வியாழன், 14 ஜூன், 2018

பேசப்படாத இரண்டாம் தலைமுறை பெண்கள்

மலேசியாவில் இரண்டாம் தலைமுறை பெண்களின் வாழ்கை வரலாறு தோட்டப்புறத்திலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும் என தோன்றுகிறது. தோட்டப்புறத்திலிருந்த இரண்டாம் தலைமுறை பெண்கள் பல்வேறு காரணங்களால் (உலகமயமாக்கல், கல்வி, பணத்தேவை, திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியக் காரணங்களால்) நகரங்களை நோக்கி நகரத் தொடங்கியவர்கள். நகரத்து நெருக்கடிகளைச் சமாளித்து ஜீவனம் செய்ய ஆணோடு சேர்ந்து உழைக்கவும் துவங்கியவர்கள். வேலைக்குச் சென்றாலும் இவர்கள் இச்சமூகத்தில் எதிர்க்கொண்ட விமர்சனங்கள், ஏளனங்கள், பழிப்புகள், பழிகள் ஏராளம். உழைத்த உழைப்புக்குப் பலனை அனுபவிக்காதவர்கள் இவர்கள்.

இதுகாறும்கூட்டுக் குடும்பம் என்ற சூழலில் வீட்டு வேலைகளை, குடும்பத்தின் நிர்வாகத்தை, குழந்தைகளைப் பராமரிப்பவராக, குடும்ப வருவாய்க்கு ஏற்ப பணத்தைச் செலவிடுபவராக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் வெளியில் தெரியாமல் சமாளிப்பவராக பல பரிணாமங்களில் மேலாண்மை செய்து வந்த பெண், நகர வாழ்வில் தன் அறிவு, ஆற்றல், திறமை ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்த பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டனர். மலேசியாவில் பெண் வளர்ச்சி என்ற பரிணாமத்தின் ஆரம்பநிலை இதிலிருந்தே தொடங்குகிறது என எண்ணத் தோன்றுகிறது.
நகரங்களில் இருந்த இரண்டாம் தலைமுறை பெண்கள் ஒருபடி மேலே போய், மலாய் மொழியை இரண்டாம் தாய்மொழியாக கற்றல், ஆங்கில அறிவு, கல்வியின் பல்வேறு புலங்களில் மேதமை, உலக நடப்பு மற்றும் பெண்கள் ஒடுக்கப்படும்/அடிமைப்படுத்தப்படும் விதம், அதில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்றடைந்த விழிப்புணர்வு போன்றவை பிரதானமானவை. மேலும் மலேசிய அரசியலிலும் கால்பதிக்க துணித்தவர்கள் இவர்கள்தான்.

இவர்களின் இந்தப் படிப்படியான முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் இலக்கியத்தில் பதிவு செய்ய இவர்கள் மறக்கவில்லை. இத்தகைய விழிப்புணர்வு சில கதை, கட்டுரை, கவிதைகளாலும் நிகழ்ந்தது.
சமையலறை பெண்கள் மீது செய்யும் ஆதிக்கத்தைவீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை வாயிலாக அம்பை போன்றவர்களால் சாட்டையடி கொடுக்க முடிந்ததோ அதேபோல மலேசிய சூழலில் பெண் சமூகத்தின் இயந்திர வாழ்க்கையையும் இயலாமையையும் பேசக்கூடிய கதையாக .பாக்கியம் எழுதியகற்பின் விலை கதை அமைந்தது.

இத்தகைய எதிர்வினையால் பெண்கள், வீட்டின் சமையல் அறையை விட உலகம் பெரியது என்று உணர்ந்து, எரியும் அடுப்பின் நெருப்பிலிருந்தே தங்களுக்கான சிறகுகளை உருவாக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தனர். மேலே கூறிய பல்வேறு காரணிகளால் கடந்த 30 வருடங்களில் நம் மரபு சார்ந்த வாழ்க்கைமுறை தொலைந்து போனது. அதில் கூட்டு குடும்பத்தின் சிதைவு நிகழ்ந்திருந்தாலும், இரண்டாம் தலைமுறை பெண்களே அதற்குக் காரணம் எனச் சொல்பவர்களைப் பார்க்கப் பரிதாபமே ஏற்படுகிறது.

 நகர வாழ்க்கைக்கும் அதன் அழுத்தங்களான பணிச்சுமை, நேரமின்மை, அவநம்பிக்கை, மன உளைச்சல், Ego ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளானவர்கள் இரண்டாம் தலைமுறை பெண்கள். நகரங்களின் சக்கரப் பற்களுக்கு தங்களை தின்னக் கொடுத்தவர்கள். இத்தனை சவாலான விஷயங்களை அவர்கள் எதிர் கொண்டாலும் அதில் முற்று, முழுதாக சிக்கிக் கொள்ளவில்லை. இருப்பினும் அவர்களுக்கெதிரான குடும்ப வன்முறை, சுயமரியாதையைப் பறித்தல், பாலியல் வன்னடத்தை/ தடித்தனம் போன்றவை காட்டுச்செடிகளாக வளர்ந்தன.
இரண்டாம் தலைமுறை பெண்களுக்கு நிறைய விஷயங்கள் புதியாக இருந்தன. அதனாலேயே போராடவேண்டிய தேவையையும் அவசியத்தையும் உலகுக்கு உரக்க சொல்லக்கூடிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. மேலும் இந்தப் போராட்டத்தின் அவசியத்தை மூன்றாம் தலைமுறை பெண்களுக்கு கடத்திச் சென்று சேர்க்கக் கூடிய கடமையும் அவர்களுக்கு இருந்தது. ஆண் ஆதிக்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமடங்கு சறுக்கும்போது தான் ஊன்றி நிற்க அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மட்டுமே இருந்தது. அதைப் பற்றியே அவர்கள் தொடர்ந்து முன்னேறக்கூடிய சூழலை அமைத்துக்கொண்டு சாதித்தார்கள்.

வீடெனும் சிறையிலிருந்து வெளியேறி இருந்தாலும் சமூகம் போதிக்கும் ஒழுக்கம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்ட பெயரில் காட்டப்படும் அரசியல் அவலங்கள் சொல்லிமாளாது. இதனாலேயே ஜெயகாந்தன்அக்னி பிரவேசம் போன்ற சிறுகதைகள் இந்தச் சமூகத்தின் முகத்தில் அறையத் தேவைப்பட்டன.
இரண்டாம் தலைமுறை பெண்களை தயக்கத்திற்கு உட்படுத்திய சில விஷயங்களைக் கூற தலைப்படுகிறேன். (நான் சொல்லப்போவதில் விதிவிலக்குகள் எப்போதும் உண்டு, ஆனால் நான் பெரும்பான்மையான பெண்களைக் குறித்தே இங்குப் பேசுகின்றேன்) இரண்டாம் தலைமுறை பெண் தனது அலுவலகத்திலோ அல்லது தன்னோடு பணிபுரியும் வெகுசில ஆண் நண்பர்களின் பரிச்சயத்தை அலுவலகத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். பொது மற்றும் வெளி இடங்களில் பார்த்தாலும் சரளமான, நீண்ட பேச்சுகள் இருக்காது. ஒரு புன்னகை அல்லதுவணக்கம் நல்லா இருக்கீங்களா?” என்ற வாசகத்தோடு கடந்து போய் விடுவார்கள். அதிகம்போனால் இவர் எனது அலுவலகத்தில் பணிச் செய்பவர் என்று வேண்டுமானால் தனது கணவரிடம் அறிமுகம் செய்வார்கள். இவர் எனது ஆண்நண்பர் என்று சொல்லும் பிரலாபங்கள் வெகுவாக இருக்காது.

 படிக்கும் போதும் இரண்டாம் தலைமுறைப் பெண்கள் தன்னோடு படிக்கும் சக ஆண் மாணவர்களைப் பெற்றோர்களுக்குப் பரிச்சயப்படுத்துதல் குறைவு, அவர்களோடான பேச்சுக்களையும் வெகு சொற்பமாக வைத்துக்கொள்வார்கள். அவர்கள் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவைகளால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
இரண்டாம் தலைமுறை பெண்கள் தங்களது கருத்துகளில், சிந்தனையில் சுதந்திரத்தை உணரத்துவங்கியபோது, அவர்களை அதிகம்பேர் ஊக்குவிக்கவில்லை. அதுகாறும் அவர்களை இப்படி நோக்கியிராத (ஆண்) சமூகத்தால் இதைப் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இதனால் பெண்கள் மீது உண்டான தவறான புரிந்துணர்வு குடும்ப வாழ்வில் மனக்கசப்புகள், கணவன்மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனை, வெறுப்பு, விவாகரத்து போன்ற புதிய நச்சுகள் தோன்ற வழிவகுத்தது. அதே வேளையில், விதவைகள் மறுமணம், காதலித்து கலப்புமணம் போன்ற  நல்லவிஷயங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்தன.

இரண்டாம் தலைமுறை பெண்கள் பணிசெய்யும் இடங்களில் அவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வு தரப்பட்டாலும் அந்தப் பெண்ணுக்கு கீழே ஆண்கள் பணிபுரிய மறுப்பது, அவள் பலவீனமானவள், வலுவற்றவள், தவறான முறையில் தான் அந்த இடத்தை அடைந்திருப்பாள் என தமிழ் சினிமா பாணியில் கண்டபடி சித்தரிப்பது போன்ற மதிகேடான, மூர்க்கமான, மனதளவில் களைப்படையச் செய்யும் சித்ரவதைகளையும் எதிர்க்கொண்டு மேலெழுந்தார்கள்.

பேருந்தில், ரயிலில், சாலையில், அல்லது மற்ற பொதுஇடங்களில் இரண்டாம் தலைமுறைப் பெண்களும் ஆண்களின் அருவருக்கத்தக்கப் பகடிவதைக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்து சாதித்தவர்களே. இரண்டாம் தலைமுறை பெண்கள், உறவினர்களாக இருந்தால் அன்றி மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையில் ஒரு தயக்கம் கொண்டிருந்தார்கள். ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசிப் பழகாதவர்கள் அப்படிப் பழகினாலும் அதை சமூகமும் அடுத்தவர்களும் எப்படிப் புரிந்து கொள்வார்களோ என ஒரு தவிப்பாக அதை உணர்ந்தவர்கள் இவர்கள்.
இரண்டாம் தலைமுறை பெண்களிலும் குற்றம் இழைத்தல், வன்முறையில் ஈடுபடுதல், கொலை, கொள்ளை, கடத்தல், போன்றவற்றில் ஈடுபட்ட பெண்கள் உண்டு. ஆனால், குற்றப் புள்ளி விபரங்கள், குற்றங்களின் விழுக்காடு தற்போது உள்ள விழுக்காட்டை விட குறைவாகும். இரண்டாம் தலைமுறை பெண்களின் காலத்தில் குற்றம் புரிந்த பெண் குற்றவாளிகள், குற்றத்துக்குத் தூண்டப்பட்ட பெண் குற்றவாளிகள் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடும்ப பந்தத்தை இருக்க அணைத்து அதைச் சிதறவிடாமல் கட்டிக்காத்த திறமையும் தியாகமும் இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு வசப்படாத ஒன்றாகவே ஆகிவிட்டது. சுதந்திரம் பேசும் பல பெண்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்ற கேள்வி வரும்போது அதற்கான விடையைத் தடுமாறாமல் கூற முடியவே இல்லை. இரண்டாம் தலைமுறைப் பெண்கள், தன் தலைமுறை முழுக்கவே போராடி அடுத்த தலைமுறைக்கு ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தியாகங்களையும் இன்றைய பெண்கள் நினைத்துப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. என்றாலும் பெண்களுக்கான போராட்டம் இன்றைய தலைமுறையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது ஒரு முடிவில்லாத ஒரு வட்டம் போல.
 
நன்றி களம் ஜூன் மாத இதழ்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக