வெள்ளி, 10 அக்டோபர், 2014

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள் 
-யோகி

எழுத்து பிறக்காத முன்பே வரைகலைகள் பிறந்திருக்கிறது என்பதை பண்டை காலத்துச் சான்றுகள் நினைவுப்படுத்துகின்றன. மிகவும் பழமை வாய்ந்த கலைகளில் ஓவியக் கலையும் ஒன்று எனவும் அது உயரியக்கலையாகவும் கூறப்படுகிறது.
ஒரு பார்வையாளினியாக மட்டுமே எனக்கும் ஓவியத்துக்கும் இருக்கும் தொடர்பை தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஏதோ விட்ட குறை தொட்ட குறை என்று சொல்லுவார்களே அதுபோல சிறு வயதிலிருந்தே வரைபவர்கள் உடனே என் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருப்பதை மறுப்பதற்கும் இல்லை.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். அதுபோல ஓவியக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. கை கொண்டு செய்யக்கூடிய எல்லா திறன்களும் ஓவியத்தின் ஒரு புள்ளியிலிருந்தே தொடங்குகின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் þÃñΧÁ  வேறுபடுத்தி பார்க்க கூடிய கலைதான்.
என் பெரியம்மா கோலம் வரைதலிலும் பின்னல் வேலையிலும் கைதேர்ந்தவர். வழக்கமாக போடும் புள்ளி கோலத்தில் நாட்டம் செலுத்தாதவர். அவர் போடும் கோலங்கள் ரங்கோலியை ஒத்து இருக்கும். ஆனால் ரங்கோலி அல்ல. மூன்று விரல்களை அரிசிமாவில் நனைத்து அவர் இழுக்கும் கோடுகள் அடிக்கோளில் அள‌வெடுத்து போடும் கோடுக‌ளை விட நேர்ந்தியாக இருக்கும். பிறகு இரண்டு விரல்களுக்கு மாறுவார். மண்த‌ரைவில் கிழிக்கும் வரைவுகளும் கோடுகளும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தும். கோலத்தின் இரு பக்கமோ அல்லது அடியிலோ அடர்த்தியான இலைகள் கொண்ட கொடியை வரைவார். மாவில் வர்ணங்களை கலந்து கோலத்துக்கு கலர் இடுவார். அத்தனையும் 15 முதல் 20 நிமிடம்தான். மின்னல் வேகத்தில் இயக்கும் அவரின் விரல்களை தினமும் வாசலை கழுவி ஒரு கோலம் போட்டால்தான் அன்றைய பொழுது அவருக்கு சுபமாக இருக்கும். இல்லையேல் அன்று முழுதும் கவலைப்பட்டு என்னையும் கவலைப்படுத்தி விடுவார். அவர் கோலப் போட்டிக்கு சென்றால் கோலம் வரையும் முன்பே கூறிவிடுவர் அவருக்குதான் முதற்பரிசு என்று.

ஒரு நோட்டு புத்தகத்தில் எந்நேரமும் கோலம் பயிற்சி எடுப்பார். பொருத்தமான வர்ணங்களை இடுவார். புள்ளிகளை வைத்து மயில், அன்னம், வாழைமரம், ரதம் போன்றவற்றை வரைந்து அதனுடே விளக்கு, பூ கொடி என்று அதனைச்சுற்றி விரிவு படுத்துவார். அதேபோல் பின்னல் வேலையிலும் வெவ்வேறு உத்திகளை கையாள்வார். வெற்றிலை பாக்கை மென்றுக் கொண்டும் இரு விரல்களை ஆட்டிக்கொண்டும் பின்னலை பார்த்து அதன் தரத்தை சொல்லிவிடுவார்.

அதேபோல் பின்னலை பின்னாமல் உத்தியை மட்டும் வைத்துக்கொண்டு வேறு வடிவு கொடுப்பார். பிறகு சொந்தமாகவே ஏதாவது முயற்சி செய்வார். பின்னல் நூல்கள் ஒத்துழைப்பது போல, கோல மாவு ஒத்துழைப்பதில்லை. ஒரு கோலம் சரியான வடிவு பெறவில்லையென்றால் அதை க‌ழுவி விட்டு வேறு போட வேண்டும். மாவும் வர்ணங்களும் உடல் உழைப்பும் கூடுதலாக செலவிட வேண்டும். நூல் எந்த நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடியதில்லை. தவறுதலாக நூலை இணைக்கும் போது சுலபமாக பிரிந்தும் விடலாம். அதே நூலில் திருப்பவும் பின்னலாம். நூலுக்குப் பின்னலுக்கும் எந்த பாதிப்பும் இரைது. 5 மணி நேரம் செலவழித்து பின்னிய பின்னலை 5 நிமிடத்தில் பிரித்து விடலாம்.

பெரியம்மா பின்னலை பிரிக்கும் வேலையை என்னிடம்தான் கொடுப்பார். பின்னலை பிரிப்பதென்றால் எனக்கு அத்தனை இஷ்டம். நூல் பிரிந்து வருவது அவ்வளவு அழகாக இருக்கும். வெளிப்பாக‌ம் ஒரு வர்ணம், அத‌ன் பின்னல் ஒரு வர்ணம், அதனுடே தொங்கும் குஞ்ஜம் ஒரு வர்ணம், இப்ப‌டி மூன்று நான்கு வர்ணங்களில் மேஜைவிரிப்பு, தொலைக்காட்சி விரிப்பு, நாற்காலி மேல் போடும் விரிப்பு மட்டுமல்லாது குழந்தைகளின் தொப்பி, காலுரை, கையுறை, சட்டை, காற்சட்டை, பாவாடை, தோள்பை என்று விதவிதமாக பின்னுவார். இவர் பின்னலை எங்கும் பழகவில்லை. சுயமாகப் பழகியதுதான்.

ஒரு சீன வீட்டுக்கு வேலைக்காகப் போனபோது முதலாளியின் மனைவி பின்னுவதை கூர்த்து நோக்கியதன் விளைவுதான் அவரும் பின்னக் காரணம். இதற்காக அவர் செலவழித்த நேரங்கள் அதிகம். பின்னி முடித்த பின்னலைப் பார்த்து அவர் புலங்காகிதம் அடைவதைப் பார்க்க எனக்கும் இன்பமாக இருக்கும். எனக்கும் பின்னலைச் சொல்லிதரும் படி நச்சரிப்பேன். அவர் சொல்லிக்கொடுப்பது அறவே மண்டையில் ஏறாது. சொல்லியடி பின்னுவதைப் போலத்தான் இருக்கும், ஆனால் பின்ன‌ல் வராது. சங்கிலி போடுவதைத் தவிர பின்னல் ஊசி வேறு எதைப் பின்னவும் என்னை அனுமதிக்கவில்லை.

பெரியம்மா தடிப்பான ஒரு நோட்டுப்புத்தகத்தில் கோலங்கள் பின்னல்களை வரைந்து வர்ணம் பூசி, அதன் குறிப்பையும் எழுதி வைத்திருப்பார். மற்றபடி அவருக்கு வேறு எதையும் வரைய தெரியாது. அவருடைய உலகம் அதுவாகவே இருந்தது. அந்த உலகத்தில் என்னை மட்டுமே இணைத்திருந்தார். அவருக்கு வர்ண ஆலோசனை கொடுக்கும் அலோசகர் நான். சில சமயம் அவர் வரையும் படைப்புக்கு முழுதும் வர்ணம் பூசும் வேலையை எனக்கே கொடுப்பார். நான் கோலம் வரைய நன்கு கற்றுக் கொண்டேன்.

நாளடைவில் பெரியம்மா தலைநகருக்கு மாற்றலாகி அடுக்குமாடி வீட்டில் குடியேறிய நிர்பந்தம் நிகழ்ந்தது. அவரின் விரல்கள் கோலம் வரைய முடியாமல் முடங்கி கிடந்தது. மிகவும் வருத்தப்படுவார். வாசலில் கோலம் போட இடம் இல்லை. இருக்கும் இடத்தில் சின்னதாக ஒரு கோலம் போட்டாலும், அடுக்குமாடி வளாகங்களை கூட்டும் இந்தோனேசிய பெண் கோலத்தையும் கூட்டி அலங்கோலமாக்கி விட்டுப் போவாள். நாளடைவில் கோலம் வரையும் பெரியம்மாவின் ஆவல் கோயில் வாசலில் வரைவதின் மூலம் தீர்க்கப்பட்டது. ஒரு கோயிலில் வரைய போய் மற்றமற்ற கோயில்களிலும் கோலம் வரைய கூப்பிட்டு கோலம் ஆண்டி என பிரபலமாகி விட்டார். நான் அவரைப்போன்று கோயில்களில் வரைய விருப்பம் கொள்ளவில்லை. ஆனால் உதவிக்காக அவருடன் போவேன். சில வருடங்களின் அவர் திரும்பவும் கப்பத்துக்கே திரும்பினார். நான் வேலை நிமித்தம் தலைநகரிலேயே வசித்தேன்.

பெரியம்மாவுடனான நெருக்கத்தில் இடைவெளி விழுந்தபடியால் என் உலகம் வேறு திசையில் சுழ‌ல‌ தொடங்கியது. தலைநகரின் பழக்கவழக்கங்கள் என் கால அட்டவணையை மாற்றி அமைத்தன. சிறு வயது முதலே புத்தகம் வாசிப்பதில் அதிக நாட்டம் இருந்த படியால் வாசிப்பு மட்டுமே எனக்கு நிம்மதியை தந்தது. மலேசிய சிறுபத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்தேன். மலேசிய சிறுபத்திரிகைகளில் வரும் ஓவியங்களில் ஓவியர் சந்துருவின் ஓவியம் மட்டும் தனித்து தெரியும்.

ஓவியர் சந்துரு 
அவரின் ஒற்றைக்கண் ஓவியங்களை என் ஆல்பத்தில் ஆங்காங்கே பயன்படுத்திக் கொண்டேன். அவர் யார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் தெரியாது. ஓவியர்களில் வயதானவர்கள்தான் அதிகம். இதில் ஏதோ ஒரு வயது போன ஓவியர் என்று மட்டும் நானே கனிந்திருந்தேன். சந்தர்ப்பம் அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. நான் ஸ்கெட்ச் போட்டு வைத்த ஓவியராக‌ அவர் இல்லை. 31 வயது கொண்ட இளம் ஓவியராக அவர் இருந்தார். தோற்றத்தில் இவர் ஓவியதர்தானா என்றொரு சந்தேகம் எழுப்பக்கூடிய உடல் அமைப்பு. அந்த அமைதியும் பொறுமையும் வியப்பை அளித்தது. அவரின் ஆளுமை ஓவியத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. சந்துருவின் நட்பு ம‌ற்ற இலக்கிய நண்பர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. மலேசிய ஓவியர்கள் சிலரையும் அவர்களின் ஓவியங்களையும் கூட சந்துரு அறிமுகப்படுத்தினார். மலேசிய ஓவியர்களே அறிமுகம் இல்லாத எனக்கு,  அயல்நாட்டு ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் அவர்களின் தனித்துவத்தையும், வரலாறையும் எளிய முறையில் விளக்கினார்.

சந்துருவின் ஓவியம் 
அவரின் சிந்தனைகள் ஓவியத்தைச் சுற்றியே இருப்பது எனக்கு வியப்பை கொடுத்த‌து. ஓவியர் சந்திரன், ஓவியர் ராதா, (மறைந்த) ஓவியர் ராஜா போன்றவர்களிடம் சந்துரு உரையாடும் போது அவரின் முகம் பிரகாசம் ஆவதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஓவியத்தைப் பற்றி குறிப்பாக நவீன ஓவியங்களை பற்றி எனக்குள் எழும் கேள்விகளுக்கு சந்துரு சுவாரஸ்சியாக பதிலளிப்பார்.

பென்சிலை மட்டும் பயன்படுத்தி வரைந்த ஓவியம், ஆர்ட் பேனாவில் வரைந்த ஓவியங்களைத் தவிர நீர் வ‌ர்ண‌ம் மற்றும் போஸ்டர் கலர்களை பயன்படுத்தி வரைந்த ஓவியங்களும், வரைந்து முடிக்கப்படாத ஓவியங்களும் அவரின் அறையில் குவிந்து கிடக்கும். நான் அவற்றை ஒழுங்கு படுத்த நினைப்பேன். வேண்டாம் என்பார். இப்படி இருந்தால்தான் ஓவியங்களை சுலபமாக கையாள முடியும் என்பார். ஓவியர்களின் குணங்கள் சராசரியற்றவையோ என்று நினைத்துக் கொள்வேன்.

நான் அவரை திருமணம் செய்துக்கொண்ட பிறகு அவர் வரையும் போது அருகிலேயே இருந்து பார்ப்பேன். விமர்ச்சிப்பேன். பென்சில் கோடுகளை அழித்து கொடுப்பேன். பூர்த்தியடையாத கோடுகளை நிறைவு செய்யச் சொல்வேன். சில சமயம் பொறுமையுடன் கேட்பார். சில சமயம் கடுப்பாகி விடுவார். சில சமயம் இது இப்படிதான் என்று அழுத்திச் சொல்வார். அவரின் தூரிகைகள், பென்சில்கள், பேனா, ஓவியந்தாள்கள், கேன்வஸ் என்று வீடு முழுவதும் அவரின் ஓவியங்களும், ஓவிய தளவாடங்களும் ஆக்கிரமித்துக் கொண்டன.

நண்பர்களுக்கு பரிசளிக்கும் ஓவியங்களில் சந்துரு அவர் பெயரோடு என் பெயரையும் இணைந்து எழுதி கொடுப்பார். ஓர் ஓவியரின் மனைவியாக அவருக்கு பென்சில் கோடுகளை அழித்து கொடுப்பதைத் தவிர வேறு எந்த உதவியும் செய்ய தெரியாதது ஒரு நெருடலாக எனக்குள் இருந்து வருகிறது. அதே வேளையில் அவரின் ஓவியத்துக்கு முதல் பார்வையாளினியாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

ஓவியத்தின் உல‌கில் இல்லாத என்னோடு தொடர்ந்தார்போல் ஓவியங்கள் பின் தொடர்ந்து வ‌ருவ‌து ஆச்சரியமூட்டுகிறது. வீட்டின் வரவேற்ப்பறையில், படுக்கையறையில், திருப்தி படாமல் வீசப்பட்ட  ஓவியங்கள் குப்பைத்தொட்டியில் என ஓவியருடனும் ஓவியங்களுடனும் மிக அழகான வண்ணங்களுடன் என் நாள்கள் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.


 (September 2010) 


1 கருத்து: