ஞாயிறு, 18 டிசம்பர், 2022

"பூமியே என்னை மன்னித்துவிடு" -சூழலியல் உரையாடல்

 

ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில், இந்திய மாணவர்களுக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தன்னாளுமை முகாம் பயிற்சி முகாமில்,  மூன்றாம் நாளில் (14/2/2022)  ஒரு பயிற்றுநராக நான் (யோகி)  கலந்துகொண்டேன்.

இரு வெவ்வேறு தலைப்புகளில் உரையாடிய நான், அம்மாணவர்களோடு கிட்டதட்ட  9 மணித்தியாலங்கள்  இருந்தேன். அவர்களுக்கு பயிற்சியை வழங்கிய அதே வேளையில் நானும் அவர்களிடமிருந்து பாடம் கற்றேன் என்பது மறுப்பதற்கில்லை.

இதற்கு முன் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் சூழலியல் சார்ந்து பரவலான உரையாடலைக் கொண்டு செல்ல வேண்டும் என்று  தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவு அதற்கான விழிப்புணர்வை விதைக்கத்தான் செய்திருக்கிறேன்.

அந்தவகையில் இம்மாணவர்கள் மத்தியில் அவர்களிடத்திலிருந்தும், அவர்களில் ஒருவராக இருந்தும் உரையாடியது எனக்கு எந்தத் தயக்கமோ,  சிரமமோ ஏற்படவே இல்லை.  தவிர அன்று நான் சூழலியல் சார்ந்து பேசிய அனைத்தையுமே மாணவர்கள்  வியப்பாகவும் அதே வேளையில் ஒரு சிலருக்கு  குற்ற உணர்வு ஏற்படுவதையும் உணர்ந்தேன்.  50 மாணவர்களில்  10 பேருக்காவது  இந்த பூமியின் மீது அன்பும் அக்கரையும் ஏற்பட்டிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அதுவே இந்த பயிற்சியின் வெற்றியுமாகவும் கருதுகிறேன்.

உறுதியாக இந்த நம்பிக்கையை நான் கொள்வதற்கான காரணங்கள் இரண்டு.  “நாம் இஷ்டத்திற்கு  அகலும் போது,  இந்த பூமி நம்மை ஒரு போதும் இகழ்ந்ததே இல்லை, விசுவாசமற்றவர்கள் நாம்” என்று நான் கூறியபோது ஒருவரும் சில வினாடிகள் பேசவே இல்லை. “மன்னிப்புக் கேளுங்கள்” என்று நான் சொன்னதற்கு அனைவருமே ஒருசேர மன்னிப்புக் கேட்டனர். அதில் ஒருவர் பூமியை தொட்டு வணங்கி மன்னிப்புக்கேட்டதையும் நான் கண்டேன்.

இரண்டாவது அவர்களுக்கு அளித்தப் பயிற்ச்சியின் போது அவர்கள் வரைந்த ஓவியமும், அதை முன் நின்று பேசிய விதமும்  என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது மட்டுமல்ல, அன்று நான் உரையாடியது பாழாகவில்லை என்பதை எனக்கே உணர்த்தியது. 

நான் கொண்டு வந்திருந்த சில சூழலியல் புகைப்படக்காட்சிகள், அதில் நம்ப முடியாத மலேசியப் புகைப்படங்கள், தண்ணீர் குறித்து அறியாத தகவல்கள், ஒலி மற்றும் ஒளி மாசு குறித்தான விஷயங்கள் அனைத்தும் அவர்களை  சிந்திக்க வைத்தன. 

இறுதியாக இனிமேல் நாங்கள் ஞெகிழி தண்ணீர் புட்டியை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினாலும்,  அதை எந்த அளவுக்கு அவர்களால் பின்பற்ற முடியும் என்று என்னால் சொல்ல  முடியாது.  காரணம் சின்னக் குழந்தைகள் எடுக்கும் ஒரு சரியான முடிவுக்கு,  குடும்பம் மற்றும் அவர்களின் சுற்றம் ஆதரவு தரவில்லை என்றால்  அவர்கள் என்னதான் செய்வார்கள்?


ஆனாலும், நான் அந்த section-னை முடிக்கும்போது ஒரு மாணவி, “நாளையிலிருந்து நாம் வீட்டிலிருந்து  தண்ணீர் அருந்தக் குவலையைக் கொண்டு வருவோம். உயிரைக் கொல்லும் ஞெகிழியைக் பயன்படுத்த வேண்டாம்” என்று சொன்னார்.  அவரின் இந்தச் சிந்தனையை நாம் மதிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும். குழந்தைகளை அதற்கு பழக்க வேண்டும். நாளை இந்த பூமிக்காகவும் இயற்கைக்காகவும் சூழலியலுக்காகவும் போராடப்போகும் தலைமுறை  காரைநகர் நட்புறவு மையத்தில் இருக்கிறார்கள்.  தொடர்ந்து அவர்களிடத்தில் இந்தச் சுற்றுச்சூழல் குறித்து உரையாடுவது மிகவும் அவசியமான ஒன்று.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சகோதரர் மோகன் , தோழர் சாந்தா பெருமாள், அன்பு பாராட்டிய  நண்பர் செல்வராஜ் ஆகியோருக்கு எனது அன்பு.  மற்றும் அங்கே பொறுப்பில் இருந்தும் கவனித்துக்கொள்ளும் சகோதர சகோதரிகள்  அனைவருக்கும் பாராட்டுக்கள்.  


மாணவர்களின் தன்னாளுமையை உயர்த்த,   இடைநிலைப் பள்ளியில் அவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும் கவனமுடனும்  தொடர  மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு என்றென்றும் தொடர வேண்டும். இந்த முயற்சியை மேலும் விரிவு படுத்த வேண்டும்.

நான் முழுமையாக அங்கிருந்து பார்த்ததில் குறை என்று சொல்ல எதுவும் இல்லை. முடிந்த அளவு ஞெகிழி பயன்பாட்டை மட்டும் கழகத்தினர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு அடுத்தடுத்த பயிற்சிகளில் மாணவர்கள் இன்னும் ஆழமாக சூழலியலைப் புரிந்துக்கொள்ள அவர்களை வெளியில் அழைத்துச் செல்லலாம். அரைநாள் பசுமை பயணத்தை மேற்கொள்வதுடன், இந்த பூமியை மனிதர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கும் பறவை, புழு, எறும்பு, மரங்கள், செடி கொடிகள்  முதலான உயிரிகளின் பங்கு என்ன என்பதையும் இளைய தலைமுறையினருக்கு விளக்கலாம்.  இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நன்றி

யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக