சனி, 11 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 45 தலையோடு படமெடுத்திருக்கும் வாசுகிப்பாம்பை பூத கணங்கள் இழுக்கும் பிரமாண்ட வாயிலுக்கு  இடதுப் பக்கத்தில் மரங்களும் புதர்களும் மறைத்திருக்க  செங்கட்டடம் ஒன்று மக்களின் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறது.


                                                                  Baksei Chamkrong


சூரியனின் வெண் கதிர்கள் அச்செங்கட்டிடம் மேல் விழ, அது யட்சியின் பார்வையிலும் விழுந்து தொலைத்தது. அடங்காத என்கால்களும் எப்போதும் காணக்கிடைக்காததையே தேடும் என் கண்களும் புதிய உற்சாகத்துடன் அத்திசையை நோக்கி ஓட வைத்தன. சாரதி சொன்னார், உங்களின் பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் எல்லாக் கோயில்களையும் காண வேண்டும் என்றால், நேரத்தை விரையமாக்கக்கூடாது. அங்கே போவது நேர விரயம் என்றார்.
நேரத்தை விரையமாக்கவில்லை. நான் தேடும் ஏதோ ஒன்று அங்கு இருக்கலாம். அதிக நேரத்தை எடுக்க மாட்டேன். வந்துவிடுகிறேன் என விரைந்தேன். அது அழகிய  Baksei Chamkrong கோயில்.  ‘இறக்கைகளின் கீழ் தங்கும் பறவை’  ( The Bird Who Shelters Under Its Wings") என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு சுட்டுவதற்கான சரியான காரணத்தை என்னால் இப்போதும்கூட கண்டுக்கொள்ள முடியவில்லை. 
அழிக்கும் கடவுளான சிவனுக்கு கட்டப்பட்டது இக்கோயில் என சொல்கிறார்கள். மன்னர் முதலாம் ஹர்ஷவர்மன் தன் மகன் யசோவர்மனுக்கு கட்டி முடிக்காத இக்கோயிலை அர்ப்பணித்தார் என்றும் அதன்பிறகு வந்த  இரண்டாம் ராஜேந்திரவர்மன்தான்  கட்டுமானத்தை நிறைவு செய்தார் என்றும் கூறுகிறார்கள். தற்போது புத்தக் கோயிலாக Baksei Chamkrong மாறி  இருக்கிறது.  நான்கு திசைகளில் நான்கு வாயில்கள் மிகவும் உயரமாகவும் குறுகிய  படிகளை அமைத்து கட்டப்பட்டிருக்கிறது. படிகள் பாதுக்காப்பில்லாத அளவுக்கு மிகவும் சிறியதாகவும் சுவரை ஒட்டினாற்போலும் ஏறுவதற்கு முழுகவனமுடன் இருக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் சறுக்கினால் அவ்வளவுதான்.  கிடைக்கப்போகும் அடியிலிருந்து தப்ப வழியில்லை.படிகள் எதற்காக இப்படி பாதுகாப்பில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு நான் தேடியதில் கிடைத்த பதில் கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது. என்னதான் நாம் இந்தக் கட்டிட கட்டுமானங்களை இறைவனை வணங்கும் இடம் எனக் கூறினாலும் அவை சம்மந்தப்பட்ட மன்னர்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்ட கோயில்கள் எனவும், அந்தக் காலக்கட்டத்தில் நாட்டு மக்களிடம் மன்னர்கள், அவர்கள் கடவுளின் அவதாரம் என்றும் அவர்களைத்தான் வணக்க வேண்டும் என்றும் சர்வதிகாரம் நடத்தியிருக்கின்றனர் என்றும் பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன. இத்தனை உயரத்தில் அவர்கள் கர்பக்கிரகத்தை அமைத்ததற்கும் பாதுகாப்பில்லாத படியை அமைத்ததற்கும் தன்னை நாடி வரும் மக்கள் மிக எளிமையாக தன்னை வந்தடைய கூடாது என்பதற்காகவும் அதோடு அவர்கள் இத்தனை சிரமத்தை தாண்டி வரும்போது நிச்சயமாக சோர்ந்து தலைகவிழ்ந்த நிலையில்தான் தம்மை தரிசிப்பர் என்றும் இதனால் தம்முன் ஒருவரும் தலைரிமிர்ந்து நிற்க வழியில்லை என்பதற்காகவும், பக்காவாக பிளான் செய்து இந்த மன்னர்கள் கட்டிடங்களையும் கோபுரங்களையும் கட்டியிருக்கின்றனர். சில கோயில்களில்  குனிந்து உள்செல்லக்கூடிய வாசல் இருப்பதற்கு காரணமும் மேற்கூறிய காரணங்களில் ஒன்றுதான்.சிவந்த செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டிருக்கும் அக்கோயிலில் புடைப்போவியங்கள் என்று சொல்வதற்கு ஏதுமில்லை. என்றாலும் ஒரு பெண்ணைப்போன்று காட்சியளிக்கும் தோற்றம்கொண்ட சுவர்ச் சித்திரம் நாற்புறமும் இருக்கிறது. அக்கோயிலுக்கு ஆட்கள் வருவது குறைவுதான் என்றாலும்,அதன் சுற்றுப்புறம் மிக நேர்த்தியாக பராமறிக்கப்பட்டிருக்கிறது. நுழைவாயிலில்  நின்றிருக்கும்  ஒற்றைச் சிங்கமும் அதனை அடுத்து இருக்கும் லிங்கத்தின் ஆவுடையும் பாதுகாப்பற்ற நிலையில் மழையிலும்  வெயிலிலும்  வாசம் செய்கின்றன.  என்றாலும் நம் கவனத்தை அவை ஈர்க்காமல் இல்லை.

குறிப்பாக கேமர் கலைச்சிற்பத்தில் இருக்கிற சிங்கம் சீன வடிவமைப்பில் இருக்கிறது. அங்கோர் திறந்த வெளி அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்து கோயில்களும் சூரியனோடு ஒப்பிடுகையில் மிகவும் விஷேசமாகவும் அர்ப்புதமாகவும் இருக்கிறது. சூரியன் உதிக்கும் நேரத்தில் இந்தக் கோயிலை காணும்போது மின்னுகிறது. ஆதனால்தான் தங்கச் சிவன் கோயில் என அதற்கு மற்றுமொரு பெயர் வந்ததோ என தெரியவில்லை. 

முதன்மை வாயிலின் முகப்பில்  இந்திரன் அவனின் வாகனமான ஐராவதம் (வெள்ளையானை) மீது ஏறி வரும் காட்சியை வைத்திருக்கிறார்கள். மூன்று தலை யானைமீது சவாரி வருவதைப் போன்ற காட்சியா அல்லது ஒற்றையானை சவாரியில் பக்கவாட்டில் அலங்காரத்திற்காக அந்த இருயானைகள் செதுக்கப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பம் இருக்கிறது. மேலும்,  சிவன் கோயிலாக இருந்தால் இந்திரனை அங்கு வைக்க வேண்டிய சிந்தனை ஏன் என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக விக்கிப்பீடியாவில் எனக்கு கிடைத்த தகவல் இது. 


ஐராவதத்தில் இந்திரன்

இந்து மதத்தில் வெள்ளை யானை இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது. இந்திரனின் வெள்ளை யானையை ஐராவதம் என அழைப்பர் .பௌத்த மதத்தில் கூட கௌதம புத்தர் வெள்ளை யானையின் முதுகில் ஏறி மாயாதேவியின் கருவில் சென்றதாக ஒரு நம்பிக்கை உண்டு. எனவே புத்த மதத்தினர் வெள்ளை யானையை கடவுளாக கருதுகின்றனர். 

நான் மிகவும் சிரமத்திற்கிடையில் படிகளில் ஏறி முதற் அடுக்கை அடைந்தேன். தொடர்ந்து இரண்டாவது அடுக்கை தொடங்குவதற்கு எந்த பிடிமானமும் இல்லை. தவிரவும் ஒருவரும் வராத அந்தக் கோயிலில் தடுக்கி விழுந்தால்கூட உதவி செய்வதற்கு ஆள் இல்லை. தேவையில்லாத சாகசத்தை மேற்கொள்ள என் மனம் துணியவில்லை. இன்னும் சில தூரம்தான். ஏறிவிட்டால் மேற் கர்பக்கிரகத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம். ஒற்றைச் சிலைக்காக 4 வாசல்களில் மூன்று பூங்கதவுகளின் தாழிடப்பட்டிருந்தன. ஒன்றைக் கதவு மட்டுமே திறந்திருந்திருந்தது.  ஆனால், நான்கு வாயில்களுமே கர்ப்பக்கிரகத்தை அடையக்கூடிய திறவுகளாக இருந்தன.  ஒரு வாயிலாவது எனக்கு சாதகமாக அமையாதா என்ற ஆவலில் இருமுறை சுற்றி வந்தேன்.  


செக்குத்தான மலைகள் ஏறிய அனுபவம் இருந்தாலும் ஏனோ மனம் தடுத்துக்கொண்டே இருந்தது. இப்படி இரண்டாங்கெட்ட  நிலையில் அடுத்தடுத்து சில படிகளை ஏறியிருந்தேன். கண்டு விட்டேன்.  சைந்த நிலையில் ஒரு புத்தசிலை. யாரோ விளக்கேற்றி வைத்திருந்தனர்.  தவிர வேறு எதுவும் அங்கில்லை. ஒருவகை என்னவென்று சொல்லத்தெரியாத படபடப்பு  அச்சம் ஏற்பட இறங்க முயற்சி செய்தேன். அது சாதாரண காரியமாக தெரியவில்லை. சந்துருவை தேடினேன். அவர் எனக்காக கீழேயே காத்திருந்தார். நேரம் போகிறது; சீக்கிரம் இறங்கு என்று அவர் சொன்னபோதுதான் அவசரப்பட்டுவிட்டேன் என தெரிந்தது.  எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன் என தெரியவில்லை. சில சிராய்ப்புகளோடு  வேர்த்து விருவிருத்து இறங்கி வந்தேன்.

-தொடரும்
தாழிட்டிருக்கும் வாயில்

அழகிய தோற்றம்

படி ஏற முயற்சிக்கும் ஓவியர் சந்துரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக