வியாழன், 3 செப்டம்பர், 2026

வரதராஜூ எனும் நான் - நேர்காணல் (2022)

தோழர் வரதராஜூ அவர்கள் 29/8/2026  அன்று இயற்கை எய்தினார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் அடுத்த தலைமுறைக்கு அவரின் அறிமுகம் தேவை எனும் நோக்கத்திலும் கடந்த 2022- ஆம் ஆண்டு  செய்யப்பட்ட நேர்காணலை மீண்டும் எனது அகப்பக்கத்தில் பகிர்கிறேன். தோழருக்கு செவ்வணக்கம். 


இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் சமூக செயற்பாடுகள் மற்றும் களப்போராளிகளை சந்திக்கும்போ
து, அவர்களில் சிலர் என்னை விசாரிக்கும் ஒரு நபராக இருப்பவர் தோழர் வரதராஜூ. நமது நாட்டில் வரைக்குறித்து யாரைக் கேட்டாளும் அவர் யார்? என்று திருப்பி நம்மிடமே கேட்பார்கள். வெளிநாட்டு தோழர்கள் மத்தியில் நன்கு  அறிமுகமாகியிருக்கும் நமது நாட்டின் தோழர் வரதராஜூவை நான் எப்போது சந்தித்தேன் தெரியுமா?

நான் அப்போது ‘நம்நாடு’ தினசரி பத்திரிகையில் நிருபராக பணியில் இருந்தேன். 2013- ஆம் ஆண்டு, பாகான் டத்தோ தோட்ட தொழிலாளர்களின் வீடு முறைக்கேடு தொடர்பான வழக்கில் அப்பாட்டாளிகளுக்கு ஆதரவாக நின்ற தோழர் வரதராஜூவை நான் கோலாலம்பூர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தேன். அதற்கு முன்பு அவரைப்பற்றிய அறிமுகம் இருந்தாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகளோ அல்லது தொடர்புக்கொள்ளும் வாய்ப்புகளோ மிக கடினமாக இருந்தது. காரணம் கடைநிலைப் போரளியான அவர் முகனூல், தொலைப்பேசி உள்ளிட்ட சாதனங்களிலிருந்து தள்ளியே இருந்தார். அவரைச் சந்தித்த முதல் நாளில் அவருக்கு என்னைப்பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது என் எழுத்துக்குண்டான அங்கிகாரம் என இப்பவும் நம்புகிறேன்.

இந்தப் புகைப்படம் முதல் சந்திப்பில் எடுத்தது

அந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரனையைச் செய்தியாக்க மற்ற எந்தப் பத்திரிகையிலிருந்தும் நிருபர்கள் வரவில்லை. ஒரே நிருபராக அன்றையதினம் நான் மாலைவரை அவருடன் உரையாடி செய்திகளைச் சேகரித்தேன். அந்தச் சந்திப்பிலிருந்து எங்களின் நட்பு அவரின் இறுதிகாலம் வரையில் தொடர்ந்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு (2022) தோழர் வரதராஜூவை சந்தித்து ஓர் இதழுக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணலுக்கு தமிழ்நாட்டின் மிக முக்கியமான தோழரும் எழுத்தாளருமான தோழர் எஸ்.வீ.ஆர், தோழர் வரதராஜூவுக்கு கொடுத்திருக்கும் அறிமுகத்திலிருந்து ந்த நேர்காணலை நான் தொடங்கினேன். அதை இப்போது உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.  

 

தோழர் எஸ்.வீ.ராஜதுரை

சுற்றுச்சூழல் தொடர்பாக  பினாங்கில் 1987-ஆம் ஆண்டு நடந்த  ஒரு சர்வதேச மாநாட்டின்போது தோழர் வரதராஜு எனக்கு அறிமுகமானார். குறிப்பிடத்தக்க கல்விப்புலம் எதனையும் பெற்றிராத அவர், தம் நாட்டு நடப்புகளை, குறிப்பாக மலேசியாவில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நிலையை, மிகக் கூர்மையாக அவதானித்து வந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் எங்களுக்கிடையே தொலைபேசி வழியாக நடந்த உரையாடல்களையொட்டி, அவரது அழைப்பின் பேரில் 1990-இல் மீண்டும் மலேசியாவுக்கு வந்து அவருடன் ஒருமாத காலம் தங்கியிருந்தபோது இரப்பர், செம்பனைத் தோட்டங்கள் சிலவற்றைப் பார்வையிடவும் அங்குள்ள தொழிலாளிகளின் ( அவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்) அவல நிலையைப் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தத் தொழிலாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அந்த நாட்டில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்த ஒரே தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணன் என்ற மலையாளி எப்படியெல்லாம்  தொழிற்சங்கத்தின் நிதி ஆதாரங்களைச் சுருட்டிக் கொண்டிருந்தார் என்பதைப்  பற்றிய ஏராளமான தகவல்களையும் ஆவணங்களையும் தனியொரு மனிதராகத் திரட்டி வைத்திருந்தார் தோழர் வரதராஜு. பின்னர் அவர் ஆவணப்படுத்தி வந்தவற்றை ஒரு நூலாகக் கொண்டுவரும் பொருட்டு சென்னைக்கு வந்திருந்தார்.

அந்த நூலாக்கத்தில் அவருக்கு உதவி செய்ததுடன் அதற்கான முன்னுரையையும் எழுதித் தந்தேன்.  2002-ஆம் ஆண்டில் சென்னை வாழ்க்கையை முடித்துக் கொண்டு கோத்தகிரியில் நானும் என் துணைவியும் குடியேறினோம். 2007-2008 -இல் நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த போது அங்கு ஒருமுறை வந்திருந்தார் தோழர். இந்த இடைக்காலத்தில் அவர் மலேசியாவில் வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியாருடைய உதவியுமில்லாமல் அவரே சில நூல்களை எழுதினார்.

மலேசியாவில் அவருடன் ஒரு மாத காலம் நான் தங்கியிருந்தபோது, முக்கியமான ஒரு சட்டத்தரணிஆங்கில நாளேடொன்றின் முக்கிய நிருபர் உட்பட படிப்பறிவு மிகுந்த பலர் தோழர் வரதராஜுவை மிக உயர்வாக மதித்து வந்ததைக் கண்டேன். தொழிலாளிவர்க்கக் குடும்பமொன்றில் பிறந்து சுய முயற்சியாலும் நேரடி அனுபவங்களாலும்  உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற்றிருந்த  தோழர் வரதராஜு சற்று முன்கோபம் உடையவர். நேர்மைக் குறைவுடையவர்களைச் சட்டென்று தூக்கியெறிந்துவிடுவார். ஆனால், அவரது இலட்சியங்களுடன் உடன்படுவர்கள் மீது அவரது இதயத்திலிருந்து எப்போதும் வற்றாத அன்பும் கருணையும் பாசமும்  பீறீட்டு வந்து கொண்டிருக்கும். மலேசியாவிலுள்ள முற்போக்காளர்களிடையே அவருக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று கருதுகிறேன்.’

-எஸ்.வி.ராஜதுரை 

இனி தோழர் வரதராஜூ அவர்களுடனான உரையாடாலிருந்து..

யோகி: தோழர் வரதராஜூ என்பவர் யார்? உங்களின் பின்னணிதான் என்ன?

தோழர் : நான் ஒரு சாமானிய மனிதன். என் பின்னணியும் தோட்டத்திலிருந்தே தொடங்குகிறது. பெரிய கல்வித்தகுதியும் எனக்கில்லை. அம்மா என் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். உடன்பிறப்புகள் ஐவர். நான் இரண்டாவது பிள்ளை. அப்பாதான் எங்களை கவனித்துக்கொண்டார்.

குடும்பத்தின் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளியாக 13 வயதில் புக்கிட் ஜெலுத்தோம் தோட்டத்தில்வேலைக்குச் செல்ல தொடங்கினேன். 4 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக செம்பனைக் காட்டில் வெளிக்காட்டுதொழிலாளியாக வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 0.80 சென் சம்பளம் அப்போது. என் குடும்பம் வறுமையின் பிடியிலிருந்து மீளமுடியாத நிலையில் சூழல் இன்னும் மோசமடைந்தது. தோட்டத்து கிராணி வழியாக மாற்றுவேலையை வேண்டினேன். அவர் எனக்கு செம்பனைக் குழையை தூக்கும் வேலையை மாற்றிக்கொடுத்தார்.

1964-களில் செம்பனைக் குழைகளை தள்ளுவண்டியில் வைத்துதள்ளிக்கொண்டுப்போகும் வசதிவரவில்லை. கூடையில் தூக்கிவைத்து தலையில் சுமந்துச் சென்று முச்சந்தியில் இறக்க வேண்டும். சாதாரணமான வேலையில்லை அது. 40-50 கிலோவரை அது கனக்கும். பிறகு அதிலிருந்து செம்பனைக்குழையை அறுக்கும் வேலையையும் பழகிக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் கூலியாட்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிமைகளைப்போல நடத்துவார்கள்

சுய மரியாதை சுடுபடுவதை ஜீரணிக்கமுடியாமல் அதை எதிர்க்கும் குணம் என்னிலிருந்து வெளிப்பட்டது. எனக்கு எந்தச் சித்தாந்தமும் படிப்பினையும் இல்லை என்றாலும் இயற்கையாகவே இருந்த தன்மானம் அவர்களிடம் குரலை உயர்த்தியது. பின் ஒருமுறை அது கைகளப்பில் முடிந்தது. இதன் காரணமாக தோட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். பின் தோட்டத்திலிருந்து வெளியாகி நான் Sungaiway -யில் இருக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றேன். அப்போது அந்த இடத்தை 10-ஆம் கட்டை என்று சொல்வார்கள். அந்த இடத்தில் ஒரு கிராமம் இருந்தது. அங்கே நண்பருடன் தங்கிக்கொண்டேன். தற்போது அந்த இடத்தில் மோட்டோரோலா நிறுவனம் இருக்கிறது

