செவ்வாய், 28 ஜனவரி, 2020

‘Bila kami bersatu’ (நாங்கள் ஒன்றிணைந்தால்); ஆவணப்படம்



‘Bila kami bersatu’  என்கிற ஆவணப்படம் அண்மையில் பத்து அராங் பல்நோக்குமண்டபத்தில் பொதுமக்கள் மற்றும்  குத்தகைமுறை தொழிலாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.  சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும் அப்படத்தில் சில முக்கிய தகவல்கள் பேசப்பட்டிருந்தன.

20 வருடமாக மரணத்திருந்த ஒரு யூனியனுக்கு உயிர்க் கொடுத்ததிலிருந்து,  அதற்கு எப்படி இப்போது உயிர் வந்தது?  இனி எப்படி யூனியனைக் கையாளப்போகிறார்கள்  என்பது உள்ளிட்ட தகவல்களையும் அப்படத்தில் பேசியிருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருக்கும் மூன்று பெண்களை மையமாக வைத்து அவர்களின் தின வேலைகள், செய்தொழில் இதற்கிடையில் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைக்கான தீர்வை  எப்படி இவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறார்கள் ? யாரையெல்லாம் இது தொடர்பாக சந்திக்கிறார்கள்? சந்தித்தவர்களிடமிருந்து இவர்களுக்கு கிடைத்த பதில் என்ன?  அதோடு அவர்களின் பிரச்சனைகள் தீர்ந்ததா? அல்லது என்ன ஆனது? அல்லது என்ன ஆகும்? என்ற கேள்வியோடு அந்தப் படம் முடிவடைகிறது.

தில்லையம்மா, ரிதா, ரோட்சியா ஆகிய துப்புரவு வேலை செய்யும் பெண்களின் வாழ்கையை முன்வைத்தே இந்த ஆவணப்படம், பதிவு செய்யப்பட்டுள்ளது. தோழர் மின் சீ இதை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
(உண்மையில் இனிதான்  இவர்களின் பிரச்சனை  தீவிரமடையவுள்ளது என்பது வருத்தமான விஷயம், படத்தைப் பார்த்து அது ஏன் என்று தெரிந்துக்கொள்ளலாம்)

அரசு மருத்துவமனைகளில் அல்லது பள்ளிகளில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள், பள்ளியை காவல்செய்யும் காவல்காரர்கள், தோட்டக்காரர்கள் 1980-களில் அரசு ஊழியர்களாக இருந்தார்கள். அமைச்சர்களிடமிருந்து நேரடியாக இவர்கள் ஊதியத்தைப் பெற்றார்கள்.  மேலும், அரசு சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், 1990-க்குப் பிறகு பிரதமரின் புதிய திட்டத்தின்கீழ் இவர்கள் அனைவரும் குத்தகை தொழிலாளர்களாக மாற்றப்பட்டதுடன், அரசு உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. ஒரு பெரிய சலுகை பறிப்போனதைக்கூட அவர்கள் பேசுவதில்லை. ஆனால், இவர்களுக்கு இடையில் அதாவது, அமைச்சு - பள்ளி அல்லது மருத்துவமனை உயர் அதிகாரிகள்- தொழிலாளர்கள் இவர்களுக்கு மத்தியில் முளைத்த குத்தகைக்காரர் எனும் புதிய முதலாளி தரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒவ்வொரு மூன்று வருடத்திலும் இவர்கள் சந்திக்கிறார்கள்.

ஆவணப்பட இயக்குனர் தோழர் மின் சீனோடு
20 வருட தொழிலாளியாக இருந்தாலும், மூன்று வருடத்தில் அவர்கள் புதிய தொழிலாளியாக  ஆக்கப்படுவதுடன், அனுமதிக்கப்பட்ட சம்மளம் மட்டுமே அடுத்த மூன்று வருடத்திற்கு நடக்கும். முன்னேருவதற்கான வாய்ப்போ அல்லது ஏதாவது சொத்து வாங்குவதற்கான சந்தர்ப்பமோ இதில் கிடைக்குமா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

இந்த சிக்கலையெல்லாம் எதிர்த்து அரசிடம் கேள்வி கேட்கிறது யூனியன்; அதாவது ‘’அரசாங்க மருத்துவமனை துப்புரவு பணி தொழிலாளர்களின் தொழிற்சங்கம்’. இந்த யூனியனில் நான் முக்கியமாக சொல்லவேண்டிய  விஷயம்,  இதை பெண்களே பொறுப்பேற்று நடத்துவதோடு அமைச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துபவர்களெல்லாம் (சண்டைபோடுபவர்கள்கூட) இவர்கள்தான்.  தனக்கான உரிமையை கேட்பதற்கு அதிகம் படித்திருக்க வேண்டும்; பணம் கொண்டிருக்கவேண்டும்; அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. நேர்மையும், கொஞ்சம் தைரியமும், சமூக சிந்தனையும் இருந்தாலே போதும் என்கின்றனர் இந்தப் பெண்கள்.


ஆவணப்படம் முடிந்த பிறகு அது தொடர்பான கலந்துரையாடலும் இயக்குனருடனான ஒரு சந்திப்பும் இடம்பெற்றது இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்தது.

இந்த ஆவணப்படத்தை உங்கள் வட்டாரங்களில் திரையிட விரும்பினாலும், யூனியனில் இணைய விரும்பும் தொழிலாளர்களும் எங்களை தாராளமாக தொடர்புக்கொள்ளலாம்..

சிவரஞ்சனி:  010 2402159
(அரசாங்க குத்தகைத் தொழிலாளர் அணி (JPKK) தலைவர்)
யோகி: 016 5432572





ஞாயிறு, 26 ஜனவரி, 2020

தோழர்களின் காதல்…


பொதுவுடமையை பின்பற்றும் சித்தாந்தவாதிகளால் காதலிக்க முடியுமா? அவர்களின் மாபெரும் மக்கள் புரட்சிக்கு காதல் என்ன பங்காற்றுகிறது? காதல் தோல்வியினால் மூளையும் மனமும் சிந்திப்பதை இழந்து தன்னையே மாய்த்துக்கொள்கிறவர்கள் மத்தியில்  தோழர்களின் வாழ்க்கையில் காதல் முக்கியப் பங்காற்றுகிறதே அது எப்படி?

பிப்ரவரி 14 காதலர் தினம். உலகம் முழுவதும் இந்த நாளை காதலர்கள் கொண்டாடுகிறார்கள். சிலர் இந்த நாள் தேவைதானா என்று பட்டிமன்றம் வைக்கின்றனர்.  நான் இந்த நாளுக்காக ஜெனி, கார்ல் மார்க்ஸ்  தோழர்களின் காதல் கதையையும், உலகருந்த அறிஞர்கள் காதலைப் பற்றி கொண்டிருக்கும் நிலைப்பாட்டு வரிகளையும் பகிர்ந்துக்கொள்ள வந்திருக்கிறேன்.  


  ஜெனி, கார்ல் மார்க்ஸின் காதலி

மனித வாழ்க்கைக்கு புதிய சித்தாங்களை தந்த காரல்மார்க்ஸின் காதல் கதை மிக சுவாரஸ்யமானது. ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே  காதல் வசம் விழுந்தவர் இவர். தன் காதலிக்காக காதல் கடிதங்கள் அப்போதே எழுத தொடங்கிவிட்டார்.  ஜெனி மார்க்ஸின் காதலி.  அவளைப்போல காதலை ஒருவரால் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை. மிக பெரிய செல்வந்தரின் மகளான ஜெனி, மார்க்ஸின் காதலை நிராகரித்துச் செல்வதற்கான பல காரணங்கள் ஏற்பட்டும் அதை ஒரு காரணமாகவே அவர் கொள்ளவில்லை.  மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன், ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதை  ஒப்புக்கொள்ளவே மாட்டேன்" என சொல்லிவிட்டார்தன் சுய சம்பாத்தியத்திற்காக ஜெனியை தனக்காக காத்திருக்க சொல்லிவிட்டு வெளிநாடு செல்கிறார் மார்க்ஸ்.  ஏழு ஆண்டுகள் காத்திருக்கிறாள் ஜெனி.  பின் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் மார்க்ஸுக்கு  வேலை கிடைகிறது. மிக சாதாரணமாக  5 பேர் முன்னிலையில் ஒரு தேவாலயத்தில்  ஜெனியை பதிவு  திருமணம் செய்து செய்துகொள்கிறார் மார்க்ஸ்.

தேன் நிலவுக்காக கொஞ்சம் பணமும்  பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனி நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார்.  தேன் நிலவு காலத்தில், வீட்டை பூட்டமறந்துவிட்டு இயற்கையை ரசிக்க சென்றுவிட்டார் மார்க்ஸ். திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடிவிடுகிறான். இதை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். 

அவர்களுக்கு பிறந்த 4 குழந்தைகளும் வறுமையின் பசிக்கு இரையாகிறார்கள். இறுதியில் நோய் வாய்பட்டு ஜெனியும் இறந்துபோகிறார்.  மார்க்ஸும் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறார்.  ஜெனியின் இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ்
"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியிருந்தார். ஜெனியும் அவரின் காதலும் இல்லாமல் இருந்திருந்தால் உலக மாமேதையான காரல்மார்க்ஸ் அவரின்  மாபெரும் சித்தாந்தத்தை படைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. காதல் கடிதங்களில் ஆரம்பித்த ஓர் அழகான காதல், கடிதத்திலேயே முடிந்தது. 

காதல் குறித்து அறிஞர்கள் சொன்னதில் எனக்கு பிடித்த வரிகள்...



வாழ்க்கையில் கிடைத்திருக்கும் ஒரே வண்ணம் அது. கலைகளின் வாழ்க்கையின் அர்த்தங்களை அது தருகிறது. அந்த வண்ணத்தின் நிறமே காதல்.
-ஓவியர் மார்க் சர்கல்

வாழ்க்கை எனும் மலரின் தேன் துளிகளே காதல்...
    -விக்டர் ஹியுகோ 

         காதலற்ற வாழ்க்கை, வசத்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது...    
                                                                         -கலீல் ஜிப்ரான்


ஓர் ஆண், தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான். பெண்ணோ ஓர் ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.       
-ஆஸ்கர் ஒயில்டு  


                           
காதலே என் மதம். அதற்காக இறப்பேன்…
-ஜான் கீரிஸ்



நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர். ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றனர்...   -பாரதி



இனிமையான சந்தோஷமும் வலிமிகுந்த காயமுமே காதல்..

  -பேர்ல் பேர்லி



பழைய காலத்திலிருந்தே ஆண் பெண்ணை நேசித்து வருகிறான். பெண் ஆணை நேசித்து வருகிறாள். எல்லா உயிரினங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈர்ப்பு உண்டு. இனச் சேருதல், இனப்பெருக்கம் இதர்கான வழியே காதல்.கொஞ்சம் மணம் வீசுகிற  அற்புதமான ஏமாற்று..   -வைக்கம் முகமது பஷீர்



காட்டுத் தீ  போல தேகத் தொடர்பு என்ற அடிப்படையில் பிறந்த காதலை புத்தி தெளிவு என்ற அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி பணிய வைத்தால்தான் அன்பு என்னும் விளக்கு வாடாமல் எரியும். இதுதான் என் ஆத்ம சோதனையின் முடிவு…  
-புதுமைப்பித்தன்



காதல் என்பது நெருப்பு. உன்  இதயம் குளிர்காயப்போகிறதா? அல்லது உன் வீடு தீப்பற்ற போகிறதா? என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.             
-ஜோன் கிராபோர்ட்



கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசையை வைப்பதே காதல்..   -மார்க் ட்வைன்

ஒரு பெண்ணை காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் முடிவை காதலால் நீவி சாபமேற்றுவது. உறைந்துபோன ரத்தத்தில்கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்..   -சச்சிதானந்தன்

காதலுக்காக திருமணம் செய்து கொள்வது சவாலானது. கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்க மட்டுமே முடிகிறது. 
-ஜோஷ் பில்லிங்ஸ்

காதல் என்பது கற்பனை. திருமணம் என்பது நிஜம். கற்பனைக்கும் நிஜத்துக்குமான முரண்பாட்டின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது..
-கோயத்
நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன்...  -ஷேக்ஸ்பியர்

காதலென்பது நமது கதைகளைப் பொறுத்த வரையில் இருவர் செய்துக்கொள்ளும் நிச்சயதார்த்தம். உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பாவத்திற்காக அவன் அவளையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது செத்துப்போக வேண்டும். விவாகரத்தைக் கூட அனுமதிப்பார்கள் போலிருக்கிறது.இந்தக் காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால் நமது பண்பாடு கெட்டுப் போகுமென்று சொகிறார்கள்..
-ஜெயகாந்தன்…
தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது என்பது என் கருத்து.
                                     -கவிஞர் கண்ணதாசன்


செவ்வாய், 14 ஜனவரி, 2020

பொங்கல் மலேசியாவிற்கு தேவையான ஒன்றா?


குழந்தையாய் இருந்த காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை பல கோணங்களில் என் சிந்தனைகளைக் கலைத்துப் போட்டிருக்கிறது. சாணியை மொலுகி வாசலில் கோலம்போட்டு அண்டை வீட்டில் கோலாகலமாகப் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்  என் அப்பாவும் அம்மாவும்  செம்பனைக் காடுகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.  

இடைநிலைப் பள்ளிக்கு நான் போயிருந்தக் காலகட்டத்தில்தான்  எங்கள் ஆசைக்கு மதிப்புக் கொடுத்து  வாசலில் பொங்கல் வைப்பதற்கு அப்பா அனுமதி கொடுத்தார். பணம் உள்ளவர்கள் கோலாகலமாகப் பொங்கலை அவர்களின் வசதிக்கு ஏற்றமாதிரி கொண்டாட,  நாங்கள் எளிமையான பொங்கலை செய்தோம்.  ஏதோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி எங்களுக்கு; பால் பொங்கும் போது எங்கள் கிராமத்திற்கே கேட்கும்படி வாய்விட்டுப் பொங்கலோ பொங்கல் என சத்தமாக  கத்தியது இப்போது நினைத்தாலும் உற்சாகம் வந்துவிடுகிறது.

அப்பா எங்களை விட்டுப் போன பிறகு தலைநகருக்கு வேலைக்காக வந்த எனக்குப் பொங்கல் என்பது கடந்த கால நினைவுகளில் ஒன்றாகிப்போனது.  தலைநகரின் பரபரப்பு எனக்கு வேறுவிதமான பொங்கலை அறிமுகப்படுத்தியது.  தலைவர்களின் வாழ்த்து செய்திகள், மின்னல் பண்பலையின் பொங்கல், அரசாங்கத்தின் 100 சட்டி பொங்கல்; 1000 சட்டி பொங்கல் என மலாய்க்காரர்கள் சீனர்கள் எல்லாரும் பொங்கலை வைத்து ஒரு பெஸ்தாவாக அந்நாளை கொண்டாடினார்கள்.   எவ்வகையிலும் புல்லரிக்காத இவ்வகை பொங்கலுக்கு மத்தியில்  நான் ஆச்சரியமாக கலந்துகொண்ட ஒரு பொங்கல் இருக்கிறது. 
நான் வீடு  வாடகைக்கு   தங்கியிருந்த ஆயேர் பானாஸ் எனுமிடத்தில் சீனர்கள் ஒன்றுகூடும்  தேவாலயம் இருந்தது. எனக்குச் சமையல் வேலை சொல்லிக்கொடுத்த ஆசான் (சீனர்) அந்த தேவாலயத்திற்குத்தான் வருவார். என்னை அந்த தேவாலயத்திற்கு அவர் அழைப்பு விடுத்ததின் பேரில் நான் அங்கு ஓரு பொங்கல் நாளில்  போயிருந்தேன்.   சீனர்களெல்லாம் சேர்ந்து பாதிரியார் உட்படப் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். எனது ஆசான் சொன்னார் இங்கே சீனர்கள் பலர் உழவர்கள்தான் என்று.  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சந்தோஷமாக இருந்தது.
2020-ஆம் ஆண்டில் மலேசியாவில் பொங்கல் திருநாள் மிகப் பெரிய பிரிவினைக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. 
இதுவரை இனபேதமின்றி  வாழ்த்துக்கூறிக்கொள்வதிலிருந்து பண்டிகளைக் 
கொண்டாடுவதிலிருந்து மூவின மக்களிடையே இதுவரை இருந்த ஒற்றுமைகளுக்கிடையில்   ஜாகிர் நாயக் எனும் அபாயக் கண் பட்டதிலிருந்து எல்லாம் தற்போது ஹராம் ஆகிவிட்டிருக்கிறது.  உழவர் திருநாளான பொங்கல் திருநாளைச் சேர்ந்து பொங்கி கொண்டாடிய நாட்கள் மலை ஏறிப் போய், அது இந்தியச் சமயம் சார்ந்த பெருநாள்; வாழ்த்து சொல்வது இஸ்லாமியர்களுக்குப் பாவம் என்று  அரசு நோட்டிஸ் அனுப்பும் நிலைக்கு வந்து நிற்கிறது.  காலம் இப்படி மாறிப் போய்விட்டதே என்ற கவலை எனக்கு இருந்தாலும், பெரிதாக என்னை இது பாதிக்கவில்லை. பொங்கல் என்பது இந்த நாட்டிற்கு சமய திருநாளாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், மலேசிய இந்திய மக்களுக்கே பொங்கல் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாடு வழங்கியிருக்கிறதா? மலேசிய இந்தியர்களின் பார்வையில் இனி பொங்கல் என்னவாக இருக்கப்போகிறது? ஏடுகளில் ஒரு விளக்கமும் , வாழ்வியலில் ஒரு மாதிரியும் மாறப்போகும்  மலேசிய பொங்கலை என்ன செய்யப்போகிறோம்?
விவசாய நிலத்தை பறிகொடுத்துவிட்டு 43 ஆண்டுகளாக தங்கள் நிலத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் கெட்கோ மக்களுக்கு இந்தப் பொங்கல் என்ன சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது?
சில வாரங்களுக்கு முன் கேமரன் மலையில்  60 விவசாயிகள் சம்பந்தப்பட்ட நில விவகாரம் கொஞ்சம்கூட நியாயம் இல்லாத ஒன்றாகும். அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களையும் பூந்தோட்டங்களையும் நிலபறிமுதல் என்ற பேரில் அழித்தார்கள். விவசாயிகளின் உழைப்பை மதித்து  அறுவடை முடியும் வரை காத்திருக்கும்படி ஏன் அரசாங்கம் உத்தரவிடவில்லை. இந்த 60 விவசாயிகளும் எந்த சந்தோஷத்தில் பொங்கலைக் கொண்டாடுவார்கள்?
இவை சட்டச்சிக்கல் உள்ள விவகாரங்கள் என மக்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் வீட்டில் பொங்கலை வைக்கலாம். இதைவிடப் பெரிய பிரச்னை ஒன்றைச் சந்தித்து வருகின்றனர் கால்நடை விவசாயிகள். பல தலைமுறைகளாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும்  தோட்ட தொழிலாளர்களுக்கு  அரசாங்கத்தைச் சார்ந்த நிறுவனமான  ''சைம் டர்பி'' இனி தோட்டங்களில் மாடு, கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதற்குத் தடை விதித்துள்ளது.  பல தலைமுறைகளாக மாட்டுப்பண்ணை வைத்திருப்பவர்கள் இந்த நெருக்குதலால் பெரும் சங்கடத்தை எதிர் நோக்கியிருக்கின்றனர்.  அவர்களுக்குக்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் எந்த மனநிலையில் பொங்கலைக் கொண்டாடப் போகின்றனர்?
32 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்டிருக்கும் மலேசியா, 52 பில்லியன் ரிங்கிட்டுக்கு அயல்நாட்டிலிருந்து நமக்கான உணவுப் பொருட்கள்  தருவிக்கிறது. நமது நாடு விவசாயம் செய்வதற்கு வளம் இல்லாததா என்ன? 

விவசாய நிலங்களெல்லாம்  எல்லாம் செம்பனை தோட்டங்களாக மாறி பணங்களாக காய்த்துத் தொங்குகிறது. அவற்றை அள்ளி வைத்து தின்ன முடியும்? இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் நம் சமூகத்தினர் பொங்கலை  கொண்டாடுவார்கள்தான். அது உழவர் திருநாளாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கொஞ்சம்கூட இல்லை.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

ஈரான் மீது போர் வேண்டாம் !




 மூன்றாம் உலகப் போர் மூலுமோ என்ற அச்சம் பல நாடுகளை  தொற்றிக்கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவின் மீது கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.  அந்த வகையில் மலேசிய அமெரிக்க  தூதுரகத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. பிஎஸ்எம் தலைமை ஏற்று நடத்திய இந்த கண்டன கூட்டத்தில் 47 அரசு சாரா இயக்கங்கள் ஆதரவளித்து கலந்துகொண்டதுடன் தங்களின் எதிர்வினையையும் தெரிவித்தன. இக்கண்டனம் தொடர்பாக ஒரு மகஜரும் அமெரிக்க  தூதுரகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் தீவிரம்  மிகக் கடுமையாகவும்  மற்றும் ஆபத்தானதாகவும் இருப்பதை யாரும் உணராமல் இல்லை.





டொனால்ட் ட்ரம்பின் நிகழ்த்தியிருக்கும் படுகொலையாக பார்க்கப்படும் ஈரானிய தளபதி காசெம் சுலேமானீ மரணம், போரை தூண்டிவிடும்  ஒரு  பொறுப்பற்ற செயல். மேலும் அதிகரித்திருக்கும் பதட்ட நிலையானது மூன்றாம் உலகப்போரை தூண்டி விடுமோ என்ற அச்சம் கூடியதாக இருக்கிறது. 

1979ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உட்பூசல் தொடர்ந்தாலும் 2018-குப் பிறகு அதாவது அணுஆயுத திட்டத்தை குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு இரான் வழங்கிய  ஒப்புதலை  கலைத்து புதிய
ஒப்பந்தத்திற்கு டிரம்ப் நெருக்குதல் கொடுத்ததால் இரு நாடுகளுக்கும் பகைமை உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது.


கடந்த இரண்டு சகாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான போர் மில்லியன் கணக்கான மக்களுக்கு தீவிர பயங்கரவாதம், பேரழிவு, துயரம் மற்றும் துன்பங்களை கொண்டு வந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஈரானுக்கு எதிரான போரும் ஈராக்கில் மற்றொரு இராணுவ மோதலும் நிலைமையை மேலும் மோசமடையவைக்கும்.

பி எஸ் எம் கண்டனத்தில் முழங்கியது 

- அமெரிக்காவிலிருந்து வரும் போர்க்குணமிக்க செயல்களுக்கும் போர்க்குணமிக்க சொல்லாட்சிக்கும் ஒரு முடிவு;
- ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாக திரும்பப் பெறுதல்;
- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்றொரு போரைத் தவிர்க்க ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் கட்டுப்பாடு;
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு முடிவு;
- அனைத்து  வெளிநாட்டு அமெரிக்க இராணுவ தளங்களையும் மூடு.

கடந்த மூன்றாம் தேதி இரானின் இராண்டாவது அதிகாரமிக்க நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்க படையால் கொல்லப்பட்ட்து அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடை இறுதி சடங்கில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் ஒன்றே போதும் அந்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று.

அமெரிக்காவிற்கு எதிராக குரல் எழுப்பும் எந்த நாட்டையும் எந்த நபரையும் அமெரிக்கா விட்டு வைக்காது என்பது நாம் அறிந்ததுதான். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை டிரம்ப் உணரும் காலம் நெருங்கிவிட்ட்து என்று தோன்றினாலும் அதற்காக கொடுக்கப்போகும் அல்லது போகப்போகும் உயிர் விலையை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. 

புதன், 8 ஜனவரி, 2020

சியோனான்- தோ-வில் வாழைமர நோட்டு (புத்தக பார்வை )





ஜப்பான்காரனின் வாழைமர நோட்டு என்ற வார்த்தையை நான் முதன்முதலாக கேட்டபோது ஒரு வித்தியாசமான புரிதலே இருந்தது. உலகம் முழுக்கவே டாலர்கள் ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கும்போது ஜப்பானியனின் பணத்திற்கு அப்படியென்ன இப்படியொரு சிறப்பு  பெயர் என ஒரு வகை அலட்சிய புரிதல் அதுஅந்நோட்டுகளை  நேரில் கண்டபோது என் அலட்சிய சிந்தனையானது மொத்தமும் நொறுக்கியே போனது.

தாய்லாந்தின் மரண ரயில்வே அருங்காட்சியக்கத்தில் வைத்திருக்கிறார்கள் அந்த ரசமிழந்த வாழைமர நோட்டுகளை. சில செண்டிமீட்டர்கள் நீளம் கொண்ட  நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஜப்பானியர்கள் செய்த ஆதிக்கமும் கொடுமையும் நயவஞ்சகமும் கொஞ்ச நஞ்சமில்லை. தாம் பிரிட்டிசாரிடம் சரணடையப் போகிறோம் என்று தெரிந்துக்கொண்டதும், ஒரு காசுக்கும் உதவாமல் போகும் எனத் தெரிந்தே அந்நோட்டுகளை, வேலைக்கான ஊதியம் என சொல்லி, சயாம்-பர்மா ரயில் தண்டவாள தொழிலாளர்களின் உயிர் ஆவி எல்லாத்தையுமே உறிஞ்சி துப்பும்வரை வேலை வாங்கியிருக்கிறது ஜப்பானிய இராணுவம். நினைக்கவே குலை நடுக்க கூடியது  வரலாறு அது

மிக அண்மையில் நான்  மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பயணத்தில் தோழி ஹேமா, அவர் எழுதியிருக்கும் முதற்புத்தகமான வாழைமர நோட்டை கையளித்தார். முன்னதாக முக நூலின் வழியாக அப்புத்தகம் வாசகரிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது நான் அறிந்ததுதான்.

'சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கச் சுவடுகள்' என  முகப்பிலேயே மேற்கோள்காட்டியிருக்கிறார் ஹேமா. ஆனால் என்னால் மலாயா - சிங்கப்பூர் ஆதிக்கச்  சுவடுகலாகத்தான் இந்த புத்தகத்தைப் பார்க்க முடிகிறது. என்னதான் சிங்கப்பூர் மலேசியர்களுக்கு அந்நிய நாடாக இப்போது இருந்தாலும், பண விஷயத்தில் மும்மடங்கு பெறுமதியை அந்நாடு கொண்டிருந்தாலும், மொழி, கலை கலாச்சாரம் உட்பட மலேசியா-சிங்கப்பூர் வாசிகள் ஒருநாட்டுக்காரர்கள்தா என்ற எண்ணத்தை மாற்றவே முடியாது என்பதோடு, தன்  வரலாறு குறித்து பேசும்போது சிங்கப்பூரினால்   மலேசியாவை அதாவது மலாயாவை குறிப்பிடாமல்  இருக்கவும் முடியாது என்பது காலத்தின் நியதியாகும். எங்கள் இரு நாடுகளுக்கான வரலாறு பிணைப்பு என்பது ஒரு நீண்ட சங்கிலிதொடர் என்பதை யாரும் மறுக்க முடியாது

சுவைப்பட வரலாற்றை எப்படி சொல்ல வேண்டும்? தகவல்களை எப்படிச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும்என்பதற்கு இந்த புத்தகம் நல்ல உதாரணம். அதிபுத்திசாலியான வார்த்தைகளை போட்டு மண்டைக்குள் இருக்கும் மூளை வெறிபிடித்து வெளியே வருமளவுக்கு கசக்க விடாமல், எல்லாருக்குமான ஒரு புத்தகத்தை தூக்கி தரமாகக் கொடுத்திருக்கிறார் ஹேமா


சிங்கப்பூரை கைப்பற்றியப் பிறகு ஜப்பான் அதற்கு சியோனான்- தோ என்று பெயர் மாற்றி வைத்தது. சிங்கப்பூரின் கடிகாரங்கள் ஜப்பான் நேரத்திற்கு மாற்றி வைக்கப்பட்டன. சிங்கப்பூரின் The Straits Times நாளிதழ் சியோனான் டைம்ஸ் என மாற்றியமைக்கப்பட்டது. மேலும் ஜப்பான் மொழியை பள்ளிகளில் கற்பிக்க தொடங்கியதுடன் ஜப்பானின் தேசிய கீதம், ஜப்பான் தேச பக்திப் பாடல் ஆகியவை ஜப்பான் மொழியிலேயே பாடப்பட்டது. இப்படியாக சிங்கப்பூர் மூன்று ஆண்டுகள் ஜப்பானாகவே மாறிப்போயிருந்த வரலாற்றை பேசுகிறது வாழைமர நோட்டு. (.94)  

1941-ஆண்டு 
வலிமையான கட்டுமானங்களை கொண்ட மலாயா - சிங்கப்பூரை யாராலும் எளிதில் கைப்பற்றிவிட முடியாது என தீவிரமாக நம்பியிருந்தவர்களுக்கு தண்ணிகாட்டியது ஜப்பான். சிங்கப்பூரில் ஜப்பான் ஊடுருவலை மோப்பம் பிடித்துவிட்ட ஆங்கில அரசு , மக்களை பதுங்கிடங்களை கட்டிக்கொள்ள சொன்னதோடு,  எரிகுண்டு விழும்போது மக்கள் எவ்வாறு தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்ன  விவரங்களையும் இந்தப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது. “நாங்கள் ஜப்பான்காரனை பார்த்தாலே பதுங்கு குழியில் ஒளிந்துகொள்வோம்பொண்ணுகள அப்படியே தூக்கிட்டு போயிடுவானுங்க.. ஏன்னு ஒருத்தன் கேட்க முடியாது” என்று  பேராக் மாநிலத்தில் வாழ்ந்த எனது பாட்டி அவர் நினைவிலிருந்ததை சொன்னபோது அதை புரிந்துக்கொள்ளும் வயதும் பக்குவமும் அப்போது எனக்கில்லை.

மலாயாவில் ஜப்பான் ராஜ்ஜியத்தின்போது இருந்த நம்மவர்களின் அனுபவக் குறிப்புகள் இப்படிதான் வாய்வழி தகவல்களாக அங்கொண்றும் இங்கொண்றுமாக உலன்றுக் கொண்டிருக்கிறது. தவிர அதை முறையாக ஆவணப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இன்னும்கூட அமையாதது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு வரலாற்றுப் பிழைதான்.



ஜப்பான், சிங்கப்பூரை கைப்பற்ற மலாயாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள கோத்தா பாரு வழியாகவே உள்ளே புகுந்தது.  ஃபோர்ஸ் z எனும் கடற்படையையும் அதன் தலைவர் அட்மிரல் டாம் பிலிப்ஸ் குறித்தும் மிக விவரமாக ஹேமா குறிப்பிட்டிருக்கிறார். 38 ஆண்டுகள் கடற்படை துறையில் அனுபவம் கொண்ட   டாம் பிலிப்ஸ் ஜப்பானிய இராணுவம் குறித்து போட்டிருந்த கணக்குகள் எல்லாம் தவறாகிப்போக 1941 டிசம்பர் 10-ல், ஜப்பான் தொடுத்த ஏவுகணையை எதிர்கொள்ள முடியாமல், சேதமடைந்த   கப்பலின் கம்பியை பிடித்தபடி  தண்ணீரில் மூழ்க  அட்மிரல் டாம் பிலிப்ஸ் தயாராக இருந்தார். அடுத்து வந்த நாட்களில் அவர் உட்பட பலரின்  உடல்கள் கடலிருந்து மீட்கப்பட்டன. ஆங்கிலேயர்களும் மலாயா மக்களும் தங்களின் நிலை குறித்து பயம்கொள்ள துவங்கியது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான். ( 28-30) 

அதனைத்தொடர்ந்து தாய்லாந்து மாற்றும் வடக்கு மலாயாவில் கரையிறங்கிய ஜப்பானியர்கள் சிறு குழுக்களாக பிரிந்து மிதிவண்டி வழியே சிங்கப்பூரை நோக்கி பயணித்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும் அதே வேளையில் ஜப்பானியர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் அவர்கள் சொற்படியும் நடந்துகொண்டது ஜொகூர் அரசாங்கம். மேலும், இரு படைகளுமே தன்னகத்தே அறிந்தும் வைத்திருந்தன, ஜொகூரின் தயவு என்பது தங்களுக்கு எத்தகைய அவசியம் என்று

ஜொகூர் பேட்டரி, அது செயலிழந்து போன கதை, ஜப்பானியர்கள் ஒரு புறம் போராட்டத்துடனும் மறுமுனையில் எளிதாகவும் இடங்களை பிடித்த வரலாறு, தோழர் லிம் போ செங் உண்ணா விரத போடாட்டமும் மரணமும், இந்திய இராணுவத்தின் இருவேறு பிரிவினர், ஜப்பானியர்களால் பாலியல் தொழிலாளர்களாக ஆக்கப்பட்ட பெண்கள், மற்றும் அவர்கள் அனுபவித்த வன்கொடுமைகள்தனது ஆதிக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக 1966-ஆம் ஆண்டு ஜப்பான் கொடுத்த குருதிக்கடன் பணம் என ஜப்பானியர்களின் மூன்றான்டுகால சிங்கப்பூர் - மலாயா வரலாற்றை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் ஹேமா
   
ஆதிக்க வாதிகளை கிளர்ச்சிக்காரர்கள் எதிர்த்தபோது எலிசபெத் சாயும் அவரது கணவரும் கிளர்ச்சிக்காரர்கள் வசம் நின்று உதவி செய்தார்கள். பணம், மருந்து, வானோலி உள்ளிட்ட விஷயங்களை ஜப்பானியர்களுக்கு தெரியாமல் இவர்கள் கொடுத்து உதவினார்கள். இவர்கள் இருவரும் ஜப்பான் வசமிருந்த மருத்துவமனை ஒன்றில் உணவகம் நடத்திக்கொண்டிருந்தனர். பின்னாளில் இதை அறிந்துக்கொண்ட ஜப்பான் ராணுவம் அவர்களை கைது செய்தது. தன் கணவரின் முன்னிலையில்  எலிசபெத் சாய் சித்திரவதை செய்யப்பட்டார். ஆனாலும், அவர்கள் இவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இந்த நெஞ்சுரத்தை கௌரவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு அவருக்கு Order Of The British Empire என்ற விருதினை வழங்கியது.

இதே மாதிரியான ஒரு வரலாற்று நிகழ்வு மலாயாவிலும் இருக்கிறது. ஒரு செவிலியரான சிபிலும் மருத்துவரான அவர் கணவர் கார்திகேசும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய சீனர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினர் உயிர் போகும் நிலையிலும்  அவர்களை ஜப்பானியர்களிடம் இந்தப் தம்பதி  காட்டிக் கொடுக்கவில்லை. ஜப்பான் ராணுவம் சிபிலை  செய்யாத சித்திரவதையில்லை. உடல் உறுப்புகள்  பாழடைந்து, எங்கே இருக்கிறார் சிபில்  என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் காணடிக்கப்பட்டார். பின்னர், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் முயற்சியில் சிறையில் இருந்தவரை மீட்டு வெளிநாட்டுக்கு கொண்டுபோய் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால், சித்திரவதையின் தீவிரம் அவரை நலம் பெற செய்யவில்லை. உயிரிழந்தார் சிபில். அவரின் தியாகத்தை போற்றும் வகையிலும் விருதுவழங்கி கௌரவப்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம்

இப்புத்தகத்தில்  இடம்பெற்றிருக்கும் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சாங்கி சுவர் ஓவியங்களாகும். சிறைச்சாலையில் ஸ்டான்லி வாரன் வரைந்த அந்த ஓவியக்கூடம் பின் விமானத்தளமாக மாற்றப்பட்டது. அக்காலக்கட்டத்தில் அவ்வோவியங்கள் மீது வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ( 124). ஜப்பானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சுத்தம் செய்யப்பட்ட அவ்வரையில் சுண்ணாம்புக்கு பின்புறமிருந்த ஓவியங்கள் மக்களாக எட்டிப் பார்க்கவும் அது குறித்த தேடலில் இறங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். மலேசியா மற்றும் சிங்கப்பூர் பத்திரிகைகளில் இது குறித்து விளம்பரம் செய்ய 1959-  ஆண்டு லண்டனில் இருந்த வாரனுக்கு தகவல் சேர்ந்தது. அவ்வோவியங்களை மீட்டு கொடுக்க மீண்டும் சிங்கப்பூருக்கு வரும்படி வாரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பழைய நினைவுகளிலிருந்து மீளாத அவர் அதை மறுத்துவிட்டார். ஆனாலும் 1963-ஆம் ஆண்டு அவர் திரும்பி வந்து ஓர் ஓவியத்தைத் தவிர மற்ற அனைத்தையும் சரி செய்துகொடுத்திருக்கிறார்.

தற்போது விமான கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை. ஆனால், அதன் நகல் ஓவியங்கள் சாங்கி தேவாலய அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள்

இப்படி ஒரு பக்கம் சுவாரஸ்யத்தையும், மறுபக்கம் ரத்தமும் சதையுமான போரின் தீவிரத்தையும், போராட்டவாதிகளையும், வரலாற்றின் மிச்சத்தையும், தற்போதைய சிங்கப்பூரையும் மிக தெளிவாகவும் அதே வேளையும் சுறுக்கமாகவும் பேசுகிறது ஹேமாவின் 'வாழைமர நோட்டு'. 

மலேசிய சுதந்திரம் என்பது போரில்லாமல் ரத்தமில்லாமல் பெறப்பட்டது என்று கூறப்பட்டு மறைக்கப்படும் சரித்திரத்திரத்திற்கு பின்னாள் இருக்கும் அரசியலை மூக்கால்வாசி மலேசியர்கள் உணர்வார்களா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால்
மலாயா - சிங்கப்பூரில் ஜப்பான் ஆடிய கோரா தாண்டவத்தின் அடையாளங்களும் சீனர்களை கொன்று குவித்த ரணங்களும் பாதிக்கப்பட்ட பல இருதயங்களிலிருந்து இன்னும் முழுதாக நீங்கிவிடவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். புத்தகத்தை வாசித்து முடித்ததும் தோழி ஹேமாவை கட்டிக்கொள்ள தோன்றியது. ஹேமாவின் சொந்த் வெளியீடான இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை சந்தோஷ்நாராயணன் வடிவமைத்திருக்கிறார்.

நன்றி
முகம் காலாண்டிதழ் மலேசியா