புதன், 30 நவம்பர், 2022

ஓவியர் சந்துரு


 நமது நாட்டின் இந்திய நவீன ஓவியர்கள் என்று பட்டியலிடும்போது சட்டென நினைவில் மோதும் பெயர் ஓவியர் சந்துரு. கிட்டதட்ட நாட்டில் எல்லா தமிழ்பத்திரிகையிலும், வார மாத இதழ்களிலும் இவரின் ஓவியங்கள் இடம்பிடித்திருக்கின்றன. இவரின் ஓவியங்கள் போலவே இவரின் கவிதைகளும் தனித்துவமானவை, பாராட்டுக்கள் பெற்றவை. நவீன ஓவியராகவும், கவிஞராகவும், பக்க வடிவமைப்பாளராகவும் தனது தனித்துவத்தை பதிவு செய்திருக்கும் ஓவியர் சந்துரு தனது ஓவியக் கண்காட்சியை தலைநகரில் நடத்தவிருக்கிறார்.  

நாளுக்கு நாள் மழை நம்மை தொடர்ந்து விரட்டிக்கொண்டிருக்க,

தேர்தல் புயலும் எங்கும் முகாம் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், art voice ஓவிய மையத்தில், கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தவரிடம் நேர்காணல் செய்தேன்..


1. இது உங்களுக்கு எத்தனையாவது கண்காட்சி?

சந்துரு: இது என்னுடைய மூன்றாவது தனித்த (solo) ஓவியக் கண்காட்சி. கூட்டு வகையில் 10-க்கும் மேற்பட்ட கண்காட்சியை முடித்திருக்கிறேன்.

என் முதல் ஓவியக் கண்காட்சி 2009-இல் தலைநகர் சோமா அரங்கத்தில் வல்லினம் குழுமத்தின் ஏற்பாட்டில் நடந்தது. எல்லா ஓவியங்களும் கருப்பு வெள்ளை கோட்டோவியங்களாகவே காட்சிக்கு வைக்கப்பட்டது. பத்தாங் பெர்ஜுந்தை சுங்கை திங்கி தோட்டத்தில் வாழ்ந்த காலத்தில்,  நான் பார்த்த தோட்ட பால் மர வாழ்க்கையை வரைந்து அப்போது காட்சிக்கு வைத்தேன். டத்தோ சகாதேவன் மற்றும் ரத்தினவள்ளி அம்மையார் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இதே தோட்ட வாழ்க்கையை மையப்படுத்தி வரைந்த கோட்டோவியங்களே என் இரண்டாவது கண்காட்சியிலும் வைக்கப்பட்டது. 2015-இல் நடந்த இந்நிகழ்வில் தமிழ் நாட்டின் பிரபல ஓவியர் மருது அவர்கள் கலந்து சிறப்பித்து வாழ்த்திச் சென்றது என்றும் மறக்க இயலாத தருணம்.

இப்போது நடக்கவிருக்கும் இந்த  ஓவியக் கண்காட்சியில் மிக சமீபத்தில் நான் வரைந்த வண்ண நவீன ஓவியங்களை காட்சிக்கு வைக்கின்றேன். என் முந்தைய ஓவியங்களைக் காட்டிலும் இது முற்றிலும் மாறுப்பட்டிருகும். 


2. உங்களின் கண்காட்சிக்கு women in profile அதாவது சுய தோற்றத்தில் பெண்கள் என தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் கருத்தினை தேர்ந்தெடுத்தீர்கள்? 

சந்துரு: நீரின்றி அமையாது உலகு என்பார்கள், பெண்கள் இன்றி அமையாது  உலகு என்பேன் நான். அன்பை அளவில்லாமல் தரும் பெண்களை உண்மையான சுதந்திரத்தில் வாழ விடுகின்றோமா? சமயத்தின் பெயரால் குடும்பத்தின் பெயரால் கௌரவத்தின் பெயரால் அடக்கவே முயல்கிறோம். பெண்கள் ரொம்ப நாளாகவே போராடிக்கொண்டிருக்கிறாள். அவர்களை கட்டுப்படுத்துவதை நிறுத்தினாலே போதும். 

நான் பெண்களை அவர்களின் சுயத்தை  கொண்டாடுகிறேன், மதிக்கிறேன்.   அதனால்தான் இப்படியான ஒரு தலைப்பு.

3. மலேசிய சூழலில் நவீன ஓவியங்களின் புரிதலில் முன்னேற்றம் இருக்கிறதா?

சந்துரு: அபார முன்னேற்றம் இல்லைதான் என்றாலும் நல்ல முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. மெதுவாக ரசிக்க தொடங்கியிருக்கிறார்கள், கேள்விகள் கேட்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ரசனைகள் மாறிவருகின்றன. 

4. உங்கள் ஓவியங்களின் மீது எழும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

சந்துரு: 90-களில் பத்திரிகைகளில்  நவீன ஓவியங்கள் வரையும்போது கடுமையான விமர்சனங்கள் இருந்தன. காலப்போக்கில் விமர்சனங்கள் காணாமல்போய்விட்டன. என் ஓவியங்களை ஏற்றுக்கொண்டனர். ஓவியம் புரிந்தவர்கள் வைக்கும் விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வேன். புரியாதவர்கள் வைக்கும் விமர்சனங்களை குழந்தைகள் செய்யும் தவறுகள் என்று கடந்து சென்றுவிடுவேன்.

5. தற்போது இந்த ஓவியக் கண்காட்சி தொடர்பான விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

சந்துரு: ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ (Women in Profile) எனும் தலைப்பில் நடக்கவிருக்கும் இந்த ஓவியக் கண்காட்சியை நம் நாட்டு ஓவியர் திரு ஸ்டீபன் மேனன் தலைமையில் இயங்கும் ‘ஆர்ட் வாய்ஸ்’ (Art Voice) எனும் குழுமம் ஏற்று நடத்துகிறது. வளர்ந்து வரும் மலேசிய இந்திய ஓவியர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு ‘ஆர்ட் வாய்ஸ்’ எனும் இந்த குழுமத்தை தொடங்கியுள்ளார் திரு ஸ்டீபன் மேனன். ஓவியர்களுக்கு வழிகாட்டியாக பல பெரும் உதவிகள் செய்து வருகின்றார். இவருக்கு நானும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். Art Voice Gallery 28, Jalan Kovil Hilir, Sentul, Kuala Lumpur எனும் இடத்தில் 13 நவம்பர் 2022 ஞாயிறுக்கிழமை இரவு 8.00 மணிக்கு திறப்பு விழா காணும் என் ஓவியக்கண்காட்சிக்கு அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.


6. ஓவியத்துறையில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

சந்துரு: நமது நாட்டில் ஒரு பாரபட்சம் இருக்கிறது. தேசிய கலைஞர்கள் என்று தேசியமொழி பேசும் கலைஞர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறார்கள். அனைத்துக் கலைஞர்களும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டும். நம் நாட்டில் தமிழ் பத்திரிகையில் வேலை செய்து காணாமல் போன தலைசிறந்த ஓவியர்களை நான் அறிவேன். நான் உட்பட அந்த தூண்டிலில் சிக்கியவர்கள்தான். ஓவியர்களாக மிளிர நினைப்பவர்கள் பக்க வடிவமைப்பில் தொலைந்து போகிறார்கள். இந்த மரபை நான் உடைத்து தாண்டிக்கொண்டிருக்கிறேன். மலேசியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் என் ஓவியங்கள் அறியப்பட வேண்டும்.  அதற்கான முயற்சிகள் தீவிரமாகிகொண்டிருக்கின்றன... 

நன்றி :  தமிழ்மலர் 13/11/2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக