வெள்ளி, 31 அக்டோபர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு 3

ஆண்களின் உலகம்

'ஒப்புர ஒழுகு' என்று ஔவையாரின் ஆத்திச் சூடியில் ஒரு வரி வரும். செய்வதை ஒழுங்காகச் செய் அல்லது ஒழுக்கமாகச் செய். இதுதான் எனக்கு தெரிந்த விளக்கம். பள்ளியில் இதன் அர்த்ததை என் வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டதுண்டு. உழைப்பு என்று வரும் போது இதன் அர்த்தத்தை வேறெதற்கு பயன்படுத்தினாலும் சரிவராது. உழைப்புக்கேற்ற ஊதியம் எனும் போது கண்ணையும் கருத்தையும் மட்டுமல்ல உள்ளத்தையும் எண்ணத்தையும் சேர்த்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் வேலையைத் திருந்தச் செய்யவும் சம்பளத்தைப் பெறும்போது அதில் ஒரு திருப்தியும் கிடைக்கும்.
நேர்மையைச் சம்பளமாக பெறும் போது ஏற்படுகிற மனநிறைவை சொல்வதற்கு எனக்கு சரியான வார்த்தை தெரியவில்லை. அதை நான் உணர்ந்தது அந்தக் கையுறை (glove) தொழிற்சாலையில்தான். கையுறை தொழிற்சாலை பேராக்கில் சித்தியவான் செல்லும் பாதையில் அமைந்திருந்தது. அவ்விடத்தில் அதுதான் பெரிய தொழிற்சாலை. கையுறை தயாரிப்புக்கு மட்டும் 2 கட்டடங்கள் இருந்தன. ஒன்றில் மலிவான powder கையுறையும் மற்றொன்றில் உயர் தர வகையைச் சேர்ந்த PUD கையுறையும் தயாரிக்கப்பட்டன. கையுறைகளை பரிசோதிப்பதற்கு ஒரு கட்டடம், பரிசோதித்ததைக் காகித பெட்டிகளில் அடைத்து பொட்டலம் கட்ட ஒரு கட்டடம் என பரந்த வெளியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாம்பல் நிற தொழிற்சாலை.

சுமார் நான்காயிரம் தொழிலாளர்கள் இரவு பகல் ஷிப்ட்களில் வேலை செய்தார்கள். இதில் வங்காளதேசத் தொழிலாளர்கள் மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் வங்காளதேசிகள் கூட்டங் கூட்டமாகத் தொழிற்சாலைகளுக்கும் கூலி வேலைகளுக்கும் மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் மாடாய் உழைத்தார்கள். இவர்களின் கடின உழைப்பு முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தைக்கொடுத்தது. அதே வேளையில் மலேசியர்களைப் போல் சேமநிதி மற்றும் போனஸ் போன்றவற்றைப் பற்றி வங்காளதேசிகள் கேள்வி எழுப்பாதது அவர்களுக்கு வசதியாகவும் இருந்தது.
நிர்வாகம் தொழிற்சாலைக்கு வழக்கிய இலவச பேருந்தில் நான் மட்டும்தான் புதியவள் என்று நினைத்தேன். ஆனால், பேருந்தில் இருந்த அனைவருமே நேர்முகத் தேர்வு முடிந்து புதிதாக வேலையில் சேர்ந்திருந்தவர்கள்தான். அனைவரும் புதியவர்கள் என்றபடியால் இயல்பாக எல்லோரிடமும் பேசவும் பழகவும் முடிந்தது. பழையவர்களாக இருப்பின் அவர்களுக்குத் தெரிந்ததை வைத்து புதியவர்களிடம் ஆதிக்கம் செலுத்தலாம். இதுவே அவர்களை நெருங்குவதற்கு ஒரு மனத்தடையை ஏற்படுத்தியது. நல்ல வேளையாக எனக்கு இடம் புதிது, தொழிற்சாலை புதிது, வேலை புதிது, நண்பர்களும் புதிது. ஆதலால் எவ்வித சங்கடத்திலும் நான் மாட்டிக் கொள்ளவில்லை.

எனக்கு அங்கே கையுறையை இழுக்கும் வேலை கிடைத்தது. அதாவது முழங்கை வரையிலான மாதிரி கைகளில் ஒட்டிக் கொண்டு வரும் கையுறைகளை கழட்டி அல்லது உரித்து எடுப்பதையே கையுறையை இழுத்தல் என்று பேச்சு மொழியில் கூறுவார்கள். அது பனிரெண்டு மணி நேரம் செய்யக் கூடிய வேலை. மூன்று வாரம் விடுமுறையின்றி வேலை செய்ய வேண்டும். பிறகு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். ஷிப்டை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். அதிலிருந்து 3 வாரம் வேலை. பிறகு ஒரு நாள் விடுமுறை. இதற்கிடையில் ஏதேனும் விடுமுறை எடுத்துக் கொண்டால் சம்பளத்தில் சிறு தொகையைப் பிடித்து விடுவார்கள்.
இப்படித்தான் தொழிலாளர்களுக்குக் கால அட்டவணையை வரைந்திருந்தார்கள் அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகத்தினர். கையுறையை இழுக்கும் வேலை சற்று சிரமமான வேலைதான் என்றாலும் அதற்கு ஏற்றமாதிரி சம்பளமும் லாபகரமாகவே இருந்தது. நான் அந்த வேலைக்கு ஏற்றமாதிரி மனதளவில் என்னை தயார் படுத்திக் கொண்டேன்.
1. முதலில் 12 மணி நேரம் வேலை செய்வதற்கு
2. இரண்டாவதாக இரவில் கண்விழிப்பதற்கு.
3.இறுதியாக தூக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு

பழக்கமில்லாத இவற்றோடு சவால் விட்டு வெற்றிக் கண்டால் வாழ்க்கையையே வெற்றிக் கண்டமாதிரி என நான் என்னையே ஊக்கப்படுத்திக் கொண்டேன். விடுமுறை இன்றி வேலை செய்தால், தூக்கம் கெட்டால், அதிக நேரம் வேலை செய்தால், என்னென்ன பாதிப்பு வரும், அதனால் ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பதை எல்லாம் யாரும் என்னிடம் சொல்லவில்லை. நானும் அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை.

புத்திக்குத் தெரிந்ததெல்லாம் வேலையும்  மாதச் சம்பளமும் அதற்காக காத்திருக்கும் செலவுகள் மட்டும்தான். பயிற்சிக்காக என்னை உற்பத்தி அறையில் அமர்த்திய நாளை என்னால் மறக்கவே முடியாது.
எப்போதோ கனவில் கண்டதை போன்று இருந்தது அந்த இடம். சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு முழங்கை வரையிலான மாதிரிக் கைகள் ஓடிக் கொண்டே இருந்தன. அவை கையுறைகளை அணிந்துக் கொண்டு வருவதும் அதற்கு எதிர் எதிர் அமர்ந்திருக்கும் பெண்கள் லாவகமாக கையுரைகளை கழட்டி போடுவதுமாக இருந்தார்கள். அந்த உற்பத்தி அறையினுள் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாதிரி கை வரிசைகள் ஓடிக் கொண்டிருந்தன. என்னையும் என்னுடன் புதிதாக வந்திருந்த வேறு சிலரையும் பிரித்து பிரித்து மாதிரி கைகளின் வரிசையில் அமர்த்தினார்கள். வெண்மை நிறத்தில் மாதிரி கைகள் கையுறையை அணிந்து கொண்டு அழகாக வந்து கொண்டிருந்தன. நான் கையுறையை உரிப்பதற்கு முயற்சி செய்தேன். அறுந்து விட்டது. மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். கையுறை அறுந்து கொண்டே வந்தது. விரல்களில் மிதமான சூடு ஏறி ஏறி வலி ஏற்பட்டது. அரைமணி நேரத்துக்குள் விரல்களில் நீர் கோர்த்து வீக்கம் உண்டானது. பிறகுதான் எங்களின் பயிற்சியாளர்கள் விளக்கினார்கள்.
இப்படி சூடுகட்டி வந்து வெடித்து, புண்ணாகி விடும் போது விரல்கள் மறுத்துவிடும். அதோடு தொடர்ந்து கையுறைகளை இழுக்கும் போது சூட்டைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை விரல்கள் ஏற்று கொள்ளுமாம். நான் சவாலுக்குத் தயாராக இருந்தேன். 'மற்றவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும்' என்று மனதை வலிமை படுத்திக் கொண்டேன்.

வங்காளதேச தொழிலாளர்களும் சிலர் கையுறைகளை இழுத்தனர். அவர்களின் மாதிரிகைகளின் வரிசை இரு மடங்கு வேகமாக ஓடும். பெண்கள் வரிசையில் 8 பேர் இழுத்தால் அவர்களின் வரிசையில் 6 பேர்தான் ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம்தான் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சில வங்காளதேசிகளுக்கு கையுறை உற்பத்தியாகின்ற ரப்பர் பாலில் அமிலங்களையும் இராசயனங்களையும் கலக்கின்ற வேலை கொடுக்கப்பட்டது. கையுறை தரமாக வருவதற்கு ஏதேனும் பிரச்னையாக இருந்தால் சரி செய்வதும் இவர்களின் கையில்தான் இருந்தது. கையுறையின் இராசயணங்கள் மிகவும் ஆபத்தானவை.

இந்த வேலைகள் மலேசிய இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் சில வங்காளதேசிகள் படித்து பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். அலுவலகத்தில் வேலை என்று தப்பான தகவலை கூறி இந்த வேலைக்கு ஏஜன்டுகள் தள்ளி விட்டிருந்தனர். மலேசிய பெண்கள் சூப்பர்வைசர்களாகவும், ஸ்டோர்களிலும் வேலை செய்துக் கொண்டிருந்தனர். வேலைகளையெல்லாம் விட நம் இன இளைஞர்கள் தீவிரமாக பெண்களை கண்காணிப்பதிலேயே முழுகவனத்தையும் செலுத்தினார்கள். அவர்களின் முக்கிய குறிக்கோள் இந்தியப் பெண்கள் வங்காளதேசிகளிடம் எந்த சவகாசத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கூட ஒரு குற்றமாக நினைத்தார்கள். அப்படி ஏதேனும் ஒரு சகவாசத்தைப் பார்த்து விட்டால் அவர்களின் பாணியிலேயே தண்டனை வங்காளதேசிகளுக்கு வழங்கப்பட்டது.

அவர்களின் பணத்தை பிடுங்குவது, சிகரெட் அல்லது வேறு ஏதேனும் பொருளை பறிமுதல் செய்வது, தேவைப்பட்டால் உதைப்பது போன்ற தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. வங்காளதேசிகள் வாயில்லா பூச்சிகளாக வலம் வந்தனர். இவர்களை எதிர்த்தாலோ அல்லது புகார் தெரிவித்தாலோ என்ன நடக்கும் என்று வங்காளதேசிகள் அறியாமல் இல்லை. அதற்கு காரணம் அந்த காலகட்டத்தில் வங்காளதேசிகளிடம் நம் இனப்பெண்கள் காதல் வயப்பட்டு பெரும்பான்மையோர் ஏமாந்து போயிருந்தனர். நம் இனப்பெண்களில் சிலரும் பொழுதுபோக்குக்காக இவர்களிடம் பழகி காதலிப்பதைப் போன்று நடித்து அவர்களின் பணத்துக்குக் குறிவைத்தனர். ஊர்விட்டு பஞ்சம் பிழைக்க வந்த இவர்களிடம் அப்படி என்ன இருக்கிறது, தங்களிடம் இல்லாதது என்ற காத்திரமும் ஒருவகையான பொறாமை குணமும் அவர்களை தாக்கும் அளவுக்கு தூண்டி இருக்கலாம். இது நம் பெண்களின் பாதுகாப்புக்குதான். நம் சமுதாயத்திற்குச் செய்யும் மிக பெரிய தொண்டு இது என்று சில பெருசுகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வங்காளதேசியிடம் பேசுவேன். கொஞ்சம் வயதானவர். அவர் குடும்பத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் கேட்பேன். பயந்து பயந்து பேசுவார். அவரின் பாதுகாப்புக்கு என்னை பேத்தி என்றே அழைத்தார். கையுறையை இழுக்கும் எளிய முறையை அவர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நம் இளைஞர்கள் நாளுக்கு ஒரு பிரச்னையை கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடினர். நல்ல வேளையாக நான் எதிலும் சிக்கிக் கொள்ளவில்லை.
 
இன்று கேள்விப்படக்கூடிய ஆணாதிக்கம் அந்தத் தொழிற்சாலை முழுவதும் பரவியிருந்தது. அங்கே வேலை செய்யும் பெண்கள் திருமணமானவராக இருந்தால் கூட ஏதோ ஒரு வகையில் யாருக்காகவோ கட்டுப்பட்டிருந்தார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை தொழிலாளர்கள் எதிர்நோக்கியபடி இருந்தனர். ஒரு வருஷத்தில் குறைந்தது 3 தற்கொலை முயற்சிகள் பதிவு செய்யப்பட்டன. ஓர் உயிர் இழப்பாவது ஏற்பட்டிருக்கும். அத்தகையதொரு மன உளைச்சலில் அங்கே வேலை செய்யும் சூழல் இருந்தது. பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் தானாக அதிகாரத்தைக் கையிலெடுக்கும் உரிமையால் அது பெரும்பான்மையோரை பாதித்திருந்தது. இந்த அதிகாரத்தின் பிடிதான் சராசரி குடும்பத்தலைவனிலிருந்து நாட்டுத் தலைவர்கள்வரை சுழன்று கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.


இந்தக் காலக்கட்டத்தில் கணினி கல்வி குறித்த அவசியமும் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. எனது ஆர்வம் சட்டென கணினி மீது திரும்பியது. தோள்கள் தடித்த என் விரல்களைப் பார்த்தேன். அவை கணினியை இயக்கக் கூடுமென நம்பிக்கை ஏற்பட்டது. ஆணாதிக்கம் அங்கும் பரவிகிடக்கும் என மனம் சொன்னாலும் வேலை நிறுத்தக் கடிதத்தில் கையொப்பம் இடுவது தொடங்கி விரல்கள் வாழ்வை தேடித்தான் பயணிக்க முனைகின்றன. சில நம்பிக்கைகளோடு!


புதன், 29 அக்டோபர், 2014

மலேசியாவில் இந்தியர்கள் மணல் மாதிரி வந்து மணலாகவே இருந்துவிட்டார்கள்..


 
தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் நேர்காணல் ....

தலைநகரிலிருந்து அரைமணி நேர பயணத்தில் வாகனங்கள், கட்டிடங்கள், பரபரப்பு என அனைத்தையும் தாண்டி ஓர் அமைதியான இடத்திற்குள் நுழைந்தது கார். குறுகிய பாதையில் அழகிய நிழல் மரங்களுக்கு மத்தியில் ஓர் அகண்ட நிலப்பரப்பில் கச்சிதமான ஆர்ப்பாட்டமற்ற அலங்காரங்களைக் கொண்டிருந்த எளிய வீடு. அவர் ஒரு தேசியவாதி என்பதற்கு எடுத்துக்காட்டாக வீட்டின் முன் பறந்துக்கொண்ண்டிருந்தது  ஒரு தேசியக்கொடி.

என்னைப் பார்த்ததும் அழகிய புன்னகையோடு வரவேற்றார். முதலில் அமருங்கள் என்று கூறியவர், பத்திரிகையிலிருந்து வந்திருப்பதை தெரிந்துக்கொண்டு சேலை உடுத்தி வந்து பேசத்தொடங்கினார். நீர்வீழ்ச்சியிலிருந்து கொட்டும் தெளிந்த நீரைப்போல பேசத்தொடங்கினார் அவர். அவரின் நியாபகங்கள் கொண்டிருக்கும் மனப்பதிவுகளை   பதிவு செய்வதற்கு ஒரு நாள் போதாது என்றுதான் நினைக்கிறேன்.
நாவலில் வரும் அத்தியாயங்களைப் போல அவர் தொடர்ந்து பேசி போய்க்கொண்டே இருக்கிறார்.


83 வயது; முதிர்ச்சி அவரின் நியாபக சக்திக்கு தடையாக இல்லை. நேற்று நடந்ததைப்போல அனைத்தையும் தன் கண்முன் கொண்டு வந்தார். அவரை சந்தித்து திரும்பிய பின்னும் நம் நாட்டின் சுதந்திரம் பற்றி பெருகிய நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. இங்கு பகிர்ந்துகொள்வது பழைய நினைவுகள்தான் என்றாலும், புதிய அறிதலின் மகிழ்ச்சியில் அவர் பேசுவதை வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர்தான் ‘கூட்டுறவுத் தந்தை' என மலேசியர்களால் மதிக்கப்படும் துன்.வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோ புவான் உமா சம்பந்தன். நான் பெற்ற அவரின் சுதந்திர நினைவுகளின் ஈரத்தை இனி  உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

யோகி: 31 ஆகஸ்ட் 1957-ஆம் ஆண்டு சுதந்திர நாளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

தோ புவான்: அந்த நாளை என்னால் என்றுமே மறக்கமுடியாது. முதல் சுதந்திர தினம் இருமாதிரியாகக் கொண்டாடப்பட்டது. முதலாவது ஆகஸ்ட் 30-ஆம் தேதி நல்லிரவில். அது ஒரு மரியாதைக்குரிய நிகழ்வு. வெள்ளையர்களின் கொடி இறக்கப்பட்டு நம்முடைய கொடி கம்பத்தில் ஏறிய முதல்நாள். நாட்டு மக்கள் அனைவருக்கும் அது ஒரு விசேஷ உணர்வு. அனைவரின் கண்களும் ஆனந்ததில் கண்ணீர் சிந்த சுதந்திரக் காற்று சுவாசித்த தருணம், மத இன வேறுபாட்டைத் தாண்டி அனைவரின் நெஞ்சத்திலும் விடுதலைச் சுதந்திர உணர்வு மட்டுமிருந்தது. இதைக் காப்பாற்றிட மலேசிய மக்களுக்காக துன் மட்டுமல்ல, துங்குவும் சிறப்புப் பிரார்த்தனை செய்தார். இரண்டாவது கொண்டாட்டமாக மறுநாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுதந்திரக் கொண்டாட்டம் நாடே கொண்டாடிட ஆரம்பமானது மலேசியாவின் முதல் நாள். 


யோகி: நாட்டின் 55 சுதந்திர தின கொண்டாட்டங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவற்றில் உங்களால் மறக்க முடியாத சுதந்திர தினம் எது?

தோ புவான்: 1969 மே 13 சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய வருடம் சுதந்திர தினம் கொண்டாடப்படவில்லை. இந்தச் சம்பவம் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைத்து இதயங்களையும்  கலங்கவைத்தது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகப் பாடுபட்டவர்கள் இந்தச் சம்பவத்தை (மே 13) நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், இன்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்வதும். ஒவ்வொரு தேர்தலின்போதும் அதை நினைவுகூர்வதும் வேதனையளிக்கிறது. மே 13 சம்பவத்தைப் பற்றி பேசுவதை மலேசியர்கள் தவிர்க்க வேண்டும். 

யோகி: இன்றைய இளைய தலைமுறையினருக்கு சுதந்திரம் பற்றிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

தோ புவான்: நிச்சயமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை காரணம் சில தரப்பினர் நாட்டின்மீது பற்றோடும், சில தரப்பு அதற்கு எதிராகவும் இருக்கின்றனர். சில அரசாங்கத்தரப்பு அதிகாரிகளும்கூட நம்நாட்டின் கொடிக்குரிய மரியாதையைக் கொடுப்பதில்லை. கொடி கிழிந்துபோயும், வர்ணம் இழந்தும் இருப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் தன்னிச்சையாக இருக்க முடியவில்லை. சிலவேளையில் மலேசியக் கொடி மழையில் நனைந்துகொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அதைத் தெரியப்படுத்துவேன். நம்முடைய நாடு, நம்முடைய கொடி என்ற உணர்வு சொல்லி வரக்கூடாது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் அது இயற்கையாகவே ரத்தத்தில் இருக்க வேண்டிய ஒன்று.

அவர் பல பெண்கள் அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் தேசிய மகளிர் அமைப்புகளின் கவுன்சிலின் (NCWO) நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.


கே: துன் சம்பந்தனார் ஒரு சுதந்திரப்போராளி. ஒரு போராளியின் மனைவியாக நீங்கள் அவருக்குச் செய்தது என்ன?

ப: அவர் ஒரு டென்சனில்லாத மனிதர். நன்கு படித்தவர். எதையும் சிந்தித்து ஆராய்ந்து பொறுமையாகச் செய்யப் பழகிக்கொண்டவர். எந்தச் சவாலையும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குவதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். தவிர, சரித்திரம், தமிழ், அரசியல், தேசியம் என பல புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பார், நான் ஒரு பட்டதாரியாக இருந்தாலும், அவருக்கு நான் எதையும் சொல்லித் தெரிவதில்லை. அவர் வீட்டில் இல்லாதபோது வீடுதேடி வரும் பாட்டாளிமக்களுக்கு உணவளித்து ஆதரித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, குறிப்பெடுத்து துன்னிடம் கொடுப்பேன். அது மக்களையும், அவர்களின் நிலை மற்றும் தேவைகளைக் கண்டறிய எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது. 

யோகி: நம் நாட்டின் இந்தியர்களின் வளர்ச்சி, அல்லது வீழ்ச்சி குறித்த கருத்தைக் கூறமுடியுமா? 

தோ புவான்: சத்து மலேசியா வருவதற்கு முன்பே மூவின மக்களும் ஒற்றுமை, பரஸ்பரம், புரிந்துணவுடந்தான் இருந்துதோம். ஆனால், நம்மிடையே வேற்றுமை ஏற்பட்டதற்கான வேரைத்தேடி அறுக்கத் தவறிவிட்டோம். இந்த நாட்டிற்கு சீனர்களும், இந்தியர்களும் அடிமைகளாகத்தான் வந்தார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் சீனர்கள், மணல் மாதிரி வந்தார்கள், பாறையாய் மாறி பலப்படுத்திக்கொண்டார்கள். இந்தியர்களும் மணல் மாதிரி வந்து மணலாகவே இருந்துவிட்டார்கள். அதனால்தான் காற்றடிக்கும் பக்கமெல்லாம் சிதறி ஓடுகிற நிலை ஏற்பட்டது. நாமும் கண்டிப்பாகப் பலம் பெற வேண்டும். பாறையைவிட மலையாய் உயர்ந்து நிற்க வேண்டும். இன்னும் பழைய நண்டுக்கதை பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

யோகி: ‘மலைநாடு' தமிழ்ப்பத்திர்கை மற்றும் ‘மலேயன் டைம்ஸ்' ஆகிய பத்திரிகைகளை துன் நடத்தி வந்திருக்கிறார். இதனால், அவர் அடைந்த நஷ்டத்தை ஒரு குடும்பத்தலைவியாய் எப்படி எதிர்கொண்டீர்கள்?

தோ புவான்: பத்திரிகையைவிட ம.இ.கா-வை பலப்படுத்துவதற்குத்தான் அவர் நிறைய சொத்துகளை இழந்தார். நாட்டைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும், செய்திகள் வெளியிடவும், மக்கள் அதைத் தெரிந்துகொள்ளவும்தான் அவர் இரு பத்திரிகைகளை நடத்தினார். ஆனால், இரண்டுமே சொல்லிக்கொள்ளும்படி சரியாகப் போகவில்லை என்பது உண்மையே. 

யோகி: துன் காலமானபிறகு, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள் அதைப்பற்றி சொல்லுங்கள்?

தோ புவான்: உண்மைதான் துன் காலமானபிறகு, தலைமைத்துவப் போராட்டத்தில் ஒருமுடிவைக் கையிலெடுக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தலைவராக இருந்து துன் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்து பின் விலகிக்கொண்டேன். இப்போது கூட்டுறவு அங்கத்தினர்கள் அதிகமாக இருக்கிறார்கள் எல்லாம். ஆரோக்கியமான விஷயங்கள்தான். 

யோகி: லண்டன் சென்று சுதந்திரப் பிரகண்டத்தில் கையொப்பமிட்ட தருணத்தைப் பற்றி துன் உங்களிடம் எப்படிப் பகிர்ந்துகொண்டார்?

தோ புவான்: தொலைபேசியில் அழைத்துப் பேசினார். நாடு திரும்பிய பிறகு அதன் விவரங்களைச் சொன்னார். அது ஒரு உன்னதமான தருணம். 


யோகி: துன் வேட்டி - ஜிப்பாவுடன்தான் லண்டன் வரை போய்வந்தார். அவர் போராட்டமும் அந்த உடையோடுதான் தொடர்ந்தது. பிரிட்டன் உயரதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதால்தான் துங்கு துன்னை லண்டனிலுள்ள ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்று மாற்று உடை வாங்கிக் கொடுத்ததாகவும் அவர் அதை அணிந்துகொண்டுதான் சுதந்திரப்பிரகடனத்தில் கையொப்பமிட்டு நாடுதிரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பற்றி கூறமுடியாமா?

தோ புவான்: இங்கே ஒரு வரலாற்றுப்பிழை இருக்கிறது. அப்போதுவந்த Malay Mail பத்திரிகை வெளியிட்ட தவறான கருத்தாகும். துங்கு உடை வாங்கித்தந்தது உண்மைதான். ஆனால், துன் அதை அணியவில்லை. வேட்டி - ஜிப்பா அடிமைகளின் உடை என்று பிரிட்டிஷார் எண்ணியிருந்தனர். அது நமது கலாச்சார உடை என்று அவர்களுக்குத் தெரியாது. மேலும் துன் பாட்டாளி மக்களின் சார்பில் லண்டன் சென்றதனால், அவர் அந்த உடையை மாற்றிக்கொள்ளவே இல்லை. துங்கு வாங்கித்தந்த உடையை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளோம். 

யோகி: பிறகு துன் வீ.தி.சம்பந்தன் எப்போது துங்கு வாங்கித் தந்த உடையை அணிந்தார்?

தோ புவான்: 1963-ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணத்தினால் துன், தன் வேட்டி - ஜிப்பா கலாச்சாரத்தை மாற்றிக்கொண்டார். 

யோகி: கடந்த சில வருடங்களாகவே நாட்டில் தலைதூக்கியிருக்கும் ஹிண்ராப், பெர்சே போன்ற அமைப்புகள் குறித்த உங்களின் அபிப்பிராயம் கூறுங்கள்?

தோ புவான்: நான் இங்கே ஒன்றை முக்கியமாக கூற ஆசைப்படுகிறேன். பல அமைப்புகளும் இயக்கங்களும் எதற்காக உருவாகின்றன? நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையை செய்வதற்குதானே? நாட்டுக்கு உபயோகமான காரியங்கள் செய்யக்கூடிய எந்த இயக்கமும் ஆதரிக்கக்கூடியதுதான். அதே சமயம் நாட்டுக்கும் நன்மையை செய்யாமல் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எந்த ஓர் இயக்கத்தையும் மக்களே புறக்கணிப்பர்கள்.

யோகி:பல ஆயிரம் பேர் வாக்காளர்களாக பதியாமலும், ஓட்டுரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் சொல்வது?

தோ புவான்: மலேசியா, இங்கு பிறந்திருக்கும் அனைவருக்கும் சொந்தமான நாடு. அதை உறுதி செய்வதுதான் ஓட்டுரிமை. அதையும் இழந்து அல்லது விட்டுக்கொடுத்து விட்டால் இந்த நாட்டின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் என்ன? இங்கே அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், பொதுமக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் இன்னும் கொஞ்சம் சிரமத்தை எடுக்க வேண்டும். 

வெளிநாடுகளில் குறிப்பிட்ட வயது வந்ததும் குடிமக்கள் வாக்காளர்களாக பதிவதற்கு சங்கங்களும் அதற்கான அமைப்புகளும் உள்ளன. இளைஞர்கள் அங்கே மிகவும் எளிய முறையில் வாக்காளர்கள் ஆகின்றனர். ஆனால், இங்கே அதற்கான விழிப்புணர்வு பயிற்சிகள் எதுவும் இல்லாததால் ஓட்டுரிமை பற்றிய புரிந்துணர்வே யாருக்கும் இருப்பதில்லை. 
இந்த நாட்டை வெள்ளையர்கள் ரப்பரை உற்பத்தி செய்யும் ஒரு காடாகத்தான் பார்த்தார்கள். நாட்டிலிருந்த மக்கள் பலவீனமானவர்களாகத்தான் வெள்ளையனின் கண்களுக்கு தெரிந்தார்கள். இத்தனையையும் தாண்டி போராடி, ரத்தம் சிந்தி, பல தியாகங்களுக்குப் பிறகுதான் விடுதலை என்ற சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்கும் 55 வயதாகிவிட்டது. இந்நிலையில், இன்னும் பலர் தங்களின் கடமையை மறந்து வாக்காளர்களாக பதியாமல் இருப்பது, அவர்களுக்கு நாட்டின் மீது உள்ள விசுவாசத்தையே சந்தேகிக்கும் அபாயம் ஏற்படுகிறது. 


யோகி: இறுதியாக நம் நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா?

தோ புவான்: துன் நாட்டிற்காக உழைத்தார்.  அரசு அலுவலகங்களில் அமைச்சராக இருந்தார். மக்களை நெருங்க அவருக்கு எவ்விதத் தடையும் ஏற்பட்டதில்லை. ஆனால், அவரை ம.இ.கா தலைவர் என்றே அறிமுகப்படுத்துகிறார்கள். இதை மாற்ற வேண்டும்.  துன் இந்த மலாயாவில் ஒரு நாள் முதல்வராக இருந்திருக்கிறார். இது இந்த நாட்டு மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும். அதுபோல, இப்போது, அந்த வாய்ப்பு நம்  இந்திய தலைவருக்கும் வழங்க படுமா?  அதற்கு நம் உண்மை வரலாற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்நாட்டு இளைஞர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு வலவலவென்று எதையும் சொல்லத்தேவையில்லை. சுதந்திர தினத்தில் சுதந்திர நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் நாட்டுப்பற்று துளிர்விட்டு ஆலமரம் போல் ஓங்கி வளர வேண்டும்.  

(‘நம் நாடு' 2012 )

தோ புவான் உமா சம்பந்தன் பற்றி சில வரிகள்...

தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் 8 செப்டம்பர் 1929-ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை பொறியியல் துறை நிபுணர் சுப்ரமணியம். இவர் சிங்கப்பூர் கடற்படை பிரிவில் பணியாற்றிவந்தார். தாயார் ஜெயலட்சுமி. பெற்றோருக்கு இவரே தலைப்பிள்ளை. தோ புவான் முறையாக 7 ஆண்டுகள் வீணை மீட்டும் பயிற்ச்சியை மேற்கொண்டவர். அவரின் வீணை இன்றும் அவரின் பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு பட்டதாரியான அவர், 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி துன் வீ.தி.சம்பந்தனை கரம் பிடித்தார். அவரின் அனுபவத்தில் மலேசியாவின் 6 பிரதமரின் தலைமைத்துவத்திலும் வாழ்ந்திருக்கிறார்.

நானும் தோ புவானும் (2014-ஆம் ஆண்டு)

அவரை நேர்காணல் செய்து 2 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கையில்

2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி தோ புவான் உமா சம்பந்தனுக்கு கோலாலம்பூர் இந்திய சங்கம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி சிறப்பித்ததுடன், அஞ்சல் தலையையும் வெளியிட்டது. அந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால், 2014-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி ம.இ.கா-வின் ஏற்பாட்டில் துன் வீ.தி.சம்பந்தனுக்காக முதல் முறையாக நினைவு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் தோ புவான் உமா சம்பந்தன் தனது ஒரே மகளான தேவகுஞ்சரியுடன் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் செய்யப்படும் மாலை மரியாதை, பொன்னாடை எதையும் ஏற்றுக்கொள்ளாத மனுசி தோ புவான். என்னதான் வர்ப்புறுத்தினாலும் தன் கொள்கைக்கு எதிராக அவர் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சியில் பத்திரிகை செய்தியாளராக நான் கலந்துக்கொண்டேன். நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தருணம், தோ புவான் என்னை அழைத்தார். எதற்கு என்று தெரியாத குழப்பத்தில் போனேன். காரணம் அவரை முதன் முதலில் சந்திக்கும் போது 83 வயது. இப்போது அவருக்கு 85 வயது. என்னை நினைவில் வைத்திருக்க வாய்ப்பு இல்லை. எதற்காக என்ற முகபாவனையுடன் அருகில் போனேன்.
“உன் பெயர் என்ன?”
“யோகி”
“நல்ல பெயர். நீ நல்லப் பெண்.நான் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். காரணம் தெரியவில்லை.  பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்; உன்னைபோல்தான்” என்று கூறியவர் நான் எதிர்பார்க்காதவாறு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அத்தனை பெரிய கூட்டத்தில் அதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் அதை கவனிக்கவில்லைதான். கவனித்த சில பேர் என்னை அதன்பிறகு மிகவும் மரியாதையுடன் பார்த்தனர். அந்த முத்தத்திற்கு என்ன  அர்த்தம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த ஈரம் காயாமல் நான் இன்னும் காத்துவருகிறேன்.

திங்கள், 27 அக்டோபர், 2014

முதலாளிகள் வைத்துள்ள முகமூடிகள்

கட்டங்களில் அமைந்த உலகு 2


ஒரு பொழுதுபோக்குக்காக வேலைக்குப் போகலாம் என்றிருந்த எனக்கு நிரந்தரமாக வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தை அப்பாவின் மறைவு ஏற்படுத்தியது. தோட்டத்தில் கூலி வேலை செய்யும் அம்மாவின் சொற்ப சம்பளத்தை ஐந்து பேரின் வயிற்றுக்கும், பள்ளிப்படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கும் பங்கிடுதல் என்பது கனவிலும் நடவாத ஒன்று. பகுதி நேர வேலையைத் தேடிக்கொண்டு சமாளிக்கலாம் என்பதெல்லாம் வாய்மொழிக்கே வசதியாக இருந்ததே ஒழிய நிஜ வாழ்க்கையில் எப்படித் திட்டமிட்டாலும் செலவுகள் கழுத்தை நெரித்தன. மேலும் அப்பாவின் பராமரிப்பின் போதே தடுமாறிய குடும்ப வண்டியை எங்களால் சீர் செய்து ஓட்ட முடியும் என்றெல்லாம் போலியாகக் கூறிக்கொள்ள தைரியம் இல்லை. சமையல் கட்டுக்குள்ளேயே அனுமதிக்காத, பகுதி நேர வேலைக்கும் அனுமதிக்கொடுக்காத  அப்பா குடும்ப சந்தையின் செலவுகளையும், அதன் பராமரிப்பின் முறைகளையுமா கற்றுக்கொடுப்பார்?

அப்பா ‘One Man Show' வாக இருந்தே வாழ்ந்தவர். அவரின் விஷயத்தில் தலையிடுவதையோ மூக்கை நுழைப்பதையோ விரும்பாதவர். 18 வருடமாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குடும்ப வண்டியை மேம்படுத்துவதை விட குடைசாய்ந்திடாமல் காப்பற்றுவதே முக்கியமாக எங்களுக்கு பட்டது. அதற்கு உடனடியாக ஒரு வேலையை நான் தேடிக்கொள்ள வேண்டும். பகுதி நேரமாக அல்லாமல் முழுநேரமாகவே. இந்த முடிவை நான் தெரிவு செய்தபோது ஏற்பட்ட மன உளைச்சலை சொல்லி மாளாது.

 ஓரளவு அந்தஸ்தான வேலைக்குப் போவதற்கு போதிய கல்வி இன்னும் பூர்த்தியாகாத நிலையில், தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதற்கா இத்தனைக்காலம் மிகுந்த பண நெருக்கடியிலும் கல்வி பயின்றேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். அம்மாவைப் போலவே அப்பாவும் ஒரு கூலித்தொழிலாளிதான். அந்த வரிசையில் நானும் சேர்ந்து விடுவேனா என்ற எண்ணம் தீயாக நெஞ்சில் உழல ஆரம்பித்தது. என் ஆற்றலை சக்கையாக யாரோ பிழிந்தெடுப்பதைப் போன்ற ஒரு பீதி கௌவிக்கொண்டது. கனத்த இதயத்தோடு அக்கம் பக்கமெல்லாம் வேலைக்குச் சொல்லி வைத்தேன். நானும் அங்காடிக் கடைகள், சில தொழிற்சாலைகள் என வேலைக்கு விண்ணப்பித்து வந்தேன்.

ஒரு மாலைப்பொழுதில் எங்கள் வீட்டிற்கு வந்தான் ஓர் இளைஞன். அழகான முகவெட்டு. கவர்ச்சியான தோற்றம். இதற்கு முன் நான் அவனை பார்த்ததில்லை.

"வேலைக்குச் சொல்லி வச்சிங்களா?" என்றான்.
"ஆமாம்" என்றேன்.
“நான்தான் வேலைக்கு ஆள் எடுக்கிறேன்” என்றான்.
“என்ன வேலை?” என்றேன்.
“குளிர்சாதன அறையில் வேலை” என்றான்.

குளிர்சாதன அறையில் வேலை என்பது படித்தவர்களுக்கு மட்டுமே அமையக்கூடிய இடமாக பலரும் ஒரு மாயையில் இருந்த காலம் அது. வந்தவனும் கனகச்சிதமாக மாயையை என் மேல் பாய்ச்ச ஆரம்பித்தான்.

“சட்டையில் அழுக்குப் படாமல் வேலைப்பார்த்துவிட்டு வரலாம். நீங்கள் இன்னும் சாமர்த்தியமாக வேலைப்பார்த்து மேல் இடத்தில் நல்ல பெயர் வாங்கிவிட்டால் சூப்பர்வைசர் பதவிகூடக் கிடைக்கும். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கு” என்றான்.

இப்படி பதவி ஆசையைக் காட்டியே வேலையில் சேர்த்துவிடுவது என்ன கலாச்சாரம் என்றே தெரியவில்லை. அவன் என் கண்களையே ஊடுருவி பார்த்தான். இனிக்க இனிக்க பேசினான். என் கண்கள் காட்டப்போகும் ஆர்வத்தையே தேடினான்.
“வேலை எங்கே?” என்றேன்.
“அருகில் இருக்கும் 'யுபி' தோட்டத்தில்” என்றான்.

'யுபி' தோட்டம் வெள்ளைக்கார துரையுடையது. அந்தத் துரை கூலியாட்களுக்கு நல்ல நல்ல சலுகைகள் வழங்குவதாகவும் கூலியாட்களின் நலனைப் பேணுவதாகவும் நானும் கேள்விப்பட்டு இருந்தேன். ஆனால் எனக்கு தோட்டத்தில் வேலைப்பார்ப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்று தயங்கினேன்.
தோட்டத்தொழிளார்கள் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 14 ரிங்கிட் சம்பளம் பெறுவதாகவும் இதர அலவன்ஸ்களை சேர்த்து கணிசமான ஒரு தொகையைச் சம்பளமாக ஈட்ட முடியும் எனவும் தொழிற்சாலைகளை விட கொஞ்சம் அதிகமாகவே சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தான். பார்த்து அரைமணி நேரம் கூட ஆகாத அவன் நெருங்கிய நண்பன் மாதிரி சில சமயம் குழைந்தும், சில சமயம் கனிந்தும் பேசினான். பலவீனமான இதயம் கொண்ட பெண்களாக இருந்தால் அவனிடம் நிச்சயம் காதல் வசப்படக்கூடும். அது அவனின் சாமர்த்தியமாக இருக்கலாம். அல்லது அவனின் இயல்பாகவும் இருக்கலாம்.

மூடுந்து ஓட்டுனரான அவன் ஆட்களைச் சேகரித்து வேலைக்கு அமர்த்தினால் கமிசன் உண்டு. தொழிலாளர்களின் அன்றாட வேலை போக்குவரத்துக்குத் தனியாக மாதச்சம்பளம் உண்டு. பயன்படுத்தப்படும் வாகனம் அவனின் சொந்த வாகனமாக இருப்பின் அதற்கும் தனி அலவன்ஸ் உண்டு. இத்தனை சம்பளத்துக்கும் அவன் பேச்சையே அதிகமாக முதலீடு செய்வான் போல் தோன்றியது. குறிப்பாக பெண்களிடம்.

“குளிர்சாதன அறையில் சுலபமாக யாருக்கும் வேலை கிடைக்காது. உங்களைப்போன்ற வயதுப் பெண்கள் மட்டுமே அங்கே வேலை செய்கிறார்கள். தயங்காமல் வரவும்” என்றான்.
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல்
"சரி" வருகிறேன் என்றேன்.
“நாளைக்காலை 7 மணிக்குத் தயாராக இருங்கள்” என்றுக்கூறி மெல்லியதாக சிரித்துவிட்டு சென்றான்.

என் வாழ்க்கையில் நிகழப்போகும் எதிர்பாராத திருப்பங்களை எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற ஆற்றாமை ஒரு புறமும் அப்பாவின் மரணம் மறுபுறமும் என்னை நெருக்கடியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.

என் எதிர்காலத்தை நிர்ணயித்த அந்த விடியலில், அவன் சொன்ன அந்த நேரத்தில் நான் தயாராக இருந்தேன். இதே போல விடியலில்தான் நான் நேற்றுவரை பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தேன். இன்று அந்த விடியல் உழைப்புக்காகவும் ஊதியத்துக்காகவும் எனக்காக உதித்திருந்தது. காலம் எத்தனை விரைவாகவும் சாதுர்யமாகவும் தன்னை நகர்த்திக்கொள்கிறது. அது கற்பிக்கும் பாடம்தான் என்ன? விளங்காமலே மூடுந்துக்காகக் காத்திருந்தேன். அந்த இளைஞன் வந்தான்.

“காலை 8 மணிக்கு வேலை. காலை பசியாறுவதற்கு ஏதாவது வாங்கிக் கொள்” என்றான்.
நான் தயாராக வைத்திருப்பதாக அவனிடம் சொன்னேன். மீண்டும் அதே புன்முறுவல். ஏன் சிரிக்கிறான்? வழிவதைப்போல அல்லது மழுப்புவதைப்போல. அப்பாவின் மரணம் நெஞ்சில் கனன்றுகொண்டே இருந்ததால் அவன் பார்ப்பதையும் சிரிப்பதையும் சிலாகிக்க முடியவில்லை. அவன் என்னை சிடுமூஞ்சி என்றோ ‘நினைப்பு' பிடித்தவள் என்றோ நினைத்திருக்கலாம்.

நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த தோட்டத்துச் சாலையை நெருங்கியபோது காலை மணி 7.30 ஆகியிருந்தது. உள்நுழையும் தோட்டத்துச் சாலையின் வடது இடது புறமும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு பொட்டலான நிலம். அங்குதான் வெள்ளைக்கார துரை தன் ஹெலிகாப்டரை கொண்டு வந்து இறக்குவானாம். அதைப்பார்ப்பதற்கே நிறைய மக்கள் அங்கே கூடுவார்கள். இதற்காகவே துரை அந்த இடத்தை பொட்டலாக வைத்திருந்தான். அவன் சொன்ன அந்தக் குளிர்சாதன அறையின் முன் வண்டியை நிறுத்தினான். அது ஒரு பலகை கொட்டகை. பழைய பொருட்களை போட்டு வைக்கும் ஸ்டோர் மாதிரி இருந்தது. திரு திருவென விழித்துக்கொண்டே நின்றேன். ஆனால் ஒரு வார்த்தைக்கூட அவனிடம் எதுவும் பேசவில்லை. எனக்குள்ளே ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவன் “இதுதான் குளிர்சாதன அறை. உள்ளே போ” என்றான்.

கழுத்து அறுக்கப்படப்போகும் கோழியின் மனநிலை எப்படி இருக்குமோ தெரியாது. அந்நேரத்தில் என் மனநிலையை வைத்து அதை யூகித்துக் கொண்டபடி உள்ளே சென்றேன். வயதுப்பெண்கள்தான் உள்ளே இருந்தனர். சுமார் 14 பெண்கள் இருந்திருப்பார்கள். அத்தனைக் கண்களும் ஒரே நேரத்தில் என்னை எதிர்க்கொண்டன. சிலர் சிரித்தனர் சத்தமாகவும் சிலர் மௌனமாகவும். அதற்கு காரணம் நான் அணிந்திருந்த உடை. அவர்கள் முழுக்கால் சிலுவார். அதன் மேல் முட்டிக்கால் வரை பாவாடை. நீண்ட காலுரையை சிழுவாரின் மேல் இழுத்துமாட்டி இருந்தனர். ரப்பர் காலணி. முழுக்கை சட்டையினுள் அரைக்கை சட்டை. முகத்தில் மஞ்சள். பொட்டு, கண்மை, தலையில் பூ.

என் பாட்டி தோட்டத்தில் வேலைப் பார்த்தபோது இப்படித்தான் உடை அணிந்து மண் வெட்டியை தோளில் மாட்டிக்கொண்டு வருவார். இந்தப்பெண்கள் என் பாட்டியை ஞாபகப்படுத்தினர். நானோ முழுக்கால் சிலுவார். இடுப்புவரைக்கொண்ட அரைக்கை சட்டை. துணிச் சப்பாத்து. “வந்துட்டா துரை பொண்டாட்டி, மேனஜர் வேலைக்கு” என்பது மாதிரி இருந்தது அவர்களின் பார்வையும் சிரிப்பும்.

யாருமே என்னிடம் பேச வில்லை. கற்கள் வீசாமலே அவமானத்தில் அடி வாங்கிக்கொண்டேன். உள்ளே 2 மேஜைகள். அதற்கு தோதாக நீண்ட நாற்காலிகள். ஒரு மேஜையில் 8 பேர் அமரலாம். காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டேன். அங்கே ஒரு காத்தாடிக்கூட இல்லை. ஏன் குளிர்சாதன அறை என்று அதை அழைக்கிறார்கள் என்றே புரியவில்லை. இரண்டு ஜன்னல்கள் இருந்தன. அதையும் மெல்லிய வலைக்கொண்டு மூடி இருந்தனர். சிறையில் மாட்டிக்கொண்ட மாதிரி ஒரு பரிதவிப்பு இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் துணியால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்றை கொண்டுவந்து வைத்தாள் ஒரு பெண். பாத்திரம் நிறைய செம்பனை உதிரி பழங்களையும் கொண்டு வந்து வைத்தாள். கையுரையும் கொடுத்தாள். எல்லோருக்கும் அது போலவே கொண்டு வந்து வைத்தாள். நான் பொட்டலத்தைப் பிரித்தேன். கையளவு சின்னதாக ஒரு வெட்டுக்கத்தி. வெங்காயம் நறுக்குவதை போன்றதொரு சிறிய கத்தி. ஆறு இஞ்சிக்கும் குறைவான நீளத்தில் ஒரு பலகை. நிமிந்து பார்த்தேன். பெண்கள் துரிதமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். உதிரி பழங்களை ஒவ்வொன்றாக பலகையில் வைத்து நறுக்கி அதன் விதையையும் சுளையையும் தனியே பிரித்துக்கொண்டிருந்தனர். இதுதான் வேலை என்பதை புரிந்துகொண்டேன். பெண்களின் கை எவ்வளவு வேகமாக வேலை செய்ததோ அதே அளவுக்கு அவர்களின் வாயும் வேலை செய்தது. முந்திய நாளில் பார்த்த படம், புதிதாக வாங்கிய துணி, கூட்டுக்கட்டுதல் இப்படி ஆளுக்கொரு கதையாக அவர்களின் வாய் அளந்துகொண்டே இருந்தது.

சிறிது நேரத்தில் கங்காணி வந்தார், என்னை நேர்முக தேர்வு செய்வதற்கும் பெயர் பதிவதற்கும். அரைக்கால் சிலுவார் மற்றும் அரைக்கை சட்டையை 'டக் இன்' செய்து இடைவார் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருந்தார். என் பெயர், வயது, படிப்பு போன்றவற்றை விசாரித்தவர், தாய் தகப்பன் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறார்களா என்று கேட்டார். ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. வேலைக்கு வரும் யாரிடமும் இதைக்கேட்பார் என்றே நினைக்கிறேன்.

அம்மா தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். பாட்டி ஓய்வு பெறும் வரை தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார். அம்மா கொஞ்சகாலமாகத்தான் வேறு ஒரு தோட்டத்துக்குக் காட்டுவேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறார். அப்பா திருமணத்துக்கு முன் தோட்டத்தில் ஒரு மாதம் என்னவோ வேலை பார்த்தாராம். காட்டு வேலைதான். அதன்பிறகு தோட்டத்து வேலைக்கே போகவில்லை, இவ்வாறு  விளக்கினேன்.

"அதற்குதான் நீ தோட்டத்திற்கு வந்துட்டியே" என்றார் சடாரென்று.  யார் யாரோ என் முகத்தில் அறைவது மாதிரி இருந்தது. வாயடைத்துப்போய் அவரையே பார்த்தேன்.
"எந்த சீமைக்கு போனாலும் பூர்வீகத்துக்கு வந்துதான் ஆகனும். டாக்டர் மகன் டாக்டர்; டீச்சர் மகன் டீச்சர்; கூலி மகன்" என்ன வென்று பெண்களைப்பார்த்து கேட்டார் கங்காணி. 'கூலி' என்றார்கள் பெண்கள் ஒரே குரலில். அவர் என்னிடம்தான் பேசுகிறாரா என்ற குழப்பமே எனக்கு வந்துவிட்டது. அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே என் செவிகளில் விழவில்லை. அதைவிட நானே என் மனதுக்குள் உரக்க பேசிக்கொண்டிருந்தேன்.

தப்பு செய்துவிட்டேன். நான் இங்கு வந்திருக்கவே கூடாது. இது அப்பாவுக்கு செய்யும் துரோகம். நாங்கள் செய்யும் கூலி வேலையை  நீங்கள் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லை மீறுவதற்கு ஒரு போதும் நான் தயாராக இல்லை. உண்மையில் வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய்யலாம் என்றெண்ணிதான் போனேன். ஆனால் கூலி என்ற அப்பாவின் முத்திரையின் நிழல் எங்கள் மேல் விழுவதற்கு நானே காரணமாக இருக்ககூடாது.
அதைவிட கூலி என்ற முகமுடியை அணிவிக்க இவர்கள் யார்? சிலர் இதுபோன்ற முத்திரை குத்துவதில் கில்லாடிகள். முகத்துக்கு நேராகவும், முகத்துக்கு பின்னாடியும்; எப்படி வசதி படுகிறதோ  அப்படி முத்திரையை குத்துகிறார்கள். இது விதி செய்த சதி என்று வரையருக்க நான் பக்குவப்படவில்லை.
தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும் அப்பாவிடமிருந்து எனக்கும் இடம் மாறப்போகும் முத்திரையை உடனே கிழித்தாக வேண்டும். அது என்னால் முடியும். தாமதிக்காமல் குளிர்சாதன அறையை விட்டு வெளியேறினேன். மூடுந்து ஓட்டுனரான அந்த இளைஞன் வெளியே நின்றுகொண்டிருந்தான்.

“எனக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டிற்கு போகனும்” என்றேன்.
அவன் என்னை எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. இவன் இதை எதிர்பார்த்திருக்கவும் கூடும் என நினைக்கிறேன். வீட்டை அடைந்ததும் “நாளை வேலைக்கு கூட்டிச்செல்ல வர வேண்டாம். நான் வர மாட்டேன்” என்றேன். அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை. முக்கியமாக இந்த முறை அவன் என்னைப்பார்த்து சிரிக்கவில்லை.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

உணவு தினம்


மனிதன் உண்பதற்காக வாழ்கிறானா அல்லது வாழ்வதற்காக உண்கிறானா என்றொரு கூற்று பலகாலமாக மக்களிடத்தில் கேள்வியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆம்.  என்னைப் பொறுத்தவரையில்,  இரண்டும் சரிதான். காரியம் சாதிப்பவன் தன் பலத்திற்காக உணவை உண்கிறான். ஒன்றுக்கும் உதவாதவன்  உடல் பலத்தைப்பெற உண்டுகொண்டே இருக்கிறான். இப்போது விஷயம் அதுவல்ல. கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 16) உலக உணவு தினம் உலகலவில்   கொண்டாடப்பட்டது.

உலக உணவு தினம் என்றால் என்ன?  

உங்களுக்கு பதில் தெரியமா? அன்றைய தினம் விதவிதமான உணவுகளை வாங்கி உண்டு மகிழ்வதா? அல்லது பார்ட்டி, கேளிக்கைகள் என்று கூட்டாக உணவுகளை வைத்து கூட்டமாக உண்டு கொண்டாடி  மகிழ்வதா?  70 விழுக்காட்டினருக்கு  உலக தினங்களைக் குறித்த பிரக்ஞை இல்லாதது அறியாமை என்று சொல்லிவிடமுடியாது. அது அறியாமையின் உச்சம். வெட்கப்படவேண்டிய விஷயம். சிலர் அர்த்தம் தெரியாமலும், ஏன் - எதற்கு என்ற காரணம் புரியாமலும் இதுபோல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துவிடுகின்றனர்.

‘உலக உணவு தினம்' எதற்காகக் கொண்டாட வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில்,  ஐக்கிய நாடுகளின் உணவு  மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில்,  ஐநா இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர்  பால் ரொமனி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏக மனதாக ஏற்கப்பட்டு, தற்போது 150-க்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உணவு விரயமாக்குதலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் முன்னெடுக்கப்பட்டது.
வறுமை நாடுகளில் ஒருவேளைக்கு ஒரு பிடியளவு உணவுகூட கிடைக்காத நிலை உள்ளது.  பசியின் கொடுமையால் மனித இறைச்சியை உண்ணும் நிலையும் சில நாடுகளில் நடந்துள்ளதும் இன்னும் நடந்துக்கொண்டிருப்பதும் அவ்வப்போது வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


2012-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகின் 85 கோடி மக்கள் பசியாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்புக் கூறுகிறது.  இவர்களில் 85 கோடி மக்கள் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  அதோடு பட்டினியால் ஆண்டுதோறும் வருடத்திற்கு மூன்று கோடியே 50 லட்சம் பேர் மரணமடைவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்களின் கணக்கெடுப்பு அதிகரிக்கிறதே ஒழிய, குறையவில்லை என்பதும்  நிதர்சன உண்மையாகும்.

மலேசியாவைப் பொருத்தவரை உணவு விஷயத்தில் 
மக்களின் விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? 

இங்கே 24 மணிநேர மாமாக் கடைகள், விரைவு உணவுக் கடைகள் என எந்த நேரத்தில் உணவு வேண்டும் என்றாலும் உண்பதற்கு அல்லது உணவை வாங்குவதற்குக் கடைகள் இருக்கின்றன. ஏழைகளும், பணக்காரர்களும் யாராக இருந்தாலும், உணவு விஷயத்தில் நேரம் காலம் எல்லாம் இங்கு பார்ப்பது இல்லை.  சமையளுக்கான பொருள்கள் வாங்கும் கடைகளும் இங்கு 24 மணி நேரமும் இயங்குகின்றன.

2006-ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மலேசியாவுக்கு வந்திருந்தார்.  சிலநாள்கள்  இங்கு தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், கிளம்பும்போது  மலேசியாவில் உணவைக் கொண்டாடுகின்றனர் என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டு போனார். கடந்தாண்டு வந்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவோடு, தலைநகரின் ஒரு சாலையில்  நள்ளிரவு நடைபயணத்தை மேற்கொண்டோம். அவர் அதிசயித்த  காட்சி அந்த நேரத்திலும் உணவுக்கடைகள் திறந்திருந்ததும், பகல் நேரத்தைப் போலவே பலர் உணவருந்திக் கொண்டிருந்ததுதான். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் கிளம்பும்போது மலேசிய உணவைக்குறித்துப் பேசாமல் போனதில்லை. அந்த அளவுக்கு மலேசியாவில்  உணவுகள் பிரபலம். எந்த நேரத்திலும், நாம் விரும்பும் எந்த உணவையும் சில நிமிடங்களில் சுவைத்துவிடலாம்.

இங்கே உணவை பசித்து உண்பது குறைவாகவே இருக்கிறது. பொழுது போக்கு நிலையில் தேனீர், பலகாரம் விளையாடுவதற்கு சதுரங்கம் என்ற களிப்பில் மாலை நேர தேனீர் நேரம் நகரும். அப்படியே பகல் நேரமும், இரவு நேரமும் அப்படியே, ஏன் காலை நேரம்கூட  இப்படி அமைவது உண்டு.  தேனீர் பலகாரங்கள் உணவு பட்டியலில் மலேசியர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அது அவர்களுக்கு snack நேரம். பிறகு, உணவு நேரம் தனியாக. பசித்த வயிறு காண்பது அறிதாகிவிட்டது இங்கு. அதே நேரத்தில் நம்மளவிற்கு உலகத்தில் யாரும்  உணவை விரயமாக்குகிறார்களா என்று தெரியவில்லை.

நமது நாட்டில் உணவைப்பற்றிய விழிப்புணர்வு எப்படி உள்ளது? 

இதை அறிய  பினாங்கு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பாராவை தொடர்புக்கொண்டேன்.  சுப்பாரவ் கடந்த  35 ஆண்டுகளாகப் பயனீட்டாளர் சங்கத்தின் வழி பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் பேசுகையில்...

சுப்பாரவ் 
“இந்த நாட்டில் யாரும் உணவை மதிப்பதே கிடையாது. உணவை உண்ணும்போது இறைவனுக்கும், உணவுக்கும்  வணக்கம் அல்லது நன்றியைக் கூறிவிட்டு உண்பதுதான் இந்திய கலாச்சாரமாக இருந்தது. இன்று அந்தக் கலாச்சாரம் காணாமல் போய்விட்டது.  நினைத்த நேரத்தில் உணவை உண்ணும்  மலேசியர்கள்,  நல்ல ஆரோக்கியமான உணவைத்தான் உட்கொள்கிறார்களா?  இந்த கேள்விக்கு யாராலும் நேர்மையாக பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவர்கள்  குறைவான சத்துள்ள, அதிகமான ரசாயனமுள்ள உணவைத்தான்  அன்றாடம் உண்கிறார்கள் என்ற கூற்றையும் யாராலும் மறுக்க முடியாது. இதனாலே குழந்தைகளுக்குகூட  உடல்பருமன் பிரச்னை  தலைதூக்கியுள்ளது.

உணவு விரயமாக்குதல் நாடுகளின் கணக்கெடுப்பில் நமது நாட்டிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.  உண்மையாக இருக்கும என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். கடந்த ஆண்டு பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் ஓர் ஆய்வினை மேற்கொண்டது.  அந்த ஆய்வு  நம்பமுடியாத ஒரு தகவலை நமக்குச் சொன்னது. அதாவது மலேசியர்கள் ஒரு வருடத்தில்  விரயமாக்கும்  உணவில் 25 இரட்டை மாடிக்கோபுரங்களைக் கட்டலாமாம். 
பெருநாள், பண்டிகை, திருவிழா திருமணம் போன்ற கூட்டு விழாக்களில் வழங்கப்படும் உணவை எடுப்பவர்கள் தங்கள் வயிற்றுக்குப் போதுமான உணவை எடுப்பதில்லை. அதற்கும் மேலாக மலைபோல் தட்டில் உணவைக் குவித்துவைத்து, அதை  உண்ண முடியாமல், கோழி, இரையை  கிளறி விடுவதுபோல் கிளறி அப்படியே வைத்து விடுவர். இப்படித்தான் பலபேர் உணவை விரையமாக்குகின்றனர். 

மேலும் உணவு விழாக்கள் என்ற பேரில் விரயமாகும் உணவுகள் மிக அதிகமாகும்.  குறிப்பாக நட்சத்திர தங்கும் விடுதிகளில்  பு ஃபே பாணியிலான உணவுகளுக்குப் பெரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 100 வகை உணவுகள் எனவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் மனித வயிறு ஒரு வேளை உணவில் 100 பதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா? சாதாரணமாக ருசிப் பார்த்து தூக்கிவீச மலேசியர்கள் பணம் கொடுத்துச் செல்கின்றனர் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் உணவகங்களில் ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தோம். அதாவது தேவைக்கு அதிகமான உணவை எடுத்து உண்ண முடியாமல் தூக்கி எறிந்தால் அதற்கும் பணம் வசூலிக்கும் நடைமுறையது. தற்போது இந்த நடைமுறை கோலாலம்பூர், செகமாட் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்களின் சில உணவு விடுதிகளில் உள்ளன. இந்த நடைமுறை மலேசியா முழுவதும் வரவேண்டும். உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பண்பு மலேசியர்களிடத்தில் இருக்கவேண்டும்”  என்று சுப்பாராவ் கூறினார்.


என்னிடம் சுப்பாராவ் கூறிய மற்றொரு விஷயம் உண்மையில் சிந்திக்கக்கூடியதே. அவர் சுட்டிக்காட்டியது  இந்திய சினிமாவை. அதாவது இந்திய சினிமாவில் மட்டும்தான் உணவைக் காலால் எட்டி உதைக்கிற காட்சி, சந்தையில்  சண்டையிட்டு உணவுகள் நாசமாகும் காட்சியெல்லாம் வைக்கப்படுகிறது. மற்ற நாட்டு சினிமாவில் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது அரிது. உணவு ஒரு கேளிக்கைப் பொருளல்ல  என்று  சுப்பாராவ் கூறினார்.  சிந்தித்துப் பார்த்தால்  அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.

நமது நாட்டில் நமக்கு உணவு மிக எளிமையாகக் கிடைக்கிறது. பசிக்கிறது என்று சொன்னால், யாராக இருந்தாலும் உணவு வாங்கிக் கொடுக்க இங்கு தயங்குவதில்லை.  பிச்சைக்காரர்கள் கூட இங்கு பசியால் வாடுவதில்லை.  இந்நிலையில்  உணவு பிடிக்கவில்லை என்றும், ருசியாக இல்லை என்றும் நாம் சர்வசாதாரணமாக உணவைத் தூக்கியெறிகிறோம்.  பிடிக்காத உணவை ஏன் உண்ண வேண்டும் என்று சட்டம் பேசுகிறோம்.  உணவை வீசும்  அந்த நேரத்தில் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் பட்டினிச் சாவு நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாவின் ருசிக்குப் பழக்கப்பட்ட நாம், பசிக்கு ஒரு பருக்கை சோறு இல்லாதவர்களை நினைத்துப் பார்க்கத் தவறுகிறோம். இதனால் என்ன வந்துவிடப்போகிறது என்று இறுமாப்புக் கொள்கிறோம்.


 என்னுடைய கணினி கோப்பில் சிலவருடங்களாக இரு ஒரு புகைப்படம் உள்ளது. உடல் ஒட்டிய நிலையிலும், ரத்தம் சுண்டிய நிலையிலும் இருக்கும் ஒரு சோமாலியா நாட்டைச் சேர்ந்த தாய், அதைவிடவும் மோசமான நிலையில் இருக்கும் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவார். அவரின் மார்பிலிருந்து காற்றுக்கூட வெளிப்படுமா என்று தெரியாத நிலையில் குழந்தை பால் அருந்தும்.கந்தக் காட்சி மனித உளவியலை ஒரு முறை அசைத்துப் பார்க்கக்கூடியது. அந்தப் புகைப்படத்தைக் கண நேரம்கூட பார்ப்பதற்கு திராணியற்றுப் போவேன் நான். அந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் உணவு குறித்த ஆர்வம் அருகதையற்றுப் பறந்தோடும் நிலை எனக்கு ஏற்படும். இந்தப் புகைப்படம் என் சேமிக்கு வந்த காலத்திலிருந்து இன்று வரை தினம் ஒரு வேளை சாப்பட்டைக் குறைத்துக்கொண்டேன்.  அதோடு வயிறு நிறைய என்றும் சாப்பிடுவதில்லை என்ற கொள்கையையும் வைத்திருக்கிறேன். இவை எனக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்  தானே என்று  நீங்கள் கூறலாம்.  நீங்கள் அப்படி நினைத்துக்கொள்வதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.


வெள்ளி, 24 அக்டோபர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு ...1


துடைக்கப்படாத இரத்தக் கறைகள்


 தொடர்ந்து நான் என் நினைவுகளையும் அதன் வசப்படாமல் ஒளிந்திருக்கும் நடந்து முடிந்தசம்பவங்களையும் பதிவு செய்வதால் எழுதிக்கொண்டே இருக்கும் சாத்தியம் கிடைத்திருக்கிறது. எழுத்து சொல்லும் அளவுக்கு பேச்சு சொல்வதில்லை. என் நினைவுகளை கிண்டிக் கொண்டே இருப்பதால் இதுவரை மறந்திருந்த நினைவுகள் கூட ஒரு சுமையானநீரூற்று போலபொங்கிப் பெருகஆரம்பித்துவிட்டன. தொந்தரவு செய்யும் நினைவுகளை பதிய பதிய சுமை குறைந்தப்பாடில்லை. பேனாவை விரலின் இருக்கையில் அமர்த்தும் போதெல்லாம் சுமை இரட்டிப்பாகி விடுகிறது. குறைந்த பட்சம் மனதின் டைரியை புரட்டுகிறேன் என்ற திருப்தியோடுதான் சிந்திக்கவும் எழுதவும் வேண்டியுள்ளது.

சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்றொரு பொதுமொழி வழக்கில் உண்டு. அப்படியென்றால் ஒரு பெண்ணுக்கு சம்பாத்தியம் என்பது என்ன? அவளின் சம்பாத்தியம் எந்த லட்சணத்துக்கு வித்திட்டு இருக்கிறது? அழகுசாதன பொருட்களுக்கு உடை, காலணி, நகைகளுக்கு மட்டும் தான் ஒரு பெண்ணின் சம்பாத்தியம் செலவழிகிறதா? அதனால் அவளுக்கு மட்டும்தான் லாபமா?ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை. ஒட்டி பிறந்த இரட்டையர் ஆயினும் இருவரும் ஒருவர் இல்லை. பெண்களும் அவ்வாரே.அவர்களின் சம்பாத்தியமும் அப்படியே.

முப்பது வயதுக்குள்ளான எனது உழைப்பை மூன்று பாகமாகப் பிரிக்கலாம்.அப்பாவின் இறப்புக்கு முன், இறப்புக்கு பின் மற்றும் திருமணத்துக்குப் பின் என பிரிகிறது அந்த மூன்று பாகமும். மூன்று பாகத்துக்குள்ளும் நான் மாறி மாறி செய்த வெவ்வேறு பணிகளுக்குள் வெவ்வேறு வகையான வாழ்வும் ஒளிந்துக்கொண்டு இருக்கின்றன.

ஒவ்வோறு பணிக்கு பின்னாலும் சில சுவாரஷ்மான மனிதர்களும் சுவாரஷ்யமான சம்பவங்களும் இருக்கின்றன. அதே வேளையில் மனதை நோகடித்த சம்பவங்களும் உழைப்பை சுரண்டிய முதலாளித்துவமும் இருக்கவும் செய்தன. சில பணிகளை விரும்பி செய்தேன்.சில பணிகளை பார்த்த மாத்திரமே நமக்கு சரிவராது என திரும்பி வந்திருக்கிறேன். சில பணிகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது. சில அநியாயத்துக்கு கொள்ளையடிக்கப்பட்டது. என் பதிவில் காலப்பிழைகள் இருக்கலாம்.எந்த நாளில் எந்த வருடத்தில் எனது எத்தனையாவது வயதில் என்று சொல்வதில் குழப்பமடைகிறேன். ஆனால் காட்சிப்பிழை இருக்காது.கடந்து வந்த பாதையில் தடங்கள் அப்படியே இருக்கின்றன. அதன் பசுமையோடும் ரணங்களோடும். அதில் மீண்டும் ஒரு தரம் சென்று பயணித்து வருவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

PMR தேர்வுக்குப் பிறகு, பகுதி நேரமாக என் தோழிகள் சிலர் அங்காடிக் கடைகளில் வேலை செய்துக் கொண்டிருந்தனர். எனக்கும் அவர்களோடு சேர்த்து வேலை செய்ய ஆர்வமாக இருந்தது. குறைந்தப்பட்சம் என் பள்ளி படிப்புக்கு, பள்ளி பேருந்துக்கு, புத்தகங்கள் வாங்குவதற்கு ,அடிப்படை செலவுக்காவது அப்பாவுக்கு உதவியாக இருக்கும் என்றெண்ணியிருந்தேன். ஆனால் பாதுகாப்பு கருதியோ,பாசத்தினாலோ இல்லை என் மேல் நம்பிக்கை இல்லாமலோ அப்பா என்னை அனுமதிக்கவில்லை. ஏன் என்ற காரணத்தை தெரியபடுத்தாமலேயே இறந்தும் விட்டார். பணத்தின் ருசியை கண்டுவிட்டால் படிப்பில் நாட்டம் செல்லாது என்ற குற்றசாட்டை மட்டும் அவ்வப்போது சுமத்துவது உண்டு. காலத்தின் கட்டாயம் அப்பாவை சம்மதிக்க வைத்தது. அப்பாவின் முடிவில் மாற்றத்தை காண்பது அத்தனை சுலபமல்ல. கடவுளே வந்து சொன்னாலும் யோசிப்பவர் அவரின் அண்ணன் சொன்னால் யோசிக்கவே மாட்டார். கோயில் மாடுபோலதலையை ஆட்டி விடுவார்.

பெரியப்பா பேசுவதையும் அப்பா வாயை மூடிக் கொண்டு கேட்பதையும் இப்போது கற்பனையில் நினைத்துப்பார்த்தால் 'வானத்தைப் போல' படம் பார்பதைப் போல இருக்கும். எங்களை அடக்க நினைக்கும் அப்பா, பெரியப்பா முன்னாடி அடங்கி, ஒடுங்கி இருப்பார். அப்பாவிடம் சாதாரணமாக கதைப்பதற்கு யோசிக்கும் நாங்கள் பெரியப்பாவை கட்டிப்பிடித்துக் கொள்வோம். என் தம்பி தங்கைகளும் பெரியப்பாவிடம் நெருக்கமாக இருந்தார்கள். வீட்டிற்கு வரும் பெரியப்பாவிடம் நாங்கள் நிறைய பேசுவோம். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் பெரியப்பாவின் மகள்கள் இருவரும் பகுதி நேரம் வேலைக்கு போவதாக சொன்னார். நானும் பகுதி நேர வேலை செய்ய விருப்பம் கொள்கிறேன், அப்பா அனுமதிக்கவே இல்லை என்று நாசுக்காக சொன்னேன்.  வேலைக்கு போவதால் படிப்பில் கோட்டை விட மாட்டியே என்று பெரியப்பா கேட்டார். கவனமுடன் இருப்பேன் என்று உறுதிக் கூறினேன். 'எங்கே வேலைக்கு போகப் போகிறாய்?' என்றார். அங்காடி கடைக்கு என்றேன். அங்கேயெல்லாம் வேண்டாம் சரிவராது என்றார். இவர்கள் எல்லாம் கூண்டோடு கைலாசம் போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று மனதில் கூறிக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து பெரியப்பா மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பா வழக்கம் போல 'வானத்தைப் போல' படம்  ஓட்டினார். இதுபோல சமயங்களிள்தான் நானும் என் உடன்பிறப்புகளும் கண்மொழியிலும் கைமொழியிலும் ஜாடையில் பேசிக் கொள்வோம். பிறகு சிரித்துக் கொள்வோம்.
அன்று பெரியப்பா எனக்கு ஒரு பகுதி நேர வேலையோடு வந்திருந்தார். என் வீட்டிற்கு பக்கத்து சாலையோரம் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு தாதி வேலைக்கு பேசிவிட்டதாகவும் அவசரமாக அங்கே தாதி தேவைப்படுவதால் மறுநாளே வேலையில் சேர்ந்து விடுமாறு பெரியப்பா சொன்னார். எனக்கு ஆச்சரியம். நான் ஒரு நான்காம் படிவ மாணவி.17 வயது பெண். எப்படி தாதியாக முடியும்? தாதிக்கு பயிற்சி வேண்டாமா? அதற்கான கல்வி வேண்டாமா? மாணவர்கள் எல்லாம் தாதியாக முடியுமா? பரவாயில்லையே! நான் அந்த நிமிடமே கனவுக் காண தொடங்கி விட்டேன். வெள்ளை உடை ,தலையில் வெள்ளை தொப்பி. ஒரு படத்தில் சுகாஷினி தாதியாக வருவார். கனிவாக பேசுவார். இந்த உடை அணிந்து விட்டால் தனக்கு கோபமே வராது என்பார். அவரின் தாக்கம் என்னுள் குடியேறிகொண்டது. நான் part time nurse என்று சொல்லிப்பார்த்துக் கொண்டேன். எனக்கே பெருமையாக இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. அவரின் முகமே சொன்னது. பிள்ளையோட படிப்பு என்றார்? பிள்ளை காட்டு வேலைக்கு போகவில்லை. கொளரவமான வேலைக்கு போகிறாள். பிள்ளைகளுக்கு பணத்தின் அருமையையும் உழைப்பை பற்றியும் சொல்லிக் கொடுக்கணும். ஒவ்வொரு காசின் மதிப்பையும் உணர்த்தும் போது வீண்செலவு செய்யவதற்கு யோசிப்பார்கள். அப்பாவின் முகம் அப்படியே இருந்தது. உண்மைதான் நீங்க சொல்கிறது! என்பதைப் போல தலையை மட்டும் ஆட்டினார்.

பெரியப்பா தந்திரக்காரர். யார்யாரை எப்படி பராமரிப்பது என்பது அவருக்கு தெரியும். நம்ம செய்யும் தொழிலையே நம்ப பிள்ளைகளும் செய்யக் கூடாது. யாருக்குத் தெரியும். எதிர்காலத்தில யோகிக்கும் இந்த வேலையே அரசாங்கத்துல கிடைக்கலாம். இப்பவே பழகட்டும். அனுபவம் இருந்தால் இன்னும் வேலை சுலபமாக கிடைக்கும் என்றதும் என் அப்பாவின் முகம் மலர்ந்து; நீங்கள் சொல்வதுதான் சரி என்றார். நாளைக்கே வேலைக்கு போகட்டும். பக்கத்தில் தானே. நடந்து போனால் கூட ஐந்து நிமிடத்தில் கிளினிக் போய் விடலாம். பக்கத்திலேயே இருப்பதால் அவ்வப்போது போய் பார்த்தும் கொள்ளலாம் என்று கூறி ஆறுதல் அடைந்து கொண்டார்.பெரியப்பா என்னைப் பார்த்து நெற்றியை உயர்த்தினார். நான் தலையை ஆட்டி நன்றியை தெரிவித்தேன்.

அப்பாவும் பெரியப்பாவும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள். ஆனால் அப்பாவை விட பெரியப்பாவுக்கு இன்னும் கோபம் அதிகமாக வரும். தப்போ, சரியோ அவருக்கு சினமூட்டும் காரியம் செய்தால் கர்ஜனை எல்லாம் கிடையாது.வேட்டைதான். அடிக்கிர அடியில் ரத்தம் வந்து விடும். யார் வீட்டு பிள்ளை என்றெல்லாம் பார்க்கமாட்டார். அவர் ஒரு மினி நாட்டாமை போல் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவரும் கூட. பெரியப்பாவிடம் எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. விடைப்பெறும் போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பார். அப்படி என்றால் என் கவனம் உன் மேல் உண்டு. எச்சரிக்கையாக இரு என்று அர்த்தம். பெரியப்பா அதை என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். அப்பாவும் இதைப்போலவே மூன்று வார்த்தை சொல்வார். பொய், பித்தலாட்டம், தில்லு முல்லு எனக்கு பிடிக்காது என்பார். அப்படி என்றால் உன் பாட்சா என்னிடம் பலிக்காது என்று அர்த்தம். அப்பா என்னை அந்த தனியார் மருத்தவமனையில் இறங்கிவிட்டு இதைத்தான் சொன்னார். உள்ளே இழுத்த மூச்சை வெளியே விட்டுவிட்டு மருத்தவமனையினுள் நுழைந்தேன். சிறிய klinik தான். பெயர் பதியும் இடத்தில் என் வயது ஒத்த பெண் ஒருத்தி இருந்தாள். நான் பகுதி நேர வேலைக்கு வந்திருப்பதாக சொன்னேன். அவள் மருத்தவரிடம் என்னை அறிமுகம் படுத்தி வைத்தார். அவர் ஒரு சிடு மூஞ்சி மருத்துவர்.

“பேரு என்ன” என்றார்.
“யோகி” என்றேன்.
“ஒழுங்கா வேலை கத்துக்கோ” என்றார்.
அவ்வளவுதான் என்னுடைய நேர்முகத் தேர்வு.

மருத்துவரின் மனைவிதான் எனக்கு என்னென்ன வேலை, என்று சொன்னார்.
“மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பதுமணிவரை வரை வேலை. ஞாயிறுக்கிழமை மட்டும் காலையில் வந்து கிளினிக்கை திறக்க வேண்டும். மாதம் 250 வெள்ளி சம்பளம். மற்ற வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்” என்றார் மருத்துவரின் மனைவி. வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் மட்டும் பயணித்துக் கொண்டிருந்த எனக்கு புதிய ஆட்களின் அறிமுகமும் சந்திப்பும் ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் நான் நினைத்தப்படி தாதி உடை இல்லை.வீட்டு உடைதான் என்றாலும் முழுக்கால் சிலுவாரும்,சட்டையும் அணிய வேண்டும். அது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. நோயின் தீர்வுக்கான ஒரு தொழிற்சாலையாக அது எனக்கு தெரிந்தது. அதிகமான நோயாளியாக அங்கே சீனர்கள்தான் வந்தார்கள். வயிற்று வலி, காய்ச்சல், சளி, இருமல், வாந்தி போன்ற சொற்களை மட்டும் சீனத்தில் தெரிந்து வைத்துக் கொண்டு டாக்டர் நோயளிகளை அசத்தி விடுவார். சீனர்கள் மலாய் மொழியில் கொஞ்சம் மட்டம் என்பதால் சீனம் தெரிந்த மருத்துவரிடம் எளிமையாக வைத்தியம் செய்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு பரம்பரையையே அந்த கிளினிக்கில் பதிவர்.

டாக்டாரின் கிறுக்கு எழுத்து ஆரம்பத்தில் எனக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது. டாக்டாரோ இரண்டு நாட்களில் அனைத்தையும் கற்றுக் கொள்ள எதிர்பாத்தார். அதில் நான் தோல்வி அடைந்த போது திட்ட ஆரம்பித்தார். பிறகுதான் தெரிந்தது அவர் என்னை தெலுங்கில் ஏசுகிறார் என்று. சில சமயம் கெட்ட கெட்ட வார்த்தைகளும் தெலுங்கில் தூள் பறக்கும். நான் ஒரு வாரத்தில் அனைத்தையும் கற்று வசப்பாடலிருந்து காப்பாற்றப்பட்டேன். Termo meter நாக்கு அடியில் வைத்து, 1 நிமிடம் சென்று பார்க்கும் போது 120 degree அல்லது அதற்கு குறைவாக இருந்தால் காய்ச்சல் இல்லை. அதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் காய்ச்சல் என தெரிவு செய்யப்படும். மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அக்குலில் Termo meter-ரை வைத்து காய்ச்சல் கணக்கிட வேண்டும்.

நோயாளிகள் டாக்டரை மதிக்கும் அளவுக்கு தாதியர்களை மதித்தார்கள். எனக்கு அது பிடித்திருந்தது. விஷமமாக பேசும் ஆண்களும், காய்ச்சலை அளக்கும் போது கையை பிடிக்கும் பேர்வழிகளும் கூட கிளினிக்கிற்கு வந்தார்கள். திரைப்படத்தில் வந்த சுகாசினிப் போல என்னால் இருக்க முடியவில்லை. முகத்தில் எத்தனை கோபத்தை காட்ட முடியுமோ காண்பித்தேன். வேண்டும் என்றே அதிக நேரம் காத்திருக்க வைத்து மருந்து கொடுத்தேன். ஒரு தாதிக்கான இலக்கணத்தோடு என்னால் நடந்து கொள்ள முடியவில்லை. காலையில் கிளினிக்கை திறந்து முன் வாசலை கழுவி, கிளினிக்கை துடைத்து, கழிவறையை கழுவி, முடிந்த மருந்துகளை நிரப்பி, துண்டுகளை துவைத்து எனநான் செய்யும் வேலைக்கு குறைந்த சம்பளம் வாங்குவதாக நண்பர்கள் கூறினார்கள். ஆனால் நான் அதற்காக எல்லாம் வேலையை விடவில்லை.

அதற்கு வேறு காரணங்கள் இருந்தன. முதலாவதாக டாக்டர் வீடு அருகிலேயே இருப்பதால் அவர் அடிக்கடி வீட்டுக்குப் போய் விடுவார். நோயாளிகள் வரும் போது டாக்டரை தொலைப்பேசியில் அழைக்க வேண்டும். அனைத்து நோயாளிகளும் பொறுமையாக இருக்கமாட்டார்கள். சிலர் சத்தம் போடுவார்கள், ஏசுவார்கள். குறிப்பாக பெண்கள் காத்திருப்பதை விருப்புவதே இல்லை. மருத்துவர்கள் கடவுளாக பாவிக்க பக்தர்கள் பூசாரிகளை பந்தாடுகிறார்கள். கிளினிக் தாதிகளுக்கு நோயாளிகள் பணம் கொடுக்கும் முதலாளிகள் என்ற படியால் அனைத்தையும் முகத்துக்கு பின்னால் மறைக்க வேண்டி இருந்தது. அத்தனை இலகுவாக என்னால் நடிக்க முடியவில்லை.

இரண்டாவதாக, கிளினிக்கில் இருமல் மருந்தைப் போல ஒன்றும் விற்கப்பட்டது. அதை முன்னால் போதைப் பித்தர்கள் வாங்கி போவார்கள். ஆனால் அதை விற்கும் போது காகிதத்தில் சுற்றி கைமாறுவதை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும். அந்த மருந்தை அறையினுள் ஒளித்து தான் வைத்திருந்தார்கள். சந்தேகம் வலுப்பெற சகத்தோழியிடம் காரணத்தை கேட்டேன். அது தடைசெய்யப்பட்ட மருந்து என்றாள். சில சமயம் காவல் நிலையத்தில் இருந்தும் சோதனைகள் நடந்தது. அது என்னை அச்சத்தில் ஆழ்த்தியது. காவல் அதிகாரியை காணும் போது ரத்தம் உறைவது போலும், மயக்கம் வருவது போலும் ஒரு பிரம்மை இருந்தது. இந்த மருத்துவமனையில் வேலை செய்வதற்காக உன்னை கைது செய்கிறேன் என் ஒரு அதிகாரி கையில் விளங்கு மாட்டுவதைப் போல் கனவு எல்லாம் வந்த போனது. நோயாளியாக வரும் காவல் அதிகாரியைக் கண்டால் கூட உளர ஆரம்பித்து விட்டேன்.

ஆனால், மூன்றாவது காரணம் நான் வேலையை நிறுத்துவதற்கு போதிய அதிர்ச்சியைக் கொடுத்தது. பானை செய்யும் தொழிற்சாலையின் மருத்துவ உரிமையை எங்கள் கிளினிக் தான் பெற்றிருந்தது. தொழிலாளர்கள் இலவசமாக சிகிச்சை பெறுவார்கள். ஒரு முறை ரத்த வெள்ளத்துடன் ஒரு தொழிலாளரை துண்டில் சுற்றி கூட்டி வந்தார்கள். கிளினிக் அமலி துமளியாக இருந்தது. “டாக்டர் எங்கே” சீக்கிரம் பார்க்க சொல்லுங்கள்” என்று ஒரே படபடக்கும் குரல்கள். ரத்தம் துண்டை நனைத்து கீழே சொட்டியது. அடிப்பட்டவரின் நிலை மோசமாக இருந்தது. தெப்பமாக ரத்தத்தில் நனைந்து உயிருக்கு போராடும் மனிதரை அப்போது தான் பார்த்தேன். என் பேச்சு உடைந்து விழுந்தது.நான் பதற்றம் அடைந்த நிலையில் இருந்தேன். அவசரமாக டாக்டரின் அறையை திறந்து, 'டாக்டர் அவசரம்' என்றேன். என்னை அலட்சியமாக பார்த்து, ' போய் காப்பாத்து' என்றார். என் பதற்றம் குழப்பமாக மாற அப்படியே நின்றேன். டாக்டர் மிகவும் நிதானமாக போலிசில் புகார் கொடுத்தாச்சா? என்று அவர்களை பார்த்து கேட்டார். பிறகு இந்த கேசையெல்லாம் இங்கே பார்க்க வசதி இல்லையென கூறியவர், பெரிய மருத்துவமனைக்கு கொண்டு போக சொல்லிவிட்டார்.
ஒரு முதலுதவி கூடசெய்யாமல், அடிப்பட்டவரைப் பார்க்கவும் விரும்பாமல் டாக்டர் நிதானமாக என்னைப் பார்த்து கீழே கொட்டி இருந்த ரத்தத்தை கழுவி விட சொன்னார். வந்தவர்கள் விட்டு சென்ற மரண பயமும், கூப்பாடும் என்னையே சுற்றி சுற்றி வந்தது. நெஞ்சு வலித்தது. அழுதுக் கொண்டே ரத்தத்தை துடைத்தேன். நாசியில் ஏறிய ரத்த வாடை, என் அப்பா, தம்பி, என் உறவுகளின் இரத்தவாடையாய் இராட்சத உருவம் எடுத்து பயம் காட்டியது. கண்களை துடைத்துக் கொண்டேன். கைகளை கழுவிக் கொண்டேன். என்னை அறியாமலே Clinic Nurse Yogi என்று என் பெயர் பொறிக்கப் பட்ட பெயர் அட்டையை சட்டையில் இருந்து கழற்றி கையில் வைத்திருந்தேன். அதை அணிந்து கொள்ள தைரியம் வரவில்லை. கண்களுக்குத் தெரியாத மனித உயிர்களின் இரத்தச்சுவடுகள் ஏக்கமாக அதிலிருந்து வெளிப்பட்டு ஒத்தக் குரலாய் என்னைக் காப்பாற்ற அழைப்பது போல இருந்தது. எந்தமுறையான பயிற்சியும் இல்லாத நான் யாரை எப்படி காப்பாற்றுவதென காதுகளை இறுக்க மூடிக்கொண்டேன்.
அப்பாவை பார்க்கவேண்டும் போல இருந்தது. கவுண்டரில் பெயர் அட்டையை வைத்து விட்டு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன். நான் வெளியேறியதும் அந்தக் கிளினிக் பரிதாபமானவர்களின் இரத்தங்களால் ஒரு கடலலையின் வேகத்தில் மோதித்தள்ளப்பட்டதாகத் திரும்பிப்பார்காமலேயே உணரமுடிந்தது.

-ஜனவரி 2011
(நன்றி வல்லினம் அகப்பக்கம்)

வியாழன், 23 அக்டோபர், 2014

என்னைப் பற்றி

நான் என்ற யோகி இப்படியானவள்...


நான் யோகி. மலேசியாவின் பேராக் மாநிலத்திலுள்ள  சின்ன கிராமமான தெலுக் இந்தானைச் சேர்ந்த பெண். என் எழுத்து பேசும் அளவுக்கு நான் பேசுவதில்லை. சிறு வயதில் பெற்ற என் அனுபவங்களையும், தற்போது பெற்றுவரும் அனுபவங்களையும், எது எது என்னை தொந்தரவு செய்கிறதோ அதை இலக்கியத்தின் ஊடே  எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன். என மனதின் டைரியை புரட்டும் போதெல்லாம் ஏதோ ஒன்று என்னை பாதித்திருப்பதை நான் உணர்கிறேன். நான் கம்பத்தில் வாழ்ந்த பெண் என்பதால், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும், அடுக்கு முறைகளையும் சந்தித்திருக்கிறேன். சுகாதாரம் குறித்துக்கூட விழிப்புணர்வு இல்லாத கம்பத்து வாசிகள் இன்றும் என் கம்பத்தில் இருக்கிறார்கள். என் வீட்டிலும் இருக்கிறார்கள். அவர்களிடத்திலிருந்து நான் மாறுபட்டு வெளிவருவதற்கு ஏகப்பட்ட சவால்களை சந்தித்திருக்கிறேன். அவர்களிடத்தின் என்னால் வாழ முடியாமலும், பிரிய முடியாமலும், அவர்களை தாண்டி வர முடியாமலும் நான் கொள்ளும் அவஸ்தைகளும் வேதனைகளும் என்னால் எழுத்தில் மட்டுமே சொல்ல சாத்தியப்படுகிறது. ஒரு கட்டத்தில் நான் எனக்கான பாதையை வகுத்துக்கொண்ட போதும், விவாதத்திற்கு தயாரான போதும் என்னைச் சார்ந்தவர்களால் என்னை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. எனது வாழ்கையை நானே வாழ்ந்து கொள்கிறேன். எனது பாதையில் நானே நடந்து செல்கிறேன் என்ற எனது வரி என்னை சார்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் தெளிவாகிக்கொண்டேன்.

எனது விருப்பங்கள்

பாடல், இசை, ஓவியம், இயற்கை, சினிமா, தனிமை, காடு, சுற்றுலா, வாசிப்பு, புகைப்படம் எடுத்தல், தேடல். இயற்கையோடு உறவாடுவதும் வரலாற்றை தேடுவதும் என் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக இருக்கிறது. பயணத்தில் நான் காணும் ஒவ்வொரு காட்சியும் படிமங்களாக பதிவு செய்ய விரும்புகிறேன். படிமங்கள் காலத்தை தாண்டியும் சாட்சி கூறுபவை எனவும் நம்புகிறேன்.

பிடிக்காதவை

யார் காலிலும் விழுவது பிடிக்காது. பிடிக்காததை ஏற்றுக்கொள்ள சொல்வது பிடிக்காது. சில சமையம் சமரசம் பிடிக்காது. வன்முறை சுத்தமாக பிடிக்காது. காரணமே இல்லாமல் தோற்றுப்போவதும் பிடிக்காது. ஆனால், எப்போதாவது  சொந்த பந்தம் ஒன்று கூடும்போது எனது கொள்கைகளை சற்று தளர்த்திக்கொள்வதில் நான் குறைந்துவிட மாட்டேன்.  (அதனால், குடும்பத்தார் சந்தோஷம் அடைவார்கள் என்றால்)

காதலி 

நான் துன்பம் கொள்ளும் வேளையிலும், மனக்குழப்பம் அடையும் வேளையிலும் பாரதி பாடல்களை கேட்கிறேன். பாரதி என் மனதுக்கு நெருக்கமானவன். ஏன்? எப்படி ? என்றெல்லாம் கேள்வி கேட்ககூடாது. சில கேள்விகளுக்கு என்னிடத்தில் பதிலை பெறமுடியாது. பாரதி எழுதிய கண்ணம்மா பாடல்களில், அந்த கண்ணம்மாவாக நான் பல நாள்கள் வாழ்ந்திருக்கிறேன். குழப்ப வேளையில் அவனின் வரிகள் கொடுக்கும் ஆதரவை இதுவரை வேறு எதிலும் நான் பெற்றதில்லை.  அவனின் வரிகள் எனக்காக எழுதப்பட்டவையாக நான் நம்புகிறேன். நான் அவனின் காதலி என்பதை அவனிடத்தில் தெரியபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நான் அவனின் காதலி இல்லை என்று சொல்லும் அதிகாரமும் எவரிடத்திலும் இல்லை. அது எனது மனதின் ரகசியம்...

கொள்கை

நான் மதவாதி அல்ல. இனவாதியும் அல்ல. மனிதம் மட்டுமே எனக்கு பெரிது. கடவுள் நம்பிக்கை அல்ல. ஆனால், கோயிலுக்கு போவேன். பிரசாதம் வாங்குவேன். கோயில் சிலையையும் பத்தர்களையும் வேடிக்கை பார்ப்பேன். அது எனது விருப்பம்.
பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். மகள், மனைவி, தோழி, உட்பட பணி செய்யும் இடம் வரைக்கும் அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நீ, வா, போ, டி போன்ற ஒறுமை எழுத்தில் அழைக்கும் ஆண்களை அந்த இடத்திலேயே உங்களுக்கு மரியாதை தெரியாதா என பல பேரிடம் கேட்டிருக்கிறேன். பெண்கள் ஆண்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை முழுதாக நம்புகிறேன். பெண்களுக்கு ரௌத்திரம் தெரிய வேண்டும்

 இதுவே நான் என்ற யோகி