ஞாயிறு, 17 ஜூன், 2018

பெண்களுக்கு சொற்கள் அவசியமா?

இந்தத் தலைப்பை படிக்கும்போதே ஒருவகை பதட்டம் எனக்குள் எழுகிறது. சரியான காரணம் எனக்கு சொல்லத்  தெரியவில்லை. எனினும் நம்மீது விழும்  பலரது பார்வைக்கு  அர்த்தம் தெரியாததாலும் இதுவாகத்தான் இருக்கும் என  தானாக  யூகம் கொண்டதினால்  ஏற்படும் தடுமாற்றத்தால் வெளிப்படுத்தும் உடல்மொழியாலும்    பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. சம்பவங்கள் படிப்பினையாக இருந்தாலும் காயங்கள் வலிக்கத்தானே செய்யும்.  காயங்களின் தழும்புகளை கீரிப்பார்க்கும்போது ஒருவகை பதட்டமும் வலியும் மட்டுமல்ல பயமும் ஏற்படுகிறது.

பெண் உடல்மொழி என்பது, பொது இடத்தில் பெண் அவள்  உடையை திருத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு பெண்  நிர்வாணமாக இருந்தாலும் பாதுகாப்பாக உணர்வது வேறு, சமூகம் அங்கீகரிக்கப்பட்ட உடையில் இருந்தாலும், அவள்  பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கிறாள் என்றால் அவளின் வாழ்க்கைக்கு அர்த்தம்தான் என்ன? எத்தனை கொடுமையான  நிலை இது?ஒரு பெண் பணக்காரியா, ஏழையா, பண்புள்ளவளா , பண்பற்றவளா  என்பதை எவரும் பழகி   விமர்சிப்பதில்லை. குறிப்பாக  பெண்கள்  மட்டுமே இந்த அவல நிலையை அனுபவிக்கிறார்கள்.  உடையை பார்த்தே  அவளுக்கு ஒருமுத்திரை கொடுக்கப்படுகிறது. பெண் இயல்பாகவே சுதந்திரம் மறுக்கப்பட்டவளாக வளர்க்கப்படுகிறாள்.  அவள் தேவையை கேட்பது அவளுக்கு உரிமை மீறல் பிரச்சனைதான்.

அதை உடல் மொழியில் தெரிவிப்பதுதான்  பெண்களுக்கு  இயல்பாக பரிமாண‌ம் கற்றுக்கொடுத்த பாடம். பெண் உடல்  மொழி என்பது செயற்கை என நினைப்பவர்கள் நிறைய பேர்.  ஏன் சில பெண்களே கூட சக பெண்களை  இந்த  உடல்மொழியால் விமர்சனம் செய்யலாம். அதை சொல்பவர் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை  உணர்வதில்லை. தான் விரும்பும் உடையை அணிவதில் கூட ஒரு பெண் பிறர் சம்மதம் எதிர்பார்க்கிறாள் என்றால்  உண்மையில் நாம் பெண் உடல் மொழி குறித்து பேசி என்ன செய்ய போகிறோம் என்பதை யோசிக்கத்தான்  வேண்டியிருக்கிறது. அன்னையர் தினத்திற்கு தான் ஒரு சிறந்த அன்னை என்று பதிவிடுவதும்,  புடவை தினத்தில்  புடவை அணிந்த படத்தை பதிந்து, தான் புடவை ஆதரவாளர் என காட்டிக்கொள்வதும்கூட  பெண்கள் சுதந்திரம் என  இந்த சமூகம்  நினைத்துக்கொள்வது எத்தனை அபத்தம்.   நான் குறிப்பிடும் சமூகம், நீங்களும், நானும் மட்டுமல்ல,  ஒட்டு மொத்த பெண் சமூகத்தையும் சேர்ந்ததேயாகும். உடல் மொழி வாயிலாக ஒருவர் இன்னொருவருக்கு  தெரிவிக்கும் செய்திகளும் தகவல்களும் என்ன? உடல் மொழி என்பதை சொற்களற்ற வெளிப்பாடு என சமூகவியல்  விஞ்ஞானிகளும், உளவியலாளர்களும் கூறுகின்றனர்.

இத்தகைய உடல் மொழிக்கு எட்டு முதன்மைக் கூறுகள் உண்டு.

* முகம் (புன்னகை, முகச்சுளிப்பு, கோபம், அருவெறுப்பு)
*கண்கள் (பார்வை சந்திப்பு, பார்வையை தவிர்த்தல்)
*உடல் தோரணை (posture) (தோல்வியில் உடல் தளர்தல், வெற்றியில் கைகளைத்தூக்கி எக்களித்தல்)சைகை/சாடை/அபிநயம் (gesture) (ஹலோ சொல்வதற்கு பதிலாக கையசைத்தல், வெற்றிக்கு V என விரல்களை  காட்டுதல், கட்டைவிரலை உயர்த்திக் காட்டுதல்)
*குரல் (voice)  (குரல் ஏற்றத்தாழ்வு, சப்தத்தின் அளவு, சுவாச அளவு பொறுத்து குரல் மாறுபடுதல்)அசைவு (movement) (ஒருவரை நோக்கி நகர்தல், ஒருவரை விட்டு விலகுதல், தவிர்த்தல்) தொடுகை (touch)  (நெருங்கிய உறவு சார்ந்த தொடுகை, நட்பு மற்றும் தொழில் சார்ந்த தொடுகை, சமூகம் சார்ந்து நிகழும் தொடுகை)  தோற்றம் (appearance) (உடை, சுத்தம், உடல் தோற்றம், முகப்பொலிவு).

இத்தனை கூறுகளும் விழிப்புணர்வு மனநிலை (conscious state of mind) மற்றும் ஆழ் மனநிலை  (subconscious state of mind) ஆகிய இரண்டும் கலந்தே உடல்மொழியாக வெளிப்படுகின்றது.இதில் பெண்களின் ‘உடல்மொழி’ என தனியாக ஒன்று உள்ளதா என்றால்? ஆமாம்; உள்ளது. நட்புரீதியிலும்,  பணிசார்ந்த சூழலிலும், சமுதாயத்திலும், குடும்பத்திலும், அந்தரங்கத்திலும் பெண்கள் வெளிக்காட்டும் உடல் மொழியின்  எண்ணிக்கைக்கு அளவே இல்லை.

இதை 5 வகைகளாகப் பிரிக்கலாம்...


கருத்துப் பரிமாற்றம்

இந்த அணுகுமுறையில் பெண்கள் தங்களின் உள் எண்ணங்கள் மற்றும் உணர்வு நெருக்கத்தைக் காட்ட சொற்களற்ற  மொழியை பயன்படுத்துகின்றனர் (ஆண்களோ, தங்கள் தகவல்களை கடத்தவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும்  உடல் மொழியை பயன்படுத்துகின்றனர்).

சைகைகள்

பெண்கள் மிக நுட்பமான, நாசுக்கான, கட்டுப்பாடான மற்றும் இணக்கம் அல்லது பணிவு காட்டுகிற சைகைகளை  வெளிப்படுத்துகிறார்கள். எ.கா: நேருக்கு நேர் சந்திக்கையில் பார்வையை தாழ்த்துதல், யாரேனும் அவர்கள் பாதையில்  குறுக்கிடும்போது விலகிச் செல்லுதல் போன்றவை.மேலும் பெண்கள் வார்த்தைகளற்ற சைகைகளை புரிந்து கொள்வதில்  ஆண் களைக் காட்டிலும்  திறமையானவர்கள்.

முக உணர்வு வெளிப்பாடுகள்


ஆண்களை விட பெண்கள் தங்களின் கருத்துப்பரிமாற்றத்தின் போது அதிகளவில் கண்களைப் பார்த்து பேசும்  இயல்புடையவர்கள். இது ஏனென்றால் சுபாவமாகவே அவர்கள் உணர்வு ரீதியிலான கருத்துப் பரிமாற்றத்தை  நாடுகிறார்கள். பெண்கள் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுவது எதிராளியின் நேர்மையை எடைபோடும்  மனப்பாங்கு. மேலும் பெண்கள் தங்களின் அர்த்தத்தை அல்லது உணர்வுகளின் செறிவை தெரிவிக்க  முகபாவனைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அண்மை (அல்லது) நெருக்கம்


பெண்கள் அவர்களுடைய  கூட்டா ளியோ அல்லது துணையோ பக்கவாட்டில் இருப்பதையே விரும்புகிறார்கள். இதுவே  அவர்களுக்கு விருப்பமான நெருக்கமாக இருக்கின்றது. ஆண்களைவிட பெண்கள்  தங்களுடையகூட்டாளி/  துணையினுடைய உடலின் அண்மையை சகித்துக் கொள்ளும் பொறுமையுடையவர்கள் (ஆனால் ஆண்களிடம் அந்த  பொறுமை அதிகம் கிடையாது. மேலும் ஆண்கள் தங்களின் துணையை நேருக்கு நேராகவே சந்திக்க விருப்பம்  கொண்டிருக்கிறார்கள்).

தொடுகை


ஒரு தொடுதல் நிகழும்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் அத்தொடுகைக்கு பாலியல் நோக்கங்களை  கற்பிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எப்போதும் தொடுதல் சார்ந்த தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.  அதையும் மீறி அவர்கள் மேற்கொள்ளும் தொடுதலானது நட்பு சார்ந்தும், அனுதாபம் அல்லது பரிவிரக்கம் சார்ந்ததாகவே  பெரும்பாலும் இருக்கிறது.

இப்பிரிவுகள் அடைப்படையில் நம்மை அறியாமலேயே ஒருவரை “இவர் புலன்களால் உணரக்கூடியவர்”, “இவர்  உள்ளுணர்வால் இயக்கப்படுகிறவர்” என தொடர்பு படுத்துகிறோம். ஒருவரது உடல் மொழியை எளிதில்  புரிந்துகொள்வது மற்றும் மேற்சொன்ன பாவனைகளை ஒப்பிடுவதில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில்  இவ்வாறு தொடர்புபடுத்துவது சாத்தியம். பெண்களுக்கு பிறப்பிலேயே இத்தகு உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. அதாவது  பெண்கள் சொற்களற்ற சைகை அல்லது உடல்மொழியை பொருள் கண்டுணரும் ஆற்றலுடையவர்கள் மற்றும் சிறுசிறு  விவரங்களைக் குறித்த துல்லியமான கண்ணோட்டம் உடையவர்கள். ஆண்களைவிட பெண்கள் உடல் மொழி குறித்து  மிகுந்த எச்சரிக்கை/விழிப்பு உடையவர்கள்.

தனிமனித உறவுகளுக்குள் மிக அதிகமாக சொற்களற்ற சைகைகளும், பாவனைகளும் நிகழ்கின்றன. இளம்  பெண்களிடையே உடல் சார்ந்த தன்னம்பிக்கை குறைந்து வருவதை கவலையளிக்கும் விஷயமாக பெண்ணியக்  கல்வியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பசப்பும் வாய்மொழிகளைவிட சில நேரங்களில் சாத்வீகமான, அச்சுறுத்தாத,  எப்போதும் புன்னகைக்கிற பெண் உடல் மொழியை  ஆதரிக்கலாம். பெண்ணிய அலை தொடங்கிய போதிலிருந்தே  பெண் உடல் மொழி (மெளன மொழி), கல்வி மற்றும் ஊடகங்களில் மிகுந்த கவனம் பெற்றது. இங்கு நான்சி  ஹென்லியின் புத்தகமான “உடல் அரசியல்”(Body Politics) என்ற அச்சில் இல்லாத அந்தப் புத்தகம் நம்மைச்  சூழ்ந்து இயங்கும் ஆண் ஆதிக்கமும், பாலின ஒழுங்கு என்ற பெயரில் ஆண்கள் மேற்கொள்ளும் அடக்குமுறைகளையும்  தெளிவாக விவரிக்கிறது. ஆணாதிக்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் பெண்கள் அனுபவிக்கும் பாதிப்புகளையும்  பேசுகிறது.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்...


தொடுகை


முரண்பாடான தொடுகை, ஒருவர் மற்றவரைத் தொடுவது. இத்தகைய தொடுதல் பெண்களை விட ஆண்களின்  நடத்தையிலேயே அதிகம் உள்ளது. கட்டுப்பாட்டையும், ஆதிக்கத்தையும் காட்டும் நடவடிக்கை இது.  இத்தகைய  தொடுகை ஆண்கள்  பெண் உடலை தொடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இச்சமூகம் கருதுகிறது. அவன் தனது  விருப்பத்தை வெளியிடும் ஒரு வழி.  அவ்வழி பெண்களுக்கு அல்ல. இந்தச் செயலை ஹென்லி “பெண்களின்  அதிகாரம், ஆற்றலைப் பறிக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறார்.

“தொடுதல்” என் பது பெண்கள் மீது செலுத்தப்படும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வடிவிலான உபத்திரவம்,  தொந்தரவு, இடைஞ்சல், கோபமூட்டலும் கூட. ஆனால் அது மிக நுட்பமான, சூட்சுமமான, சூழ்ச்சித்திறன் வாய்ந்த  தாகவும் இருக்கிறது. ஓர் ஆண் நண்பரோடு சற்றே சுதந்திரமாக பேசிப் பழகுகையில், மிக எளிதாக நம்மை கூசச்  செய்கிற, இரட்டை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் கொண்ட, பாலுணர்வுத் தன்மை வாய்ந்த, கொச்சை  மொழியிலானதை ஜோக்குகள் என்ற பெயரில் எதிர் கொள்ள நேரிடுகிறது. இது முகநூல் போன்ற இணையவெளியில்  மட்டுமல்ல. சமயங்களில் தொலைபேசியிலும் இது போன்ற மனஉளைச்சல் தரும் நடவடிக்கைகள் நிகழ்வதுண்டு.

இத்தகைய செயல்களை எத்தனை தூரம் நாம் வெளிப்படையாக அல்லது பிரச்சனையாக அணுகுகிறோம் அல்லது  அசட்டையான மனப்பான்மையோடு தாண்டிச்செல்கிறோம்? மேலும், ஆண்கள் தங்களது பெண் நண்பர்களை, உடன்  பணியாற்றும் பெண்களை பிடிப்பதும், அணைப்பதும், மெய்கூச்சம் உண்டாக்கும் வகையில் தொடுவதை வாடிக்கையாகக்  கொண்டி ருக்கிறார்கள். இத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஆண்கள் பெண்களிடம் வெளிப்படையான, திட்டவட்டமான  எந்த அனுமதியும் இல்லாமல் கலாச்சாரம் அனுமதித்த வாய்ப்பாக பெண்களைத் தொடுவதை வழக்கமாகக்  கொண்டிருக்கிறார்கள்.

விக்டோரியா காலத்திலிருந்து நவீன குடும்பங்களின் புகைப்படங்களில் நாம் பார்த்ததுண்டு. ஆண் தனது மனைவியின்  மீதும் குழந்தைகளின் மீதும் தோள்பட்டையில் கை போட்டிருப்பது உயர் அந்தஸ்து மற்றும் கட்டுப்பாட்டை  குறிப்பிடுகிறது. பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், பணி முதல் வர்கள் ஆகியோர் அதிக வலிமை/சக்தி வாய்ந்த  பதவிகளில் இருப்போர் தொடலாம், தட்டிக் கொடுக்கலாம் அல்லது தங்கள் தலையை, தோள்களை ஆற்றல்  குறைந்தவர்கள் மேல் சாய்த்துக் கொள்ளலாம். இத்தகைய உதாரணங்களில் தொடுகை  பரஸ்பரமானது மற்றும்  நேர்மறையான அனுபவத்தை தரக்கூடியது.

எனினும் எழுதப்படாத சட்டமாக இருப்பது அதிக ஆற்றலுடையவர்கள் குறிப்பாக ஆண்கள், பெண்களைத் தொடலாம்.  ஆனால் பெண்கள் அவ்வாறு தொடுவது இயலாது (உயர் பதவிகளில் இருந்தாலும் அவ்வாறு அவர்கள் தொடுவதில்லை,  எதற்கோ கட்டுப்பட்டது போலத்தான் இருக்க வேண்டியிருக்கிறது).      இவை ஆணாதிக்க சக்தியின்   கட்டமைப்புக்கள்  வலுப்பெற்றிருப்பதையே காட்டுகின்றன. நான்சி ஹென்லி இத்தகைய ஆராய்ச்சியின் முடிவு களை விவாதித்துக்  கொண்டிருந்தபோது அவரின் ஆண் சகா ஒருவர் நான்சியின் தோள்களில் கை போட்டதை  புத்தகத்தில்  நினைவுகூர்கிறார்.


நான்சி ஹென்லி ஓர் அறிமுகம்...

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் தனது முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற நான்சி ஹென்லி,  லோவல் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் பேராசிரியையாகப் பணியாற்றியவர். மொழி மற்றும்  உடல்மொழி, சொற்பொருள் ஆய்வியல் (semantics), பெண்கள் மற்றும் பாலின உளவியல், பெண்கள் மற்றும்  பாலினப் பிரச்சனைகள் குறித்த அணுகுமுறை, மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற பல்வேறு  ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தனிப்பெயர் பெற்றவர். ‘மகளிர் உளவியல்’ என்ற காலாண்டு இதழின் ஆசிரியையாகப்  பணியாற்றியவர். உளவியல் துறையில் பெண்களுக்காக சிறந்த பங்களிப்பாற்றியமைக்காக அமெரிக்க உளவியல்  சங்கத்தால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர்.

1977ல் வெளியான “உடல் அரசியல்: அதிகாரம், பாலினம் மற்றும் உடல்மொழி” (Body Politics: Power, sex  and nonverbal communication) என்ற இவரது புத்தகம் பெண்ணியவாதிகளிடையே மிகுந்த வரவேற்பை  பெற்றது. அதிகாரத்தில் உள்ள நபர்கள், முக்கியமாக ஆண்கள், தமது சமூக அதிகாரத்தைப் பராமரிப்பதற்கான முக்கிய  வழிமுறையாக உடல்மொழியை பெண்களுக்கெதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை விவரிக்கும்  பெண்ணியப் பகுப்பாய்வே இந்நூல்.நான்சி ஹென்லி 2016ல் மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு அப்போது 82  அகவை.
- யோகி

https://henley.socialpsychology.org/

https://www.feministvoices.com/nancy-henley/

நன்றி
http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4813&id1=62&issue=20180601

குங்குமம் தோழி இதழில் நான்சி ஹென்லி யின் புகைப்படம் தவறாக அச்சாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் லேனா அஸ்தின். அவரும் பெண்ணியச்செயற்பாடாளர்தான்.

 

வியாழன், 14 ஜூன், 2018

பேசப்படாத இரண்டாம் தலைமுறை பெண்கள்

மலேசியாவில் இரண்டாம் தலைமுறை பெண்களின் வாழ்கை வரலாறு தோட்டப்புறத்திலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும் என தோன்றுகிறது. தோட்டப்புறத்திலிருந்த இரண்டாம் தலைமுறை பெண்கள் பல்வேறு காரணங்களால் (உலகமயமாக்கல், கல்வி, பணத்தேவை, திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியக் காரணங்களால்) நகரங்களை நோக்கி நகரத் தொடங்கியவர்கள். நகரத்து நெருக்கடிகளைச் சமாளித்து ஜீவனம் செய்ய ஆணோடு சேர்ந்து உழைக்கவும் துவங்கியவர்கள். வேலைக்குச் சென்றாலும் இவர்கள் இச்சமூகத்தில் எதிர்க்கொண்ட விமர்சனங்கள், ஏளனங்கள், பழிப்புகள், பழிகள் ஏராளம். உழைத்த உழைப்புக்குப் பலனை அனுபவிக்காதவர்கள் இவர்கள்.

இதுகாறும்கூட்டுக் குடும்பம் என்ற சூழலில் வீட்டு வேலைகளை, குடும்பத்தின் நிர்வாகத்தை, குழந்தைகளைப் பராமரிப்பவராக, குடும்ப வருவாய்க்கு ஏற்ப பணத்தைச் செலவிடுபவராக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் வெளியில் தெரியாமல் சமாளிப்பவராக பல பரிணாமங்களில் மேலாண்மை செய்து வந்த பெண், நகர வாழ்வில் தன் அறிவு, ஆற்றல், திறமை ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்த பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டனர். மலேசியாவில் பெண் வளர்ச்சி என்ற பரிணாமத்தின் ஆரம்பநிலை இதிலிருந்தே தொடங்குகிறது என எண்ணத் தோன்றுகிறது.
நகரங்களில் இருந்த இரண்டாம் தலைமுறை பெண்கள் ஒருபடி மேலே போய், மலாய் மொழியை இரண்டாம் தாய்மொழியாக கற்றல், ஆங்கில அறிவு, கல்வியின் பல்வேறு புலங்களில் மேதமை, உலக நடப்பு மற்றும் பெண்கள் ஒடுக்கப்படும்/அடிமைப்படுத்தப்படும் விதம், அதில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்றடைந்த விழிப்புணர்வு போன்றவை பிரதானமானவை. மேலும் மலேசிய அரசியலிலும் கால்பதிக்க துணித்தவர்கள் இவர்கள்தான்.

இவர்களின் இந்தப் படிப்படியான முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் இலக்கியத்தில் பதிவு செய்ய இவர்கள் மறக்கவில்லை. இத்தகைய விழிப்புணர்வு சில கதை, கட்டுரை, கவிதைகளாலும் நிகழ்ந்தது.
சமையலறை பெண்கள் மீது செய்யும் ஆதிக்கத்தைவீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை வாயிலாக அம்பை போன்றவர்களால் சாட்டையடி கொடுக்க முடிந்ததோ அதேபோல மலேசிய சூழலில் பெண் சமூகத்தின் இயந்திர வாழ்க்கையையும் இயலாமையையும் பேசக்கூடிய கதையாக .பாக்கியம் எழுதியகற்பின் விலை கதை அமைந்தது.

இத்தகைய எதிர்வினையால் பெண்கள், வீட்டின் சமையல் அறையை விட உலகம் பெரியது என்று உணர்ந்து, எரியும் அடுப்பின் நெருப்பிலிருந்தே தங்களுக்கான சிறகுகளை உருவாக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தனர். மேலே கூறிய பல்வேறு காரணிகளால் கடந்த 30 வருடங்களில் நம் மரபு சார்ந்த வாழ்க்கைமுறை தொலைந்து போனது. அதில் கூட்டு குடும்பத்தின் சிதைவு நிகழ்ந்திருந்தாலும், இரண்டாம் தலைமுறை பெண்களே அதற்குக் காரணம் எனச் சொல்பவர்களைப் பார்க்கப் பரிதாபமே ஏற்படுகிறது.

 நகர வாழ்க்கைக்கும் அதன் அழுத்தங்களான பணிச்சுமை, நேரமின்மை, அவநம்பிக்கை, மன உளைச்சல், Ego ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளானவர்கள் இரண்டாம் தலைமுறை பெண்கள். நகரங்களின் சக்கரப் பற்களுக்கு தங்களை தின்னக் கொடுத்தவர்கள். இத்தனை சவாலான விஷயங்களை அவர்கள் எதிர் கொண்டாலும் அதில் முற்று, முழுதாக சிக்கிக் கொள்ளவில்லை. இருப்பினும் அவர்களுக்கெதிரான குடும்ப வன்முறை, சுயமரியாதையைப் பறித்தல், பாலியல் வன்னடத்தை/ தடித்தனம் போன்றவை காட்டுச்செடிகளாக வளர்ந்தன.
இரண்டாம் தலைமுறை பெண்களுக்கு நிறைய விஷயங்கள் புதியாக இருந்தன. அதனாலேயே போராடவேண்டிய தேவையையும் அவசியத்தையும் உலகுக்கு உரக்க சொல்லக்கூடிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. மேலும் இந்தப் போராட்டத்தின் அவசியத்தை மூன்றாம் தலைமுறை பெண்களுக்கு கடத்திச் சென்று சேர்க்கக் கூடிய கடமையும் அவர்களுக்கு இருந்தது. ஆண் ஆதிக்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமடங்கு சறுக்கும்போது தான் ஊன்றி நிற்க அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மட்டுமே இருந்தது. அதைப் பற்றியே அவர்கள் தொடர்ந்து முன்னேறக்கூடிய சூழலை அமைத்துக்கொண்டு சாதித்தார்கள்.

வீடெனும் சிறையிலிருந்து வெளியேறி இருந்தாலும் சமூகம் போதிக்கும் ஒழுக்கம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்ட பெயரில் காட்டப்படும் அரசியல் அவலங்கள் சொல்லிமாளாது. இதனாலேயே ஜெயகாந்தன்அக்னி பிரவேசம் போன்ற சிறுகதைகள் இந்தச் சமூகத்தின் முகத்தில் அறையத் தேவைப்பட்டன.
இரண்டாம் தலைமுறை பெண்களை தயக்கத்திற்கு உட்படுத்திய சில விஷயங்களைக் கூற தலைப்படுகிறேன். (நான் சொல்லப்போவதில் விதிவிலக்குகள் எப்போதும் உண்டு, ஆனால் நான் பெரும்பான்மையான பெண்களைக் குறித்தே இங்குப் பேசுகின்றேன்) இரண்டாம் தலைமுறை பெண் தனது அலுவலகத்திலோ அல்லது தன்னோடு பணிபுரியும் வெகுசில ஆண் நண்பர்களின் பரிச்சயத்தை அலுவலகத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். பொது மற்றும் வெளி இடங்களில் பார்த்தாலும் சரளமான, நீண்ட பேச்சுகள் இருக்காது. ஒரு புன்னகை அல்லதுவணக்கம் நல்லா இருக்கீங்களா?” என்ற வாசகத்தோடு கடந்து போய் விடுவார்கள். அதிகம்போனால் இவர் எனது அலுவலகத்தில் பணிச் செய்பவர் என்று வேண்டுமானால் தனது கணவரிடம் அறிமுகம் செய்வார்கள். இவர் எனது ஆண்நண்பர் என்று சொல்லும் பிரலாபங்கள் வெகுவாக இருக்காது.

 படிக்கும் போதும் இரண்டாம் தலைமுறைப் பெண்கள் தன்னோடு படிக்கும் சக ஆண் மாணவர்களைப் பெற்றோர்களுக்குப் பரிச்சயப்படுத்துதல் குறைவு, அவர்களோடான பேச்சுக்களையும் வெகு சொற்பமாக வைத்துக்கொள்வார்கள். அவர்கள் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவைகளால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
இரண்டாம் தலைமுறை பெண்கள் தங்களது கருத்துகளில், சிந்தனையில் சுதந்திரத்தை உணரத்துவங்கியபோது, அவர்களை அதிகம்பேர் ஊக்குவிக்கவில்லை. அதுகாறும் அவர்களை இப்படி நோக்கியிராத (ஆண்) சமூகத்தால் இதைப் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இதனால் பெண்கள் மீது உண்டான தவறான புரிந்துணர்வு குடும்ப வாழ்வில் மனக்கசப்புகள், கணவன்மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனை, வெறுப்பு, விவாகரத்து போன்ற புதிய நச்சுகள் தோன்ற வழிவகுத்தது. அதே வேளையில், விதவைகள் மறுமணம், காதலித்து கலப்புமணம் போன்ற  நல்லவிஷயங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்தன.

இரண்டாம் தலைமுறை பெண்கள் பணிசெய்யும் இடங்களில் அவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வு தரப்பட்டாலும் அந்தப் பெண்ணுக்கு கீழே ஆண்கள் பணிபுரிய மறுப்பது, அவள் பலவீனமானவள், வலுவற்றவள், தவறான முறையில் தான் அந்த இடத்தை அடைந்திருப்பாள் என தமிழ் சினிமா பாணியில் கண்டபடி சித்தரிப்பது போன்ற மதிகேடான, மூர்க்கமான, மனதளவில் களைப்படையச் செய்யும் சித்ரவதைகளையும் எதிர்க்கொண்டு மேலெழுந்தார்கள்.

பேருந்தில், ரயிலில், சாலையில், அல்லது மற்ற பொதுஇடங்களில் இரண்டாம் தலைமுறைப் பெண்களும் ஆண்களின் அருவருக்கத்தக்கப் பகடிவதைக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்து சாதித்தவர்களே. இரண்டாம் தலைமுறை பெண்கள், உறவினர்களாக இருந்தால் அன்றி மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையில் ஒரு தயக்கம் கொண்டிருந்தார்கள். ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசிப் பழகாதவர்கள் அப்படிப் பழகினாலும் அதை சமூகமும் அடுத்தவர்களும் எப்படிப் புரிந்து கொள்வார்களோ என ஒரு தவிப்பாக அதை உணர்ந்தவர்கள் இவர்கள்.
இரண்டாம் தலைமுறை பெண்களிலும் குற்றம் இழைத்தல், வன்முறையில் ஈடுபடுதல், கொலை, கொள்ளை, கடத்தல், போன்றவற்றில் ஈடுபட்ட பெண்கள் உண்டு. ஆனால், குற்றப் புள்ளி விபரங்கள், குற்றங்களின் விழுக்காடு தற்போது உள்ள விழுக்காட்டை விட குறைவாகும். இரண்டாம் தலைமுறை பெண்களின் காலத்தில் குற்றம் புரிந்த பெண் குற்றவாளிகள், குற்றத்துக்குத் தூண்டப்பட்ட பெண் குற்றவாளிகள் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடும்ப பந்தத்தை இருக்க அணைத்து அதைச் சிதறவிடாமல் கட்டிக்காத்த திறமையும் தியாகமும் இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு வசப்படாத ஒன்றாகவே ஆகிவிட்டது. சுதந்திரம் பேசும் பல பெண்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்ற கேள்வி வரும்போது அதற்கான விடையைத் தடுமாறாமல் கூற முடியவே இல்லை. இரண்டாம் தலைமுறைப் பெண்கள், தன் தலைமுறை முழுக்கவே போராடி அடுத்த தலைமுறைக்கு ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தியாகங்களையும் இன்றைய பெண்கள் நினைத்துப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. என்றாலும் பெண்களுக்கான போராட்டம் இன்றைய தலைமுறையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது ஒரு முடிவில்லாத ஒரு வட்டம் போல.
 
நன்றி களம் ஜூன் மாத இதழ்