புதன், 9 டிசம்பர், 2015

கால்களோடு....


சம்பவம் 1

எனக்கு  8 வயது இருக்கும். பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தேன். விளையாட்டின் சுவாரஸ்யம் அப்போதுதான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் எஜோஸ் குழாயில் கால் சொறுகிக் கொள்ளும் அளவுக்கு விளையாட்டு. காலை அதிலிருந்து எடுக்கும் போது கொஞ்சம் சதையும் குழாயில் ஒட்டிக்கொண்டது.

சம்பவம் 2

யானைகால் நோயாளியை முதல் முறை பார்த்தேன். குச்சிபோன்ற உடம்பில்  ஒரு கால் மட்டும் யானை கால் அளவுக்கு பெரிதாக வீங்கி, அதில் சீழ் வடிந்தபடி. அறுவருக்க நிலையில். நினைவு தெரிந்து நான்  முகம் சுழித்த முதல் நாள் அதுதான் போல. அன்று  எனக்கு 11 வயது என நினைக்கிறேன்.

சம்பவம் 3

அன்றுதான் பிறந்த என் தங்கையின் பிஞ்சு பாதம். வரிவரியாக அதில் கோடுகள். சிவந்தும் சிவக்காமலும் மெல்லிய தோல். காற்றின் செல்லிடைபோல் அசையும் அசைவு. என் ரத்தம் என் தங்கை என்று எண்ணிய தருணம். முதல் முறை ஒரு பாதத்தில் முத்தமிட்டேன் என்றால் அது அவளுடைய பாதம்தான். அப்போது எனக்கு வயது 16.

ஒருவரைப் பார்த்த பிறகு, நான் அடுத்து பார்ப்பது அவரின் கால்களைதான். கால்களின் மீது இருந்த ஆர்வமோ?  பாதிப்போ?  எது என்று சொல்லத்தெரியவில்லை. அதன் காரணத்தினால், நூற்றுக்கும் அதிகமான கால்களை படம் பிடித்திருக்கிறேன். மனிதக் கால்களை மட்டுமல்ல, சிலைகளின் கால்களையும் படமெடுத்திருக்கிறேன். அது ஒரு வகை அனுபவம் எனலாம். கால்களின் புகைப்படங்களை மட்டும்  வைத்து ஒரு புகைப்படக்கண்காட்சியை செய்ய வேண்டும் என்ற ஆவலும் எனக்குள் இருக்கிறது.

சிறு வயதில் என்னுடைய காலில் பட்ட காயம் புண்ணாகி, ஆறி பின் மிக பெரிய வடுவாக மாறி, முட்டிக்கு மேல் எந்த உடை உடுத்தினாலும், அந்த புண்தான் பிறரின் கண்களுக்கு காட்டி கொடுக்கும் அளவுக்கு அடையாளமானது. இது என்ன? எப்படி பட்டது? அச்சச்சோ என கேள்வி கேட்பவர்களுக்கு, பதில் சொல்லி தீராது. என் இளம் வயதில் குட்டை பாவடையோ அல்லது கவுன் போன்ற மார்டன் உடை உடுத்தாமல் போனதற்கு அது  பிடிக்காமல் அல்ல. அந்த காயத்தினால் ஏற்பட்ட அதிருப்திதான்.

என்ன காரணம் என்று தெரியாமலே எனக்கு கால்கள் குறித்த தேடல் அதுவாகவே ஏற்பட்டுக்கொண்டது. என்னுடைய இந்த 34 வயதிற்குள் எத்தனை எத்தனை விதமான கால்களை பார்த்திருக்கிறேன். உண்மையில், ஒருவரின் கால்கள் பொருளாதார நிலையை, அந்தஸ்தை, அவர் செய்யும் பணியை, திருமணம் ஆனவரா? இல்லையா?, எத்தனை  வயதிருக்கும்?  இப்படி பல கதைகள்  மட்டுமல்ல  ஒருவரின் வரலாற்றையே பேசக்கூடியதாக இருக்கிறதாக நம்புகிறேன்.

காலில் நீளமாக நகம் வளர்க்கும் பெண்களின் கால்களைப் பார்க்க வசீகரமாக இருக்கும். அதில் வர்ணம்  பூசி, ஓவியம் தீட்டி அழகுப்படுத்துவது மேல்தட்டு பெண்கள் முதல் ஏழை பெண்கள் வரை  செய்துக்கொள்ளும் அலங்காரமாக இருந்தாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்க முடியும். பணம்  அல்லது அவரவர் வசதி பொறுத்தே அந்த அலங்காரம் மாறுபடும் என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.

என் சகா ஒருவர், ஒருமுறை  சேறும் சகதியுமாக இருந்த தனது காலை படம் எடுத்து  அனுப்பி கவிதை ஒன்று எழுது என்றார். என்னால், அப்படியான உடனடி கவிதைகளை எழுத முடியாது என்றேன். உங்கள் கால்கள் ஏன் இத்தனை வறுமைகூடியதாக இருக்கிறது  என்ற கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை அது என்றார்.  அதை ஒப்புக்கொள்ளதானே வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் இல்லையா?

ஆண்களின் கால்கள் அவ்வாறு மட்டுமல்ல... அண்மையில் நான் மேற்கொண்ட இலங்கைப் பயணத்தில் பனைமரம் ஏறும் ஒருவரின் காலைப் பார்த்தேன். பாதங்கள் வெடித்து வரிவரியாக கிழிந்து போயிருந்தது. செருப்பு  அணியாத அவரின் பாதத்தில் பட்டை போன்று ஏதோ அணிந்திருந்தார். கறுத்து சிறுத்து போயிருந்த அவரின் கால்களில்  ஒரு திமிர் இருந்தது. அது அவரின் உழைப்பை மட்டுமல்ல அவரின் துறையைச் சார்ந்தவர்களின் உழைப்பையும்  பேசிக்கொண்டிருந்தது.

என்  இலங்கை  தோழி யாழினியின் அப்பாவும் செருப்பு அணிபவர் இல்லை. வெறும் கால்களோடு அந்த சைக்கிளை ஏறி மிதித்து காப்பு காய்த்திருந்தது அவரின் கால்கள்.  முள் குத்துமோ, காயம் ஏற்படுமோ என்ற எந்த அச்சமும்  அந்தக் கால்களுக்கு இல்லை. எந்த ஆயுதத்தையும் துவம்சம் செய்யும்  யாழ்பாணக் கால்கள் அவை.

எனக்கு நடனம் ஆடுபவர்களின் கால்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும். அழகாகவும் நளினமாகவும்  அந்தக் கால்கள் பேசும்.   நடனக்கால்கள் மொழி பேசுபவை. சுழித்து நெழித்து அடவுகளை கூறுபவை. அதில் மருதாணி இட்டு, சலங்கை-மணி போன்றவற்றை  பூட்டி,  வேலைபாடுகள் கூட்டி    கவர்ச்சியூட்டுபவை.  சில வருடங்களுக்கு முன்பு நானும் நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். இயற்கையாகவே கால்கள் மீது ஆர்வம் கொண்டவளாக இருந்ததால், அசைவுகளில் கால்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். குதிங்கால்களில் உடலின் எடையை நிறுத்தி சில நடன அசைவுகளை நானே வடிவமைப்பேன். அதே போல் நான் கலந்துக்கொள்ளும் நடன நிகழ்ச்சிகளில் அவர்களின் முக பாவனையை பார்ப்பதைவிடவும்,  கை முத்திரையை பார்ப்பதை விடவும் கால் என்ன பேசுகிறது என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

மலாய் நடனத்தில், கால்கள் பேசுவது குறைவுதான். அதில் கைகள்தான் அதிகம் பேசும். ஆனால்,  சபா மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று மூங்கிலை வைத்து ஆடுவது. தடையை எதிர்கொள்ளும் விளையாட்டைப்போல மூங்கில் கட்டங்களில் சிக்காமல் தலையை கீழே பார்க்காமல் ஆடும் நடனம் அது.  இசையோடு கீழாடையை தூக்கிபிடித்து  பெண்கள் (சில சமயம் ஆண்களும்) ஆடுவது அத்தனை குதூகலமாக இருக்கும்.

சீன நடனத்திலும் பெரிதாக கால்களில் அடவுகள் காட்டுவதில்லை.   என்றாலும் அது சாகசம் கூடியதாக இருக்கிறது.  கால்களை அகலக்கூட வைக்காமல், குட்டைக் கால்கள் மாதிரி நெருக்கி நெருக்கி வைத்து  ஆடும், ஜப்பான் பாரம்பரிய நடனத்திற்கு கால்களின் வேலை குறைவுதான். ஆனால், 'பேலே' போன்ற  மேலை நாட்டு நடனத்திற்கு கால்கள் தானே மூலதனமானது. நான் பார்த்ததிலேயே பேலே ஆடும் கால்கள்தான் வலிமை கூடியது. அதற்காக  குழந்தை பருவம் முதலே கொடுக்கப்படும்  பயிற்சிகள்  ரத்தக் கண்ணீர் வடிக்கவைக்கும் என்றுதான் எனக்கு தோன்றும்.

நடனத்திலும் ஆண் கால்களுக்கும் பெண் கால்களுக்கும் அதிகம் வித்தியாசம் காண முடியும். பூ, மா  போன்ற வடிவங்களில் மருதாணி தீட்டி அழகுப்படுத்தி பெண்கள் கால்களில் நடன அசைவுகளை கொண்டு வருகிறார்கள் என்றால் ஆண்கள் எந்த வடிவமும் இல்லாத 'மருதாணி கோடு' அல்லது அதுக்கூட இல்லாத வெறும் சலங்கை மட்டும் அணிந்த கால்களோடு நடனம் ஆடுவது  தாண்டவம் ஆடுவதற்கான கம்பீரத் தன்மையோடு இருக்கும்.

கதவுகள் தட்டப்படும்போது, அந்தத் தட்டுதலின் தன்மை குறித்து சொல்லவிருக்கும் செய்தியை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும். அதுபோலத்தான் கால்களும். பதட்டமாக இருக்கும் போதும், சோகத்தில் உடையும் போதும், பயத்தைக் காட்டும்போதும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போதும்,  மனப்பிரழ்வு  ஏற்படும்போதும், காதலின் போதும், காமத்தின் போதும், நானத்தின் போதும்  கால்கள் வெவ்வேறான மொழியைப் பேசுகின்றன.

ஒரு முறை திருவிழா ஒன்றில் கத்தியின் மீது நின்று சாகசம் காட்டிக்கொண்டிருந்த ஐயனார் காலை பார்த்தேன். நான் ஐயனார் என்பது ஐயனார் அருள் வந்தவரை. கத்தியின் மீது ஏறி குதித்து குதித்து அது அறுபடாததை காட்டி பக்தியின் மகிமையை உணர்த்திய கால் அது. அந்தக் கால்களில்தான் தனது மொத்த சக்தியும்  இருப்பதைபோல அந்த சாமியாடி காட்டிய  சாகசங்களும், அவர் வெளிப்படுத்திய சத்தமும் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. அவரின் கால்,  அவரிடமிருந்து விடுதலை கோரி  கெஞ்சுவதுபோலவும்  இருந்தது எனக்கு.

தீமிதியில் இறங்கும் கால்களும் அவ்வாறுதான். திரைப்படத்தில் வருவதைப்போல மெல்ல நகர்வில் எந்தக் கால்களும் தீயில் இறங்குவதில்லை. விட்டால் போதும் டா சாமி! என்கிற மாதிரிதான் அந்தக் கால்கள் தலை தெறிக்க ஓடும். பின் பால் இருக்கும் குழியில் இறங்கி ஆயாசம் தேடும். கால்களுக்கு வரும் சோதனைகளை  இப்படி  அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படியாக நான் பார்த்து ரசித்த கால்களும், பார்த்து துயர் அடைந்த அல்லது கவலையாகிப்போன  கால்களுக்கு மத்தியில் விதவிதமாக
காலணி அணிந்த கால்களும் மொழிகளை பேசக்கூடியதாக சில சமயம் மாறிவிடுகின்றன. கால் விரல்கள் தெரியக்கூடிய அளவிளான  சிலிப்பர்களையும், விரல்கள் மட்டுமே  தெரியக்கூடிய அழகு காலணிகளையும், குதிங்கால் காலணி அணிந்த கால்களையும்,  முழு பாதத்தையும் மறைத்த காலணிகளும்  திரை மறைவில் கால்களின் பாதுகாப்பை மட்டுமல்ல கம்பீரத்தையும் பேசுகின்றன.

சில காலணிகள் நமது இயற்கை நடையையே மாற்றி விடும் அளவுக்கு இருப்பதை நம்மில் எத்தனை பேர்  உணர்ந்திருப்போம். குறிப்பாக பெண்கள் அணியும் குதிங்கால் காலணிகள் அதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம். சிலர், அதை தவறாக விமர்சிப்பது உண்டு. உண்மை நிலவரம் அதை அணிந்து நடக்கும்போதுதான் தெரிய வரும். இயற்கையாகவே எனக்கு  நடையில்  கொஞ்சம் வேகமிருக்கும்.  அந்த நடை என்னை எப்போதும் பரபரப்பு கொண்டவளாக காட்டிக் கொண்டிருக்கும். இதை நிறைய பேர் விமர்சித்தும் உள்ளனர். சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை நிமித்தமாக நான் செல்லும்போது குதிங்கால் காலணிதான் அணிவேன். காரணம் எனது பரபரப்பை குறைக்கதான். குதிங்காலில் வலி ஏற்பட்டு அந்த வலி தலைவரை பரவக்கூடிய நிலையில், குதிங்கால் காலணியை நான் பழகியதற்கான காரணம் என் நடையை பலர் விமர்சித்ததினால்தான்.

புடவை அணியும் போது மட்டும், கொலுசு அணிவதற்கு எனக்கு பிடிக்கும். ஒரு முறை கொலுசு அணிந்த காலை பார்த்த என் நண்பர் கேட்டார்..
"ஏன் கொலுசு அணிகிறாய்?"
"எனக்கு பிடிக்கும்"
"ஏன் பிடிக்கும்"
"என் கால்களுக்கு அது அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்"
"ஏன் கால்கள் அழகாக இருக்கனும்"
"???"
"ஆண்களை மயக்கத்தான் பெண்கள் கொலுசு அணிகிறார்கள்...
கொலுசு சத்தத்தின் உண்மையான அர்த்தமே அதுதான்"
"அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால், என்னால் எதையும் செய்ய முடியாது. அதற்கு நான் பொறுப்பும் ஆக முடியாது"
"எதையும் அணியாத உங்கள் கால் அழகாக இல்லையா"
"அழகுதான்"
"அழகுக்கு அழகு சேர்த்து நீங்கள் சொல்ல வருவது என்ன"

எனக்கு பிடித்ததை செய்ய எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அது போல, நீங்கள் சொல்வது உங்கள் சொந்தக் கருத்து என்றால் அதற்கான மாற்றுக்கருத்தை சொல்வதற்கு இப்போது என்னிடம் மொழி இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனது பதில் ஒன்று உள்ளது என்பதையும் மறவாதீர்கள் என்றேன். ஆனால், அன்று கழட்டி வைத்த எனது கொழுசை இன்றுவரை அணிவதற்கு ஏதோ ஒரு தயக்கம் உள்ளதையும் மறைக்க முடியவில்லை.

இந்த பதிவை எழுதிய நேரத்தில் கவிஞர் மனுஷயப்புத்திரன்  எழுதிய கால்களின் ஆல்பம் என்ற கவிதை எனக்கு நினைவில் வராமல் இல்லை. அந்தக் கவிதை தொகுப்பு வெளியான காலக்கட்டத்தில் கழிப்பறையில் 90 நிமிடங்கள் என்றக் கவிதையும்  கால்களின் ஆல்பம்  என்றக் கவிதையும் பெரிய மனச்சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தன. இப்போது எனது இந்தப் பதிவுக்கு அவரின் கவிதையையும் பதிவிட்டால் சரியாக இருக்கும் எனவும் தோன்றியது.

கால்களின் ஆல்பம்


ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சான் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சு கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிட தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்...
-மனுஷயப்புத்திரன்














1 கருத்து:

  1. ஒரு யதார்த்தமான வலியின் அழகியல் சுமந்த கட்டுரைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
    நமது உடலில்நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு அதன் வழியாக நம் உடலின் உறுப்புகள் பராமரிக்கப்படுகின்றன.மேலும் தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் உடல் சூட்டை தணிப்பன.குளிர்ச்சியளிப்பன.(பெண்களுக்கு உடல்சூடு சற்று அதிகம்) வெள்ளியானது கால்கள் வழியேற்படும் நோய்தொற்றுகளின் பாதிப்பை தடுத்து சருமத்தை பாதுகாப்பாக வைக்கிறது.கொலுசு அணிவதால், பெண்களின் இடுப்பு சமநிலைபடுத்தப்படுகின்றது. வர்மப்புள்ளிகள் or accupressure points என சொல்லப்படும் இடம் பெருவிரலில் இருந்து..குதிகால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகின்றது.எனவே கொலுசு தண்டை, சிலம்பு அணியும்போது, குதிகால் நரம்பில் உரசிக்கொண்டேயிருப்பதால் எப்போதும் ஒரு தன்னிலை இருக்கும். மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகள் கட்டுப்படுத்தப்பட்டபடி.இது இருபாலரும் அணிந்த அணிதான். முத்து,மாணிக்கம் போன்ற கற்கள் பொதிந்த சிலம்புகளை சிலப்பதிகாரம் காட்ட, ஆடவர் காலில் அணியும் அணி "கழல்" என அழைக்கப்பட்டது."அதிரும் கழல் பணிந்து அடியேன் உன் அபயம்
    புகுவதென்று" என திருப்புகழும், "ஒண்பொறிக் கழற்கால்" (ஒள்ளிய or ஒளிர்வுமிக்க வீரக்கழல் அணிந்த கால்' என பதிற்றுப்பத்தும் கூறுவதைக்காணலாம்.
    கொலுசினை குறித்து சொல்வதென்றால் அது அணிபவர்களின் விருப்பத்தேர்வு or முதன்மை விருப்பம் அல்லது வசீகரம் or ஈர்ப்பு அல்லது வழக்கம் or தொடர்பழக்கம். கருணையும், அன்புமனமும் கொண்டு அதை அறியாமல் இருப்பது அல்லது முற்றிலுமாக அனுமானத்தோடு அந்த ஸ்தூலப்பொருளின்(கொலுசின்) இருப்பை மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றோடு தொடர்பு படுத்தி அதோடு தங்களை இணைத்துக்கொள்வது.
    கொலுசு எப்போதும் ஒரு இசையுரு.
    கொலுசு அணிவதைக் குறித்து சமூகத்தில் or பொதுமக்களிடையே பிரபலமாக இருக்கிற நம்பிக்கைகள் ஏகம், ஆனால் அதை அணிந்திருக்கும் அப்பெண் சுமக்கும் காரணமே பிரதானம், அது அப்பெண்ணுக்கு பிரியத்திற்கும்,நேசத்திற்கும் உகந்ததாய் இருக்கும்பட்சத்தில்,அக்கொலுசு அப்பெண்ணினது ஆளுமையின் நீட்சி. சில சமயங்களில் அது நாகரீக அணி (கொலுசின் புதுப்பாணியாக, எண்ணற்ற வகைமாதிரிகளும், தினுசுகளும், மெல்லிசை பரப்பிகளாக) மேலும் பல வேளைகளில் அதுபெறும் முக்கியத்துவம், அப்பெண்ணின் துணைவர் அவளின் அழகிய கால்களைக்குறித்த காதலை. நன்றி

    பதிலளிநீக்கு