ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் பிறந்தார் இர்ஃபான். அப்பா டயர் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார். அம்மா குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். ஏழைக் குடும்பம்தான். ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரராக ஆகவேண்டும்
என்பதுதான் இவருடைய கனவாக இருந்தது. வீட்டில் அவருக்கு ஆதரவு இல்லாதபடியால் வீட்டை
விட்டு வெளியேறுவதற்காக அவர் மேடை நாடக அனுபவம் இருக்கிறது என்று பொய்யான ஒரு விண்ணப்பத்தை
‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் செய்தார். எதிர்பாராத நேரத்தில் சொல்லப்பட்ட பொய்,
பின்னாளில் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
'சலாம் பாம்பே' படம்தான் அவரின் முதல் படம். என்றாலும் அவரின் காட்சிகள் பெருவாரியாக வெட்டப்பட்டுவிட்டது. மேலும் அந்தப் படத்தில் ரொம்ப சொதப்பலாக நடித்திருப்பேன் என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் இர்ஃபான். அந்தக் காலக்கட்டத்தில் நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். ஆனாலும் அவரால் பெரிய அளவில் மீடியா வெளிச்சத்தை பெற முடியவில்லை.
இர்ஃபானுக்கு 2001-ஆம் ஆண்டுதான் ராசியான ஆண்டாக அமைந்தது. இமாச்சலப் பிரதேச குழங்குடியினர் பற்றிய கதை 'வாரியர்' என்ற தலைப்பில் படமானது. அதில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் பல விருதுகள் பெற்றது. அதன் பிறகே அவர் பிரபலமானார். அதிலிருந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து அதாவது 2011 ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்றவர், அதே ஆண்டு வெளிவந்த “Paan Singh Tomar” எனும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றார். அதன் பிறகு இர்ஃபான் கிட்ட்தட்ட எல்லா முக்கிய விருதுகளையும் தனதாக்கிக் கொண்டார்.
என்ன பாத்திரமாக இருந்தாலும் அசாதாரணமாக நடிக்ககூடியத் திறமை அவரிடம் இருந்தது. மிக நிதானமான அவர் பேசும் வசனங்கள் நேரடியாக நம் கண்ணைப் பார்த்து பேசுவதுபோல இருக்கும். அந்தப் பார்வையில்தான் என்னையும் வசீகரித்தார் இர்ஃபான். அவரின் எல்லாப் படங்களையும் நான் பார்த்துமுடிக்கவில்லை. பார்த்த ஒருசில படங்கள் என்னை ஏமாற்றவில்லை. ஒரு சில படங்களை அவருக்காக மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
Slumdog Millionaire, Lunchbox, Mission Impossible, Spiderman, Jurassic World, Life of Pie ஆகியப்படங்கள் இர்ஃபான்கானை சர்வதேச அளவில் உயர்த்தியது. “qarib qarib single (2017)”, “Haider (2014)”, “Piku (2015)” மற்றும் “Talvar (2015)” ஆகிய திரைப்படங்கள் எந்தக் காலத்திலும் இளைஞர்கள் ரசிக்கும் திரைப்படமாகவும் இர்ஃபான் கொடுத்திருக்கிறார்.
தீப்பிகா படுகோனே மற்றும் அமிதாப்பட்சனோடு அவர் நடித்திருந்த பிக்கு, எனக்கு தெரிந்து வேறு யார் அந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தாலும் நம்மாள் பொறுமையாக அமர்ந்து பார்க்க முடியுமா என தெரியவில்லை. பெருவாரியாக காரிலேயே படம் போய்க்கொண்டிருக்கும். தவிர அமிதாப்பிற்கு தொடர்ந்து ஏற்படும் மலச்சிக்கல், அப்பிரச்னையை அறியாதவர்களை வைத்துகொண்டு படம் பார்ப்பது மேலும் ஒரு சிரமத்தைக் கொடுக்கும். இர்ஃபான் மற்றும் தீபிகாவும் இல்லை என்றால் பிக்குப் படம் சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்கும்.
அதே அளவுக்கு நான் ரசித்தப்படம் “qarib qarib single”.
எனக்குப் பிடித்த பார்வதியும், ரொம்பப் பிடித்த இர்ஃபானும் போட்டிப்போட்டு நடித்திருப்பார்கள். இர்ஃபான் நோயிலிருந்து சிகிச்சை பெற்று வந்தக் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். வழக்கமான அவரது தேஜஸ் கொஞ்சம் மிஸ் ஆகுற மாதிரி இருக்கும். ஆனால், அவரின் இயல்பான நடிப்பு அனைத்தையும் சமன் செய்திருக்கும்.
என்னைப்போல கொஞ்சம் திமிர் பிடித்தவளுக்கு பிடித்தக் காதலன் எப்படி இருக்க வேண்டும்
என்றால் அவர் யோகியைப் போல இருக்க வேண்டும். அந்தப்படத்தில் இர்ஃபான் பெயர் யோகி. நமக்கெல்லாம் பிடித்த பார்வதி மேனன் அவருக்கு ஜோடியாக ஒரு தமிழ்ப்பெண்ணாகவே நடித்திருப்பார். அழகான ஒரு
காதல் கதை. ஹரிதுவாரில் படமாக்கிய காட்சிகள் அவ்வளவு நெருக்கமாக நம்மால் உணர முடியும்.
இர்ஃபானின் நிஜப்பெயர், சாஹாப்ஜேட் இர்ஃபான் அலி கான். தனது பெயரில் இருக்கும் குடும்ப அடையாளமான கான்-னை அவரின் பெயரிலிருந்து நீக்கிவிடுமாறு அவர் கூறியிருக்கிறார். இர்ஃபான் கான் எனும் தனது பெயரால் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் தீவிரவாதி என சந்தேகித்து தடுத்து விசானைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதே போன்ற அனுபவம் ஷாருக்கானும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட்தக்கது.
இன்று 29/4/2020 தனது 53-வது வயதில் விடைபெற்றுக்கொண்ட இர்ஃபான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய்க்காரணமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துகொண்டபோது எழுதிய கடிதம் இப்போது இந்து தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்தக் கடிதம் ஏனோ நமக்கான கடிதமாகவும் இருக்கிறது.
(நான்கு நாட்களுக்குப் முன்புதான் இவரின் தாயார் மூப்பு காரணமாக ஜெய்ப்பூரில் காலமானார். அவருக்கு 95 வயது)
இர்ஃபான் கடிதத்தின் தமிழாக்கத்தை கீழே கொடுத்திருக்கிறேன்
வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான்.
எனக்கு 'நியூரோ எண்டோக்ரைன்' புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் 'நியூரோ எண்டோக்ரைன்' புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல.
ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
அந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன்.
அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் "நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு" என்றார். நான் குழம்பிப் போனேன். இது நான் இறங்குமிடம் இல்லை என மறுதலித்தேன். ஆனால், அவர் ஊர்ஜிதமாகச் சொன்னார் "இது தான் இலக்கென்று". வாழ்க்கையில் இப்படித்தான் சில நிகழ்வுகள் நடக்கின்றன.
நான் சற்றும் எதிர்பார்த்திராத அந்த திருப்பம் எனக்கொரு விஷயத்தை உணர்த்தியது. சமுத்திரத்தின் நீரோட்டத்தை நம்மால் கணிக்க முடியாது. அத்தகைய நீரோட்டத்தில் மிதக்கும் ஒரு தக்கை தான் நாம். ஆனால், நாம் வெறும் தக்கை என்பதை உணராமலேயே சமுத்திர நீரோட்டத்தை மீறியும் தக்கையை (நம்மை) கரை சேர்க்க முற்படுகிறோம் என்பதை உணர்த்தியது.
எதிர்பாராத திருப்பமாக நோய் எனக்குக் கொடுத்த அதிர்ச்சியில், அச்சத்தில், பதற்றத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அருகிலிருந்த என் மகனிடம் ஏதோ உளறியதாக நினைவு. "நான் என்னிடம் இப்போதைக்கு எதிர்பார்ப்பது இந்த நோயை இதே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடாது. நான் என் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. அச்சமும், பதற்றமும் என்னை வென்றுவிடக் கூடாது. அது என்னை துயரத்தில் ஆழ்த்திவிடும்" என்று அவனிடம் கூறியிருக்கிறேன்.
ஆம், நோய் தரும் நம்பிக்கையின்மையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. ஆனால், அந்த வேளையில் தான் என்னை வலி கவ்வியது. அதுவரை நான் அனுபவித்த வலிகள் எல்லாம் அந்த பெரும் வலிக்கு அதன் தன்மைக்கு வீரியத்திற்கான முன்னோட்டம் என்பது போல் இருந்தன என்பதை உணர்ந்தேன்.
என்னை எதுவுமே சமாதானப்படுத்தவில்லை. எதுவும் ஆறுதலாக இல்லை. எதுவும் ஊக்கமளிப்பதாகவும் இல்லை. என் மனதில், நிலையற்றை தன்மை மட்டுமே நிலையானதாக இருந்தது.
நான் லண்டன் மருத்துவமனையில் பிரவேசிக்கும் போது முற்றிலுமாக சோர்ந்து போயிருந்தேன். சலிப்பு மிகுந்திருந்தது. என் சிறுவயதில் எனக்கு மெக்காவாகத் தோன்றிய லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிர்புறத்தில் தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை.
என் வலிகளுக்கு மத்தியில் விவியன் ரிச்சர்ட்ஸின் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால், என்னுள் எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது.
நான் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் நானிருந்த தளத்திற்கு நேர் மேல் தளத்தில் சுயநினைவை இழந்தோருக்கான (கோமா) வார்டு இருந்தது. ஒரு நாள் எனது அறையின் பால்கனியில் நான் நின்றிருந்தபோது, ஒரு திடீர் சிந்தனை என்னை உலுக்கியது.
வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.
எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பேரண்டவெளியின் மதிநுட்பத்தை, மிகப் பிரம்மாண்டமான சக்தியை அதன் தாக்கத்தை உணர்ந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அமைந்திருந்த இடம் எனக்கு அதை இடித்துரைத்தது. ஆம், நிலையின்மை மட்டும்தான் நிலையானது.
அந்த மெய் உணர் தருணம் என்னை யதார்த்த்தின் முன் சரணையடச் செய்தது. நான் பெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை 4 மாதங்களுக்குப் பின் அல்லது 8 மாதங்களுக்குப் பின் இல்லை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை எங்கு கொண்டு சேர்க்கும், விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து நடப்பவற்றிற்கு என்னை உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது.
அப்போது கவலைகள் பின்னடைவைக் கண்டன. அப்படியே சில நாட்களில் மங்கிப் போயின. அடுத்த சில நாட்களில் என் எண்ண வெளியிலிருந்தே கவலைகள் விலகியிருந்தன.
முதன் முறையாக நான் சுதந்திரத்தை உணர்ந்தேன். முதன்முறையாக சாதனை படைத்ததாக நினைத்தேன். அப்படி ஒரு வெற்றியை முதன்முறையாக சுவைத்தது போல் இருந்தது. அது வெற்றியின் மாயாஜாலம் என்பேன்.
அண்டவெளியின் மதிநுட்பத்தின் மீதான எனது நம்பிக்கை தீர்க்கமானது. அது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புகுந்தது போல் உணர்ந்தேன். ஆனால், அது அங்கேயே நிலைத்திருக்குமா என்பதை காலம் தான் சொல்லும். இப்போதைக்கு இந்த உணர்வு நன்றாக உள்ளது.
நோயுடனான எனது போராட்டப் பயணத்தில் மக்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் அறிந்த நபர்கள் மட்டுமல்லாது, எனக்குப் பரிச்சயமே இல்லாதவர்களும் கூட என் நலன் விரும்புகின்றனர்.
அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் ஒன்றிணைகிறது. அது ஒரே சக்தியாக, ஒரே உயிரோட்டமாக உருமாறி எனக்குள் புகுந்தது. எனது முதுகெலும்பின் முடிவில் அதை நான் உணர்கிறேன். எனது புத்தியில் வளர்கிறது.
சில நேரம் மொட்டாக, சில நேரம் இலையாக, அப்புறம் தளிராக கிளையாகத் துளிர்க்கிறது. நான் அதை ரசிக்கிறேன். ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கிளையும் கூட்டுப் பிரார்த்தனையால் விளைந்தவை. அவை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. எனக்குள் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
அதேவேளையில், ஒரு தக்கை, சமுத்திரப் பேரலையின் நீரோட்டத்தை தனக்கானதாகத் தகவமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மெய்யை உணரச் செய்கிறது. தக்கை அசைந்தாடுவது இயற்கை. இயற்கை தனது தொட்டிலில் உங்களை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்று வாழ்க்கையை ஏற்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக