புதன், 8 ஜனவரி, 2020

சியோனான்- தோ-வில் வாழைமர நோட்டு (புத்தக பார்வை )

ஜப்பான்காரனின் வாழைமர நோட்டு என்ற வார்த்தையை நான் முதன்முதலாக கேட்டபோது ஒரு வித்தியாசமான புரிதலே இருந்தது. உலகம் முழுக்கவே டாலர்கள் ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கும்போது ஜப்பானியனின் பணத்திற்கு அப்படியென்ன இப்படியொரு சிறப்பு  பெயர் என ஒரு வகை அலட்சிய புரிதல் அதுஅந்நோட்டுகளை  நேரில் கண்டபோது என் அலட்சிய சிந்தனையானது மொத்தமும் நொறுக்கியே போனது.

தாய்லாந்தின் மரண ரயில்வே அருங்காட்சியக்கத்தில் வைத்திருக்கிறார்கள் அந்த ரசமிழந்த வாழைமர நோட்டுகளை. சில செண்டிமீட்டர்கள் நீளம் கொண்ட  நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஜப்பானியர்கள் செய்த ஆதிக்கமும் கொடுமையும் நயவஞ்சகமும் கொஞ்ச நஞ்சமில்லை. தாம் பிரிட்டிசாரிடம் சரணடையப் போகிறோம் என்று தெரிந்துக்கொண்டதும், ஒரு காசுக்கும் உதவாமல் போகும் எனத் தெரிந்தே அந்நோட்டுகளை, வேலைக்கான ஊதியம் என சொல்லி, சயாம்-பர்மா ரயில் தண்டவாள தொழிலாளர்களின் உயிர் ஆவி எல்லாத்தையுமே உறிஞ்சி துப்பும்வரை வேலை வாங்கியிருக்கிறது ஜப்பானிய இராணுவம். நினைக்கவே குலை நடுக்க கூடியது  வரலாறு அது

மிக அண்மையில் நான்  மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பயணத்தில் தோழி ஹேமா, அவர் எழுதியிருக்கும் முதற்புத்தகமான வாழைமர நோட்டை கையளித்தார். முன்னதாக முக நூலின் வழியாக அப்புத்தகம் வாசகரிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது நான் அறிந்ததுதான்.

'சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கச் சுவடுகள்' என  முகப்பிலேயே மேற்கோள்காட்டியிருக்கிறார் ஹேமா. ஆனால் என்னால் மலாயா - சிங்கப்பூர் ஆதிக்கச்  சுவடுகலாகத்தான் இந்த புத்தகத்தைப் பார்க்க முடிகிறது. என்னதான் சிங்கப்பூர் மலேசியர்களுக்கு அந்நிய நாடாக இப்போது இருந்தாலும், பண விஷயத்தில் மும்மடங்கு பெறுமதியை அந்நாடு கொண்டிருந்தாலும், மொழி, கலை கலாச்சாரம் உட்பட மலேசியா-சிங்கப்பூர் வாசிகள் ஒருநாட்டுக்காரர்கள்தா என்ற எண்ணத்தை மாற்றவே முடியாது என்பதோடு, தன்  வரலாறு குறித்து பேசும்போது சிங்கப்பூரினால்   மலேசியாவை அதாவது மலாயாவை குறிப்பிடாமல்  இருக்கவும் முடியாது என்பது காலத்தின் நியதியாகும். எங்கள் இரு நாடுகளுக்கான வரலாறு பிணைப்பு என்பது ஒரு நீண்ட சங்கிலிதொடர் என்பதை யாரும் மறுக்க முடியாது

சுவைப்பட வரலாற்றை எப்படி சொல்ல வேண்டும்? தகவல்களை எப்படிச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும்என்பதற்கு இந்த புத்தகம் நல்ல உதாரணம். அதிபுத்திசாலியான வார்த்தைகளை போட்டு மண்டைக்குள் இருக்கும் மூளை வெறிபிடித்து வெளியே வருமளவுக்கு கசக்க விடாமல், எல்லாருக்குமான ஒரு புத்தகத்தை தூக்கி தரமாகக் கொடுத்திருக்கிறார் ஹேமா


சிங்கப்பூரை கைப்பற்றியப் பிறகு ஜப்பான் அதற்கு சியோனான்- தோ என்று பெயர் மாற்றி வைத்தது. சிங்கப்பூரின் கடிகாரங்கள் ஜப்பான் நேரத்திற்கு மாற்றி வைக்கப்பட்டன. சிங்கப்பூரின் The Straits Times நாளிதழ் சியோனான் டைம்ஸ் என மாற்றியமைக்கப்பட்டது. மேலும் ஜப்பான் மொழியை பள்ளிகளில் கற்பிக்க தொடங்கியதுடன் ஜப்பானின் தேசிய கீதம், ஜப்பான் தேச பக்திப் பாடல் ஆகியவை ஜப்பான் மொழியிலேயே பாடப்பட்டது. இப்படியாக சிங்கப்பூர் மூன்று ஆண்டுகள் ஜப்பானாகவே மாறிப்போயிருந்த வரலாற்றை பேசுகிறது வாழைமர நோட்டு. (.94)  

1941-ஆண்டு 
வலிமையான கட்டுமானங்களை கொண்ட மலாயா - சிங்கப்பூரை யாராலும் எளிதில் கைப்பற்றிவிட முடியாது என தீவிரமாக நம்பியிருந்தவர்களுக்கு தண்ணிகாட்டியது ஜப்பான். சிங்கப்பூரில் ஜப்பான் ஊடுருவலை மோப்பம் பிடித்துவிட்ட ஆங்கில அரசு , மக்களை பதுங்கிடங்களை கட்டிக்கொள்ள சொன்னதோடு,  எரிகுண்டு விழும்போது மக்கள் எவ்வாறு தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்ன  விவரங்களையும் இந்தப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது. “நாங்கள் ஜப்பான்காரனை பார்த்தாலே பதுங்கு குழியில் ஒளிந்துகொள்வோம்பொண்ணுகள அப்படியே தூக்கிட்டு போயிடுவானுங்க.. ஏன்னு ஒருத்தன் கேட்க முடியாது” என்று  பேராக் மாநிலத்தில் வாழ்ந்த எனது பாட்டி அவர் நினைவிலிருந்ததை சொன்னபோது அதை புரிந்துக்கொள்ளும் வயதும் பக்குவமும் அப்போது எனக்கில்லை.

மலாயாவில் ஜப்பான் ராஜ்ஜியத்தின்போது இருந்த நம்மவர்களின் அனுபவக் குறிப்புகள் இப்படிதான் வாய்வழி தகவல்களாக அங்கொண்றும் இங்கொண்றுமாக உலன்றுக் கொண்டிருக்கிறது. தவிர அதை முறையாக ஆவணப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இன்னும்கூட அமையாதது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு வரலாற்றுப் பிழைதான்.ஜப்பான், சிங்கப்பூரை கைப்பற்ற மலாயாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள கோத்தா பாரு வழியாகவே உள்ளே புகுந்தது.  ஃபோர்ஸ் z எனும் கடற்படையையும் அதன் தலைவர் அட்மிரல் டாம் பிலிப்ஸ் குறித்தும் மிக விவரமாக ஹேமா குறிப்பிட்டிருக்கிறார். 38 ஆண்டுகள் கடற்படை துறையில் அனுபவம் கொண்ட   டாம் பிலிப்ஸ் ஜப்பானிய இராணுவம் குறித்து போட்டிருந்த கணக்குகள் எல்லாம் தவறாகிப்போக 1941 டிசம்பர் 10-ல், ஜப்பான் தொடுத்த ஏவுகணையை எதிர்கொள்ள முடியாமல், சேதமடைந்த   கப்பலின் கம்பியை பிடித்தபடி  தண்ணீரில் மூழ்க  அட்மிரல் டாம் பிலிப்ஸ் தயாராக இருந்தார். அடுத்து வந்த நாட்களில் அவர் உட்பட பலரின்  உடல்கள் கடலிருந்து மீட்கப்பட்டன. ஆங்கிலேயர்களும் மலாயா மக்களும் தங்களின் நிலை குறித்து பயம்கொள்ள துவங்கியது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான். ( 28-30) 

அதனைத்தொடர்ந்து தாய்லாந்து மாற்றும் வடக்கு மலாயாவில் கரையிறங்கிய ஜப்பானியர்கள் சிறு குழுக்களாக பிரிந்து மிதிவண்டி வழியே சிங்கப்பூரை நோக்கி பயணித்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும் அதே வேளையில் ஜப்பானியர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் அவர்கள் சொற்படியும் நடந்துகொண்டது ஜொகூர் அரசாங்கம். மேலும், இரு படைகளுமே தன்னகத்தே அறிந்தும் வைத்திருந்தன, ஜொகூரின் தயவு என்பது தங்களுக்கு எத்தகைய அவசியம் என்று

ஜொகூர் பேட்டரி, அது செயலிழந்து போன கதை, ஜப்பானியர்கள் ஒரு புறம் போராட்டத்துடனும் மறுமுனையில் எளிதாகவும் இடங்களை பிடித்த வரலாறு, தோழர் லிம் போ செங் உண்ணா விரத போடாட்டமும் மரணமும், இந்திய இராணுவத்தின் இருவேறு பிரிவினர், ஜப்பானியர்களால் பாலியல் தொழிலாளர்களாக ஆக்கப்பட்ட பெண்கள், மற்றும் அவர்கள் அனுபவித்த வன்கொடுமைகள்தனது ஆதிக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக 1966-ஆம் ஆண்டு ஜப்பான் கொடுத்த குருதிக்கடன் பணம் என ஜப்பானியர்களின் மூன்றான்டுகால சிங்கப்பூர் - மலாயா வரலாற்றை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் ஹேமா
   
ஆதிக்க வாதிகளை கிளர்ச்சிக்காரர்கள் எதிர்த்தபோது எலிசபெத் சாயும் அவரது கணவரும் கிளர்ச்சிக்காரர்கள் வசம் நின்று உதவி செய்தார்கள். பணம், மருந்து, வானோலி உள்ளிட்ட விஷயங்களை ஜப்பானியர்களுக்கு தெரியாமல் இவர்கள் கொடுத்து உதவினார்கள். இவர்கள் இருவரும் ஜப்பான் வசமிருந்த மருத்துவமனை ஒன்றில் உணவகம் நடத்திக்கொண்டிருந்தனர். பின்னாளில் இதை அறிந்துக்கொண்ட ஜப்பான் ராணுவம் அவர்களை கைது செய்தது. தன் கணவரின் முன்னிலையில்  எலிசபெத் சாய் சித்திரவதை செய்யப்பட்டார். ஆனாலும், அவர்கள் இவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இந்த நெஞ்சுரத்தை கௌரவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு அவருக்கு Order Of The British Empire என்ற விருதினை வழங்கியது.

இதே மாதிரியான ஒரு வரலாற்று நிகழ்வு மலாயாவிலும் இருக்கிறது. ஒரு செவிலியரான சிபிலும் மருத்துவரான அவர் கணவர் கார்திகேசும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய சீனர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினர் உயிர் போகும் நிலையிலும்  அவர்களை ஜப்பானியர்களிடம் இந்தப் தம்பதி  காட்டிக் கொடுக்கவில்லை. ஜப்பான் ராணுவம் சிபிலை  செய்யாத சித்திரவதையில்லை. உடல் உறுப்புகள்  பாழடைந்து, எங்கே இருக்கிறார் சிபில்  என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் காணடிக்கப்பட்டார். பின்னர், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் முயற்சியில் சிறையில் இருந்தவரை மீட்டு வெளிநாட்டுக்கு கொண்டுபோய் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால், சித்திரவதையின் தீவிரம் அவரை நலம் பெற செய்யவில்லை. உயிரிழந்தார் சிபில். அவரின் தியாகத்தை போற்றும் வகையிலும் விருதுவழங்கி கௌரவப்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம்

இப்புத்தகத்தில்  இடம்பெற்றிருக்கும் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சாங்கி சுவர் ஓவியங்களாகும். சிறைச்சாலையில் ஸ்டான்லி வாரன் வரைந்த அந்த ஓவியக்கூடம் பின் விமானத்தளமாக மாற்றப்பட்டது. அக்காலக்கட்டத்தில் அவ்வோவியங்கள் மீது வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ( 124). ஜப்பானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சுத்தம் செய்யப்பட்ட அவ்வரையில் சுண்ணாம்புக்கு பின்புறமிருந்த ஓவியங்கள் மக்களாக எட்டிப் பார்க்கவும் அது குறித்த தேடலில் இறங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். மலேசியா மற்றும் சிங்கப்பூர் பத்திரிகைகளில் இது குறித்து விளம்பரம் செய்ய 1959-  ஆண்டு லண்டனில் இருந்த வாரனுக்கு தகவல் சேர்ந்தது. அவ்வோவியங்களை மீட்டு கொடுக்க மீண்டும் சிங்கப்பூருக்கு வரும்படி வாரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பழைய நினைவுகளிலிருந்து மீளாத அவர் அதை மறுத்துவிட்டார். ஆனாலும் 1963-ஆம் ஆண்டு அவர் திரும்பி வந்து ஓர் ஓவியத்தைத் தவிர மற்ற அனைத்தையும் சரி செய்துகொடுத்திருக்கிறார்.

தற்போது விமான கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை. ஆனால், அதன் நகல் ஓவியங்கள் சாங்கி தேவாலய அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள்

இப்படி ஒரு பக்கம் சுவாரஸ்யத்தையும், மறுபக்கம் ரத்தமும் சதையுமான போரின் தீவிரத்தையும், போராட்டவாதிகளையும், வரலாற்றின் மிச்சத்தையும், தற்போதைய சிங்கப்பூரையும் மிக தெளிவாகவும் அதே வேளையும் சுறுக்கமாகவும் பேசுகிறது ஹேமாவின் 'வாழைமர நோட்டு'. 

மலேசிய சுதந்திரம் என்பது போரில்லாமல் ரத்தமில்லாமல் பெறப்பட்டது என்று கூறப்பட்டு மறைக்கப்படும் சரித்திரத்திரத்திற்கு பின்னாள் இருக்கும் அரசியலை மூக்கால்வாசி மலேசியர்கள் உணர்வார்களா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால்
மலாயா - சிங்கப்பூரில் ஜப்பான் ஆடிய கோரா தாண்டவத்தின் அடையாளங்களும் சீனர்களை கொன்று குவித்த ரணங்களும் பாதிக்கப்பட்ட பல இருதயங்களிலிருந்து இன்னும் முழுதாக நீங்கிவிடவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். புத்தகத்தை வாசித்து முடித்ததும் தோழி ஹேமாவை கட்டிக்கொள்ள தோன்றியது. ஹேமாவின் சொந்த் வெளியீடான இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை சந்தோஷ்நாராயணன் வடிவமைத்திருக்கிறார்.

நன்றி
முகம் காலாண்டிதழ் மலேசியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக