வெள்ளி, 13 மே, 2016

சில சம்பவங்களும் பகுப்பாய்வும்

சம்பவம் 1
பெண்களுக்கான பித்தலை அணிகளன்களை விற்கும் கடை. அழுது அடம்பிடிக்கும் தன் மகளை அடித்து அவள் அழுகையை நிறுத்த முயல்கிறார் அந்த தாய். மகளின் அழுகையை நிறுத்தவும் முடியாமல் அதை வேடிக்கை பார்த்தவர்களிடமிருந்து மீளவும் முடியாமல் தன் மகளை அடித்தவாறே இழுத்தும் செல்கிறார்.

சம்பவம் 2
இரண்டு சகோதரர்களுக்கு ஒரு பலூனை வாங்கிவிட்டனர் அந்தப் பெற்றோர். பெரியவனிடம் அந்த பலூன் இருக்கும் போது சிறியவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். சிறியவனுக்கு அந்த பலூன் கை மாறும்போது முகம் சுறுங்கி, தம்பியை கொலை வெறியில் பார்க்கிறான் அண்ணன். பெற்றோர்கள், இருவரையும் ஆளுக்கொரு திசையில் வைத்துக் கொண்டும் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டும் விழித்து நிற்கின்றனர்.

சம்பவம் 3
4 குழந்தைகள் ஐஸ்கிரிம் வாங்க போகிறார்கள். 4 வெள்ளி அவர்கள் கையில் இருக்கிறது. ஐஸ்கிரிம் விற்பவர் ஓர் ஐஸ்கிரிம் 2 வெள்ளி என்கிறார். ஒரு காலத்தில் 50 சென், பின் ஒரு வெள்ளியாக இருந்த அந்த பண்டம் சித்திரை பௌர்ணமி திருவிழாவில் கோடையை கொண்டாட 2 வெள்ளிக்கு விற்கப்பட்டது. குழந்தைகளின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை நினைத்து பார்க்ககூட கவலையாக இருக்கிறது.

சம்பவம் 4
5 வயது குழந்தை அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம். குழந்தையின் அம்மா அந்த கொடூரச் செயலை செய்திருக்கிறார். பின்னர், விசாரனையில் குழந்தையின் அம்மா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தையை வேறொரு இந்திய குடும்பம் தத்து எடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மேற்கூறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவின் போது நடந்தன. மூன்றாவது சம்பவம் தெலுக் இந்தான் நகரில் சித்திரை பௌர்ணமி திருவிழாவின் போது நடந்தது. நான்காவது சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலும் நடந்த பத்திரிகையில் வந்த செய்தியாகும். நான்காவது சம்பவத்தை பேசுவதற்கு முன்னதாக முதல் மூன்று சம்பவங்களை கொஞ்சம் பேசலாம்.

சாதாரணமாகவே குறிப்பாக வரிய நிலையில் உள்ள குடும்பங்களில் நடக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள்தான் அவை. ஆனால், கடந்த வருடத்திலிருந்து வரிய நிலை என்பது இந்த நாட்டில் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற கேள்வியை முன்வைத்தால் மேல் நடந்த சம்பவங்களின் தீவிரம் நமக்கு புரியலாம்.
ஒரு 6 வயதுக் குழந்தைக்கு வலையல் வாங்கிக் கொடுக்க முடியாமலும், இரண்டு பலூன்களை வாங்கி தனது பிள்ளைகளுக்கு ஆளுக்கொன்று தர முடியாமல் போவதற்கும், ஐஸ்கிரிமை இரண்டு வெள்ளி கொடுத்து வாங்கி கொடுக்காமல் போவதற்கும் ஏழை கூலி தொழிலாளிகளான பெற்றோருக்கு பொருளாதாரம் இடம் கொடுக்க மறுக்கிறது என்றால், அவர்களால் குடும்பமாகச் சென்று ஒரு கடையில் அமர்ந்து நிம்மதியாக உணவருந்த முடியுமா? அல்லது பொழுது போக்கு அம்சங்கள், நல்ல துணிமணிகள் இப்படி ஏதாவது வாங்க முடியுமா என்று தெரியவில்லை. அனைத்தும் வணிகம் ஆகிவிட்ட மலேசியத் திருநாட்டில் ஏழைகளுக்கு இந்த வாழ்க்கை மறுக்கப்பட்டு வருகிறதோ என்ற அச்சமும் பதற்றமும் ஏற்படத்தான் செய்கிறது.

தைப்பூசம் போன்ற பெரிய விழாக்களில் ஏழைகளை அதிகம் காப்பாற்றுவதே அன்னதானங்கள்தான் என்றால் அதை யாரும் மறுத்து கூறிவிட முடியாது. 1990-களில் பிலாஸ்டிக் வலையல்களை ஒரு வெள்ளிக்கு 10 பீசஸ் வாங்கலாம். கண்ணாடி வலையல்களை ஒரு வெள்ளிக்கு 6 பீசஸ் வாங்கலாம். அதன் பிறகு 2000–ஆம் ஆண்டுகளில் வலையல்களில் ஜிகுனா தூவப்பட்டு வேலைப்பாடுகளுடன் வரத்தொடங்கி விலை ஏற்றமும் அடைந்தது. இன்று குழந்தைகளுக்கான குறைந்த விலையில் விலையல்கள் வாங்க 5 வெள்ளி தேவைப்படுகிறது. 

பலூனின் விலையை சொல்லவே வேண்டாம். ஒரு பாலூன் 5 வெள்ளியிலிருந்து துவங்குகிறது. நெகிலியில் அடைக்கப்பட்ட காற்று ஒரு நொடியில் வெளியாகி அல்லது உடைந்து காற்றோடு கலந்துப்போகும் பலூனுக்கு ஓர் ஏழை 5 வெள்ளி செலவு செய்கிறார் என்றால் அது அவர் எடுத்திருக்கும் பெரிய முடிவுதான் என்றாலும், அதன் முன் நிற்பது என்ன? குழந்தைகளின் ஆசையை நிராசையாககூடாது என்ற பெற்றோர்களின் அக்கரை அல்லது ஒன்றாவது வாங்கிகொடுத்து குழதைகளின் ஆசையை பூர்த்தி செய்லாமே என்கிற பாசமும்தானே. 

100 கிராம் பால்கோவா 7 வெள்ளி, 5 பீசஸ் இனிப்பு பலகாரங்கள் 5 வெள்ளி, ஒரு ஜிலேபி ஒரு வெள்ளி என இனிப்பு பலகாரங்களும் ராட்டினம் போன்ற விளையாட்டுகளை விளையாட ஓர் ஆளுக்கு 10 வெள்ளிக்கு குறைந்து இல்லை. 900 வெள்ளி அல்லது 1000 வெள்ளி வருமானம் பெரும் ஒரு ஏழைக் குடும்பத்தில் தைப்பூசம் மாதிரியான நிகழ்வுகள் மனதளவில் தளர்வையே ஏற்படுத்துகிறது. அந்த நேரத்து செலவை கட்டுப்படுத்த நகைகளை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, பார்த்து பார்த்து கிள்ளி கிள்ளி பத்தும் பத்தாமல் ஏக்கத்தோடு செலவு செய்வது; பணம் இல்லை என்றால் திருவிழாவுக்கே வராமல் இருப்பது. இப்படித்தான் ஓர் ஏழையின் கொண்டாட்டம் இந்த நாட்டில் அமைகிறது.

நாட்டின் பண வீக்கத்தாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் வெகுவாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான் என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். சத்தான உணவு கிடைப்பதிலிருந்து அவர்களின் உளவியல் பாதிப்பு வரை எல்லா குழந்தைகளும் பெரிய அளவில் மனபாதிப்பை அடைகிறார்கள்.
“என்னைப்பார் சரியாக படிக்காததால் கூலி வேலை செய்கிறேன். நீ அப்படி ஆகப்போகிறாயா? படி ! படி! படி!. விளையாடாதே; காட்டூன் பார்க்காதே; படிப்பது ஒன்றுதான் உன் கடமை. நல்லா படித்தால் நன்றாக சம்பாதிக்கலாம். நன்றாக சம்பாதித்தால் கஷ்டம் இல்லாமல் வாழலாம். என்னைப்போல நூறுக்கும் ஆயிரத்தும் நாய் பாடு படமாட்டாய்” என ஒவ்வொரு பெற்றோரும் தன்னையே உதாரணமாக நிறுத்தி குழந்தைகளின் குழந்தை குணத்தையே சிதைத்து அவர்களின் இயல்பு வாழ்கையையே வாழவிடாமல் ஆக்கிவிடுகிறார்கள். படிப்பு ஏறாத பிள்ளைக்கு உடனே கிடைப்பது அடிதான். இல்லை என்றால் கண்டிக்கிறேன் என்ற பெயரில் ஏற்படுத்தும் சொல் சித்திரவதை.
மூன்றாவது சம்பவத்திற்கு இது காரணமாக இல்லாவிட்டாலும் இதுவும் காரணங்களில் ஒன்று என்பதும் மறுப்பதற்கில்லை.
மூன்றாவது சம்பவத்திற்கு உரிய தாய் ஒரு போதை பித்தர். கண்முன் தெரியாமல் குழந்தை சுயநினைவு இழக்கும் அளவுக்கு அடித்து நொருக்கி விட்டார். தற்போது தாய் சிறையில் இருக்க, அந்தக் குழந்தையை வேரொருவர் தத்தெடுத்துள்ளார்.
அந்தக் குழந்தையை பராமரிக்க அவர் குடும்பத்திலேயே யாரும் இல்லையா என்ற கேள்விக்கு நம்மிடத்தில் பதில் இல்லை. நமக்கே வாயிக்கும் வயிற்றுக்கும் போதவில்லை; மூன்றாவது நபருக்கு எப்படி அடைக்களம் கொடுப்பது?

நாட்டின் வேலையில்லாத பிரச்னையும், குறைந்த வருமான பிரச்னையும் தனி ஒருவனை இப்படித்தான் சிந்திக்க தூண்டுகிறது. இதில் ஜி.எஸ்.டி போன்ற வரி ஏழைகளை பரம ஏழைகளாக்கி கொண்டிருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. இன்று அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக ஆகிவிட்ட தொலைபேசி டோப் அப்-களுக்கு கிட்டதட்ட ஆறு மாதங்கள் 5 வெள்ளிக்கு 30 சென் விகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்ட வந்த வேளையில், 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அந்த வரி விதிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், தற்போது நாம் 10 வெள்ளிக்கு டோப் ஆப் செய்தால் 60 சென்-னை கழித்துக்கொண்டு 9.40 சென் தான் மிச்சம் என தொலைபேசி தகவல் காட்டுகிறது. அரசாங்கத்தின் ஸ்மார்ட் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என நினைத்து மக்களும் பொறுமையாக இருக்க பழகி வருகிறார்கள். ஆனால், உளவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நாட்டில் கண்ணுமுன்னு தெரியாமல் பெருகி வருகிறது.

தங்களின் ஞாயமான கோபத்தை நாட்டின் அரசிடம் காட்டக்கூட தெரியாத மக்கள் தங்களை தாங்களே வதைத்து கொள்கிறார்கள். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துவிட்டன. மேற்கூறிய 4 சம்பவங்கள் குறித்து அரசு நிச்சயம் தெரிய வாய்ப்பு இல்லை. அதைவிட அரசுக்கு வேறு வேலை என்ன இருக்கிறது எம்கிறீர்களா? அதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

-நன்றி 

மலேசியா சோசியலிஸ்ட் கட்சி (மே மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக