சனி, 5 ஜூன், 2021

ஜேம்ஸ் புரூக் எனும் வெள்ளை ராஜாவும் Brunei Head Hunters எனும் கட்டுக்கதையும்

 

ஜேம்ஸ் புரூக்

16ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசியர்கள்  வந்திறங்கினாலும்  அவர்களால் அங்கு காலனி அமைக்கமுடியவில்லை என்று வரலாறு சொல்கிறது.

1841 ஆம் ஆண்டில் தன் அப்பா விட்டுச் சென்ற சொத்தில்  ராயலிஸ்ட் என்ற கப்பலை வாங்கி போர்னியோவுக்குப் பயணம் செய்தவர், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  சராவாக் மாநிலத்தின் கூச்சிங் நகருக்கு வந்தார். கூச்சிங்கில்  வசித்த  டாயாக் இனபழங்குடி மக்களுக்கும்  புருனை சுல்தானுக்கும்  கிளர்ச்சி நடந்துகொண்டிருப்பதை  ஜேம்ஸ் புரூக் கண்டார்.

அதே வேளையில் கூச்சிங் நகரம் இயற்கை மற்றும் கனிம வளங்களில் செழித்திருப்பதை ஜேம்ஸ் புரூக் பார்க்கிறார். அதை தன் நாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் அவர் மூளைக்கு எழுகிறது.

 பூர்வக்குடிகளின் புருனை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சியை ஜேம்ஸ் புரூக் பயன்படுத்திகொள்கிறார்.   இதற்கிடையில்  புருனை சுல்தானே  ஜேம்ஸ் புரூக்கின் உதவியை நாடியும் வருகிறார்.  இருவரும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பூர்வக்குடிகளின் கிளர்ச்சியை கட்டுப்படுத்தினால்  சரவாக் மாநிலத்தை  ஜேம்ஸ் புரூக்கின் கட்டுப்பாட்டில் விடுவதாக உறுதி செய்யப்படுகிறது.

இவர்கள் பேசியபடியே பழங்குடி மக்களின் கிளர்ச்சியை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறார் ஜேமஸ் புரூக். பூர்வக்குடிகளை ஒடுக்கியப்பிறகு, புருணை சுல்தானின் ஒப்பந்தப்படி  சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம்  முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. 1841, செப்டம்பர் 24 -  புருணை சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார்.  பின் அங்கு வெள்ளை ராஜா வம்சம் உண்டானது.

சரவாக்கின் வெள்ளை ராஜா ஆனார்  ஜேம்ஸ் புரூக். சரவாக்கின் ராஜா ஆதிகுடிகளின் நிலங்களுக்குள் காட்டுவளத்தையும் கனிம வளத்தையும் சுரண்டுவதற்கு  அத்துமீறி செல்கையில் பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது.  ஆதிகுடிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல்  திணறுகிறது ஜேம்ஸ் புரூக் அரசாங்கம்.  இங்கேதான் தன் சூழ்ச்சி வலையை பின்னுகிறார் ஜேம்ஸ் புரூக்.


டாயாக் பழங்குடி மக்கள், கொடூரமாக இருக்கிறார்கள்.  அவர்களின்  மொழி மற்றும் கலாச்சாரம் நாகரீகமற்று இருப்பதுடன் இவர்கள் மனித தன்மையில்லாத காட்டுவாசிகள் என்றக் கூற்றை ஜேம்ஸ் புரூக் பிரிட்டன் அரசாங்கத்திடம் சொல்கிறார். மேலும், அந்த இனகுழுவினர் தலையை வெட்டுகிறார்கள் (Head Hunters) என்றும் சொல்கிறார்.  வெட்டப்பட்ட தலைகளை புகைப்படம் எடுத்து அதை ஆதாரமாக கொண்டும் செல்கிறார்.   அவர்கள் கடற்கொள்ளையர்கள் தம் செல்வங்களை அபகரிக்க முயற்சிகள் செய்கிறார்கள் உள்ளிட்ட தன்னுடைய கட்டுக்கதையை எழுத்துப் பூர்வமாகவும் தயார் செய்கிறார்.   அதை உண்மை என்று எண்ணிய  பிரிட்டிஷ் அரசாங்கம்  சரவாக் ஆதிவாசிகளை ஒடுக்க தனது இராணுவப் படையை ஜேம்ஸ் புரூக்கோடு அனுப்பி வைக்கிறது.  பெரிய அளவில் ஆதிவாசிகளுக்கு  உயிர் சேதம்  ஏற்படுகிறது.   இறுதியில் பழங்குடிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள். 

மரங்களை நம்பி வாழும் டாயாக் சமூகத்தினர் 200 இன துணைக்குழுக்களைக் கொண்டுள்ளனர் என்றும் ஒவ்வொறு குழுவும் சற்றே வித்தியாசமான கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள்.  என்றாலும், ஆசியாவின் மிகப்பெரிய வனமாக திகழும் சரவாக், சபா மற்றும் புருணை உள்ளிட்ட பகுதியில் வசித்த பூர்வக்குடிகளில் யாருக்கும் தலை வெட்டும் கலாச்சாரத்தை கொண்டிருந்தனர்  என்பது நிரூபிக்கப்படவே இல்லை.

Brunei Head Hunters என்பதற்கு பல கதைகள் இணையத்தில் இருந்தாலும் அது ஆதிவாசிகள் செய்தார்கள் என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நில ஆக்கரமிப்பு மற்றும் ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட போட்ட திட்டம்; அதற்காக காவு கொல்லப்பட்ட தலைகள் அவை என்று சில தரப்பினர் ஆரூடம் கூறுகின்றனர்.

இதற்கிடையில் 1851-ஆம் ஆண்டு டாயாக் பழங்குடி சமூகத்தினரை மனிதாபிமானமில்லாமல் கொன்று குவித்ததில் சர்ச்சை ஏற்பட்டு ஜேம்ஸ் புரூக் மீது  வழக்கு தொடரப்பட்டது.  கடற்கொள்ளையர்கள் என்றும் தலையை வெட்டி வேட்டையாடுபவர்கள் என்றும் ஜேம்ஸ் பூரூக் கூறியது பொய் என்றும்   உள்ளூர் மக்களுக்கு எதிரான ஊழல் மற்றும் தவறான அவரின்  நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்  வெள்ளைராஜாவான ஜேம்ஸ் புரூக் மீது சுமத்தப்பட்டன.  இந்தக் குற்றச்சாட்டுகளை பிரிட்டிஷ் பிரதிநிதிகள் சபையில் ஜேம்ஸ் புரூக் சந்தித்தார். இது அவருக்கு மிகப்பெரிய அளவில் பின்னடவை ஏற்படுத்தியது.  

இந்த நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு ஆளுனர் பதிவிலிருந்து நீக்கப்பட்டார். பின் அவரின் மகன் சரவாக்கின் இரண்டாம் ஆளுனர் ஆனார்.

ஜேம்ஸ் புரூக், அவரின் மகன், அவரின் பேரன் என சுமார் 105 ஆண்டுகள் சரவாக் மாநிலம் இவர்களின் வசம்தான்  இருந்தது.  முதலாம் உலகப்போருக்குப் பிறகு சராவாக் மாநிலம் பிரிட்டிஷ் வசம் கைமாறியது.

2002 ஆம் ஆண்டில் சரவாய் மாநில  அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக டாயாக் என்ற பழங்குடி மக்களின் ஆதிப்பெயர் பிடாயு என்று மாற்றம் கண்டது. பிடாயு என்பது ‘நிலத்தில் வசிப்பவர்கள் என்று பொருள். 

1 கருத்து: