வியாழன், 17 ஜூன், 2021

வனங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?

மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டத்தை எதிர்ப்போம்!


கிளந்தான் மாநிலத்திற்கும் இயற்கைவள பாதுகாப்புக்கும் என்றுமே எட்டாம் பொறுத்தமாக இருக்கிறது. அழகிய வனங்களையும், மலைகளையும் இயற்கை வளங்களையும் கொண்டதுதான் கிளந்தான் மாநிலம். சுனாமி வந்தபோது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய கிளந்தான் மாநிலத்தை காத்து நின்றதே அங்கிருந்த அலையாத்தி மரங்கள்தான். அந்த அளவுக்கு இயற்கையே பாதுகாக்கும் மாநிலம்தான் கிளந்தான் மாநிலம்.  ஊடகத் துறையில் நான் நிருபராக பணி செய்தபோது  மூன்று நாட்கள் அந்த மாநிலத்தில் தங்கி காடுகளையும் கடல்களையும் சுற்றிதிரிந்த அனுபவம் இருக்கிறது.  மேம்பாடு செய்யாமல் இருந்தாலே அந்த மாநிலம் இயற்கையாகவே அழகை மெருகேற்றிக்கொள்ளும்.


ஆனால், நாட்டில் அந்த மாநில இயற்கைக்கு இழைக்கப்படும் துரோகம்போல வேறு எந்த மாநிலத்திற்கும் இழைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. பழங்குடிகள் வசிக்கும் காடுகளில் உள்ள மரங்கள் சூரையாடப்பட்டு பூர்வக்குடிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். குவா முசாங் அணை திட்டம், சட்டவிரோத சுரங்க நடவ்வடிக்கைகள் என இயற்கையை சுரண்டி கொழிக்கும் காப்ரேட் நிறுவனங்களுக்கு அங்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.

தற்போது அம்மாநில இயற்கை வளம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னை மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டம். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசே அனுமதி அளித்திருப்பது வருத்தமான விஷயம் மட்டுமல்ல அது தடுக்கப்படவேண்டிய ஒரு விஷயமும் கூட. இயற்கை ஆர்வளர்கள் மிக கடுமையான இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

மிகக் கடுமையாக இந்தத் திட்டத்தை எதிர்க்க காரணம் என்ன?


கிட்டதட்ட 500 ஏக்கர் நிலத்தை மையமாகக் கொண்டு நடக்கப்போகும் இந்த சுரங்க திட்டம் மிகப்பெரிய இயற்கை அழிவினை ஏற்படுத்தக்கூடியதாகும். கிளந்தானின் குவா மூசாங் அருகே நடக்க திட்டமிட்டிருக்கும் மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்ட நடவடிக்கையானது பூர்வக்குடிகளையும் பாதிக்கும் ஒரு திட்டமாக அமையும். கடுமையான தண்ணீர் தூய்மைக்கேடு ஏற்படக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் கணித்துள்ளனர். அதே வேளையில் வனவிலங்குகளில் வாழ்வியல் கடுமையாக பாதிக்கபடுவதோடு அழிவும் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தலாம்.

 தவிர மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான ஒன்று என்று வெளிநாடுகளில் செய்யப்பட்ட  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனாலேயே தங்கள் நாடுகளில்  இந்தத் திட்டத்தை மேற்கொள்ள கடுமையான எதிர்ப்புகளும் இருக்கின்றன.  மலேசியாவில் தற்போது இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலை ஏற்படுத்தும் ஒன்றுதான்.


இது தொடர்பாக பினாங்கு சுற்றுச்சூழல் அமைப்பு  SAM  என்று சொல்லக்கூடிய Sahabat Alam Malaysia -வின் தலைவரான  மீனாட்சி ராமன் இந்த சுரங்கத் திட்டத்திற்காக ஏற்கனவே 117.32 ஹெக்டேர் (57%) நிலம் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். அதாவது  சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை EIA சமர்ப்பிப்பதற்கு முன்னரே இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்.  இது சட்டப்படி  குற்றமாகும்.

மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க  வேலைகள் ஆரம்பிக்கும் பட்சத்தில்  அதிலிருந்து வெளிவரும் அமில சுரங்க வடிகால் மற்றொரு தீவிரமான பிரச்னை இயற்கைக்கு எதிராகவும் மக்கள் மற்றும் மிருகங்கள் வாழ்க்கைக்கு எதிராகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை படி இந்தத் திட்டம் மேற்கொள்ளப்போகும் தளம்  வனவிலங்கு வாழ்விடமாகும். வன விலங்குகள் வாழ்விடங்களுக்குள் ஊடுருவுவதாகு. இந்த  பகுதியில் ஆசிய யானைகள், படைச்சிறுத்தை, கரடி உட்பட  சர்வதேச ஒன்றியம் அறிவித்திருக்கும் பாதுகாக்கக்கூடிய வன மிருகங்கள் இருக்கின்றன. அதோடு  இப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட பெரும்பாலான பறவைகளும் வனவிலங்குகளும் பாதுகாப்பு சட்டம் 2010 (சட்டம் 716)ல்  முற்றிலும் பாதுகாக்கப்படுகின்றன என்ற தகவலையும்  மீனாட்சி ராமன் ஒரு பத்திரிக்கை அறிக்கையின் வழி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும், சமூக-பொருளாதார கண்ணோட்டத்தில், பதிலளித்தவர்களில் 53% பேர் முன்மொழியப்பட்ட இத்திட்டத்திற்கு உடன்படவில்லை என்பதை சுற்றுச்சூழல் அறிக்கை  வெளிப்படுத்துகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை எதிர்த்து பொதுமக்களும் கேள்விகளை எழுப்ப வேண்டும். குவா மூசாங் பூர்வக்குடிகள் மட்டுமே எப்போதும்  தங்களின் வனத்திற்காக களத்தில் நிற்பவர்களாக  இருக்கிறார்கள். ஆனால், மாநில அரசு என்பது மாநிலத்தின் மக்களுக்காக மட்டுமல்ல அல்லவே. அப்படியென்றால் வனவிலங்குகள் வனமக்கள் மாநில சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு இல்லையா? அல்லது அதை கேள்வி கேட்கவும் தடுக்கவும் மத்திய அமைச்சுக்குதான் அதிகாரம் இல்லையா? மாநில அரசு இயற்கையை காப்பாற்ற முடியாது என்றால் அதை அழிக்கும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து வந்தது? இயற்கை என்பது நம் பரம்பரையோடு முடிந்துவிட்டால் எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப்போவது எதை?

மெங்னீசியம் தாது  வார்ப்பு சுரங்க திட்டத்தை மட்டுமல்ல இயற்கைக்கு பாதகமான அனைத்து பாதகச் செயலையும் நிறுத்தவேண்டும். அது வெறும் கூச்சலாக மட்டும் போய்விடக்கூடது. செயலில் இருக்க வேண்டும்.

-யோகி

தமிழ்மலர் பத்திரிக்கை (20/6/2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக