வியாழன், 17 ஜூன், 2021

வனங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?

மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டத்தை எதிர்ப்போம்!


கிளந்தான் மாநிலத்திற்கும் இயற்கைவள பாதுகாப்புக்கும் என்றுமே எட்டாம் பொறுத்தமாக இருக்கிறது. அழகிய வனங்களையும், மலைகளையும் இயற்கை வளங்களையும் கொண்டதுதான் கிளந்தான் மாநிலம். சுனாமி வந்தபோது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய கிளந்தான் மாநிலத்தை காத்து நின்றதே அங்கிருந்த அலையாத்தி மரங்கள்தான். அந்த அளவுக்கு இயற்கையே பாதுகாக்கும் மாநிலம்தான் கிளந்தான் மாநிலம்.  ஊடகத் துறையில் நான் நிருபராக பணி செய்தபோது  மூன்று நாட்கள் அந்த மாநிலத்தில் தங்கி காடுகளையும் கடல்களையும் சுற்றிதிரிந்த அனுபவம் இருக்கிறது.  மேம்பாடு செய்யாமல் இருந்தாலே அந்த மாநிலம் இயற்கையாகவே அழகை மெருகேற்றிக்கொள்ளும்.


ஆனால், நாட்டில் அந்த மாநில இயற்கைக்கு இழைக்கப்படும் துரோகம்போல வேறு எந்த மாநிலத்திற்கும் இழைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. பழங்குடிகள் வசிக்கும் காடுகளில் உள்ள மரங்கள் சூரையாடப்பட்டு பூர்வக்குடிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். குவா முசாங் அணை திட்டம், சட்டவிரோத சுரங்க நடவ்வடிக்கைகள் என இயற்கையை சுரண்டி கொழிக்கும் காப்ரேட் நிறுவனங்களுக்கு அங்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.

தற்போது அம்மாநில இயற்கை வளம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னை மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டம். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசே அனுமதி அளித்திருப்பது வருத்தமான விஷயம் மட்டுமல்ல அது தடுக்கப்படவேண்டிய ஒரு விஷயமும் கூட. இயற்கை ஆர்வளர்கள் மிக கடுமையான இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

மிகக் கடுமையாக இந்தத் திட்டத்தை எதிர்க்க காரணம் என்ன?


கிட்டதட்ட 500 ஏக்கர் நிலத்தை மையமாகக் கொண்டு நடக்கப்போகும் இந்த சுரங்க திட்டம் மிகப்பெரிய இயற்கை அழிவினை ஏற்படுத்தக்கூடியதாகும். கிளந்தானின் குவா மூசாங் அருகே நடக்க திட்டமிட்டிருக்கும் மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்ட நடவடிக்கையானது பூர்வக்குடிகளையும் பாதிக்கும் ஒரு திட்டமாக அமையும். கடுமையான தண்ணீர் தூய்மைக்கேடு ஏற்படக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் கணித்துள்ளனர். அதே வேளையில் வனவிலங்குகளில் வாழ்வியல் கடுமையாக பாதிக்கபடுவதோடு அழிவும் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தலாம்.

 தவிர மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான ஒன்று என்று வெளிநாடுகளில் செய்யப்பட்ட  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனாலேயே தங்கள் நாடுகளில்  இந்தத் திட்டத்தை மேற்கொள்ள கடுமையான எதிர்ப்புகளும் இருக்கின்றன.  மலேசியாவில் தற்போது இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலை ஏற்படுத்தும் ஒன்றுதான்.


இது தொடர்பாக பினாங்கு சுற்றுச்சூழல் அமைப்பு  SAM  என்று சொல்லக்கூடிய Sahabat Alam Malaysia -வின் தலைவரான  மீனாட்சி ராமன் இந்த சுரங்கத் திட்டத்திற்காக ஏற்கனவே 117.32 ஹெக்டேர் (57%) நிலம் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். அதாவது  சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை EIA சமர்ப்பிப்பதற்கு முன்னரே இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்.  இது சட்டப்படி  குற்றமாகும்.

மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க  வேலைகள் ஆரம்பிக்கும் பட்சத்தில்  அதிலிருந்து வெளிவரும் அமில சுரங்க வடிகால் மற்றொரு தீவிரமான பிரச்னை இயற்கைக்கு எதிராகவும் மக்கள் மற்றும் மிருகங்கள் வாழ்க்கைக்கு எதிராகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை படி இந்தத் திட்டம் மேற்கொள்ளப்போகும் தளம்  வனவிலங்கு வாழ்விடமாகும். வன விலங்குகள் வாழ்விடங்களுக்குள் ஊடுருவுவதாகு. இந்த  பகுதியில் ஆசிய யானைகள், படைச்சிறுத்தை, கரடி உட்பட  சர்வதேச ஒன்றியம் அறிவித்திருக்கும் பாதுகாக்கக்கூடிய வன மிருகங்கள் இருக்கின்றன. அதோடு  இப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட பெரும்பாலான பறவைகளும் வனவிலங்குகளும் பாதுகாப்பு சட்டம் 2010 (சட்டம் 716)ல்  முற்றிலும் பாதுகாக்கப்படுகின்றன என்ற தகவலையும்  மீனாட்சி ராமன் ஒரு பத்திரிக்கை அறிக்கையின் வழி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும், சமூக-பொருளாதார கண்ணோட்டத்தில், பதிலளித்தவர்களில் 53% பேர் முன்மொழியப்பட்ட இத்திட்டத்திற்கு உடன்படவில்லை என்பதை சுற்றுச்சூழல் அறிக்கை  வெளிப்படுத்துகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை எதிர்த்து பொதுமக்களும் கேள்விகளை எழுப்ப வேண்டும். குவா மூசாங் பூர்வக்குடிகள் மட்டுமே எப்போதும்  தங்களின் வனத்திற்காக களத்தில் நிற்பவர்களாக  இருக்கிறார்கள். ஆனால், மாநில அரசு என்பது மாநிலத்தின் மக்களுக்காக மட்டுமல்ல அல்லவே. அப்படியென்றால் வனவிலங்குகள் வனமக்கள் மாநில சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு இல்லையா? அல்லது அதை கேள்வி கேட்கவும் தடுக்கவும் மத்திய அமைச்சுக்குதான் அதிகாரம் இல்லையா? மாநில அரசு இயற்கையை காப்பாற்ற முடியாது என்றால் அதை அழிக்கும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து வந்தது? இயற்கை என்பது நம் பரம்பரையோடு முடிந்துவிட்டால் எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப்போவது எதை?

மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டத்தை மட்டுமல்ல இயற்கைக்கு பாதகமான அனைத்து பாதகச் செயலையும் நிறுத்தவேண்டும். அது வெறும் கூச்சலாக மட்டும் போய்விடக்கூடது. செயலில் இருக்க வேண்டும்.

-யோகி

தமிழ்மலர் பத்திரிக்கை (20/6/2021)

சனி, 5 ஜூன், 2021

ஜேம்ஸ் புரூக் எனும் வெள்ளை ராஜாவும் Brunei Head Hunters எனும் கட்டுக்கதையும்

 

ஜேம்ஸ் புரூக்

16ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசியர்கள்  வந்திறங்கினாலும்  அவர்களால் அங்கு காலனி அமைக்கமுடியவில்லை என்று வரலாறு சொல்கிறது.

1841 ஆம் ஆண்டில் தன் அப்பா விட்டுச் சென்ற சொத்தில்  ராயலிஸ்ட் என்ற கப்பலை வாங்கி போர்னியோவுக்குப் பயணம் செய்தவர், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  சராவாக் மாநிலத்தின் கூச்சிங் நகருக்கு வந்தார். கூச்சிங்கில்  வசித்த  டாயாக் இனபழங்குடி மக்களுக்கும்  புருனை சுல்தானுக்கும்  கிளர்ச்சி நடந்துகொண்டிருப்பதை  ஜேம்ஸ் புரூக் கண்டார்.

அதே வேளையில் கூச்சிங் நகரம் இயற்கை மற்றும் கனிம வளங்களில் செழித்திருப்பதை ஜேம்ஸ் புரூக் பார்க்கிறார். அதை தன் நாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் அவர் மூளைக்கு எழுகிறது.

 பூர்வக்குடிகளின் புருனை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சியை ஜேம்ஸ் புரூக் பயன்படுத்திகொள்கிறார்.   இதற்கிடையில்  புருனை சுல்தானே  ஜேம்ஸ் புரூக்கின் உதவியை நாடியும் வருகிறார்.  இருவரும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பூர்வக்குடிகளின் கிளர்ச்சியை கட்டுப்படுத்தினால்  சரவாக் மாநிலத்தை  ஜேம்ஸ் புரூக்கின் கட்டுப்பாட்டில் விடுவதாக உறுதி செய்யப்படுகிறது.

இவர்கள் பேசியபடியே பழங்குடி மக்களின் கிளர்ச்சியை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறார் ஜேமஸ் புரூக். பூர்வக்குடிகளை ஒடுக்கியப்பிறகு, புருணை சுல்தானின் ஒப்பந்தப்படி  சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம்  முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. 1841, செப்டம்பர் 24 -  புருணை சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார்.  பின் அங்கு வெள்ளை ராஜா வம்சம் உண்டானது.

சரவாக்கின் வெள்ளை ராஜா ஆனார்  ஜேம்ஸ் புரூக். சரவாக்கின் ராஜா ஆதிகுடிகளின் நிலங்களுக்குள் காட்டுவளத்தையும் கனிம வளத்தையும் சுரண்டுவதற்கு  அத்துமீறி செல்கையில் பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது.  ஆதிகுடிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல்  திணறுகிறது ஜேம்ஸ் புரூக் அரசாங்கம்.  இங்கேதான் தன் சூழ்ச்சி வலையை பின்னுகிறார் ஜேம்ஸ் புரூக்.


டாயாக் பழங்குடி மக்கள், கொடூரமாக இருக்கிறார்கள்.  அவர்களின்  மொழி மற்றும் கலாச்சாரம் நாகரீகமற்று இருப்பதுடன் இவர்கள் மனித தன்மையில்லாத காட்டுவாசிகள் என்றக் கூற்றை ஜேம்ஸ் புரூக் பிரிட்டன் அரசாங்கத்திடம் சொல்கிறார். மேலும், அந்த இனகுழுவினர் தலையை வெட்டுகிறார்கள் (Head Hunters) என்றும் சொல்கிறார்.  வெட்டப்பட்ட தலைகளை புகைப்படம் எடுத்து அதை ஆதாரமாக கொண்டும் செல்கிறார்.   அவர்கள் கடற்கொள்ளையர்கள் தம் செல்வங்களை அபகரிக்க முயற்சிகள் செய்கிறார்கள் உள்ளிட்ட தன்னுடைய கட்டுக்கதையை எழுத்துப் பூர்வமாகவும் தயார் செய்கிறார்.   அதை உண்மை என்று எண்ணிய  பிரிட்டிஷ் அரசாங்கம்  சரவாக் ஆதிவாசிகளை ஒடுக்க தனது இராணுவப் படையை ஜேம்ஸ் புரூக்கோடு அனுப்பி வைக்கிறது.  பெரிய அளவில் ஆதிவாசிகளுக்கு  உயிர் சேதம்  ஏற்படுகிறது.   இறுதியில் பழங்குடிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள். 

மரங்களை நம்பி வாழும் டாயாக் சமூகத்தினர் 200 இன துணைக்குழுக்களைக் கொண்டுள்ளனர் என்றும் ஒவ்வொறு குழுவும் சற்றே வித்தியாசமான கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள்.  என்றாலும், ஆசியாவின் மிகப்பெரிய வனமாக திகழும் சரவாக், சபா மற்றும் புருணை உள்ளிட்ட பகுதியில் வசித்த பூர்வக்குடிகளில் யாருக்கும் தலை வெட்டும் கலாச்சாரத்தை கொண்டிருந்தனர்  என்பது நிரூபிக்கப்படவே இல்லை.

Brunei Head Hunters என்பதற்கு பல கதைகள் இணையத்தில் இருந்தாலும் அது ஆதிவாசிகள் செய்தார்கள் என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நில ஆக்கரமிப்பு மற்றும் ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட போட்ட திட்டம்; அதற்காக காவு கொல்லப்பட்ட தலைகள் அவை என்று சில தரப்பினர் ஆரூடம் கூறுகின்றனர்.

இதற்கிடையில் 1851-ஆம் ஆண்டு டாயாக் பழங்குடி சமூகத்தினரை மனிதாபிமானமில்லாமல் கொன்று குவித்ததில் சர்ச்சை ஏற்பட்டு ஜேம்ஸ் புரூக் மீது  வழக்கு தொடரப்பட்டது.  கடற்கொள்ளையர்கள் என்றும் தலையை வெட்டி வேட்டையாடுபவர்கள் என்றும் ஜேம்ஸ் பூரூக் கூறியது பொய் என்றும்   உள்ளூர் மக்களுக்கு எதிரான ஊழல் மற்றும் தவறான அவரின்  நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்  வெள்ளைராஜாவான ஜேம்ஸ் புரூக் மீது சுமத்தப்பட்டன.  இந்தக் குற்றச்சாட்டுகளை பிரிட்டிஷ் பிரதிநிதிகள் சபையில் ஜேம்ஸ் புரூக் சந்தித்தார். இது அவருக்கு மிகப்பெரிய அளவில் பின்னடவை ஏற்படுத்தியது.  

இந்த நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு ஆளுனர் பதிவிலிருந்து நீக்கப்பட்டார். பின் அவரின் மகன் சரவாக்கின் இரண்டாம் ஆளுனர் ஆனார்.

ஜேம்ஸ் புரூக், அவரின் மகன், அவரின் பேரன் என சுமார் 105 ஆண்டுகள் சரவாக் மாநிலம் இவர்களின் வசம்தான்  இருந்தது.  முதலாம் உலகப்போருக்குப் பிறகு சராவாக் மாநிலம் பிரிட்டிஷ் வசம் கைமாறியது.

2002 ஆம் ஆண்டில் சரவாய் மாநில  அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக டாயாக் என்ற பழங்குடி மக்களின் ஆதிப்பெயர் பிடாயு என்று மாற்றம் கண்டது. பிடாயு என்பது ‘நிலத்தில் வசிப்பவர்கள் என்று பொருள். 

வியாழன், 3 ஜூன், 2021

கென்யா - உகாண்டா ரயில் கட்டுமானம் - மறக்கப்பட்ட வரலாறு


சயாம் மரண ரயில்வே கட்டுமான வன்முறைக்கு முன்பே நடந்தது கென்யா - உகாண்டா ரயில் கட்டுமானப் பணியாகும்.  Kenya's 'lunatic line' என்ற அடைமொழி அந்தப் ரயில் தண்டவாளத்திற்கு  உண்டு. அந்தப் பைத்தியக்காரதனமான தண்டவாள கட்டுமானத்திற்கு 2500 பேரின் உயிர் காவு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருசிலர் மட்டுமே அறிந்திருக்ககூடிய தகவலாக இருந்தாலும் அதுகுறித்து யாருமே  பரவலாக பேசுவதில்லை. இத்தனைக்கும் உயிரிழந்தவர்களில் கணிசமானவர்கள் தென்னிந்திய தொழிலாளர்களாவர்.

கிழக்காப்பிரிக்காவில் அமைக்கப்பட்ட ரயில்வே, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிசின் பிரதமராக இருந்தபோது இந்த இரும்புப்பாதை அமைக்கப்பட்டது. இந்தக் கட்டுமானப் பணியேகூட பைத்தியக்காரத்தனமானது என்று பலர் கூறினர். ஆப்பிரிக்க நாடுகளில் வணிகத்தை மேம்படுத்த மெற்கொள்ளப்பட்ட ரயில் பாதையின் நீளம் 1,062 கிலோமீட்டராகும். 


நைரோபியில் இருந்து பொம்பாசா வரைக்குமான இரும்புப்பாதை அமைக்கும் பணியில் எவ்விதத் தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளப்போவதாக சர்ச்சில் அறிவித்தார். இதன்மூலம் உகாண்டா, டுவாண்டா, புருண்டி மற்றும் தென் சூடான் நாடுகளை இணைக்கும் திட்டமாக இது அறிவிக்கப்பட்டது. 

இந்தக் கட்டுமானத்திற்காக 30,000 ஒப்பந்த இந்திய தொழிலாளர்கள், தங்களின் புதிய கூலி வாழ்க்கைகாக ஆப்பிரிக்காவின்  மொம்பாசாவுக்குப் பயணித்தனர். 


1895-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப்பணி பொம்பாசாவில் தொடங்கி 1899-ல் நைரோபியில் முடிவடைந்தது. 1901-ல் இந்தக் கட்டுமானம் விக்டோரியா ஏரி வரை கட்டப்பட்டது. இந்தக் கட்டுமானம் தொடக்கத்தில் திட்டமிட்டதுபோல இலகுவாக இல்லை. செலவீனம் அப்பவே பலமடங்கு அதிகரித்தது. மனித உழைப்பு மிருகத்தனமாக செலவிடப்பட்டது.  

இத்திட்டத்திற்காக 2500 பேரின் உயிர் பலிகொள்ளப்பட்டது. ஒவ்வொரு மைலுக்கும் நான்கு பேர்  பலியானார்கள் என வரலாறு சொல்கிறது. கடினமான வெட்பத்தில் அதிகநேரம் வேலை செய்ததாலும், மலேரிய கொசுக் கடியினாலும், விஷக் காய்ச்சலாலும்  காட்டு மிருகங்களின் பசிக்கும் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டன.  முறையான மருத்துவ வசதி அந்த தொழிலாளர்களுக்கு செய்துகொடுக்கபடவில்லை.   

இதிலேயே அந்தக் கட்டுமானத்தில் மிகப்பெரிய சவாலாக எதிர்கொண்டது இரு சிங்கங்களைத்தான்.  சாவோ ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்ட இடத்தில் பல கட்டுமானத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஒரு ஜோடி ஆண் சிங்கங்கள் குறைந்தது 28 இந்திய மற்றும் ஆபிரிக்க தொழிலாளர்களைக் கொன்று தின்றன  என்று கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை 135 ஆக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது.  

ரயில் கட்டுமானத்தின்போது சிங்கங்கள் தொழிலாளர்களை அடித்துக்கொன்ற இந்த சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி The Ghost and the Darkness  என்ற ஆங்கிலப்படம் 1996- ஆம் ஆண்டு வந்தது. Stephen Hopkins இந்த திரைப்படத்தை  இயக்கினார். ஓம் பூரி முக்கிய கதாபாத்திரத்தில் அந்த திரையில் நடித்திருப்பார். 


படத்தில் ஒரு வசனம் வரும், வேலைக்கு போன இந்திய கூலி தொழிலாளிகள் இருகுழுவாக பிரிந்திருப்பார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் எற்படும். பாலத்தின் கட்டிட கலைஞர் இது குறித்து புரியாமல் ஏன்  அவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று கேட்பார்,  அதற்கு ஓம் பூரி ரொம்ப எளிமையாக பதில் சொல்வார். 

“ஒரு பிரிவினர் மாட்டை வணக்குகிறவர்கள். மற்றொரு பிரிவினர் மாட்டை உண்பவர்கள். “


காலப்போக்கில் இந்த இரும்புப்பாதை கொள்ளை, ஊழல் மற்றும் பராமரிப்பும் இல்லாமல் பழுதாகிப்போனது. 2014-ஆம் ஆண்டு இந்த இரும்பு தண்டவாளத்தை மீண்டும் உயிர்பிக்க சீன அரசு முயற்சியினை மேற்கொண்டது. மே மாதம் 2014-ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கென்யாவின் அதிபர் உகுரு கென்யத்தா, உகாண்டா அதிபர் பால் ககமே, தென் சூடான் பிரதமர் சல்வாகீர் மற்றும் சீனப்பிரதமர் லீ கேகியாங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் மேம்பாட்டுக்கான செலவில் 90 விழுக்காட்டை சீனா ஏற்பதுதான். 



மீதித் தொகையான 10 விழுக்காட்டை கெய்யா ஏற்றுக்கொள்ளும். இந்த கையெழுத்து சடங்கு நைரோபி அரசாங்க இல்லத்தில் நடைபெற்றபோது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த சீனா உதவ விரும்புவதாக சீன தலைவர் தெரிவித்தார். 

இந்த இரும்புப் பாதையின் சீரமைப்பினால் கென்யா பொருளாதாரத்துறை மேம்பாடு காணும், இதன் மூலம் நாட்டின் போக்குவரத்துத்துறை மேம்படும் தவிர நாட்டின் 79 விழுக்காடு போக்குவரத்துச் செலவு குறையும் என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும் இத்திட்டம் குறித்தும் சீனா இதில் முனைப்பு காட்டுவதிலும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. சீனா, கென்யா நாடுகளின் வாணிக ஏற்றுமதி, இறக்குமதியில் பெரிய வித்தியாசமிருப்பது விமர்சனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 


கென்யாவின் ஏற்றுனதி 32 மில்லியன் பவுனாக மட்டும் உள்ள நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள் மதிப்பு 1.2 மில்லியன் பவுனாகும். இந்த வேறுபாடு நமக்கு நன்றாக ஒன்றை விளக்குகிறது. அதாவது காரணமில்லாமல் சீனா இதில் இறங்காது என்பது. ஆனால், அதையும் தாண்டி இன்னும் இருட்டு தேசங்களாக இருக்கின்ற கிழக்காப்பிரிக்க நாடுகளை இந்த இரும்புப் பாதைகள் இணைக்கின்றன என்பது நல்ல மேம்பாடாக கருத வேண்டியுள்ளது. 2500 உயிர்களை பலிகொண்ட ரயில் கட்டுமானம்  அது துச்சமாகிவிடக்கூடாது. 

புதன், 2 ஜூன், 2021

பூவுலகின் பறவைகளும் சுந்தர்லால் பகுகுணாவும்





கடந்த மாதத்தில் சகூரா மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கி உதிர்ந்தனமலேசிய மண் இதுவரை பார்த்திடாத அழகு அதுபூக்கள் மரத்தில் இருந்தபோதும்மண்ணில் கொத்து கொத்தாக உதிர்ந்தபோதும் அழைகையே கொடுத்தனஅடுத்த ஒரு வாரத்தில் மரங்கள் பூத்திருந்ததுக்கான அறிகுறியே இல்லாமல் வெறுமையாகியதுஇந்தக் கொரானி நச்சில் காலத்தில்  சுற்றுப்புறத்திற்கும் மனதிற்கும் இன்பத்தை கொடுத்த சகூரா பூக்களின் ஆயுட்காலம் வெறும் ஒருவாரம்  மட்டுமே.

வசந்தமே உதிந்துவிட்டதா என்று தோன்றும் நேரத்தில் கொன்றை மலர்கள் பூத்து பூத்து பூமிக்கும் வானத்திற்கும் மஞ்சள் பூசின. கொன்றை பூக்கும் காலம்தானே என்று தோன்றினாலும், இம்முறை ஊதா வர்ணத்திலும் வெள்ளி வர்ணத்திலும் பூத்திருந்த சகூராவிற்கு பிறகு பூத்திருந்த கொன்றை மலர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அலைஅலையாக பூத்திருந்தன.  அவையும்கூட ஒரே வாரத்தில் வசந்தத்தை முடித்துக்கொண்டன. உதிர்ந்து காய்ந்து சாலையில் சிதறிகிடந்த  மஞ்சள்  மலர்களை துப்புரவு தொழிலாளி கூட்டி அள்ளிக்கொண்டிருந்தார். அவருக்கு அது சுமையாகவும் இருந்திருக்கலாம்.

 


கத்தரி வெயில் கொழுத்தும் இந்த காலத்தில் மழையும் வெள்ளமும் குளிருமாக இருக்கிறது. காலநிலை மாற்றம் படு மோசமாக மாறியிருக்கிறது. தான் என்ன ஆகிகொண்டிருக்கிறோம் என்று இயற்கைக்கே தெரியவில்லை. என்றாலும்கூட கடந்த வாரம் முதல் பூமருது மரம் ஊதா மலர்களாக  பூத்து பறவைகளுக்கு நளபாகம்  செய்துகொண்டிருக்கின்றன. பறவைகள்  விருந்தாளிகளாக வருவதும் போவதுமாக இருந்தாலும் பூமருது மரம் பூப்பதை இன்னும் நிறுத்தவில்லை.

 இன்று நாம் சந்தித்துகொண்டிருக்கும் இந்தப் பெருந்தொற்றுக்கும்  காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபடுதலுக்கும் நிறையே தொடர்பு இருக்கின்றன. மேலும், திடீரென மரங்கள் பூப்பதும், பருவமில்லாத காலத்தில் பழங்கள் காய்ப்பதும்கூட இந்த பூவுலகு நம்மை எச்சரிக்கும் ஒரு விஷயம்தான்

 வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நமக்கு, அந்த இறுக்கம்  நம்மைச் சுற்றி நடப்பதை அவதானிக்க கூடிய சூழலில் இல்லை என்று பலர் சொல்ல கேட்கிறேன். ஆனாலும், ஊரடங்களில் இவர்கள் என்னதான் செய்கிறார்கள். மந்தி தன் குழந்தைக்கு பேன் பார்ப்பதுபோல இரு கைகளும் கைதொலைப்பேசியை பற்றிகொண்டு எதையே தேடிகொண்டே இருக்கிறார்கள்நாள் முழுக்க தேடினாலும் அவர்கள் தேடுவது கையில் சிக்குவதே இல்லைதேடுவதும் முடிவதில்லை.


இந்த
ஊரடங்கு நாட்களில் என் ஜன்னல் சாளரத்தின் வழியில் சில பறவைகளின் வருகையை  காண முடிந்தது.  மீன் கொத்திப் பறவை, குயில், நீலத் தொண்டை ஈப்பிடிப்பான், மைனா, தேன் சிட்டு, சிட்டுக்குருவி, Asian glossy starling , Metallic glossy starling உள்ளிட்ட பறவைகள் பூமருது மரத்தில் தங்கள் வருகையை உறுதிசெய்துவிட்டு சென்றன. இந்த ஊரடங்கு நாட்களில் மிக சுதந்திரமாக இருக்கும் பறவைகளின் குணங்களை அறியக்கூடிய வாய்ப்பை நான் தவிர்க்கவே இல்லை. இந்த பூவுலகு நமக்கு மட்டும் சொந்தமல்ல என்று வானொலியில் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அதை மெலோட்டமாக கடந்து போகிற சூழல்தான் நமக்கு இருக்கிறதே தவிர உண்மையில் அதன் அர்த்தத்தை உணரவே இல்லை. தட்டானின் இறக்கையையும், பட்டாம் பூச்சியின் இறக்கையையும் பிய்த்து முடமாக்கிய தண்டனைக்குதான் இன்று நம்மாள் தட்டானையும் வண்ணத்து பூச்சியையும் காண முடிவதே இல்லை.

 மனிதர்களுக்கு ஊரடங்கு என்றால் இந்தப் பறவைகள்  மிக மகிழ்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ முடிகிறது. காற்றின் மாசு, ஒலி மாசு உட்பட  மனிதர்களால் ஏற்படும் இடையூறுகள் எதுவும் பறவைகளுக்கு இல்லை. இது தொடர்தால் அழியக்கூடிய வகையில் இருக்கும் பல பறவைகள் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்புகள் அதிகம் தானே.

 நிழலுக்காக நடப்படும் மரங்களில் பூக்கும் பூக்களுக்கும் மனிதர்கள் உண்பதற்கு முடியாத காய்களை காய்க்கும் மரங்களுக்கும் இத்தனை பறவைகள் வருகிறது என்றால் பழமரங்களுக்கு எத்தனை எத்தனை பறவைகள் வரும். அதற்காகத்தானே கடந்த வாரம் இயற்கையோடு கலந்துவிட்ட்ட  சூழலியளாலர் சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் பாடுபட்டார்கள்.

 

யார் அந்த சுந்தர்லால் பகுகுணா என்று யோசிக்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

 

பிஷ்நோயி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் அமிருதாதேவி. பச்சை மரங்களை வெட்டக்கூடாது என்ற நம்பிக்கையுடையது அவர்களின் இனக்குழுவாகும். அவரின் குடியரசை சேர்ந்த ஜோத்பூர் மன்னரின் அரண்மனைக்கு சுண்ணாம்பு சூளைகளுக்கு மரங்கள் தேவைப்பட்டது. மரங்களை வெட்ட அரண்மைனை கூலியாட்கள் வந்தபோது அதை தடுத்து நிறுத்தி, திரும்பி செல்லுமாறு வேண்டினார் அமிருதா.

 ஆனால், அரண்மைனையாட்கள் விடுவதாக இல்லை. அவர்கள் மரத்தை வெட்ட கோடரியை வெளியில் எடுத்தார்கள். அமிருதா மரத்தை கட்டிகொண்டு அதை வெட்டவிடாமல் தன்னுயிரை கொடுத்தார். அதன் பின் அவரின் மகள் அந்த மரத்தை வெட்ட விடாமல் கட்டிகொண்டு பலியானார். பின் அவரின் தங்கையும் கோடாரியின் பசிக்கு இரையானார். அவளுக்குப் பிறகு இளைய தங்கை. அதன் பிறகு பிஷ்நோயி  இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மக்களாக அந்த மரத்திற்காக இன்னுயிரை கொடுத்தனர்.  சுமார் 400 பிஷ்நோயி  பழங்குடிகள் வெட்டி கொல்லப்பட்டனர்.

 சுமார் 300 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சம்பவத்தை இன்னும் நினைவுகோரும் வகையில் ஆண்டுதோறும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதை ஒரு விழாவாக முன்னெடுக்கிறார்கள். அந்த விழாவில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வந்தவர்தான் சுந்தர்லால் பகுகுணா. இயற்கை ஆர்வளர் சுந்தர்லால் பகுகுணாவுக்கு "இந்திய கானகங்களின் மகாத்மா" என்ற பெயரும் இருக்கிறது.

பிஷ்நோயி  பழங்குடிகள் கையாண்டதைதான் இமயக் காடுகளை காப்பாற்றுவதற்காக சுந்தர்லால் பகுகுணாவும் கையாண்டார். அதுதான் 'சிப்கோ' அமைப்பாகும். சிப்கோ என்றால் ஒட்டிக்கொள்வது என்று பொருள். மரத்திற்காக தன் உயிரை கொடுத்தவர்கள் மத்தியில் இலை உதிர்வதெல்லாம் பெரும் தொல்லை என வெட்டி சாய்ப்பவர்க்கள் நாம். பறவைகளின் ஒலி பெரும் இடைஞ்சலாக இருக்கிறது என்பதற்காக மரத்தை காவு கேட்பவர்கள் நாம். சுவாசத்திற்கு தேவை பிராணவாயு என்பதும் அது மரங்களிலிருந்துதான் கிடைக்கும் என்பதும் மறந்து மெத்தனமாக இருப்பவர்கள் நாம். எப்போது நம்மிடம் விழிப்புணர்வு வரப்போகிறது என்று தெரியவில்லை.

 நடிகர் விவேக் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிலர் மரங்கள் நட்டு அதை முகநூலில் பதிவேற்றம் செய்ததை காண முடிந்தது. உண்மையில் அது நல்ல விஷயம்தான். சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையையே இயற்கைக்காக கொடுத்தவர்கள். அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதும், அவர்கள் சொன்ன விஷயங்களை பின்பற்றி அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும்கூட இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதையும் அன்பும்தான்.