சியங்களையே கொடுக்குமேயொழிய சாதகத்தை என்றைக்குமே கொடுத்ததில்லை. தற்கொலையாளிக்கு அப்பாற்பட்டவர்களோ சுயமாகக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலீடு இல்லாமலே தற்கொலையாளியின் கதையை 100 நாட்களோட்டி விடுவார்கள். இவர்கள் மிகவும் திறமைசாலிகள். இவர்களின் அரசியலை புரிந்து கொள்ளவே முடியாது.

தற்கொலைக்கு முயற்சித்தால் காவல் நிலையத்தில் அது ஒரு குற்றமாகக் கருதி பதிவு செய்து நீதிமன்றத்தில் தண்டனையும் நிர்ணயிக்கப் படுகிறது. இது ஒரு புறமிருக்க, ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என மேலை நாட்டவர்கள் மல்லுக்கு நிற்கின்றார். விதண்டா வாதிகளின் சுதந்திரத்துக்கு எல்லையே இல்லை. இவ்வளவு தெளிவாக விவரிக்கும் என்னைக் கொஞ்சம் கிளறினால் அட என உண்மை அதிர வைக்கும். நான் முதன்முறையாகச் செய்த தற்கொலை முயற்சியில் இறந்திருந்தால் என் கல்லறைக்கு 16 வயது ஆகியிருக்கும். இரண்டாவது தடவையாக மேற்கொண்ட முயற்சியில் இறந்திருந்தால் 14 ஆண்டுகள் ஆயிருக்கும். நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள் கனவு போல் அவ்வப்போது தலையைக் காட்ட அதற்கு எழுத்து வடிவம் கொடுக்கத் தருணம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

நான் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தேன் என்பதை அறம் சார்ந்து சொல்லவே முடியவில்லை. பதின்ம வயதில் ஏற்படும் வரட்டு திமிர், கோபம், துணிச்சல் இவைகளுக்கு முன்னால் அறமும் தார்மீகமும் தோற்றுத்தான் போயிருந்தன என் விசயத்தில்.

என்னுடைய முதல் தற்கொலை முயற்சி பதினான்கு வயதில் நடந்தது. நான் முதலாம் படிவம் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் மாணவத் தலைவியாகவும் கட்டொழுங்கு கண்காணிப்புப் பிரிவில் துணைத்தலைவியாகவுமிருந்தேன். தலைமைக்குரிய சில பொறுப்புகள் பள்ளி நிர்வாகம் எனக்கு வழங்கியிருந்தது. ஒரு சராசரி மாணவனோ மாணவியோ தவறுசெய்யும் பட்சத்தில் முன் அறிமுகமின்றியோ இன வேறுபாடு இன்றியோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மாணவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தாலோ, முறையான சீருடை அணியாமல் வந்தாலோ, பள்ளிக்கு மட்டம் அடித்தாலோ அவர் பெயர், வகுப்பு போன்றவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் அதே மாணவன் 3 குற்றங்கள் புரிந்தால் அவரின் விவரம் பள்ளி நிர்வாகத்துக்குச் சமர்பிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கை பள்ளி தேர்வின் போது கட்டொழுங்குக்கான மதிப்பெண்கள் குறைத்து மதிபிடச் செய்து பின்தங்கிய மாணவர்களின் வரிசையில் நிறுத்திவிடும். குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் எண்ணிகைகள் குறைக்கப்படும். திருட்டு, அடிதடியில் இறங்கும் மாணவர்களுக்குக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் பிரம்படி மற்றும் பள்ளி இடைநீக்கமும் செய்யப்படும். பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டால் வேறு எந்தப் பள்ளியிலும் இடம் கிடைப்பது சிரமம். இது போன்ற பிரச்சனைகள் மாணவர்களின் எதிர்காலத்துகு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் எங்களைக் கண்டதும் மாணவர்கள் உஷராகிவிடுவார்கள். குறிப்பாக ஆண் மாணவர்கள். எங்களைக் கண்டுவிட்டால் மரியாதை தாண்டவமாடும். போக விட்டுக் கொச்சை மொழிகள் ஆட்டமாக ஆடும். ஆதாரம் இல்லாமல் குற்றத்தை பதிய முடியாது என்றபடியால் பொறுத்துக்கொள் மவனே, ஒரு நாள்மாட்டும்போது வஞ்சம் தீர்க்கிறேன் என்று மனதில் பதிவு செய்துவிட்டு காதை தாளிட்டு அகன்று விடுவோம்.

வகுப்பறைக்குள் தலைமை மாணவர்களின் மிகப்பெரிய பொறுப்பே ஆசிரியர் இல்லாத நேரத்தில் மாணவர்கள் சத்தம் போடாமல் பார்த்துக் கொள்வது தான். 30 பேர் அடங்கிய வகுப்பறைக்குள் 3 இன மாணவர்களும் இருந்தோம். இவர்களைக் கைவசம் வைத்திருப்பது சுலபம் அல்ல. நான் ஒரு தந்திரம் செய்ந்திருந்தேன். துணை தலைமைக்காக மலாய் மாணவர்களில் ஒருவரையும், சீன மாணவர்களில் ஒருவரையும் தேர்வு செய்து வைத்துக் கொண்டேன். ஒவ்வொரு மனதுக்குள்ளும் தலைமைக்கான ஆசை இருக்கும் போலும். நான் தேர்வுசெய்த மாணவர்கள் சிற‌ப்பாக‌வே அதிகார‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி பிற மாண‌வ‌ர்க‌ளைக் கட்டுப்படுத்தினர். தமிழ்மாணவர்களை நான் பார்த்துக் கொண்டேன். அவர்களின் பேச்சை குறைப்பதற்குக் கதைப்புத்தகங்களைக் கொடுத்துவிடுவேன். அப்போதும் ஏதாவது பேச வேண்டும் என்றாள் தாளில் எழுதி பரிமாறிக்கொள்ள‌ச் சொல்வேன். என்தந்திரம் மாணவர்களிடம் பலித்திருந்தது. பள்ளி நிர்வாகம் சிறந்த தலைமை மாணவன், சிறந்தவகுப்புப் போன்றவைகளுக்குப் பரிசு வழங்கும் திட்டம் வைத்திருந்தது. அதில் நற்சான்றிதழ்களும் அடங்கும். அதைத் தட்டிச் சென்று விடவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தந்திரமும் செய்தேன். பரிச்சுக்கான அற்ப ஆசை என்னிடம் பேராசையாக மாறத் தொடங்கி இருந்தது.

ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டிற்குப் போகும் வழியில் நான் இரவல் கொடுத்த கதை புத்தகத்தை ஒரு மாணவன் திருப்பிக் கொடுத்தான். அதை வாங்குவதை அப்பா பார்த்து விட்டார். அப்பாவின் முகம் வெளுத்து இருந்தது. நாசமாய்ப் போறவன். இதை வகுப்பறையிலே கொடுப்பதற்கு என்ன? நடுரோடுதான் கிடைத்ததா? அவன் மேல் கோவப்பட்டு ஆகப்போவது என்ன? அப்பாவைப் பார்க்க பயமாக இருந்தது. தன் மகளின் மேல் எந்த நபரும் புகார் கூறிவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். இது போலச் சம்பவங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் என்னத்தைக் கண்டேன். அதுவும் 14 வயதில். வீட்டிற்குப் போனதும் ஒரு நாடகம் அர‌ங்கேற‌ப்போவ‌தை யூகித்துக்கொண்டேன்.

'அது என்ன புத்தகம், யாருடைய புத்தகம்' என்று அப்பா கேட்டார். "என்னுடையதுதான், அவன் இரவல் வாங்கி இருந்தான்" என்று சொன்னேன். "நீ ஏன் இரவல் கொடுத்தாய்?" என்றார். நான் விளக்கினேன். விளங்கிக் கொள்ளக் கூடிய நிலையில் அப்பா இல்லை. “இன்று நீ கொடுக்கும் புத்தகத்தை நாளை அவன் திருப்பிக் கொடுக்கும் போது அதில் ஒரு கடிதம் இருக்கும். நீ பதிலுக்கு ஒரு கடிதம் எழுதி வேறு ஒரு புத்தகத்தில் வைத்து கொடுப்பே. இத அப்பன் நான் கண்டு கொள்ளாம இருக்கணுமா" என்று சத்தம் போட்டார். என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. இது அபாண்டம் என்றேன். செய்யாத தப்புக்கு மண்டியிடும் குணம் என்னை எனக்குத் தெரிந்த நாளில் இருந்தே இல்லை எனலாம். செய்யாத தப்பு என்றால் அடித்தாலும் அஞ்சமாட்டேன். முதல் முறையாகக் குருட்டு தைரியத்தோடு பின்விளைவுகளை அறிந்திருந்தும் வாக்கு வாதத்தில் இறங்கினேன். ஓடிக் கொண்டிருந்த அப்பாவின் சிந்தனைக் குதிரையின் முட்டியை உடைக்கத் துணிந்தேன். என் பதின்ம வயதின் திமிர் எல்லாவ‌ற்றுக்கும் தயாராக இருந்தது. கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது. பறக்க பார்ப்பதாக அப்பா சொன்னார். பேச்சு வளர்ந்து அப்பா இறுதியில் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தார்.

“சீ! இந்த மாதிரி பிள்ளையைப் பெத்து வளர்க்கிறதுக்குச் செத்து ஒழிஞ்சிட்டா தூக்கி போட்டு நிம்மதியா இருக்கலாம். பெத்தவங்க நெருப்ப கட்டிகிட்டு செத்து செத்துப் பிழைக்கத் தேவையில்லை" என்றார். அப்பாவின் நாவின் வழி எய்த பிரமாஸ்த்திரம் என் நெஞ்சைப் பிளந்தது. என் புத்தியை மழுங்கச் செய்தது.

நான் அப்பாவின் வளர்ப்பு. எப்படி அவரால் என் மீது சந்தேகப்பட முடிந்தது. பிரம்மாஸ்திரம் திரும்பத் திரும்ப நெஞ்சில் பாய்ந்து கொண்டிருந்தது. நான் இருப்பதால் தானே அப்பா செத்து செத்து பிழைக்க வேண்டி இருக்கிறது. நான் சாவதற்குத் தயாரானேன். என் அறையின் கதவை சாத்திக் கொண்டேன். குறுந்தட்டுகளைத் துடைக்கும் மருந்து மட்டுமே இருந்தது. தாமதிக்கவில்லை. குடித்து விட்டேன். குடித்து முடித்ததும் பயம் வந்தது. மரணப் பயம். நான் கலவரத்துடன் கதவடைத்த‌து வீட்டில் உள்ளவர்களை ஐயுர வைத்திருக்க வேண்டும். வேகமாகக் கதவை தட்டினார்கள். திறந்தேன். மருந்தின் நெடி அறையெங்கும் பறவி இருக்க ஆரம்பமானது வேறொரு நாடகம். அம்மா புளியைக் கரைந்து வாயில் ஊற்றினான். என்னை விடுங்கள் நான் சாகிறேன் என்றேன். அப்பா பதறிப் போனார். துடிதுடித்தார். என்னைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். எனக்குத் தொண்டையில் இருந்து நெஞ்சுவரை எரிச்சலாக இருந்தது. மருத்துவர் பரிசோதித்தார். மருந்து புட்டியை மருத்துவர் பார்த்தார். அனைவரையும் வெளியே போகச் சொல்லி ஒரு மாதிரியான தண்ணி மருந்தைக் குடிக்கச் செய்து அனைத்தையும் வாந்தி எடுக்கச் சொன்னார். நான் சோர்ந்து இருந்தேன். மருந்து தண்ணி ஏற்றினார்கள். டாக்டர் என்னிடம் பேசினார். நீ சாகமாட்டாய். பிழைத்துக் கொண்டாய் என்றார். அடுத்த முறை சாக வேண்டுமானால் இங்கே வந்து விடு. சரியான மருந்து தருகிறேன் என்றார். சாகடிக்காத மருந்தோடு நேரத்தை விரயமாக்காதே என்றார். எனக்கு அவமானமாக இருந்தது. ஒரு பாட்டில் மருந்துத்தண்ணி இறக்கியவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு அப்பா என் விஷயத்தில் விழிப்புடனே ந‌டந்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பாவை வெகுவாகப் பாதித்து இருந்தது. ஆனாலும் அடுத்த இர‌ண்டு வ‌ருட‌த்துக்குள்ளாக‌வே அத‌ன் தொட‌ர்ச்சி அர‌ங்கேறிய‌து.

எனக்கு 16 வயது ஆனது. கடைசித் தங்கை பிறந்தாள். நான் அவளிட‌ம் மிகவும் ப்ரியமுடன் இருந்தேன். அவளும் தான். ஆனால் எனக்கும் மற்றொரு தங்கைக்கும் நட்பு அத்தகையதாக இல்லை. அவள் என்னைவிட ஐந்து வயது இளையவள்.

நான் பள்ளிக்கு கொடுக்கும் 50 காசை சேர்த்து வைப்பதற்குப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன். பள்ளி சிற்றுண்டியில் ஒரு குவளை குளிர்பானம் வாங்கினாள் 20 சென். மீதப் பணத்தில் ரொட்டி மட்டுமே வாங்க முடியும். பிரட்டல் சோறு அல்ல‌து பிரட்டல் மீ வாங்கினால் 50 சென். ஒன்று வாங்கினால் ஒன்று வாங்க முடியாது. அப்பாவின் சம்பாத்தியதில் 3 பேர் படித்தோம். அவரால் பள்ளிக்கு கொடுப்பதற்கு அவ்வளவுதான் முடிந்தது. ஆதலால் கொடுப்பது போதவில்லை என்று கேட்பதற்கு எங்கள் யாருக்குமே தைரியம் இல்லை. இப்படி இருக்க எதற்குக் காசை சேர்த்து வைக்கவேண்டுமென நீங்க‌ள் கேட்கலாம்.

அந்த வயதில் மனதுக்குப் பிடித்த நிறையப் பொருட்களும் உணவுகளும் உடைகளும் கொட்டி கிடந்தன. எத்தனை நாள் பார்த்து பார்த்து ஏங்குவது? நான் இரண்டு மாதமாக விட்டு விட்டு பட்டினி இருந்து 13 வெள்ளி சேர்த்து ஒரு ஒற்றைக்கல் தோடு வாங்கினேன். அது அழகான நீலக்கல் தோடு. என் பிறந்த நாள் அன்று பள்ளிக்குப் போட்டுக் கொண்டு போகவேண்டும் என்ற ஆவலோடு பல நாள் வைத்திருந்தேன். ஒரு நாள் அது காணாமல் போனது. எனக்கு அழுகையே வந்து விட்டது. சல்லடை போட்டு என் அறையைத் துலக்கினேன். எங்குமே இல்லை.

இறுதியில் பெரிய தங்கையின் காதுகளில் மின்னுவதைப் பார்த்து பொறுக்க முடியாம‌ல் "யாரைக் கேட்டு என் தோட்டை எடுத்தாய்" என்று ச‌த்த‌ம் போட்டேன். யாரைக் கேட்க‌ணும் என்றார் அம்மா. என்னால் ஒன்றுமே பேச முடிய‌வில்லை. அவ‌ரிட‌ம் பேசுவ‌த‌ற்கு பெரிய‌தொரு ம‌ன‌த்த‌டை என‌க்கு இருந்த‌து. என் இய‌லாமையும் ஆற்றாமையும் என் க‌ண்முன் குதித்து எள்ளி ந‌கையாடிய‌து.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னும் கூட நான் பொக்கிஷமாகப் பாதுகாத்திருந்த சில பொருட்கள் தங்கையின் கைமாறிக் காணாமல் போய் இருக்கின்றன. என் உள்ளம் கொதிப்பதும் குமறுவதும் யாருக்குமே கேட்கவில்லை. சகிப்புத் தன்மை என்னில் தீர்ந்து போய் இருந்தது. எனக்கும் அம்மா தங்கை உறவுக்கும் இடையில் சீனப்பெருஞ்சுவர் நீண்டு இருந்தது. 13 வெள்ளி தோடுபறிபோனதை தாங்க முடியாமல் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுத் தற்கொலைக்குத் தயாரானேன்.

லாலான் புற்களை அழிக்கும் கொடிய மருந்து வீட்டில் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் போவதை தம்பி பார்த்துவிட்டான். நான் அறையை மூடிக் கொண்டேன். கடைசித் தங்கை தூங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு முத்தமிட்டேன். பாட்டிலின் மூடியை திறந்து மருந்தை முகர்ந்து பார்த்தேன். நெடி நாசியில் நுழைந்து தலையைக் கிர்ரிட‌ச் செய்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. முடிவை மாற்றுவதற்குள் அம்மாவும் தம்பியும் கதவை உடைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அம்மாவின் குரலில் பதற்றமும் ஆவேசமும் இருந்தது. ஆகா! தெரிந்து விட்டது தப்பிக்க முடியாது, குடித்து விட வேண்டியது தான் என்ற முடிவோடு மருந்து பாட்டிலை வாயில் கவிழ்க்கப் போனேன். அம்மா வேறொரு பிரம்மாஸ்திரத்தை தந்திரமா என் மீது பாய்ச்சினார். நீ மருந்தை குடித்தால் பாப்பா தம்பி எல்லோருக்கும் மருந்தை கொடுத்து நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.

குடிக்கலாமா வேண்டாமா என்றொரு குழப்பம் இருந்தது. என் வீராப்பை அம்மா உணர்ந்திருந்தார். பாப்பா மீது சத்தியமாக அதைச் செய்வேன் என்றார். நான் தெளிந்து போனேன். பாப்பா எனது செல்லம். என்னால் பாப்பாவும் சாவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பாட்டிலைப் போட்டு விட்டு கதறி கதறி அழுந்தேன். தம்பி அறையின் கதவை உடைத்து உள்ளே வந்தான். அம்மாவும் வந்தார். 'இனி ஒரு முறை தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டேன் என்று பாப்பா மீது சத்தியம் செய்' என்றார். பாப்பா விழித்திருந்தாள். நானும் விழித்து விட்டேன். எது என் கண்களை மறைத்திருந்தது. இந்த நிலைக்கு இட்டுச் சென்ற அற்பச் சம்பவத்தை நினைக்கவே பயமாக இருந்தது. 'உன் உயிருக்கு 13 வெள்ளி தோடுதான் விலையா?' என்று தம்பி கேட்டான். நான் பாப்பா மீது சத்தியம் செய்தேன். அம்மா நிம்மதியாக அறையைவிட்டு அகன்றார். தம்பி மருந்து பாட்டிலை வெளியேற்றினான். பாப்பாவை நெஞ்சோடு அணைத்திருந்தேன். அம்மாவுடைய பிரம்மாஸ்திரம் விட்டுவிட்டு நெஞ்சில் பாய்ந்து கொண்டிருந்தது.

சராசரியாக மனிதனுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கக் கூடியதே என்று சொல்கிறார்கள். தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின் அது அவனே தேடி கொண்டதாகத்தான் இருக்குமாம். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாத கோழையாக நான் இருந்திருக்கலாம். அந்த வயதில் அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சாகத் தெரிந்திருந்தது. அதற்குத் தைரியத்துடன் செயல்பட்டேன்.

தற்கொலை நிகழ்வதில் சுவாரசியம் இருந்திருக்காது. அதன் தோல்வியும்... அதை நோக்கிய முயற்சிகள் கூடத் தற்காலிகமாக மன உளைச்சலிலிருந்து பாதுகாக்கின்றன.

நிகழ்த்த முடியாத கற்பனை தரும் நிம்மதி போல...

(நன்றி வல்லினம்,  நவம்பர் 2010 )

சனி, 28 மே, 2016

‘Chalk and Duster’


மிகச் சமீபத்தில் நான் பார்த்த படங்களில் ‘Chalk and Duster’ என்னைக் கவர்ந்ததாக இருக்கிறது. ஆசிரியர்களைக் கௌரவித்து வந்திருக்கும் இந்திய திரைப்படங்கள் வரிசையில் chalk and duster படத்திற்குத் தனியிடம் உண்டு. அதே வேளையில் ‘How Old Are U’ (மலையாளப் படம்) ‘Queen’ (இந்திப்படம்) வரிசையில் ‘Chalk and Duster’ பெண்களுக்கான மற்றுமொரு படம் என்றுதான் என்ன தோன்றுகிறது.
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணி என்பது மாறி அது ஒரு கௌரவமான தொழில் என முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தொழில் அதிக மன உளைச்சல் கொடுக்கும் தொழிலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்த நூற்றாண்டில் ஆசிரியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரியசாபம். அதுவும் ஆசிரியைகளுக்கு அது இன்னும் உளவியல் பிரச்னையைக் கொடுக்ககூடியதாக அமைந்துவிட்டது.
கல்வியமைச்சின் புதிய சட்டத்திட்டங்கள், அதிக அலுவலக வேலைகள், பிரத்தியேக வகுப்புகளில் பங்களிப்புகள் என ஆசியர்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். பள்ளி முடிந்த பிறகுகூடக் கேள்வித் தாள்கள் திருத்துவது, சோதனைத் தாள்களைத் தயார் செய்வது தவிரவும் பரிசளிப்பு விழா சில போட்டி விளையாட்டுகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு மாணவர்களைத் தயார் செய்வது என ஆசிரியர்களின் பங்களிப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், ஆசிரியைகளுக்குப் பள்ளியை தவிர்த்துக் குடும்பப் பொறுப்புகள், வீட்டு வேலைகள் பராமரிப்புகள் எனக் கழுத்துவரை பொறுப்புகள் இருக்கின்றன. அது அனைத்தையும் தாண்டிதான் அவர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வேண்டியுள்ளது. இதற்கிடையில் ஏற்படும் சங்கடங்களை ஆசிரியைகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று கேட்டால், யாருக்கும் ஆசிரியராகும் ஆசை வராது.
பள்ளியில் அதிக நேரத்தை செலவழிக்கும் ஆசியர்களுக்குப் பள்ளி நிர்வாகமே பிரச்னையானால் அந்த ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல் எவ்வளவு பெரிய தாக்கத்தைக் கொடுக்கும் என்பதை ‘Chalk and Duster’ திரைப்படம் பேசியிருக்கிறது. மேலும் ஆசிரியர்களின் Smart Teaching, குழந்தைகள் நிலைக்கு இறங்கி அவர்கள் உலகத்திற்குள் போய் அவர்களுடைய மனதில் இடம்பிடிப்பது என ஆசிரியர்களைவிட ஆசிரியைகளுக்கு மிக எளிதாக அமைந்துவிடுகிறது. ‘Taare Zameen Par’ உள்ளிட்டபடங்களில் வரும் ஆசிரியர்களுக்கு மாணவர்களிடத்தில் அதிக அன்பை செலுத்துவதுபோல இருந்தாலும் அதற்கு நிறைய உழைக்கவேண்டியுள்ளது. அமீர்கான் மாதிரியான ஆசிரியர்களையும் சாட்டையில் வரும் சமுத்திரகனியைப் போன்ற ஆசியர்களைத் தேடிதான் பிடிக்கவேண்டியுள்ளது. Jayant Gilatar இயக்கிய ‘Chalk and Duster’ திரைப்படம் ஆசிரியர்களுக்குப் புதிய உத்வேகம் குறிப்பாக ஏழைப்பள்ளிகளில் வசதிகுறைவான இடத்தில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு நிமிடமாவது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஜோதி பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜுஹி சவ்லா, வித்யா பாத்திரத்தை ஏற்று நடித்த ஷாபனா அஸ்மி பிரதான பாத்திரங்களாகத் திரையில் வந்தாலும் சிறிய சிறிய பாத்திரங்களை ஏற்று நடித்திருந்த அனைவருமே திரைக்குக் கனம் சேர்த்துள்ளனர்.
மலேசியாவில் ஆசிரியர் தினத்திற்காகச் சிறப்புத் திரைப்படமாகத் தொலைக்காட்சியில் ஒளியேற்றும்போதுதான் அந்தப் படத்தை நான் பார்த்தேன். ஆசிரியர்களுக்கு ‘Chalk and Duster’ நல்ல பரிசுதான். மேலும், ஆசிரியைகளுக்கு நம்பிகையையும் கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.



ஞாயிறு, 22 மே, 2016

கீர்த்திகாவின் ஒடிசி


 கீத்திக்கா ஶ்ரீயின்  ஒடிசி நடன அடவுகள்.  சூரிய பகவானை மையப்படுத்தி அமைந்திருந்த நடனம். ஒவ்வொரு அடவும் ஒவ்வொரு ஓவியம்.















கொனாரில் ரம்லி

 ஓவியங்களைப் போலவே சில நிழல்படங்களும் மனதுக்கு தேடலை தருபவை. உலகப் புகழ்பெற்ற சில புகைப்படங்கள் வரலாற்றையே புரட்டிப் போட்டிருப்பது நாம் அறியாததல்ல. அது ஒருபுறமிருக்க கலைக்காகவும் அழகியலுக்காகவும்  படமெடுப்பது அண்மையக்காலமாக
 பெருகிக்கொண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  என்றாலும், அதை முறைப்படி வெளிச்சம், வகை என்ற ரீதியில் மிகச்சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்கு புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் சிரத்தை அத்துறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

தொடர்ந்து ஓவியக் கண்காட்சி, ஒடிசி நடன நிகழ்ச்சிகளை நடத்திவரும் சூத்ரா இல்லத்தில் அண்மையில் (மே 20) 'கோனாரில் ரம்லி' என்ற புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரிசாவில் இருக்கும் கோனார்க் சூரியக் கோயிலில் நடனக் கலைஞரும் ஓவியருமான ரம்லி இப்ராஹிம்மை மாடலாக கொண்டு புகைப்படக் கலைஞரும் ஊடகவியலாருமான ஏ.பிரதாப் எடுத்த 16 புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஏ.பிரதாப்பின் புகைப்படக் கண்காட்சியை நான் காண்பது இது இரண்டாவது முறையாகும். சென்னையைச் சேர்ந்த இவர் 'The Times Of India-வில் பிரதான புகைப்படக் கலைஞராக பணிச்செய்கிறார். 10 ஆண்டுகளாக புகைப்படக்  துறையில் அனுபவம் கொண்டிருக்கும் பிரதாப் வெகு நாட்களாக ரம்லி இப்ராஹிம்மை மாடலாகக் கொண்டு புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தை இருந்ததாகவும் அந்த ஆசை 2015-ஆம் ஆண்டுதான் நிறைவேறியதாகவும் கூறினார்.


மிக எளிமையான ஆடை அலங்காரத்துடன் இந்தியாவின் அதிசயக் கோயில்களில் ஒன்றான கோனாரக் சூரியக் கோயிலில்  சில ஒடிசி நடன அடவுகளையும், நின்ற நிலையிலான காட்சிகளையும் ஒளி ஓவியமாக பிரதாப் பதிவு செய்திருக்கும் விதம் மிக அருமை. அதைவிடவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அத்தனை படங்களும் கருப்பு-வெள்ளை நிறத்தில் எடிட் செய்யப்பட்டவையாகும். வர்ணங்களை கடந்து கோனாரக் கோயிலின் அழகும், கூடவே நடனத்தில் யானை சிங்கம் என அடவுகளை பிடித்தபடி ரம்லியும் எதுதான் அழகு என நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

கோனரக் கோயிலைக் குறித்து ரம்லி பலமுறை பேசியிருக்கிறார். ஒடிசி நடனத்தின் பிறப்பிடமான ஒரிசாவில் இருக்கும் அந்தக் கோயிலை சிலாகித்துப் பேசும்போது கேட்டுக் கொண்டே இருக்கலாம். எல்லாரும் ஒரு முறை கட்டாயம் அந்தக் கோயிலை நேரில் காணவேண்டும் என ஒரு முஸ்லிம் மலாய்க்காரரான ரம்லி சொல்லும்போது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதுதான் கலை எனும்கூற்று உண்மைதான் என நம்பத் தோணும். ஏ.பிரதாப் கேமராவில் சிக்கிய ரம்லியின் புகைப்படங்கள் சில...

நான் எனக்காக என்ன செய்து வைக்க வேண்டும்- திருமா


மரணம் வாழ்வின் எதார்த்தம்; ஆம்,மறுப்பதற்கில்லை. ஆனால், மனதுக்கு பிடித்தவர்களின் அல்லது நெருக்கமானவர்களின் மரணம் ஏன் தொடர்ந்து மனதையும் சிந்தனையையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கிறது? அதை ஏன் அத்தனை எளிதாக வாழ்வின் எதார்த்தம் என கடந்து போக முடியவில்லை? உடன் பழகியவர்கள் அல்லது  ரத்த சொந்தங்களின் பிரிவு இவ்வாறு இருக்க, பல கடல்கள், மலைகள் தாண்டி இருக்கும் தோழர்களின் திடீர் மரணத்தை எப்படி எதிர்கொள்வது? எல்லா மரணங்களையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்ளத் தெரியவில்லை.
திருமாவளவன் எனும் ஆளுமை எனக்கு எப்படி அறிமுகமானார் என்பது யோசித்துப் பார்க்கிறேன், நியாபகத்திற்கே வர மறுக்கிறது. அதை நியாபகப் படுத்தி இப்போ நான் என்ன செய்யப்போகிறேன்? ஆனால், அவருடனான சில அலைபேசி உரையாடல்கள், கவிதை விவாதங்கள் ஒரு மழைச்சாரல் போல அவ்வப்போது  என்னை நனைத்துவிட்டு போகின்றன.  
ஒரு முறை எங்களின் நண்பர் பா..சிவம் குறித்த அஞ்சலி பதிவை நான் எனது அகப்பக்கத்தில் பதிந்திருந்தேன். “எனக்கு சிவம் என்றொரு பெயர் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கு அது தெரியும். உங்களின் அஞ்சலி கட்டுரை எனக்கு எழுதியது போல ஓர் உணர்வு” என்ற குறுஞ்செய்தி திருமாவளவனிடமிருந்து  எனது முகநூல் உள்பெட்டிக்கு வந்தது. எனக்கு அது ஆச்சரியத்தை தந்தது. அது தொடர்பாக அவர் முன்பே எழுதிய ஒரு பதிவை எனக்கு அனுப்பி வைத்தார்

அவர் எழுதிய பெயரில் என்ன இருக்கிறதுஎன்ற பதிவில் இப்படி ஒரு பத்தி வருகிறது.
நான் பிறந்தபோது அப்பா எனக்கு கருணாகரன் என்று பெயர் வைத்தார். ஆனால், ஊரிலை எல்லாரும் சிவம் என்டுதான் என்னைக் கூப்பிடுவினம்கணேசையர்தான்  வீட்டிலே சிவம் என்டு அழைக்க சொன்னவர்.
என்று  அந்த பதிவு நீள்கிறது. எங்களின் இந்த தொடக்க உரையாடலுக்குப் பிறகுதான் திருமாவுடைய ஒரு நேர்காணல்  மலேசியாவில் செயற்பட்டு வரும் வல்லினம்’ இலக்கிய குழு தயாரித்த பறை என்ற இதழில் வந்திருந்தது. என்னை பொறுத்தவரை அது அவரது முக்கியமான நேர்காணலாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கருணாகரன் அந்த நேர்காணலை சரியான நேரத்தில் செய்திருந்தார்.  கருணாகரன் மற்றும் திருமாவளாவன்  என்ற இரு  ஆலுமையை எனக்கு அடையாளம் காட்டியது அந்த  நேர்காணல்.

நேர்காணல் தொடர்பாகவும்  அவரின் கவிதைகள் தொடர்பாகவும்  எனக்கு எழுந்த வினாக்களை முகநூலின் உள்பெட்டியில்  முதல் நாள் கேள்வியாக திருமாவிடம்  கேட்டு வைப்பேன். மறுநாள் அதற்கான பதில் வரும். 

இரு வெவ்வேறு நாடுகளில் காலநேர மாற்றத்தில் பல உரையாடல்கள் இப்படியாகத்தான் சாத்தியமாகின. சில வேளைகளில் அறிதாக  இருவரும் ஒரே நேரத்தில் இணையத்தில் பேசிக்கொள்ள வாய்ப்பு அமையும்.  அந்த நேரங்களும் நாட்களும் மிகவும் சுவாரஸ்யமானவை எனலாம்.  கவிதைகள் குறித்த உரையாடல்களே எனக்கும் அவருக்கும் அதிகம் நடக்கும்.  முரண்படுவதும் உடன்படுவதுமாக நிறைய விஷயங்கள்  கவிதைகளில் நடந்தது அந்தக் காலங்களில்தான் .  உரிமையோடு  இலக்கிய சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு குரு-சிஷ்யன்  போல கருத்து மோதல்கள் நடந்தன.
அந்த உரையாடல்  எனக்கு  இலங்கை  அல்லது யாழ்ப்பான இலக்கியம் குறித்த புரிதலையும் அவருக்கு மலேசிய தமிழ் இலக்கியம் குறித்த  விவரங்களையும் அறித்துக்கொள்ள உதவியது எனலாம்.   என்னுடைய ‘யட்சி’ கவிதை தொகுப்பில் சில கவிதைகளை திருமாதான் திருத்தி கொடுத்திருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்வது ஏக பொறுத்தமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.   
ஒரு முறை எங்களுக்குள் இருக்கும் இலக்கிய சம்பாஷனைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது   கவிதை அல்லது இலக்கியத்தில் திருமா முக்கியமானவர் அல்ல என்று  மலேசிய பிரபலம் ஒருவர் கூறினார்.  இலக்கியத்தில் யார் முக்கியம்- முக்கியமில்லாதவர் என்பதை  தீர்மானிக்கும் பிரம்மாக்களுக்கு,  பதில் சொல்வதற்கு இன்னும் நான் அவதாரம் எடுக்கவில்லை என்பதாலும்  இனி எப்போதும் எடுக்கப் போவதும் இல்லை என்பதாலும் இவ்விவரத்தை குறித்து நான் மேலும்  அந்த பிரம்மாவிடம் விவாதிக்கவில்லை.

நெற்கொழு தாசன் செய்த ஒரு நேர்காணலில் “கவிதையை  திருமாவளவன் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டிருப்பார்.    
“தொண்ணூறுகளுக்கு பிற்பாடு இனியும் நாட்டில்  இருந்தால் உயிர் என் உடலில் தங்காது என்றுணர்ந்த போது போரை மறுத்தோடி ஊரை விட்டு வந்தவன் நான். புதிய புலம் எனக்கொரு போர்க்களமாக இருந்தது, வாழ்வின் துயர், உறைபனியின்  கொடுங்குளிர், பணியின் சுமை இவை எல்லாவற்றையும் விட என்னைப்போல ஓடிவந்து சகமனிதர்களின் போக்கு  எல்லாம் சேர்ந்தபோது நான் தனித்து விடப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். “
இந்தக் காலக்கட்டத்தில் எழுத்தை தெரிவு செய்தேன்.  தனது எழுத்து மீது இருந்த திருப்தியின்மை அல்லது போதாமை மேலும் கவிதை மீதான தேடலை உருவாக்கியது.  அதன் தொடர் செயற்பாடானது கவிதையே தன் முதற்தெரிவாகக் கொள்ளக்காரணமாக அமைந்தது.

 நான் கவிதா  மனோபவத்தோடு வாழத்தலைப்பட்டேன் என்கிறார்.  இத்தனை தெளிவான பதிலையும் போர், புலம்பெயர்ப்பு, புதிய வாழ்வியல் என அடுக்கடுக்காக  வேதனைகளையும் சோதனைகளையும்  எழுத்தில் கொண்டு வருபவர்  அல்லது கொண்டு வந்தவரின் இலக்கிய ஆலுமையை யார் திராசில் வைத்து எடை அளக்க தகுதியானவர்? தெரியவில்லை எனக்கு.

திருமா இதுவரை 4 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இறுதியாக வெளிவந்த அவரது 5-வது தொகுப்பு  வெளியீடு செய்ய விடாமலே அவரை  நோய்க் கொண்டு சென்றுவிட்டது. ஆனால், காலனுக்கு கொஞ்சம் இரக்கம் உண்டுதான் போல. அவரது தொகுப்பை காண்பதற்கு அவருக்கு அவகாசத்தை வழங்கியிருந்தான்.

கவிஞர் திருமாவளவனுக்கு உடல் வருத்தம் இருப்பது, பலருக்கு தெரியாத ஒன்று. கருப்பு பூனையாக அவரின் உடலில் அவரின் கவிதைகளிலும் இடம்பிடித்த அந்த நோய்யானது சில வேளைகளில்  வருத்தத்தின் குறியீடாகவும் சில வேளைகளில் கொண்டாட்ட நிலையில் வந்துபோகும் பூனையாகவும் கையாண்டிருப்பார். 

‘மெல்லக் கழிந்தது
நிலவற்ற இரவுப் பேய் மழை பொழியும்
ஒரு புதிய காலையில் விழித்தேன்
உறைப்பனித் தடம் அழித்து
மேச்செடுக்கிறது நிலம்
இலையுதிர் காலத்திருந்து
மனிக்கீழ் உறைந்து
அழுகிய இலைகளின் நாற்றத்தைப் பூசி
கொண்டாடித் திரிகிறது காற்று
கண்களை இறுக மூடி அகந்திறந்தேன்
மனசின் அடிஆழத்தூள் உறங்கிக்கிடக்கிறது
என் கருப்புப் பூனை..’
-திருமாவளவன்

கவிதையில்  பங்குபெற்ற அந்த  கருப்புப்பூனையைப் பற்றி  விவாதிக்கும்போதுதான் அவருக்கு  இருக்கும் வருத்தத்தைப் பற்றி எனக்கு சொல்ல வேண்டியதாயிற்று.  ஆனால், எந்த நிலையிலும் அவர் அனுதாபத்தை தேடுபவராகவும் அவர் மீது யாரும் இரக்கம் காட்டுபவராகவும்  திருமாவளவன் விரும்பியதே இல்லை. 

இயற்கையிலேயே அவருக்கு இருக்கும்  திமிர் அவர் மரணிக்கும் வரை கூடவே இருந்தது என்றுதான் சொல்ல தோணுது . ஆம்,  2015-ஆம் ஆண்டு  ஆகஸ்ட்  மாதத்திலிருந்து அவரின் உரையாடல்கள், முகநூல் வருகை என அனைத்தும் முடங்கி போனது.  அதை  நான் செப்டம்பர் மாதம் வாக்கில் அனுமானிக்க தொடங்கி, அவரின் வீட்டுற்கு  தொலைபேசியின் வழி அழைத்தேன். அவரின் மகள் என்று நினைக்கிறேன். அலைபேசியை எடுத்து   விசாரித்தார்.  திருமாவிடம் அலைபேசியை கொண்டு போயும் கொடுத்தார்.  அன்றுதான் அவருடைய நோயின் தீவிரம் விளங்கியது எனக்கு.

2015-ஆம் ஆண்டு திருமாவின்  பிறந்தநாளின் போது  அவர் ஒரு விவரத்தை சொன்னார். அதாவது அவரின் கவிதை தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும் அதை செப்டம்பரில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்த பிறகு மலேசியா சிங்கப்பூர் என பயணம் செய்து அதை வெளியீடு செய்ய விரும்புவதாக சொன்னார்.  அந்த பயணச் செலவுதான் அவரின் பிறந்தநாள் பரிசாக பிள்ளைகள் வழங்கவுள்ளார்கள்  என்று சொன்னார்.  தனது சொந்த மண்ணின் மீதான காதல் அந்த கலைஞனின் மூச்சில் இறுதிவரை கலந்து இருந்தது.

யாழ்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்த அவர் திரும்பவும் இலங்கைக்கு  ஓரு முறையும் செல்லாதது  இறுதி நாள் வரை  அவர் இறுதயத்தில்  ஓர் ஆராத காயம்போல  தங்கிவிட்டது.  தன் தொந்த மண், வாழ்ந்த வாழ்கை, வளர்ந்த வீடு, விளையாடியா வீதி என்று  திருமா எனும்  கவிதையாளன்  அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
2015 அக்டோபர் 5-ஆம் தேதியோடு அவர் இந்த  வலி நிறைந்த உலகத்திடமிருந்தும் தன் நிறைவேறாத ஆசைகளுடன் திருமா விடைபெற்றுக்கொண்டார்.  யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.  
திருமாவளவன்  கல்லரை தோட்டம் என்ற கட்டுரையில்  இப்படி எழுதியிருக்கிறார்…

நான் எனக்காக என்ன செய்து வைக்க வேண்டும்? எரித்துவிடுங்கள். என் நினைவாக ஏதாவது ஒரு பூக்காவில் நிழல்தரு தருவொன்றை நாட்டுங்கள். வேண்டுமாயின் அடியில் இரு கல்லிருக்கையை போட்டு வையுங்கள். என் நினைவு வரும்போது ஒரு ஐந்து நிமிடம் இருந்துவிட்டுப் போங்கள். நான் பறவைகளோடு பேசிக்கொண்டிருப்பேன். “
உறங்கிக்கொண்டிருக்கும் அந்த தோட்டத்தில் ஒரு நாள் இளைபாரனும். அதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என தோனுது.

குறிப்பு: கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி  திருமாவுடைய  61 வயது பிறந்தநாள்.  அவருக்கான ஒரு அஞ்சலி கட்டுரையை அவர் போன நாளிலிருந்து எழுதுவதற்காக முயன்று தோற்று போனேன்.  அவருடைய பிறந்தநாளில்தான் அதை எழுதி முடித்திருக்கிறேன். இது அவரின் பிறந்தநாள் பரிசு என அவரின் ஆத்மாவுக்கு தெரியும்.
-யோகி

(நன்றி ஆக்காட்டி)