புதன், 28 செப்டம்பர், 2022

மலேசியாவில் ஹூடுட் சட்டம் தேவையா?

இஸ்லாமியர்களால் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு சட்டமாக இருக்கிறது ஹூடுட். அல்லாவினால் தீர்மானிக்கப்பட்டது என்ற அடிப்படையில் ஹூடுட் சட்டத்தை இஸ்லாமியர்கள் ஏற்கிறார்கள். கடவுளின் உரிமையாகவும் அது கருதப்படுகிறது. ஹூடுட் சட்டத்தின் வழி வழங்கப்படும் தண்டனைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் சட்டத்துறைக்கோ, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கோ, நீதிபதிகளுக்கோ கூடக் கிடையாது. இஸ்லாமியர்களின் வேத நூலான அல்-குர் ஆன்னில் இதுப்பற்றித் தெளிவாக அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவில் பல இன மக்கள் வாழ்ந்தாலும் அது இஸ்லாமை தேசிய மதமாக கொண்ட  நாடாகும். ஆனால், இங்கு ஹூடுட் சட்டம் அமலில் இல்லை. என்றாலும் தொடர்ந்து அதை நடைமுறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக்கொண்டே  வரப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்,  ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். அதைச் சில இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்கவே செய்தன. ஆனால், தேசிய முன்னணிக்கு ஆதரவான மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அந்த கூற்றை கடுமையாகச் சாடிய வேளையில் பின் அவ்விவகாரம் பின்வாங்கப்பட்டது.

ஆனால் , இஸ்லாமிய மாநிலமாகக் கருதப்படும் கிளந்தான் மாநிலத்தில், மலேசிய எதிர்கட்சிகளில் ஒன்றான பாஸ் கட்சி ஹூடுட் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற மசோதாவையும் கோரிக்கையையும் தொடர்ந்து வழியுறுத்திக்கொண்டே வருகிறார்கள். மலேசிய வரலாறு படி, பேராசிரியர் சையத் முகமது நாஃயூப், ஹிஜ்ரி 812 (கி.பி.1409) ஆண்டுகளில் மலாக்கா மாநிலத்தை ஆட்சி செய்த மலாய் ஆட்சியாளர்கள் ஹூடுட் சட்டத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார். எனவே மலாயா இதற்கு முன்பு ஹூடுட் சட்டம் பின்பற்றியிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதரங்களும், எம்மாதிரியான தண்டனைகள் வழங்கப்பட்டன என்ற விவரங்களும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

பொதுவாக மது அருந்துதல், திருடுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல், துரோகம் செய்தல், மதத்தை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு ஹூடுட் சட்டம் வழி தண்டனை வழங்க வகைச் செய்யப்படுகிறது.

ஆனால், புனித நூலான அல்-குர் ஆனில் கூறியுள்ளபடி அப்படியே ஹூடுட் சட்டத்தை உலக இஸ்லாமிய நாடுகளில் முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை. நாட்டுக்கு நாடு அச்சட்டம் வித்தியாசப்பட்டிருப்பதுடன், இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஒரு குழப்ப நிலையையும் இந்தச் சட்டம் ஏற்படுத்துகிறது. அதற்கு உதாரணமாகச் சில நாடுகளில் அணுகப்படும் ஹூடுட் சட்டம் முறைகளை காணலாம்.

ஆச்சே, இந்தோனேசியா :

ஆச்சே, இந்தோனேசியாவில் பழைமையை நேசிக்கும் ஓர் ஊர். அங்கு 5 அதிகாரப்பூர்வ மதங்கள் நடப்பில் இருந்தாலும் இஸ்லாம் மதம் முதன்மையானதாக இருக்கிறது. 234 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் ஆச்சே தனித்த நிர்வாகமாகச் செயல்படுகிறது. எனவே, அங்கு ஷரியா சட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். அங்குக் கடமையிலிருக்கும் போலீஸ்காரர்களை ‘ஷரியா போலீஸ்’ என்றே அழைக்கப்படுகிறார்கள். 1,500-க்கும் மேற்பட்ட ஷரியா போலீஸ்காரர்களில் 60 பேர் வரை பெண்களும் உள்ளனர். அரபு நாடுகளைப் போலல்லாமல் ஆச்சேவில் பணியாற்றும் ஷரியா போலீஸ்காரர்கள் கடுமையாக நடந்துகொள்வது இல்லை. கடமையில் இருக்கும்போது, அவர்களிடத்தில் ஆயுதமும் வைத்திருப்பதில்லை. குற்றமிழைப்பவர்களிடத்தில் கடுமையாக எச்சரிக்கைகளை விடுவிக்கின்றனர். கல்வத், பாலியல் தொழில் ஆகிய குற்றங்களுக்கு ஹூடுட் சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். மற்ற குற்றங்களுக்குப் பொதுவான சட்ட தண்டனைத்தான் வழங்கப்படுகிறது.


புருணை :

2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி புருணை சுல்தான் ஹஸானல் போல்கியா, ஷரியா சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார். அதன் பொருட்டுக் கட்டம்கட்டமாக அந்தச் சட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், 1996-ஆம் ஆண்டு முதலே புருணை ஷரியா குற்றவியல் சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் கூறுகின்றன.

சவுதி அரேபியா :

இந்த நாட்டில் ஹூடுட் சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் தனிச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கொலை குற்றத்திற்காகக் குற்றவாளியின் சிரத்தை துண்டிக்கவும், பாலியர் தொழில் செய்பவர்களைக் கல்லால் அடித்துக் கொல்வதும் திருட்டு தண்டனைக்குக் கையைத் துண்டிக்கவும் அங்குக் குற்றத்திற்கான தண்டனைகளாக இருக்கின்றன.

தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு, நீதிமன்றம் குற்றவாளியின் நெருங்கிய உறவினர்களுக்கு அல்லது வாரிசுதாரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அவர்கள் குற்றவாளிக்காகக் கருணை மனுவை கோரலாம். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் ஈராண்டுகள் சிறைச்சாலையில் வைக்கப்படுவார். பின் அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்படும். 

சோமாலியா :

இரு தலைமுறைகளாக, உள்நாட்டுப் போரினால் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் நாடு இது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் ஷரியா சட்டம் அமலில் இருக்கிறது. கடற்கொள்ளைகளும், கடத்தல்களும் மலிந்து கடக்கும் அங்கு ஹூடுட் சட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது.

பாக்கிஸ்தான், லிபியா :

இந்த இரு நாடுகளிலும் ஹூடுட் சட்டம் முழுமையாகப் பின்பற்றி வருகின்றன.

மலேசியாவை பொறுத்தவரை ஹூடுட் சட்டம் குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் புரியும்படி விளக்குவதற்குச் சமய போதகர்கள் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாம் அல்லாதவர் மத்தியில் இச்சட்டம் பற்றிய விவரங்களை வெளியிட அவர்கள் தவறிவிட்டனர். அதன் காரணமாகவே சவூதி அரபு நாடுகளில் செயற்பாட்டில் இருக்கும் தண்டனைகள் கொடூரமானதாக இருப்பதால் அதை மலேசியாவுக்குக் கொண்டு வருவதில் பலமான எதிர்ப்புகள் சில இஸ்லாமியர்களிடத்திலும் இஸ்லாம் அல்லாதவர்கள் இடத்திலும் வைக்கப்படுகிறது.


கடந்த மே மாதம் பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாடி அவாங் மக்களவையில் சமர்பித்த ஹூடுட் மசோதாவை குறித்துத் தற்போது தேசிய முன்னணி கட்சி இணக்கம் கண்டுள்ளதாக அதன் தலைமை செயலாளர் தெங்கு அட்னான் கூறினார். ஆனால், தேசிய முன்னணியின் 13 பங்காளி கட்சிகளுக்கிடையே இதற்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இஸ்லாம் அல்லாத தேசிய முன்னணியின் ஆதரவுக் கட்சிகள் ஹூடுட் சட்டத்தை எதிர்த்தே வந்துள்ளன என்பது அதற்குக் காரணமாகும். தற்போது சுகாதாரத் துறை அமைச்சராகவும் மஇகாவின் தேசிய தலைவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அத்திட்டம் அமலுக்கு வந்தால் தன் அமைச்சர் பதவியைத் துறப்பேன் என்று  கூறினார். மேலும், மசீச தலைவரும் தன் அமைச்சர் பதவியைத் துறப்பேன் என்று தனது எதிர்ப்பை ஹூடுட் சட்டத்திற்கு எதிராகக் காட்டியிருந்தார்.  தேசிய முன்னணியின்  முக்கிய ஆதரவாளர் தலைவர்களின் இந்த எதிர்ப்பு தேசிய முன்னணிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்த போது அதன் உட்பூசல் தீர்ந்தபாடில்லை.

மலேசியாவில் ஹூடுட் சட்டம் மலாய்க்காரர்கள் அல்லது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தொடர்ந்து கூறிவந்தாலும், இஸ்லாம் அல்லாதவர்களின் மீது அந்தச் சட்டம் மெல்ல மெல்ல பாயலாம் என்ற ஐயம் இருக்கவே செய்கிறது. ஹூடுட் சட்டத்தின் செயலாக்கம் வெற்றிபெறும் பட்சத்தில், இதர மாநிலங்களுக்கும் அச்சட்டம் விரிவாக்கம் காணும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் மூலம் இந்நாடு இஸ்லாமிய நாடாக மட்டுமே அடையாளம் காணப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இதனிடையே இஸ்லாமிய பேராசிரியர் தாரிக் ரம்டான் “மாறி வரும் உலகச் சூழலுக்கேற்ப இஸ்லாமியர்கள் நடந்து கொள்வது நல்லது” தொடர்ந்து வழியுறுத்தி வரும் வேளையில், அல்லாஹ்வின் சட்டங்களை  அவர் அவமதிப்பதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

மற்றுமொரு இஸ்லாமியத் தலைவர் அஸ்-ஷேக் முஸ்தபா அல்-ஸர்க்கா கூறுகையில் பழமை வாய்ந்த சட்டத்தை இப்பொழுது பின்பற்றினால், அது இஸ்லாத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்துமென்றார்.

ஆனால், இஸ்லாத்தை பின்பற்றும் நாடானா மலேசியா இன்னும் ஹூடுட் சட்டம் குறித்துத் தீவிரமாக இருப்பது நாட்டு மக்களிடையே குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது.

2014-ஆம் ஆண்டு 60 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றினைந்து ஹூடுட் சட்டத்தை மாநில அளவில் அமல்படுத்துவது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று 8 காரணங்களை முன்வைத்துக் கூட்டறிக்கை ஒன்றை தயாரித்துக் கையெழுத்திட்டன. அந்த அறிக்கையில் முதலாவதாக , ‘மலாயா, சாபா, சரவாக் மற்றும் அன்றைய சிங்கப்பூர் ஆகியவை ஒன்றிணைந்து 1963 ஆம் ஆண்டில் மலாயா அரசமைப்புச் சட்டத்தைப் புதிய கூட்டரசு (Federation) அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக ஏற்றுக்கொண்டதன் வழி மலேசியா உருவாக்கப்பட்டது. செயல்முறையில், மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கருதப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த ஏற்பாட்டின் முழு அமைப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தையின் வழி மாற்றாத வரையில் ஹூடுட் சட்டத்தை மாநில அளவில் அமல்படுத்துவது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என்று வழியுறுத்தியிருந்தது இங்குக் குறிப்பிடதக்கது.

ஹூடுட் சட்டம் வந்தால் குற்றச்செயல்களைக் குறைக்கலாம் என்றும் குறையும் என்பதும் காரணம் காட்டப்படுவது அர்த்தமற்ற ஒன்றாகவே படுகிறது. காரணம் தற்போது ஹூடுட் சட்டங்களை நிறைவேற்றும் நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பல பயங்கரங்களும் அறமற்ற தண்டனைகளையுமே ஹூடுட் சட்டம் என்ற பெயரில் நிறைவேற்றியிருப்பதையும் மலேசியர்கள் அறியாதவர்கள் அல்ல.


குறிப்பு:

–     மசீச (மலேசிய சீனர் சங்கம்)

–   மஇகா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்)

- பாஸ் (இஸ்லாமிய கட்சி + எதிர்கட்சி)

–  அம்னோ (இஸ்லாமிய கட்சி + ஆளுங்கட்சி)

மேற்கோள்: செம்பருத்தி இணையத்தளம், தி ஸ்டார், உத்துசான் மலேசியா, இஸ்லாம் பீடியா இணையத்தளம்


நடு இணைய இதழுக்காக 2017-ல் எழுதிய கட்டுரை இது. 

https://naduweb.com/?p=3087 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக