சனி, 18 ஏப்ரல், 2015

வேஷம்


இன்றுதான் நான்
வேஷம் தரிக்க கற்றுக்கொண்டேன்
முதலில் நாய் வேஷம்
 போடப்பட்டது...

தெருவில் இருக்கும்
மரத்தூண்களில்
ஒரு காலைத் தூக்கி
சிறுநீர் கழிக்க
திராணியிருந்த எனக்கு
வவ் வவ்வென்று குரைக்க தெரியவில்லை

நாய் வேஷம் கலைக்கப்பட்டு
பூனை வேஷம் போடப்பட்டது
பூனையைப்போல்
பதுங்கத் தெரிந்த எனக்கு
பூனையின் திருட்டுப்புத்தி
கொஞ்சம்கூட பொருந்தாமல்
போனது...
இறுதியில் இதுதான்
பொருத்தம் என்று
குரங்கு வேஷம் போட்டுவிட்டார்கள்

அப்பாவி பார்வையோடு
நாலா பக்கமும் தாவிக் கொண்டிருந்தேன்
உடல் முழுதையும்
 சொறிந்து கொள்கிறேன்
வ்ஊ...வ்ஊ... என்று
குரல் எழுப்புகிறேன்
ஆடரா ராமா... ஆடரா... ராமா
என்று கையில்
கோலோடு என்னை
ஆட்டி வைப்பவன்
இன்னும் பார்க்கவில்லை
என் குரங்குச் சேட்டையை


செவ்வாய், 14 ஏப்ரல், 2015

பொய் எனத் தெரிந்தும்


அவன் அங்குதான் இருந்தான்
அவனின் குரல்
மெல்லியதாகக் கேட்டது
அவன் என்னிடம்தான் பேசினான்
யாருக்கும் புலப்படாத அவனை
என் கண்கள் கண்டுவிட்டதாகச் சொன்னான்
பனி பொழிவதாகவும்
உஷ்ணத்தில் வெந்து தணிவதாகவும்
முயல் இறைச்சியில் இனிப்பு கூடியுள்ளதாகவும்
பெருமாள் சிலையில்
வதனங்கள் மின்னுவதாகவும்
வனம் முழுக்க
ஊதா மலர்கள் மலர்ந்துள்ளதாகவும்
சாம்பல் பறவை
அவன் கூடடைந்ததையும்
கூறிக்கொண்டிருந்தான்
அவன் சொல்வது
அனைத்தும்
பொய் எனத் தெரிந்தும்
நான்
கேட்டுக்கொண்டிருந்தேன்
அவனது புனைவுகளில்
புத்தனின் மௌனம்
கரைந்திருந்தது


வியாழன், 9 ஏப்ரல், 2015

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு கோலாகலமாக தொடங்கியது என்று சொல்வதற்கு எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. காரணம், ‘வரலாற்றைத் தேடி’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தழுவிய நிலையில் ஒரு மாபெரும்  மாநாடு நடக்கிறது என்ற காரணத்தினால், அதன் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வுக்கு மக்கள் தொண்டாளரான மதிமுக தலைவர் வைகோ கலந்து கொள்கிறார் என்ற செய்தியால் எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகியிருந்தது. தமிழர் முன்னேற்றக் கழகம் இந்த நிகழ்வுக்காகக் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வேலைகளைத் தொடங்கியிருந்தன.

நிகழ்ச்சிக்கான இடம், உணவு, மாநாட்டில் பேசுவதற்காக கலந்துகொண்ட மாநாட்டாளர்கள், இட வசதி, உட்காருவதற்கான  இடம், குளிர்சாதன வசதி, மேடை, மைக்  என்று அனைத்தும் மிகச்சிறப்பான ஏற்பாடாக மாநாடு வெற்றி பெற்றது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த பேச்சாளர்களுக்கும் எவ்விதக் குறையுமின்றி கவனித்து  அனுப்பியதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ஊடகக்காரர்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான இடவசதி, இணையவசதி உட்பட, அனைத்தையும் மிகச்சிறப்பான முறையிலேயே  ஒரு குறையுமின்றி ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்குரியது.
ஆனால், ஒரு நிகழ்ச்சி என்ற ரீதியிலும், ஒரு வரலாற்றுப் பதிவு என்ற ரீதியிலும், ‘அடையாளத்தைத் தேடி’ என்ற தலைப்புக்கு உட்பட்ட ரீதியிலும், இது ஒரு தோல்வியடைந்த நிகழ்ச்சி என்றே நான் சொல்வேன். காரணம்,  நிகழ்வே  ‘தமிழ் அனைத்துலக மாநாடு’  என்று அடிக்கோலிட்டிருக்கும் வேளையில், உலகத்தமிழர்கள் குறித்துப் பேசப்பட்டதா? என்ற கேள்வி அங்கு எழுகிறது.
உலகத்தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? அந்தச் சவால்களை எப்படிச் சந்திக்கிறார்கள்? எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதற்கான தீர்வு என்ன? அந்தத் தீர்வை எப்படி நடைமுறைப்படுத்துவது  உள்ளிட்ட பல விஷயங்களை அங்கு விவாதிருக்கலாம்.  தமிழின் தொன்மை வரலாறுகளைப் பெற்றுள்ள நாம், இன்று அந்த அடையாளத்தைத் தொலைத்துத் திரிகிறோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை.  ஆனால், அந்த  அடையாளத்தை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதை அந்த மாநாடு வலியுறுத்தியதா?  இந்தக் கேள்விக்கு மாநாட்டில் கலந்துகொண்ட எவராலும் ‘ஆமாம்’ என்று கூறிவிடமுடியாது. ஏற்பாட்டாளர்களைத் தவிர நிகழ்வில் கலந்துகொண்ட 300-க்கும் அதிகமானவர்கள்,  இதுவொரு முழுமைப் பெறாத நிகழ்வு என்று விமர்சித்தது பல இடங்களில் கேட்க முடிந்தது.
இந்த நிகழ்வில் சுமார் 6 அங்கங்கள் இடம்பெற்றன. 6 அங்கங்கள் என்பது 6 வகையான தலைப்புகளில்  தமிழ் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்தனர். அந்தத் தலைப்புகளில் ஒன்றிரெண்டு தவிர, அனைத்தும் இலங்கைப் போர் உள்ளிட்ட கட்டுரைகளாகவே இருந்தன.  இலங்கைப் போர் குறித்துப் பேசுவதும், அங்குள்ள மக்களின் நிலை குறித்துப் பேசுவதும்,  அவர்களின் வாழ்க்கை நிலையை உலகப்பார்வைக்குக் கொண்டு செல்வதிலும், தமிழர்களாகிய நமது பங்கு கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.  ஆனால், அது மட்டும்தான் தமிழர்களின் பிரச்னையா?  ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதும், மலேசியாவில்  இந்தியர்கள்  வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதும், தமிழகத்தில் தலித்துகள் இன்னும் கொல்லப்படுவதும் என இப்படியான விஷயங்கள் தமிழர்களுக்குப் பிரச்னை இல்லையா?  இங்கு வேலை செய்யும் இந்தியத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எத்தனை எத்தனை? அவர்களுக்கு இங்குத் தக்க மரியாதை கிடைக்கிறதா? அவர்களின்  வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கிறதா ?  போன்ற விஷயங்கள்  இந்தியத் தொழிலாளர்களின் அடையாளம் குறித்தான விஷயங்கள்தானே?
இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்புக்கு இன்னும் உணர்ச்சி பூர்வமாகக் குரல் எழுப்புகிறோம்.   இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் இருக்கும் இடத்திலெல்லாம் சாதியம், கௌரவக் கொலைகள், பாலியல் குற்றங்கள், தீண்டாமை வன்கொடுமை என்று தமிழர்கள் இன்று சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான  பார்வையை இந்த மாநாட்டில் ஏன் விவாதிக்கவில்லை?
இந்த மாநாட்டில் தமிழ் முஸ்லிம்களைக் குறித்து ஹஜி தஸ்லிம் பேசினார்.  இந்திய முஸ்லிம்கள் என்று கூறினாலும், இங்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்று கூறியதைத் தவிர, அவர் பேச்சு அனைத்தும் தன்நிலை குறித்தவையாக மட்டுமே அமைந்தது. நான் ஒரு வெள்ளாளன் பிள்ளை என்று தன் ஜாதியத்தையும், தன் முதல் திருமணம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த வாழ்க்கையில் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் ஆனால், தனது இரண்டாவது திருமணம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கிறது, ஆனால் பிள்ளைதான் இல்லை என்று அவரின் ஆண்மையை உணர்த்தும் கருத்துகள் அனைத்தும்  அவரின் அடையாளத்தை வந்திருந்தவர்களுக்கு உணர்த்தும் நோக்கம் கொண்டதே தவிர,  இதில் எந்தத் ‘தமிழரின் அடையாளத்தையும்’ உணர்த்தவில்லை.
 
இருந்தபோதிலும், மலேசியாவில் நடக்கும் இந்த மாநாட்டில் மலேசியத் தமிழர்களைப்பற்றி பேசவில்லையே என்ற கருத்து வெகு சத்தமாகவே ஒலிக்க தொடங்கியிருந்த வேளையில்தான், ‘மலேசியாவில் தமிழர்களின் சவால்களும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் குலசேகரன் பேசினார். வழக்கறிஞர் மனோகரன் குழுவினரும், மலேசிய வாழ் இந்தியர்களின் நிலை குறித்துக் கொஞ்சம் பேசினார்கள். ஆனால், இந்த மாநாடு இதைப் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு அல்லவே, அதற்கான காரணங்கள் தீர்வுகள் என்ன?
இந்த மாநாட்டின் மனம் நிறைந்த அங்கமாக மொரிஸியஸ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த ஆய்வாளர்கள், இந்தியர்களின் வாழ்வு முறையை மிக அழகாகப் பதிவுசெய்தனர். ஆனால், அவர்கள் தமிழ் மாநாட்டில் தமிழில் பேசாததுதான் பெரும் குறையாக அமைந்தது. அதற்கொன்றும் செய்யமுடியாது. அவர்கள் மொழியைத் தொலைத்திருந்தாலும்,  கலாச்சாரத்தைத் தொலைக்கவில்லை என்பது உண்மை. ஆனால்,  அவர்களில் பலர் ஆங்கிலத்திலேயே உரையாடியது வருத்தத்தைக் கொடுத்தது. கொஞ்சம் இதற்கு மாற்று வழியைத் தேடி இருக்கலாமே என்ற கேள்விக்கு, பேச்சாளர்கள் கூறிய பதில் இதுதான்: “ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தலாம் என்று கூறினார்கள். இப்போது தமிழில் உரை நிகழ்த்துவது என்பது சிரமம்.”
இந்த நிகழ்ச்சியின் லாபகரமான, அதாவது ‘அடையாளத்தை தேடி’ என்ற தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்த ஒரே உரையாக  பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டத்தோ எஸ்.எம். ஒமார் அரிஃபின் உரையைக்கூறலாம். இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை மலேசியர்களாக இருந்து, அதாவது இந்த நாட்டில் அரசியல், இனத்தைக்கொண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொருவரும் தன் இன அடையாளத்துக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்குச் சரியான ஒரு தலைமைத்துவம் இல்லாத காரணத்தினாலும், தமிழர்கள் சரித்திரப்பூர்வமாக இங்கே கூலிகளாகக் கொண்டு வரப்பட்ட காரணத்தாலும் , எல்லா நிலைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு , இந்தளவில் பின்னடைந்த சமூகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கொரு மாற்றம் வரவேண்டுமென்றால், இன அடிப்படையிலான அரசியல் மாற்றம் காணவேண்டும், அதற்கு இந்த நாட்டில் அனைவருக்கும் மலேசியர் என்ற எண்ணம் வரவேண்டும் என்ற வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகளாகும்.
 
சரி நிகழ்வில் கதாநாயகன் வைகோ. பழுத்த அரசியல்வாதி, அறிவாளி, தமிழ்ப்பற்று உள்ளவர். இந்த மாநாட்டுக்கு ஏகப் பொருத்தமானவர். எல்லாம் சரி. ஆனால், அவரை இங்கே கூட்டி வந்ததற்கான காரணம் என்ன? அந்தக் காரணம் இங்கு நிறைவேறியதா? வந்தவர் தமிழ் ஈழத்தைத்தான் கட்டி அழுகிறார். பாவம்! அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் இந்த மாநாடா? வைகோவிடம் ஒரு உலகளாவிய பார்வை இருக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் மத்தியில் விக்கிபீடியா செய்திகளையும், நடந்து முடிந்த  ஈழத்துப் போராட்டங்களையும், ‘என் தலைவர் பிரபாகரன்தான்’ என்ற பெருமையையும் கூறுவதற்கு அவர் 7 கடல்தாண்டி வந்திருக்கத் தேவையில்லையே. 30 வருடங்கள் கழித்து மலேசியாவுக்கு வந்திருக்கும் அவர், இங்குப் பதிவு செய்தது, செய்யவிருப்பது, செய்யப்போவது என்ன? ஈழத்துப் பிரச்னையை வைத்து விளம்பரம் தேடுவதாக இருந்தால், அதற்கு மலேசியா தேவையில்லையே.
எங்கள் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் எத்தனை பேரைச் சந்திப்பதற்கு வைகோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? அல்லது அவருக்குதான் ஆர்வம் இருந்ததா? முதல் நாள் கருப்புத் துண்டைப் போட்டபடி வைகோ, மறுநாள் கோட் சூட்டில் வைகோ, மூன்றாம் நாள் பட்டு வேட்டி சட்டையில் வைகோ இதுதான் நான் பார்த்து வந்த வைகோ. இதற்காகவா ஒரு நிருபராக 350 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தேன்?
 
முதல்முறை நடக்கும் மாபெரும் நிகழ்ச்சி என்பதால், குறைகள் இருக்கத்தான் செய்யும் என்பது உண்மைதான். ஆனால், சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாகத் திட்டமிட்டுச் செய்யும் ஒரு நிகழ்வில், இத்தனை பிசகுகளா? இந்த நிகழ்ச்சியைப் பல சவால்களுக்கிடையில் ஏற்பாடு செய்திருந்த பினாங்கு மாநில துணை முதல்வருக்கு நான் ஒன்று மட்டுமே கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
உங்கள் அரசியல் லாபத்துக்காகவும், உங்கள் செல்வாக்கை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்வதற்காகவும் மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் என் உள்ளம் கவர்ந்த தலைவர். மலேசிய இந்தியர்களுக்கு உங்கள் மீது தனிப்பாசம் உண்டு. உங்கள் அரசியல் தூணைப் பலப்படுத்தத் தமிழர்களின் வரலாற்றையும், அடையாளத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருப்பதாக மாநாட்டில் பலர் பேசினார்கள். உங்கள் காதுகளுக்கு அது எப்படி எட்டவில்லை என்பதுதான் எனது ஆச்சரியம். வரலாற்றைக் கண்டடையாத இந்த பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு, என்னைப் பொறுத்தவரையில் தோல்வியடைந்த வரலாற்றை மீட்டெடுக்காத ஒரு மாநாடுதான் என்பேன்.

குறிப்பு: இந்த மாநாடு பினாங்கு தமிழர் முன்னனற்ற இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்தாண்டு நவம்பர் 7,8,9 தேதிகளில், பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றதாகும். அதில் எனக்கு ஏற்பட்ட முரண்பாட்டையே எழுதினேன்.


நன்றி வல்லினம்; http://vallinam.com.my/version2/?p=1702
நன்றி 'நம் நாடு'