செவ்வாய், 28 ஜனவரி, 2020

‘Bila kami bersatu’ (நாங்கள் ஒன்றிணைந்தால்); ஆவணப்படம்



‘Bila kami bersatu’  என்கிற ஆவணப்படம் அண்மையில் பத்து அராங் பல்நோக்குமண்டபத்தில் பொதுமக்கள் மற்றும்  குத்தகைமுறை தொழிலாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.  சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும் அப்படத்தில் சில முக்கிய தகவல்கள் பேசப்பட்டிருந்தன.

20 வருடமாக மரணத்திருந்த ஒரு யூனியனுக்கு உயிர்க் கொடுத்ததிலிருந்து,  அதற்கு எப்படி இப்போது உயிர் வந்தது?  இனி எப்படி யூனியனைக் கையாளப்போகிறார்கள்  என்பது உள்ளிட்ட தகவல்களையும் அப்படத்தில் பேசியிருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருக்கும் மூன்று பெண்களை மையமாக வைத்து அவர்களின் தின வேலைகள், செய்தொழில் இதற்கிடையில் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைக்கான தீர்வை  எப்படி இவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறார்கள் ? யாரையெல்லாம் இது தொடர்பாக சந்திக்கிறார்கள்? சந்தித்தவர்களிடமிருந்து இவர்களுக்கு கிடைத்த பதில் என்ன?  அதோடு அவர்களின் பிரச்சனைகள் தீர்ந்ததா? அல்லது என்ன ஆனது? அல்லது என்ன ஆகும்? என்ற கேள்வியோடு அந்தப் படம் முடிவடைகிறது.

தில்லையம்மா, ரிதா, ரோட்சியா ஆகிய துப்புரவு வேலை செய்யும் பெண்களின் வாழ்கையை முன்வைத்தே இந்த ஆவணப்படம், பதிவு செய்யப்பட்டுள்ளது. தோழர் மின் சீ இதை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
(உண்மையில் இனிதான்  இவர்களின் பிரச்சனை  தீவிரமடையவுள்ளது என்பது வருத்தமான விஷயம், படத்தைப் பார்த்து அது ஏன் என்று தெரிந்துக்கொள்ளலாம்)

அரசு மருத்துவமனைகளில் அல்லது பள்ளிகளில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள், பள்ளியை காவல்செய்யும் காவல்காரர்கள், தோட்டக்காரர்கள் 1980-களில் அரசு ஊழியர்களாக இருந்தார்கள். அமைச்சர்களிடமிருந்து நேரடியாக இவர்கள் ஊதியத்தைப் பெற்றார்கள்.  மேலும், அரசு சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், 1990-க்குப் பிறகு பிரதமரின் புதிய திட்டத்தின்கீழ் இவர்கள் அனைவரும் குத்தகை தொழிலாளர்களாக மாற்றப்பட்டதுடன், அரசு உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. ஒரு பெரிய சலுகை பறிப்போனதைக்கூட அவர்கள் பேசுவதில்லை. ஆனால், இவர்களுக்கு இடையில் அதாவது, அமைச்சு - பள்ளி அல்லது மருத்துவமனை உயர் அதிகாரிகள்- தொழிலாளர்கள் இவர்களுக்கு மத்தியில் முளைத்த குத்தகைக்காரர் எனும் புதிய முதலாளி தரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒவ்வொரு மூன்று வருடத்திலும் இவர்கள் சந்திக்கிறார்கள்.

ஆவணப்பட இயக்குனர் தோழர் மின் சீனோடு
20 வருட தொழிலாளியாக இருந்தாலும், மூன்று வருடத்தில் அவர்கள் புதிய தொழிலாளியாக  ஆக்கப்படுவதுடன், அனுமதிக்கப்பட்ட சம்மளம் மட்டுமே அடுத்த மூன்று வருடத்திற்கு நடக்கும். முன்னேருவதற்கான வாய்ப்போ அல்லது ஏதாவது சொத்து வாங்குவதற்கான சந்தர்ப்பமோ இதில் கிடைக்குமா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

இந்த சிக்கலையெல்லாம் எதிர்த்து அரசிடம் கேள்வி கேட்கிறது யூனியன்; அதாவது ‘’அரசாங்க மருத்துவமனை துப்புரவு பணி தொழிலாளர்களின் தொழிற்சங்கம்’. இந்த யூனியனில் நான் முக்கியமாக சொல்லவேண்டிய  விஷயம்,  இதை பெண்களே பொறுப்பேற்று நடத்துவதோடு அமைச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துபவர்களெல்லாம் (சண்டைபோடுபவர்கள்கூட) இவர்கள்தான்.  தனக்கான உரிமையை கேட்பதற்கு அதிகம் படித்திருக்க வேண்டும்; பணம் கொண்டிருக்கவேண்டும்; அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. நேர்மையும், கொஞ்சம் தைரியமும், சமூக சிந்தனையும் இருந்தாலே போதும் என்கின்றனர் இந்தப் பெண்கள்.


ஆவணப்படம் முடிந்த பிறகு அது தொடர்பான கலந்துரையாடலும் இயக்குனருடனான ஒரு சந்திப்பும் இடம்பெற்றது இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்தது.

இந்த ஆவணப்படத்தை உங்கள் வட்டாரங்களில் திரையிட விரும்பினாலும், யூனியனில் இணைய விரும்பும் தொழிலாளர்களும் எங்களை தாராளமாக தொடர்புக்கொள்ளலாம்..

சிவரஞ்சனி:  010 2402159
(அரசாங்க குத்தகைத் தொழிலாளர் அணி (JPKK) தலைவர்)
யோகி: 016 5432572





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக