வியாழன், 3 ஜூன், 2021

கென்யா - உகாண்டா ரயில் கட்டுமானம் - மறக்கப்பட்ட வரலாறு


சயாம் மரண ரயில்வே கட்டுமான வன்முறைக்கு முன்பே நடந்தது கென்யா - உகாண்டா ரயில் கட்டுமானப் பணியாகும்.  Kenya's 'lunatic line' என்ற அடைமொழி அந்தப் ரயில் தண்டவாளத்திற்கு  உண்டு. அந்தப் பைத்தியக்காரதனமான தண்டவாள கட்டுமானத்திற்கு 2500 பேரின் உயிர் காவு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருசிலர் மட்டுமே அறிந்திருக்ககூடிய தகவலாக இருந்தாலும் அதுகுறித்து யாருமே  பரவலாக பேசுவதில்லை. இத்தனைக்கும் உயிரிழந்தவர்களில் கணிசமானவர்கள் தென்னிந்திய தொழிலாளர்களாவர்.

கிழக்காப்பிரிக்காவில் அமைக்கப்பட்ட ரயில்வே, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிசின் பிரதமராக இருந்தபோது இந்த இரும்புப்பாதை அமைக்கப்பட்டது. இந்தக் கட்டுமானப் பணியேகூட பைத்தியக்காரத்தனமானது என்று பலர் கூறினர். ஆப்பிரிக்க நாடுகளில் வணிகத்தை மேம்படுத்த மெற்கொள்ளப்பட்ட ரயில் பாதையின் நீளம் 1,062 கிலோமீட்டராகும். 


நைரோபியில் இருந்து பொம்பாசா வரைக்குமான இரும்புப்பாதை அமைக்கும் பணியில் எவ்விதத் தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளப்போவதாக சர்ச்சில் அறிவித்தார். இதன்மூலம் உகாண்டா, டுவாண்டா, புருண்டி மற்றும் தென் சூடான் நாடுகளை இணைக்கும் திட்டமாக இது அறிவிக்கப்பட்டது. 

இந்தக் கட்டுமானத்திற்காக 30,000 ஒப்பந்த இந்திய தொழிலாளர்கள், தங்களின் புதிய கூலி வாழ்க்கைகாக ஆப்பிரிக்காவின்  மொம்பாசாவுக்குப் பயணித்தனர். 


1895-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப்பணி பொம்பாசாவில் தொடங்கி 1899-ல் நைரோபியில் முடிவடைந்தது. 1901-ல் இந்தக் கட்டுமானம் விக்டோரியா ஏரி வரை கட்டப்பட்டது. இந்தக் கட்டுமானம் தொடக்கத்தில் திட்டமிட்டதுபோல இலகுவாக இல்லை. செலவீனம் அப்பவே பலமடங்கு அதிகரித்தது. மனித உழைப்பு மிருகத்தனமாக செலவிடப்பட்டது.  

இத்திட்டத்திற்காக 2500 பேரின் உயிர் பலிகொள்ளப்பட்டது. ஒவ்வொரு மைலுக்கும் நான்கு பேர்  பலியானார்கள் என வரலாறு சொல்கிறது. கடினமான வெட்பத்தில் அதிகநேரம் வேலை செய்ததாலும், மலேரிய கொசுக் கடியினாலும், விஷக் காய்ச்சலாலும்  காட்டு மிருகங்களின் பசிக்கும் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டன.  முறையான மருத்துவ வசதி அந்த தொழிலாளர்களுக்கு செய்துகொடுக்கபடவில்லை.   

இதிலேயே அந்தக் கட்டுமானத்தில் மிகப்பெரிய சவாலாக எதிர்கொண்டது இரு சிங்கங்களைத்தான்.  சாவோ ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்ட இடத்தில் பல கட்டுமானத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஒரு ஜோடி ஆண் சிங்கங்கள் குறைந்தது 28 இந்திய மற்றும் ஆபிரிக்க தொழிலாளர்களைக் கொன்று தின்றன  என்று கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை 135 ஆக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது.  

ரயில் கட்டுமானத்தின்போது சிங்கங்கள் தொழிலாளர்களை அடித்துக்கொன்ற இந்த சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி The Ghost and the Darkness  என்ற ஆங்கிலப்படம் 1996- ஆம் ஆண்டு வந்தது. Stephen Hopkins இந்த திரைப்படத்தை  இயக்கினார். ஓம் பூரி முக்கிய கதாபாத்திரத்தில் அந்த திரையில் நடித்திருப்பார். 


படத்தில் ஒரு வசனம் வரும், வேலைக்கு போன இந்திய கூலி தொழிலாளிகள் இருகுழுவாக பிரிந்திருப்பார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் எற்படும். பாலத்தின் கட்டிட கலைஞர் இது குறித்து புரியாமல் ஏன்  அவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று கேட்பார்,  அதற்கு ஓம் பூரி ரொம்ப எளிமையாக பதில் சொல்வார். 

“ஒரு பிரிவினர் மாட்டை வணக்குகிறவர்கள். மற்றொரு பிரிவினர் மாட்டை உண்பவர்கள். “


காலப்போக்கில் இந்த இரும்புப்பாதை கொள்ளை, ஊழல் மற்றும் பராமரிப்பும் இல்லாமல் பழுதாகிப்போனது. 2014-ஆம் ஆண்டு இந்த இரும்பு தண்டவாளத்தை மீண்டும் உயிர்பிக்க சீன அரசு முயற்சியினை மேற்கொண்டது. மே மாதம் 2014-ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கென்யாவின் அதிபர் உகுரு கென்யத்தா, உகாண்டா அதிபர் பால் ககமே, தென் சூடான் பிரதமர் சல்வாகீர் மற்றும் சீனப்பிரதமர் லீ கேகியாங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் மேம்பாட்டுக்கான செலவில் 90 விழுக்காட்டை சீனா ஏற்பதுதான். 



மீதித் தொகையான 10 விழுக்காட்டை கெய்யா ஏற்றுக்கொள்ளும். இந்த கையெழுத்து சடங்கு நைரோபி அரசாங்க இல்லத்தில் நடைபெற்றபோது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த சீனா உதவ விரும்புவதாக சீன தலைவர் தெரிவித்தார். 

இந்த இரும்புப் பாதையின் சீரமைப்பினால் கென்யா பொருளாதாரத்துறை மேம்பாடு காணும், இதன் மூலம் நாட்டின் போக்குவரத்துத்துறை மேம்படும் தவிர நாட்டின் 79 விழுக்காடு போக்குவரத்துச் செலவு குறையும் என்பதெல்லாம் உண்மைதான் என்றாலும் இத்திட்டம் குறித்தும் சீனா இதில் முனைப்பு காட்டுவதிலும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. சீனா, கென்யா நாடுகளின் வாணிக ஏற்றுமதி, இறக்குமதியில் பெரிய வித்தியாசமிருப்பது விமர்சனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 


கென்யாவின் ஏற்றுனதி 32 மில்லியன் பவுனாக மட்டும் உள்ள நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள் மதிப்பு 1.2 மில்லியன் பவுனாகும். இந்த வேறுபாடு நமக்கு நன்றாக ஒன்றை விளக்குகிறது. அதாவது காரணமில்லாமல் சீனா இதில் இறங்காது என்பது. ஆனால், அதையும் தாண்டி இன்னும் இருட்டு தேசங்களாக இருக்கின்ற கிழக்காப்பிரிக்க நாடுகளை இந்த இரும்புப் பாதைகள் இணைக்கின்றன என்பது நல்ல மேம்பாடாக கருத வேண்டியுள்ளது. 2500 உயிர்களை பலிகொண்ட ரயில் கட்டுமானம்  அது துச்சமாகிவிடக்கூடாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக