செவ்வாய், 14 ஜனவரி, 2020

பொங்கல் மலேசியாவிற்கு தேவையான ஒன்றா?


குழந்தையாய் இருந்த காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை பல கோணங்களில் என் சிந்தனைகளைக் கலைத்துப் போட்டிருக்கிறது. சாணியை மொலுகி வாசலில் கோலம்போட்டு அண்டை வீட்டில் கோலாகலமாகப் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்  என் அப்பாவும் அம்மாவும்  செம்பனைக் காடுகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.  

இடைநிலைப் பள்ளிக்கு நான் போயிருந்தக் காலகட்டத்தில்தான்  எங்கள் ஆசைக்கு மதிப்புக் கொடுத்து  வாசலில் பொங்கல் வைப்பதற்கு அப்பா அனுமதி கொடுத்தார். பணம் உள்ளவர்கள் கோலாகலமாகப் பொங்கலை அவர்களின் வசதிக்கு ஏற்றமாதிரி கொண்டாட,  நாங்கள் எளிமையான பொங்கலை செய்தோம்.  ஏதோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி எங்களுக்கு; பால் பொங்கும் போது எங்கள் கிராமத்திற்கே கேட்கும்படி வாய்விட்டுப் பொங்கலோ பொங்கல் என சத்தமாக  கத்தியது இப்போது நினைத்தாலும் உற்சாகம் வந்துவிடுகிறது.

அப்பா எங்களை விட்டுப் போன பிறகு தலைநகருக்கு வேலைக்காக வந்த எனக்குப் பொங்கல் என்பது கடந்த கால நினைவுகளில் ஒன்றாகிப்போனது.  தலைநகரின் பரபரப்பு எனக்கு வேறுவிதமான பொங்கலை அறிமுகப்படுத்தியது.  தலைவர்களின் வாழ்த்து செய்திகள், மின்னல் பண்பலையின் பொங்கல், அரசாங்கத்தின் 100 சட்டி பொங்கல்; 1000 சட்டி பொங்கல் என மலாய்க்காரர்கள் சீனர்கள் எல்லாரும் பொங்கலை வைத்து ஒரு பெஸ்தாவாக அந்நாளை கொண்டாடினார்கள்.   எவ்வகையிலும் புல்லரிக்காத இவ்வகை பொங்கலுக்கு மத்தியில்  நான் ஆச்சரியமாக கலந்துகொண்ட ஒரு பொங்கல் இருக்கிறது. 
நான் வீடு  வாடகைக்கு   தங்கியிருந்த ஆயேர் பானாஸ் எனுமிடத்தில் சீனர்கள் ஒன்றுகூடும்  தேவாலயம் இருந்தது. எனக்குச் சமையல் வேலை சொல்லிக்கொடுத்த ஆசான் (சீனர்) அந்த தேவாலயத்திற்குத்தான் வருவார். என்னை அந்த தேவாலயத்திற்கு அவர் அழைப்பு விடுத்ததின் பேரில் நான் அங்கு ஓரு பொங்கல் நாளில்  போயிருந்தேன்.   சீனர்களெல்லாம் சேர்ந்து பாதிரியார் உட்படப் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். எனது ஆசான் சொன்னார் இங்கே சீனர்கள் பலர் உழவர்கள்தான் என்று.  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சந்தோஷமாக இருந்தது.
2020-ஆம் ஆண்டில் மலேசியாவில் பொங்கல் திருநாள் மிகப் பெரிய பிரிவினைக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. 
இதுவரை இனபேதமின்றி  வாழ்த்துக்கூறிக்கொள்வதிலிருந்து பண்டிகளைக் 
கொண்டாடுவதிலிருந்து மூவின மக்களிடையே இதுவரை இருந்த ஒற்றுமைகளுக்கிடையில்   ஜாகிர் நாயக் எனும் அபாயக் கண் பட்டதிலிருந்து எல்லாம் தற்போது ஹராம் ஆகிவிட்டிருக்கிறது.  உழவர் திருநாளான பொங்கல் திருநாளைச் சேர்ந்து பொங்கி கொண்டாடிய நாட்கள் மலை ஏறிப் போய், அது இந்தியச் சமயம் சார்ந்த பெருநாள்; வாழ்த்து சொல்வது இஸ்லாமியர்களுக்குப் பாவம் என்று  அரசு நோட்டிஸ் அனுப்பும் நிலைக்கு வந்து நிற்கிறது.  காலம் இப்படி மாறிப் போய்விட்டதே என்ற கவலை எனக்கு இருந்தாலும், பெரிதாக என்னை இது பாதிக்கவில்லை. பொங்கல் என்பது இந்த நாட்டிற்கு சமய திருநாளாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், மலேசிய இந்திய மக்களுக்கே பொங்கல் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாடு வழங்கியிருக்கிறதா? மலேசிய இந்தியர்களின் பார்வையில் இனி பொங்கல் என்னவாக இருக்கப்போகிறது? ஏடுகளில் ஒரு விளக்கமும் , வாழ்வியலில் ஒரு மாதிரியும் மாறப்போகும்  மலேசிய பொங்கலை என்ன செய்யப்போகிறோம்?
விவசாய நிலத்தை பறிகொடுத்துவிட்டு 43 ஆண்டுகளாக தங்கள் நிலத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் கெட்கோ மக்களுக்கு இந்தப் பொங்கல் என்ன சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது?
சில வாரங்களுக்கு முன் கேமரன் மலையில்  60 விவசாயிகள் சம்பந்தப்பட்ட நில விவகாரம் கொஞ்சம்கூட நியாயம் இல்லாத ஒன்றாகும். அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களையும் பூந்தோட்டங்களையும் நிலபறிமுதல் என்ற பேரில் அழித்தார்கள். விவசாயிகளின் உழைப்பை மதித்து  அறுவடை முடியும் வரை காத்திருக்கும்படி ஏன் அரசாங்கம் உத்தரவிடவில்லை. இந்த 60 விவசாயிகளும் எந்த சந்தோஷத்தில் பொங்கலைக் கொண்டாடுவார்கள்?
இவை சட்டச்சிக்கல் உள்ள விவகாரங்கள் என மக்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் வீட்டில் பொங்கலை வைக்கலாம். இதைவிடப் பெரிய பிரச்னை ஒன்றைச் சந்தித்து வருகின்றனர் கால்நடை விவசாயிகள். பல தலைமுறைகளாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும்  தோட்ட தொழிலாளர்களுக்கு  அரசாங்கத்தைச் சார்ந்த நிறுவனமான  ''சைம் டர்பி'' இனி தோட்டங்களில் மாடு, கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதற்குத் தடை விதித்துள்ளது.  பல தலைமுறைகளாக மாட்டுப்பண்ணை வைத்திருப்பவர்கள் இந்த நெருக்குதலால் பெரும் சங்கடத்தை எதிர் நோக்கியிருக்கின்றனர்.  அவர்களுக்குக்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் எந்த மனநிலையில் பொங்கலைக் கொண்டாடப் போகின்றனர்?
32 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்டிருக்கும் மலேசியா, 52 பில்லியன் ரிங்கிட்டுக்கு அயல்நாட்டிலிருந்து நமக்கான உணவுப் பொருட்கள்  தருவிக்கிறது. நமது நாடு விவசாயம் செய்வதற்கு வளம் இல்லாததா என்ன? 

விவசாய நிலங்களெல்லாம்  எல்லாம் செம்பனை தோட்டங்களாக மாறி பணங்களாக காய்த்துத் தொங்குகிறது. அவற்றை அள்ளி வைத்து தின்ன முடியும்? இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் நம் சமூகத்தினர் பொங்கலை  கொண்டாடுவார்கள்தான். அது உழவர் திருநாளாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கொஞ்சம்கூட இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக