புதன், 8 அக்டோபர், 2014

எனக்கு தெரியவில்லை

என் பூமி சில தினங்களுக்கு முன்புதான்
உதிர ஆரம்பித்திருக்க வேண்டும்
சரியாகத் தெரியவில்லை

அது இரத்தத்தாலும் நாணங்களாலும் ஆனதால்
உதிரும் முன்
ஏதாவது சமிக்ஞைக் குறிகளையாவது காட்டியிருக்கலாம்

என் கண்ணாடித் தளவாடத்தில்
அழுக்குப் படியும்போதும்
கணவர் பரிசளித்த பொருளொன்று
களவு கொடுத்த போதும்
அம்மா சீதனித்த இரட்டைப் பாத்திரத்தில் ஒன்று
கைநழுவிய பொதும்
என் படுக்கையறை மற்றும் கழிப்பறை
அந்நியப்பட்டிருந்தபோதும்
என் பூமி உதிர தொடங்கியிருக்கக்கூடும்

எனக்கு சரியாகத் தெரியவில்லை

என்னால் கைவிடப்பட்ட பூமி
திட்டுத் திட்டாக உதிர்ந்து
என் நண்பர்களுக்கு வானமாகவோ
அல்லது வேறு யாருக்காவது
மற்றொரு பூமியாகவோ மாறியிருக்கலாம்

எனக்கு மிகச் சரியாக எதுவும் தெரியவில்லை

-யோகி

1 கருத்து: