வெள்ளி, 10 அக்டோபர், 2014

எனக்குத் தெரிந்த மழை

எனக்குத் தெரிந்த மழை

யோகி

 கடந்த சில நாட்களாகக் கடுமையான மழையும் கடுமையான வெயிலும் ஒரே நாளில் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. மழை மேகத்தின் உற்பத்தி என்பதைத தவிர எனக்கு வேரொன்றும் தெரியாது. மழைக்கு எப்போது தீவிர ரசிகையானேன் என்பதும் இன்று வரையிலும் நினைவில்லை. மழையை ரசித்த இதயத்துக்கு வெயிலை ரசிக்க ஏனோ தெரியவில்லை. இந்தப் பத்தியை இப்போது ஆக்கிரமிக்கப் போவதும் மழைதான்.

சின்ன வயதில் மழையைப் பார்த்து ஏங்கியது உண்டு. இரட்டை மாடி வாடகை வீடு எங்களுடையது. மழை ‘சோ’ என்று பெய்யத் தொடங்கும் போது படிகளில் நின்று பலகையின் துவாரங்களின் வழியாக மழையைப் பார்ப்பதும், மாடியில் நின்று ஜன்னல் வழியாக மழையைப் பார்ப்பதும், வாசலில் நின்று நகரத்தில் வழிந்து ஊற்றும் வரிவரியான மழையில் கைகளை நீட்டி ஆட்டி மழைநீரை பிடிப்பதுமாக‌அப்பாவுக்குத் தெரியாமலேயே மழையை எனக்கு பழக்கப் படுத்தி இருந்தேன். வீட்டில் யாரையுமே மழையில் விளையாட அப்பா அனுமதித்ததே இல்லை.

அப்பா சொல்லி இருக்கிறார். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும். சளிபிடிக்கும். இருமல் வரும். பள்ளிக்கு மட்டம் போட வேண்டி வரும். பிறகு படிப்பு கெடும். பரீட்சையில் மதிப்பெண்கள் கிடைக்காது. இப்படியொரு தூரநோக்கு சிந்தனையை பலமுறை வாசித்திருக்கிறார். மீறி மழையில் நனைவதைப் பார்த்தால் தோலை உரித்துவிடுவேன் என்றிருக்கிறார். அப்பாவிடம் ஓர் இடைவார் உண்டு. பழைய இடைவார் அது. முகர்ந்தால் நர நாற்றம் வரும். குமட்டும். அங்கங்கே வெளுத்தும் சற்று பிய்ந்தும் இருந்தாலும் அதை உபயோகப்படுத்தாமல் அப்பா இருந்ததே இல்லை. தோளினால் ஆன ஒரிஜின‌ல் இடைவார் என்றும் அதிக விலை என்றும் பலமுறை பல பேரிடம் அப்பா சொல்லி கேட்டதுண்டு.

ஏதோ ஒரு குற்றத்திற்காக இரு கையையும் நீட்டச் சொல்லி அந்த இடைவாரால் அடித்திருக்கிறார். அந்த வலி இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. அதில் அடி வாங்கினால் நிச்சயமாகத் தோல் உரிந்துவிடும். மழையில் நனைவதற்கு இத்தனை தடையா? மழை பெய்தால் என் வீட்டின் குசுனி பகுதியில் ஓட்டையான தகரத்தின் வழி சொட்டு சொட்டாக தண்ணீர் வீட்டுக்குள் வரும். ஓர் ஓட்டை இரண்டு ஓட்டை அல்ல. அது இருக்கும் பத்து ஓட்டைக்கு மேல். அம்மா ஓட்டைகளுக்குத் தகுந்தாற்போல் பாத்திரங்களை வைப்பார். பானை, குவளை, குண்டு மங்கு என பாத்திரங்கள் மழை நீரை ஏந்திக் கொண்டிருக்கும். எனக்கு பிடித்த பாத்திரத்தைத் தேர்வு செய்து அதன் அருகில் இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து படுத்தபடி எட்டிப்பார்ப்பதில் அத்தனை பிரியம் எனக்கு. யாரும் கவனிக்காதபோது பாத்திரத்தை நகர்த்தி மழை தண்ணீர் தரையில் பட்டு தெரிப்பதைப் பார்க்கவும் ரொம்ப பிடிக்கும். பல தடவை பாத்திரத்துக்குப் பதில் என் உச்சந்தலையை மழைக்காக அர்ப்பணித்ததும் உண்டு.
மழைக்குப் பெரிய அணை கட்டியிருந்த அப்பாவுடன் குடும்பமே நனைந்தோம் என்றால் நம்பமுடிகிறதா?

என் அப்பா செம்பனை மரத்தின் குலை வெட்டும் தொழிலாளி. பொதுவாகவே பழம்வெட்டும் வேலை என்பார்கள். செம்பனை மரத்தில் பழம் சிவந்திருந்தால் அறுப்பதற்குத் தயார் என்று அர்த்தம். அதைத்தான் குலைவெட்டு என்பார்கள். பழுக்காதக் காய் கருமை நிறத்தில் இருக்கும். அதிகம் பழுத்த பழம் உதிரியாக தரையில் உதிர்ந்து விடும். செம்பனை மரத்தை நடுவதிலும் ஒரு ஒழுங்கு இருந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரம் வரிசைபட்டிருக்கும். உதாரணத்திற்கு இடது புறத்தில் ஒரு வரிசையில் 8 மரங்கள் என்றால் வலது புறத்திலும் 8 மரங்கள்தான் நடுவார்கள். 16 மரங்கள் கொண்ட அந்த இடத்தை ஒரு நரை என்பார்கள். எண்க‌ள் விதத்தில் நரைக்குப் பெயர் உண்டு. முதல் நரைக்கும் இரண்டாவது நரைக்கும் நடுவில் ஐந்து அடி ஆழத்துக்கும் 5 அடி அகலத்துக்கும் ஒரு வரப்பு வெட்டியிருப்பார்கள். அதன் பயன்பாடு தெரியவில்லை. அப்பாவிடம் கேட்டதும் இல்லை.

இந்த‌த் தொழிலை அப்பா ப‌ல‌வ‌ருட‌ங்க‌ள் செய்து வ‌ந்த‌தால், மரத்தையும் மட்டையையும் சுற்றிப்பார்த்தே அறுவடை நாளையும் அவர் சொல்லி விடுவார். அப்பாவின் அண்ணன் தம்பியும் கூட இதே தொழில்தான் என்றாலும் அப்பாவைப் போல் பெரியப்பாவோ சிற்றப்பாவோ கை தேர்ந்தவர்கள் இல்லை. அப்பாவின் தொழில் சுத்தத்தைப் பார்த்த சில முதலாளிகள் தங்கள் செம்ப‌னை தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பை அப்பாவிடம் தந்தனர். ஏறக்குறைய 10 முதலாளிகளின் நிலம் அப்பாவின் கண்காணிப்புக்கு வந்தது. அப்பாவிடம் 6 தொழிலாளர்கள் வேலை செய்தனர். எங்களுக்கும் சொந்தமாக நான்கு ஏக்கரில் செம்பனை தோட்டம் இருந்தது. அந்த நிலத்தில் மட்டும் அப்பா யாரையும் வேலைக்கு அழைத்தது இல்லை.

வீட்டிற்கு 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த நிலத்தில் அப்பா, அம்மா, நான், தம்பி, தங்கை என வேலைக்குப் போவோம். அனைவரையும் Yamaha Sports மோட்டார் வண்டியில் மொத்தமாக ஏற்றிக் கொண்டும் பழம் வெட்டும் அலக்கையை தோளில் வைத்துக் கொண்டும் அம்மாவை குலைதள்ளும் வண்டியை பின்னோக்கி கையால் பிடிக்க சொல்லியும் நிலத்தை நோக்கிப் புறப்படுவார். சின்ன வண்டியில் குடும்பமே சவாரி செய்யும் அழகை எத்தனையோ பேர் வேடிக்கையாக பார்த்திருக்கிறார்கள். அப்பா பழம் வெட்டுவார். அம்மா வண்டி தள்ளுவார். நாங்கள் உதிரிக‌ளை சாக்கில் சேமிப்போம். காலை 8.00 மணிக்கு வேலைக்குப் போனால் மாலை 2.00 மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். இதற்கிடையில் சாப்பாட்டு நேரமும் உண்டு. வேலையைப் பற்றிய அவசியம் தெரியாத வயது அது. சொந்த‌நிலத்தில் வேலைக்குப் போவது எங்களுக்குப் பிடித்தமான விஷயம்தான். ஒரு நாள் இப்படி வேலைக்குப் போய்க்கொண்டிருக்கையில் கடுமையான மழை பிடித்து அப்பாவின் தலையில் பலமாக குட்டுவைக்க தொடங்கியது. நிலைமையைச் சமாளிக்க மோட்டாரை விரைவாக செலுத்தி நிலத்தை அடைந்துவிட்டார். கடுமையான மழையாலும் மோட்டாரின் வேகத்தாலும் மழை தண்ணீர் முகத்தில் அறைந்தது. அப்பா அம்மாவைத் தவிர நாங்கள் குதூகலமாக இருந்தோம்.

மழைக்கு ஒதுங்குவதற்காகவே நிலத்து பக்கத்தில் ஒரு கொட்டகை உண்டு. மழை நிற்கும் வரை அங்கே ஒதுங்கினோம். காற்று மழைச்சாரலை எங்கள் மேல் கொட்டிச் சென்றது. 'நேரம் காலம் தெரியாமல்...செ!’ என்று மழையைத் திட்டித் தீர்த்தார் அப்பா. மழை நின்ற பிறகு நிலத்தில் வேலை செய்ய ஆரம்பித்தோம். நிலம் சகதியாக இருந்தது. வரப்பு எங்கே என தேடும் அளவுக்கு தண்ணீர் பெருகி வரப்பு மூழ்கி இருந்தது. சில தடவை தெரிந்தும் சில தடவை தெரியாமலும் வரப்பில் இறங்கி ஆட்டம் போட்டது தீபாவளி குதூகலம் போல் இருந்தது. எனக்குத் தெரிந்து அதுதான் எங்களின் முதல் நீச்சல் குளம். கிட்ட தட்ட 6 மணிநேரம் குடும்பத்துடன் மழையில் ஆட்டம் போட்ட திருப்தி. திரும்பிய திசை எங்கும் மழை ஆக்கிரமித்த சுவடுகள்தான்.
மழையில் முக்குளித்து வந்த அனைவரும் வெந்நீரில் குளித்தார்கள். நான் மட்டும் பைப் தண்ணீரில் குளித்தேன். மழைநீரில் ஊறிப் போயிருந்த  உடம்பில் தண்ணீர் பட்டதும் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது. குளியல் அறையை விட்டு வெளியேறிய பிறகுதான் குளிரவே ஆரம்பித்தது. உதடு துடித்தது. கால்கள் உதறியது. உடல் சுருண்டுகொண்ட‌து. போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்தபோது மயக்கத்தில் செம்மையாகத் தூக்கமும் வந்தது. ஓரிரு தும்மலைத் தவிர அப்பா சொன்ன உபாதை ஒன்றுமே வரவில்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மழையில் நனைவேன். (அப்பா இல்லாத போதுதான்). ஆடுவேன். ஓடுவேன். குதிப்பேன். பாடுவேன். இரு கைகளிலும் மழை நீரைப் பிடித்து முகத்தைக் கழுவி கொள்வேன். இன்னும் அதிகமாக ஆட்டம் போட்டது பாட்டி வீட்டில்தான். முற்றத்தில் தாத்தாவால் உருவாக்கப்பட்ட ஊஞ்சலில் ஆடிக் கொண்டே மழையை ரசித்து நனைந்திருக்கிறேன். பாட்டி, "ஆம்பிளையா பொறக்க வேண்டியவ பொட்ட பிள்ளையா பொறந்துட்டா. பொம்பளப் பிள்ளையா நடத்துக்கோடி. பாக்குரவ காறி துப்பப் போறா" என்று ஒரேயடியாக அளப்பார். மழையின் சத்தம் என் காதை அடைத்து விடும். எல்லோருக்கும் பொதுவான மழைக்கு ஆண் என்ன? பெண் என்ன? மழையும் வெயிலும் சேர்ந்து வந்தால் இரண்டுக்கும் கல்யாணமாம். இரண்டில் எது ஆண்? எது பெண்?

அன்று அத்துணை காதலுடன் இருந்த மழை மீது இன்று நனைந்து ஆறு வருடங்கள் ஆகிறதென்றால் நம்புவீர்களா? நகரம் வாங்கிய சாபம் அப்படி. ஒரு ஐந்துமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் உறவினர் வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருந்தேன். மழைக்காக நான்கு மாடி இறங்கி மெனக்கெட முடியாது.வேலைக்குப் போகும் போது நனைய இயலாது. உடைகள் நனைந்தால் வேலை எப்படி செய்வது? வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதும் நனைய முடியாது. பேருந்தில் ஈர துணியுடன் நிற்பது பேருந்தை ஈரமாக்கி விடலாம். பலர் கண்களுக்குக் காட்சி பொருளாகவும் சிலர் பரிதாபமும் படலாம். பிழைப்புக்காக வந்த இடத்தில் இது அவசியம் இல்லாதது.
திருமணம் புரிந்து தனிக்குடித்தனம் வந்தேன். இரண்டாவது மாடியில் வேரொரு அடுக்குமாடி குடியிருப்பு. நானும் கணவரும் மட்டும்தான். மழை நேரத்தில் நனைய மனம் முந்தினாலும் முடியவில்லை. கழுத்தில் தாலியுடன் மழையில் நனைவது வீண் பலிக்கு ஆளாகலாம். திருமணம் ஆன பெண்களுக்கு அடக்கம் எனற பேரில் நிறைய ஒடுக்கு முறைகள் உண்டென்பதை முற்போக்குச் சிந்தனையாளினியாக இருந்தாலும் மறுக்க முடியவில்லை. பள்ளி பருவத்தில் சிறிய குடை ஒன்று புத்தகபையில் இருந்தாலும் ஒரு தடவையும் உபயோகித்தது இல்லை. இன்று வெயில் காலங்களிலும் மழை வந்துவிட்டால் என் கணவர் சிலசமயம் கொலைவெறியுடன் பார்க்கிறார். Astro உபயோகமற்று போய்விடுவதுதான் காரணம்.

நகர வாழ்க்கை எனக்கும் மழைக்கும் கொடுத்த‌க் கொடூரத்தை எத்தனை பேருக்கு விதித்திருக்கிறதோ தெரியவில்லை. கம்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு மழையோடு வாழ்ந்த கடந்த காலம் உண்டு. நகரத்திலோ கட்டிடங்களை தவிர்த்து வளர்ப்பு பிராணிக்குக் கூட மழையில் நனைய அனுமதி இல்லை.
இந்தப் பத்தியை முடிக்கும் நேரத்தில் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. தேநீர் குடித்துக்கொண்டிருக்கிறேன். குளிர் சட்டையை அணிந்துக் கொண்டு கதகதப்பில் தகிக்கிறேன். கண்களை மூடி தியானிக்கிறேன். மழை என்னை நனைத்துக் கொண்டிருக்கிறது.
(actober 2009)

நன்றி:

http://www.puhali.com/index/view?aid=305

http://vallinam.com.my/issue10/column2.html

2 கருத்துகள்:

 1. வரிகளுக்கு வரி
  மழைச் சாரலாய்
  குதுகூலமான கிராமத்தில்
  பால்ய நினைவுகள்
  நகரத்து வாழ்க்கையில்
  சிக்குண்டு கிடப்பதை
  அருமையாக அழகாய் எழுதியுள்ளீர்கள்
  வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 2. You are blessed by God! You are a Good storyteller! Please travel more! Write more!

  பதிலளிநீக்கு