அதன்பிறகு சீன நிறுவனத்தின் ஈயக் கப்பலுக்கு வேலைக்குச் சென்றேன். அந்தக் கப்பலில் சில தொழில்நுட்ப வசதியிருந்தது. பூமியில் எங்கு ஈயம் இருக்கிறது என அந்தக் கப்பல் கண்டறியும். அங்கே ஈயத்தை தோண்டியெடுத்து, அங்கேயே ஈயத்தையும் கழிவுகளையும் பிரித்தெடுக்கும் பணி. 1968-ஆம் ஆண்டுவரை அங்கு வேலைசெய்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் பொருளாதார மந்தநிலை நாட்டில் ஏற்பddathu. ஈயம் படுவீழ்ச்சிக் கண்டது. அதன்பிறகு அங்கிருந்தும் பணிநிறுத்தம் செய்யப்பட்டேன். திரும்பவும் தோட்டத்தையே நாடி வந்தேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் சென் ஜோசப் எனும் கிருஸ்துவ மதப்போதகர் எனக்கு அறிமுகமானார். அவரின் வழியே எனக்கு தோட்டத்து கெமிக்கல் தொழிற்சாலையில் வேலைகிடைத்தது. 1972-ல் திராவிடக் கழகத்திலும் இணைந்தேன். இதோடு எனக்கு இடதுச்சாரி சிந்தனைக் கொண்ட நண்பர்களும் அறிமுகமானார்கள்என் வாழ்க்கை இப்படியாகத்தான் தொடங்கியது.   

யோகி : அந்தக் காலக்கட்டத்தில் இடதுச்சாரி புரிதல் இல்லாத உங்களுக்கு, அவர்களின் உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் எவ்வாறான தாகத்தை ஏற்படுத்தின?

தோழர் : தொடக்கமாக அது எனக்கு ஒத்த சிந்தனையாகத்தான் தெரிந்தது. இன்னும் அதை சரியாக விளங்கிக்கொள்ள எனக்கு புத்தகங்கள் உதவியாக இருந்தன. இடதுச்சாரி சிந்தனைக் கொண்ட அல்லது மாற்றுச் சிந்தனைக்கொண்ட புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். நண்பர்களும் சில புத்தகங்களை பரிந்துரைத்தார்கள். வர்கம், மற்றும் கொள்கை ரீதியாக புரிதல்களில் எனக்கு ஒரு தெளிவு உண்டானது. நண்பர்களின் கலந்துரையாடல்கள் மேலும் எனக்கு புரிதல்களை அதிகப்படுத்தின. 

யோகி : ஒருபுறம் மார்க்சிய சிந்தனைக்கொண்ட தோழர்கள்;  மறுபுறம் திராவிடத் தோழர்கள் இரண்டிலும் ஒருசேர உங்களால் பயணிக்க முடிந்ததா? 

தோழர் : தொடக்கத்தில் கழகத்தில் சில பூசல்கள் வரவே செய்தன. என் மீது ஒரு புகாராகவே அதை வைத்தார்கள். கழகத்தின் தலைவரான கே.ராமசாமி என்னை அழைத்து விசாரித்தார். நான் அப்போது கிளைத்தலைவராக இருந்தேன். மிகத்தெளிவாக எனக்கு எது தேவையோ அதையே நான் செய்கிறேன் என்று கூறிவிட்டேன். என்னால் இடதுசாரி தோழர்களின் நட்பை புறக்கணிக்கவே முடியவில்லை. 

இன்நிலையில் மே கலவரத்திற்கு பிறகு 1 டிசம்பர் 1969-ஆம் ஆண்டு புதியதாக ஒரு கலைகொல்லி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றேன். ங்கு 13 ஆண்டுகள் வேலைசெய்தேன். அங்குதான் கேடு விளைவிக்கும் அந்த பாசாணத்தை நான் தெரிந்துகொண்டேன். சீனர்களின் தொழிற்சாலையான அதிலும் பல ஒடுக்குமுறைகள் இருந்தன. 

இந்நிலையில் பினாங்கு மாநிலத்தில் செயற்பட்டு வந்த மண்ணின் தோழர்கள் கழகத் தோழர்களுடன் இணைந்தேன். மெத்தப் படித்தவர்கள் மற்றும் ஆங்கில அறிவுக்கொண்டவர்கள் கொண்ட அமைப்பு அது. அறிக்கைகள் உட்பட அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்க வேண்டும். முறையான கல்வி மற்றும் ஆங்கில புலமையில்லையென்றாலும் அந்த அமைப்பில் என்னை இணைந்துக்கொள்ள கேட்டார்கள். என்னை முழுநேர ஊழியனாக இணையச் சொன்னார்கள். 

தொழிற்சாலை வேலையை விடுவதற்கு முன்பு, அங்கு ஒரு தொழிற்சங்கத்தை அந்தச் தொழிற்சாலையில் அமைத்தேன். அது மிகவும் சவாலாக இருந்தது. முதலாளிக்கு பயந்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறைவாக இருந்தது. அந்தத் தொழிற்சங்கத்திற்கு நானே முதல் தலைவனாகவும் ஆனேன். சில ஒப்பந்தங்கள் பரிந்துரைகளை எப்படி கையாளவேண்டும் என்பதை நானே பயிற்சி எடுத்துக்கொள்ளும் களமாக அது அமைந்தது.  அதன் பின் தான்  பினாங்கில் செயல்பட்டுக்கொண்டிருந்த மண்ணின் தோழர்கள்கழகத்தோடு இணைந்து முழுநேர ஊழியனானேன். சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக,  அந்த அமைப்பு குரல் எழுப்பியது. இருந்தாலும் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதைத்தான் என் மனம் விரும்பியது. 

இரண்டு நிலையிலும் ஈடுபாடுகாட்டினாலும் தொழிலாளர்கள் நலனில் கூடுதல் அக்கரை காட்டத்தொடங்கினேன். மண்ணின் தோழர்கள் கழகத்தோடு வேலை செய்த அனுபவம்தான், ஆய்வுகள் செய்வது எப்படி? பிரச்னைகளை அணுகுவது எப்படி என்ற நுணுக்கங்கள் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. 

குறிப்பாக கலைகொல்லி மருந்தின் பாதிப்பினை அறிந்து அதை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தீவிரமும் மண்ணின் தோழர்கள் கழகத்தில் இணைந்தப்பிறகுதான் வந்தது. கலைக்கொல்லி (Paraquat) ரசாயணத்தை தடைசெய்யக்கோரி அக்கோரிக்கையை சர்வதேச நிலைக்கு கொண்டுச்சென்று அதன் பயன்பாட்டை முடிவுக்கொண்டு வந்தேன். சில தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் சுயலாபம் தேடிக்கொண்டது வேறுக்கதை. 

அந்த மருந்தின் சீர்கேட்டை மக்களுக்கு தெரியப்படுத்த எண்ணி, முழு ஆய்வுக்குப் பிறகு அது தொடர்பான புத்தகத்தை எழுதினேன். கலைகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைசெய்திருந்த அனுபவம் இருந்ததால் என்னால் அது குறித்து தீவிரமாகவே எழுத முடிந்தது. மண்ணின் தோழர்கள் கழகத்தில் இருந்தபோது மக்கள் பிரச்சனைகள் குறிப்பாக தோட்ட மக்கள் பிரச்னைகள் முறைகேடுகள் தொடர்பாக 5 புத்தகங்களை கொண்டு வந்தேன். 1995-ஆம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்தும் நான் வெளியேற வேண்டிய சூழல் உண்டானது. 

யோகி : ஒரு நீண்ட பயணத்தில் வரதராஜூ என்பவர் தோட்டப் பாட்டாளியாக வர்க போராளியாக மேலும் பொதுமக்கள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டீர்கள். உங்கள் போராட்டமானது மக்களின் பார்வையில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது? மக்கள் எவ்வாறு உங்களை ஏற்றுக்கொண்டனர்?

தோழர்:  சில பாட்டளி பிரச்னைகளுக்கு மக்கள் நேரடியாகவே என்னை அணுகியிருக்கின்றனர். கோல்பீல் தோட்டம், கேரித் தீவு தோட்டம் உள்ளிட்ட சில தோட்ட மக்களுக்காக நான் நேரடியாகவே களமிரங்கினேன். பெருவாரியாக நான் குழுவாரியாக இயங்கவில்லை. அவரவர் பிரச்னையை அவரவர் கையிலெடுக்க வேண்டும் என்று அவர்கள் மத்தியில் நின்று தூண்டுகோலாக இருப்பேன். என்னைத் தேடி வரும் மக்கள் பிரச்னைகளை நான் இவ்வாறுதான் கையாண்டிருக்கிறேன். சுயமாக அவரவர் பிரச்னையை அவரவர்தான் போராட வேண்டும் என்று சொல்லித்தர அப்போது யாருமில்லை. நான் அதைச் செய்தேன். 

யோகி: யாருடைய உதவியும் இல்லாமல் தோட்ட மக்களால் போராட முடியாததற்கு என்ன காரணம்? ஏன் அவர்களுக்கு யாருடைய கையோ அல்லது தோளோ தேவையாக இருக்கிறது?

தோழர் : ஆதிக்கத்தின் மீதிருந்த பயம்; இயலாமை போன்றவற்றை காரணமாக சொல்லலாம். அதோடு ஒரு தோட்டத்தில் பிரச்னை நடந்துக்கொண்டிருக்கும்போது பக்கத்து தோட்டத்தில் இருப்பவர்கள் ஆதரவுக்கு வரமாட்டார்கள். கள்ள மௌனத்தில் இருப்பார்கள். இந்த நிலையானது இன்றுவரை தொடர்ந்துக்கொண்டுதானே இருக்கிறது. காலம் மாறினாலும் தோட்ட மக்களின் மனநிலையிலும் வாழ்கை முறையிலும் எந்த மாற்றமும் இல்லை. அடிமைச் சமூகமாக இன்றும் இருக்கின்றனர். 

யோகி : இப்படி நீங்கள் சொல்வதற்கு வேறு ஏதும் அனுபவ ரீதியான காரணம் இருக்கிறதா?

தோழர் : நிறைய இருக்கிறது. குறிப்பாக புக்கிட் ஹாசான் தோட்டப் பிரச்னை. வெளியில் இருந்து வந்த எஸ்.என்.ராஜா, அங்கமுத்து போன்றவர்கள்தான் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து பாட்டாளிகளுக்காக தீவிரமாக கொண்டுச் சென்றார்கள். தோட்ட பாட்டாளிகள் அவர்களுக்கு பின்னாடிதான் நின்றுக்கொண்டிருந்தார்கள். நீங்கள் பழைய பத்திரிக்கை செய்திகளை மீள்பார்வைச் செய்தால் உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும். 

யோகி: தோட்ட மக்களுக்காக நீங்க முன்னெடுத்தப் போராட்டங்களுக்கு அதிகாரவர்கத்தின் எதிர்ப்பை அல்லது தாக்கத்தை எவ்வாறு சமாளித்தீர்கள்?

-எந்த நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு நான் காரியங்களில் இறங்குவதில்லை. 

யோகி: இதுவரை 7 புத்தகங்கள் எழுதியிருக்கும் நீங்கள், அடுத்தப் புத்தகம் ஏதேனும் வெளியிடும் எண்ணம் உண்டா?

தோழர் : நிச்சயமாக இருக்கிறது. அதற்கான களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மலேசியாவில் சாதியம் குறித்து ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். தோழர் யோகியும் மலேசிய சாதியம் குறித்த அனுபவங்களை பேசியிருக்கிறீர்கள். அதை நான் அறிவேன். மலேசிய பத்திரிகைகளில் வந்திருக்கும் சில விவரங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். மிக நீண்ட நாளாக போய்க் கொண்டிருக்கும் பணி இது. பலரின் முகத்திரையை இந்தப் புத்தகம் கிழிக்கும். 

முற்றும்.

செவ்வாய், 28 ஜூலை, 2026

சர்வதேச அளவில் போராட்டங்கள் கவனம் பெற வன்முறைதான் வேண்டுமா?

டெல்லியில் நடந்த நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் என்பது உலக மக்களின் கவனத்தை கடந்த வாரம்தான் பெரிய அளவில் பெற்றிருக்கிறது. மேலும், உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு  அதன் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் போராட்டத்திற்கான நியாயத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றன. 


எல்லாம் சரிதான். ஆனால், இந்தப் போராட்டமானது எப்போது தொடங்கப்பட்டது? சோனம் அவர்கள் இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு எத்தனை நாள் உண்ணா விரதம் இருந்தார்?  யார் இந்த சோனம் வாங்சுக்? இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய கரப்பான் பூச்சி கட்சி அல்லது அமைப்புக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக சொல்கிறார்களே அது உண்மைதானா? 



இந்தப் போராட்டம் முன்னெடுத்தது  தொடர்பான காரணத்தையும் மேல் குறிப்பிட்டிருக்கும் சில கேள்விகளுக்கான விடையையும் முதலில் காண்போம். பிறகு உலக மக்களும் உள்நாட்டு மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் விஷயத்தை அடுத்து பேசலாம். 


டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற NEET தேர்வு முறைகேடு எதிர்ப்பு மாணவர் போராட்டம் சுமார் 36 நாள்கள் நடைபெற்றன. கடந்த மே மாதம் NEET தேர்வை மாணவர்கள் எழுதினார்கள். சில நாள்களில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் பகிரப்பட்டது. NEET தேர்வுகு முன்பே வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதை அவர்கள் அதற்கு காரணம் கூறியிருந்தனர். எழுதிய தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற விஷயம் அறிவித்த வேளையில் அதன் அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும்  தாங்கி கொள்ள முடியாத மாணவர்கள் சுமார் 12 பேர் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த நீட் தேர்வு தொடர்பாக இதுவரை ஏறத்தாழ 22-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை எதைக் கொண்டு ஈடு செய்ய முடியும்? இது வெறும் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டமாக இல்லாமல், இளைஞர்களின் எதிர்காலம், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை, மற்றும் மோடி அரசின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மாபெரும் போராட்டமாக உருவாகியுள்ளது.  


சோனம் வாங்சுக்



சுற்றுச்சூழல் குறித்து ஆழ்ந்த அக்கரைக் கொண்ட சூழலியல் ஆர்வளர்களுக்கு சோனம் வாங்சுக் புதியவர் அல்ல. காஷ்மீரை ஒட்டியிருக்கும் லடக்கை சேர்ந்த இவர் செயற்கை நீர் ஊற்றுகளையும் செயற்கை பனிப்பாறைகளையும் கட்டுபிடித்து அங்குள்ள மக்களுக்கும் விவசாயத்திற்கும் ஆற்றியிருக்கும் சேவைக்காக உலகலவில் பாராட்டையும் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடைய சாதனைகளும் சேவைகளும் அது மட்டுமல்ல. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக SECMOL  என்ற அமைப்பை தொடங்கி வழிநடத்தி வருகிறார். மேலும்,  சோனம் ஒரு பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலராகவே அறியப்படுகிறார், தேர்தலுக்காகவும் அரசியல் லாபத்திற்கான வாதி அல்ல அவர். 



இவர் 2026 ஜூன் இறுதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவருக்கு இது முதல் முறை உண்ணாநிலை போராட்டம் அல்ல. 2024-ல் லடாக் சூழலியலைப் பாதுகாக்க 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து கல்வியில் சீர் திருத்ததைக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் இவர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார். அது அந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியதோடு  மிகுந்த கவனத்தையும் பெற்றது. தேசிய தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கோரியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியும் 26 நாள் உண்ணாவிரதம் இருந்தவரை கடந்த  ஜூலை 24  அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  அவருக்கு  மாண்புமிகு கரப்பான் பூச்சி (Honourable Cockroach) என்று Cockroach Janta Party – CJP புகழாரம் சூட்டினர். 



‘காக்ரோச் ஜன்தா பார்ட்டி’ (Cockroach Janta Party) 




இது பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். இதன் உருவாக்கமே கொஞ்சம் வினோதமானது, அது விஸ்வரூப வெற்றியடைந்தது. சுறுக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம். 


இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,  வேலை வாய்ப்பில்லாத சில இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை "கரப்பான் பூச்சிகள்" (cockroaches) என்று ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இந்த வார்த்தை இளைஞர்களிடையே  கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவில் படித்த இந்திய இளைஞரான அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்ற இளைஞர் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்றிணைந்தால் என்ன?" என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.


அந்த பதிவு வைரலாகி,  அதன் பின்னர் Cockroach Janta Party (CJP) என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவானது. கரப்பான் பூச்சியை எளிதில் அழிக்க முடியாது. கடினமான சூழலிலும் அது உயிர்வாழும். அதுபோல, புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களும் தொடர்ந்து போராடுவார்கள் என்பதற்கான அடையாளமாக அதைத் தேர்ந்தெடுத்தோம் என்று "கரப்பான் பூச்சி" என்ற சின்னத்தை  தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் விளக்கி இருக்கின்றனர்.



மிக குறுகிய நாள்களிலேயே மிகப்பெரிய இளைஞர் போராட்ட இயக்கமாக வளர்ந்து இன்று ஒரு மக்கள் இயக்கமாகவும் மாறி இருக்கிறது இந்த "கரப்பான் பூச்சிகள்" இயக்கம் . இந்த அமைப்புக்கு எதிராக இருப்பவர்கள் இதை ஒரு கோமாளி அல்லது நையாண்டி அமைப்பு என்று கேலி பேசவும் செய்கிறார்கள்.  ஆனால், இந்த மாணவர் போராட்டத்தை பொறுத்தவரை இவர்கள் மேற்கொண்ட இந்த முதல் போராட்டமே வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பி.ஜெ.பி கட்சியை பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில்  மக்கள் பிரச்னைக்கு பொறுப்பெடுத்து எந்த அமைச்சரும் பதவி விலகி வரலாறு இல்லை. ஆனால், இந்த முறை மாணவர்கள் கொடுத்த நெருக்கடியால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருக்கிறார். இதுவே தேசிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 


டெல்லியில் நடந்த போரட்டங்களான  நிர்பயாவுக்கு நீதி கோரி நடந்த  அறவழிப் போராட்டம் (2012), மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான  இந்திய விவசாயிகள் போராட்டம் (2020) ஆகியவை என் கவனத்தை ஈர்த்த மாபெரும் போராட்டங்களாகும். காரணம் இந்தப் போராட்டங்கள் தொடங்கிய காலத்திலேயே உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்று, உலக மக்களின் கவனத்தை பெற்றது. அதன் காரணத்தினாலேயே இந்திய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. 




ஆனால், தற்போதைய இந்த மாணவர்கள் போராட்டம் கிட்டதட்ட 38 நாள்கள் நீண்டது. சோனாம் அவர்களின் உண்ணாநிலை போராட்டம் 26 நாள்கள் நீண்டது. அதுவரை இந்த விவகாரம் ஒரு உப்பு சப்பில்லாத விஷயமாகவே இருந்திருக்கிறது.   மாணவர்கள் மீதும், போராட்டவாதிகள் மீதும் போலீஸ் கண்மூடித் தனமாக அடிதடி நடத்திய பிறகுதான், உள்ளூர் மக்களுக்கும் உலக மக்களுக்கும் இந்தப் போராட்டம் போராட்டமாகவே தெரிந்திருக்கிறது.  அதன் பிறகே கண்டனங்கள் வழுத்தன. எனக்கு எழும் கேள்வி என்னவென்றால் ஒரு போராட்டம் கவனம் பெற அடிதடியோ, உயிர் சேதமோ, வன்முறையோ இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கத் தான் வேண்டுமா? அப்போதுதான் அது கவனம் பெற வேண்டுமா?


அப்படி பார்த்தாலும் இற்போதைய இந்த  நீட் தேர்வு முறைகேட்டில் மனம் உடைந்து 12 உயிர்கள் தற்கொலை செய்து கொண்டனவே? ஏன் உலக மக்களின் இதயங்களை அது உலுக்கவில்லை? அனைத்தையும் பொறுமையாக வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு மனித மனங்கள் இறுகி விட்டனவா? அல்லது உலக கோப்பையும் ஜனநாயகன் திரைப்படமும் மாதிரியான உதிரி சம்பவங்கள் போராட்டத்தைவிட முக்கியத்துவம் பெற்றனவா? 



இந்தப் நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்தில் நான் கவனித்த மிக முக்கியமான காட்சிகள் பெண்கள் தொடர்பானவை. போலீஸ்காரர்கள் வன்முறையை நிகழ்த்தியபோதும், மிரட்டியபோதும் அவர்கள் கொஞ்சம்கூட பின் வாங்காமல் களத்தில் நிற்கிறார்கள். ஒரு மாணவி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு பெண், போலீஸ் லாரியின் முன் துணிகரமான நின்று கைது செய்தவர்களை விடுவிக்க கோருகிறார், அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்;

இன்னொரு பெண் சக மாணவர்கள் மீது லத்தியடி விழாமல் தடுத்து நிற்கிறார்; பெண்கள் பலவீனமானவர்கள் என்றும் பெண்களும் போதை பொருள்தான் என்றும் ஏலனம் செய்பவர்களுக்கு இந்தக் காட்சிகள் வேறொரு மாற்று புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

இறுதியாக எந்தப் போராட்டத்திற்கும் அந்தந்த நேரத்தில் ஞாயம் செய்ய வேண்டும், நமது வசதியை பொறுத்து ஆதரவு அளிப்பது அது போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது அல்ல.  விளம்பரம் தேடிக் கொள்வது, அவ்வளவே...


புதன், 24 ஜூன், 2026

கூகை நிறுவனத்தின் புத்தகங்கள் அன்பளிப்பு



தனியார் பல்கலைக்கழகத்திற்கு புத்தகங்கள்  அன்பளிப்பு செய்யப்பட்டன

புத்தகங்கள் அறிவின் பெரும் செல்வமாகும். வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், கூகை நிறுவனம் தொடர்ந்து புத்தகங்களை மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்து வருகிறது.  

கடந்த மாதம் ஜொகூர் மாநிலத்தில் நடைபெற்ற மலாயா கணபதி மற்றும் வீரசேனன் விழாவில் மாணவர்கள் கணிசமாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட பள்ளிகளுக்கு கூகை நிறுவனத்தின் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டதோடு, எல்லா மாணவர்களும் பயன் பெரும் வகையில் பள்ளி நூல்நிலையத்தில் அப்புத்தகங்களை சேர்க்கும்படி கூறியிருந்தோம்.

இந்நிலையில் Kolej Universiti Yayasan பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் கல்லூரியின் நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை என்ற தகவலை தெரிவித்திருந்தனர். கல்லூரியின் தமிழ் மொழிக் கழகத்தில் தலைவரான சகோதரர் திவாகர், அது குறித்து மேலும் தகவல்களை வழங்கினார். கல்லூரியில் தமிழ்ப் புத்தகங்கள் வைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள கூகை நிறுவனம் பரிந்துரை செய்தது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 100 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்குகிறோம் என்று கூறியிருந்தோம்.

மாணவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெகுமதிதான் இந்தப் புத்தகப் பரிசு. கல்லூரி நிர்வாகமும் அந்த அன்பளிப்பை மதித்து புத்தகங்களை கையளிக்கும் நாளை விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். 


இந்த விழாவில் பங்கெடுத்த கல்லூரியின் இயக்குனர் டாக்டர் நோர் ஐஸ்ஷா, கூகை நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, மேலும் இந்திய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை கூகை நிறுவனத்தோடு இணைந்து செய்வதற்கு ஆர்வம் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேராக் மாநில எழுத்தாளர் சங்க தலைவர் தோழர் சிவா லெனின், கூகை நிறுவனத்தின் வடிவமைப்பாளரான ஓவியர் சந்துரு, காரைநகர் நட்புறவு மையத்தைச் சேர்ந்த சகோதரர் பிரவீன் ஆகியோர் இந்த விழாவின் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்த KUYPJ தமிழ் கழகம் மற்றும் மாணவர் நலப் பிரிவு (HEP) ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள்.

வெள்ளி, 6 மார்ச், 2026

“பெண்கள் நன்னாள்: கொண்டாட்டமல்ல… இன்னும் முடியாத போராட்டம்!

 இதோ வந்துவிட்டது இவ்வாண்டுக்கான பெண்கள் நன்னாள்.



என் சிந்தனையில் இருந்து கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளாக இந்த நாளைக் குறித்து நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இந்நாளைப் பற்றி ஏறத்தாழ 5–6 பதிவுகள் எழுதியிருப்பேன். அந்த எழுத்துகளில் நான் தொடர்ச்சியாக எழுப்பும் சில கேள்விகள் உள்ளன.

“பெண்களுக்கு இன்னும் ஏன் பெண்கள் தினம்? அவர்களுக்கு என்ன குறை இருக்கிறது?” என்று கேட்கும் ஆண்களுக்கு, என் பதிவுகளில் பொதுவான பதிலை அளித்திருக்கிறேன். அதேபோல், “பெண்கள் நாள் ஏன் அவசியம்?” என்று தெளிவில்லாமல் கேட்கும் பெண்களுக்கும், அந்த நாள் எப்படி உருவானது, ஏன் அது தேவையானது என்பதையும் என் எழுத்துகளின் மூலம் விளக்கியிருக்கிறேன்.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுவது சில நேரங்களில் அலுப்பைத் தரலாம். எனினும், ஒரு கொண்டாட்டத்தின் தேவையை ஏற்கவோ மறுக்கவோ ஒரு தனிநபரின் நிலைப்பாட்டில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே என் கருத்து. அதிலும், நாட்டில் அறியப்படும் எழுத்தாளராக இந்த நாளில் எனது நிலைப்பாட்டைப் பதிவு செய்வது ஒரு கடமை என்றும் நான் நினைக்கிறேன்.

பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும் ஒரு சாதாரண நாள் அல்ல. அது விடுதலைக்காகவும் சம உரிமைக்காகவும் போராடிய பெண்களின் குருதி மற்றும் உயிர்ப்பலியின் நினைவுநாள். இன்று நாம் “பெண்கள் தினம்” என்று கொண்டாடும் இந்த நாள், எண்ணற்ற பெண்களின் போராட்டங்களின் சாட்சியாக உருவானது.

அதன் வரலாறோ அதன் தாத்பரியமோ தெரியாமல் சில பெண்கள் அந்த நாளை ஒரு சாதாரண கொண்டாட்ட நாளாகவே அனுபவிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அதுவும் தவறு அல்ல. நாள் முழுவதும் குடும்பப் பொறுப்புகள், வேலைச்சுமைகள், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றுக்குள் வாழும் பெண்களுக்கு ஒரு நாள் சற்றே சுவாசிக்கவும் தங்களைத் தாங்களே கொண்டாடிக்கொள்ளவும் தோன்றினால் அது அவர்களின் உரிமை.

ஆனால் உண்மையை அறிந்த பெண்களே சில நேரங்களில் அந்த உண்மையை மறந்துபோய் நடப்பது தான் சங்கடமாக இருக்கிறது. குறிப்பாக, பொது வெளியில் அறியப்படும் பெண்களுக்கு சில சமூகப் பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

எங்கோ ஓர் இடத்தில் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை நீங்கள் இங்கிருந்து கண்டிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உலகில் எங்காவது ஒரு பெண் துன்பப்படும்போது அதில் நீங்கள் கட்டாயமாக பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் கூறப்போவதில்லை. அப்படி நீங்கள் செய்தாலும் அது அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. யாராவது அப்படிச் சொன்னாலும் அதற்கு நீங்கள் எதிர்வினையாற்றத் தேவையில்லை. பேசுபவர்கள் பேசுவதைத் தவிர நமக்காக வேறு எதையும் செய்யப் போவதில்லை.

ஆனால், நமது நாட்டிலேயே நாம் எதிர்வினையாற்றக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் நம்முடைய சமூகத்தில் நடக்கும் அநீதிகளைப் பற்றிக் கூட நாம் ஏன் பேசுவதில்லை?

ஒரு பெண்ணுக்கோ, பெண் குழந்தைக்கோ பாலியல் வன்புணர்வு நேர்ந்துவிட்டால் தமிழ் ஊடகங்கள் கொஞ்சம்கூட கூச்சமின்றி பெண் கற்பழிக்கப்பட்டாள்; சொந்த தந்தையே கற்பழித்தார், சகோதரனே கற்பழித்தார் என எழுதுகிறார்கள். இப்படி சொல்வதுகூட பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பலமுறை கூறியாகிவிட்டது. ஒரு பெண்ணின் கற்பை அழிக்க முடியுமா? அவளுக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ ஊடகங்கள் அவளின் கற்பை அழிப்பதில் தீவிரம் காட்டுவது ஏன் என புரியவில்லை. இதை களப்பெண்கள், பெண்கள் அமைப்புகள் கேள்வி கேட்க வேண்டாமா?

மேலும், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் — குறிப்பாக குடும்ப வன்முறை முதல் பாலியல் பலாத்காரம் வரை — இன்னமும் முழுமையான பாதுகாப்பை அளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா என்ற கேள்வி இருக்கிறது. இதை யார் கேட்க வேண்டும்? நமக்காக நாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்?

கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலில் 6 முதல் 12 வயதுக்குள் உள்ள 150 மாணவிகள் உயிரிழந்ததாகவும், மேலும் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த உயிர்கள் பற்றிய வேதனை எத்தனை பேரின் மனசாட்சியைக் குலைத்தது? இதைப் பற்றி யார் பேசினார்கள்? பன்னாட்டு ஊடகங்கள் அது ஒரு சாதாரண செய்தியாகவே கடந்து சென்றுவிட்டது என்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அல்லது நமது நாட்டில் யாராவது அந்த உயிர்களுக்காக ஞாயம் பேசினார்களா?

 


பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும் ஒரு விழாவாக மட்டும் மாறிவிடக் கூடாது. அது ஒரு நினைவூட்டல் — பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காக, பாதுகாப்பிற்காக, மரியாதைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் நினைவூட்டும் நாள். இந்த நாள் ஒரு கொண்டாட்டமாக இருப்பதற்கும் முன், அது ஒரு கேள்வியாகவும் ஒரு சிந்தனையாகவும் நமக்குள் எழ வேண்டும். அந்த சிந்தனை தான் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முதல் படி.

இப்போது சொல்லுங்கள், பெண்கள் நன்னாள் கொண்டாட்டத்தை நாம் எப்படி கொண்டாட வேண்டும், சகோதரிகளே…?

-யோகி