வியாழன், 29 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா? பாகம் 1


கொஞ்சோண்டு ரசனை, கேள்வி கேட்கும்போது முகத்தில் கொஞ்சம் கடுமை, கொஞ்சம்  புத்திசாலித்தனம்  நிறைய பணமிருந்தால் போதும்; பாலித்தீவையையும் ஒரு கை பார்த்துவிட்டு வந்துவிடலாம். 4 நாட்களுக்கு 300 டாலர் (1200 ரிங்கிட்) மற்றும் மேற்கொண்டு 300 ரிங்கிட் எனக்கு மட்டுமே அங்கே செலவாகியிருக்கிறது. இத்தனைக்கும் தங்குமிடத்தை நான் இணையத்தில் புக் செய்துக்கொண்டேன். அது போக ஏற்பட்ட செலவு இது. மேலும் இதுவரை நான் மேற்கொண்ட நிதிநிலை பயணங்களில் அதிகப் பணம் செலவாகியிருப்பது பாலியில்தான். கொஞ்சம் விவேகமுடன் நடந்துகொண்டால் பாலியில் நிதி நெருக்கடியில் பலியாகாமல் திரும்பி வந்திடலாம். பாலியல் சேவைகள் , மதுபானக் கொண்டாட்ட விரும்பிகளுக்குப் பாலி சரியான தேர்வு. தேனிலவுக்கு ஏன் பாலியை தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் என்னால் பதில் காண முடியவில்லை.

 குட்டிக் குட்டி தீவுகளும்கடற்கரைகளும் நிறையவே  இருக்கின்றன. அதைத் தவிர தேன்நிலவு கொண்டாட்டத்திற்கு சிறந்த இடமாக என் வரையில் தோன்றவில்லை.  பாலி தீவில் நான் ரசித்தது என்ன ?

2018-ஆம் ஆண்டு நான் சென்ற பயணத்தை பதிவு செய்கிறேன்.

மிகவும் பாதுகாப்பாக உணரக்கூடிய நண்பர்களில் ஒருவரான அருமை நண்பர் சாகுல் இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்தார். ஏர் ஏசியா விமானத்தில், 3 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு  தீவின் Ngurah Rai International விமான நிலையத்தை அடைந்தபோது இரவாகியிருந்தது. 10 டாலரில் தனியார் வாடகை வண்டி ஏற்பாடு செய்து குட்டா (KUTA) நகரை அடையலாம் என இணையத்தில் உறுதியான தகவல் இருந்தது. குட்டா நகருக்குச் செல்வதற்கு 20 நிமிடங்கள் எடுக்கும்.  அங்கே  வாடகை வண்டி ஓட்டுநர்கள் 20-லிருந்து 25 டாலர் வரை பேரம் பேசுகிறார்கள். விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்து விசாரித்தாலும் விலை ரொம்ப வித்தியாசமாகவே இருக்கிறது.

ஒரு வாடகை வண்டி  நிறுவனத்தில் 85,000 இந்தோனேசிய ரூபியா கேட்டார்கள்.  தெரிந்தவரை அது மட்டுமே குறைவான கட்டணம். நமது பணப்பையிலிருந்து பணம் கரையப்போகிறது என்பதற்கான பிள்ளையார் சுழியும் அங்குதான் தொடங்குகிறது.

நான் இணையத்தில் பதிவு செய்திருந்த தங்கும் விடுதி, கேளிக்கை மையம்கள் நிறைந்திருந்த மையப்பகுதியாகும். அதன் தொடக்கம் 2002 -ஆம் ஆண்டு அங்கு நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்தக் குண்டு வெடிப்பில் 22 உலக நாடுகளைக் சேர்ந்த 202 பேர் பலியாகியிருந்தனர். 324 பேர் படுகாயமடைந்தனர் என்பது வருத்தமான செய்தியாகும்.

விமான நிலையத்திலிருந்து குட்டா வந்தடையும்  சாலை முச்சந்திகளில் மஹாபாரத  கதாபாத்திர சிலைகள் பிரமாண்டமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சிலைகளில் அழகு மற்றும் நேர்த்தியைக் காண முடிந்தது. மலேசியாவில் இம்மாதிரியான சிலைகளை, இந்திய நாட்டுச் சிற்பிகளால் செய்யப்பட்டு விமானம் வழி கொண்டுவரப்படும். அல்லது சிற்பியை வரவழைத்தே இங்குச் செய்வார்கள். இந்தோனேசிய உடை, ஆயுதம் மற்றும் கலாச்சார பாணியில் சிலையை வடிவாக வடித்திருக்கிறார்கள். மஹாபாரத கதா பாத்திரங்களான அர்ஜுனனும் கடோட்கஜனும் சீதை உபதேச சிலையும் கண்கள் விரியும் ஆச்சரியத்துடன் சாலை முச்சந்திகளுக்கு அழகூட்டுகின்றன.

பாலியில் வந்திறங்கிய அன்றே ஒரு சிம் கார்டுக்கு ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. காரணம் எங்குப் பயணிப்பதாக இருந்தாலும் இணையம் உங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். வழி கேட்டவர்களிடத்தில் வந்த முதல் ஆலோசனையே GOOGLE MAP உபயோகியுங்கள் என்பதுதான். பரவலாக  குறைந்த விலையில் கிடைக்கும் வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு GOOGLE MAP உதவியுடன் உணவு விடுதியிலிருந்து சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கு போய்வரலாம். மேலும் GRAB செயலி அங்கு உபயோகத்தில் இருக்கிறது . அதுவும் பயணிக்க உதவியாக இருக்கும்.

இந்தோனேசியா நாட்டுக்கு நான் இதற்கு முன்பு இருமுறை போயிருந்தாலும், பாலி தீவுக்கு சென்றது இதுதான் முதல் முறை. இந்தோனேசியா கொண்டிருக்கும் 33 மாகாணங்களில்,  பல அழகிய சுற்றுலாதளங்களும் தீவுகளும்  இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனிதனியே பல சிறப்பு அம்சங்கங்களைக் கொண்டதாக இருக்கின்றன. மேலும் சில தீவுகள்  தனி நாடுபோல செயற்படக்கூடியதாக இருக்கும். பாலியும் அவ்வாறான தீவுதான்.  கலை கலாச்சாரம், மதம், உணவு மற்றும் பணம் பட்டுவாடா வரைக்கும் மற்ற மாகாணங்களைக் காட்டிலும் அதிக வித்தியாசங்களை  பாலி கொண்டிருக்கிறது.

டென்பசார் இதன் தலைநகரமாகும். குடியரசு நாடான இந்தோனேசியா, இஸ்லாமிய சமயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்றாலும் பாலி தீவை மட்டும் கணக்கெடுக்கையில் 90% இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.  நாம் பின்பற்றும் இந்து சமயத்திற்கும் அவர்கள் பின்பற்றும் இந்து சமயத்திற்கும் அதிக வேற்றுமைகளும்   சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஜோக் ஜகார்தாவில் இருக்கும் இந்து கோயில்களுக்கும் பாலியில் இருக்கும் கோயில்களுக்கும்கூட வித்தியாசங்கள் இருக்கின்றன.

இந்தியர்கள் வாசலில் கோலம் வரைந்து, பூ வைப்பதுபோல, பாலி மக்கள்,  தென்னை ஓலையில் செய்த சிறிய கிண்ணத்தில் பூ பலகாரங்களை வைத்து வாசலில் வைக்கிறார்கள். சிலர் ஊதுவர்த்தியையும் கொளுத்தி வைக்கின்றனர்.  குறிப்பிட்ட நேரமென்று இல்லாமல் எந்த நேரத்திலும் அவர்கள் அப்படி வைக்கின்றனர் . பெண்கள் கூந்தலில் பூ சூடிக்கொள்கின்றனர் .  இறை வழிபாட்டுக்குப் பிறகு நெற்றியில் பூசிக்கொள்ளும்  விபூதியாக அவர்கள் பயன்படுத்துவது உடைத்த அரிசியை.  ஒரு கிண்ணத்தில் பிசின் மாதிரியான ஒரு திரவத்தோடு உடைத்த அரிசையை கலந்து வைத்திருக்கிறார்கள்.  நெற்றியில் இட்டுக்கொள்ளும்போது அது அப்படியே ஒட்டிகொண்டு இருக்கிறது.

பாலி மக்கள் பாரம்பரிய உடை அணியாதவர்களை  கோயில் வளாகத்திற்குள் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. மேலும் வழிபாடு இல்லாத நாட்களில் அவர்கள் கோயிலையும் திறப்பதில்லை. சுற்றுப்பயணிகள் கோயிலின்  வெளித் தோற்றத்தை மட்டும் காணலாம். கோயிலை அவர்கள் 'பூரா' (PURA) என்று சொல்கிறார்கள். ஜோக்ஜகார்தாவில் சண்டி எனக் குறிப்பிடுவார்கள் .

கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் சோறு  பிரதான உணவாக அங்கு இருக்கிறது. டீ மற்றும் காப்பி வகைகள் கடைக்கு கடை மாறுபட்ட சுவையில் இருக்கிறது.

பாலியின்  உயிர் நாடியாகப் பாலி கடற்கரை இருக்கிறது. பணம் மாற்றும்போது மிகுந்த கவனம் தேவை.  தெருவுக்குத் தெரு அதன் விலை நிர்ணய  அளவு மாறுபடுகிறது.  குறிப்பாக 1. அமெரிக்க டாலருக்கு 14,899 இந்தோனேசிய ரூபியா மாற்றுகிறார்கள். நான்கு கடை தள்ளிப்போனால் 1. அமெரிக்க டாலருக்கு 14,000 ரூப்பியவாக குறைவாக இருக்கிறது அல்லது அதைவிடக் கூடுதலாகவும் இருக்கிறது. பணம் மாற்றும் இடத்தில் எனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை பிறகு சொல்கிறேன்.   

(தொடரும்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக