புதன், 16 டிசம்பர், 2015

என்ன சு..னிக்கு என்று ஏன் பாடலை எழுதவில்லை சிம்பு.... ??


இந்த வாரத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைப் பீப் மற்றும் பு..டை என்றுதான் நினைக்கிறேன். எங்குப் பார்த்தாலும் அந்தக் காவிய வார்த்தைகள் காற்றில்கூடக் கலந்து வரமாதியே இருக்கு. சட்டெனச் சொல்லக் கூசும், வசையின் போது மட்டுமே பேசப்படும் அந்த வார்த்தை இன்று எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்-பெண் என இரு பாலரும் பேசுவதற்குச் சிம்பு - அனிரூத் கூட்டணிப் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.

எனது தனிப்பட்ட கவலை, இவர்களின் கழிப்பட்ட இந்தப் பொறுக்கிச் தனத்திற்கு அவர்களின் வீட்டுப் பெண்களைச் சந்திக்கு இழுத்ததுதான். சிம்புவின் அம்மாவான உஷா, திருமணத்திற்கு முன்பான வாழ்கையைப் பற்றி ஒரு செய்தி நிறுவனம் எழுதியிருக்கிறது. பீப் பாடலுக்கு அபிநயம் பிடித்து அனுப்புமாறுச் சிம்பு-அனிருத் அம்மாக்களுக்குக் கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்னும் என்னென்ன இருக்கு என்று தேடிப்பார்க்க, பு..டையுள்ள எனக்கு மனம்- உடல் இரண்டும் கூசவே செய்கிறது.

இந்தப் பிரச்னைத் தொடர்பாகப் பல எதிர்வினைகள் எழுதப்பட்டு விட்டன. அனைத்திலும் கொற்றவை எழுதிய பதிவு அல்லது எதிர்வினை அதில் மிகவும் முக்கியமானது. ஆனால், அறத்தை முன்வைத்து, அந்தக் குடும்பத்துப் பெண்களை வசைப்பாடியிருப்பது (என் வரையில்) என்னமோ வேதனையளிக்கிறது. இந்தப் பொறம்போக்குகள் செய்யும் வசைகளுக்குகூட அந்தக் குடும்பத்துப் பெண்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இம்மாதிரியான பீப் பாடல்கள் தொடக்கத்தில் வெளியாவதற்கான வழியினைத் திறக்கும் போது, மூடுவதற்கான குரல்கள் அப்போதே காந்திரமாக ஒலிக்காமல் போனது ஏன்? ஒலித்த ஓர் இரு குரல்களும், அனிருத் போட்ட டப்பா இசையில் டான்ஸ் ஆடிவிட்டதும் மறுப்பதற்கில்லை.


வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா... ஒரு கல் ஒரு கண்ணாடிப் படத்தில் வந்த இந்தப் பாடலிருந்துதான், பெண்களை வெளிப்படையாகத் திட்டக்கூடிய பாடல்கள் அதிகம் வர ஆரம்பித்தன என நினைக்கிறேன்.

பிறகு, தனுஷ்
அடி டா அவள,
விடு டா அவள,
வெட்ரா அவள,
தேவையே இல்லை- னு

எழுதிய பாடல் சூப்பர் ஹிட். இந்த மாதிரியான கொலை வெறிப் பாடல்களைப் பொது நிகழ்சிகளிலும், ரியால்டி ஷோக்களிலும் பாடும்போதும் ஆடும்போதும் ரசித்தவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். ‘எவண்டி ஒன்னை பெத்தான், அப்பன் கையில கிடைத்தால் செத்தான்’ என்ற பாடல் வரிகளைக் கண்டித்து ஏன் அப்பாக்கள் பொங்கி எழவில்லை. பெண்களை (மகள்களையே) ரசிக்கும்படி செய்யும் சிம்புவும் வக்கரப் புத்தி அங்கு வெற்றி பெற்றுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்தப் பாடலையும் ஹிட்டாக்கிவிட்ட பெருமையில் நமது பெண்களுக்கும் நிறையப் பங்கு இருக்கிறது. இளம் வயது பெண்களுக்கு இந்தப் பாடல்களில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை போல.
உண்மையில் இப்படிப்பட்ட கழிச்சடைகளைப் பெற்றதற்கு அந்த வீட்டுப் பெண்களைவிட, ஆண்களைக் கேள்வி கேட்பதுதான் சரியாக இருக்கும். சிம்புவின் அப்பா பெண்களைத் தொடவே மாட்டார். ஆனால், அவர் படத்தில் ஒரு கலவி பாடல் இல்லாமல் இருந்ததில்லையே. அவர் செய்ய நினைப்பதை, சக நடிகர்களை வைத்துச் செய்து காண்பதில் வெற்றி பெற்றவர்தானே டி.ஆர்

ஹேய்ப் பொண்டாட்டி, எனக்குத் தேவையில்லை வைப்பாட்டி என மனநோயாளியான சிம்புவுக்கு அப்பவே டி.ஆர் சிகிச்சை எடுத்திருந்தால் ஏன் பு..டை பாடல்கள் வருகிறது? அனிருத் போன்ற நேற்று முளைத்த காளான்கள், இசை என்ற போர்வையில் ஏன் ஆபாச இசையை இசைக்கப் போகிறார்கள்?

அந்த வீட்டுப் பெண்களிடம் அனுமதிக் கேட்டு இந்தத் தருதலைகள் 150 பாடலை வடிவமைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் பொறுக்கிகள் செய்யும் பொறுக்கித் தனத்திற்குகூட அந்த வீட்டுப் பெண்களைதான் சந்தியில் நிற்க வச்சுக் கேள்வி கேட்கிறோம்.

சிம்புவின் அப்பா சென்னைப் போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகச் செய்தி அறிந்தேன். இது முழுமையாகாத டம்மிச் சொல் கொண்டு எழுத்தப்பட்ட பாடல் என்று அந்தத் தாயுமானத் தந்தை சொல்லியிருக்கிறார். முழுமையாகாதப் பாடலே இந்த லட்சணம் என்றால்,முழுமையான பாடல் என்னமாதிரியான வரியில் இருக்கும். தப்புச் செய்ததை விட அதைத் தூண்டனவனுக்குதான் தண்டனை அதிகம்னுச் சொல்லுவாங்க. இப்போது அதற்கு ஆதரவாகத் திருவாய் மலர்ந்த டி.ஆரை என்ன செய்யலாம்.
நியாயப்படி அந்தப் பாடலுக்கான முத்திரைகளை இந்தப் பண்ணாடைகளை பெற்ற தகப்பன் சாமிகள்தான் பிடிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பீப் பாடலில் ‘உன்னை டார் டாராக் கிழிச்சு ஓத்துட்டுப் போனவள’ என்ற வரியும் இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம்தான் சிம்புவிடம் கேட்கத் தோணுது. என்ன பு..டைக்கு லவ் பண்ற என்பதற்குப் பதில் என்ன சு..னிக்கு லவ் பண்றோம்? என்று எழுதியிருந்தால் அந்தப் பாடல் எப்படி வந்திருக்கும்? அதற்கான எதிர்வினைகள் எப்படி எழுதப்பட்டிருக்கும்? சொல்லப்போனால், மார்கழி மாதத்திற்குப் பொறுத்தமான வரியும் அதுதானே சிம்பு..

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கதை பேசும் எனது புகைப்படங்கள் 1


புகைப்படக்கருவியின் மீதான மோகம் அல்லது ஈர்ப்பு எப்போது எனக்குள் ஏற்பட்டது எனக்கேட்டால் என்னால் சரியாக கூற இயலாது. அதே போல், முதன் முதலாக நான் எடுத்த புகைப்படம் எதுவென்றும், எந்த மாடல் புகைப்படக்கருவியில் படம் எடுத்தேன் என்றும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நான் வாங்கிய முதல் புகைப்படக்கருவியை இன்னும் வைத்திருக்கிறேன். அது second hand புகைப்படக்கருவி. தற்போது அது பழுதடைந்திருந்தாலும் என்னுடன் கொண்டிருக்கும் அனுபவங்கள் நிறைய. கவிதையைப் போன்றே புகைப்படம் எடுத்தலும் மிக நுட்பமானது.. அதை கையாளும் மனம் வாய்க்க வேண்டும். எல்லா நிலையிலும் அது வாய்த்திடாது.

அரசியல் விவகாரங்களில் நான் எடுக்கும் படங்களில் ரசனைகளை தேடுவது குறைவதுதான். அதுவே கலை சம்பந்தப்பட்ட அல்லது மக்களின் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட படங்களில் என்னையும் அறியாமல் ஒரு மெனக்கெடல் இருக்கும். நான் பேசுவதை என் கெமெரா கேட்கும் தருணம் அது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, 2013-ஆம் ஆண்டுதான் ஒரு நல்ல கெமராவை வாங்கினேன். இன்றும் அதைத்தான் பயன்படுத்துகிறேன். அதற்கு இன்னும் கூடுதலான உபகரணங்கள் இணைத்து பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்  இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான படங்களை அதில் எடுத்திருப்பேன். எத்தனை எத்தனை சம்பவங்கள், பிரபலங்கள், நிகழ்ச்சிகள், துக்கங்கள், கண்ணீர் என அத்தனையும் என் கெமரா பார்த்துள்ளது.

இந்த வருடத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களில் என் மனதிற்கு நெருக்கமான சிலப் புகைப்படங்களை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்..

(இவை இலங்கையில் எடுத்த புகைப்படங்கள்)
மலையகத்தில் வசிக்கும் தோழர் தினகரனின் தாயார். என் பாட்டையை அவர் ஞாபகத்திற்கு கொண்டு வந்தார். அவரோடு இரண்டு வார்த்தை பேசக்கூட அவகாசம் அமையவில்லை. ஆனால், அவரின் உபசரிப்பை அளவிட்டு கூறிவிடமுடியாது. இந்தப் புகைப்படத்தை எடுக்கும் போது அந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமல் அவருக்கேகூட தெரியாமல் எடுத்தேன். நெருப்பு, ஊதுகோல் விடவும் அதற்கு பின்னால் ஒட்டியிருக்கும் கருமை பல கதைகளை பேசக்கூடியது. 







நெருப்பின் அடர்த்தி நாம் அறிந்ததுதான். ஆனால், இங்கு அடர்த்தியில்லை. அமைதிதான் இருக்கிறது. எத்தனை பரிசுத்தம் அந்த அமைதியில். பிசகாத சீரான அமைதி. கேமராவின் மூட் மாற்றி எடுத்தேன். மற்றபடி எந்த மேஜிக்கும் இதில் இல்லை. எத்தனை கதைகள் பேசியிருப்பேன் என்றே தெரியாது இந்த புகைப்படத்திடம். இயற்கையை விட்டு கொடுக்காத அதன் வாசம் இன்னும் நெஞ்சோடு ஒட்டிக்கிடக்கு. இடம் தினகரன்-ஶ்ரீ வீட்டு மலையகம் அடுப்படி.










இதுவும் அடுப்படிதான். யாழ்ப்பாண வாசிகளின் தினசரியையும், வாழ்வியலையும் பேசும் அடுப்படி. இதுபோன்ற வாழ்கையை மலேசிய இந்தியர்கள் வாழ்ந்திருந்தாலும், அதை தொலைத்து வெகுநாள் ஆகிவிட்டது. கருமை ஏரிய சட்டி, அடி வாங்கிய பானைகளை அவர்கள் பயன்படுத்துவதிலிருந்து எப்போதோ பின்வாங்கிக் கொண்டார்கள். லேசான தனலில் வெளியேறும் புகை, பல மாயாஜாலங்களை காட்டிக்கொண்டிருந்தது எனக்கு. மலேசியாவில், அத்தகைய பானைகள் ஜாதியை பேசுவதாக சிலர் விமர்சிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏழ்மை நிலையிலும் ஓர் ஏழை தன் ஜாதியை (தாழ்ந்த ஜாதி என நினைப்பவர்கள் ) காட்டிக்கொள்ள இங்கு விரும்புவதில்லை. போலியான பகட்டுக்கு பழகிவிட்ட நாங்கள், இனி அசல் வாழ்வியலை மீட்பது சந்தேகம்தான். இடம், யாழினியின் வீடு.


சாம்பல் பறவை, எப்படி என்னை கவர்ந்ததாக மாறியது என்ற ரகசியம் எனக்கே தெரியாத ரகசியம்தான். அதனிடம் இருக்கும் தனிமை, சோகம் சொல்லத்தெரியாத ஏதோ ஒன்று அந்த சாம்பல் பறவை என்னிடம் பேசிக்கொண்டே இருக்கிறது. காற்றில் அசையாத இலை, காய்க்காத மரம் என சாம்பல் பறவை இருக்கும் எங்கும் எந்த ஒரு கொண்டாட்ட நிலையையும் நான் கண்டதில்லை. 



சின்ன வெங்காய கொத்து. நான் இப்படி எங்கும் பார்த்ததில்லை. மண் வாசம் மறையாத வாழ்வியல் பாடத்தை அதில் படிக்கலாம். இயற்கையோடு, மண்ணோடு அதன் மீது முழு நம்பிக்கை வைத்து வாழும் சமூகம். இது நவீனம் தொலைத்தவகைகளில் ஒன்று. சூரிய ஒளி படும் அந்த காலை நேரத்தில் அதன் வசீகரம் மட்டுமல்ல, வாசமும் அழகு.
இடம்: யாழினி வீட்டு சமையலறை (யாழ்பாணம்)




நான் எடுத்து, மிகவும் கவர்ந்த புகைப்படங்களில் இது மிகவும் முக்கியமான படமாக நினைக்கிறேன். பெண்கள் மிகவும் பலசாலிகள்தான் என்று நானே பார்த்து வியந்து நின்ற காட்சி. சுமை தலைக்கு ஏறிய பின், தனது நடையின் வேகத்தைக் கூட்ட அந்தப் பெண் செருப்பை கழற்றி கையில் வைத்துக்கொண்டார். வெய்யிலின் கடுமையோ, தலையில் இருக்கும் சுமையோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதோடு, அத்தனைச் சுமையையும் அவர் ஒற்றைக் கையில்தான் சுமந்திருந்தார்.

கிட்டதட்ட 11-12 வருடங்களாக இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த நிலம் இது. இன்னும் முழுமையாக கன்னி வெடிகள் அகற்றப்படவில்லை. போரின் எச்சம் இன்னும் துயரத்தை அங்கு பேசிக்கொண்டிருக்கிறது. தடையாக போட்டிருந்த முள்வேலிகளுக்கு அத்தனைக் கதைகளும் தெரியும். இரவு பகல் என கண் விழித்து பார்த்துக்கொண்டிருத சாட்சிகளில் ஒன்று இல்லையா இந்த முள்வெளி. பிடுங்கி எரிந்திருந்தாலும், மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து துறுப்பிடித்திருந்தாலும், அந்த இடத்தை கடப்பவர்களுக்கென ஒரு கதையை வைத்திருக்கிறது இந்த முள்வேலிகள்.


(தொடரும்)

வியாழன், 10 டிசம்பர், 2015


மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள்

மலேசியாவைப் பொறுத்தவரை  இந்தியப் பெண்கள் பல சிக்கல்களுக்கு நடுவில் இருக்கிறார்கள் என்று மட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது. அவர்களில்  வாழ்வியல் முன்னேற்றம் குறித்து பேசுவது என்றால் அதுவே ஒரு சிக்கலான விஷயம் என்றுதான் சொல்வேன்.  இங்கே சீனப்பெண்கள் பண பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான முதல் தேவையாக கல்வி இல்லை என்றாலும் (தற்போது சீனர்கள் கல்வியிலும் முன்னுக்கு வருவது குறிப்பிடத்தக்கது) பொருளாதாரத்தில் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்ற ரீதியில் நிற்கிறார்கள்.  மலாய்க்கார பெண்களுக்குப் பணபலம் இல்லை என்றாலும் அரசாங்கத்தில் ஆதரவும் பூமி புத்ரா அந்தஸ்தும் இருக்கிறது. இதில் இந்திய பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. அவர்களுக்குப் பண பலமும் இல்லை பூமி புத்ரா அந்தஸ்தும் இல்லை. ஓரளவுக்கு வசதியான பெண்கள் தங்களைப் பொருளாதார ரீதியில் நிலை நிறுத்திக்கொள்கிறார்கள்.  இந்த நிலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்தான். இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வருபவர்கள் சில பேர் தான். அப்படி பார்த்தாலும் அவர்களுக்கு பின்னால், வாழ்கையை அல்லது ஆசையை தொலைத்த யாராவது இருக்கவே செய்கிறார்கள்.
இந்நிலையில் மலேசிய நாட்டில் பெண்களின் சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது என்று தெரியவில்லை. முதலில் இந்தியப் பெண்களிடத்தில், அவர்கள் சுதந்திரம் குறித்து பேச நேரும்போதுபெண்களே ஒரு குற்றச்சாட்டை அல்லது கருத்தை அவ்விடத்தில் முன்வைக்கின்றனர்.  அதாவது பெண்களே பெண்களின் சுதந்திரத்தை தவறாக புரிந்துக்கொள்கின்றனர் என்றும் அவர்களுக்குப் பெண் சுதந்திரத்திற்கு  அர்த்தம் தெரியவில்லை என்றும். இன்னும் தீர்க்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களின் அடிப்படை சுதந்திரம்கூட பெண்களாலேயே மறுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்தச் சிந்தனை அவர்களிடத்தில் எப்படி வந்தது என்றால் ஆண்கள் குணத்தின் பிரதி பிம்பம் என தெளிவாகத்தெரியும். இங்கே பெண் சிந்தனை என்பது ஒரு ஆணால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. தந்தை வழி சமூகத்தில் வளரும் பெண்கள் அவர்களுக்குத் தெரியாமலே ஆணாதிக்க சிந்தனையை பெண்களின் சிந்தனை என நினைக்கிறார்கள், என்பதைக்காட்டிலும் நம்புகிறார்கள். 
குறிப்பாக, 12 வயதில் பருவம் அடைவதற்கு முன்பாகவே அதாவது அவள் குழந்தையாக இருக்கும் போதே சக நண்பனுடன் விளையாடுவதை அவர்கள் தடைவிதிக்கிறார்கள். உவியல் ரீதியில் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமையும் வேற்றுமையும் அங்கே தன் தாயின் மூலமே தொடங்கி வைக்கப்படுகிறது.
என்ன அவனிடம் உனக்கு பேச்சு? என்ன பேசினீர்கள்? உனக்குப் பெண் தோழிகளே கிடையாதா? போன்ற வார்த்தைகளை சராசரியாக எல்லா பெண் குழந்தைகளும் கடந்து வருகிறார்கள். இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கைதான். அவரின் தாயாரோ அல்லது யாரோ அவருக்கு கூறியதை, இவர் சந்திக்கும் பெண் குழந்தைகளிடத்திலெல்லாம் சொல்லி பழி தீர்க்கிறார்.
இந்த நிலை சீன-மலாய்க்கார சமூகத்திலுள்ள பெண்களுக்கு மாறுபடுகிறது. அதாவது தனது 13-வது வயதில் இடைநிலைப்பள்ளிக்குப் போகக்கூடிய இந்திய மாணவிகள், முற்றிலும் வேறொரு உலகத்திற்கு அல்லது கலாச்சாரத்திற்குள் போகிறார்கள். அங்கு சீன மற்றும் மலாய் மாணவிகள் ஆண்களிடமும் மற்ற சமூகத்திடமும் சகஜமாக பழகக்கூடிய சூழலைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்திற்கு உள்ளேயே வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு பிற்போக்குதனமான சிந்தனைக்கொண்ட மாணவிகள் இந்தச் சூழலுக்கு வருகிறபோது அவர்களிடம் மாற்றமும் ஒரு தாக்கமும் ஏற்படுகிறது.
இந்த மாற்றமானது இந்திய பெண்களுக்கு உடனே வந்துவிடுவதில்லை. தோட்டம் சார்ந்து வாழ்ந்த மக்கள் பட்டணத்திற்கு வரும்போது வேறு இனத்தவரோடு இணைந்து பழகும்போது, அவர்களைப் பார்த்து ஏற்படுத்திக்கொண்ட மாற்றம்தான் இது.

மலேசியாவில் பெண்கள் அமைப்பின் வளர்ச்சி
மலேசியாவில் பெண்கள் அமைப்புகளை பல்லாண்டுகளாக பலர் தலைமையேற்று நடத்துகின்றனர். அவர்கள் பல்வேறு பின்புலங்களையும், நாட்டின் பல்லின தோற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மலேசியப் பெண்களின் போராட்டங்களை ஒரு கழுகுப்பார்வையில் பார்க்க சாந்தா அவர்களின் ஆய்வு நமக்குக் கைக்கொடுக்கிறது.
மலேசிய சோசியலிஸ கட்சியைச் சார்ந்த சாந்தா அவர்கள் கூற்றின்படி  1930-ல் மலாய்ப் பெண்கள் ஆசிரியைகள் சங்கம், மலாய் சமூகத்தின் பெண்களைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்குப் போராட வேண்டியிருந்தது என தெரிய வருகிறது. ஆண்களும்கூட, சைட் சேக் அல் - ஹடி மற்றும் ஜைனல் அபிடின் அகமத் ஆகியோர் பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்த முக்கிய பங்கு வகித்தனர் என அவர் கூறுகிறார்.
1945-ல் (womans union) என்ற பெயரில் பெண்கள் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் மற்ற மாநிலங்களில் கிளைகள் அமைக்கப்பட்டன. அதில் சீனர்களே அதிகம் உறுப்பினர்களாக இருந்தனர். போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் அமைப்பாக அது இருந்தது. அதன் நோக்கம், இனம் சாராத, தொழில் சார்ந்த கல்வி மற்றும் அரசியல் தொடர்புடைய சங்கமாக இருக்க வேண்டும் என்பதே.
1946-1948 வரையில் பல்வேறு இனம் சார்ந்த பெண்கள் குழுவினர், பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக பெண்களின் தாழ்வு மனப்பான்மை தொடர்பான விசயங்களில் போர்க்கொடி தூக்கினர். இவர்களே பின்னாளில் பெண்கள் பிரிவின் தேசியவாதிகளாகவும், கம்யூனிச கட்சிகளாகவும் விளங்கி சுயமாக செயல்படத் தொடங்கினர்.
சமீப காலத்தில் மலேசியாவில் பெண்கள் அமைப்புகள் அதன் நோக்கங்களில் பரவலான விரிவாக்கத்தைக் கொண்டுள்ளது. அதில் இளம் பெண்கள், திருநங்கைகள், பெண் பாலியல் தொழில்புரிபவர்கள், குடியேற்ற பெண் தொழிலாளர்கள், பூர்வீகக்குடி பெண்கள் போன்றோரும் அடங்குவர்.
இதில் காணப்படும் பலவீனங்கள் யாதெனில், இதுபோன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் மத்திய வர்க்க பெண்களால் ஆளப்படுவதுதான். சக்திவாய்ந்த விளிம்புநிலை பெண்கள் சார்ந்த அமைப்புகளை இன்னும் உருவாக்கவில்லை அல்லது உருவாக்க இயலவில்லை என்றுதான் சொல்வேன். அதற்கு மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதாலும், ஹராம் என்ற ஒற்றைச் சொல்லில் அத்தனையையும் அவர்கள் ஒடுக்க நினைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். 
பெண்கள் அமைப்புகள் சுதந்திரத்திற்கு முன்பு போல் பாகுபாடற்ற நிலையில் இல்லாமல், இப்போதெல்லாம் பெண்கள் சார்ந்த எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். கல்வி வாய்ப்புகள், சொத்துடமைகளை உரிமைக் கொள்ளல், சுரண்டல், பாகுபாடு, வேலையிடத்தில் மற்றும் சமுதாயத்தில் நிலவும் தங்களுக்கு எதிரான அனைத்திலும் விழிப்புணர்வு பெற போராடி வருகின்றனர்.
2. இன்றைய பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
மலேசியாவில் பெண்களின் நிலையில் முன்னேற்றம் அறவே இல்லை என சொல்லிவிட முடியாது. முன்னேற்றம் என சில இருக்கவே செய்கிறது. சாந்தா அவர்களின் ஆய்வுபடி நாட்டின் தொழில் ஆள்பலத்தில் 52.8 விழுக்காடு பெண்கள் இருப்பதுடன், ஆச்சரியப்படும் வகையில் உயர்க்கல்வி நிலையங்களில் 68 விழுக்காடு உள்ளனர். ஆனால் கலாச்சாரம், சட்டம் மற்றும் மதங்கள் அவர்களுக்குப் பல வகையில் தடையாக உள்ளன. பாலின செயல்பாடுகளில் அவர்கள் கட்டுப்பாடான மற்றும் பாதுகாப்பான ஆணாதிக்க சிந்தனைகளை பெண்களிடையே பிரயோகிக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
பெண்களை பாகுபாட்டுடன் நடத்துவதில் சட்டங்களும், ஆண் மனபோக்கு விவகாரங்களும், விவாகரத்து விசயங்களில் எதிர்க்கொள்ளும் போராட்டங்கள் பெண்களுக்கு எதிராக எத்தகைய போக்கினை கடைப்பிடிக்கின்றன என்பதை பெண்கள் உதவி அமைப்புகள் காட்டுகின்றன. இன்று பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டாலும் பலர் தங்களது ஊதியத்தை கணவனிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்படும் நிலை இன்னும் இருக்கவே செய்கிறது.
சட்டங்கள் பெண்களுக்கு நியாயமாக செயல்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அதற்கு இரு சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.
1. இளம் இந்திய பெண்ணான கலைச்செல்வி என்பவர், 2010-ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க வந்தவனை தாக்கியதால் அவன் உயிர் இழந்தான். இரண்டு வருடம் அந்த வழக்கு நடந்தது. கடந்த வருடம் அவள் குற்றவாளி என இரண்டு வருட சிறைதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணம், உயிர் போகும் அளவுக்கு தாக்கியது குற்றம் எனக்கூறியது.
2. மதமாற்றப் பிரச்னையில் இந்திராகாந்தி எனும் பெண்ணிடமிருந்து அவளின் குழந்தை பறிக்கப்பட்டது. விவாகரத்து பிரச்னையைப் பொறுத்தவரையில் பிள்ளைகளை யார் பாதுகாப்பில் விடுவது, பராமரிப்புச் செலவு, போன்ற விஷயங்களுக்கு இன்றுவரை சரியான சட்ட தீர்வு இல்லை.
மேலும், குடிநுழைவு, வீட்டு வன்முறை மற்றும் சொத்து ஆகியவற்றிலும் பெண்கள் வெகுவாக பாதிப்படைகிறார்கள். அதுபோன்ற சட்டங்களை மாற்றக்கோரி பிரச்சாரங்களை மேற்கொண்டதில் வருமான வரி, விநியோக சட்டம், கற்பழிப்பு தொடர்பான சட்டம் போன்றவை மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவை முழுமையாக மலேசிய பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறதா என்பது கேள்விக்குறிதான்.
அரசியல் ரீதியாக பார்த்தாலும் பெண்களுக்கான சுதந்திரம் அதில் குறைவுதான்.
உதாரணத்திற்கு, அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி பெசாரை நியமிக்கும் விசயத்தில், பி.கே.ஆர் கட்சியின் டாக்டர் வான் அஸிஸாவை மந்திரி பெசாராக பரிந்துரைக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இதற்குக் கூறப்பட்ட பல காரணங்களில் அவர் பெண்ணாக இருப்பதும் ஒன்று என தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்தை அம்னோவின் வழக்கறிஞரான டத்தோ முகமட் ஜஃபாரிஸாம் ஹாருன், நாட்டின் பிரபல நாளேடான News Straits Times-சில் பகிரங்கமாக கூறியிருந்தார். இது உண்மையில் ஒரு இழிவான கருத்தாகவே நான் பார்க்கிறேன்.

தென் கிழக்காசியாவில், நாடாளுமன்ற பெண்கள் பிரதிநிதித்துவத்தில் மலேசியா கடைசிக்கு இரண்டாவது இடத்தில் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை நாட்டின் முன்னணி இணைய செய்தி வலைத்தளமான Insider  வெளியிட்டிருந்தது.
 Timor-Leste என்ற நாட்டில்தான் அரசியலில் பெண்களின் பங்கு 38.5 விழுக்காடு என முதல் நிலையில் இருக்கிறது. Loas  25 விழுக்காடாக இரண்டாம் நிலையிலும் இருக்கிறது. வியட்னாம் 24.4. விழுக்காடும் சிங்கப்பூர் 24.2 விழுக்காடும், பிலிப்பைன்ஸ் 22.9 விழுக்காடும் கம்போடியா 20.3, இந்தோனேசியா 18.6 மற்றும் தாய்லாந்து 15.8 விழுக்காடும் பெண்களுக்கான அரசியல் உரிமையை வழங்குகின்றன.  மலேசியாவில் 222 நாடாளுமன்ற சீட்டுகளில் பெண்களின் பங்கு 10.81 விழுக்காடு மட்டுமே. இது அரசாங்க மற்றும் சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் முடிவெடுக்கும் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு என்பதை நமக்குப் படம் பிடித்து காட்டுகிறது.
1995-ல் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 விடுக்காட்டு இலக்கைக் கொண்டிருந்தாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அது இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கான அடைவு நிலையில் வராதது வருத்தமளிக்கிறது.
மூவினங்கள் கொண்ட மலேசியாவில் ஒவ்வொரு இனத்திற்கும் தாய்க் கட்சி உண்டு. மலாய்க்காரர்களுக்கு அம்னோ. அதில் தேசிய மகளிர் பிரிவின் அணி தலைவி, டத்தோஸ்ரீ என்ற உயரிய பட்டத்தோடு கட்சியை வழிநடத்துகிறார். சீனர்களின் தாய் கட்சியான MCA-வில் தேசிய மகளிர் தலைவியான ஹெங் சீய் கிய் டத்தோ அந்தஸ்தோடு, மகளிர் குடும்பநல மேம்பாட்டு துணையமைச்சர் பதவியில் தலைவி அந்தஸ்தில் இருக்கிறார். இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா-வின் தேசிய மகளிர் தலைவிக்கு எந்த அந்தஸ்தும் கிடையாது. அந்த மகளிர் பிரிவுக்குச் சொந்தக் கட்சியிலிருந்து மானியம்கூட ஒதுக்குவதில்லை. அவர்கள் அரசிடம் வேண்டிதான் பெற வேண்டும். சொந்த கட்சியே அவர்களை இப்படி ஒதுக்கி வைத்திருக்கையில், மற்ற இனத்தவரோடு எம் பெண்களை ஒப்பிட்டு பார்ப்பதே எனக்கு கூச்சமாக உள்ளது. 
கடந்த மாதத்தில் பிரபல இணைய எழுத்தாளரும் விரிவுரையாளருமான ரிட்டுவான் தீ, பெண்களின் உடல்கள் வசீகரமாகவும் உணர்ச்சியை தூண்டும் வகையில் உள்ளது. அவர்கள் தங்கள் உடலை வெளிக்காட்டி பீற்றிக் கொள்கிறார்கள். இதுவே ஆண்களை கற்பழிப்புக்கு தூண்டுகிறது.  நாட்டில் நடைபெற்ற ஒரு லட்சம் கற்பழிப்பு சம்பவத்திற்கு இதுதான் காரணம் என்கிறார்.
இங்கு ஒரு விஷயத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது கடந்த வருடம் டில்லியில் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்டச் சம்பவத்திலும் பெண்கள் அணியும் உடைதான் பாலியல் பிரச்சனையை தூண்டுவதாக கூறப்பட்டது. இதுபோன்ற பொதுபுத்தி சார்ந்த அபிப்பிராயம் கொண்டவர்களிடத்தில் நான் ஒரு கேள்வியைத்தான் முன்வைக்க நினைக்கிறேன். அதாவது உலக முழுவதுமே பள்ளி மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்துகிற சம்பவம் நிறைய பதிவாகியுள்ளன. அப்படி என்றால் பள்ளி மாணவிகளின் சீருடை எந்த அளவுக்கு கவர்ச்சியானதாக இருக்கிறது என்பதை இந்த ஆணாதிக்க சமூகம்தான் கூறவேண்டும். குறிப்பாக உடைக்கும் பாலியல் தூண்டதலுக்கும் சம்பந்தம் இருக்கிறது எனக் கூறுவது எவ்வகையான சிந்தனை வடிவம் என எனக்கு இன்னும் விளங்கவில்லை.
 ஜாய்ஸ்' சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா, பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பிறகு, பெண்கள் கற்பழிப்பு சம்பவங்களிலிருந்து விடுபட அவ்ராட்' (AURAT) எனும் கட்டுபாடுகளை விதித்தது. அதாவது மலாய் மொழியில் அவ்ராட் என்றால், நெருங்கிய உடல் பாகங்கள் என்றும், முஸ்லிம் பெண்கள் தங்கள் உடலை துணிகளை கொண்டு மறைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் வெளியில் காட்டுவது பாவத்திற்குரியது என்றும் கூறி வலியுறுத்தியது. 
திரேசா கோக் போன்ற எதிர்கட்சி தலைவிகள் தங்கள் சொந்த வாழ்கையில்கூட சுதந்திரமாக செயல்பட முடியாமல் விமர்சிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் மது அருத்துவதைக்கூட படம்பிடித்து ரொம்பவும் கீழ்த்தரமாக இழிவுபடுத்தி விமர்சிக்கிறார்கள். அரசியலிலும் சமூக இயக்கங்களிலும் ஈடுபடும் ஆண்கள் செய்யும் எந்த நெகடிவ் விஷயமும் அங்கு கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ, அல்லது கேள்வியோடு பார்க்கவோ படுவதில்லை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களுக்கு பெண்கள் பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலக்கிய ரீதியில் என்று பார்த்தாலும் குறிப்பாக மலேசியத் தமிழ் இலக்கியத்தையே கவனித்தால் பாலியல் ரீதியான, அந்தரங்கமான விஷயங்களை பகிரங்கமாக எழுதுவது எம் நாட்டுச் சூழலுக்குப் பொருந்தாது என்கின்றனர். எதன் அடிப்படையில் இந்த கூற்று வைக்கப்படுகிறது என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை. அதையும் மீறி எழுதினால், அது கழிவறை இலக்கியம் என விமர்சிக்கப்படுகிறது. அல்லது இவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என ஒதுக்கப்படுகிறார்கள். அதற்கு உதாரணமாக, மிக அண்மையில் விரிவுரையாளரான கிருஷ்ணன் மணியம், இப்படி கூறுகிறார். அதாவது தமிழக பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிற கவிதைகளும் இலக்கியங்களும் மலேசிய நாட்டுச் சூழலுக்குத் தேவையில்லை எனும் கருத்தை முன்வைக்கிறார். ஆனால், தமிழ் இலக்கிய பரப்பில் சங்க இலக்கியங்களிலிருந்து தற்போது இருக்கிற நவீன இலக்கியம் வரைக்கும் பெண் உடல்சார்ந்த, விஷயங்கள் பேசப்பட்டுதான் வந்திருக்கின்றன.
ஆனால், மலேசியா போன்ற நாட்டில், ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிப்பவர்களை தமிழ்துறை சார்ந்த தலைவரான ஒருவர் இப்படிப்பட்ட இலக்கியங்கள் வரக்கூடாது என சொல்கிறார். அப்படி என்றால், இதுபோன்ற சிந்தனைக் கொண்ட விரிவுரையாளரோ அல்லது ஆசிரியரோ இருக்கக்கூடிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவி அல்லது மாணவர்களிடத்தில் எம்மாதிரியான இலக்கிய படைப்புகளை எதிர்பார்க்கிறது?
தமிழை மட்டுமே ஒரு பாடமாக எடுத்து முனைவர் பட்டம் பெரும் வாய்ப்புகள் கொண்ட நாடுகள் மிகச் சொர்ப்பம்தான். சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, தமிழ் நாடு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில்தான் அது செய்ய முடியும். மலேசியாவிலும் அந்த வாய்ப்பு இருக்கிறது என்றால், அந்த நாட்டில் தமிழ் துறையில் இருக்கும் தலைவர் இம்மாதிரியான இலக்கியங்கள் வேண்டாம் என்று சொல்கிற பட்சத்தில், அந்தக் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர் அல்லது மாணவிகளின் இலக்கிய அறிவு எந்தளவுக்கு விரிவடைய சத்தியமாகிறது? இங்கு மாணவிகளுக்கு கல்வி கிடைக்கிறது.. ஆனால், உண்மையான கல்வி எது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.   
மிக அண்மையில் நான் ஒரு நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரிப்புக்காக போயிருந்தேன். அப்போது எங்களின் இந்திய தேசிய கட்சியின் மகளிர் தலைவி உரையாற்றினார். பெண்களுக்குப் பூ கட்ட, கேக் செய்ய, மருதாணி போட, மணி பின்ன, மணப்பெண் அலங்காரம் செய்ய பயிற்சி கொடுத்திருக்கிறோம். இனி அவர்கள் சொந்தமாக தங்களின் வருமானத்தை ஈட்ட முடியும். இவர்கள்தான் பாரதி கண்ட புதுமை பெண்கள் என்றும் கூறினார். இன்னும் வீட்டு வேலைகளைச் சொல்லி கொடுக்கும் அளவுக்குதான் எம்மின தலைவிகளுக்கு அறிவு இருக்கும்பட்சத்தில் பாரதியின் வரிகள் அலங்கார வரிகளாகவே உபயோகப்படுத்தப்படும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
தொடர்ந்து மலேசிய ஊடகங்கள் பெண்களின் நலனை எப்படி பார்க்கின்றன? பத்திரிக்கைகளில் அல்லது வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் மகளிர் அங்கமோ அல்லது பெண்கள் சிறப்பிதழ் போன்றவற்றில் மீண்டும் மீண்டும் சமையல் குறிப்பு, பெண்களுக்கான சிகையலங்காரம், கோலப் பயிற்சி இதைத்தான் தயாரித்து வழங்குகின்றனர். அதைத்தாண்டி ஒரு பெண்ணின் தேவையைக்குறித்து பேசுவதில்லை. இம்மாதிரியான மனநிலையில்தான் மலேசிய நாட்டில் இருக்கிற ஊடகங்கள் பெண்களுக்கு ஆதரவு தருகின்றன.
தமிழ் நாட்டிலிருந்து ஏறக்குறைய இந்திய பெண்கள் புலம் பெயர்ந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களிடத்தில் ஒரு நீண்ட வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் இந்த மலேசிய மண்ணில் இந்திய பெண்கள் சேலை அணிந்துக்கொண்டுதான் வேலை செய்து வந்திருக்கிறார்கள். கால ஓட்டம் மாறுபட தோட்ட துண்டாடலுக்குப் பிறகு அங்கிருந்து நகரத்திற்கு வரும்போது அவர்களிடத்தில் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்தது. குறிப்பாக நகரச்சூழலோடு ஒத்துப்போக முடியாத சூழலை அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால், கால ஓட்டத்தில் மற்ற இனங்களோடு இணைந்து பழக தொடங்கியவுடன் அவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வு உண்டாகத்தொடங்கியது. தங்களுக்கான அரசியல் உரிமை, சொத்துரிமை உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் தெரிந்துக்கொண்டார்கள். மலேசியாவைப் போன்று ஒரு கலவையான சமூகத்தில் வாழக்கூடிய சாதகமான விஷயமாக இது இருக்கிறது. இந்த நிலை இன்னும் வலுப்பெற வேண்டும் என்றால் தமிழ் பெண்கள் தமிழ் சார்ந்த இயங்களோடு பங்கு பெறாமல் தேசியம் சார்ந்த இயங்களில் பங்குப் பெற்றால், இன்னும் அவர்களின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-யோகி








புதன், 9 டிசம்பர், 2015

கால்களோடு....


சம்பவம் 1

எனக்கு  8 வயது இருக்கும். பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தேன். விளையாட்டின் சுவாரஸ்யம் அப்போதுதான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் எஜோஸ் குழாயில் கால் சொறுகிக் கொள்ளும் அளவுக்கு விளையாட்டு. காலை அதிலிருந்து எடுக்கும் போது கொஞ்சம் சதையும் குழாயில் ஒட்டிக்கொண்டது.

சம்பவம் 2

யானைகால் நோயாளியை முதல் முறை பார்த்தேன். குச்சிபோன்ற உடம்பில்  ஒரு கால் மட்டும் யானை கால் அளவுக்கு பெரிதாக வீங்கி, அதில் சீழ் வடிந்தபடி. அறுவருக்க நிலையில். நினைவு தெரிந்து நான்  முகம் சுழித்த முதல் நாள் அதுதான் போல. அன்று  எனக்கு 11 வயது என நினைக்கிறேன்.

சம்பவம் 3

அன்றுதான் பிறந்த என் தங்கையின் பிஞ்சு பாதம். வரிவரியாக அதில் கோடுகள். சிவந்தும் சிவக்காமலும் மெல்லிய தோல். காற்றின் செல்லிடைபோல் அசையும் அசைவு. என் ரத்தம் என் தங்கை என்று எண்ணிய தருணம். முதல் முறை ஒரு பாதத்தில் முத்தமிட்டேன் என்றால் அது அவளுடைய பாதம்தான். அப்போது எனக்கு வயது 16.

ஒருவரைப் பார்த்த பிறகு, நான் அடுத்து பார்ப்பது அவரின் கால்களைதான். கால்களின் மீது இருந்த ஆர்வமோ?  பாதிப்போ?  எது என்று சொல்லத்தெரியவில்லை. அதன் காரணத்தினால், நூற்றுக்கும் அதிகமான கால்களை படம் பிடித்திருக்கிறேன். மனிதக் கால்களை மட்டுமல்ல, சிலைகளின் கால்களையும் படமெடுத்திருக்கிறேன். அது ஒரு வகை அனுபவம் எனலாம். கால்களின் புகைப்படங்களை மட்டும்  வைத்து ஒரு புகைப்படக்கண்காட்சியை செய்ய வேண்டும் என்ற ஆவலும் எனக்குள் இருக்கிறது.

சிறு வயதில் என்னுடைய காலில் பட்ட காயம் புண்ணாகி, ஆறி பின் மிக பெரிய வடுவாக மாறி, முட்டிக்கு மேல் எந்த உடை உடுத்தினாலும், அந்த புண்தான் பிறரின் கண்களுக்கு காட்டி கொடுக்கும் அளவுக்கு அடையாளமானது. இது என்ன? எப்படி பட்டது? அச்சச்சோ என கேள்வி கேட்பவர்களுக்கு, பதில் சொல்லி தீராது. என் இளம் வயதில் குட்டை பாவடையோ அல்லது கவுன் போன்ற மார்டன் உடை உடுத்தாமல் போனதற்கு அது  பிடிக்காமல் அல்ல. அந்த காயத்தினால் ஏற்பட்ட அதிருப்திதான்.

என்ன காரணம் என்று தெரியாமலே எனக்கு கால்கள் குறித்த தேடல் அதுவாகவே ஏற்பட்டுக்கொண்டது. என்னுடைய இந்த 34 வயதிற்குள் எத்தனை எத்தனை விதமான கால்களை பார்த்திருக்கிறேன். உண்மையில், ஒருவரின் கால்கள் பொருளாதார நிலையை, அந்தஸ்தை, அவர் செய்யும் பணியை, திருமணம் ஆனவரா? இல்லையா?, எத்தனை  வயதிருக்கும்?  இப்படி பல கதைகள்  மட்டுமல்ல  ஒருவரின் வரலாற்றையே பேசக்கூடியதாக இருக்கிறதாக நம்புகிறேன்.

காலில் நீளமாக நகம் வளர்க்கும் பெண்களின் கால்களைப் பார்க்க வசீகரமாக இருக்கும். அதில் வர்ணம்  பூசி, ஓவியம் தீட்டி அழகுப்படுத்துவது மேல்தட்டு பெண்கள் முதல் ஏழை பெண்கள் வரை  செய்துக்கொள்ளும் அலங்காரமாக இருந்தாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்க முடியும். பணம்  அல்லது அவரவர் வசதி பொறுத்தே அந்த அலங்காரம் மாறுபடும் என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.

என் சகா ஒருவர், ஒருமுறை  சேறும் சகதியுமாக இருந்த தனது காலை படம் எடுத்து  அனுப்பி கவிதை ஒன்று எழுது என்றார். என்னால், அப்படியான உடனடி கவிதைகளை எழுத முடியாது என்றேன். உங்கள் கால்கள் ஏன் இத்தனை வறுமைகூடியதாக இருக்கிறது  என்ற கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை அது என்றார்.  அதை ஒப்புக்கொள்ளதானே வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் இல்லையா?

ஆண்களின் கால்கள் அவ்வாறு மட்டுமல்ல... அண்மையில் நான் மேற்கொண்ட இலங்கைப் பயணத்தில் பனைமரம் ஏறும் ஒருவரின் காலைப் பார்த்தேன். பாதங்கள் வெடித்து வரிவரியாக கிழிந்து போயிருந்தது. செருப்பு  அணியாத அவரின் பாதத்தில் பட்டை போன்று ஏதோ அணிந்திருந்தார். கறுத்து சிறுத்து போயிருந்த அவரின் கால்களில்  ஒரு திமிர் இருந்தது. அது அவரின் உழைப்பை மட்டுமல்ல அவரின் துறையைச் சார்ந்தவர்களின் உழைப்பையும்  பேசிக்கொண்டிருந்தது.

என்  இலங்கை  தோழி யாழினியின் அப்பாவும் செருப்பு அணிபவர் இல்லை. வெறும் கால்களோடு அந்த சைக்கிளை ஏறி மிதித்து காப்பு காய்த்திருந்தது அவரின் கால்கள்.  முள் குத்துமோ, காயம் ஏற்படுமோ என்ற எந்த அச்சமும்  அந்தக் கால்களுக்கு இல்லை. எந்த ஆயுதத்தையும் துவம்சம் செய்யும்  யாழ்பாணக் கால்கள் அவை.

எனக்கு நடனம் ஆடுபவர்களின் கால்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும். அழகாகவும் நளினமாகவும்  அந்தக் கால்கள் பேசும்.   நடனக்கால்கள் மொழி பேசுபவை. சுழித்து நெழித்து அடவுகளை கூறுபவை. அதில் மருதாணி இட்டு, சலங்கை-மணி போன்றவற்றை  பூட்டி,  வேலைபாடுகள் கூட்டி    கவர்ச்சியூட்டுபவை.  சில வருடங்களுக்கு முன்பு நானும் நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். இயற்கையாகவே கால்கள் மீது ஆர்வம் கொண்டவளாக இருந்ததால், அசைவுகளில் கால்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். குதிங்கால்களில் உடலின் எடையை நிறுத்தி சில நடன அசைவுகளை நானே வடிவமைப்பேன். அதே போல் நான் கலந்துக்கொள்ளும் நடன நிகழ்ச்சிகளில் அவர்களின் முக பாவனையை பார்ப்பதைவிடவும்,  கை முத்திரையை பார்ப்பதை விடவும் கால் என்ன பேசுகிறது என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

மலாய் நடனத்தில், கால்கள் பேசுவது குறைவுதான். அதில் கைகள்தான் அதிகம் பேசும். ஆனால்,  சபா மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று மூங்கிலை வைத்து ஆடுவது. தடையை எதிர்கொள்ளும் விளையாட்டைப்போல மூங்கில் கட்டங்களில் சிக்காமல் தலையை கீழே பார்க்காமல் ஆடும் நடனம் அது.  இசையோடு கீழாடையை தூக்கிபிடித்து  பெண்கள் (சில சமயம் ஆண்களும்) ஆடுவது அத்தனை குதூகலமாக இருக்கும்.

சீன நடனத்திலும் பெரிதாக கால்களில் அடவுகள் காட்டுவதில்லை.   என்றாலும் அது சாகசம் கூடியதாக இருக்கிறது.  கால்களை அகலக்கூட வைக்காமல், குட்டைக் கால்கள் மாதிரி நெருக்கி நெருக்கி வைத்து  ஆடும், ஜப்பான் பாரம்பரிய நடனத்திற்கு கால்களின் வேலை குறைவுதான். ஆனால், 'பேலே' போன்ற  மேலை நாட்டு நடனத்திற்கு கால்கள் தானே மூலதனமானது. நான் பார்த்ததிலேயே பேலே ஆடும் கால்கள்தான் வலிமை கூடியது. அதற்காக  குழந்தை பருவம் முதலே கொடுக்கப்படும்  பயிற்சிகள்  ரத்தக் கண்ணீர் வடிக்கவைக்கும் என்றுதான் எனக்கு தோன்றும்.

நடனத்திலும் ஆண் கால்களுக்கும் பெண் கால்களுக்கும் அதிகம் வித்தியாசம் காண முடியும். பூ, மா  போன்ற வடிவங்களில் மருதாணி தீட்டி அழகுப்படுத்தி பெண்கள் கால்களில் நடன அசைவுகளை கொண்டு வருகிறார்கள் என்றால் ஆண்கள் எந்த வடிவமும் இல்லாத 'மருதாணி கோடு' அல்லது அதுக்கூட இல்லாத வெறும் சலங்கை மட்டும் அணிந்த கால்களோடு நடனம் ஆடுவது  தாண்டவம் ஆடுவதற்கான கம்பீரத் தன்மையோடு இருக்கும்.

கதவுகள் தட்டப்படும்போது, அந்தத் தட்டுதலின் தன்மை குறித்து சொல்லவிருக்கும் செய்தியை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும். அதுபோலத்தான் கால்களும். பதட்டமாக இருக்கும் போதும், சோகத்தில் உடையும் போதும், பயத்தைக் காட்டும்போதும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போதும்,  மனப்பிரழ்வு  ஏற்படும்போதும், காதலின் போதும், காமத்தின் போதும், நானத்தின் போதும்  கால்கள் வெவ்வேறான மொழியைப் பேசுகின்றன.

ஒரு முறை திருவிழா ஒன்றில் கத்தியின் மீது நின்று சாகசம் காட்டிக்கொண்டிருந்த ஐயனார் காலை பார்த்தேன். நான் ஐயனார் என்பது ஐயனார் அருள் வந்தவரை. கத்தியின் மீது ஏறி குதித்து குதித்து அது அறுபடாததை காட்டி பக்தியின் மகிமையை உணர்த்திய கால் அது. அந்தக் கால்களில்தான் தனது மொத்த சக்தியும்  இருப்பதைபோல அந்த சாமியாடி காட்டிய  சாகசங்களும், அவர் வெளிப்படுத்திய சத்தமும் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. அவரின் கால்,  அவரிடமிருந்து விடுதலை கோரி  கெஞ்சுவதுபோலவும்  இருந்தது எனக்கு.

தீமிதியில் இறங்கும் கால்களும் அவ்வாறுதான். திரைப்படத்தில் வருவதைப்போல மெல்ல நகர்வில் எந்தக் கால்களும் தீயில் இறங்குவதில்லை. விட்டால் போதும் டா சாமி! என்கிற மாதிரிதான் அந்தக் கால்கள் தலை தெறிக்க ஓடும். பின் பால் இருக்கும் குழியில் இறங்கி ஆயாசம் தேடும். கால்களுக்கு வரும் சோதனைகளை  இப்படி  அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படியாக நான் பார்த்து ரசித்த கால்களும், பார்த்து துயர் அடைந்த அல்லது கவலையாகிப்போன  கால்களுக்கு மத்தியில் விதவிதமாக
காலணி அணிந்த கால்களும் மொழிகளை பேசக்கூடியதாக சில சமயம் மாறிவிடுகின்றன. கால் விரல்கள் தெரியக்கூடிய அளவிளான  சிலிப்பர்களையும், விரல்கள் மட்டுமே  தெரியக்கூடிய அழகு காலணிகளையும், குதிங்கால் காலணி அணிந்த கால்களையும்,  முழு பாதத்தையும் மறைத்த காலணிகளும்  திரை மறைவில் கால்களின் பாதுகாப்பை மட்டுமல்ல கம்பீரத்தையும் பேசுகின்றன.

சில காலணிகள் நமது இயற்கை நடையையே மாற்றி விடும் அளவுக்கு இருப்பதை நம்மில் எத்தனை பேர்  உணர்ந்திருப்போம். குறிப்பாக பெண்கள் அணியும் குதிங்கால் காலணிகள் அதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம். சிலர், அதை தவறாக விமர்சிப்பது உண்டு. உண்மை நிலவரம் அதை அணிந்து நடக்கும்போதுதான் தெரிய வரும். இயற்கையாகவே எனக்கு  நடையில்  கொஞ்சம் வேகமிருக்கும்.  அந்த நடை என்னை எப்போதும் பரபரப்பு கொண்டவளாக காட்டிக் கொண்டிருக்கும். இதை நிறைய பேர் விமர்சித்தும் உள்ளனர். சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை நிமித்தமாக நான் செல்லும்போது குதிங்கால் காலணிதான் அணிவேன். காரணம் எனது பரபரப்பை குறைக்கதான். குதிங்காலில் வலி ஏற்பட்டு அந்த வலி தலைவரை பரவக்கூடிய நிலையில், குதிங்கால் காலணியை நான் பழகியதற்கான காரணம் என் நடையை பலர் விமர்சித்ததினால்தான்.

புடவை அணியும் போது மட்டும், கொலுசு அணிவதற்கு எனக்கு பிடிக்கும். ஒரு முறை கொலுசு அணிந்த காலை பார்த்த என் நண்பர் கேட்டார்..
"ஏன் கொலுசு அணிகிறாய்?"
"எனக்கு பிடிக்கும்"
"ஏன் பிடிக்கும்"
"என் கால்களுக்கு அது அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்"
"ஏன் கால்கள் அழகாக இருக்கனும்"
"???"
"ஆண்களை மயக்கத்தான் பெண்கள் கொலுசு அணிகிறார்கள்...
கொலுசு சத்தத்தின் உண்மையான அர்த்தமே அதுதான்"
"அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால், என்னால் எதையும் செய்ய முடியாது. அதற்கு நான் பொறுப்பும் ஆக முடியாது"
"எதையும் அணியாத உங்கள் கால் அழகாக இல்லையா"
"அழகுதான்"
"அழகுக்கு அழகு சேர்த்து நீங்கள் சொல்ல வருவது என்ன"

எனக்கு பிடித்ததை செய்ய எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அது போல, நீங்கள் சொல்வது உங்கள் சொந்தக் கருத்து என்றால் அதற்கான மாற்றுக்கருத்தை சொல்வதற்கு இப்போது என்னிடம் மொழி இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனது பதில் ஒன்று உள்ளது என்பதையும் மறவாதீர்கள் என்றேன். ஆனால், அன்று கழட்டி வைத்த எனது கொழுசை இன்றுவரை அணிவதற்கு ஏதோ ஒரு தயக்கம் உள்ளதையும் மறைக்க முடியவில்லை.

இந்த பதிவை எழுதிய நேரத்தில் கவிஞர் மனுஷயப்புத்திரன்  எழுதிய கால்களின் ஆல்பம் என்ற கவிதை எனக்கு நினைவில் வராமல் இல்லை. அந்தக் கவிதை தொகுப்பு வெளியான காலக்கட்டத்தில் கழிப்பறையில் 90 நிமிடங்கள் என்றக் கவிதையும்  கால்களின் ஆல்பம்  என்றக் கவிதையும் பெரிய மனச்சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தன. இப்போது எனது இந்தப் பதிவுக்கு அவரின் கவிதையையும் பதிவிட்டால் சரியாக இருக்கும் எனவும் தோன்றியது.

கால்களின் ஆல்பம்


ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சான் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சு கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிட தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்...
-மனுஷயப்புத்திரன்