புதன், 22 செப்டம்பர், 2021

கையறு என்றால் என்னவென்று காட்டிவிட்டீர்கள் தோழர் பென்ஸி



வாழ்க்கையில் எந்தப் புள்ளியில் வந்து நிற்கக்கூடாது என்று நான் ஒவ்வொருமுறையும் நினைக்கின்றேனோ , காலம் அந்தப் புள்ளியில் தான் நிறுத்தி எனக்கு வேடிக்கை காட்டுகிறது. ஒவ்வொருவரையும் வாழும் காலத்திலேயே அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பதையும் சந்தப்பம் கிடைக்கும் எல்லா இடத்திலேயும் நான் வழியுறுத்திவருகிறேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்பது என்னவோ மிக மிகக் குறைவுதான்.

நாம் அன்பு செலுத்தும் ஒருவரை, கொண்டாடித் தீர்க்கும் அந்த நல்ல ஆத்மாவை குறித்து மனமுறுகி பேசுவதற்கும் எழுதுவதற்குமான சந்தர்ப்பத்தை அவர் வாழும் காலத்திலேயே ஏற்படுத்திகொள்ளாமல், அவர் இல்லாத உலகில் வெறும் எழுத்துகளால் பேசி தீர்த்துவிடுவது என்பது யாரை திருப்திபடுத்துவதற்கு?

நம் மதிப்புகுரியவர்கள் இந்தப் பூவுலகை விட்டு விடைபெற்ற பிறகு, அவரை நினைவுக்கூற நாம் மேற்கொள்ளும் ஒருசில முயற்சிகள் நம்மை ஆசுவாசப்படுத்துவதற்கு மட்டுமே உதவும். இன்று நான் ஆசுவாசப்படுத்திகொள்ள வேண்டிய சூழ்நிலையில்தான் நிற்கிறேன்.

தோழர் பென்ஸி முகநூல்வழிதான் எனக்கு அறிமுகமானார். மலேசிய திருநங்கை தோழர் நிஷா ஆயூப், அமெரிக்காவில் வீரப் பெண்மணிக்கான விருது பெற்றது தொடர்பான பதிவு வழிதான் எங்களின் அறிமுகம் தொடங்கியது. அவருடைய முகநூல் பதிவுகளை உற்று நோக்கும்பொழுது அது ஓர் அறிவு களஞ்சியத்திற்கான பெட்டகம். அனைத்துமே மிகத் தெளிவாகத் தரவுகளுடன் கூடிய கட்டுரைகளாகவே இருந்தது. ஒரு சின்ன விஷயத்தையும் அதன் ஆணி வேரைப் பிடித்துப் பதிவிடுவார். அது தொடர்பான கேள்விகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் தம் பதிவை படித்துப் பதிவிடுபவர்களுக்கு ஞாயம் செய்யும் விதத்தில் பதில் அளிப்பார்.

முகநூல் என்பது யாரும் பார்வையாளராக வந்து போகும் ஓர் இடம்தான் என்றாலும், தம் வீட்டுக்கு வந்து போகும் விருந்தாளிக்கு கொடுக்கும் மரியாதையைத் தோழர் பென்ஸி, தம் முகநூல் பக்கத்திற்கு வருபவர்களுக்கும் கொடுக்கத் தவறியதில்லை. வெறும் முகஸ்துதிக்காக அல்ல அந்த உபசரிப்பு, நட்பு என்ற இலக்கணத்திற்கு அர்த்தம் தெரிந்தவர்களால் மட்டுமே அந்த மரியாதையைக் கொடுக்க முடியும்.

முகநூல் வழியே அறிமுகமாகியிருந்தாலும், நீண்ட உரையாடல் எதையும் நிகழ்த்தாத, வெளிநாட்டில் வசிக்கும் யோகி என்ற பெண்ணை அவளின் பதிவுகள் வழியே அவளின் செயற்பாடுகளைத் தீவிரமாக அறிந்துகொண்டவர் தோழர் பென்ஸி. அந்த நட்பின் மேல் கொண்ட அறத்தை அவரேதான் உறுதியும் செய்துகொண்டார்.

பணி நிமித்தமாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் அவரின் மகனைக் காண தோழர் பென்ஸி, சில ஆண்டுகளுக்கு முன் மலேசியா வந்திருந்தார். என்னைச் சந்திக்க முடியுமா? என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் தோழரை சந்திக்கச் சென்றேன். ஜிகுனா தூவி பெறும் ஆடம்பரமாகவும் பகட்டுடனும் இருக்கும் தலைநகரின் இன்னொரு பக்கம் இருண்மையானது என்று நான் கூறினேன். அவரின் ஜோல்னா பை புறப்படுவதற்குத் தயார் என்று அவரின் தோளில் ஏறி அமர்ந்தது.

சைனா டவுன், பசார் காராட் உள்ளிட்ட இடங்களைத் தோழருக்கு சிறுசிறு விளக்கம் கொடுத்தபடியே சென்றேன். தலைநகரில் இருண்மையின் நிழலில் மறைந்திருக்கும் கடைநிலை மக்களின் வாழ்வை பார்த்தவாரே நகர்ந்து சென்றோம். அன்றையை ஒரு பொழுதின் சந்திப்பை, தோழர் பென்ஸியின் வாழ்விலும் என்னுடைய வாழ்விலும் அழிக்க முடியாத ஒரு பந்த பாசத்தை உருவாக்கியிருந்தது. முகநூலில் பலர் அவரை மாஸ்டர் என்று அழைப்பதை பார்த்திருக்கிறேன். நான் தோழர் என்றுதான் அவரை அழைப்பேன். என்றாலும் அவர் தகப்பனாருக்கு உரிய அந்தஸ்தைதான் பெற்றிருந்தார்.

நான் அவருக்கு அதைக் கூறியதே இல்லை. அன்புக்கொண்ட எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. ஒரு முறை பந்த பாசத்திற்கான உணர்வு ஏற்பட்டாலே போதும், அதற்கு எந்த மாற்றும் இருக்கப் போவதில்லை. தோழரின் முதல் சந்திப்பிலேயே அவரின் நோய் குறித்துக் கூறியிருந்தார். தொடர் சிகிச்சையின் காரணத்தினால் முகத்தில் ஏற்பட்ட தோல் அலர்ஜிக் குறித்தும் தோழர் சொன்னார். யாரிடமும் இதைக் கூறவில்லை தோழர் என்றார். அதன் அர்த்தம் நானும் யாரிடமும் கூறக்கூடாது என்பதை உணர்த்தியது. ஆறுதல் கூறத் தெரியாத நான் வழக்கம் போலவே அவரின் அந்த நோயைக் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அதே வேளையில் வாழ்ந்துகொண்டிருக்கிறத அந்த நேரம்தான் தோழர்களுக்கு முக்கியமான நேரம், அரூபமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் அந்தக் கறுப்புப் பூனை குறித்துத் தோழர்களுக்கு என்ன கவலை?

நகர வீதிகளில் சுற்றிய நாங்கள் விடைபெறும்போது தோழர் பென்ஸி வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நானும் மறுப்பு சொல்லவில்லை. மீன் குழம்பு மற்றும் மீன் வறுவலோடு எனக்கு விருந்தோம்பல் நடந்தது. தோழரின் துணைவியாரும் புன்னகை மாறாமல் உரையாடினார். புதிதாக அறிமுகம் கொண்ட தோழரின் வீட்டில் வைத்து விருந்தோம்பல், உரையாடல் அதுவும் ஒரு இஸ்லாமிய குடும்பமாக இருந்தாலும், அந்த ஒரு வேறுபாட்டை யோகியிடம் அவர்கள் காட்டவே இல்லை. நிறையப் பேசினோம். பின் விடைபெற்றேன்.

அதன் பிறகு நான் தோழரை சந்திக்கவே இல்லை. நீண்ட உரையாடல் எதுவும் செய்யவில்லை. சில ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இருவருக்கும் இடையில் உள்ள அந்த நட்பு மிக அழகாகவே உயிர்ப்புடன் இருந்தது. தோழர் பல இடங்களில் நல நட்புகளிடத்தில் என் குறித்த மதிப்பினையும் அன்பினையும் பகிர்ந்திருப்பது அவர் இல்லாத இந்த நேரத்தில் அறியவரும்போது, ரொம்பவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அதே வேளையில் தோழரின் இந்த மறைவு குறித்தான வேதனையை எதிர்கொள்ளத் தெரியாமல் திணருகிறேன்.

தோழர் இருக்கும்போதே ஏன் இந்த யோகி அவரின் மீதுள்ள பந்த பாசத்தைப் பேசவில்லை? இப்போது இதைப் பேசிதான் ஆகப்போவதென்ன? என்னை நானே நொந்துகொள்வதைத் தவிர வேறு தண்டனையைக் கொடுத்துகொள்ள முடியவில்லை

-யோகி (மலேசியா)

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கள்ளுக்கடை போராட்டம், பேசும் அரசியல் என்ன?

மலாயாவுக்கு செளர்ண பூமி என்ற ஒரு அடைமொழி உள்ளது.  இந்தச் செளர்ண பூமியில் சிந்திய செங்குருதி பெருவாரியாக கம்யூனிச சிந்தாந்தத்தைப் பேசுவதால் அவை வலதுசாரிகளால் புறக்கணிக்கப்படுகின்றன. புறக்கணிக்கப்படும் வரலாறுகளை மக்களிடம் பேசுவதும், பதிவு செய்வதும் கம்யூனிச செயற்பாடுகளாக பார்க்கப்படுமானால், நான் ஒரு கம்யூனிசவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே கொள்கிறேன். காரணம் உண்மையின் நிறம் என்றுமே சிவப்புதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.  நான் சிவப்புக்கு பக்கத்தில்தான் நின்றுக்கொண்டிருக்கிறேன்.

மலேசியா மண் தொழிலாளர் போராட்டம், அரசியல் போராட்டம், உரிமைப் போராட்டம், வர்கப் போராட்டம்  என  பதிவு செய்யப்பட்ட மற்றும் முறையாக பதிவு செய்யப்படாத பல போராட்டங்களை உள்வாங்கியபடி இன்னும் அதன் நிலைத்தன்மை மாறாமலேயே இருக்கிறது.  இந்தியர்கள் அதிகமாக பங்கெடுத்தப் போராட்டங்கள் என வரிசைப் படுத்தும்போது  தொழிலாளர் வர்க போராட்டமே மிக அதிகமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பேசக்கூடிய பலப் பதிவுகளை மலேசியர்கள் கிட்டதட்ட எல்லா மொழியிலுமே பதிவு செய்திருக்கிறார்கள். 

ஆனாலும், மலேசிய இந்தியர்களின் நல்வாழ்வுக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்த கள்ளுக்கடையை ஒழித்துக்கட்டும் போராட்டம் குறித்து மிக அரிதாகவே பேசப்பட்டிருக்கிறது. மலேசிய சீனத் தொழிலாளர்களை   ஓப்பியம் என்ற மது அடிமையாக வைத்திருந்தது போல நம்மவர்களை கள்ளு எனும் மதுபானம் அடிமைப்படுத்தியிருந்தது.


கள்ளுக்கு அடிமையான தொழிலாளர்களின் விவகாரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவதாக ஒவ்வொரு தோட்டத்திலும் கள்ளுக்கடை இருந்ததற்கான காரணம் முதலாளிகளின் ஒரு தந்திர யுக்தியாக பார்க்கப்படுகிறது.  1924-ஆம் ஆண்டுகளில் ஓர் ஆண் தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு 35 காசும், பெண் தொழிலாளிக்கும் 27 காசும் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. 1939-ஆம் ஆண்டுகளில் ஓர் ஆண் தோட்டத் தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு 50 காசும் பெண் தொழிலாளிக்கு 40 காசும் ஊதியமாக பெற்றுள்ளனர்.

இவ்வளவு குறைந்த சம்பளத்தைப் பெரும் ஒரு சராசரிக் குடும்பம், அதன் ஒரு பகுதியை கள்ளு குடித்தே அழிக்கிறது என்றால் அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களின் நிலை என்ன என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்?

மலேசிய தமிழர்களின் வர்க போராட்டம் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் தோழர் சாமிநாதன் மெய்நிகர் வழியே தொடர் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறார்.  கிள்ளான் கலவரம் தொடர்பாக நடந்த ஒரு கலந்துரையாடலில்  KDIU எனப்படும் கிள்ளான் தொழிற்சங்கத்தில்,  ஆர்.எச்.நாதன் தலைமையில்  போராட்டவாதி வெள்ளையன் மற்றும் 60 மிட்லன்ஸ் தோட்ட பாட்டாளிகள்  ஒன்றிணைந்து  12 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை கலந்துரையாடலில் கூறியவர் அந்த 12 கோரிக்கைகளையும்  தெளிவு படுத்தினார். அவர் கொடுத்தப் பட்டியலில் 6-வது கோரிக்கையாக இருந்தது  “கள்ளுக் கடைகள் மூடல்”  எனும் கோரிக்கையாகும்.  அக்கோரிக்கையானது 1941-ஆம் ஆண்டு 13 பிப்ரவரி மாதத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால் மலேசியாவுக்கு கூலியாக வந்த நம்மவர்களிடம் இந்தக் கள்ளு எனும் மது எப்போதிலிருந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது?  எப்போதிலிருந்து அது தீவிரமடைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால் சில முக்கியத் தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

தீபகற்ப மலாயாவிற்கு, கள்ளு 1886-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷாரால் கூலியாட்களாக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மற்றும் கேரள மக்களால் பிரபலமடைந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் அதிகாலையில் பால்மரம் வெட்டச் செல்லும் ஆண்களில் பெரும்பான்மையினரின்  ஒரு சமூக நடவடிக்கையாகக் கள்ளு குடிப்பது இருந்திருக்கிறது. கள்ளும் எனும் மதுபானம் எளிமையாக கிடைக்ககூடிய வகையிலும், மலிவாகவும் அதே வேளையில் தென்னைமரத்திலிருந்து இறக்கி, வேறு  எந்த உற்பத்தி செயலாக்கமும் தேவையில்லாத அளவுக்கு  எளிமையான ஒன்றாகவும் இருந்திருக்கிறது.

கூலியாட்களை அதிகம் சிந்திக்க விடாமல் கட்டுப்படுத்தி, தோட்டத்து கூலி தொழிலாளர்களை கள்ளுக்கு அடிமையாக வைத்திருக்கும் யுத்திக்குப் பின்னால் பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இருக்கிறது.  ஒவ்வொரு தோட்டத்திலும் கோயில், ஆயாக் கொட்டகை கட்டாயம்  உள்ளதுபோல கள்ளுக்கடையும் இருந்திருக்கிறது.  கள்ளின் ஆதிக்கம் ஓர் இனத்தையே அடையாளப்படுத்தும் அளவுக்கு, காலனித்துவ காலத்தில் சிக்கல்களில் வேரூன்றிய ஒரு பெரிய பிரச்சனையாகவும் அது மாறியது.

முதல் கள்ளுக்கடை எங்கே தொடங்கப்பட்டது, கள்ளுக்கடைக்கான கட்டுப்பாடுகள் எப்போது முதன்முதலில் தொடங்கப்பட்டன என்பதற்கான சரியான விவரங்கள் தெரியாவிட்டாலும்,  நுகர்வோரின் புகார்கள் மற்றும் கள்ளு விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான  உத்தரவுகளை பிரிட்டிஷாரால்  கடை உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதங்கள் 1900-1909களில் கிடைத்திருக்கின்றன.




சீனர்கள் ஓப்பியத்தை குடித்து, அந்த மயக்கத்திலேயே அதிகநேரம் தோட்டத்தில் வேலை செய்தார்கள். அது பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் லாபத்தையே கொடுத்தது.  அவர்களின் சுயலாபத்திற்காக  ஓப்பியத்தை பெரிய அளவில் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. சீன தொழிலாளர்களின் நலனில் அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால், புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களின் "தீவிர குடிப்பழக்கம்" அவர்களுக்கு பிரச்னையாக இருந்தது. தோட்டத்து இளைஞர்களால்   தீவிரமாக செயற்பட்ட தொண்டர் படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் நிறைய புகார்களும் கள்ளுக்கெதிரான எதிர்ப்புகளும் அதிகரித்தன.   

இது எந்த அளவுக்கு தீவிரமடைந்தது என்றால் , 1916-ஆம் ஆண்டு  மலாயா தோட்டக்காரர்கள் சங்கத்திற்கு (PAM) டாக்டர் மால்கம் வாட்சன் எழுதிய அறிக்கையின் சாரம் இப்படி இருக்கிறது. “கள்ளு கடுமையான விஷம்.  இந்திய கூலியாட்கள் சுகாதரமற்ற பாதையில் செல்கிறார்கள்.  தொழிலாளர்களுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு, வயிறுசார்ந்த பிற கோளாருகளுக்கு  இந்திய  தொழிலாளர்களின் வர்க்க கலாச்சாரம் மற்றும் இந்தியாவிலிருந்து  புலம்பெயர்ந்தோரின் சுகாதாரமற்ற பழக்கங்களும் ஒரு காரணம்.  மிகவும் பழமைவாதிகளான அவர்களை மேம்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது” என்று  எழுதினார். நாட்டில் ஏற்பட்ட  சுகாதார பிரச்சினைகளுக்கு இக்காரணங்ளையும் அவர் தொடர்புபடுத்தினார்.


பிரச்னை தீவிரத்தை எட்டினாலும் கள்ளுக்கெதிராக எந்தத் தடையையும் பிரிட்டிஷ் அரசு பிறப்பிக்கவில்லை. தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த ஒரு வழியாக அதை பாவித்துக் கொண்டார்கள். மேலும், பிரிட்டிஷ் அரசுக்கும் கள்ளு விற்பனையிலிருந்து நிறைய லாபமும் கிடைத்திருக்கிறது.  அதாவது கள்ளு விற்பனையின் இலாபத்தில், ஐந்தில் இரண்டு பங்கு  அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள மூன்று பங்கை தொழிலாளர்களின் பொது நலனுக்காக பயன்படுத்தப்படும் சிறப்பு நிதியாக மாற்றப்பட்டதாகவும், மலாயாவில் கள்ளுக்கடை குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கும் பரமேஸ்வரி கிருஷ்ணனின் என்பவரின் அறிக்கை கூறுகிறது.

ஒரு கட்டத்தில் தீபகற்ப மலாயா முழுதும் கள்ளுக்கடைக்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்திருக்கிறது. அந்தப் போராட்டங்களுக்கு பெண்களும் தீவிரமாக ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கியமாக கெடா, பேடோங்கில் 1947-ஆண்டு நடந்த கள்ளுக்கைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் மற்றும் போராட்டவாதிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டு 13 பேரை போலீசார் கைது செய்தனர்.  கள்ளுக்கடைக்கான எதிர்ப்பு அறிக்கைகள் ‘ஜனநாயக’ பத்திரிகையில் தொடர்ந்து  செய்தியாக வந்திருக்கின்றன.  ஆனாலும் கள்ளுக்கடை சங்கங்கள் எந்தச் சரிவும் இல்லாமல் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கின்றன.  எந்தப் போராட்டமும் சொற்பொழிவுகளும் கள்ளுக்கடைக்கான மூடுவிழாவை கொண்டுவர முடியவில்லை.

மலேசிய சோசலிச கட்சியின் துணைதலைவர் அருட்செல்வத்திடம் இதுகுறித்து ஒரு நாள் பேசுகையில், அவர் தம் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.  ஒரு தோட்டத்தில் கள்ளுக்கடைக்கு எதிரான  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது,  கள்ளுக்கடைக்கு ஆதரவாக இருக்கும் சில ஆண்கள்  “இது ஏழைகள் அருந்தக்கூடிய, மலிவாக கிடைக்ககூடிய ஒரு மதுபானம்” என்றும் “இதை ஒழித்துவிட்டால் இதற்கு மாற்றுவழியைத் தேடி தோட்டத்து மக்கள் இன்னும் மோசமான விஷயங்களை நாடி போகலாம்” என்றும் கருத்து கூறுகிறார்கள் என்றார். இன்னும் சிலர் “வசதியுள்ளவர்கள் உயர்ரக மதுபானத்தை குடிக்கிறார்கள். அதற்கு எதிராக எந்தப் போராட்டமும் வருவதில்லையே, ஏன் கள்ளுக்கு மட்டும் இத்தனை எதிர்ப்பு” என்று குறைபட்டுக்கொண்டதையும்  அருள் தெரிவித்தார்.  

இதுதான் இரண்டாவது பார்வையாகும். மட்டமான தரம் குறைவான மதுபானம் போல கள்ளை கூற இயலாது. மருந்தாக எடுத்து கொண்டால் உடல் உஷ்ணம் போன்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. ஒற்றை மரத்துக் கள்ளுக்கும் அந்திக் கள்ளுக்கும் எப்போதுமே தனி மவுசுதான்.  அளவுக்கு மீறும் போதுதான் அது போதையாகிறது. 

தோட்டத்து வாழ்க்கையிலிருந்து நாம் மாறிபோயிருந்தாலும்,  அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளுக்கடைகள் இருக்கவே செய்கின்றன.  நமது நாட்டில் கள்ளுக்கடைச் சங்கங்களும் புதுப்பிக்கப்பட்டு உயிர்ப்புடனே இருக்கின்றன.  என்றாலும் அச்சங்கங்களின் செயற்பாடுகள் என்ன? சங்கங்களை புதுப்பிக்கும் வரையரைகள் என்ன? அரசாங்கத்திடம் எந்த மாதிரியாக கோரிக்கைகளை இச்சங்கங்கள் கோருகின்றன? உள்ளிட்ட விவரங்களை கலந்துரையாடினால் தகவல்கள் பெறலாம்.

மலேசிய மண்ணில் 100 ஆண்டுகள் கடந்தவிட்ட கள்ளு எனும் பானத்தின் வரலாறு இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. குடிபோதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்தவர்களின் கதை வெளிப்படையாகவே பேசிக்கொண்டிருப்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

 

தரவுகள்: 

 - ஓவியக் காட்சிகள்:  "The History of Toddy Drinking and Its Effects on Indian Labourers in Colonial Malaya, 1900–1957".

-நாளிதல் ஆதாரம்: ஆர்கிப் நெகாராவில் நானே (யோகி) எடுத்தது.

-நன்றி தோழர் சாமிநாதன் 

நன்றி தமிழ் மலர் 19/9/2021