ஞாயிறு, 29 மே, 2016

த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!

தற்கொலை என்ற சொல்லைக் கேட்டாலே கோழைத்தனம், உண்மைக்குப்

பின்னால் ஒளிந்து கொள்ளும் துரோகி, முட்டாள், சுயநலவாதி, ஏமாளி, கோமாளி இன்னும் எத்தனையோ பெயர்களை அறிவு ஜீவிகள் வரையறுக்கிறார்கள். ஒரு தற்கொலைக்குப் பின்னால் என்னென்ன நடந்திருக்கிறது? தற்கொலையாளியின் இயலாமை எதுவாக இருந்திருக்கும், மன உளைச்சலாகப் பட்டது தனியொரு தற்கொலையாளியை என்னவெல்லாம் செய்தது என்பதைப் பற்றி எத்தனை கூறு போட்டு ஆராய்ந்தாலும் பாதகமான சாட்சியங்களையே கொடுக்குமேயொழிய சாதகத்தை என்றைக்குமே கொடுத்ததில்லை. தற்கொலையாளிக்கு அப்பாற்பட்டவர்களோ சுயமாகக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலீடு இல்லாமலே தற்கொலையாளியின் கதையை 100 நாட்களோட்டி விடுவார்கள். இவர்கள் மிகவும் திறமைசாலிகள். இவர்களின் அரசியலை புரிந்து கொள்ளவே முடியாது.

தற்கொலைக்கு முயற்சித்தால் காவல் நிலையத்தில் அது ஒரு குற்றமாகக் கருதி பதிவு செய்து நீதிமன்றத்தில் தண்டனையும் நிர்ணயிக்கப் படுகிறது. இது ஒரு புறமிருக்க, ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என மேலை நாட்டவர்கள் மல்லுக்கு நிற்கின்றார். விதண்டா வாதிகளின் சுதந்திரத்துக்கு எல்லையே இல்லை. இவ்வளவு தெளிவாக விவரிக்கும் என்னைக் கொஞ்சம் கிளறினால் அட என உண்மை அதிர வைக்கும். நான் முதன்முறையாகச் செய்த தற்கொலை முயற்சியில் இறந்திருந்தால் என் கல்லறைக்கு 16 வயது ஆகியிருக்கும். இரண்டாவது தடவையாக மேற்கொண்ட முயற்சியில் இறந்திருந்தால் 14 ஆண்டுகள் ஆயிருக்கும். நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள் கனவு போல் அவ்வப்போது தலையைக் காட்ட அதற்கு எழுத்து வடிவம் கொடுக்கத் தருணம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

நான் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தேன் என்பதை அறம் சார்ந்து சொல்லவே முடியவில்லை. பதின்ம வயதில் ஏற்படும் வரட்டு திமிர், கோபம், துணிச்சல் இவைகளுக்கு முன்னால் அறமும் தார்மீகமும் தோற்றுத்தான் போயிருந்தன என் விசயத்தில்.

என்னுடைய முதல் தற்கொலை முயற்சி பதினான்கு வயதில் நடந்தது. நான் முதலாம் படிவம் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் மாணவத் தலைவியாகவும் கட்டொழுங்கு கண்காணிப்புப் பிரிவில் துணைத்தலைவியாகவுமிருந்தேன். தலைமைக்குரிய சில பொறுப்புகள் பள்ளி நிர்வாகம் எனக்கு வழங்கியிருந்தது. ஒரு சராசரி மாணவனோ மாணவியோ தவறுசெய்யும் பட்சத்தில் முன் அறிமுகமின்றியோ இன வேறுபாடு இன்றியோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மாணவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தாலோ, முறையான சீருடை அணியாமல் வந்தாலோ, பள்ளிக்கு மட்டம் அடித்தாலோ அவர் பெயர், வகுப்பு போன்றவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் அதே மாணவன் 3 குற்றங்கள் புரிந்தால் அவரின் விவரம் பள்ளி நிர்வாகத்துக்குச் சமர்பிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கை பள்ளி தேர்வின் போது கட்டொழுங்குக்கான மதிப்பெண்கள் குறைத்து மதிபிடச் செய்து பின்தங்கிய மாணவர்களின் வரிசையில் நிறுத்திவிடும். குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் எண்ணிகைகள் குறைக்கப்படும். திருட்டு, அடிதடியில் இறங்கும் மாணவர்களுக்குக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் பிரம்படி மற்றும் பள்ளி இடைநீக்கமும் செய்யப்படும். பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டால் வேறு எந்தப் பள்ளியிலும் இடம் கிடைப்பது சிரமம். இது போன்ற பிரச்சனைகள் மாணவர்களின் எதிர்காலத்துகு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் எங்களைக் கண்டதும் மாணவர்கள் உஷராகிவிடுவார்கள். குறிப்பாக ஆண் மாணவர்கள். எங்களைக் கண்டுவிட்டால் மரியாதை தாண்டவமாடும். போக விட்டுக் கொச்சை மொழிகள் ஆட்டமாக ஆடும். ஆதாரம் இல்லாமல் குற்றத்தை பதிய முடியாது என்றபடியால் பொறுத்துக்கொள் மவனே, ஒரு நாள்மாட்டும்போது வஞ்சம் தீர்க்கிறேன் என்று மனதில் பதிவு செய்துவிட்டு காதை தாளிட்டு அகன்று விடுவோம்.

வகுப்பறைக்குள் தலைமை மாணவர்களின் மிகப்பெரிய பொறுப்பே ஆசிரியர் இல்லாத நேரத்தில் மாணவர்கள் சத்தம் போடாமல் பார்த்துக் கொள்வது தான். 30 பேர் அடங்கிய வகுப்பறைக்குள் 3 இன மாணவர்களும் இருந்தோம். இவர்களைக் கைவசம் வைத்திருப்பது சுலபம் அல்ல. நான் ஒரு தந்திரம் செய்ந்திருந்தேன். துணை தலைமைக்காக மலாய் மாணவர்களில் ஒருவரையும், சீன மாணவர்களில் ஒருவரையும் தேர்வு செய்து வைத்துக் கொண்டேன். ஒவ்வொரு மனதுக்குள்ளும் தலைமைக்கான ஆசை இருக்கும் போலும். நான் தேர்வுசெய்த மாணவர்கள் சிற‌ப்பாக‌வே அதிகார‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி பிற மாண‌வ‌ர்க‌ளைக் கட்டுப்படுத்தினர். தமிழ்மாணவர்களை நான் பார்த்துக் கொண்டேன். அவர்களின் பேச்சை குறைப்பதற்குக் கதைப்புத்தகங்களைக் கொடுத்துவிடுவேன். அப்போதும் ஏதாவது பேச வேண்டும் என்றாள் தாளில் எழுதி பரிமாறிக்கொள்ள‌ச் சொல்வேன். என்தந்திரம் மாணவர்களிடம் பலித்திருந்தது. பள்ளி நிர்வாகம் சிறந்த தலைமை மாணவன், சிறந்தவகுப்புப் போன்றவைகளுக்குப் பரிசு வழங்கும் திட்டம் வைத்திருந்தது. அதில் நற்சான்றிதழ்களும் அடங்கும். அதைத் தட்டிச் சென்று விடவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தந்திரமும் செய்தேன். பரிச்சுக்கான அற்ப ஆசை என்னிடம் பேராசையாக மாறத் தொடங்கி இருந்தது.

ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டிற்குப் போகும் வழியில் நான் இரவல் கொடுத்த கதை புத்தகத்தை ஒரு மாணவன் திருப்பிக் கொடுத்தான். அதை வாங்குவதை அப்பா பார்த்து விட்டார். அப்பாவின் முகம் வெளுத்து இருந்தது. நாசமாய்ப் போறவன். இதை வகுப்பறையிலே கொடுப்பதற்கு என்ன? நடுரோடுதான் கிடைத்ததா? அவன் மேல் கோவப்பட்டு ஆகப்போவது என்ன? அப்பாவைப் பார்க்க பயமாக இருந்தது. தன் மகளின் மேல் எந்த நபரும் புகார் கூறிவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். இது போலச் சம்பவங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் என்னத்தைக் கண்டேன். அதுவும் 14 வயதில். வீட்டிற்குப் போனதும் ஒரு நாடகம் அர‌ங்கேற‌ப்போவ‌தை யூகித்துக்கொண்டேன்.

'அது என்ன புத்தகம், யாருடைய புத்தகம்' என்று அப்பா கேட்டார். "என்னுடையதுதான், அவன் இரவல் வாங்கி இருந்தான்" என்று சொன்னேன். "நீ ஏன் இரவல் கொடுத்தாய்?" என்றார். நான் விளக்கினேன். விளங்கிக் கொள்ளக் கூடிய நிலையில் அப்பா இல்லை. “இன்று நீ கொடுக்கும் புத்தகத்தை நாளை அவன் திருப்பிக் கொடுக்கும் போது அதில் ஒரு கடிதம் இருக்கும். நீ பதிலுக்கு ஒரு கடிதம் எழுதி வேறு ஒரு புத்தகத்தில் வைத்து கொடுப்பே. இத அப்பன் நான் கண்டு கொள்ளாம இருக்கணுமா" என்று சத்தம் போட்டார். என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. இது அபாண்டம் என்றேன். செய்யாத தப்புக்கு மண்டியிடும் குணம் என்னை எனக்குத் தெரிந்த நாளில் இருந்தே இல்லை எனலாம். செய்யாத தப்பு என்றால் அடித்தாலும் அஞ்சமாட்டேன். முதல் முறையாகக் குருட்டு தைரியத்தோடு பின்விளைவுகளை அறிந்திருந்தும் வாக்கு வாதத்தில் இறங்கினேன். ஓடிக் கொண்டிருந்த அப்பாவின் சிந்தனைக் குதிரையின் முட்டியை உடைக்கத் துணிந்தேன். என் பதின்ம வயதின் திமிர் எல்லாவ‌ற்றுக்கும் தயாராக இருந்தது. கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது. பறக்க பார்ப்பதாக அப்பா சொன்னார். பேச்சு வளர்ந்து அப்பா இறுதியில் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தார்.

“சீ! இந்த மாதிரி பிள்ளையைப் பெத்து வளர்க்கிறதுக்குச் செத்து ஒழிஞ்சிட்டா தூக்கி போட்டு நிம்மதியா இருக்கலாம். பெத்தவங்க நெருப்ப கட்டிகிட்டு செத்து செத்துப் பிழைக்கத் தேவையில்லை" என்றார். அப்பாவின் நாவின் வழி எய்த பிரமாஸ்த்திரம் என் நெஞ்சைப் பிளந்தது. என் புத்தியை மழுங்கச் செய்தது.

நான் அப்பாவின் வளர்ப்பு. எப்படி அவரால் என் மீது சந்தேகப்பட முடிந்தது. பிரம்மாஸ்திரம் திரும்பத் திரும்ப நெஞ்சில் பாய்ந்து கொண்டிருந்தது. நான் இருப்பதால் தானே அப்பா செத்து செத்து பிழைக்க வேண்டி இருக்கிறது. நான் சாவதற்குத் தயாரானேன். என் அறையின் கதவை சாத்திக் கொண்டேன். குறுந்தட்டுகளைத் துடைக்கும் மருந்து மட்டுமே இருந்தது. தாமதிக்கவில்லை. குடித்து விட்டேன். குடித்து முடித்ததும் பயம் வந்தது. மரணப் பயம். நான் கலவரத்துடன் கதவடைத்த‌து வீட்டில் உள்ளவர்களை ஐயுர வைத்திருக்க வேண்டும். வேகமாகக் கதவை தட்டினார்கள். திறந்தேன். மருந்தின் நெடி அறையெங்கும் பறவி இருக்க ஆரம்பமானது வேறொரு நாடகம். அம்மா புளியைக் கரைந்து வாயில் ஊற்றினான். என்னை விடுங்கள் நான் சாகிறேன் என்றேன். அப்பா பதறிப் போனார். துடிதுடித்தார். என்னைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். எனக்குத் தொண்டையில் இருந்து நெஞ்சுவரை எரிச்சலாக இருந்தது. மருத்துவர் பரிசோதித்தார். மருந்து புட்டியை மருத்துவர் பார்த்தார். அனைவரையும் வெளியே போகச் சொல்லி ஒரு மாதிரியான தண்ணி மருந்தைக் குடிக்கச் செய்து அனைத்தையும் வாந்தி எடுக்கச் சொன்னார். நான் சோர்ந்து இருந்தேன். மருந்து தண்ணி ஏற்றினார்கள். டாக்டர் என்னிடம் பேசினார். நீ சாகமாட்டாய். பிழைத்துக் கொண்டாய் என்றார். அடுத்த முறை சாக வேண்டுமானால் இங்கே வந்து விடு. சரியான மருந்து தருகிறேன் என்றார். சாகடிக்காத மருந்தோடு நேரத்தை விரயமாக்காதே என்றார். எனக்கு அவமானமாக இருந்தது. ஒரு பாட்டில் மருந்துத்தண்ணி இறக்கியவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு அப்பா என் விஷயத்தில் விழிப்புடனே ந‌டந்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பாவை வெகுவாகப் பாதித்து இருந்தது. ஆனாலும் அடுத்த இர‌ண்டு வ‌ருட‌த்துக்குள்ளாக‌வே அத‌ன் தொட‌ர்ச்சி அர‌ங்கேறிய‌து.

எனக்கு 16 வயது ஆனது. கடைசித் தங்கை பிறந்தாள். நான் அவளிட‌ம் மிகவும் ப்ரியமுடன் இருந்தேன். அவளும் தான். ஆனால் எனக்கும் மற்றொரு தங்கைக்கும் நட்பு அத்தகையதாக இல்லை. அவள் என்னைவிட ஐந்து வயது இளையவள்.

நான் பள்ளிக்கு கொடுக்கும் 50 காசை சேர்த்து வைப்பதற்குப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன். பள்ளி சிற்றுண்டியில் ஒரு குவளை குளிர்பானம் வாங்கினாள் 20 சென். மீதப் பணத்தில் ரொட்டி மட்டுமே வாங்க முடியும். பிரட்டல் சோறு அல்ல‌து பிரட்டல் மீ வாங்கினால் 50 சென். ஒன்று வாங்கினால் ஒன்று வாங்க முடியாது. அப்பாவின் சம்பாத்தியதில் 3 பேர் படித்தோம். அவரால் பள்ளிக்கு கொடுப்பதற்கு அவ்வளவுதான் முடிந்தது. ஆதலால் கொடுப்பது போதவில்லை என்று கேட்பதற்கு எங்கள் யாருக்குமே தைரியம் இல்லை. இப்படி இருக்க எதற்குக் காசை சேர்த்து வைக்கவேண்டுமென நீங்க‌ள் கேட்கலாம்.

அந்த வயதில் மனதுக்குப் பிடித்த நிறையப் பொருட்களும் உணவுகளும் உடைகளும் கொட்டி கிடந்தன. எத்தனை நாள் பார்த்து பார்த்து ஏங்குவது? நான் இரண்டு மாதமாக விட்டு விட்டு பட்டினி இருந்து 13 வெள்ளி சேர்த்து ஒரு ஒற்றைக்கல் தோடு வாங்கினேன். அது அழகான நீலக்கல் தோடு. என் பிறந்த நாள் அன்று பள்ளிக்குப் போட்டுக் கொண்டு போகவேண்டும் என்ற ஆவலோடு பல நாள் வைத்திருந்தேன். ஒரு நாள் அது காணாமல் போனது. எனக்கு அழுகையே வந்து விட்டது. சல்லடை போட்டு என் அறையைத் துலக்கினேன். எங்குமே இல்லை.

இறுதியில் பெரிய தங்கையின் காதுகளில் மின்னுவதைப் பார்த்து பொறுக்க முடியாம‌ல் "யாரைக் கேட்டு என் தோட்டை எடுத்தாய்" என்று ச‌த்த‌ம் போட்டேன். யாரைக் கேட்க‌ணும் என்றார் அம்மா. என்னால் ஒன்றுமே பேச முடிய‌வில்லை. அவ‌ரிட‌ம் பேசுவ‌த‌ற்கு பெரிய‌தொரு ம‌ன‌த்த‌டை என‌க்கு இருந்த‌து. என் இய‌லாமையும் ஆற்றாமையும் என் க‌ண்முன் குதித்து எள்ளி ந‌கையாடிய‌து.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னும் கூட நான் பொக்கிஷமாகப் பாதுகாத்திருந்த சில பொருட்கள் தங்கையின் கைமாறிக் காணாமல் போய் இருக்கின்றன. என் உள்ளம் கொதிப்பதும் குமறுவதும் யாருக்குமே கேட்கவில்லை. சகிப்புத் தன்மை என்னில் தீர்ந்து போய் இருந்தது. எனக்கும் அம்மா தங்கை உறவுக்கும் இடையில் சீனப்பெருஞ்சுவர் நீண்டு இருந்தது. 13 வெள்ளி தோடுபறிபோனதை தாங்க முடியாமல் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுத் தற்கொலைக்குத் தயாரானேன்.

லாலான் புற்களை அழிக்கும் கொடிய மருந்து வீட்டில் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் போவதை தம்பி பார்த்துவிட்டான். நான் அறையை மூடிக் கொண்டேன். கடைசித் தங்கை தூங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு முத்தமிட்டேன். பாட்டிலின் மூடியை திறந்து மருந்தை முகர்ந்து பார்த்தேன். நெடி நாசியில் நுழைந்து தலையைக் கிர்ரிட‌ச் செய்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. முடிவை மாற்றுவதற்குள் அம்மாவும் தம்பியும் கதவை உடைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அம்மாவின் குரலில் பதற்றமும் ஆவேசமும் இருந்தது. ஆகா! தெரிந்து விட்டது தப்பிக்க முடியாது, குடித்து விட வேண்டியது தான் என்ற முடிவோடு மருந்து பாட்டிலை வாயில் கவிழ்க்கப் போனேன். அம்மா வேறொரு பிரம்மாஸ்திரத்தை தந்திரமா என் மீது பாய்ச்சினார். நீ மருந்தை குடித்தால் பாப்பா தம்பி எல்லோருக்கும் மருந்தை கொடுத்து நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.

குடிக்கலாமா வேண்டாமா என்றொரு குழப்பம் இருந்தது. என் வீராப்பை அம்மா உணர்ந்திருந்தார். பாப்பா மீது சத்தியமாக அதைச் செய்வேன் என்றார். நான் தெளிந்து போனேன். பாப்பா எனது செல்லம். என்னால் பாப்பாவும் சாவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பாட்டிலைப் போட்டு விட்டு கதறி கதறி அழுந்தேன். தம்பி அறையின் கதவை உடைத்து உள்ளே வந்தான். அம்மாவும் வந்தார். 'இனி ஒரு முறை தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டேன் என்று பாப்பா மீது சத்தியம் செய்' என்றார். பாப்பா விழித்திருந்தாள். நானும் விழித்து விட்டேன். எது என் கண்களை மறைத்திருந்தது. இந்த நிலைக்கு இட்டுச் சென்ற அற்பச் சம்பவத்தை நினைக்கவே பயமாக இருந்தது. 'உன் உயிருக்கு 13 வெள்ளி தோடுதான் விலையா?' என்று தம்பி கேட்டான். நான் பாப்பா மீது சத்தியம் செய்தேன். அம்மா நிம்மதியாக அறையைவிட்டு அகன்றார். தம்பி மருந்து பாட்டிலை வெளியேற்றினான். பாப்பாவை நெஞ்சோடு அணைத்திருந்தேன். அம்மாவுடைய பிரம்மாஸ்திரம் விட்டுவிட்டு நெஞ்சில் பாய்ந்து கொண்டிருந்தது.

சராசரியாக மனிதனுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கக் கூடியதே என்று சொல்கிறார்கள். தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின் அது அவனே தேடி கொண்டதாகத்தான் இருக்குமாம். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாத கோழையாக நான் இருந்திருக்கலாம். அந்த வயதில் அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சாகத் தெரிந்திருந்தது. அதற்குத் தைரியத்துடன் செயல்பட்டேன்.

தற்கொலை நிகழ்வதில் சுவாரசியம் இருந்திருக்காது. அதன் தோல்வியும்... அதை நோக்கிய முயற்சிகள் கூடத் தற்காலிகமாக மன உளைச்சலிலிருந்து பாதுகாக்கின்றன.

நிகழ்த்த முடியாத கற்பனை தரும் நிம்மதி போல...

(நன்றி வல்லினம்,  நவம்பர் 2010 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக