ஞாயிறு, 24 ஜூலை, 2022

வரலாறு மறக்கப்படலாம், மறைக்க முடியாது ! (மே 1 சிறப்பு நாடகம் 2022)

வகை : இருவர் கொண்ட உரையாடல் (நாடகப்பாணி)

தலைப்பு: வரலாறு மறக்கப்படலாம், மறைக்க முடியாது !

எழுத்து & இயக்கம்: தோழர் யோகி

நடிப்பு : தோழர் அமீர்- தோழர் யோகி

அமீர் : மே 1 லிருந்து  மிக நீண்ட பொது விடுமுறை.  விடுமுறையை   எப்படி கழித்தீர்கள்?  அரசாங்க வேற 1500 சம்பளம் ஏத்தியிருக்கிறார்கள். தொழிலாளர்கள் எல்லாம் சந்தோசமா இருப்பாங்க.

யோகி:  மே 1 பொது விடுமுறை என்பது சரிதான். ஏன்  அந்த விடுமுறை வந்துச்சுன்னு தெரியுமா?  எதுக்காக உலக நாடுகளில் அன்றைய தினத்தில் தெரு போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்?  இங்க கூட ஒரு கூட்டம் மே ஒன்னுன்னா  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். உங்களுக்கு அந்த விவரம் ஏதும் தெரியுமா?

அமீர்: அட ஆமாங்க, நானும் பார்த்து இருக்கேன்.  ஆனா சரியா பார்த்தா அவங்க,  ஏதேதோ தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து தான் ஆர்ப்பாட்டம் செய்யறாங்க. நமக்குதான்  பேசறதுக்கு  தைரியமில்லையே.  அவர்களாவது நமக்காக பேசட்டுமே?

யோகி: தம்பி இந்தப் போராட்டம் பேரணியெல்லாம் இன்னிக்கு நேற்று ஆரம்பிச்சது இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்றைக்கு தொடங்கியதோ அன்றே வர்க்கப் போராட்டமும் தொடங்கிருச்சு.

 அமீர்:  ஏகாதிபத்தியம்?  வர்க்கப் போராட்டமா?  இதெல்லாம் என்ன வார்த்தை??  நாங்க ஸ்கூல் புத்தகத்தில் கூட இதெல்லாம் படித்ததில்லை. இப்படி நாளு வார்த்தைய வச்சிகிட்டுதான் நாட்டுல ஆளாளுக்கு புரட்சிக்காரன்னு சுத்திகிட்டு இருக்கான்?

 யோகி: புரியும் படியே சொல்றேன். பசித்தவன் வயிற்றில்தான் புரட்சி வெடிக்கும்ன்னு கார்ல்மார்ஸ் சொல்றாரு.  இதெல்லாம் மறுக்கப்பட்ட வரலாறு.  வரலாறு மறக்கப்பட்டாலும் அது செத்துவிட்டது ஆகாது.

அமீர்: என்ன சொல்றீங்க நீங்க??  எதுவும் புரியல.  கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.  நாங்களெல்லாம் 2k kids. கொஞ்சம் விளக்கமா சொன்னா தான் புரியும்  சிஸ்டர்.


யோகி: தம்பி மே 1 சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நமது நாட்டுக்கு எப்படி கிடைச்சுச்சுன்னு உங்களுக்கு வரலாறு தெரியுமா? 1940-களில் மலாயா கணபதி மற்றும் வீரசேனன் ஆகியோர், ஆயிரக்கணக்கில்  பாட்டாளிகள் ஒன்று திரட்டி நடத்திய பேரணியின் வெற்றி அது. மலாயா பொது தொழிலாளர் சங்க சம்மேளனம் அதை முன்னெடுத்தது. அதன் தலைவர்தான் மலாயா கணபதி. இது  வரலாறு.  இன்று யாரு  வரலாறு பேசுறாங்க? சொந்த வரலாறே பல்லிலிக்குது…

அமீர்: ஆமாமா.. இன்றைய இளைஞர்கள் கிட்ட மே 1க்கு யார் விடுமுறை கொடுத்தாங்கன்னு கேட்டா,  என் முதலாளிதான் கொடுத்தான் சொல்றான்.

யோகி: இன்றைய இளைஞர்களுக்கு எல்லாமே நகைச்சுவைதான். இப்படித்தான் ஒரு தடவை, பள்ளி மாணவர்கிட்ட  பெரியார் தெரியுமான்னு கேட்டேன். அவர் எந்தப் படத்துல நடிச்சிறுக்கார்ன்னு கேட்டாங்க.

அமீர்: அது இருக்கட்டும் அக்கா. மலாயா கணபதி, வீரசேனன் எல்லாம் அவ்வளவு பெரிய போராட்டவாதிகள் என்றால்,   அவங்க எல்லாம் எங்க போயிட்டாங்க? ஏன் அவங்க போராட்டத்தை பற்றி யாருமே பேசுவதில்லை.

 

யோகி: 73 வருட கதையை இவ்வளவு சாதாரணமாக கேட்டுட்டீங்க?  சொல்றேன். நஜிப்  1 மலேசியா  கொண்டு வந்தாரு. சப்ரி யாக்கோப்  Keluarga malaysia கொண்டுவந்தார். ஆனால் நாடு சுதந்திரம் அடையாத அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ்சை எதிர்த்து மூவினமும்  போராடினார்கள்.  அவர்களுக்கு இனவாதத்தையும் யாரும் சொல்லிக் கொடுக்கல.  ஒற்றுமையப் பற்றி யாரும் வகுப்பும் எடுக்கல.  நியாமான சம்பளம், விடுமுறை, தொழிலாளர்களுக்கான சலுகை இதைத்தான் கேட்டாங்க. அது முதலாளிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முதலாளிகளுக்கு எதிராக நடந்த வர்க்க புரட்சியில் வீரசேனன் மற்றும் மலாயா  கணபதி கிளர்ச்சிகாரர்களாக முத்திரை குத்தப்பட்டாங்க. அவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானத்தையெல்லாம் அரசாங்கம் அறிவித்தது.

அமீர்: இதெல்லாம் நமது நாட்டில் நடந்ததா? எனக்கு தெரிந்ததெல்லாம் என்னோட தாத்தா-பாட்டி வாழ்ந்த எஸ்டேட்ல, சயாம் மரண ரயில்வே பாதைக் கட்ட, ஜப்பான் ராணுவம் ஆள் பிடிச்சிட்டு போனாங்களாம். அங்கப்போன நிறையப் பேரு திரும்ப வரவே இல்லையாம். ஜப்பான்காரன் சொல்லமுடியாத சித்திரவதை செய்தானாம். போதுமான சாப்பாடு இல்லாமல், தங்க இடம் இல்லாமல்,  ரயில் கட்டுமான வசதியும் இல்லாமல் மனித உழைப்பை வைத்தே கட்டப்பட்டதாம் அந்த தண்டவாளம். அங்க வேலைக்குப் போனவங்கள்ள லட்சம் பேருக்கு மேல செத்துப்போனாங்களாம். எங்க தாத்தா-பாட்டி இருந்த வரைக்கும் இதெல்லாம் பேசினாங்க.

யோகி: அது மட்டுமல்ல தம்பி, பத்து ஆராங் போராட்டம், கிள்ளான் போராட்டம், கெடா தோட்ட மக்கள் போராட்டம்ன்னு நம் தோட்ட மக்கள் மென்னெடுத்தப் பல போராட்டங்களை நாம பேசறதே இல்லை. அதுப் பற்றி தெரிந்துக்கொள்வதும் இல்லை. பரவாயில்லை குறைந்த பட்சம் சயாம் மரண ரயில்வே குறித்த வரலாறு உங்களுக்கு தெரிஞ்டிருக்கு. அதை அடுத்த தலைமுறைக்கு கிடத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கனும்…

 

அமீர் : எங்கேயோ பேச்சு தொடங்கி எங்கேயோ போயிட்டு இருக்கோம். அக்கா நீங்க இன்னும் வீரசேனன் கணபதிக்கு என்ன நடந்ததுன்னு சொல்லவே இல்லையே…

யோகி: முதலாளிக்களுக்கு எதிரா ரொம்ப தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்ததால் அவர்கள் இருவரையும் கைது செய்ய அரசானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தேடப்படும் குற்றவாளிகளாக அவர்கள் இருந்தார்கள். அதனால், பதுங்கிவாழும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். மே 3-ஆம் தேதி 1949-ஆம் ஆண்டு  இங்கொரு காட்டில்  இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் நடந்த நேரடிச் சண்டையில் பி.வீரசேனன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே ஆண்டு மே 4-ஆம் தேதி தலைவர் மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கில் ஏற்றப்பட்டார். இருபதாம் நூற்றாண்டில் அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தமிழன்  கணபதி என்று வரலாறு சொல்கிறது.   தொழிலாளர் உரிமைக்காக போராடிய இந்த இரு தியாகிகளின் சகாத்தம் அதோடு முடிவடைந்தது.

 

அமீர்: இன்று இங்கு வந்ததற்கு நான் நமது வரலாற்றை எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், இந்த மாதிரியான தியாகிகளால்தான் நாம் சில சலுகைகளை அனுபவிக்கிறோம்ன்னு நல்லா புரிந்துக்கொண்டேன்.  தோழர் கணபதி மற்றும் வீரசேனன் இவர்களுடைய  நினைவிடம் எங்க இருக்கு?

யோகி: புரட்சிக்காரர்களுக்கு எஞ்சி இருப்பது வரலாறுதான். இந்த மாபெரும் தலைவர்களின் உடல்கள் என்ன ஆனதுன்னே இதுவரை தெரியாது. அதனால் எந்த நினைவிடமும் இவர்களுக்கு இல்லை. என்றாலும் இந்த வரலாறை அடுத்த தலைமுறையும் தெரிந்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்த மாதிரியான சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அமிர்: மே மாதம் வந்தால் பொதுவிடுமுறை என்பதைத் தாண்டி அது போராட்டவாதிகளை நினைவுக்கூறும் நாளாக இன்று நான் தெரிந்துகொண்டேன். உங்களுக்கு என் நன்றி அக்கா.

 

இருவரும்: மக்களுக்கும் நன்றி.