திங்கள், 14 பிப்ரவரி, 2022

சரித்திரம் படைத்த துப்புரவு தொழிலாளர்கள்…

சொல்லைவிட செயலுக்கு சக்தி அதிகம்...
சரித்திரம் படைத்த துப்புரவு தொழிலாளர்கள்…
“துப்புரவு பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே” என்று சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறும்போது, 530 கிலோ மீட்டர் பினாங்கிலிருந்து புத்ராஜெயாவரை, மோட்டார் சைக்கிளில் கடந்துவந்த பயணத்திற்கு ஓர் அர்த்தம் பிறந்திருக்கு என்று அந்தத் துப்புரவு தொழிலாளர்கள் பெருமைக்கொண்டனர்.

அன்றைய தினம் (8/2/2022) முன்னெடுத்தப் போராட்டம் வெற்றியடைந்த நாள் மட்டுமல்ல, அது ஒரு சரித்திர நாள். சரித்திரம் படைத்த தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள் என மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் அருள்செல்வன் தெரிவித்தார்.

நமது நாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் படைத்த அந்த வரலாற்றினை காண்போம்…

158 அரசு மருத்துவமனைகள் 50 ஆயிரம் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டது தீபகற்ப மலேசியா. தீபகற்ப அரசு மருத்துவமனைகளின் தனியார்துறை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் (NUWHSAS), கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் துப்புரவு தொழிலாளர்களின் குத்தகை முறையிலான வேலை ஒப்பந்த முறையை அகற்றக் கோரி போராடி வருகிறது. நிலையில்லாத அரசியலில் கடந்த 7 ஆண்டுகளில் மாறிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர்களினால் துப்புரவு தொழிலாளர்களின் பிரச்னை என்பது கிணற்றில் போட்ட கல் மாதிரி அசையாமலே நிற்கிறது.

கல் வேண்டுமென்றால் அசையாமல் இருக்கலாம்; ஆனால், ஏழை தொழிலாளர்கள் அப்படியிருந்தால் அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல அவர்களின் குடும்பமே கூட வருமையில் மூழ்கிபோய்விடும். வளர்ச்சியடைந்த நாடு, தொழில்நுட்ப நாடு என்று நம் நாட்டைப் பற்றி நாம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் வேளையில், பெரிய பொருளாதார வசதியில்லாத ஏழைக் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு சுரண்டப்படுகிறது ? அதுவும் இந்தக் கோவிட் காலக்கட்டத்தில் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? அவர்களுக்கான சலுகைகள் அதன் மரியாதையோடு வழங்கப்படுகிறதா? தற்போது தொழிலாளர்களுக்காக செயற்படும் தொழிற்சங்கத்தை, துப்புரவு பணிக்கான குத்தகை முதலாளிகள் எதிர்க்கிறார்கள்; அதன் காரணம் என்ன? தொழிற்சங்களில் உறுப்பினர்களாக இணைந்துக்கொள்ளும் தொழிலாளர்களை முதலாளிகள் வெறுப்பது எதனால்? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தேடுவது அவசியம் மட்டுமல்ல அது வளர்ச்சியடைந்த நமது நாட்டை அளையாளப்படுத்தவும் அவசியமாக இருக்கிறது.

கோவிட் காலம் தொடங்கியதிலிருந்து மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களின் பணி அதிகரித்திருப்பதும் அவர்களின் தலைமேல் சுமை ஏறியிருப்பதும் எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் தெரியவில்லை. கோவிட் தொற்றுக்கண்டவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அவர்களின் உயிரையும் பணையம் வைத்துதான் போராடுகிறார்கள். அதேபோல்தான் மருத்துவமனை கோவிட் அறையில் துப்புரவு பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளியும் உயிரை பணையம் வைத்தே அங்கே துப்புரவு வேலையினை மேற்கொள்கிறார்கள். ஒருமுறை கோவிட் நோயாளிகள் அறையை சுத்தம் செய்து வெளியேறியப் பிறகு அத்தொழிலாளி குளித்துவிட வேண்டும். ஒருநாளில் 4 முறை அவர் கோவிட் நோயாளிகளின் அறையை சுத்தம் செய்தால் அவர் 4 முறையும் குளித்து உடை மாற்ற வேண்டும். இதற்கான முன்னேற்பாடோடுதான் அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். கோவிட் தொற்று பரவிவிடுமே என்று அவர்கள் தன் கடமையிலிருந்து விலகவில்லை.

இத்தனை சவால்களோடு தினமும் வேலைக்குச் சென்று வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முன்களப்பணியாளர்களுக்கு கொடுக்கும் சிறப்பு நிதி வழங்கப்படுவதில்லை என்பது எத்தனை பெரிய ஏமாற்றுவேலை. பெயரளவில் முன்களப்பணியாளர்கள் என்றுக் கூறிக்கொள்வதால் அதிலிருக்கும் உழைப்புச் சுரண்டல் கண்ணுக்கு தெரியாமல் போய்விடாது அல்லவா?

இது தொடர்பாகவும், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்குப் பிறகு மாற்றப்படும் குத்தகை நிர்வாக முறையை அகற்றக் கோரியும்,  தொடர்ந்து 5 முறை தொழிலாளர்களின் தொழிற்சங்கம் சுகாதாரத்துறையிடம் வழங்கப்பட்ட அறிக்கைகளுக்கு எந்த பதிலும் இதுவரை இல்லாத பட்சத்தில் இதை ஒரு தேசியப் பிரச்னையாக கொண்டுச் செல்ல தீபகற்ப அரசு மருத்துவமனைகளின் தனியார்துறை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் ஒருசமயோகித முடிவை எடுத்தது.

பினாங்கு முதல் புத்ராஜெயா வரை தொழிற்சங்கவாதிகள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான ஜைரி ஜமாலுடினை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னைகளை நேரில் தெரிவிக்கும் பொருட்டு, அறிக்கையை  கையளிக்க அவர்கள் முடிவெடுத்தனர். இந்தப் பயணத்தில் அவர்கள் கடந்துவரும் சில அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று இப்போராட்டத்தின் நோக்கத்தை தெரியப்படுத்துவதுடன், அங்கே இருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களையும் சந்திக்க அவர்கள் திட்டம் வகுத்திருந்தனர்.

அதன்படி அவர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி நாடே பொதுவிடுமுறையில் களித்திருக்க இவர்கள் பினாங்கிலிருந்து மோட்டார் சைக்கிளில் புத்ராஜெயா நோக்கியப் பயணத்தை தொடங்கினர். இதில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது, போராட்டத்தில் களம் இறங்கிய ஒருசிலரைத் தவிர பலர் 50-60 வயதைக் கடந்த பெண்கள். அவர்கள் இன்னும் உழைக்கிறார்கள்; என்பதைவிடவும் அடுத்த தலைமுறை ஞாயமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். இன்று இவர்கள் மேற்கொள்ளு இவ்வாறான போராட்டம் வெற்றியடைந்தால் அதன் பலனை அனைத்து தொழிலாளர்களும் அனுபவிக்கப்போகிறார்கள்.        

அமைச்சரை சந்திக்க திட்டமிட்டபடியே அவர்கள் செயலாற்றினாலும், பல அரசு மருத்துவமனைகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மருத்துவமனை காவலர்கள் அவர்களை மருத்துவமனை வளாகத்திலேயே தடுத்து நிறுத்தினர். போலீஸ்க்காரர்களை வரவழைத்து, விசாரணை நடத்தி கிளர்ச்சிக்காரர்களாகவே இந்த ஏழைத் தொழிலாளிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். ஆனாலும், துணிந்தக் காரியத்தை செய்துமுடிக்காமல் அவர்கள் பின்வாங்கவும் தயாராக இல்லை.

முதல் நாள் பினாங்கு, இரண்டாம் நாள், பேராக், மூன்றாம் நாள் சிலாங்கூர், இறுதியாக நாளாவது நாளில் புத்ராஜெயாவை வந்தடைந்த துப்புரவு தொழிலாளகள் “வாழ்க பாட்டாளி” “வாழ்க வர்க போராட்டம்” என்று புத்ராஜெயாவில் கோசம் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடலை அவர்கள் எழுச்சியோடு பாடினர்.  

5 பிரதிநிதிகள் அமைச்சர் கைரியோடு பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டனர். துப்புரவு தொழிலாளர்களை அடிமட்டத்திலேயே வைத்திருக்கும் குத்தகைமுறைக் குறித்தும், முன்களப்பணியாளர்கள் என்றால் துப்புரவுப் பணியாளர்களுக்கான சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதுக் குறித்தும், ஒடுக்கப்படும் தொழிற்சங்கங்கள் குறித்தும் சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் அமைச்சருடன் கலந்துரையாடினர்.அமைச்சரிடம் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் இதுதான்..

-குத்தகை முறையிலான வேலை திட்டத்தை ஒழித்து மீண்டும் அவர்களை அரசு தொழிலாளர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

-துப்புரவு தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கிரித்து அவர்களுக்கு சிறப்பு மாநியம் வழங்க வேண்டும்.

-தொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டதாகும். முதலாளி வர்கம் அதை தடை செய்யக்கூடாது.  

உங்களுக்கு நினைவிருக்கலாம், மாநகர மன்ற வேலை, பள்ளி துப்புரவு வேலை, அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருமே அரசாங்கத்தின் கீழ் இருந்தார்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்துவகை சலுகைகளுமே இருந்தன. 20-25 ஆண்டுகளுக்கு முன்பு துன் மஹாதீர் பிரதமராக இருந்த காலத்தில்தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களெல்லாம் தனியார் துறைக்கு கீழ் மாற்றப்பட்டனர். (இந்தத் தனியார் துறைக்கு பின்னாடியும் பல அரசியல் இருக்கிறது. அதுவும் பேசக்கூடிய விஷயம்தான். பின்னாளில் அதை பார்ப்போம்.) அன்று தொடங்கி இந்தத் ஏழைத் தொழிலாளர்கள் குரலற்றவர்களாகவே இருந்தனர். 

-யோகி

நன்றி தமிழ்மலர் 13/2/2022