திங்கள், 11 மார்ச், 2024

ஆயுதம் ஏந்திய மலேசியப் பெண் போராளிகள்

                                   Members of the 8th Regiment. Courtesy of Mahani Awang.

மலேசியா கம்யூனிசத்தை ஆதரிக்காத ஒரு நாடு மட்டும் அல்ல கம்யூனிச சிந்தனை மற்றும் கம்யூனிச சித்தாந்தத்தையே தடை செய்திருக்கும் ஒரு நாடாகும். இந்நிலையில்தான் மலேசியாவில் சோசலிச சிந்தனையும் இடதுச்சாரி சிந்தனையும் மிகப்பெரிய சவாலோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. மலேசியர்களுக்கு குறிப்பாக தேசியவாதிகளுக்கு, கம்யூனிசம் மற்றும் சோசலிசம் இரண்டையும் வேறுபடுத்துவதில் ஒரு தெளிவில்லாத மயக்கம் இருக்கிறது. அதன் காரணத்தினாலேயே சோசலிச சித்தாந்தவாதிகளாலும் இடது சாரி சிந்தனைக் கொண்டவர்களாலும், கொண்டுவரப்படும் பல ஆக்கபூர்வமான திட்டங்கள் பரீசீலனைக்கு கூட எடுத்துகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது.

இந்நிலையில் மலேசியா சுதந்திரம் அடையாத முன்பே, நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் தோழர்கள் குறித்தும், அவர்களின் அமைப்பு குறித்தும் இந்திய பரப்பில் இன்னும் யாரும் பேசவில்லை. அதோடு,  மாற்றுச்சிந்தனையோடு இயங்கிய மலேசியப் பெண்களையும், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களையும், அவர்களின் வட்டத்திற்கு வெளியே யாரும் பேசுவதாக இல்லை. அவர்களை இம்மாதிரியான பெண்கள் சந்திப்பில் அடையாளப்படுத்துவது ஒரு பெண்நிலை செயற்பாட்டாளராக எனது கடமையாக கருதுகிறேன்.

தவிர, சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், நாட்டின் எதிரியை எதிர்கொள்ளும் போது ஆயுதம் ஏந்துவதற்கு அஞ்சாத பெண்கள் மலாயாவிலும் இருந்தனர். இருப்பினும், அவர்களின் பெயர்கள், ஓர் ஆண் சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்டாடுவதுபோல எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. சொல்லப்போனால், ரத்தம் சிந்தாமல் மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற தவறாக கூறப்படும் வரலாற்றில் ஆண் ஆயுத போராளிகளும் மறக்கடிக்கவே படுகின்றனர். இதில் பெண்கள் பெயரை பேசுவார்களா என்ன?  

மலேசியா 1957-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. சுதந்திர பிரகடன அறிக்கையில் கையெழுத்திட மூவின தலைவர்களின் பிரதிநிதிகள் பிரிட்டிஸ் சென்று வந்தார்கள். பெண்கள் ஒருவருக்கும் அங்கு அழைப்பில்லை. ஆனால், சுதந்திர போராட்டத்தில், கைகளில் ஆயுதம் ஏந்தி போராடவும்  இன்னுயிரைக் கொடுக்கவும் மலேசியப் பெண்கள் யோசிக்கவே இல்லை.

 

சூரியனி அப்துல்லா

Suriani

Eng Ming Ching எனும் இயற்பெயர் கொண்டவரான இவர்  1941-1945-ல் ஜப்பானியர்களுக்கு எதிராகவும் பின்னர் 1948-1957ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராடினார். ஜப்பானியர்களை எதிர்த்து போராடியதால் அவருக்கு "ஜப்பானிய எதிர்ப்பு தேசபக்தர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில், பட்டம் பெற்ற முதல் பெண் போராளியாக அவர் கருதப்படுகிறார். சீனரான இவர் பேராக்கின் சித்தியவானில் பிறந்தார். Nan Hwa உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர், அங்கு சின் பெங் உட்பட மற்ற கம்யூனிஸ்டு தோழர்களைச் சந்தித்து அரசியல் ரீதியாக தீவிரமயமாக்கப்பட்டார். 1940-இல் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பெண் தொழிலாளர்களை ஒறுங்கிணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவருக்கு 16 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வசீகர ஈர்ப்பு மற்றும் நகைச்சுவை உணர்வு கொன்டவர் என்றும் சூரியானி  வர்ணிக்கப்படுகிறார்.

மலாயாவை ஜப்பான் ஆக்கிரமித்திருந்த போது, Kesatuan Melayu Muda (KMM) மற்றும் Malayan Communist Party (MCP) ஆகிய இரண்டு ஜப்பானிய எதிர்ப்பு மாணவ இயக்கங்கள் இருந்தன. Malayan Communist Party-யில் ரெஜிமென்-10 இல் சூரியானி சேர்ந்தார். அங்குதான் அக்கட்சியின் மூத்த தலைவரான ரஷித் மைதீன் மற்றும் அப்துல்லா சிடி போன்றவர்களை சந்தித்தார். 

அவருக்கு 21 வயதாக இருந்தபோது ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. பின்நாளில் கொம்யூனிஸ் போராட்டவாதியான அப்துல்லா சி.டி-யை 1955-இல் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.     

இறுதியாக ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, சூரியானி அப்துல்லா கம்யூனிஸ் கட்சியிலேயே இருந்தார். இறுதிகாலத்தை தனது கணவர் மற்றும் மகளுடன் தாய்லாந்தில் கழித்தவர் மார்ச் 21-ஆம் தேதி 2013 தனது 89-வது வயதில் அங்கேயே காலமானார். 

ஷம்சியா ஃபக்கே (1924-2008)



சுமத்திராவில் சமயக் கல்வியை கற்றவரான இவரை தேச துரோகி என்ற பெயரோடுதான் சித்தரிக்கப்படுகிறார், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து போராடியதே அதற்கு காரணமாகும். சம்சியா தமது குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்திருக்கிறார்.  பிகேஎம் உறுப்பினரான இப்ராகிம் முகமட்டை அவர் மறுமணம் செய்துகொண்டார்.

இடதுசாரிக் கட்சிகளை ஆங்கிலேயர்கள் தடை செய்த காலக்கட்டத்தில் இவர்களை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தனது போராட்டத்தைத் தொடர அவர் காட்டுக்குள் பதுங்கினார். பிறகு அவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.  காட்டுக்குள் இருந்தக் காலத்தில் தனது சொந்த மகனையே அவர் கொன்றார் என்று பிகேஎம்எம் முன்னாள் தலைவர் மூசா அகமது பின்னர் ஒரு பேட்டியில் கூறினார். அதை சம்சியா மறுத்தாலும், அவ்வுண்மையை நிறுபிக்கத் தவறியதில் அது ஒரு சர்ச்சையாகவே இன்றுவரை இருந்து வருகிறது.

1941 முதல் நாட்டில் அராஜகம் செய்துக்கொண்டிருந்த ஜப்பானிய ராணுவத்தையும் அதனைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் ராணுவத்தையும் பெண்கள் எதிர்த்து போராடிகொண்டிருந்தாலும், அதுவரை பெண்களுக்கு தனியாக எந்த அமைப்பும் இல்லை. 1946-இல் பெண்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் Angkatan Wanita Sedar (AWAS). (சக்திமிக்க/ உணர்வுமிக்க பெண்கள் படை).. தமிழில் ‘ஆவாஸ்’ (AWAS)  என்றால் கவனம் என்று அர்த்தம்). இது PKMM என்ற கட்சியின் பெண்கள் பிரிவாகும்.

பிரிட்டிசுக்கு அடிபணிந்து போன கட்சிகளான அம்னோ மற்றும் ம.இ.கா நிறுவப்பட்ட இதே காலகட்டத்தில்தான்  API – AWAS போன்ற பிரிட்டிஸாரோடு சமரசம் செய்துகொள்ளாத அமைப்புகளும் கிளர்ந்தெழுந்தன. AWAS அமைப்பின் முதல்  தலைவியாக ஐஸா கனி இருந்தார். எதன் பொருட்டோ அதே ஆண்டு, ஐஸா கனி அந்த அமைப்பிலிருந்து விலகினார். அவருக்குப் பிறகு சம்சியா ஃபாகே அமைப்பின் தலைமைத்துவத்திற்கு வந்தார்.

ஜப்பான் இராணுவம் மலேசியாவில் சர்வதிகாரம் புரிந்துகொன்டிருந்தவரை, அவர்களை எதிர்த்து சமர் புரிந்துக்கொண்டிருந்தார்கள் கம்யூனிஸ் தோழர்கள். ஜப்பானியர்கள் மலாயாவை பிரிட்டிசாரிடம் ஒப்படைத்து சென்றபோது, ஆங்கிலேயர்கள் கம்யூனிஸ் தோழர்களை துடைத்தொழிக்க நினைத்தார்கள். கம்யீனிஸ்ட்கள் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் நாடு முழுதும் அறிவிக்கப்பட்டது.  அதன் நீட்சியாக 1948-ஆம் ஆண்டு பெண்கள் அமைப்பான ‘ஆவாஸ்’ மற்றும் பல இடதுசாரிக் கட்சிகளை ஆங்கிலேயர்கள் தடை செய்தனர் என்பது வரலாறு.

கதீஜா சிடெக்

கதிஜா சிடேக் [1918-1982] ஜப்பானுக்கு எதிராக மகளிர் ராணுவத்தை உருவாக்கியதோடு மலேசியாவின் தொடக்க காலத்து பெண்கள் சார்ந்த உரிமை போராட்டவாதியாகவும் அறியப்படுகிறார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இவர் மலாயாவில் பிறக்கவில்லை.  இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்றாலும், இந்தோனேசிய சுதந்திரத்திற்காக தன்னை அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டதால் பல்கலைக்கழகம் செல்ல கல்வி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனாலும் கதீஜாவின் போராட்ட குணம் மலாயாவின் தேசியவாதிகளான தஹாரி அலி மற்றும் ஹாஜி அப்துல்லா செங்கோரா ஆகியோரின் காதுகளை எட்டியது. எனவே மலாயாவின் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்யவும்

 சுதந்திர உணர்வைத் தூண்டவும் கதீஜா மலாயாவிற்கு அழைக்கப்பட்டார்.

அவ்வழைப்பை ஏற்று மலாக்கா நீரிணையின் வழி மலாயாவிற்கு அவர் வந்திருக்கிறார். அதோடு, 1946 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு நன்கொடைகளை சேகரிப்பதற்காக அவர் சிங்கப்பூர் வரையிலும் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கதிஜா டாக்டர் ஹம்சா தைப் என்பவரை காதல் மணம் புரிந்துகொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் காலனித்துவவாதிகளுக்கு எதிராக செயற்பட்டதால் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின் விடுதலையானதும் கதீஜா தனது மாமியார் வீட்டில் வசித்தார், அங்கு அடிக்கடி அவரை முன்னாள் குற்றவாளி என்றும் மாமியார் குடும்பத்திற்கு தான் ஒரு சுமையாகக் கருதப்பட்டதாலும் அவர் ஜொகூர்பாருவிற்கு குடி பெயர்ந்தார்.

அங்குதான் அவரின் அடுத்தகட்ட அரசில் பிரவேசம் ஆரம்பமானது. துங்கு அப்துல் ரஹ்மான் கதீஜாவை Kaum Ibu Umno- கட்சியின் மகளிர் பிரிவில் சேர அழைப்புவிடுத்தார். துங்குவின் இந்த முடிவை பலர் விரும்பவில்லை என்றாலும் கதீஜா கட்சியில் தீவிரமாக செயல்பட்டார்.

10 மாதங்களுக்குள், கதிஜா அம்னோவின் பெண்கள் உறுப்பினர் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தியதோடு, அப்பிரிவின் மூன்றாவது மகளிர் தலைவியானார்.   

​​1954 தேர்தலில் பெண்களின் பிரதிநிதிகளை  ஐந்து இடங்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்தில் (DUN) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கடுமையான அணுகுமுறைக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு போராட்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்தவர் 1982-ஆம் ஆண்டு தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

தகவல்கள் : cilisos இணையத்தளம்,  solidaritas , orangperak      

திங்கள், 12 ஜூன், 2023

புலாவ் பெசார் எனும் புனித தலம்


வெயில் காலமாக இருந்தாலும், இந்தப் பருவத்தில் நமது நாட்டில், எல்லா மதத்தினரும் அவரவர் மதம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைக்கு செல்ல ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது. வாழ்கையில் ஒருமுறையாவது புண்ணிய தலத்திற்கு போய்வந்துவிட்டால் பிறந்த பலனை அடைந்த திருப்தி ஏற்படும் என்று பலர் பக்தியோடு கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன். கொரானாவிற்கு பிந்திய சூழலில் பயணம் செய்வது அதிகரித்திருந்தாலும்,
 அதற்காக பெரிய தொகையை செலவழிக்க வேண்டியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.

2019-இல் நான் வட இந்தியா, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் திருத்தலத்திற்கு சென்றபோது, செலவழித்த தொகையைவிட தற்போது இரண்டு-மூன்று மடங்கு தொகையை செலவழித்து மக்கள் அங்கு சென்று வருவதைக் காண்கிறேன். கிட்டதட்ட யாத்திரை சம்பந்தப்பட்ட சுற்றுலா என்பது லாபம் பார்க்கும் தொழிலாளாக மாறிவருவது, எங்கும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

நமது நாட்டில் இஸ்லாமியர்களுக்காக இருக்கும் புனித தலத்திற்கு, இனம், சமையம் பார்க்காமல் வெளிநாட்டிலிருந்தும்கூட பலர் வருகை தந்து பத்தியோடு தரிசித்து செல்கின்றனர். நான் புலாவ் பெசார் குறித்துதான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். மலாக்கா மாநிலத்தில் இருக்கும் புலாவ் பெசார் எனும் தினித்த தீவு, பத்தியை மட்டுமல்ல இயற்கை அழகு குவிந்து கிடக்கும் அழகிய தீவாகவும் இருக்கிறது.

மலாக்கா பட்டணத்திலிருந்து சுமார் 25 நிமிடத்தில் ஜேதி அன்ஜோங் பத்து (Jeti Anjung Batu) எனும் இடத்திற்கு வந்தால், அங்கிருந்து புலாவ் பெசார் செல்வதற்கான கட்டணமுடன் கூடிய கப்பல் போக்கூவரத்து இருக்கிறது. தனியார் மோட்டார் படகுகளும் செயற்படுகின்றன. சுமார் 30 நிமிடங்களுக்குள் நீர் வழி பயணத்தை மேற்கொண்டு புலாவ் பெசார் தீவின் கரையில் இறக்கி விடுகிறார்கள்.

அங்கிருந்து 10 நிமிடங்கள், கடலின் அழகை ரசித்தபடியே கொஞ்ச தூரம் நடந்தால் இஸ்லாமிய மக்களின் இறை தூதர்களின் புனித கல்லறைகள் வருகின்றன. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்தியர்களும் சீனர்களும்கூட மரியாதையாகவும் பக்தி மார்க்கமாகவும் பிரார்த்தனைகளில் கலந்துகொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வேண்டுதலின் பேரில் அன்னதானமும் வழங்குகிறார்கள். அதெல்லாம் சில நிபந்தனைக்கு உட்பட்டதாகும். 

தற்போது நான் பார்த்த புலாவ் பெசாருக்கும், 5 ஆண்டுக்கு பிந்திய புலாவ் பெசாருக்குமே நிறைய மாற்றங்கள் இருப்பதாக அங்கு தொடர்ந்து புனித யாத்திரைக்கு வருபவர்கள் கூறுகிறார்கள். சில விரும்பத்தகாத செயல்களினால் நிறைய கட்டுப்பாடுகள் தற்போது புலாவ் பெசாரில் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சாமி அழைப்பது, மாந்தீரிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவது போன்ற விவகாரங்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை கிடைக்ககூடிய வகையில் கடுமையாக்கியிருக்கிறார்கள்.

நோன்பு பெருநாளின் இரண்டாவது நாளில் நான் அத்தீவுக்குச் சென்றிருந்தேன். வானிலை, பயணம் செய்வதற்கான மனநிலையை ஏற்படுத்தியிருந்தது. நிறைய பேர் படுதா அமைத்து, இரவே தீவுகளில் தங்கியிருப்பதை காண முடிந்தது. அறை எடுத்தும் அத்தீவில் தங்க முடியும் என்பதை ஒரு தகவலாக வாசகர்களுக்கு கூறிக்கொள்கிறேன். 


புலாவ் பெசாரில் இருக்கும் புனிதக் கல்லரைகளில் இருப்பவர்கள் யார்?   இந்தக் கேள்விக்கு உண்மையும் புரளியுமாக நிறைய பதில்கள் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அங்குச் செல்பவர்களுக்கு அதன் வரலாறு தெரியும் வகையில் குறிப்பு பதாகைகள் வைத்திருக்கிறார்கள். அதன் துணையுடன் நான் அவ்விவரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

சுல்தான் அல்-அரிப்பின் ஷேக் இஸ்மாயில்.

இந்த சமாதிதான் அங்கு முதன்மையான சமாதியாக கருதப்படுகிறது.  சுற்றிலும் வேலி அமைத்து மிகப் பாதுகாப்பாக இந்த சமாதி பேனப்படுகிறது. வரலாற்றின் படி, சுல்தான் அல்-அரிப்பின் ஷேக் இஸ்மாயில் சவூதியில் பாக்தாத் நகரில் 1463-ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஒருமுறை அவர் நபிகள் நாயகத்தின் கல்லறையைப் பார்வையிட மதீனாவுக்குச் சென்றபோது, ​​​​"இஸ்லாத்தின் போதனைகளை ஜாவா தீவில் பரப்புங்கள்" என்று ஒரு குரல் கேட்டதாம். அது இறைவனிடமிருந்து தனக்கு வந்த கட்டளை என்று கருதியவர்,  பின்னர் பயணம் செய்து இறுதியாக கி.பி 1495-இல் தனது 16 சமைய சகாக்களுடன் புலாவ் பெசாரை வந்தடைந்திருக்கிறார். இவர்களின் வருகைக்குப் பிறகு, இஸ்லாமிய சமைய போதனைகள் விரிவடைந்ததாகவும், நிறைய பேர் இவர்களின் சீடர்களாகவும், இவர்களை பின் பற்றுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சுல்தான் அல்-அரிப்பின் ஷேக் இஸ்மாயில் அவர்கள் தமது 58-வது வயதில் காலமாகியிருக்கிறார்.

அவரின் சமாதியில் மனம் உருகி பிரார்த்தனை செய்பவர்களின் துயர் தீர்க்கப்படுகிறது என்றும் மன அமைதி கிடைக்கிறது என்றும் அங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள். அங்கே ஒரு பெண் துறைவியின் சமாதியும் இருக்கிறது. அவருக்கு கல்லரை எழுப்பப்படவில்லை, என்றாலும் இஸ்லாமிய மக்கள் அவரை தாயார் என்று குறிப்பிடுவதோடு, அவ்விடத்தில் பிரார்த்தனை செய்யாமல் வருவதில்லை. அங்கே இருக்கும் சமாதிகளும் கல்லரைகளும் மிக நீளமாக இருக்கின்றன. அவ்வளவு உயரமாக அக்காலத்தில் மனிதர்கள் இருந்தார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை. கோலசிலாங்கூரில் இருக்கும் புக்கிட் மெலாவத்தியிலும் இதேபோல மில நீளமான பழங்காலத்து சமாதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.  

புலாவ் பெசார் கடலில், சிலர் குளித்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது. ஆனால், மதியத்திற்குப் பிறகு தண்ணீர் உள்வாங்கி மிகப் பெரிய பாறைகள் வெளிவருகின்றன. Baby crab என்று சொல்லக்கூடிய சிறிய வகை நண்டுகள் கடற்கரை முழுவதும் சுற்றிதிரிவதை பார்க்க முடிந்தது. மிக அமைதியான சூழல் மனதை ஆக்ரமித்திருந்தது. அது தீவுக்கே உள்ளே தனித்துவமாகவே நான் பார்க்கிறேன்.

மதியம் 3மணியளவில் நாங்கள் தீவிலிருந்து விடைபெற்றோம். சிலர் அப்போதுதான் தனியார் படகுகளில் தீவுக்குள் வந்துகொண்டிருந்தார்கள். புலாவ் பெசார் குறித்த நிறைய அதிசயங்களையும் அமானுஷ்ய கதைகளையும் கேட்டிருந்த நான் என்னுடைய முதல் பயணத்தில் எந்த எதிர்பார்ப்பையும் அதன் மீது வைக்கவில்லை. அதனாலேயே அந்தத் தீவின் அழகில் என்னால் தொலைய முடிந்தது; ஒப்புக் கொடுக்க முடிந்தது.  



மலேசிய இஸ்லாமியர்களின் மிக முக்கிய வழிப்பாட்டு தலமாக இந்தப் புலாவ் பெசார் விளக்குகிறது. மலேசிய இந்திய முஸ்லிம் நண்பர்களும் வருடத்திற்கு பலமுறை இந்தத் தீவுக்கு வந்து வழிப்படுவதை கடமையாகவே கொண்டிருக்கின்றனர். அதிலும், ரம்ஜான் பெருநாளின் இரண்டாவது நாளில் இங்கு வருவதை அவர்கள் முக்கிய அம்சமாகவும் கடமையாகவும் கொண்டிருக்கின்றனர். அதோடு இந்தோனேசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும்கூட புலாவ் பெசார் மகிமையை கேள்விப்பட்டு நிறைய பேர் வருகிறார்கள்.

நமது இசைப்புயல் ரஹ்மானும், அவரின் தாயாரும், சில தென்னிந்திய நட்சத்திரங்களும்கூட இந்தத் தீவுக்கு வந்து அது குறித்து  பேசவும் செய்திருக்கிறார்கள். 

இப்படி நல்ல விஷயங்கள் சொல்லக்கூடிய வகையில் இருந்தாலும், அங்கே வரும் சுற்றுப்பயணிகளாலும் சில பொறுப்பற்ற நபர்களாலும் வீசப்படும்  குப்பை கூளங்கள் அந்த அழகிய தீவை நாசம் செய்துவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.  உணவுக் கழிவுகள், ஞெகிழிகள், வீசப்படும் உடைகள் உள்ளிட்டக்  குப்பை மேடுகள்  அங்காங்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. அங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளுலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.  சொந்தத் தேவைக்காக வெளியிலிருந்து வாங்கிவரும் பொருட்களின் கழிவுகளை இந்தத் தீவில் வீசி செல்வது என்ன ஞாயம் என்றுதான் தெரியவில்லை.   

என்னுடைய மற்றுமொரு  துயரம் என்னவென்றால், வரும் காலத்தில் இந்தப் புனிதக் தலம் விடுமுறையை ஜாலியாக கழிக்கும் கூடார முகாமாக ஆகிவிடக்கூடாது என்பதும்தான்.     

நன்றி : தமிழ்மலர் ஞாயிறு பதிப்பு (11/6/2023)

திங்கள், 1 மே, 2023

மலேசிய சோசியலிச கட்சி ; போராட்டத்தின் வரலாறு

PSM பதிவை தாமதப்படுத்திய உள்துறை அமைச்சகத்தின்
நடவடிக்கைகள் குறித்து 5 ஆகஸ்ட் 1999 அன்று
Biro Pengaduan Awam-இல் புகார் செய்யப்பட்டபோது.
 

சோசியலிசம் என்பது நாட்டின் வளம், மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதாகும். அதை முதலாளித்துவ அமைப்பின் வழி கைப்பற்றி,  உழைக்கும் மக்களை உற்பத்திக்கு தேவைபடும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதிற்கு எதிரானது என்றும் கூறலாம்.

மலேசியாவில் சோசலிசம் என்ற பேச்சு எடுத்தாலே, பெருநிருவர்களின் எதிர்ப்பு அரசியலும், அதனுடன் தேசியவாதிகளின் எதிர்ப்பும் கிளம்பிவிடுகிறது. எந்த அளவுக்கு அதன் எதிர்ப்பு இருந்திருக்கிறது என்றால்,  கட்சியை பதிவு செய்யவிடாமல் 10 ஆண்டுகளுக்கு அலைக்கழிக்கும் அளவுக்கு. 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கட்சியின் பதிவு போராட்டம் 2008-ஆம் ஆண்டுதான் வெற்றிக்கண்டது என்றால் அதன் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என மக்களே கணித்துக்கொள்ளுங்கள்.

மலேசிய சோசியலிச கட்சி 1998-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி, அப்போதைய அரசாங்கமான  பாரிசான் அரசாங்கத்தின் கீழ் செயற்பட்ட அலுவலகத்தில் கட்சியின் பதிவுக்கான மனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தது.  விடிந்தால் தொழிலாளர் தினம். மறுநாள், ஆங்கிலப் பத்திரிக்கை  ஒன்றுசோசலிசக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை”  என்பதை போல் கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டிருந்தது. எத்தனை எத்தனையோ மக்கள் போராட்டங்களை களம் கண்ட இந்த இடதுச்சாரி கட்சியினர் கட்சியின், தமது சொந்த கட்சிக்கான அதிகாரப்பூர்வ பதிவுக்காக போராட்டத்தை கையில் எடுக்கும் நிர்பந்ததிற்கு தள்ளப்பட்டனர்.  

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 10 ஆண்டுகள், கட்சியின் பதிவுக்காக தொடர் போரட்டம் நடந்தவேண்டியிருந்தது. அதாவது இது தொடர்பான நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டதில் அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது.  கட்சிப் பதிவின் அதிகாரப்பூர்வ சான்றிதழை ROS வழங்க, அப்போது கட்சியின் செயலாளராக இருந்த அருள்செல்வன் பெற்றுக்கொண்டார் என்பது வரலாறு.

இடைப்பட்டக் காலத்தில் (9 ஆண்டுகள்) கட்சிக்கு பதிவு  இல்லை என்றாலும், கட்சியை வளர்ச்சி நோக்கிய பாதையில் கொண்டு செல்வதிலும், மக்கள் சார்ந்த போராட்டங்களை எந்த தோய்வும் இல்லாமலும் பி.எஸ்.எம் முன்னெடுத்துகொண்டே இருந்தது. மக்களோடு மக்களாக போராட்டக் களத்தில் நிற்கும் மலேசிய சோசலிசக் கட்சியின் இடதுசாரி சித்தாங்கள், வலதுசாரி தேசியவாதிகளுக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இன்னுமும் அது தொடர்கிறது. அதற்கு சாட்சியாக கூறப்படும் சம்பவம்தான் கட்சியின் பதிவு சம்பந்தப்பட்ட விவகாரமாகும்.

அப்படி என்ன விவகாரம்? 

நாட்டின் அரசியல் அமைப்பும்,  நீதித்துறையும்,  பிஎஸ்எம் கட்சியின் பதிவு மறுப்புக்கான வேலையை ஆரம்பத்திலிருந்தே செய்த வண்ணம் இருந்தது. பொதுவாக ஒரு கட்சியையையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்யும்போது,  பதிவுக்கான முடிவினை பதிவு இலாகாதான் மேற்கொள்ள வேண்டும். பி.எஸ்.எம் பதிவு தொடர்பான விவகாரத்தைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் பாரிசான் அரசாங்கம் நேரடியாக  தலையிட்டு, கட்சி அமைக்கும் சுதந்திரத்திற்கு  முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், அதற்கு ஆதரவான அதாவது பாரிசான் நேஷனல் கட்சிக்கு ஆதவாக செயற்படும் கட்சிகளுக்கு விரைவிலேயே பதிவு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்சியின் பதிவு மறுக்கப்பட்ட சிறிது நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பிஎஸ்எம். ஆனாலும் அதற்கு சாதகமான முடிவு அப்போது கிடைக்கவில்லை. திரும்பவும் இந்த வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியில் 2008-ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அன்று காலையில் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பாரிடமிருந்து  ஒரு கடிதம் வந்தது. அதில் “மலேசியா சோசலிச கட்சியின்  பதிவுக்கு தடை இல்லை”  கூறப்பட்டிருந்தது.  அதனால் அன்று நடக்கவிருந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் உள்துறை அமைச்சு சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு வழக்கு தொடுத்த 10 ஆண்டுகளில், பலதடவை கட்சியின் பதிவுக்கான புதிய  விண்ணப்பத்தை பி.எஸ்.எம் செய்துகொண்டே இருந்தது. அதேபோல 25 ஜூன் 2008-ஆம் தேதியும் உள்துறைஅமைச்சின் அலோசனைக்கு இணங்க பி.எஸ்.எம்-இன் புதிய விண்ணப்பத்தை டாக்டர் நசீர் தமது கட்சியின் ஆதரவாளர்களோடு ஷா ஆலாம் மாநகரமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இவ்விடத்தில் மற்றுமொரு முக்கியத்தகவலை பதிவு செய்திட வேண்டும். பி.எஸ்.எம் கட்சியின் பதிவு செய்யும்  இந்த 10 ஆண்டுகால சட்டவிவகாரத்தில் அக்கட்சியை பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் Teng Cheng Khim, Tommy Thomas, Ragu Kesavan ஆகியோர் வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதத்தில் ஒருநாள், புத்ராஜெயா ஆர்.ஓ.எஸ் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. அப்போது கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த தோழர் அருள்செல்வன் அந்த அழைப்பை எடுத்தார். “நீங்கள் விண்ணப்பம் செய்திருந்த கட்சியின் விண்ணப்ப பாரம் அங்கீகரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வந்து பெற்றுகொள்கிறீர்களா? அல்லது தபாலில் அனுப்ப வேண்டுமா?” என்று தொலைபேசியில் பேசியவர் கேட்டார். “என்னால் அதை நம்பவே முடியவில்லை. நானே நேரில் வருகிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்தேன்” என கட்சியின் பதிவு பாரம் பெறப்பட்ட அந்த நாளை தோழர் அருள்செல்வன்,  Mengapa 10 Tahun untuk daftar PSM என்ற புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

“அந்தப் பதிவு பாரத்தை கண்ணால் கண்டு உறுதி படுத்தும்வரை அத்தகவலை யாருக்கும் நான் சொல்லவில்லை. அதோடு தபால் மூலமாக பாரம் வந்தடையுமா என்று எனக்கு அச்சமாகவும் இருந்தது. 10 ஆண்டுகளாக போராடிய ஒரு விஷயம் தற்போது, வெற்றியடைந்து கைக்கும் வரப்போகிறது, என் சூழலே இனம்புரியாத பதட்டமாக மாறியிருந்தது. நான் புத்ராஜெயா சென்றேன். அதிகாரி ஒருவர் வெள்ளை நிறம்கொண்ட கடித உறை ஒன்றை என்னிடம் வழங்கினார். 

நான் அதை பிரித்துப் பார்த்தபோது 19 ஆகஸ்ட் 2008 மலேசிய சோசலிசக் கட்சி அதிகாரப்பூர்வ பதிவு கண்டது என்ற பதிவு எண்ணோடு உறுதிசெய்யப்பட்ட பாரம் இருந்தது. நான் அந்த பாரத்தை கடைக்கு கொண்டு சென்று நகல் எடுத்துக்கொண்டேன். அதே கடையில் விற்பனைக்கு இருந்த புகைப்பட சட்டகத்தை வாங்கினேன். அது சிவப்பு நிறம் கொண்ட சட்டகமாகும். பதிவு பாரத்தை சட்டகம் செய்து அதை ஒரு தாளில் பரிசு பொருளை மடிப்பது போல மடித்தேன். பின் அதன் மேல் பி.எஸ்.எம் சின்னத்தை ஒட்டினேன். இன்னும் பதிவு கிடைத்துவிட்ட விஷயத்தை நான் ரகசியமாகவே வைத்திருந்தேன். என் சகாக்களுக்கு நான் இன்ப அதிர்ச்சியளிக்க நினைத்தேன்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பி.எஸ்.எம் அதன் செயற்குழு மற்றும் மாநில செயற்குழுவோடு, தேசிய குழு கூட்டத்தை (national committee meeting) நடத்தும். செப்டம்பர் மாதம் நடந்த அந்தக் கூட்டத்தில் சுமார் 43 தோழர்கள் கலந்துக்கொண்டனர். நான் கையோடு கொண்டுச் சென்றிருந்த பரிசை அப்போது கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் நசீரும், துணைத் தலைவராக இருந்த தோழர் சரஸ் ஆகியோரின் கையில் கொடுத்தேன். அவர்கள் இருவரும் அதைப் பிரித்தனர். டாக்டர் நசீர் “Did we get registered” என்று முதல் வார்த்தையை உதிர்த்தார். தோழர் அனைவரும் உணர்ச்சி பெருக்கெடுத்து HIDUP PSM! HIDUP PSM! என்று முழங்கினர்” என்று தோழர் அருள் அந்தப் புத்தகத்தில் மேலும் விவரித்திருக்கிறார்.  

உள்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு ஒப்பாக அன்றைய தினம் மலேசிய சோசலிச கட்சிக்கு கிடைத்த பதிவு தொடர்பான அங்கீகாரமானது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.  

கட்சியின் பதிவுக்கு முன் நடந்த  பொது தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட சோசலிச வேட்பாளர்கள், அதன் பிறகு  தனது சொந்த சின்னமான இடது கை சின்னத்திலேயே போட்டியிட்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர மலேசிய சோசலிசக் கட்சியின் இந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தோட்டப் புற மக்களுக்கும், நகர முன்னோடிகளுக்கும்  நிறைய திட்டங்களையும், ஆலோசனைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. நாட்டில் குறைந்தபட்ச சம்பளம் அமல்படுத்த அரசுக்கு நெருக்கடி கொடுத்ததிலிருந்து, தனியார் மயமாகவிருந்த அரசாங்க மருந்தகச் சேவையை போராடி தடுத்ததுவரை முதலாளித்துவத்திற்கு எதிரான பல போராட்டங்களை பி.எஸ்.எம் இன்றுவரை களம் கண்டு வருகிறது. 

தவிர ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்தின போரணியையும் பல சவால்களுக்கிடையில் பி.எஸ்.எம் நடத்திவருவது இங்கு குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு தனது 25-வது வெள்ளி விழாவைக் கொண்டாடும் பி.எஸ்.எம் கட்சி, அதன் இலக்கை அடைய வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.

 வாழ்க பாட்டாளி; வளர்க வர்க போராட்டம்.

நன்றி: மலேசியாகினி 30/4/2023

பெண்கள் மீதான அடக்குமுறைகள் பேசப்பட வேண்டும்-குழலி

மலேசிய பெண் கவிஞர்களில் பூங்குழலி வீரன் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருக்கிறார். பல முக்கியக் கவிதைகளை நமக்கு கொடுத்திருக்கும் இவர் இதுவரை 4 கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 10-ஆண்டுக்கும் மேலாக மின்னல் எஃ.எம்-மில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தற்போது புத்ராஜெயாவின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக  அமைச்சின் கீழ் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல். நேர்கண்டவர் யோகி.

 

1. கவிதைக்குள் நீங்கள் வந்த தருணம் எப்படி நிகழ்ந்தது?

பெரிய திட்டமிடல்களுக்குப் பிறகெல்லாம் எனது இலக்கிய ஆர்வம்  அமையவில்லை. வாசிக்கத் தூண்டிய அப்பா கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்பதையும் வழக்கமாக்கினார். எனக்கு சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகவும் ஆர்வமிருந்தது. அதுவே, எழுதுவதற்கான முதல் புள்ளியை இட்டது எனலாம். தொடக்கப்பள்ளி படிக்கும் காலம் தொட்டே நிறைய கவிதைகள்; அதாவது கவிதைகள் மாதிரி எழுதியிருக்கின்றேன். ஆனால், இப்போது அவை எதையுமே கவிதைகள் என்று சொல்ல முடியாது என தோன்றுகிறது. நாளிதழ்கள், வார மாத இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவந்தன. ஓர் ஆர்வத்தின் அடிப்படையில், சிக்கலுக்கு வெளியே நின்று கொண்டு அறிவுரைக் கூறும் தொனியிலான பிரச்சார கவிதைகள் அவை. கலைத்தன்மையற்ற மிக முக்கியமாக அகவயப்பட்ட அல்லது தன்வயப்பட்ட கவிதைகளாக அல்லாமல் ஒரு மூன்றாவது மனநிலையில் நின்று நான் எழுதியவையாக இன்று அக்கவிதைகள் எனக்கு தெரிகிறது. சமூகம் - சமூகப் போராட்டம் - இனம் - மொழி - சுரண்டல் - ஈழ விடுதலைப் போராட்டம் - பெண் விடுதலை என அப்போதிருந்த வாழ்வு தந்திருந்த உள்ளடக்கமே அன்று நான் எழுதிய கவிதைகளின் கருவாகவும் இருந்தது. ஆனாலும், அந்த தொடக்கம் குறித்த ஒரு மகிழ்ச்சி இன்றளவும் இருக்கிறது. ஒரு படைப்பாளனுக்கு அந்த மகிழ்ச்சி மிக முக்கியமானது. அதோடு, கவிதைகள் குறித்த புரிதலும் மிகத் தெளிவாக இல்லாத ஒரு காலக்கட்டம் அது. பின், என் தாய்மண்ணை விட்டு தலைநகருக்கு வந்தது; புதிய நண்பர்களையும் வாழ்வு குறித்த புதியதொரு புரிதலையும், முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவத்தையும் தந்தது. ம.நவீன், பா.அ. சிவம், மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம்; காலச்சுவடு, கணையாழி, உயிர்மை இதழ்களை வாசிக்க தொடங்கிய வாசிப்பனுபவம் கவிதைக்கான புதிய தருணங்கள் எனக்குள்ளும் நிகழ சரியான காரணங்கள் ஆயின.

 

2.ஒரு வாசகனாக உங்களுக்குப் பிடித்தமான கவிதைகள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

எழுதுபவருக்கே உரிய அசலான ஒரு மொழியில்; அவருக்கான சொற்களில் கவிதைகள் இருக்க வேண்டும். அவ்வாறான கவிதைகள் எனக்கு உவப்பானவை; அவையே மனதுக்கு நெருக்கமானவையாகவும் இருக்கின்றன. சில நேரங்களில், ஏன் இவர் இந்த கவிதையை எழுதினார், எச்சம்பவம் இவரை இதை எழுத தூண்டியிருக்கும் என்றெல்லாம் சில நாள்கள் வரை கூட யோசித்திருக்கிறேன். அதற்காகவே, அந்த கவிஞர் குறித்த தேடலையும் தொடங்குவேன். அவ்வாறான ஒருவர்தான் கவிஞர் கலாப்ரியா. அன்று தொடங்கி இன்று வரை அவரின் கவிதைகள் எனக்கு மிகப் பிடித்தவை. அவரின் பல கவிதைகளை வாசித்த முதல் அனுபவமும் அது நிகழ்த்திப் போன உணர்வுகளும் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. வாழ்வின் சிறு சிறு தருணங்களை இவ்வளவு நுணுக்கமான பார்வையில் அணுக முடியுமா என வியக்க வைப்பவர்.

வாசிக்கத் தொடங்கிய காலம்தொட்டு கண்டு, பார்த்த, கேட்ட களித்த விடயங்கள் சொல்வதற்கு ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மொழி இருக்கும். அதுவே, தனித்துவமானதும் கூட.

3. நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களின் மனத்திற்கு நெருக்கமானதாக எதைச் சொல்வீர்கள்?

நிறைய கவிதைகள்  அவ்வாறு இருக்கின்றன. குழந்தைகள் குறித்தும், அப்பா - என் வீடு குறித்தும் எழுதிய கவிதைகள் அந்த நெருக்கத்தைத் தொடர்ந்து உணர்த்துகின்றன.  எனது அண்மைய தொகுப்பான அகப்பறவையில் இருந்து இந்த இரு கவிதைகள்.

கூடென்பது எதற்கு என்றேன்

உண்டு உயிர்க்க பாதுகாக்க

பிறகு வாழ்வது எங்கே என்றேன்

வேட்டையாடுதலை நிகழ்த்திக் கொண்டிருந்தவன்

திரும்பிப் பார்த்தான்

வேட்டைக்குத் தப்பிய மான்

தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தது

நீண்ட நேரம் வெளியில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு வீடு திரும்புதல் என்பது சொற்களைக் கடந்த ஒரு பேறு; நானும் அவ்வாறான ஒரு சூழலில் வாழ்ந்தபோது எழுதிய கவிதை இது. இங்கு வேட்டையாடுதல் என்பது நமது பணிச் சார்ந்த சூழல். அங்கே வாழ்தலுக்கு இடமே இல்லை. அட்டவணை வாழ்க்கையின் உச்சகட்ட அவலம் என்றுதான் அந்த வாழ்க்கையை வகைப்படுத்த வேண்டும்.

இரவு பேசிக்கொண்டிருக்கிறது

இரவின் மொழியை

இரவுக்காக விழித்திருப்பவர்கள்

யாரேனும் மொழிப் பெயர்த்துக் கொள்ளலாம்

பாகுபாட்டின்றி எல்லோரோடும்

பேசிக் கொண்டிருக்கிறது

இரவு மட்டும்…

அதிகம் களைத்து வீடு திரும்புகிற பொழுது உடனே தூங்கிப் போகிற சூழல் பெரும்பாலும் வாய்க்காது. அப்போதெல்லாம் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இரவைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானது. இரவுக்கென்றிருக்கும் மொழியை உணர்ந்த தருணங்கள் அவை.

4.மலேசியத் தமிழ் கவிதை சூழல் பற்றி உங்கள் புரிதலைப் பகிருங்கள்?

எல்லாம் மிகச் சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் நெருக்கடிகளின் பெரும் பட்டியல் அல்லவா நம்மிடம் இருக்கிறது.

தற்கால தமிழ்க்கவிதை சூழலை நன்குணர்ந்துள்ள ஒரு சாராரும் அவ்வாறு உணரவே மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒரு சாராரும் இயங்கும் கவிதை வெளி நமக்கானது. தொடக்கத்தையே உச்சம் என கொண்டாடுவதும் அந்த கொண்டாட்டத்தை நம்பி அதையே தொடர்ச்சியாக்கி கொள்ளும் ஆபத்துமே இங்கு அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. கலை இலக்கியத்தில் தீவிரமாக இயங்குபவர்கள் அவ்வாறான படைப்புகள் குறித்து ஏதேனும் விமர்சனங்கள் வைத்து விட்டால் அவர்களை வசைபாடுகின்ற பட்டியல் மட்டும் நீள்கிறது. மற்றபடி, அவர்கள் முன்வைத்த படைப்பின் போதாமையை மேம்படுத்துகின்ற உழைப்பு என்பது மட்டும் இல்லை என்பதே வருத்தமளிக்கும் விடயம். இந்தப் போக்கு மிக ஆபத்தானது. இதனால் ஒரு தீவிர கலைப் படைப்பு சமூகம் உருவாகவே முடியாது. இவ்விரு சாராருக்கும் இடையே ஓர் காத்திரமான உரையாடலைத் தொடங்குவதற்கான முன்னெடுப்பு மிக அவசியம்.

5. அகம் மற்றும் புறம் சார்ந்து பிரயோகிக்கப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்... இலக்கியப் படைப்புகளில் இப்பிரச்னைகள் எவ்வாறு பேசப்படுகின்றன? நீங்கள் அதை எவ்வாறு காண்கிறீர்கள்?

எனக்கு ஆப்பிரிக்க கவிதைகளின் மேல் மிகுந்து ஈடுபாடு உள்ளது. அகம் மற்றும் புறம் சார்ந்து ஏவப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்; கொடுமைகள்; வசைகள்; வலிகள் என படைப்புகளில் மிக நேர்த்தியாக, உண்மையாக அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்க்கவிதைகளிலும் அவ்வாறான சூழல் காணக்கிடைக்கிறது. ஆனால் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என அவை புறந்தள்ளப்படுகின்ற அவலம் இங்கு இன்றும் தொடர்கிறது. வாழ்வைப் பேசுவதுதான் படைப்பு. எல்லா பிரச்சனைகளும் பேசப்பட வேண்டும். பேசப்படுவதன் மூலமே கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் பலரின் கண்களும் திறக்கும். எனவே, பெண்கள் மீதான எல்லாவித அடக்குமுறைகளும் எல்லா வகையாக இலக்கிய வெளியிலும் மீண்டும்  மீண்டும் பேசப்பட வேண்டும்.

 

6. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதுகிறீர்கள்? இந்த இடைவெளி உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? உங்கள் எழுத்துக்கு இந்த இடைவெளி துணை புரிந்திருக்கிறதா?

 

மிக நீண்ட மௌனம்; முற்றிலும் வாழ்வின் வேறொரு தளத்தில் வாழ்ந்து மீண்டது போன்ற உணர்வு. என்னைப் பொறுத்தவரையில்  படைப்புகள் தொடர்பான ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பானதும் தேவையானதும் கூட என நான் நம்புகிறேன்.  மேலும், இந்தக்கால கட்டங்களில் எனது வாசிப்பு மனநிலை படிப்படியாகக் குறைந்து இல்லாமலே போய்விட்டது. அது  மீண்டும் எழுதுவதில் பெரும் தடையை ஏற்படுத்தியிருந்தது.  வீடு முழுக்க நிறைந்திருந்த புத்தகங்கள் ஒரு பேயைப்போல எப்போதும் பயமுறுத்தியபடியே இருக்கும்.  இப்போது வழக்க மனநிலைக்கு திரும்பி மீண்டும் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறேன்.


7. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த பெண்களில் பலர் இன்று எழுதுவதிலிருந்து காணாமல் போய்விட்டார்கள். இந்த பின்னடைவு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஒரு படைப்பாளி எப்படி சுதந்திரமாக எழுத்தத் தொடங்குகிறானோ அதேபோல் அவன் எழுதாமல் விடுவதற்கும் அவனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு என  நான் நம்புகிறேன். அவர்களிடம் படைப்பு என்பது நிகழாமல் போயிருக்கலாம்; அதை அவர்கள் உணர்ந்துவிட்ட புள்ளியில் அதிலிருந்து அவர்கள் விலகியிருக்கலாம் ; ஒரு தீவிர வாசிப்பாளராக மாறியிருக்கலாம். இதை பின்னடைவு என்று சொல்லமுடியாது என்று நான் நினைக்கிறேன். எல்லா நேரத்திலும் இத்தனை பேர் எழுதியாக வேண்டும் என்று ஏதாவது விதியிருக்கிறதா என்ன?

 நன்றி தமிழ்மலர் நாளிதழ் 30/4/2023

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தேடப்பட்ட குற்றவாளி குருதேவனும் விடுதலை திரைப்படமும்

                                       
அண்மையில் திரைக்கண்ட “விடுதலை” திரைப்படம் பலதரப்பட்ட விஷயங்களால் மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொடக்கமாக அதன் மூலக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் ”துணைவன்  சிறுகதையை தழுவியது என்று கூறப்பட்டது. படத்தைப் பார்த்த பலர், அது எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியதாக இருக்கிறது என்று விமர்சித்தனர்.  நவீன இலக்கிய வட்டாரத்தில் இது மிகப் பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய வண்ணமே இருந்தது.

இதுபோக,  கடைநிலை மக்களுக்காக களத்தில் நிற்கும் தோழர்களோ,  கேராளாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், கர்நாடகாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், நக்சல்பாரி போராட்டங்களையும்  நினைவு கூர்ந்து பதிவிட்டனர். 

கடந்த வாரம் “விடுதலை படத்தைப் பார்த்த  எனக்கு, அதுகுறித்த  எண்ணங்களும்,  நம் நாட்டின் வரலாற்று பதிவோடு ஒத்துப்போகும் சில சம்பவங்களையும் பதிவிடுவதற்கு   ஒரு தருணமாக அமைந்தது. அதை தமிழ்மலர் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். 

கிளர்சிக்காரர்களால்   விபத்துக்குள்ளாக்கப்பட்ட ரயில்  காட்சியிலிருந்து “விடுதலை படம் தொடங்குகிறது. கிளர்ச்சிக்காரர்கள் என்று காட்டப்பட்டவர்கள்  “தொண்டர் படையை சேர்ந்தவர்கள் என்று அதிகார வர்கத்தினர் கூறுகின்றனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் அவ்வாறே அச்சிடப்பட்டன.   அங்கிருந்தே அப்படம்  என்னை ஈர்க்க தொடங்கியது. காரணம் அந்த  “தொண்டர் படை தான். 

மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்  தொண்டர் படையைச் சேர்ந்தவர்களும்  கிளர்ச்சிகள் செய்வர்கள் என்றே பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியிருந்தது.  நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷாரையும், முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த தொழிற்சங்க புரட்சிக்காகவும்  “தொண்டர் படையினர்  கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக 1940-களில் கெடாவில் நடந்த கள்ளுக்கடை போராட்டத்தில்  தொண்டர் படையின் பங்கு  முக்கியமாக பேசக்கூடியதாகும்.  1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டர் படை இயக்கம் 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடந்து பிரிட்டிஷ்  அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வந்த 'மலாயா தேசிய விடுதலைப் படை'யை சேர்ந்தவர்களை  ஒழித்துக்கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இவ்விஷயத்தில் பிரிட்டிஷார் சந்தேகம் கொண்ட ஒருவரையும்  தயவு  தாட்சண்யம்  பார்க்கவில்லை. 

'மலாயா தேசிய விடுதலைப் படை' யின் தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளியாக குருதேவன் என்பவர் இருந்தார். அவர் யார்? எப்படி இருப்பார் என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்க்கு சன்மானத்தை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.  அவருடைய அடையாளம் தெரியாததால் அவர் மாயாஜாலங்கள் தெரிந்தவர் என்றெல்லாம்  கட்டுக்கதைகள் உலாவியது.  உண்மையில் போலீசின் கழுகுப்பார்வையிலிருந்த தப்பிப்பதற்காக அவர் மாறுவேடத்திலேயே இருந்திருக்கிறார். குருதேவன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

                                

அப்போது காவல் துறையின் சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான  அகமது கான் என்பவரிடம்  சிங்கப்பூரில் வாய்வழி நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது.  அகமது கான்-தான் குருதேவனை தேடிப்பிடிப்பதற்காக  நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாவார்.  அந்த நேர்காணலில், இடது சாரி சித்தாந்தங்களை கற்ற  ஒரு  தேர்ந்த சித்தாந்தவாதி என்று குருதேவனை குறிப்பிடுகிறார். மிகவும் மூளைக்காரராக செயல்பட்ட குருதேவன் மாறுவேடத்திலேயே இருந்ததால் அவரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு குருதேவன் என்று பெயர்கூட அவரின் இயற்பெயராக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். 

குருதேவன்  போலீசிடம் மாட்டிகொண்டதும் ஒரு விபத்துபோலவே நடந்தது. ரிச்சர்ட் கொரிண்டன் எனும் பிரிட்டிஷ் அதிகாரிதான் சிரம்பானில்  குருவை கைது செய்தார். அவர் அது குறித்து பதிவும் செய்திருக்கிறார். சம்பவத்தன்று, அங்கு  கோவில் பூசாரி போல் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்படவே அவர் யார் என்று தெரியாமல் விசாரணைக்காக  காவலில் வைத்திருக்கிறார் ரிச்சர்ட். பின், அகமது கான் அந்த இடத்திற்குத் திரும்பியபோதுகுரு கைவிலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் அமர்ந்திருப்பது குருதேவந்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது அகமது கானுக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. காரணம் குரு எப்போதும் உன்னிப்பாகவும் இருக்ககூடியவர். இப்படி சாதாரணமாக சிக்கிகொண்டது அவருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

முன்னதாக குருதேவன், சிங்கப்பூரில் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சிறிய அறையில், தொலைபேசி நிறுவன ஊழியர் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். தான் கற்றுதெளிந்த சித்தாந்தக் கல்வியையும், மார்க்சிய வகுப்புகளையும் ஒத்த சிந்தனையுடைய தனது சகாக்களுக்கும் அறிவார்ந்த இடதுசாரி  குழுக்களுக்கும் போதித்தார். 

''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்கம் செய்த சாதனைக்குப் பின்னால் தொண்டர் படை, குருதேவன் ஆகியோர் மறைமுகமாக இருக்கின்றனர். இந்த சாதனையை வளரவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியால் கொல்லப்பட்ட,  தொழிற்சங்க போராட்டவாதிகளான  மலாயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட தோழர்களுக்கு பின்னால்  ஓர் ஊக்கியாகவும்  குருதேவன் இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷுக்கு எதிரான பல போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குருதேவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையானார்.

திரையில் பெருமாள் என்பவர் தேடப்படும் முதன்மை குற்றவாளியாக இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத பட்சத்தில் போலீஸ் அதை கண்டுபிடிக்க சிறப்பு பிரிவுகளை அமைத்து செயற்படுவதுடன், சந்தேகம் என்ற பெயரில் மக்களையும் சித்திரவதை செய்கிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நமது நாட்டில் (மலேசியா) காட்டுப் பெருமாள் என்ற போராட்ட வீரரும் தேடப்பட்ட குற்றவாளியாக தலைமறைவாக இருந்து, பின் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரு தகவலாக கூறிக்கொள்கிறேன்.

"விடுதலை" திரைக்கதையை   நான்  நமது நாட்டுக் கதை என்று சொல்லவில்லை.  மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும், வெவ்வேறு தனி இயக்கங்களாக செயற்பட்டாலும், முடிவில் அது ஒன்றுபோலவே இருப்பதை சொல்ல வருகிறேன்.

இரண்டாம் பாகம் வந்தால்தான் இன்னும் தெளிவாக பேச முடியும். தவிர நமது நாட்டில் நடந்த போராட்டங்களை பேசுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே.

நன்றி: மலாயா கணபதி இணையத்தளம் மற்றும் தோழர் சாமிநாதன்.  

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 23/4/2023