கத்னா குறித்த விவரங்களைத் தெரிந்துக்கொள்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு நண்பருடனான உரையாடல் மெல்ல மடைமாறி நாவிதர்கள் பக்கம் சென்றது. இஸ்லாமிய நண்பரான அவர், அவர்கள் நாட்டில் இஸ்லாமிய சமூகத்திடம் இப்போதும் நடைமுறையில் இருக்கும் நாவிதர் பணிகள் குறித்து விவரிக்கும்போது அந்நிய நாட்டில் வசிக்கும் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது..
நாவிதர்கள் முகச்சவரம் மற்றும் சிகை அலங்காரங்கள் செய்பவர்கள் என்பதைத் தாண்டி, அந்தரங்க உறுப்புகளில் வளரும் உரோமங்களையும் அவர்கள் சவரம் செய்வார்கள். அதற்குத் தனித்தனியே கூலி கொடுத்துவிடுவோம்; அவர்களுக்கு அது கூடுதல் வருமானம்தானே என்ற நண்பர், தற்போதைய இளைய தலைமுறையினர் யாரும் அக்காலத்து ஆட்களைப் போல நாவிதம் செய்வதில்லை என்றும், இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பழைய மனிதர்களே திருமணம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் வீட்டிற்கே வந்து நாவிதம் செய்கிறார்கள் என்றும் கூறினார். மிகச் சாதாரணமாக அவர் இதைச் சொன்னாலும், சங்கடம் மற்றும் ஒரு வகை தடுமாற்றம் அவர் சொல்லும்போது உணரமுடிந்தது.
"நாவித வம்சாவழிதானே வழிவழியாக அத்தொழிலைச் செய்கிறார்கள் " என்று நான் கேட்டதற்கு, ஆம் என்றார்.
"அவர்களோடு சமூக உறவு எப்படி இருக்கிறது? சமமாக நடத்தப்படாததும் தாழ்த்தப்பட்ட சமூகமாகத்தானே அவர்கள் பொதுபுத்தியில் பார்க்கப்படுகிறார்கள்? பொதுவெளியில் எவ்வாறு நாவிதர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்பது என்வரையில் இரண்டாவது விவாதமாகவே வைக்கிறேன். முதலாவதாக அடுத்தவரின் அந்தரங்க உறுப்பு மற்றும் அக்குள்களில் சுவரம் செய்யும்போது ஏற்படும் ஒவ்வாமை, கூச்சம் அருவருப்பு அவருக்கு இல்லாமல் போகுமா? அதை எப்படி நாவிதர்கள் எதிர்கொள்கிறர்கள்? இதைக் கேட்கும் எனக்கே முகச்சுழிப்பு ஏற்படும்போது இந்தக் காலத்திலும் அதை தொழிலாக நாவிதர்கள் செய்கிறார்கள்?" என்ற நிதர்சன உண்மை எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று நண்பரிடம் கேட்டேன்.
“அருவருப்பு இருக்கலாம்தான். நானும் அதை மறுக்கவில்லை. ஆனாலும், தொழிலாக செய்பவர்களின் வயிற்றுப்பிழைப்பையும் நினைத்துப்பாருங்கள்; இதெல்லாம் உங்களுக்கு புரியாது" என்றார்.
என் நண்பருக்கு அது தொடர்பாக, என் உணர்வுகளை விளக்குவதற்கு, வார்த்தைகள் கை கொடுக்கவில்லை. வார்த்தைகளில் வழுவில்லாததால் நான் அந்த விவாதத்தைத் தொடரவில்லை. ஆனால், அன்று வசப்படாமல் போன வார்த்தைகள் ‘சுளுந்தீ’ நாவலை வாசிக்கும்போது எனக்கு கிடைத்தது. மிக எளிமையாகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும், வலி நிறைந்த வார்த்தைகளால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறன.
‘சுளுந்தீ’
இரா.முத்துநாகு எழுதி ஆதி பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியீடு செய்திருக்கிறார்கள். மொத்தம் 472 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை முதல் 150 பக்கங்களை கடக்க எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஓரிரு வரிகளில் பல வரலாற்றுத் தகவல் குறிப்புகள் அதிகப்படியாக இருந்ததோ என்னவோ அல்லது என் ரசனையில்தான் பிரச்னையா என்று என்னால் அறிய முடியவில்லை. இருந்தபோதும் குறிப்புகளாக அதில் குவிந்திருக்கும் தகவல்களும் எனக்கு தேவையாக இருந்தபடியால் நாவலை வாசித்து முடித்துவிட தீர்மானித்தேன். ஆனால், 150 பக்கங்களை கடந்தப் பிறகு தங்குத் தடையின்றி நாவல் நேரடியாகவே கதைக்குள் நுழைகிறது. அல்லது நான் கதைக்குள் நுழைந்தேன் என சொல்லலாம். முதலில் எனக்கு இந்த நாவலில் இரண்டு முக்கியமான அம்சங்கள் கவர்ந்ததாக இருக்கிறது.
முதலாவதாக
நிறைய வரலாற்றுத் தகவல்கள் தொடத்திலிருந்தே அடுக்கடுக்காக வாசிக்க நேர்ந்ததால், நாவல் எதைப்பற்றி பேச வருகிறது என்பதைத்தாண்டி அதைத் தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் குறைவது மாதிரியான எண்ணம் எழத்தொடங்கியது. இது ஒரு குறையாக எனக்குள் தோன்றிய விஷயம் என்றாலும் தகவல்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளை சேகரிப்பவளாக எனக்கு அவை முக்கியமாகவும் வேண்டியதாகவும் இருக்கின்றன. எனவே அந்நாவலை வாசிப்பிலிருந்து ஓரங்கட்டக்கூடாது என்பதில் தீவிரம் எனக்குள் ஏற்பட்டது. வட்டாரச்சொற்களும் சிலேடை பேச்சுகளும் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர். நாவலின் பல தகவல்களை ரொம்ப முக்கியமாக பார்க்கிறேன். அதில் சிலவற்றை குறிப்பிடுவது வாசகர்கள் இந்த நாவலை வாசிப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தலாம்.
மாற்று பாலினத்தவர்களை பல பெயர்களில் நாம் அழைக்கிறோம். இந்தப் புத்தகத்தில் இருபிறவிகள் என்று அழைத்திருக்கிறார்கள். மன்னர் மற்றும் அரண்மனை காலத்துக் கதையை பேசும் இந்தப் புத்தகத்தில் இருப்பிறவிகளின் பணி எத்தனை அவசியமாக இருந்திருக்கிறது என்றும் எதனால் அவர்கள் அவசியமாகக் கருதப்பட்டார்கள் என்றும் இன்னொரு கோணத்தில் இதுவும் அடிமைத்தனம்தானே என்றும் நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. பழங்குடி சமூகத்தினர், குலநீக்கம் செய்யப்பட்ட ஜனங்கள், அதிகார வர்கத்தைச் சேர்ந்த ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள், கோயில் பூசாரி என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் இந்த நாவல் சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் ஒருசில வரிகளிலும் பேசிச்செல்கிறது.
சலவைக்கு எடுக்கும் துணிகளை ரகசியக்குறிகளை வண்ணார் இடுவதும் அத்துணிகளை வெள்ளாவியில் அடுக்கும் முறையில் இருக்கும் ஜாதிய அடுக்குகளும் அதன் காரணங்களும் போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல்கள்தான் என்றாலும் அவை நம் தேடலுக்கான இன்னொரு கதவை திறந்துவிடுகின்றன. பண்டுவர்களின் தொழிற் பத்தியும், பின் அந்த ரகசியத்தின் குட்டு உடைப்படுகின்ற இடமும் சுவாரஸ்யமாக கூறப்பட்டிருக்கிறது. பண்டுவம் குறித்துப் சித்தரும் சித்தரின் சீடரும் நாவிதருமான ராமனும் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
மலேசிய சித்த வைத்தியரிடம் ஓர் அனுபவத்திற்காக நான் கிட்டதட்ட 5 மாதங்கள் வேலை செய்தேன். அனுபவம் எனக்கு கிடைத்ததா என்றால் சித்த மருத்துவரின் குடும்ப ரகசியத்திற்குள் பண்டுவமும் அடைக்காக்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு என்னால் ஒரு பதிவுகூட எழுத முடியாது. ஆனால், சில கேள்விகளில் எனக்கு கிடைத்த பதில்கள் மற்றும் அங்கிருந்த சித்தவைத்திய புத்தகங்களில் வாசித்த கிடைத்த அனுபவங்கள் சில இந்த வாசிப்புக்கு எனக்கு கைகொடுத்தன. மிகச் சரியாக பதிவுச் செய்யபடிருக்கும் சில மருத்துவக் குறிப்புகளின் பின்னனியில் இருக்கும் நாவலாசிரியரின் குறிப்பை வாசிக்கும்போது அவர் பாரம்பரியப் பண்டுவக் குடும்ப பிண்ணனியில் வந்தவர் என தகவல் கிடைக்கிறது. அது வாசிப்புச் சுவாரஸ்யத்தை நமக்கு மேலும் கூட்டுகிறது.
சித்தர் ஏன் நாவிதன் ஒருவனுக்கு பண்டுவம் (வைத்தியம்) குறித்து சொல்லிக்கொடுக்கிறார்? சித்தர் காற்றோடு கலந்துதான் ஜீவ சமாதி அடைகிறாரா? அல்லது அதிலும் ஏதாவது மர்மம் இருக்கிறதா என்பதை வாசகர்கள்தான் தேட வேண்டும். சில இடங்களில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு வரத்தான் செய்கிறது. அது எந்த இடங்கள்? அதையும் நான் வாசகர்களின் வாசிப்புக்கே விட்டு விடுகிறேன்.
புளியமர நடவு, புளியங்கொட்டைகளை பஞ்சத்தில் எப்படி ஓர் உணவாக ஏழைகள் பசியாற்றிக்கொண்டார்கள், அதையும் பிடிங்கிக்கொண்டு போகும் ஆதிக்க வர்கத்தினர் என பஞ்ச காலத்துச் சரித்திரத்தையும் நமக்கு அறிய தந்திருக்கிறார் நாவலாசிரியர். தவிர சமண கழுவேற்றப் பதிவும் ஒரு குறிப்பாக பேசிச் செல்கிறது நாவல்.
2015 ஆம் ஆண்டு பிணம் தழுவுதல் குறித்து எழுதிய கட்டுரை, என்னுடைய அகப்பக்கத்தில் அதிகமானவர்கள் வாசித்த கட்டுரைகளில் ஒன்று. பிணம் தழுவுதல் குறித்த அந்தக் கட்டுரை இன்னும் முழுமை பெறாமலே இருக்கிறது. அதற்குக் காரணம் அதுதொடர்பாக கிடைத்திருக்கும் தகவல்கள் போதாமை மற்றும் தன்னை முடித்துக்கொள்ள அந்தக் கட்டுரை விரும்பவில்லை என்றும் சொல்லலாம். சுளுந்தீ நாவலில் பிணம் தழுபவரின் பிரத்தியேக பெயர் பதிவு செய்யப்படிருக்கிறது. அது என்ன பெயர் என்பதை நாவலை வாசித்தால் தெரிந்துக்கொள்ளலாம்.
(பிணம் தழுவுதல் குறித்தான என் கட்டுரையை வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2016/05/blog-post_18.html சொடுக்கவும்.)
இரண்டாவது...
ஒரு நாவிதனின் வாழ்க்கை குறித்த நமது புரிதல் இதுவரை என்னவாக இருந்திருக்கிறது என்பதை கேள்வி கேட்கிறது இந்த நாவல். நாவிதனாகவும் பின் பண்டுவனாகவும் அவதாரம் எடுக்கும் ராமனை பண்டுவனாக அவனைச் சுற்றியிருக்கும் சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? குதிரையில் ஏறிப்போகும் அளவுக்கு ராமன் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டாலும், ஆதிக்க சாதியினர் மத்தியில், சிரம் தாழ்த்தி, கைக்கட்டி, சாமி என கும்பிட்டே நாவிதமும் மற்ற வேலைகளும் அவர் செய்கிறார். அது தன்னடக்கத்தால் மட்டுமல்ல அல்ல என்பது இந்தக் கதையை உள்வாங்கியவர்களால் அறிய முடியும்.
நாவிதனின் பெண் பாலரை மருத்துவச்சி என்று அழைக்கிறார்கள். மருத்துவச்சி பெண்களுக்காக செய்யும் மயிர் நீக்கம் குறித்தும், பிரசவம் பார்ப்பதைக் குறித்தும் இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. நாவிதர்கள் வெறும் நாவிதர் தொழில் செய்பவர்களாக இல்லாமல் வண்ணானாகவும், பண்டுவனாகவும், ராஜ விசுவாசியாகவும் பலதொழிகள் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
அந்த விசுவாசத்தில் அரண்மனையார் மீது நம்பிக்கை வைத்து வீரனாக வளர்கப்பட்ட தனது மகன் மாடனை, பரம்பரை தொழிலுக்கு அனுப்பாமல் அரண்மனை போர் வீரராக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிபடுத்துகிறார். அது தாழ்த்தப்பட்டவனுக்கு மீறிய ஆசை அரண்மைனையார் சொல்லிவிட மனம் உடைந்த ராமன் தொடர்ந்து எப்படி கதையை நகர்த்திக்கொண்டு போகிறார் என்பதை வாசகர்கள் வாசித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
நாவல் ராமனிடம் ஆரம்பித்து அவர் மகன் மாடனோடு முடிவடைகிறது. இதற்கிடையில் மாடன்மீது ஒருதலையாக காதலிக்கும் அனந்தவல்லியின் காதல் அழகாகவே இருக்கிறது. மாடனா – ராமனா என கேட்டால் எனக்கு ராமனே பிடித்தமானவனாக இருக்கிறார். தனது மனைவி வல்லத்தாரையை அவர் குதிரையில் அமர்த்தி, வெகுநாட்களாக காட்ட வேண்டும் என்று நினைத்திருந்த இடத்திற்கு அழைத்துப்போய் அவளுக்குக் காட்டும்போதும், அவளுக்கு ஆசையாக சுங்குடிச் சேலையை வாங்கிக்கொடுப்பதும், அதை அவள் பேரானந்தத்துடன் கையில் வைத்திருக்கும்போதுகூட பெரிய இடத்துப் பெண்கள் கட்டும் சேலையை எப்படி தான் கட்டிக்கொள்வது என்று ராமனிடம் கேட்பதும் மிக அழகான காட்சியாக நம் மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்க முடிகிறது.
ஆதிக்கப்பெண்கள் கட்டும் சேலையை கட்டினால் பிரச்னை வருமே என பயமிருந்தாலும், தன்னிடம் இப்படி ஒரு சேலை இப்போது இருக்கிறதே என்று மெலிதாக அவளிடம் எட்டிப்பார்த்த கர்வமும் மிக எதார்த்த அழகு. அந்தச் சுங்குடிச் சேலையை அவளால் கட்டிப்பார்க்க முடியாமல் போவது மட்டுமல்ல அன்றைய தினமே கண் பார்வையையும் இழந்து, தனது கணவனையும் இழக்கிறாள் வல்லத்தாரை. அப்போதிலிருந்து மருத்துவச்சியான அவள் நமது பரிதாபத்தை முழுமையாக பெற்றுவிடுகிறாள். ஆனால், யாருக்கும் அடங்காத மாடன், பல இடங்களில் நமது பொருமையை சொதித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
இறுதியாக...
கடந்த மார்ச் மாதம் நான் வால்பாறையொட்டிய ஒரு வனத்திற்கு போயிருந்தேன். அங்கே வசிக்கும் பழங்குடி ஒருவர் குங்குலிய மரத்தைக் காட்டி இதுதான் சாம்பிராணி செய்யக்கூடிய குங்குலியம் என்று மரத்தில் கெட்டியாக இறுகிப்போயிருந்த பிசின்மாதிரியான ஒன்றை பிடுங்கிக் கொடுத்தார். இதுதான் அசல் குங்குலியம். கடையில் கிடைப்பது ரசாயனம் மற்றும் மணம் கலந்து உங்களுக்கு கிடைக்கிறது. இது உங்களுக்காக என்று என்னிடம் கொடுத்தார். முகரும்போது எந்த மணமும் இல்லை. என்றாலும், அதன் தேவை வனத்திலுள்ளவர்களுக்கு எத்தனை தேவையென அனுமானிக்க முடிந்தது. கிணறு வெட்டவும், பாறைகளை தகர்க்கவும் தேவையென்றால் மனிதர்களைப் போட்டுத்தள்ளவும் வெடிமருத்துக்கு குங்குலியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நமக்கு ஏதோ ஓர் இடத்தில் பரீச்சியமாக இருக்கிற வார்த்தைகளும் பொருள்களும் நாவலாக அவதாரம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு சுளுந்தீ ஒரு எடுத்துக்காட்டு.
சுளுந்தீ என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அதுவும் நமக்கு பரீட்சயமான ஒன்றுதான். நாவலை வாசித்தால் அதுவும் தெரிந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக