புதன், 28 செப்டம்பர், 2022

மலேசியாவில் ஹூடுட் சட்டம் தேவையா?

இஸ்லாமியர்களால் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு சட்டமாக இருக்கிறது ஹூடுட். அல்லாவினால் தீர்மானிக்கப்பட்டது என்ற அடிப்படையில் ஹூடுட் சட்டத்தை இஸ்லாமியர்கள் ஏற்கிறார்கள். கடவுளின் உரிமையாகவும் அது கருதப்படுகிறது. ஹூடுட் சட்டத்தின் வழி வழங்கப்படும் தண்டனைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் சட்டத்துறைக்கோ, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கோ, நீதிபதிகளுக்கோ கூடக் கிடையாது. இஸ்லாமியர்களின் வேத நூலான அல்-குர் ஆன்னில் இதுப்பற்றித் தெளிவாக அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவில் பல இன மக்கள் வாழ்ந்தாலும் அது இஸ்லாமை தேசிய மதமாக கொண்ட  நாடாகும். ஆனால், இங்கு ஹூடுட் சட்டம் அமலில் இல்லை. என்றாலும் தொடர்ந்து அதை நடைமுறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக்கொண்டே  வரப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்,  ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். அதைச் சில இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்கவே செய்தன. ஆனால், தேசிய முன்னணிக்கு ஆதரவான மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அந்த கூற்றை கடுமையாகச் சாடிய வேளையில் பின் அவ்விவகாரம் பின்வாங்கப்பட்டது.

ஆனால் , இஸ்லாமிய மாநிலமாகக் கருதப்படும் கிளந்தான் மாநிலத்தில், மலேசிய எதிர்கட்சிகளில் ஒன்றான பாஸ் கட்சி ஹூடுட் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற மசோதாவையும் கோரிக்கையையும் தொடர்ந்து வழியுறுத்திக்கொண்டே வருகிறார்கள். மலேசிய வரலாறு படி, பேராசிரியர் சையத் முகமது நாஃயூப், ஹிஜ்ரி 812 (கி.பி.1409) ஆண்டுகளில் மலாக்கா மாநிலத்தை ஆட்சி செய்த மலாய் ஆட்சியாளர்கள் ஹூடுட் சட்டத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார். எனவே மலாயா இதற்கு முன்பு ஹூடுட் சட்டம் பின்பற்றியிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதரங்களும், எம்மாதிரியான தண்டனைகள் வழங்கப்பட்டன என்ற விவரங்களும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

பொதுவாக மது அருந்துதல், திருடுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல், துரோகம் செய்தல், மதத்தை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு ஹூடுட் சட்டம் வழி தண்டனை வழங்க வகைச் செய்யப்படுகிறது.

ஆனால், புனித நூலான அல்-குர் ஆனில் கூறியுள்ளபடி அப்படியே ஹூடுட் சட்டத்தை உலக இஸ்லாமிய நாடுகளில் முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை. நாட்டுக்கு நாடு அச்சட்டம் வித்தியாசப்பட்டிருப்பதுடன், இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஒரு குழப்ப நிலையையும் இந்தச் சட்டம் ஏற்படுத்துகிறது. அதற்கு உதாரணமாகச் சில நாடுகளில் அணுகப்படும் ஹூடுட் சட்டம் முறைகளை காணலாம்.

ஆச்சே, இந்தோனேசியா :

ஆச்சே, இந்தோனேசியாவில் பழைமையை நேசிக்கும் ஓர் ஊர். அங்கு 5 அதிகாரப்பூர்வ மதங்கள் நடப்பில் இருந்தாலும் இஸ்லாம் மதம் முதன்மையானதாக இருக்கிறது. 234 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் ஆச்சே தனித்த நிர்வாகமாகச் செயல்படுகிறது. எனவே, அங்கு ஷரியா சட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். அங்குக் கடமையிலிருக்கும் போலீஸ்காரர்களை ‘ஷரியா போலீஸ்’ என்றே அழைக்கப்படுகிறார்கள். 1,500-க்கும் மேற்பட்ட ஷரியா போலீஸ்காரர்களில் 60 பேர் வரை பெண்களும் உள்ளனர். அரபு நாடுகளைப் போலல்லாமல் ஆச்சேவில் பணியாற்றும் ஷரியா போலீஸ்காரர்கள் கடுமையாக நடந்துகொள்வது இல்லை. கடமையில் இருக்கும்போது, அவர்களிடத்தில் ஆயுதமும் வைத்திருப்பதில்லை. குற்றமிழைப்பவர்களிடத்தில் கடுமையாக எச்சரிக்கைகளை விடுவிக்கின்றனர். கல்வத், பாலியல் தொழில் ஆகிய குற்றங்களுக்கு ஹூடுட் சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். மற்ற குற்றங்களுக்குப் பொதுவான சட்ட தண்டனைத்தான் வழங்கப்படுகிறது.


புருணை :

2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி புருணை சுல்தான் ஹஸானல் போல்கியா, ஷரியா சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார். அதன் பொருட்டுக் கட்டம்கட்டமாக அந்தச் சட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், 1996-ஆம் ஆண்டு முதலே புருணை ஷரியா குற்றவியல் சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் கூறுகின்றன.

சவுதி அரேபியா :

இந்த நாட்டில் ஹூடுட் சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் தனிச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கொலை குற்றத்திற்காகக் குற்றவாளியின் சிரத்தை துண்டிக்கவும், பாலியர் தொழில் செய்பவர்களைக் கல்லால் அடித்துக் கொல்வதும் திருட்டு தண்டனைக்குக் கையைத் துண்டிக்கவும் அங்குக் குற்றத்திற்கான தண்டனைகளாக இருக்கின்றன.

தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு, நீதிமன்றம் குற்றவாளியின் நெருங்கிய உறவினர்களுக்கு அல்லது வாரிசுதாரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அவர்கள் குற்றவாளிக்காகக் கருணை மனுவை கோரலாம். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் ஈராண்டுகள் சிறைச்சாலையில் வைக்கப்படுவார். பின் அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்படும். 

சோமாலியா :

இரு தலைமுறைகளாக, உள்நாட்டுப் போரினால் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் நாடு இது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் ஷரியா சட்டம் அமலில் இருக்கிறது. கடற்கொள்ளைகளும், கடத்தல்களும் மலிந்து கடக்கும் அங்கு ஹூடுட் சட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது.

பாக்கிஸ்தான், லிபியா :

இந்த இரு நாடுகளிலும் ஹூடுட் சட்டம் முழுமையாகப் பின்பற்றி வருகின்றன.

மலேசியாவை பொறுத்தவரை ஹூடுட் சட்டம் குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் புரியும்படி விளக்குவதற்குச் சமய போதகர்கள் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாம் அல்லாதவர் மத்தியில் இச்சட்டம் பற்றிய விவரங்களை வெளியிட அவர்கள் தவறிவிட்டனர். அதன் காரணமாகவே சவூதி அரபு நாடுகளில் செயற்பாட்டில் இருக்கும் தண்டனைகள் கொடூரமானதாக இருப்பதால் அதை மலேசியாவுக்குக் கொண்டு வருவதில் பலமான எதிர்ப்புகள் சில இஸ்லாமியர்களிடத்திலும் இஸ்லாம் அல்லாதவர்கள் இடத்திலும் வைக்கப்படுகிறது.


கடந்த மே மாதம் பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாடி அவாங் மக்களவையில் சமர்பித்த ஹூடுட் மசோதாவை குறித்துத் தற்போது தேசிய முன்னணி கட்சி இணக்கம் கண்டுள்ளதாக அதன் தலைமை செயலாளர் தெங்கு அட்னான் கூறினார். ஆனால், தேசிய முன்னணியின் 13 பங்காளி கட்சிகளுக்கிடையே இதற்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இஸ்லாம் அல்லாத தேசிய முன்னணியின் ஆதரவுக் கட்சிகள் ஹூடுட் சட்டத்தை எதிர்த்தே வந்துள்ளன என்பது அதற்குக் காரணமாகும். தற்போது சுகாதாரத் துறை அமைச்சராகவும் மஇகாவின் தேசிய தலைவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அத்திட்டம் அமலுக்கு வந்தால் தன் அமைச்சர் பதவியைத் துறப்பேன் என்று  கூறினார். மேலும், மசீச தலைவரும் தன் அமைச்சர் பதவியைத் துறப்பேன் என்று தனது எதிர்ப்பை ஹூடுட் சட்டத்திற்கு எதிராகக் காட்டியிருந்தார்.  தேசிய முன்னணியின்  முக்கிய ஆதரவாளர் தலைவர்களின் இந்த எதிர்ப்பு தேசிய முன்னணிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்த போது அதன் உட்பூசல் தீர்ந்தபாடில்லை.

மலேசியாவில் ஹூடுட் சட்டம் மலாய்க்காரர்கள் அல்லது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தொடர்ந்து கூறிவந்தாலும், இஸ்லாம் அல்லாதவர்களின் மீது அந்தச் சட்டம் மெல்ல மெல்ல பாயலாம் என்ற ஐயம் இருக்கவே செய்கிறது. ஹூடுட் சட்டத்தின் செயலாக்கம் வெற்றிபெறும் பட்சத்தில், இதர மாநிலங்களுக்கும் அச்சட்டம் விரிவாக்கம் காணும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் மூலம் இந்நாடு இஸ்லாமிய நாடாக மட்டுமே அடையாளம் காணப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இதனிடையே இஸ்லாமிய பேராசிரியர் தாரிக் ரம்டான் “மாறி வரும் உலகச் சூழலுக்கேற்ப இஸ்லாமியர்கள் நடந்து கொள்வது நல்லது” தொடர்ந்து வழியுறுத்தி வரும் வேளையில், அல்லாஹ்வின் சட்டங்களை  அவர் அவமதிப்பதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

மற்றுமொரு இஸ்லாமியத் தலைவர் அஸ்-ஷேக் முஸ்தபா அல்-ஸர்க்கா கூறுகையில் பழமை வாய்ந்த சட்டத்தை இப்பொழுது பின்பற்றினால், அது இஸ்லாத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்துமென்றார்.

ஆனால், இஸ்லாத்தை பின்பற்றும் நாடானா மலேசியா இன்னும் ஹூடுட் சட்டம் குறித்துத் தீவிரமாக இருப்பது நாட்டு மக்களிடையே குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது.

2014-ஆம் ஆண்டு 60 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றினைந்து ஹூடுட் சட்டத்தை மாநில அளவில் அமல்படுத்துவது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று 8 காரணங்களை முன்வைத்துக் கூட்டறிக்கை ஒன்றை தயாரித்துக் கையெழுத்திட்டன. அந்த அறிக்கையில் முதலாவதாக , ‘மலாயா, சாபா, சரவாக் மற்றும் அன்றைய சிங்கப்பூர் ஆகியவை ஒன்றிணைந்து 1963 ஆம் ஆண்டில் மலாயா அரசமைப்புச் சட்டத்தைப் புதிய கூட்டரசு (Federation) அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக ஏற்றுக்கொண்டதன் வழி மலேசியா உருவாக்கப்பட்டது. செயல்முறையில், மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கருதப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த ஏற்பாட்டின் முழு அமைப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தையின் வழி மாற்றாத வரையில் ஹூடுட் சட்டத்தை மாநில அளவில் அமல்படுத்துவது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என்று வழியுறுத்தியிருந்தது இங்குக் குறிப்பிடதக்கது.

ஹூடுட் சட்டம் வந்தால் குற்றச்செயல்களைக் குறைக்கலாம் என்றும் குறையும் என்பதும் காரணம் காட்டப்படுவது அர்த்தமற்ற ஒன்றாகவே படுகிறது. காரணம் தற்போது ஹூடுட் சட்டங்களை நிறைவேற்றும் நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பல பயங்கரங்களும் அறமற்ற தண்டனைகளையுமே ஹூடுட் சட்டம் என்ற பெயரில் நிறைவேற்றியிருப்பதையும் மலேசியர்கள் அறியாதவர்கள் அல்ல.


குறிப்பு:

–     மசீச (மலேசிய சீனர் சங்கம்)

–   மஇகா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்)

- பாஸ் (இஸ்லாமிய கட்சி + எதிர்கட்சி)

–  அம்னோ (இஸ்லாமிய கட்சி + ஆளுங்கட்சி)

மேற்கோள்: செம்பருத்தி இணையத்தளம், தி ஸ்டார், உத்துசான் மலேசியா, இஸ்லாம் பீடியா இணையத்தளம்


நடு இணைய இதழுக்காக 2017-ல் எழுதிய கட்டுரை இது. 

https://naduweb.com/?p=3087 

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

மலேசியாவில் பெரியாரியம் எதற்கு?


ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் மேலும் வளர்கிறது. அவர்கள் என்றுமே விடுதலைப் பெறவே முடியாது என்கிறார் பெரியார். (‘குடியரசு’ – தலையங்கம் 12.8.1928)

94 ஆண்கள் கழித்து இன்று அந்தக் கூற்றை நான் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துகிறேன். எத்தனை தீர்க்க தரிசி இந்தப் பெரியார். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்பே அவர் கூறிய இந்தக் கருத்தானது நாகரீகம் அடைந்துவிட்டோம், பெண்களுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டோம் என கூறிக்கொண்டிருக்கும் அல்லது நம்பிக்கொண்டிருக்கும் அத்துனை ஜென்மங்கள் முகத்திலும் ஓங்கி அரைகிறது. என்னத் தோழர்களே வலிக்கிறதா? அடி பலமாக இருக்கிறதா? முகத்தை அழுத்தி தேய்த்துக்கொள்ளுங்கள். போக போக வலி இன்னும்கூட அதிகமாகலாம்.

மலேசிய திருநாட்டிலே பெண்ணியப் பேச்சு எதற்கு? பெரியார் சிந்தனைகள் எதற்கு? இங்குள்ளப் பெண்கள் எத்துனை சுதந்திரமாக இருக்கிறார்கள்? அவர்கள் இரவு வேலை செய்கிறார்கள். இரவெல்லாம் சமூக ஊடகங்களில் இருக்கிறார்கள். ஆபாசமாக உடுத்துகிறார்கள். எத்தனை எத்தனை சுதந்திரத்தை இந்தப் பெண்கள் இங்கு சுகமாக அனுபவிக்கும்போது, பெண் சுதந்திரம் குறித்த பெரியார் கொள்கைகளை இங்கே பேசுவது வீண்வேலை என்று கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் எதிர்ப்பாளர்கள் பேசுவதை நான் செவிமடுத்து வருகிறேன். இன்னும் எத்தனை எத்தனையோ பிதற்றல் மத்தியில்தான் பெரியாருக்கு இந்த மலேசிய மண்ணில் இன்னும் விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தோழர்களே உங்களுக்குத் தெரியுமா? மலேசிய திருநாட்டிலே பாலியல் வன்கொடுமைக்கான சட்டம் இந்த ஆண்டுதான்(2022) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுவரை இங்கு அதற்கான சட்டமும் இல்லை,பாதுகாப்பும் இல்லை என்பது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமா?

ஒரு பெண் சமூக ஊடக மூலமாகவோ அல்லது அவதூறு மூலமாகவோ பாலியல் அச்சுறுத்தலுக்கோ அல்லது மிரட்டலுக்கோ ஆளாகும்போது அவளுக்கு துணையாகவும் ஆதரவாகவும் நிற்ககூடியவர்கள் யார் யார் என்று கொஞ்சம் பட்டியலிட்டுப் பாருங்கள். அவளைத்தவிர ஒருவர்கூட அவளோடு நிற்க வரமாட்டார்கள். மனதிடமுள்ள பெண்ணாக இருந்தால் துணிந்து போராடுவாள், இல்லையேல் தற்கொலை செய்துக்கொள்வாள். இதுதான் நடைமுறை எதார்த்தம்.

ஆனால், பெரியாரின் வார்த்தைகளை நம்பும் ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் வக்ரம் பிடித்த ஒவ்வொருவரையும் சந்தியில் நிற்க வைத்து கேள்விக்கேட்கும் துணிச்சல் அவளுக்கு வந்துவிடும். குறைந்த பட்சம் நான் யார் என்பதை ஒருவருக்கும் நிறுபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று அவள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வாள். சுதந்திரம் என்பது ஒரு பெண்ணுக்கு யாரும் போடும் பிச்சையல்ல. தன்னோடு ஓர் உறுப்புபோல இருப்பதுதான் சுதந்திரம் என்பதை பெண் உணர்ந்து செயல்பட வேண்டும். தனக்கு எது கண்ணியம் என, அவளைத் தவிர வேறு யாரும் அவளுக்கு சொல்லிக்கொடுத்திட முடியாது.

ஆனாலும், இங்கிருக்கும் பெண் சார்ந்த அமைப்புகள், அரசியல் கட்சிகளில் இருக்கும் மகளிர் பிரிவினர், திராவிடர் கழகங்களில் இருக்கும் பெண்கள் உட்பட,  ஒரு பெண் தன்னை மனரீதியிலும் உடல் ரீதியிலும் தயார் படுத்திக்கொள்ள எவ்வாறு உதவுகின்றனர்? ஒரு பெண்ணுக்கு அநீதியோ அல்லது தீங்கோ நிகழும்போது இந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள் எவ்வாறு பாதிப்படைந்த பெண்ணுக்கு குரல் கொடுக்கிறார்கள்?  சமயம் பார்த்து வஞ்சம் தீர்துக்கொள்வதற்கும் மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. 

இதைத்தான் பெரியார், “பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும்” என்கிறார். (பெரியார் இன்றும் என்றும் பக் 281)

கலாச்சாரக் காவலர்கள் வரையருத்து வைத்திருக்கும் ஒரு சட்டகத்திற்குள் பெண் சுதந்திரத்தை வைத்து, அவளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டோம் அவள் சுதந்திரமுடன் வாழ்கிறாள் என்பதெல்லாம் எத்தனை முரண் தோழர்களே? இதெல்லாம் பெண்களுக்குள் திணிக்கப்பட்ட ஆணாதிக்கத்தின் வெளிபாடு இல்லாமல் வேறென்ன? இவர்களை நோக்கி வீச என் போன்ற பெண்ணுக்கு கையில் கிடைப்பது பெரியாரின் வார்த்தைகளும்தான்.

பெண் சுதந்திரம் குறித்து வகுப்பெடுக்கும் பேர்வழிகள் மலேசிய திருநாட்டிலே குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் இன்னும்கூட நிறைவேற்றாத ஒன்றாக இருப்பதுக்குறித்து எங்காவது பேசியிருக்கிறார்களா? நாடாளுமன்றம் மன்றும் சட்டமன்றத்தில் கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. நாற்காலியில் இருக்கும் பெண்களும் பெண்களுக்காக பேசுவதுகூட கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம்கூட பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையை மேலே போட்டு மூடிவிட்டுப் பார்த்தால்,  மாடப்புறாக்கல் கட்டுப்பாடற்று புதந்திரமாக பறப்பதைப்போலத்தான் இருக்கும். இதெல்லாம் எத்தனைப் பெரிய ஏமாற்று வேலை தோழர்களே.

இந்தியாவின் பல இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்திய பெரியார்,  நமது நாட்டில்கூட 27 நாட்கள் தங்கியிருந்து இந்தியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கும் தோட்டங்களுக்கும் சென்று, குடல் சம்பந்தப்பட்ட நோயோடு இந்தக் கிழவர் நாளுக்கு 3 முதல் 5 சந்திப்புகளில் பகுத்தரிவு உரை நிகழ்த்தி சிந்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இன்று இந்த மலேசிய மண்ணில் திராவிடர் கழகங்கள் நீடித்திருப்பதற்கும் இன்றுவரை தந்தை பெரியாருக்கு விழா எடுப்பதற்கும், இளைய தலைமுறையினர் பெரியாரின் கொள்கைகள் பரப்பு செயலாளர்களாக செயல்படுவதற்கும் அன்று அவர் நிகழ்த்திய வருகையும் சுயமரியாதைக் குறித்தான உரைகளும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பெரியார் பேசிய பகுத்தரிவை வெவ்வேறு காலக்கட்டங்களில் மறுபரீசீலனை செய்யலாம். அதைத்தான் பெரியாரும் சொல்கிறார். ஆனால், மலேசிய திருநாட்டில் பெரியாரின் போதனைகள் காலாவாதியாகிவிட்ட ஒன்று என்ற விதாண்டாவாதத்தையும், பள்ளிப்புத்தகங்களில்கூட பெரியார் படம் அச்சடிக்கக்கூடாது என்ற சிறுபிள்ளைத்தனத்தையும், பெரியாரின் பெண் சுதந்திர போதனைகள், மலேசியப் பெண்களுக்கு அவசியமில்லை என்ற மூடத்தனத்தையும் பெரியார் எதிர்ப்பாளர்களும் மத தீவிரவாதிகளும் நிறுத்திக்கொண்டு பெரியார் சொன்ன பகுத்தரிவு பார்வையில் அனுகப் பழகவேண்டும். இன்று எதற்கு எதிர்க்கிறோம் என்று காரணம் தெரியாமலேயே பெரியாரை வசைப்பாடும் கும்பல்தான் அதிகமாக இருக்கிறது.  

அதே வேளையில் பெரியாரிஸ் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு அவர் சொன்னதை எல்லாம், தனக்கு தேவையானபோது மிகச் சிறப்பாக ஏட்டில் எழுதியும், ஒலிவாங்கியில் பேசியும், கைத்தட்டல் வாங்கிக்கொண்டு, நிஜத்தில் அதற்கு எதிராகப் பேசிக்கொண்டும், சொந்தக் குடும்பத்தில்கூட மாற்றத்தை ஏற்படுத்தாத “எங்கள் வீட்டுப் பெண்களை நாங்கள் ஒரு லிமிட்டோடுதான் வைத்திருப்போம்” என்ற போலி கறுப்புச் சட்டை போராளிகளைவிட, சுயத்தோடு இயங்கும் பெரியாரியம் அறியாத பெண்களும் தோழர்களும் பெரியாரின் வாரிசுகளே.

-தோழர் யோகி பெரியசாமி

எழுத்தாளர், களச்செயற்பாட்டாளர்

(மலேசிய மாந்தநேயத் திராவிடக் கழகத்தின், தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆண்டு மலரில் வெளிவந்தக் கட்டுரை. தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார். )

வியாழன், 15 செப்டம்பர், 2022

மலேசியாவில் தோழர் தொல்.திருமாவளவன்

 

 “விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், தமிழ் நாடு, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் தொல் திருமாவளவனுடன் ஓர் சந்திப்புக்கு வருகிறீர்களா?” என்ற அழைப்பு வந்தவுடன் முதல் ஆளாக என் பெயரை பதிந்துக்கொண்டேன். ஓர் அரசியல் கட்சித் தலைவராகவும், இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் மக்கள் உறுப்பினராகவும், ஒடுக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுப்பவராகவும் அவரின் நிலைப்பாடுகளை அவரின் உரைகளின் வழியே நான் அறிந்துக்கொண்டேன். பலரும் அறிந்துக் கொண்டிருக்கின்றனர்.  தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், தோழர் தொல் திருமாவளவன் மீது பலருக்கு தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அதற்கு அவரின் அரசியல் தீர்மானங்கள் மிகப்பெரிய காரணம் எனலாம்.

மலேசிய சந்திப்பில் கலந்துக்கொண்ட அவரிடம் ஒருசில கேள்விகள் முன்வைக்கப்பட்டது.  அனைத்திற்கும் அவர் தெளிவான பதில் சொன்னார்.  உங்களுக்கு திருமணம் எப்போது? அடுத்த முறை தம்பதியராக உங்களை காண விரும்புகிறோம் என்கிற அர்த்தமில்லாத கேள்விகளைச் சட்டை செய்யாமல் அப்படியே கடந்துச் சென்றார் தோழர் திருமா அவர்கள். ஒருவரின் பெர்செனலை கேட்கக்கூடாது என்கிற இங்கிதம்கூட தெரியாத ஜனங்கள் என்று அவர் நினைத்திருக்ககூடும். கேள்வியை செவிமடுத்த எங்களுக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.

அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியை மட்டும் நான் இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன். தெளிவாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு மிக நீண்ட விளக்கத்தை அவர் தந்திருந்தார். அதைச் சுருக்கித்தான்  இங்கு எழுதியிருக்கிறேன். அக்கேள்வி….


தமிழ்தேசியம் குறித்து உங்கள் கருத்து என்ன?

தோழர் திருமா : தேசம் என்பதிலிருந்துதான் தேசியம் உருவாகிறது. தேசம் என்பது எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும் என்கிற பார்வையிலிருந்து தேசியம் உருவாகும். வெள்ளையர்கள் ஆண்டபோது காந்தியடிகள் தலைமையில் விடுதலைப் போராட்டம் நடந்தது. பகத் சிங் ஒரு புரட்சிகரமான தேசியத்தைக் கட்டமைக்கப் போராடினார். காங்ரஸ் எந்த வகையான தேசியத்தை முன்வைத்தது என்றால் பல மதங்கள் இருந்தாலும் பல மொழிகள் இருந்தாலும் பலக் கலாச்சாரம் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்களாக வாழ்வோம். இந்தியன் என்ற உணர்வோடு வெள்ளையர்களை விரட்டியடிப்போம். இந்தியன் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டமைப்போம் என்று இருந்தது. இதை நாம் நாட்டினம் என்று புரிந்துக்கொள்ளுதல் வேண்டும். நாட்டினம் என்றால் தேசிய இனம் . மொழியின் அடிப்படையில் தேசிய இனம் என்று சொல்கிறோம். மரபு அடிப்படையில் மரபினம் என்று சொல்கிறோம். இந்தியாவின் ஆரிய இனம் திராவிட இனம் இது இரண்டும்தான் மரபினம் என அடையாளப்படுத்தப்படுகிறது

தமிழ் என்பது ஒரு மொழி இனம். அது மரபினம் இல்லை. இதனால்தான் ஆரியன், திராவிடன், மொழி, மதம் இதையெல்லாம் விட்டுவிட்டு, காங்கிரஸ் இந்தியன் நேஷனலிசத்தை பேசியது. அதனால்தான் இந்தியா முழுக்க தன் பார்வையை தேசியப் பார்வையாகவும், தேசிய நீரோட்டமாகவும், தேசியவாதியாகவும் அவர்கள் செலுத்துகிறார்கள் என்றும் தமிழர்கள் குறுகியப் பார்வையில் தமிழ்நாட்டைப் மட்டும் பார்ப்பதாகவும், தமிழர்கள் மொழியின வெறியர்கள் என்றும்  கூறினர்.  மேலும், அவர்கள் தமிழர்களை tamil chauvinism என்று  வகைப்படுத்துகின்றனர். இன்று இந்த தேசத்தை ஹிந்துராஸ்ட்ரா  என்று மோடி அரசு அறிவிக்க திட்டமிட்டு வேலை செய்கிறது. எல்லாரும் இந்துக்களாக வாழ வேண்டும் என்றும் இந்து என்ற ஒரே அடையாளம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அதன் நோக்கமாகும். ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்று அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மதமாக இருந்தால்தான் அது சாத்தியப்படும். இதை மத தேசியம் (ஹிண்டு நேஷனலிசம்) என்று அடையாளப்படுத்துகிறோம். இயற்கையிலேயே மரபினம் என்பதை தவிர்க்க முடியாது. ஆனால்,  மரபினம் வழி தேசியத்தை கட்டமைக்க முடியுமா?

 நிலபரப்பு, நிலபரப்புக்குள்ளே ஒரு கலாச்சாரம், அதை பின்பற்றும் மக்கள், தொகுதி, ஒரு குறிப்பிட்ட மொழியை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். தங்களை தாங்களே ஆண்டுக்கொள்ளக்கூடிய ஓர் இறையான்மையை கொண்டிருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் ஒரு தேசத்தை உருவாக்க முடியும். தேசம் என்கிற வரையறைக்குள் உட்பட்ட ஒருநிலவரத்தை அந்த நிலவரத்தில் வாழும் மக்கள் தொகுதியை அல்லது அந்த இடத்தை தேசிய இனம் என்று அழைக்கப்படுகிறது.  எனவே, மரபினம் வழி தேசியத்தை உருவாக்க முடியாது என்பது இதன்வழி தெரியவருகிறது.  மொழியின் அடிப்படையில் தேசியமும் தேசங்களும் உருவாகின்றன. 

மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அது ஒரு நிறுவனம்.  ஆனால், மொழி இயற்கையாகவே உருவாகியது. இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டு அதை தனது தாய்மொழி என்று சொல்ல முடியாது. எனவே தேசிய இனம் என்பதும் இயற்கையில் மனித குலத்தில் உருவான ஓர் அடையாளம். அந்த தேசிய இனத்தின் அடிப்படையில் தேசத்தை உருவாக்குவதும், உருவாக்கியிருப்பதும் உருவாகப்போராடுவதுமான அடிப்படையில் பார்க்கும்போது தமிழ்மொழியைப் பேசக்கூடிய நாம் தமிழ் தேசிய இனம் என்று நம்மை அடையாளப் படுத்திக்கொள்கிறோம். என்றால் தமிழ் தேசியம் எப்படி உறுவாகும்? மொழி உணர்வு, இன உணர்வு தமிழ் தேசியமாகுமா? தமிழ் தேசியம் என்பது உருவாக்கப்பட வேண்டுமானால் அதற்கு சிலவரையரைகள் தேவைப்படுகிறது. 

தமிழ் தேசியத்தை எப்படிப் பார்ப்பது? தமிழர் ஒற்றுமையை வென்றெடுப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியம் சாத்தியமாகும். தமிழர் ஒற்றுமையை எப்படி சாத்தியப்படுத்துவது? தமிழரை ஒன்றுபடாமல் தடுப்பது எது? உள்ளபடியாக நாம் தமிழர்களாக ஒன்றினைய முடிகிறதா? எந்த ஒன்றுமையாக இருந்தாலும் கருத்து ஒத்து இருக்க வேண்டும். கருத்தியல் அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். கருத்தியல் என்றால் என்ன? மொழி என்பதுதான் கருத்தியலா? அல்லது இடம் என்பதுதான் கருத்தியலா? கருத்தியல் என்றுவரும்போது தமிழர்களை ஒன்றுபடாமல் தடுப்பது சாதி என்பதாகும். 



நாம் தமிழ் தேசியத்தைப் பேசுவதால் தமிழர்களை ஒன்றுமையாக இருக்கவிடாமல் தடுப்பது சாதி. நாம் பேசுவது தமிழாக இருந்தாலும் நமது வாழ்க்கை முறை என்பது சாதி அடிப்படையில் இறுகிக் கிடக்கிறது. இந்த எதார்த்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தடையாக இருப்பது சாதி. சாதி ஒழிப்பு என்பது ஒரு கருத்தியலாக இருந்தால்தான் அது தமிழ் தேசியம். சாதி ஒழிப்பை கருத்தியலாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது தமிழ் தேசியம் ஆகாது. சாதியை எப்படி ஒழிப்பது என்றால் சாதியைக் கட்டி காப்பாற்றுவது எது என்றும் சாதிக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது எது என்றும் சாதி எப்படி வாழ்க்கை முறையாக மாறியது என்று பல கேள்விகளைக் கேட்டால்தான் நாம் அதை ஒழிக்க முடியும்.

சாதி உருவானதிலிருந்து சாதி காப்பாற்றப்படுகிற இந்த நொடி வரையில் இதற்கு ஊக்கம் தருகிற கருத்தியல் எதுவாக இருக்கிறது? சாதியின் இருப்புக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது,  பெரியாரும் அம்பேட்கரும் கண்டறிந்து சொன்ன வரலாற்று உண்மை பார்ப்பனியம். பெரியாரும் அம்பேட்கரும் பார்ப்பனியம் என்று சொல்வதற்கு முன்பு அது சனாதனமாக அங்கீகரிக்கப்பட்டது. சனாதன எதிர்ப்புதான்  தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும். சனாதன எதிர்ப்பு இல்லாத ஒரு கருத்தியல் தமிழ் தேசியமாக இல்லை. எனவே நான் தமிழன், நான் பேசுவது தமிழ் என்ற மொழி பற்றும் இடப்பற்றும் மட்டும் தமிழ் தேசியமாக இருக்க முடியாது.

குறிப்பு: மலேசிய தோழர்களுடனான இச்சந்திப்பை மலேசிய திராவிடர் கழகம் 21/8/2022-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.  

புதன், 14 செப்டம்பர், 2022

தேனீர் என்பது வெறும் தேனீர் அல்ல



"தேனீர் என்பது இவ்வளவுதான்

முதலில் தண்ணீரைக் கொதிக்கவிடு

பிறகு தேயிலையைப் போட்டுக் கலக்கு

பிறகு

உரிய விதத்தில் அருந்து

இது தெரிந்தால் போதும் உனக்கு"

- sen-no-rikyu

ஜென் கவிதைத் தொகுப்பில் இருக்கும் இக்கவிதையானது பல்வேறுக்காலக்கட்டங்களில் எனக்கு பல்வேறு புரிதலைக் கொடுத்திருக்கின்றன. முகநூலில் நான் இக்கவிதையை பகிர்ந்த காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டு அதன் memori வரும்போதெல்லாம் என் வாழ்க்கையின் சூழல் வெவ்வேறு திசையை நோக்கி வீசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஜென் நிலைக்கு என் மனதை நான் இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், சுவையான தேனீர் கலக்குவது சுலபமல்ல என்பதை உணர்வேன். அதோடு தேயிலைத் தோட்டத்தின் கண்ணீர்க் கதைகளை உள்வாங்கினால், அது தேனீர் அல்ல, நம் சமூதாயத்தின் ரத்தமும் கண்ணீரும் என்று புரிந்துவிடும். பின் தேனீரை அருந்தவே மாட்டோம்.

எரியும் பனிக்காடு அளவிற்கு தொடக்கமே இவ்வளவு தீவிரமாக போக வேண்டாம். தற்போது தேனீரோ அல்லது காப்பியோ இல்லாமல் ஓர் அனுவும் நமக்கு அசைவதில்லை என்பது உண்மை. ஆனாலும் சுவையான ஒரு தேனீரையோ அல்லது காப்பியையோ கலப்பது என்பது ஒரு கலை. சுவைத்து அருந்துவது என்பது மற்றொருக் கலை. இயந்திர மனிதர்களுக்கு இதெல்லாம் புரியாது; தெரியாது.

உலகின் எல்லா மனிதர்களிடமும் மாறாத தினமும் மேற்கொள்ளும் கடமைகள் என்று ஒருசில இருக்கின்றன. கடமையாக இல்லாமல் காதலோடு மேற்கொள்ளும் ஒரே விஷயம் தேனீர் அல்லது காப்பி அருந்துவதுதான்.  ஆவி பறக்கும் அந்தக் கிண்ணத்தை கையிலெடுப்பதிலிருந்து அதன் மணத்தை முகர்ந்து சுவாசத்தை வெளியேற்றும்வரை அத்தனையும் காதலாகும்; கசிந்து உருகும். காண்பதெல்லாம் இன்பமாகும். காலைத் தேனீர் நாசம் என்றால் அன்றைய நாளே சிலருக்கு சர்வநாசம்.

அதனால்தான், தேனீர் என்பது வெறும் தேனீர் அல்ல என்கிறேன் நான்.


மலேசியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தேயிலை பிராண்ட் BOH. இந்த ஆண்டோடு 93 ஆண்டுகள் நிறைவை எட்டுகிறது இந்த தேயிலை நிறுவனம். அதே போல மலேசியாவில் பிரபலமான இன்னொரு தேயிலை பிராண்ட் CAMERON VELLEY TEA. பாரத் குடும்ப நிறுவனமான இந்த தேயிலைத் தோட்டம் சுமார் 4 தலைமுறையை கண்டிருக்கிறது. இரண்டு தேயிலைத் தோட்டங்களும் கேமரன்மலையின் அடையாளமாகும். தவிர தனித்த வரலாறுகளை இந்தத் தேயிலைத் தோட்டங்கள் கொண்டிருக்கின்றன. இது தவிர Blue Vally தேயிலைத் தோட்டம் (தற்போது இந்தத் தோட்டம் இல்லை), தனியார்களுக்கு சொந்தமான சிறிய அளவிலான தேயிலைத் தோட்டங்களும் இருந்திருக்கின்றன.

நாம் கேமரன்மலைத் தேயிலைத் தோட்டத்திற்கு போவதற்கு முன்பாக கோமரன் மலையின் வரலாற்றை  தெரிந்துக்கொள்ளலாம். 1885-ஆம் ஆண்டு மலாயாவை ஆட்சிசெய்துக்கொண்டிருந்த பிரிட்ஷாரிடமிருந்து கேமரன்மலை வரலாறு தொடங்குகிறது.  பிரான்ஸ் நாட்டில் பிறந்து போர் சம்பந்தப் பட்ட இராணுவத் துறையில் அதிகாரியாக பணியாற்றிய வில்லியம் கார்டன் கேமரனை, மலாயா தீபகற்பத்தில் இருக்கும் திதிவாங்சா மலைத்தொடரை வரைபடமாக்கும் பணியை மேற்கொள்ள பிரிட்டிஷ் கவுன்சில், உத்தரவிட்டது. இக்காரணத்திற்காகவே அவர் மலாயாவுக்கு வரவழைக்கப்பட்டார்.


1885 இல் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தின் போதுதான் அவரும் அவரது குழுவினரும் இந்த அழகிய மலைப்பகுதியைக் கண்டுபிடித்தனர்.  உயரமான மற்றும் தாழ்வான சமவெளியைக் கண்டறிந்த ஆய்வுக் குழுவினர் அந்தச் சதுக்கம் சுவாரஸ்யமாகவும், வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்டதாக இருப்பதையும் கண்டறிந்தனர்.  இயற்கையின் கண்ணாமூச்சியாட்டத்தால் அவரும் அவரது குழுவினரும் ப்பகுதியின் உண்மையான இருப்பிடத்தை துள்ளியமாக பதிவு செய்ய முடியவில்லை. மாறாக, அங்கு செல்வதற்கான வழியை மட்டுமே வில்லியம் கேமரன் பதிவு செய்தார். வரலாற்றில் முதன்முதலாக அதைப் பதிவு செய்ததற்காக அவரின் பெயரையே இந்த அழகிய மலைக்குச் சூட்டினார்கள். அதற்கு முன்பு ஹில் ஸ்டேஷன் என்று மட்டுமே இம்மலை அழைக்கப்பட்டது.

மலைத்தொடரை வரைபடமாக்கும் பணி அந்தக் காலக்கட்டத்தில் சுலபமாக நடக்கவில்லை. சாலைகள் இல்லாத விலங்குகள் வாழும் வனமாக இருந்தது அந்த மலைத்தொடர். வில்லியம் கேமரனுக்கு உதவியாக Kulop Riau என்பவரும் உடன் இருந்தார். இருவரும் தன் குழுவினருடன் பலமாத காலங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த வரைப்படமாக்கும் பணியில் பொருள்களை சுமந்துவருவதற்கு யானைகள்  பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  ஆராய்ச்சிக்கும் வரைப்படத்திட்டத்திற்கும் தேவையான பொருள்கள் மற்றும் பலமாதப் பயணத்திற்கு தேவையான உணவுப்பொருள்கள், உடமைகள் என யானைகள் அம்மலைக்குச் சுமந்துச்சென்றிருக்கின்றன.  

அவர்கள் தொடக்கத்தில் தஞ்சோங் ரப்புத்தானின் ஒரு பகுதியிலிருந்து இப்பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இப்பயணத்தின் போதுதான் அக்குழு கிந்தா ஆற்றினையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். கிந்தா ஆறு உற்பத்தியாகும் கிணறுக்கொண்ட மலையை இவர்கள்தான் கண்டுபிடித்திருக்கின்றனர். கிந்தா ஆறு என்பது பேராக் மாநிலத்தின் குறிப்பாக ஈப்போவாசி மக்களுக்கு மிக முக்கியமான ஆறு ஆகும். மலையில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் நீரோட்டமானது ஈப்போ வழியாக பயணித்து பேராக் ஆற்றில் சங்கமிக்கிறது. விவசாய நிலங்களுக்கு இந்த ஆற்று நீரின் பங்கு மிகத் தேவையானது.

நீண்டப் பயணத்திற்குப் பிறகு இவர்கள் challi மலையின் உச்சியை அடைந்தனர்.  அங்கிருந்து பலவித மலைமுகட்டுகளை வில்லியம் கெமரன் பதிவு செய்தார். அதோடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் ஒரு சதுக்கப் பகுதியைக் கண்டுப்பிடித்தார். கடுமையான குளிரின் காரணமாக அவரால் அப்பகுதியை துள்ளியமாக பதிவு செய்ய  முடியவில்லை.  8 முதல் 25 செல்சியஸ் குளிர் இருந்தது என்கிறார்கள்.

1920-ஆம் ஆண்டு அந்த இடம் மீண்டும் அடையாளம் காணப்பட்டு, பின் கேமரன் ஹைலேண்ட்ஸ் என்று அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டு இன்று வரை அப்படியே அழைக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலைக் கொண்ட இந்த மலைப்பகுதி தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் விடுமுறைக்கான ஓய்வு இடமாக  பயன்படுத்தி வந்தனர். அவர்களின் பாரம்பரிய கட்டுமான வடிவில் பங்களாக்களையும், தேவாலயங்களையும், சொகுசு வீடுகளையும் அங்கு கட்டினர். தேனீர் பிரியர்களான ஆங்கிலேயர்கள், தேயிலை தோட்டம் அமைக்க கேமரன்மலை சிறந்த இடம் என்று நம்பினர். அங்கு தேயிலைத் தோட்டம் அமைக்க திட்டமிட்டனர்.   


 உலகப் பிரசித்திப் பெற்ற கேமரன்மலை BOH தேயிலை

கேமரன் மலையில் தேயிலை சாகுபடி நடவடிக்கைகள் 1920 களில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடைபெற்றன. பிரிட்டிஷரான J.A. Rusell மற்றும் அவரது சகாவான A.B. Milne இருவரும் முதன் முதலாக கேமரன்மலை தேயிலை சாகுபடிக்கு ஏற்ற இடம் என்பதை கண்டறிந்து அதற்காக விண்ணப்பம் செய்தனர். A.B. Milne தான் இலங்கை தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாக வேலைசெய்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. J.A. Rusell இவரும் சாதாரனமானவர் இல்லை.  பிரிட்டிஷராக இருந்தாலும் மலாய் மற்றும்  சீன மொழியைப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றுக் கூறப்படுகிறது. சீனர்களை கூலிகளாகக் கொண்டு ஈய வியாபாரமும் நம்மவர்களைக்கொண்டு ரப்பர் வியாபாரமும்கூட இவர் செய்திருக்கிறார். உலகளவில் இவ்வியாபாரங்களுக்கு பெரும் மந்தநிலை ஏற்பட்டபோது இவர் தேயிலைப் பயிரிட முடிவுச் செய்தார்.

 கேமரன்மலையின் அழகிய கன்னிக்காடு நிலப்பரப்பு நாட்டின் முதல் தேயிலைத் தோட்டமாக மாற்றப்பட்டது. தேயிலைப் பயிர்கள் இந்தியாவிலிருந்துதான் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.  பின் 1929-ஆம் ஆண்டு அதற்கு  BOH தோட்டம் என பெயர் சூட்டப்பட்டு இன்றுவரை அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. BOH என்ற பெயர் " Bohea" என்பதிலிருந்து பெறப்பட்டது.  சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு மலையின் பெயர் அது. Wuyi Hills என்றும் அம்மலைக்கு இன்னொருப் பெயர் உண்டு. இங்குதான் பேரரசர் Shennong, தேயிலையைக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. BOH என்றால் மாண்டரின் மொழியில் விலைமதிப்பற்ற மகிழ்ச்சி என்று பொருள்.

ஒரு ஸ்டீம்ரோலர், சில தொழிலாளர்கள் மற்றும் சில கழுதைகளைப் பயன்படுத்தி, அவர்கள் செங்குத்தான பாறைகள் மற்றும் கன்னி காடுகளை சீர்செய்து, திருத்தி  மலைப்பகுதிகளை தேயிலை தோட்டங்களாக மாற்றினர். அப்போது தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கில் இந்தியத் தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தங்குவதற்காக எஸ்டேட்-களும் உருவாகின. தரமான தேயிலையை பெற தேயிலைக் கொழுந்துகளை பார்த்து பார்த்து கையிலேயே பறித்திருக்கிறார்கள். முதுகில் சுமந்திருக்கும் பிரம்பால் செய்யப்பட்ட கூடையில் அல்லது கோணியில் கிள்ளிய தேயிலைகள் சேகரிக்கப்பட்டு மலையிலிருந்து கீழே இறக்கவேண்டும். அனைத்தும் மனித உழைப்புதான்.  தேயிலைத் தொழிலாளர்களின் கஷ்டங்கள், மாதச் சம்பளம், அடிப்படை தேவைக்கான போராட்டம் எல்லாமே இங்கிருந்த இந்தியத் தொழிலாளர்கள் அனுபவித்தார்கள். சமயத்தில் விஷ ஜந்துக்களாலும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

BOH என்று பெயர் சூட்டப்பட்ட 4 ஆண்டுகளில் அதன் தோற்றுனர், தனது 50-வது வயதில் சிங்கப்பூரில் காசநோயால் இறந்தார். அவரின் மனைவியான Kathleen நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும் BOH நிறுவனத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அவரின் முயற்சி வீணடியவில்லை. ஆணாலும் இரண்டாம் உலகப் போரின் போது, தேயிலைத் தோட்டம்  ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில்  பெரும்பாலும் பராமறிப்பு இல்லாமல் தோட்டங்கள்  கைவிடப்பட்டது. தொடர்ந்து மலாயா அவசரநிலையின் போது, கேமரன்மலை கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மையான பதுங்கு மண்டலமாகவும் இருந்திருக்கிறது.

இந்நிலையில்தான் Rusell-ளின் மகன் டிரிஸ்டன் தனது 21வது வயதில் தனது குடும்பத் தொழிலை கையில் எடுக்கிறார். தோட்டங்களைச் சுற்றி பாதுகாப்பு  துருப்புக்கள் நிறுத்தப்பட்டன, தோட்டத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் முயற்சிக்கு அது உதவியது. மலேசியா வெள்ளையர்களிடமிருந்து  சுதந்திரம் பெற்றப்பிறகு, பல பிரிட்டிஷ்க்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். ஆனாலும், BOH-வின் ஸ்தாபகக் குடும்பம் மலேசியாவிலேயே தங்குவதற்கு முடிவு எடுத்தனர்.  அதேபோல், இந்தியாவிலிருந்து கூலியாக வந்த தமிழர்கள் பல்வேறுக் காரணங்களால் அவர்களால் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. நிரந்தர குடியேற்றவாசிகளாக அவர்கள் மலாயாவிலேயே தங்க முடிவெடுத்தனர். அவர்களுக்காக BOH  நிறுவனம் தமிழ்பள்ளிகள் மற்றும் கோயில்களையும் கட்டிக்கொடுத்தனர். தற்போது  தேசிய வகை BOH தமிழ்ப்பள்ளி பிரிவு 1- பிரிவு 2  இரு பள்ளிகளையும் மலேசிய அரசாங்கமே எடுத்து நடத்துகிறது. என்றாலும் தோட்டத்தில் நமது மக்கள் மிகக் குறைந்த அளவே இருப்பதால்  பிரிவு 1 பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். பிரிவு 2 பள்ளியில் பூர்வக்குடி மாணவர்களும் தமிழ் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இன்று Rusell-ளின் பேத்தி Caroline Russell இந்நிறுவனத்தின் ஸ்தாபகராக இருக்கிறார்.  இவர் மலேசியாவில் பிறந்தபடியால் BOH நிறுவனம் ஒரு மலேசியருடையது என்று இந்த நாடு கூறிக்கொள்கிறது. பயண வழிகாட்டிகள் இப்படி கூறிதான் பலருக்கு BOH தோட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள்.  BOH நிறுவனம் கொண்டிருக்கும்  நான்கு தேயிலைத் தோட்டங்கள் மொத்தமாக 1200 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 மில்லியன் கிலோ தேயிலை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.  

 


CAMERON VELLEY TEA

1933-ல் பாரத் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ரிங்லெட்டிலிருந்து தானா ராதா வரை செல்லும் பிரதான சாலையில் பாரத் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. தாப்பாவிலிருந்து  கேமரன்மலையை நோக்கி பயணித்தோமானால் சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் அந்நிறுவனத்தின்  தேநீர் கடை,  நினைவு பரிசு கடையை  மற்றும், தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்ட அழகைக் காணாமல் செல்ல முடியாது. ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு, வரும் அந்த தேனீர் கடையை கண்டதுமே தேனீர் பிரியர்களால் அமைதிக்கொள்ளவும் முடியாது.

CAMERON VELLEY TEA நிறுவனத்தின் தோற்றுனர் வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலமான ஆக்ராவைச் சேர்ந்த சுபர்ஷத் பன்சால் அகர்வால் என்பவர்.  1910-ஆம் ஆண்டு வணிகம் செய்ய மலேசியாவிற்கு வந்தவர், தைப்பிங் நகரிலிருந்த அவரது மாமாவின் மளிகைக் கடையில் வியாபாரத்திற்கு உதவினார், பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்தை வாங்கி சில்லறை வணிகத்தை நடத்தினார்.  கேமரன்மலையை நன்கு தெரிந்துக்கொண்டவர் 1933-ஆம் ஆண்டு, பாரத் நிறுவனத்தை தொடங்கி,  தேயிலைப் பயிரிட்டு,  தேயிலை இலைகளை அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனைச் செய்தார்.

1937-ஆம் ஆண்டு பாரத் குழுமத்தின் ஸ்தாபகர் சுபர்ஷத் மறைவிற்குப் நிறுவனத்தின் அடுத்த வாரிசாக அவரது 9 வயது மகன் பிரிஜ்கிஷோரை விட்டுச் சென்றார். சிறுவனான பிரிஜ்கிஷோர் இந்தியாவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அக்காலக்கட்டத்தில் அவரின் உடன்பிறந்த சகோதரர்களான நந்தகிஷோர் மற்றும் கைலாஷ்சந்த் ஆகியோர் நல்லவிதமாக நிறுவனத்தை வழிநடத்தினர். இரண்டாம் உலகப் போர் மற்றும்  ஜப்பானிய ஆக்கிரமிப்பை இந்நிறுவனமும் எதிர்கொண்டது.  


பிரிஜ்கிஷோர் தனது 20வது வயதில் இந்தியாவில் படிப்பை முடித்துவிட்டு மலேசியா திரும்பினார். தற்போது MARDI நிலையமாக இருக்கும் நிலையம்தான் அப்போது தேயிலை விவசாய ஆராய்ச்சி மையமாக இருந்தது.  தேயிலை தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரிஜ்கிஷோர் பெற்றார். அவரது நிறுவனம் அதன் சொந்த தேயிலை இலைகளை பதப்படுத்தத் தொடங்கியதோடு அவற்றை சந்தைப்படுத்துவதில் வெற்றியும் கண்டது. முழுக்க குடும்ப ஆட்களையே அவர்கள் பங்காளிகளாக வியாபாரத்தில் சேர்த்துக்கொண்டனர். அவர்களின் இந்த கூட்டு வியாபாரம் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.  படிப்படியாக தமது வியாபாரத் துறையில் முன்னேறி இன்று வெவ்வேறுப் பிரிவுகளில் மொத்தம் எட்டு நிறுவனங்களை பாரத் குழுமம் கொண்டுள்ளது. அதில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் என்றால் Cameron Bharat Platations தான்.  பிரிஜ்கிஷோர் 2006- ஆண்டு காலமானார். வரது இரண்டு மகன்களான டத்தோ கேசவ் மற்றும் டத்தோ வினோத் ஆகியோர் இப்போது வரை பாரத் குழுமத்தை அதன் பாரம்பரியம் மாறாமல் வெற்றிகரமாக  இயங்கி வருகிறார்கள்.

 BOH மற்றும் CAMERON VELLEY TEA இருநிறுவனங்களுமே தொடக்ககாலத்தில் பாரம்பரிய முறைப்படி கைகளில் தேயிலை கொழுந்திகளை பறித்தனர். அதிக உடலுழைப்பு தேயிலைத் தோட்டங்களுக்குத் தேவைப்பட்டது. ஆண்-பெண் இருவருமே குறைந்த சம்பளத்தில் கடுமையாக உழைத்தார்கள். உலகத்தரம் வாய்ந்த தேயிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாட்டுச் சந்தைகளிலும் சந்தைப்படுத்தப்பட்டன.

இந்தக் கடும் உழைப்பை பதிவு செய்யும் விதமாக சங்கு சண்முகம் என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

அன்னை வளர்த்தது ரப்பரை-எங்கள்

அப்பன் வளர்த்தது கொப்பரை!

அண்ணன் வளர்த்தது செம்பனை-எங்கள்

ஆயிரம் சோதரிமார்கள் குருதியில்

ஆனது தானடா தேயிலை

ஒருகாலக்கட்டத்திற்குப் பிறகு பழைய பாரம்பரிய மரபுகளில் அவர்கள் தேயிலைகளை பறிப்பதில்லை.  சில ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலைகளை  கண்டபடிக்கு வெட்டி எடுத்தார்கள். தற்போது  பெரிய பெரிய கத்தரிகளைக் கொண்டு வெட்டியெடுக்கிறார்கள். தரம் குறித்தோ அல்லது சுவை குறித்தோ இரு நிறுவனங்களுக்கும் பெரிதாக அக்கரைக் கொள்ளாவிட்டாலும், விளப்பரப்படுத்தும்போது உலகத்தரம் கொண்ட தேயிலை என்றே சொல்கிறார்கள்.   

தற்போது இந்தியத் தொழிலாளர்களோ அல்லது மலேசியர்களோ தேயிலை பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவதில்லை.  முழுக்கவே அந்நிய தொழிலாளர்களைக் கொண்டுதான் வேலை நடக்கிறது.  குறிப்பாக பங்களாதேசத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்திற்கு கடுமையாக வேலை செய்கிறார்கள். 30 கிலோ மூட்டைகளாக கத்தரித்த தேயிலைகளை நிரப்பி அவர்களே மலையிலிருந்து மூட்டைகளை தோளில் சுமந்துவந்து இறக்குகிறார்கள். இலைகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில் நம்மவர்கள் சிலர் வேலை செய்வதைப் அங்கு பார்க்க முடியும்.  

அண்மையில் நான் BOH நிறுவனத்தின் தேயிலை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலை மற்றும் காப்பிக்கடைக்குச் சென்றிருந்தேன்.  இதற்கு முன்பும் நான் பலமுறை சென்றிருக்கிறேன். என்றாலும் இக்கட்டுரைக்காக ஒரு தேடலுடன் சுங்கை பாலாஸ் தேயிலை உற்பத்திச் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தேன்.    

இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட அல்லது சிலோன் என்று பெயர் பொறிக்கப்பட்ட  தேயிலைப் பதப்படுத்தும் steamroller இன்றும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடக்ககாலப் புகைப்படங்களும் அங்கு காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சிலக் காட்சிகள் BOH மற்றும் CAMERON VELLEY TEA  தேயிலை நிறுவனங்களிடையே கடுமையான வியாபாரப் போட்டி இருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. உள்ளூர் வியாபாரத்திற்காக BOH நிறுவனம் புலிபிராண்டிலும், CAMERON VELLEY TEA ‘மான்பிராண்டிலும் தமது தேயிலைகளை சந்தைப்படுத்தியிருக்கின்றனர்.  

தற்போதும்கூட இந்த இரு தேயிலை  நிறுவனங்களுக்குள் போட்டியிருக்கலாம். ஆனால், மலேசிய மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒரேத் தேர்வு நிச்சயமாக  BOH தேயிலையாகத்தான் இருக்கிறது. அவ்விஷயத்தில் BOH நிறுவனம் மலேசிய மனங்களை வெற்றிக்கண்டிருப்பது உண்மை. தவிர சுற்றுப்பயணிகளைக் கவர்வதற்காக BOH நிறுவனமும், CAMERON VELLEY TEA நிறுவனமும்  பல்வேறுச் சுவைகளில் தேயிலைகளை வணிக ரீதியில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும், சுற்றுப்பயணிகளுக்கு விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கேமரன்மலையை நோக்கி படையெடுக்கும் சுற்றுப்பயணிகள் அதிகரித்தபடியே இருக்கிறார்கள். என்றாலும்கூட பழைய கேமரன்மலை கொண்டிருந்த  அதன் அழகும் பொலிவும் இழந்து வெகுநாள் ஆகிவிட்டது. அதன் சீதோஷன நிலையும் பாரிய அளவில் மாற்றமடைந்து விட்டது. விவசாயத்திற்காக பெருமளவு காடுகள் சூரையாடப்பட்டுவிட்டன.   என்றாலும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இந்த தேயிலைத் தோட்டங்களுக்காகவும், எஞ்சியிருக்கும் சிறிய அளவிளானக்  காட்டில் மலையேறவும் வருகிறார்கள்.  , கேமரன் மலையின் அழகில் மனதைப் பறிகொடுத்தக் கதையையும் அவர்கள் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சு முழுக்க தேயிலை வாசம் கலந்தே இருக்கிறது.

குறிப்பு: edit செய்யசெய்யப்பட்ட இந்தக் கட்டுரை

https://wowtam.com/ta_in/3-malaysia-mount-cameron-precious-joy/11755/ என்ற 

இணையத் தளத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது.